அத்தியாயம் 1
ரம்மியமான இரவுப்பொழுது, அறை முழுவதும் ஊதுபத்தியின் சுகந்த வாசனை வீச,கட்டிலில் ஊதா நிற விரிப்பில், வெள்ளை நிற மல்லிகை பூக்களும், சிவப்பு நிற ரோஜாக்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பக்கத்தில் இருந்த மேஜையில் பழங்கள் வைக்கப்பட்டு, அறை முழுவதும் குளிரூட்டப்பட்டு இருக்க,
அந்த மஞ்சத்தில் படபடப்புடன் வெளியே குதித்து விடுவேன் என வேகமாக துடிக்கும் இதயத்தை அடக்கும் பொருட்டு, தன் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி விட்டு கொண்டு, முதலிரவுக்கான முழு அலங்காரத்தோடு அமர்ந்து இருந்தாள் யாழினி.
அவளை உள்ளே அமரச் செய்து விட்டு, பால்கனியில் வந்து நின்று ஒரு மணிநேரமாக சிக்ரட்டை புகைத்தவாறு தீவிர யோசனையில் நின்று இருந்தான் அர்ஜுன்.
பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்து இருந்த யாழினியின் முன்பு வந்து, தனது ஆறடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று, விரிந்து பரந்து உறம் ஏறிய தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு, தான் பேராசிரியர் ஆக கட்டளையிடும் தோரணையில் “இங்க பாரு!…” எனவும்
பதறியடித்துக் கொண்டு எழுந்து நின்று, மிரட்சியாக தனது மான் விழிகளை விரித்து அவனை நோக்கினாள் யாழினி.
அவளை பார்த்து “சிட்…”என்றான் அர்ஜுன் .
அவன் நின்று கொண்டு அவளை அமரச் சொல்லவும் தயக்கத்துடன் நின்ற யாழினியிடம் “உன்ன உக்கார சொன்னேன்…”என்றான் கர்ஜனையாக,
அவனது உறுமலை கேட்டு பயந்து, கட்டிலின் நுனியில் அமர்ந்தாள் யாழினி.
அர்ஜுன் “லிசின் எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சமும் விருப்பம் இல்ல.. குறிப்பா உன் மேல.. அந்த தாரணியோட சீப் பிகேவியர்ரால என் அண்ணன்கள் ரெண்டு பேரோட கல்யாணம் நிற்க கூடாதுன்னும்.. அப்பத்தா வற்புறுத்தினதாலயும்தான் உன் கழுத்துல தாலி கட்டுனேன்…” மேலும்
“எனக்கும் உனக்கும் செட் ஆகாது.. என்னோட டேஸ்ட் வேற ..உன்ன என் வைஃப்பா அக்சப்ட் பண்ணவே முடியாது.. சோ என்ன விட்டு நீ தள்ளியே இரு.. என்கிட்ட பேச ட்ரை பண்றது, பழக ட்ரை பண்றது, பொண்டாட்டி என்கிற உரிமை எடுத்துக்குறது, புருஷன் தானேனு என்ன கைக்குள்ள போட்டுக்க பாக்குறது இது எதுவுமே கூடாது…”எனவும்
யாழினியோ (என்ன என்னன்னவோ சொல்றாரு) என முழித்து பார்க்க ( அந்த புள்ள சும்மா இருந்தாலும் பண்ணக்கூடாது பண்ணக்கூடாதுனு இவனே ஐடியா குடுக்குறான். )
அர்ஜுனோ மனதினுள் ‘என்ன இவ இதுக்கே இந்த முழி முழிக்குறா.. இந்த லெட்சனத்துல டிவ்வோஸ் பத்திலாம் சொல்லி சிட்டுவேஷன கிரிட்டிக்கலாக்க வேணாம்.. முதல்ல அண்ணங்க லைஃப் செட் ஆகட்டும்.. அவங்களுக்கு குழந்தைங்க வந்தா எங்க டிவ்வோஸ் அவங்க வாழ்க்கைய பாதிக்காது.. அந்த டைமுக்குள்ள நமக்கானவள தேடிக்கிட்டு டிவ்வோஸ்க்கு சரியான காரணத்தையும் கண்டு பிடிக்கணும்…’ என எண்ணிக் கொண்டு தொண்டையை செருமிக் கொண்டு “நான் சொன்னது புரிஞ்சுதா?…” என்று கேட்கவும்.
புரிந்தது என தலையை ஆட்டினாள் யாழினி.
“குட் ..அண்ணங்க சென்னையில இருந்து என்ன இங்க மாற்றல் வாங்க சொல்லி இருக்காங்க.. மாற்றல் வாங்க ஒரு வருசத்துக்கு மேல ஆகும், அதுவரைக்கும் உன்ன கூடலாம் கூட்டிட்டுப் போக முடியாது.. அப்பத்தா கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சு இங்கவே இருந்துக்க…” எனவும்
“ம்ம்…” என்றாள் யாழினி.
“சரி நீ தூங்கு…” என அர்ஜுன் கூறவும், சரி என தலை ஆட்டி விட்டு, எழுந்து கீழே போர்வையை விரித்து, படுத்துக் கொண்டாள் யாழினி. அர்ஜுனோ எதுவும் கூறாமல் கட்டிலில் படுத்து உறங்கி போனான்.
*******
அடுத்த நாள் காலை அழகாய் புலர்ந்தது,
அந்த வீட்டின் ஹாலில் அப்பத்தா தங்கமலர் அமர்ந்து, கல்யாணத்துக்கு வந்த ஒரு சில உறவுகாரர்களுடன் பேசிக்கொண்டு இருக்க,
அந்த வீட்டின் சமையல் கட்டில், காலை உணவை சமைத்துக் கொண்டு இருந்தனர் அவரின் மருமகள்கள் இந்திராணியும், காமாட்சியும்.
அவரின் மூத்த பேரன் ஆதவனின் மனைவி கல்யாணியோ பூஜை அறையில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தாள்.
அறையில் இருந்து வெளியே வந்த ஆதவன் டைனிங் டேபிளில் இருந்து டீ அருந்தி கொண்டு இருந்த தனது தந்தை ரகுவரன், மற்றும் சித்தப்பா கிருபாகரன் அருகில் சென்று அமர்ந்து தன் தாய் இந்திராணியிடம் “அம்மா காஃபி…” எனவும்
சமையல் கட்டில் இருந்து காஃபி கப்புடன் வந்த காமாட்சியோ ” இந்தா ஆதவா.. அக்கா வேலையா இருக்காங்க…” என காஃபி கப்பை நீட்டியபடி “அணு குட்டி எங்க தூங்குறாளா?…” என ஆதவன் கல்யாணியின் நான்கு வயதான ஒரேயொரு மகளை கேட்டிட
காஃபி கப்பை வாங்கி குடித்துக்கொண்டே “ஆமா சித்தி.. அவ இன்னும் எழும்பல…” என்றான் .
” ஓ.. சரி” என அவர் சமையல் கட்டினுள் நுழைந்து கொண்டார்.
என்னதான் கதை அளந்து கொண்டு இருப்பது போல் இருந்தாலும் உறவுகளின் கண்கள் அத்தையும் நேற்று திருமணம் முடித்த மூன்று ஜோடிகளின் அறையை நோட்டம் விட்டு கொண்டுதான் இருந்தது.
முதலில் வெளியே வந்தது ராகவனும் ரேவதியும்தான். ஹாலில் இருந்த அத்தனை பேரின் கண்களும் மணமக்களை ஆராய்ந்தன .
அவர்கள் எதிர்பார்த்தது போலவே இருவரது கண்களிலும் தூக்கம் மிச்சம் இருக்க, முகமோ வெட்க சிகப்பில் பொலிவாக இருந்தது.
ரேவதியின் கைகளில் நேற்று போட்டு விட்ட சாங்கிய வளையல்கள் குறைந்து இருக்க, அவள் கழுத்திலும் கை முட்டிக்கு மேலும் இருந்த சிவப்பு அடையாளமும் சொல்லாமல் சொல்லியது அவர்களது தாம்பத்தியத்தை .
அடுப்படியில் இருந்து வெளியே வந்த காமாட்சியும் மருமகளை கவனித்து விட்டு, தன் மகனின் இல்லற வாழ்வு இனிதே ஆரம்பமானதை நினைத்து உள்ளம் பூரித்தார் .
ரகுவரன் இந்திராணி தம்பதியினருக்கு முதலில் ஆதவன் பின் கர்ணன்.
முறையே அடுத்து கிருபாகரன் காமாட்சி தம்பதியினருக்கு முதலில் ராகவன் பின் கஸ்தூரி.
அவ் வீட்டின் கடைக்குட்டியாக ரகுவரன் இந்திராணிக்கு அர்ஜுனும் பிறந்தனர்.
கஸ்தூரி அவ் வீட்டின் ஓரே ஒரு மகாலட்சுமி என்பதால், அவளின் விருப்பப்படி, கனடாவில் பணிபுரியும் சாந்தனுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்தனர்.
சகோதரர்களின் திருமணத்துக்கு வந்தவள் திருமணம் முடிந்த கையோடு தாய் வீட்டில் வசதி போதாது என அருகில் இருக்கும் கணவன் வீட்டில் தங்கி விட்டாள்.
ராகவன் ரேவதிக்கு அடுத்து வெளியே வந்த கர்ணன், சுகந்தி ஜோடியையும் கண்களாலேயே ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து திருப்தி அடைந்த பெண்கள் கூட்டம்,
அவ் வீட்டின் கடைக்குட்டி அர்ஜுன் இன்னும் வெளியே வராததால் ஆர்வமாக அவன் அறையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தனர் .
பின்னே ஆர்வம் இருக்கும் இல்லையா அவனுக்கு என்று ஒரு பெண்னை பார்த்து, முடிவு பண்ணி, நேற்றைய முன் தினம் கல்யாண மண்டபத்துக்கு போனால், அந்த பொண் தன் காதலனுடன் ஓடிப்போக,
திடீர் மணமகளாக யாழினியை பிடித்து அவனை உருட்டி, மிரட்டி தாலி கட்ட வைத்தனர் .
தாலி கட்ட முரண்டு பிடித்தவன் தாம்பத்தியத்தை தொடங்கினானா இல்லையா என மூளையை கசக்கி கொண்டு இருந்தனர்.
அர்ஜுன் அந்த வீட்டின் கடைக்குட்டி சிங்கம் . ஆம் சிங்கமே தான் அவனது உறுமலுக்கு என்ன மூச்சுக்காற்றுக்கு கூட அந்த வீட்டில் உள்ளவர்கள் அடங்கிப் போவார்கள், ஏனென்றால் அந்த வீட்டில் அதிகம் படித்தது அர்ஜுன் மட்டுமே.
ஆம் அவனது தந்தை, சித்தப்பா இருவருமே அவர்களது பரம்பரை தொழிலான அனைத்து வகையான எண்ணெய்கள் தயாரிக்கும் ஆயில் மில் நடத்தி வந்தனர்.
சிறுவயதில் இருந்தே ஃபேக்டரிக்கு தந்தைகளுடன் செல்லும் ஆதவன் ,ராகவன் ,கர்ணன் மூவருமே பள்ளி படிப்பு முடிந்ததுமே காலேஜ் கூட போகாமல் தந்தைமாருடன் சேர்ந்து ஆயில் மில்லிலேயே வேலை செய்ய தொடங்கி விட்டனர் .
அவர்களது தொடக்கம் நன்றாகவே இருந்தது. தமையன்மார் மூவரும் தந்தைமாரின் தொழிலை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போய் தமிழ்நாடு முழுவதும் தங்களது எண்ணையை விநியோகம் செய்வதற்கான கிளைகளை திறன் பட நடத்தி வந்தனர்.
என்னதான் தொழிலில் அண்ணன்மார்கள் முன்னிலை வகித்தாலும், அர்ஜுனுக்கு இதில் எல்லாம் நாட்டம் ஏற்படவில்லை.
அவனுக்கு படிக்க வேண்டும். படித்தால் மட்டுமே சமூகத்தில் மதிப்பு என்று நினைப்பவன், அதனால் அண்ணன்மாருடன் ஃபேக்டரிக்கு சென்றாலும் அதில் அவனது கவனம் செல்லவில்லை.
முழுமூச்சாக படித்து காலேஜ் முடித்தவன், முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்னையில் ஒரு பெரிய காலேஜில் வேலைக்கும் சேர்ந்து விட்டான்.
அந்த வீட்டில் அதிகம் படித்தது அர்ஜுன் என்ற காரணத்தினாலும், அவன் கூறுவது நூறு சதவீதம் சரியாக அமைவதினாலும், அவனுக்கென்று உண்மையாகவே தனி மரியாதை கிடைத்திருந்தது.
அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டு மற்ற மூன்று ஆண் வாரிசுகளையும் விட அர்ஜுன் சற்று இறுக்கமானவனாகவே காணப்பட்டான்.
அவன் பேராசிரியர் தான் ஆனால் வீட்டில் அதிகமாக பேச்சுக்கள் இருந்ததில்லை. கோபம் என்றால் சொல்லவும் வேண்டாம், வாய்க்கு வருவதெல்லாம் திட்டி விடுவான்.
வயதுக்கு மூத்தவர்களை அடிக்க முடியாது என்ற காரணத்தினால் அந்த வீட்டின் பொருட்களில் அவனது கோபம் திரும்பும், அத்தனையும் நொறுங்கி போகும்.
ஆனாலும் பாசக்காரன். அதுவும் தன் அண்ணன்கள் மீது அதிகமாகவே பாசம் வைத்திருப்பவன். அப்பத்தா என்றால் சொல்லவும் வேண்டாம் அவருக்காக எது வேண்டுமென்றாலும் செய்வான். அக்கா கஸ்தூரி மீது தனி பிரியம் எப்போதும் உண்டு.
அர்ஜுன் ஆறடிக்கும் சற்று உயரம், கோதுமை நிறம் ,எல்லாமே பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். தன் உடலையும் உடற்பயிற்சி மூலம் மெருகேற்றி கட்டுக்கோப்பாக வைத்திருந்தான் . சிக்ஸ் பேக் தேகம் இல்லை என்றாலும் உடற்பயிற்சியினால் இறுகிப்போய் தசை கோலங்கள் உருண்டு திரண்டு பார்ப்பதற்கு ஓங்குதாங்காக அசரடிக்கும் அழகுடன் அம்சமாக இருப்பான் .
அவனது கம்பீரமான தோற்றத்திற்கும் வசீகரத்திற்கும் கன்னி பெண்கள் பல மயங்கினாலும், அர்ஜுனின் எண்ணமோ தன் படிப்புக்கு நிகராக நன்கு படித்த பெண்ணாகவும், சற்று நாகரீகம் தெரிந்தவளாகவும் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பு.
ஆனால் அந்த எதிர்பார்ப்பு முப்பத்திரண்டு வயது முடிவடையும் தருவாயில் ராகவனும், முப்பது வயதில் கர்ணனும் ஜாதகத்தில் தோஷம் என்று திருமணம் ஆகாமல் இருக்க,
தோஷம் முடிந்து அவர்களுக்கு திருமணம் கைகூடி வந்ததா என்று ஜாதகம் பார்ப்பதற்கு சென்ற இடத்தில்,
அர்ஜுனது ஜாதகத்தை பார்த்துவிட்டு இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் ஆகவில்லை என்றால் முப்பத்தைந்து வயதிற்கு மேல்தான் இந்த ஜாதகக்காரனுக்கு திருமணமாகும் என்று யோசியர் சொல்லி விட, அப்பத்தா தங்கமலரோ மூன்று பேரன்களுக்கும் சேர்த்து பெண் பார்க்கும் படலத்தை துவங்கி இருந்ததால் தகர்ந்தது.
சரி காதல் திருமணம் தான் நடக்க வாய்ப்பில்லை என்ற பட்சத்தில், தன் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு படித்த பெண்ணாகவும், சற்று நாகரீகம் உள்ளவளாகவும் பார்க்கும்படி குடும்பத்தினரிடம் சம்மதம் கூறிவிட்டான் அர்ஜுன்.
அதன் அடிப்படையில் ராகவனுக்கு ரேவதியையும்,
கர்ணனுக்கு சுகந்தியையும்,
அர்ஜுனுக்கு ரேவதியின் தங்கையான தாரணியையும் பெண் பார்த்தனர்.
தாரணி அழகான பெண், நன்கு படித்திருந்தாள், சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை செய்கின்றாள்.
அர்ஜுன் எதிர்பார்த்தது போலவே சற்று நாகரீகமான பெண்தான், நடையுடை, பேச்சு என அனைத்திலும் ஒரு நேர்த்தி இருக்கும்.
கிராமத்தில் வளர்ந்தவள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். எனவே பார்த்ததும் அர்ஜுனுக்கு சரி என்று பட சம்மதம் கூறிவிட்டான்.
திருமண ஏற்பாடுகளும் ஆரம்பித்து இருந்தன, திருமணம் முடிவான ஒரு மாத இடைவெளியில் இரண்டு தடவைகள் மட்டுமே தாரணியுடன் அர்ஜுன் தொலைபேசியில் பேசி இருக்கின்றான்.
அப்போதும் எப்படி இருக்கின்றாய்? என்ன செய்கின்றாய்? என்று சாதாரண நல விசாரிப்புகள் மட்டுமே, திருமண நாளும் வந்து சேர்ந்தது. நாளை மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் என்று இருக்க அர்ஜுன் வீட்டினர் அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர் .
அண்ணன் தம்பி நான்கு பேரும் ஒரு அறையில் இருக்க, ஆதவன் அர்ஜுனை பார்த்து “அர்ஜுன் நீயும் சென்னையிலதான் வேலை பாக்குற, தாரணிக்கும் அங்கேதான் வேலை , ரெண்டு பேரும் சென்னையிலேயே வேலை பார்க்க போறீங்களா? இல்ல ஊரோட வாரதா ஏதும் ஐடியா இருக்கா?…” என்று கேட்க
அர்ஜுனோ “பாக்கலாம்ண்ணா.. எனக்கும் உங்க எல்லாரையும் விட்டுட்டு இருக்க கஷ்டமாதான் இருக்கு.. கொஞ்ச நாள் போகட்டும்…” என்றான்.
“சரிடா தூங்குங்க நாளைக்கு காலைல இருந்து சடங்கு, சம்ரதாயம்னு ஆரம்பிச்சுடுவாங்க.. ஈவினிங் ரிசப்ஷன் வேற இருக்கு முகம் பார்க்க பிரஷ்ஷா இருக்கணும்ல…” என்று விட்டு ஆதவன் வெளியேற எத்தனிக்கவும்
கர்ணனோ “அண்ணிய பாக்காம கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலன்னு சொல்லு.. இதுக்கு எதுக்கு எங்கள தூங்க சொல்ற…” என்றான்.
அவன் முதுகில் ஒரு அடி போட்டவன் “ஆமாடா, இப்ப என்னடா…” என்று விட்டு சிரித்த முகமாகவே அறையை விட்டு வெளியேறினான் ஆதவன்.