அத்தியாயம் 01
“ஏன்டி நான் இவ்ளோ சொல்றேன் காதுலேயே வாங்காம, உன்ன வேணாம்னு சொன்னவன தேடி போக துணி எடுத்து வச்சிட்டு இருக்க…” என்று இளவஞ்சியின் கையைப் பிடித்து சற்று கோபத்துடன் தன் பக்கம் திருப்பினார் அவளின் தாய் திகாம்பரி.
தாயின் கையில் இருந்து தன் கையை சலிப்பாக உருவி எடுத்தவள் “நீ என்ன கத்துனாலும் நான் அவர தேடி போகத்தான் போறேன்.. அவர் கிட்ட நியாயம் கேட்காம திரும்பி வர மாட்டேன்…” என்று உறுதியாக கூறியவள்
தனது அலமாரியில் இருந்து எடுத்த துணிகளை சூட்கேசில் வைத்து மூடி ஜிப்பை இழுத்து விட்டாள்.
“உன் அப்பா கிட்ட என்ன சொல்லி சமாளிப்பேன்.. தெரிஞ்சா உனக்கு பதிலா என்ன கொன்னுடுவார்டி…”
“எதுக்கு எதையோ சொல்லி சமாளிக்கணும்.. நீங்க அவளுக்காக பாத்து முடிவு பண்ண மாப்பிள்ளைய தான் தேடி போயிருக்கா உங்க பொண்ணுனு சொல்லுங்க…” என்று இதழில் மறைந்த நக்கலுடன் இளவஞ்சி சொல்ல
“அடியே அதான் அந்த பையன் கல்யாணமே வேணாம்னு நிச்சயத்த நிறுத்திட்டு போயிட்டானே.. உங்க அப்பாவும் அந்த கோபத்துல தானே உனக்கு தீவிரமா வேற மாப்பிள்ள பாக்குறாரு.. இப்போ போய் நீ அந்த பையன தேடி போறேன்னு சொன்னா, என்ன அந்த இடத்துலேயே பார்வையால எரிச்சிடுவாரு…” என்றார் திகாம்பரி கணவனின் கோபத்திற்கு பயந்தவராக
தாயுடன் இதுவரை ஏட்டிக்கு போட்டி பேசி கொண்டிருந்தவள் சற்று கவலையான குரலில் “அவர் ஊற விட்டு போக நான் தான் காரணம்.. ஆனா ஒரு பொண்ண காதலிச்சிட்டு, அவ மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சிக்காம உதறி தள்ளிட்டு போறது எந்த வகையில நியாயம்.. அத அவர் கண்ண பாத்து கேக்கணும்.. அதுக்கு பிறகு தான் என்னால வேற எதையும் பத்தி யோசிக்க முடியும்…” என்றவள் அம்மாவின் முகம் தாங்கி “ப்ளீஸ்மா நான் கண்டிப்பா இந்தர பாக்கணும்.. ஏதாவது சொல்லி அப்பாவ ஒரு மாசம் சமாளிங்க…” என்று கெஞ்ச
அந்த தாய்க்கும் வேறு வழி தெரியவில்லை. அவர் கூறும் பொய்யினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீராகும் என்றால் பொய் கூறலாம் தப்பில்லை என்று எண்ணியவர் “சரி கவனம்.. அந்த பையன் சரியான கோபக்காரனாக இருக்கான்.. உன் மனச கண்டிப்பா காயப்படுத்துவான், கலங்காம நீ நினைச்சத செய்…” என்று தைரியம் கூற
தாயின் கன்னத்தில் சந்தோஷமாக முத்தம் வைத்தவள் “தேங்க்ஸ் மா!…” என்று சொல்லி மகிழ்ச்சியாகவே தனது உடைகளை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்தாள்.
அனைத்து படிமுறைகளும் முடிந்து விஜயாவாடா செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு, அவள் தேடி போகும் இந்தர் இல்லை இல்லை வீரேந்திர பிரசாத் ராவ் அவனை எப்படி சந்தித்து, பேசி எப்படி அவனிடம் நியாயம் கேட்டு, தன் பயணத்தின் குறிக்கோளை அடைவது என்று தெரியவில்லை.
ஆனால் நிச்சயமாக அவள் எண்ணத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்பது மட்டும் உறுதி.
இதோ விஜயவாடா அவந்து இறங்கி அங்கிருந்து கார் டாக்ஸி ஒன்றை புக் பண்ணியவள், நேராக சென்றது குண்டூர்.
மிளகாய்க்கு மிகவும் பிரபல்யமானது, அதனால் தானோ என்னவோ அவனும் அங்குள்ள மிளகாய் போன்றே மிகவும் காரமானவன்.
அவன் கோபத்தை நினைத்தால் இப்போதும் இளவஞ்சிக்கு உள்ளம் நடுங்கும். ஆனால் அதற்காக அவனை அப்படியே விட்டுவிட முடியாது.
அவனால் வளர்ந்து நின்ற காதல் செடி இன்று துவண்டு சுடு மணலில் விழுந்து கிடக்கின்றது. அந்த வலி என்னவென்பதை அவன் அறியவில்லை என்பது தான் இளவஞ்சியின் கவலையாக இருந்தது.
குண்டூர் வந்து சேர்ந்தவள் முதலில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, அறைக்கு வந்து கட்டிலில் பொத் என்று விழுந்தாள்.
“கண்டிப்பா வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டாரு.. ஒரு மாசம் இங்கதானா…” என்று சொல்லி அறையை சுற்றிப் பார்த்தவளுக்கு அது ஐந்து நட்சத்திர விடுதி என்பதால் நன்றாகவே இருந்தது.
அவளுக்கு தோதாக இருக்குமா என்று தெரியவில்லை. “ஒரு மாசத்துல இந்தர் மனச மாத்திட்டா ஓகே.. இல்லன்னா கண்டிப்பா தங்குறதுக்கு வேற இடம் பாக்கணும்…” என்றவள்
முதலில் எழுந்து சென்று குளித்துவிட்டு, சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டவள், ஒரு குட்டி தூக்கம் போட்டாள்.
இதற்குப் பின் வீரேந்திரனை சரிகட்டும் வரை அவளுக்கு சரியான உணவும் தூக்கமும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
அவள் தேடி வந்த வீரேந்திர பிரசாத் ராவ் தனது அலுவலகத்தில் இருந்தான்.
அவனது பரம்பரை தொழில் காரமான மிளகாய், மற்றும் மிளகாய் பொடியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது.
ஆனால் அவனுக்கு மிகவும் பிடித்த தொழில் பருத்தியில் ஆடை தயாரிப்பது.
அதனாலேயே பருத்தி கொள்முதல் செய்வதிலிருந்து, நூலாக மாற்றி, அதை நெசவு செய்து துணியாக மாற்றி, அந்தத் துணிக்கு நிறம் கொடுத்து, அதில் தயாரிக்கப்படும் ஆடைகளை உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் விநியோகம் செய்கின்றான்.
அதை தவிர்த்து சென்னையில் ஒரு கல்லூரி அவன் கண் பார்வையில் இயங்குகின்றது. அந்த கல்லூரியை வாங்குவதற்கு காரணமே அவன் வஞ்சி தான்.
ஆனால் இந்த நொடி வஞ்சி என்ற அந்த பெயரை கேட்டாலே அவன் கண்கள் ரத்த சிவப்பாவதை தடுக்க முடியவில்லை. அத்தனை கோபம், அதை அவளிடம் காட்ட விரும்பாமல் தான் தன் சொந்த ஊருக்கே வந்து விட்டான்.
அந்த ஊரின் பெரிய தொழிலதிபரான ராமகிருஷ்ண ராவ் ,லட்சுமி தேவி தம்பதியினரின் ஒற்றை வாரிசு தான் வீரேந்திர பிரசாத் ராவ்.
அவனது கனவுத் தொழிலை (ஆசியா வீவ் காட்டன்) என்ற பெயரில் ஆரம்பித்து இருந்தான்.
தொழில் ரீதியாக அறிமுகமானவர் தான் இளவஞ்சியின் தந்தை தனிகாச்சலம்.
தொழில் ரீதியாக வீரேந்திரனை நேரில் பார்த்து பழகியவருக்கு, அவனை மிகவும் பிடித்துப் போக, தன் விருப்பத்தை வெளியே சொல்லாமல் வீரேந்திரனின் குடும்பத்துடன் நெருங்கி பழக தொடங்கினார்.
அதன் விளைவு ஆறு மாதங்களுக்கு முன்பு 28 வயதான வீரேந்திரனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது தெரிய வந்தது.
சற்று தாமதிக்காமல் தன் பெண்ணை திருமணம் செய்து குடுக்க விரும்புவதாக கூற, ராமகிருஷ்ண ராவ்விற்கு சற்று யோசனை தான். காரணம் மொழி, வாழ்க்கை முறை அனைத்தும் வேறு வேறு அல்லவா.
ஆனால் உடனே மறுக்க தோன்றாமல் பத்தோடு பதினொன்றாக அந்த பெண்ணின் வரனும் இருக்கட்டுமே, அலசி முடிவு எடுக்கலாம் என்று பெண்ணின் புகைப்படம் மற்றும் பெண்ணை பற்றிய விபரங்கள் கேட்க
தனிகாச்சலமும் இளவஞ்சியின் புகைப்படம், ஜாதகத்துடன் தன் பெண்ணின் அருமை பெருமை எல்லாம் சொல்ல
ராமகிருஷ்ண ராவ் மற்றும் லக்ஷ்மி தேவிக்கு இளவஞ்சியை மிகவும் பிடித்து விட்டது.
எனவே வீரேந்திரனிடம் கூற, புகைப்படத்தை பார்த்து எந்த முடிவுக்கும் என்னால் வர முடியாது, நேரில் சென்று எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்கின்றேன் என்று சென்னை சென்றவன் தான்
இதோ ஆறு மாதங்கள் கழித்து நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டு, திருமணமே வேண்டாம் என்றும், இனி என் வாழ்வில் எந்த பெண்ணிற்கும் இடமில்லை என்றும், உலகின் மொத்த வெறுப்பையும் பெண்களின் மீது திருப்பிக் கொண்டு குண்டூர் வந்து சேர்ந்தான்.
ஏற்கனவே கோபக்காரன் தான் இப்போது இறக்கமே இல்லாத ராட்சசனாக உருமாறி நின்றான்.
அவன் கையால் வதைபடுவதற்காகவே அவன் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தாள் இளவஞ்சி.
ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் வீரேந்திரனை சந்திக்க வேண்டும் என்று கேட்க
அந்தப் பெண் அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாது என்று சொல்ல
சென்னையில் இருந்து வந்திருப்பதாகவும், மிகவும் முக்கியமான தகவல் சொல்ல வேண்டும் என்று கெஞ்சுதலாக இளவஞ்சி கேட்க
சரி என்று அந்த பெண்ணும் அவளை சற்று காத்திருக்க சொல்லி அங்கிருந்த சோஃபாவை கைகாட்ட, இளவஞ்சியும் சென்று அமர்ந்து கொண்டாள்.
அந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்ணோ வீரேந்திரனுக்கு அழைத்து, அவனை ஒரு பெண் முக்கியமான விடயமாக சந்திக்க விரும்புவதாக கூற,
சிசிடிவி கேமராவின் மூலம் தன் லேப்டாப் மானிட்டரில் யார் என்று பார்த்தவன், கண்கள் சிவக்க, பல்லை கடித்தவன் உக்கிரமாக எழுந்து கொண்டான்.
எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் அவனை தேடி வந்திருப்பாள் என்ற ஆத்திரம்.
புயல் என்ன தனது அறையில் இருந்து வெளியேறியவன், சற்றும் தாமதிக்காமல் மின்னல் தாக்கிய வேகத்தில் இளவஞ்சியின் கையைப் பிடித்து தூக்கி, விறுவிறுவென அவளை இழுத்துக் கொண்டு அலுவலகம் விட்டு வெளியே வந்தவன், அவளைப் பிடித்து வீதியில் தள்ளி இருந்தான்.
வீரேந்திரனின் அதிரடியில் திகைத்து, தடுமாறி, அவனுடன் இழுபட்டு வந்தவள், எதிர்பாராத தாக்குதலில் வீதியில் கைகள் உரச அப்படியே விழுந்தாள். அதில் உள்ளங்கை இரண்டிலும் மண்ணும் கல்லும் குத்தி காயம் வேறு உண்டானது.
“அம்மாஆஆ!…” வலியில் முகத்தை சுழித்து அவனை வேதனையாக திரும்பிப் பார்த்தவள் “இந்தர்!…” என்க
அவ்வளவு தான் கண்களில் கனல் தெறிக்க, அவன் “ஏய்!…” என்ற சத்தம் வாகன இரைச்சல்களையும் தாண்டி ஹை டெசிபலில் அவள் காதில் விழ, உடல் தூக்கி வாரி போட்டது.
கீழ் உதட்டை கடித்து ஒற்றை விரலால் அவளுக்கு பத்திரம் காட்டியவன் “இன்னொரு தடவ என் முன்னாடி வந்து நின்ன..சம்பி பாதிபெடதானு.. என் கண்ணுல படாம ஓடிப் போயிரு.. அடுத்த தடவ சொல்லிட்டு இருக்க மாட்டேன்…” என்றவன்
கேட்டில் நின்ற செக்யூரிட்டியை அழைத்து “ஈ குக்கனு கொட்டி வெள்ளகொட்டு…”(இந்த நாயை அடிச்சு துரத்து) என்று கட்டளையிட்டவன் உள்ளே செல்ல போக
கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, வேகமாக எழுந்தவளுக்கு காலிலும் காயம் போல், நிற்க முடியாமல் வலி எடுக்க, அப்பவும் முயன்று ஒரு அடி முன்வைத்தவள் “ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. என் மேல தான் மொத்த தப்பும்.. ஆனா நீங்க இப்ப பண்றதும் தப்பு.. நீங்க காதலிச்சது உண்மதானே…” என்று கேட்க
அந்த காதல் என்ற வார்த்தை அவன் கோபத்துக்கு இன்னும் தூபம் போட, திரும்பி அவன் அவளை அடிக்க கை ஓங்கி விட்டான்.
ஆனால் அடிக்கவில்லை “ஒக்க தெப்பதோனே சனிப்போத்தாவு…” (ஒரு அடி தான் செத்துருவ) என்றவன் பார்வையே அவளை கொன்று போடும் அளவிற்கு இருந்தது.
“காதல் என்ற வார்த்தைய சொல்ல பொண்ணுங்களுக்கு தகுதியே இல்ல…” என்று சொல்லி “செக்யூரிட்டி!…” என்று அவன் கத்த
பாவப்பட்ட அவரும் ஓடி வந்து இளவஞ்சியை இழுத்துக் கொண்டு செல்ல “ப்ளீஸ் இந்தர்!.. கொஞ்சம் நிதானமான நான் சொல்றத கேளுங்க.. உங்க மனசு மாறுற வரைக்கும் நான் இங்க இருந்து போக மாட்டேன்.. நீங்க வலுக்கட்டாயமா வளத்துவிட்ட அந்த காதலுக்கு நியாயம் சொல்லியே ஆகணும்…” என்று சத்தமாக கூறியவாறு செக்யூரிட்டியுடன் இழுபட்டு சென்றவள்
ஒரு கட்டத்தில் நின்று அவரிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு, அந்த வழியால் வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி சென்று விட்டாள்.
அவள் செல்லும் வரை கூட வீரேந்திரன் பார்த்திருக்கவில்லை, செக்யூரிட்டியிடம் கட்டளையிட்டதுமே விறுவிறுவென உள்ளே வந்து, தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
கோபமாக உள்ளே செல்லும் வீரேந்திரனையும், அவனிடம் சபதம் போட்டுக் கொண்டே செல்லும் இளவஞ்சியையும் பார்த்துக் கொண்டே அலுவகத்தினுள் நுழைந்தான் வீரேந்திரனின் உயிர் நண்பன் தேஜா.
அவன் அப்பா சூர்யநாராயண ரெட்டி தெலுங்கு, அம்மா பத்மாவதி தமிழ் என்பதால் நன்கு தமிழ் பேசுவான்.
ராமகிருஷ்ண ராவ் மற்றும் சூர்யநாராயண ரெட்டி இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதால், வீரேந்திரன் வீட்டிலும் தமிழ் ஓரளவு தெரியும்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு கனடாவில் குடும்பத்துடன் சூரிய நாராயண ரெட்டி செட்டில் ஆகிவிட, தேஜா தனியாக தொழில் செய்வதாக கூற, அவனிடம் இருக்கும் குறும்புத்தனத்தை பொறுப்பின்மை என்று எண்ணிய சூரிய நாராயணன், வீரேந்திரனிடம் சிறிது காலம் கூடவே இருந்து தொழிலை பற்றி கற்றுக் கொண்டு வருமாறு கூறிவிட்டார்.
இப்போது வீரேந்திரனின் வீட்டில் தான் தேஜா தங்கி இருக்கின்றான்.
இளவஞ்சியை இப்போதுதான் நேரில் பார்க்கின்றான். அவர்களுக்குள் நடந்த விரும்பத் தகாத சம்பவங்கள் அவனுக்கும் நன்கு தெரியும்.
இப்போது நண்பன் என்ன நிலையில் இருக்கின்றனோ என்பது புரியாமல் வேகமாகவே அவனது அறைக்குள் நுழைய, கதவை திறக்கும் போதே அறையில் இருந்த பொருட்கள் உடைந்து நொறுங்கும் சத்தம்.
ஆம் ருத்ர தாண்டவம் ஆடும் சிவனின் தோற்றத்தை போல் நின்று இருந்தான் வீரேந்திரன்.
அறையில் இருந்த ஒரு பொருள் கூட உருப்படியாக இல்லை, அனைத்தையும் போட்டு உடைத்தவன், தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியாமல், சுவற்றில் ஓங்கி ஓங்கி தன் முஷ்டியை குத்திக் கொண்டிருந்தான்.
அவனைக் கண்டு திடுக்கிட்ட தேஜா, ஓடி சென்று அவன் கையைப் பிடித்து தடுக்க, வீரேந்திரன் அடங்குவதாக இல்லை. தேஜாவை உதறி தள்ளிவிட்டு அவனையும் முறைத்துப் பார்க்க,
“எதுக்குடா இவ்ளோ கோவம்?…” என்று தேஜா கேட்க
“எதுக்கா?.. அவ எதுக்குடா வந்தா?.. இந்த கோபத்துக்கு முதல் காரணமே அவ தானே.. கொன்னு இருப்பேன் டா.. எனக்கு இருந்த ஆத்திரத்துக்கு அடிச்சே கொன்னு இருப்பேன்.. என் அம்மா சொல்லுவாங்க பொண்ணுங்க தேவதைங்கனு, ஆனா இவளுங்க சுயநல பிசாசுங்க டா.. என் அம்மா வளர்ப்புக்காக இந்த ஒரு தடவை அவள சும்மா விட்டேன்.. இன்னொரு தடவ என் கண்ணுல பட்டா.. இருக்கிற மொத்த ஆத்திரத்தையும் ஒன்னு சேத்து அவள கூறு போட்ருவேன்…” என்று கர்ஜிக்க
“சரி டென்ஷனாகாத…” என்று அவனை அடக்கி இருக்கையில் அமர வைத்தான் தேஜா.
இந்த விடயத்தில் வீரேந்திரனை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவன் அம்மா பேச்சை கூட கேட்க மாட்டான் என்பது திண்ணம்.
அது தெரியாமல் ஹோட்டல் அறையில், தன் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டே, வீரேந்திரனை எப்படி சரி கட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் இளவஞ்சி.