அத்தியாயம் 03
அடுத்த நாள் காலை எப்பவும் போல வீரேந்திரன் உடற்பயிற்சி அறையில் வெயிட் லிஃப்ட்டிங் செய்து கொண்டிருந்தான். கண்கள் இரண்டும் ரெத்த சிவப்பாக இருந்தது. சரி வர தூங்காததாலா, இல்லை அவன் தூக்கத்தை பறித்துக் கொண்டவளின் மீது உள்ள கோபத்தினாலா அவன் தான் சொல்ல வேண்டும்.
தேஜாவும் உடற்பயிற்சி செய்வதற்காக வந்தவன் ‘ராத்திரி வர ஒருத்தி வெயிலயும் மழையிலயும் நனைச்சு தவம் இருந்தாளே, அவ இருக்காளா இல்லையா எந்த கவலையும் இல்லாம எப்படி தான் இருக்க முடியுதோ…’ என்று மனதில் நினைத்துக் கொண்டே வந்து ட்ரெட்மில்லில் ஓட ஆரம்பிக்க,
“கவல பட தான் நீ இருக்கியே…” என்று தேஜாவை பார்க்காமல் வீரேந்திரன் சொல்ல
ஒரு நொடி ஜர்க்கான தேஜா “என்ன?…” என்று திருட்டு முழியுடன் கேட்க
செய்து கொண்டிருந்த பயிற்சியை விட்டு விட்டு அவனிடம் வந்த வீரேந்திரன் “நேத்து அவள அப்படியே விட்டிருந்தா இன் நேரம் ஊருக்கு ஓடிருப்பா.. ஆனா நீ சப்போர்ட்டுக்கு போய் நின்ன தானே.. இனிமே போகமாட்டா, இதுக்கு பிறகு அவ என்னால அனுபவிக்க போற எல்லா கஷ்டத்துக்கும் காரணம் நீதான்…” என்று இறுக்கமான குரலில் கூறிவிட்டு விறு விறுவென வீரேந்திரன் சென்று விட
“என்னங்கடா இது நியாயம்.. எப்படியும் நீ பழி வாங்க போற.. அதுக்கு எதுக்குடா என்ன முன்னுக்கு நிப்பாட்டுற…” என்று தனியாக புலம்பியவன் ‘இவனுக்கு தெரியாம எதுவுமே பண்ண முடியாது போலவே…’ என்று நொந்து கொண்டு உடற்பயிற்சியை செய்ய ஆரம்பித்தான்.
இன்று வேறு இளவஞ்சிக்கு தங்குவதற்கு வீடு பார்த்து தருவதாக சொன்னான். அது வேறு எங்கும் இல்லை அவனது சொந்த வீடு அங்கு தானே உள்ளது. எனவே அங்கு தங்க வைக்கலாம் என்பதுதான் தேஜாவின் முடிவு.
எப்படியாவது வீரேந்திரனின் கண்ணில் மண்ணை தூவி விட்டு இளவஞ்சியை சென்று பார்க்க வேண்டும். எப்படி என்பது தான் புரியவில்லை, யோசனையுடனே உடற்பயிற்சியை முடித்தவன் குளித்து தயாரானான், வீரேந்திரன் வரவும் அவனுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டான்.
தேஜாவை பற்றி நன்கு தெரிந்ததாலோ என்னவோ புதிதாக ஒரு கம்பெனியுடன் என்றோ நடக்க இருந்த மீட்டிங்கை அன்று மாற்றி வைத்து, அதை தேஜாவை முன் நின்று நடத்துமாறு கூறிவிட்டான்.
அவனை சந்தேகமாக தேஜா பார்க்க “என்ன?.. தொழில் கத்துக்கிட்டு தனியாக கம்பெனி ஆரம்பிக்கணும் என்ற ஆசை இல்லையா..? போ போய் மீட்டிங் அட்டென்ட் பண்ணு…” சாதாரணமாக வீரேந்திரன் சொல்ல
“ரொம்ப பண்ற வீரா.. என் அப்பா தான் எனக்கு தொழில் தெரியலன்னு சொல்றாருன்னா நீயும் அப்படித்தான் நினைக்கிறியா?.. அவரோட திருப்திக்காக தான் இங்க வந்தேன்.. மத்தபடி ஐ நோ எவ்ரிதிங்…” என்று தேஜாவும் சற்று காட்டமாக சொல்ல
“உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும்.. ஆனா யார எப்படி ஹேண்டில் பண்ணனும்னு உனக்கு தெரியல.. பிசினஸ் பண்ணக்கூடிய டேலண்ட் உள்ள நீ அப்பாவ கன்வின்ஸ் பண்ணி பிசினஸ ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம்.. அவரோட திருப்திக்காக இங்க வந்த.. அதே மாதிரி எனக்கு பிடிக்காத ஒரு விஷயத்த மனிதாபிமானம் என்ற பேர்ல பண்ற.. மத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தோம்னா நம்ம உணர்வுகள குழி தோண்டி புதைக்க வேண்டிய நிலை வரும்.. போ! போய் உன் டேலண்ட்ட மீட்டிங்ல காட்டு.. அடுத்தவங்கள மீட் பண்றதுக்காக என்ன ஏமாத்துறதுல காட்டாத…” என்று சொல்லிவிட
அதற்கு மேல் அவனிடம் வாதாட எதுவும் இல்லை என்பதால் மீட்டிங்கை கவனிக்க சென்று விட்டான். இருந்தாலும் இளவஞ்சியை பற்றி யோசனை தான், நேற்று அவள் இருந்த நிலமைக்கு இப்போது எப்படி இருக்கின்றாளோ என்று மனது உறுத்திக் கொண்டிருந்தது.
மதியம் மீட்டிங்கை நல்லபடியாக முடித்தவன், அதில் அந்த கிளைன்ட் மதிய உணவிற்கு அழைத்திருக்க, எப்போதும் மரியாதையாக வேண்டாம் என்று விலகிக் கொள்பவன், இன்று இளவஞ்சியை பார்க்க இதுதான் வாய்ப்பு என்று எண்ணி, அவர்களுடன் வெளியே சாப்பிடுவதாக விரேந்திரனிடம் கூறிவிட்டு ஹோட்டல் வந்தான்.
அவர்களுடன் அவசரமாக சாப்பிட்டுவிட்டு, முக்கிய வேலை இருப்பதாக கூறிக்கொண்டு, வேகமாக இளவஞ்சி இருக்கும் ஹோட்டலுக்கு வந்து, அவள் அறையின் முன்பு நின்று கதவை தட்டினான்.
எந்த வித சத்தமும் இல்லை என்றதும் யோசனையாக மீண்டும் மீண்டும் தட்டி “இளா!.. இளா!…” என்று அழைக்க, அப்போதும் உள் இருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை.
இன்று விடிந்ததில் இருந்து வீரேந்திரனை தேடி அவள் வரவில்லை என்றதுமே, அவளுக்கு எதோ என்னவோ என்று யோசனை சென்றதுதான்.
அதற்கு ஏற்றது போல் இப்போது உள் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும் மனதில் சிறு பயமும் பதட்டமும் எழ, ஒருவேளை அறையில் இல்லாமல் வெளியே சென்றிருக்க கூடுமோ என்பதற்காக, உடனே ரிசப்ஷன் வந்தவன் இளவஞ்சியின் பெயரையும், அறையின் இலக்கத்தையும் சொல்லி வெளியே எங்கேயும் சென்று விட்டாளா என்று கேட்க,
ரிசப்ஷனில் இருந்த அந்தப் பெண்ணும் கணணியில் ஆராய்ந்து விட்டு “இல்ல சார்.. அவங்க மார்னிங்ல இருந்து ரூம விட்டு வெளிய வரல…” என்று சொல்ல
“என்ன!…” என்று அதிர்ந்தவன் “ஏங்க ஒரு பொண்ணு தனியா ரூம் எடுத்து தங்கி இருக்கா.. இரவு ரூமுக்குள்ள போனவ அடுத்த நாள் விடிஞ்சு மதியம் ரெண்டு மணியாகியும் ரூம விட்டு வெளிய வரலன்னா என்னன்னு செக் பண்ண மாட்டீங்களா?.. இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்கீங்க.. நான் எவ்வளவோ கதவ தட்டி கூப்பிட்டாச்சு, நோ ரெஸ்போன்ஸ்.. அந்த ரூம் ஸ்பேர் கீ குடுங்க…” என்று காட்டமாக கேட்க
அந்த பெண்ணும் அவசரமாக இளவஞ்சி தங்கி இருக்கும் அறையின் மற்றைய சாவியை எடுத்தவள், அவளும் உடன் வருவதாக கூறி சென்று கதவை திறக்க, ஒரு பெண்ணின் அறைக்குள் அவள் அனுமதி இல்லாமல் எப்படி செல்வது என்று தயங்கிய தேஜா “நீங்க முதல்ல உள்ள போய் பாருங்க…” என்று சொல்லி அந்த ரிசப்ஷன் பெண்ணை அனுப்ப
அவள் உள்ளே சென்று பார்த்துவிட்டு “சார்!…” என்று பதட்டமான குரலில் அழைத்திருந்தாள்.
குரல் வந்த மறுநொடி புயல் என உள்ளே சென்று பார்த்தவன், நெஞ்சம் தூக்கிப்போட அப்படியே நின்றான்.
படுக்கையில் உயிர் இல்லாத சடலம் போல் விரைத்த நிலையில் கிடந்தாள் இளவஞ்சி. “இளா!” என்று வாய்க்குள் சொன்னவனுக்கு இதயம் வேகமாக துடித்தது.
(மடத்தனம் செய்து விட்டேனா.. இவளை அப்படியே விட்டு சென்றிருக்க கூடாதோ…) என்று மனது அடித்துக் கொண்டது.
திடும் திடும் என்று ஓசை எழுப்பும் நெஞ்சத்தை அடக்க முடியாமல், பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு, மெதுவாக அவளை நெருங்கி, அவள் மூக்கில் கையை வைத்து பார்த்தான்.
சுவாசம் இருந்தது. அப்போது தான் அவன் மூச்சு சீரானது. உடனே அவளை கழுத்துக்கு அடியில் கையை விட்டு தலையை தூக்கியவன், கன்னம் தட்டி “இளா!.. இளா என்னாச்சு?.. கண்ண திறம்மா…” என்று எழுப்ப அசைவே இல்லை.
மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் உடல் தீயாய் கொதிக்க, நெஞ்சுகூடு சிரமபட்டு தான் ஏறி இறங்கியது.
அவள் நிலையை பார்த்தவன் அதற்கு மேல் நொடியும் தாமதிக்காமல், அவளை கைகளில் அள்ளிக் கொண்டு வேகமாக வெளியேறி, காரில் அவளை கிடத்தியவன், வேகமாக அருகில் இருந்த மருத்துவமனை வந்து சேர்ந்து, இளவஞ்சியை வைத்தியரிடம் தூக்கி சென்று காட்ட
அவரும் அவளை பரிசோதனை செய்து விட்டு, எமர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்து, தீவிரமாக சிகிச்சை அளிக்க தொடங்கினார்.
இளவஞ்சி இருந்த அறையின் முன்பு தோய்ந்து அமர்ந்தவனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. அவளுக்கு என்னவோ எதோ!… மருத்துவர் வேறு தெளிவாக எதுவும் கூறவில்லை.
அவன் இருந்த மனநிலையில் வீரேந்திரனுக்கு சொல்ல வேண்டும் என்பதையே மறந்து விட்டான். இளவஞ்சியை பற்றிய எண்ணம் மட்டுமே அவன் மூளையில்.
ஒரு காதலுக்காக இத்தனை துன்பப்பட வேண்டுமா, அதுவும் தன் நலனைப் பற்றி கூட யோசிக்காமல் என்று பிரம்மிப்பாகவும் கோபமாகவும் இருந்தும்.
ஒரு மணிநேரம் கழித்தே தேஜாவை மருத்துவர் அழைத்தார். “அதிக காய்ச்சல்.. அதனால வந்த ஃபீப்ரைல் சீஷர் (Febrile seizure).. அதான் உடல் விரைச்சு அப்படி இருந்தாங்க.. எப்படி இந்த அளவுக்கு கவனிக்காம விட்டீங்க?…” என்று கேட்க
“சாரி டாக்டர்.. இப்போ எப்படி இருக்கு?…” என்று தேஜா கேட்க
“இப்போ ஓகே தான்.. இன்ஜெக்ஷன் போட்டு இருக்கோம்.. ரிப்ஸ் ஏறுது, இன்னும் வன் ஹவர்ல கண்ணு முழிச்சிடுவாங்க.. எழுந்ததும் முதல்ல குடிக்க ஏதாவது குடுங்க.. அதுக்கு பிறகு லைட் புட்டா ஏதாவது குடுக்கலாம்…” என்று மருத்துவர் சொல்லி முடிக்க
“தேங்க்ஸ்! டாக்டர்…” என்றவன் வெளியே வர
ஒரு செவிலியர் பெண் வந்து அட்மிஷன் போட்டு, பில் கட்ட சொல்லவும். சரி என சென்றவன் இளவஞ்சி என்று அவள் பெயரில் அட்மிஷன் போட்டு, பில் கட்ட
அட்டனர் பெயர் நிரப்பாமல் இருக்க, அதை பார்த்த ரிசப்ஷனிஸ்ட் பெண் “சார் உங்க பேர்?…” என்று கேட்க
“இந்திரதேஜா…” என்று தன் முழுப்பெயரை சொல்ல, அந்த பெண்ணும் நிரப்பிக் கொண்டாள்.
பணத்தை கட்டி விட்டு இந்திரதேஜா இளவஞ்சியை பார்க்க அறைக்குள் வரவும், அவள் கண் விழிக்கவும் சரியாக இருந்தது.
அவளால் கண்களை திறந்து பார்க்கவே முடியவில்லை. அனலாக காந்தியது. கண்ணீர் வலிந்து காது வரை சென்றது. உடலின் மொத்த சக்தியும் வடிந்தது போன்று அத்தனை சோர்வாக இருந்தது.
“இளா!…” என்று அவளின் ஊசி ஏற்றாத மற்றைய கையை மென்மையாக பிடித்தான் இந்திரதேஜா.
அவளும் புன்னகைக்க முயன்றாள்.
“என்னம்மா இது.. ரொம்ப பயந்துட்டேன்.. இப்போ ஓகேவா?…” என்று கனிவாக கேட்க
“ம்ம்!…” என்றவளுக்கு வாயை திறக்கவே முடியவில்லை. தொண்டை வறண்டு வலித்தது. ஆனாலும் பார்வை அறை வாயிலை பார்த்தது.
அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்த தேஜாவிற்கு அப்போது தான் வீரேந்திரனுக்கு தகவல் சொல்லவில்லை என்பதே புத்தியில் உறைத்துது .
“ச்சே!…” நெற்றியை ஒற்றை விரலால் நீவியவன் “அது இளா, உன்ன பத்தின டென்ஷன்ல வீராக்கு சொல்லல.. ஜஸ்ட் எ மினிட்.. இப்பவே சொல்றேன்…” என்றவன் தன் தொலைபேசியை எடுத்து, சற்று தள்ளி வந்து வீரேந்திரனுக்கு அழைக்க
அவனும் அழைப்பை ஏற்றான். உடனே “வீரா!…” என்று ஆரம்பித்து, இளவஞ்சியை தேடி வந்ததிலிருந்து… அவளை அறையில் எந்த நிலையில் பார்த்தான் என்பது தொட்டு… இப்போது எந்த மருத்துவமனையில் அனுமதித்து உள்ளான். என்பது வரை கூறி முடிக்க,
வீரேந்திரனோ எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் அமைதியாக கேட்டு முடித்தவன் “இப்போ நீ எங்க?…” என்று தான் கேட்டான்.
“எங்கனா.. நான் இளா கூட தான் இருக்கேன்.. கிளம்பி வாடா பாவம் அவ உன்ன தான் தேடுறா.. என்ன கோபம் இருந்தாலும் உன்ன தேடி வந்த ஒரு பொண்ணு இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கா, அட்லீஸ்ட் மனிதாபிமான அடிப்படையிலயாவது வந்து ஒருதடவ பாத்துட்டு போ.. அவ உன்ன நம்பி மட்டும்தான் வந்தா, அவளோட ரெஸ்பான்சிபிலிட்டி நீதானே.. நீ அவள மன்னிக்க வேணாம், என்ன சொல்றாள்னு காது குடுத்து கேட்க வேணாம் ஒருவாட்டி வந்து பாரு.. பாவம்டா.. யாருமே இல்லாத அனாத மாதிரி.. தனியா.. அந்த ரூம்ல…” என்றவன் கண் முன் அவள் கிடந்த கோலம் வந்து போக, அதற்கு மேல் சொல்ல முடியவில்லை தொண்டையில் எதுவோ அடைத்துக் கொண்டது போல் இருந்தது.
“அப்படி என்னடா அவ்வளவு வெறுப்பு.. உன்னோட வலியும் வேதனையும் எனக்கு புரியாம இல்ல.. ஒரு ரெண்டு நிமிஷம் அவ சொல்றத கேட்கிறதால அந்த வெறுப்ப நீ மாத்திக்க போறது கிடையாது இல்ல.. அப்போ அத காது கொடுத்து கேளு.. அவ பக்கத்து நியாயத்த சொன்ன திருப்தியிலயாவது அவ திரும்பி ஊருக்கு போகட்டும்…” என்று தேஜாதான் மூச்சு பிடித்து பேசிக் கொண்டிருந்தான்.
எல்லாவற்றையும் கேட்டவன் எதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டித்திருந்தான் .
ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் புயல் வேகத்தில் இளவஞ்சி இருந்த அறைக்குள் நுழைந்து இருந்தான் .
வீரேந்திரனிடம் பேசிவிட்டு நண்பனையும் நொந்து கொள்ள முடியாமல், இந்த நிலையில் நிற்க வைத்த விதியை நொந்து கொண்டு,
கேண்டீன் சென்று வந்த தேஜா முதலில் இளவஞ்சியை மெதுவாக எழுப்பி அமர வைத்து, குடிக்க பால் கொடுத்தவன், சிறிது நேரம் கழித்து சாப்பிட ஏதாவது கொடுக்கலாமென்று அப்போதுதான் வாங்கி வந்திருந்த சாப்பாட்டை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
தடாலடியாக உள்ளே வந்த வீரேந்திரன் இளவஞ்சியை கடைக்கண் பார்வை கூட பார்க்காமல், தேஜாவின் சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற, விழி விரித்து என்னவென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் இளவஞ்சி.
அறையை விட்டு வெளியே வந்ததும் வீரேந்திரனின் கையைத் தட்டி விட்ட தேஜா “விடுடா.. என்ன பண்ற?…” என்று எகிறி பாய
“யாரோ எதோ வந்து சாகுறாங்க.. உனக்கு இங்க என்ன வேல?.. கிளம்பு…” என்று சொல்ல
“டேய் என்னடா.. சாவு அதுஇதுனு.. யாரோவா?.. அவ உன்ன தேடி வந்தாடா…”
“சரி என்ன தேடிதானே வந்தா.. நீ எதுக்கு இதெல்லாம் பண்ற?.. இது எனக்கும் அவளுக்குமானது.. உனக்கு நான் முக்கியம்னா இப்பவே என் கூட வா.. இல்ல இன்னையோட உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல…” என்று தேஜாவின் கையை பிடிக்க
எப்படி நண்பன் முக்கியம் இல்லை என்று சொல்வான். வீரேந்திரனை கொண்டு தானே இளவஞ்சியை தெரியும்.
எனவே “சரிடா.. இரு வாரேன்…” என்ற இந்திரதேஜா அவசரமாக இளவஞ்சியின் அறைக்குள் நுழைந்து,
தன் ஃபோன் நம்பர் அடங்கிய கார்டில் அவன் வீட்டின் முகவரியை எழுதி, அவளிடம் கொடுத்து “இந்த அட்ரஸ்க்கு போயிட்டு எனக்கு கால் பண்ணு.. சாரி இப்போ என்னால உன் கூட இருக்க முடியல.. வீராவ எப்படியாவது சமாளிச்சிட்டு திரும்பி வர முயற்சி பண்றேன்.. நான் வரலன்னா கிளம்பி இந்த வீட்டுக்கு போ.. அங்க வந்து பாக்குறேன்…” என்றவன்
வெளியே “தேஜா!…” என்ற வீரேந்திரனின் கர்ஜனையில்
அவசரமாக வெளியேற போனவன், திரும்பி இளவஞ்சியை ஒரு பார்வை பார்த்தவன், அவளை நெருங்கி, அவள் ஒற்றை கையில் அழுத்தத்தை கொடுத்து “பீ ஸ்ட்ராங்…” என்று சொன்னவன் அறையை விட்டு வெளியேறினான்.
வெளியே வந்தவனை இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு, மருத்துவமனை விட்டு வெளியேற இருந்த வீரேந்திரனை நிறுத்தி,
ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் தான் வெளியூர் செல்ல இருப்பதாகவும், இளவஞ்சியை தனியாக பார்த்துக் கொள்ள ஒரு தாதியை நியமிக்க முடியுமா என்று கேட்க,
அந்த பெண்ணும் முடியும் என்று சொன்னதும், அதை செய்யுமாறு கூறிவிட்டு, ஹாஸ்பிடல் மொத்த பில்லையும் கட்டி விட்டே சென்றான்.
அறையில் படுத்திருந்த இளவஞ்சிக்கு சுத்தமாக முடியவில்லை. வீரேந்திரன் வந்ததில் இருந்து எழுந்து சென்று பேசிவிடலாமா என்று எழுந்து கொள்ள முயனறாள் தான், ஆனால் காலை அசைக்க கூட முடியவில்லை.
அதேநேரம் அவன் கண்ணில் இருந்த கோபம், தேஜாவிடம் காட்டிய கடுமை எல்லாம் சேர்ந்து அவளை அமைதியாக்கி விட்டது.
தான் தான் அவனின் வெறுப்பிற்கு ஆளாகி விட்டோம், தனக்கு உதவி செய்து தேஜாவும் அதே நிலையை அடைய வேண்டாம் என்று தோன்றியது.
வீரேந்திரன் அளவிற்கு இல்லை என்றாலும் அவளும் செல்வ சீமாட்டி தான்.
அவள் தாயின் செல்ல மகள் தான். ஆனால் இன்று உடல்நிலை சரியில்லாத நேரம் துணைக்கு யாரும் இல்லாமல் தனிமையில் அனாதையாக இருக்கிறாள். காரணம் காதல்…