அத்தியாயம் 05

அத்தியாயம் 05

அடுத்த நாள் குண்டூரின் மிகப் பெரிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் அமர்ந்து இருந்தனர் வீரேந்திரன்,இந்திரதேஜா, அமர் மூவரும்.

நேற்று இளவஞ்சியை பார்த்த பின்னர், ருத்ர தாண்டவம் ஆடிய வீரேந்திரன் கோபமாக வெளியேறி, நேராக சென்றது அமராவதி பகுதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரைக்கு தான். மிகவும் அமைதியான, இயற்கையான, அழகான இடமாகும்.

ஆர்ப்பரிக்கும் தன் மனதை சாந்திப்படுத்த, அந்த நதி கரையின் படிகளில் அமர்ந்து குளிர்ந்த நீரில் காலை விட்டுக் கொண்டு, மல்லாந்து படுத்து விட்டான்.

இரவு முழுவதும் அங்கேயே தான் இருந்தான். விடியலில் வீட்டிற்கு வந்தவனிடம் தேஜா எதுவும் கேட்கவில்லை. இதோ பிசினஸ் மீட்டிங் முடிந்துவிட்டது, இதுவரை மூவருக்குள்ளும் சகஜமான பேச்சு வார்த்தைகள் இல்லை.

இளவஞ்சி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை நிற டாப்பில் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.

ஆர்வமாக, அவசரமாக வீரேந்திரனை விழிகளால் தேடிக் கொண்டே, ரெஸ்டாரண்ட் உள்ளே வந்தவள், அவனை கண்டு கொண்டாள்.

ஒரு நொடி நிலையாக நின்று, விழிகளை மூடி, ஆழ மூச்செடுத்து விட்டவள், “ரிலாக்ஸ் எப்படியாவது இன்னைக்கு சொல்லிடணும்…” என்று தன்னை தைரிய படுத்திக் கொண்டு, வீரேந்திரன் அமர்ந்து இருந்த டேபிளின் அருகே வந்தவள், அவன் எதிராக அமர்ந்து விட்டாள்.

அவளை பார்த்ததும் சட்டை பாக்கெட்டில் இருந்த கோபம் முகத்தில் வந்து ஒட்டிக் கொள்ள, “ஏய்!…” என்று கோபமாக பேச வந்தவனின் கையை பிடித்து அழுத்தினான் தேஜா. 

வீரேந்திரன் அவனை திரும்பி பார்க்க “ப்ளீஸ்டா இங்க வேணாம்.. அவ இப்போ போயிடுவா.. ரெண்டே ரெண்டு நிமிஷம் அவ என்ன சொல்ல வாரானு கேளு…” என்று மெதுவான குரலில் சொல்ல 

“விடுடா…” என்று பற்களுக்கு இடையில் வார்த்தையை கடித்து துப்பினான் வீரேந்திரன்.

இளவஞ்சியோ “நீங்க பாட்டுக்கு அன்னைக்கு நம்பிக்கை துரோகி, சுயநல பிசாசு, நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாதவனு சொல்லிட்டு வந்துட்டீங்க…” என்று அதன் பின் என்ன ஆனது என்று சொல்ல எடுக்க 

அவள் பேச ஆரம்பிக்கும் போதே எழுந்து கொண்டவன், அவளிடம் வந்து, அவள் கையை பிடித்து இழுக்க, 

“ப்ளீஸ் வீரா! நான் சொல்றத கேளுங்க…” என்று அவனுடன் போராடிக்க கொண்டே “அன்னைக்கு நீங்க சொன்ன வார்த்தைகள தாங்க முடியாம…” என்று அவள் சொல்ல வந்ததை முழுதாக சொல்லி முடிக்கும் முன் 

வீரேந்திரன் பிடித்து பலமாக இழுத்ததில், கதிரையோடு சேர்ந்து கீழே நன்கு அடிபட விழுந்தாள் இளவஞ்சி. வலியால் “அம்மா!…” என்று அலறியவள் கண்களில் கண்ணீர்.

வீரேந்திரன் இளவஞ்சியை பிடித்து இழுக்கும்போதே, அமரும் தேஜாவும் அவனைப் பிடித்து அமர வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களும் சற்று எதிர்ப்பாக்காத நேரம்தான் இளவஞ்சிக்கு கீழே விழுந்திருந்தாள். 

“டேய் என்னடா…” என்று தேஜா அவளை தூக்க போக, அதற்கு இடையில் மேஜையில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து, அவளை நோக்கி விசிறி அடித்திருந்தான் வீரேந்திரன். 

நல்ல வேலையாக கிளாஸ் அவளில் படவில்லை. ஆனால் அதில் இருந்த மொத்த நீரும் அவளின் டாப்பை நனைத்திருந்தது. 

‘ஐயோ என்ன இவன் இவ்வளவு மூர்க்கமா இருக்கான்…’ என்று அமர் திகைத்துப் பார்க்க 

“மனிசனாடா நீ.. ஒரு பொது இடத்துல ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா உனக்கு.. ச்சே!…” என்று தேஜா வீரேந்திரனை திட்டிக்கொண்டு, இளவஞ்சியை தூக்கிவிட 

தேஜாவின் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்ட வீரேந்திரன், இளவஞ்சியின் கையைப் பிடித்து, தரதரவென்று இழுத்துக் கொண்டு ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தான். 

வாசலை தாண்டிய மறுநொடி, அவளை வேகமாக கீழே தள்ளி விட்டான். ஏற்கனவே கீழே விழுந்ததில் கை முட்டியில் கால் முட்டியில் என்று நல்ல அடி, இப்போது தள்ளிவிட்டதில் இடையிலும் பலத்த அடி, கையை குற்றிய இடத்தில் படியின் முனை இருக்க, அது கையை பதம் பார்த்து விட ரெத்தம் கன்றிப்போனது.

“என்ன அன்னைக்கு.. அன்னைக்கு.. நான் ஒரு முட்டாளா ஏமாளியா நின்னது அன்னைக்கு தான்.. அத நினைக்கும் போது இப்பவே உன்ன கொன்னு போடலாம் என்ற வெறி வருது…” என்று ஆங்காரமாக கர்ஜித்தான்.

இவர்களின் கலாட்டாவில் ரெஸ்டாரண்டில் இருந்த அனைவரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் எழுந்து வெளியே வந்து கூட என்ன நடக்கின்றது என்பதை தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்க, 

தன்னிடம் இவ்வளவு வன்மையாக நடந்து கொள்ளும் வீரேந்திரனை நினைக்க விரக்தியும், தனது இந்த இழி நிலையை நினைத்து அவமானமாகவும் இருந்தது இளவஞ்சிக்கு. 

தேஜா தான் இம்முறை வேகமாக வீரேந்திரனை நெருங்கி அவன் சட்டையை பிடித்து, “இதுக்கு மேல இளா மேல கைய வெச்ச நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.. அவ சொல்றத கேட்டா உனக்கு நல்லது.. இல்ல கேட்கவே முடியாதுன்னு இதே ஆங்காரத்தோடையும் பிடிவாத்தோடயும் இருந்தனா கண்டிப்பா ஒரு நாள் வேதனபடுவ…” என்று சொல்ல 

அமர் இளவஞ்சிக்கு உதவ, எழுந்து நின்றவள் “விடுங்க தேஜா.. அவரோட ஆசைப்படி என்ன கொல்லட்டும்.. எப்படியும் அவ போய் சேந்துடுவா.. என்னால ஒரு உயிர் போயிடுச்சு என்ற குற்ற உணர்ச்சியில எப்படியும் நான் சாகத்தான் போறேன்.. அதுக்கு இவர் கையால எனக்கு மரணம் கிடைச்சா சந்தோஷமா ஏத்துக்கிறேன்.. அப்பவாவது என்னோட பாவத்துக்கான மன்னிப்பு கிடைக்குதானு பாக்குறேன்…” என்று இளவஞ்சி சொல்ல 

தேஜா விலகி நிற்க, 

“என்ன இது, புது ட்ராமாவா?…” என்று இளக்காரமாக வீரேந்திரன் கேட்க 

இளவஞ்சிக்கு பொறுமை போய் கோபம் வந்து விட, 

“ஆமா என் பேர வச்சு நானும் அவளும் ட்ராமா தான் போட்டோம்.. ஆரம்பத்துல அவ உங்ககிட்ட இருந்து விலகி தானே இருந்தா.. நீங்களா தான் அவளுக்காக என்னென்னவோ பண்ணி, காதல்னு அவ மனச கரைச்சு, உங்கள விட்டு விலகிப் போகணும்னு நினைச்சவள விடாம இழுத்து பிடிச்சு, அவ மனசுல காதல வலுக்கட்டாயமா திணிச்சது நீங்கதான்.. நீங்க ஏமாந்தது காதலாலனா அவள் உங்கள ஏமாத்தினது காதலுக்காக தான்.. அத கூட புரிஞ்சிக்காம நமக்குள்ள எதுவும் இல்ல, நீ எனக்கு யாரும் இல்லனு அந்த காதலையே வேணாம்னு தூக்கி போட்டுட்டு வந்துட்டீங்க.. 

…எனக்கு ஒன்னு புரியல.. வீட்டுல பாத்து முடிவு பண்ணுன ஒரு பொண்ணு, உங்க கூட சகஜமா பேசி பழக தயங்கின ஒரு பொண்ண, வலிய அவ பின்னாடி சுத்தி, பேசி காதலிக்க வச்சது யாரோட தப்பு.. வீட்டுல பேசுன மாதிரி அப்படியே இருந்திருந்தா நீங்க சொன்ன மாதிரி அவள் உங்களுக்கு யாருமே இல்ல தான்.. ஆனா அவள உங்க காதல்ல விழ வச்சு இப்போ விஷமான வார்த்தைகள விட்டுட்டு வந்துட்டீங்க.. 

…அந்த பைத்தியகாரி நீங்க வாழவே தகுதி இல்லாதவள்னு சொன்ன வார்த்தைய கெட்டியா பிடிச்சிக்கிட்டு, கை நரம்ப அறுத்துட்டு சாக போயிட்டா.. கஷ்டபட்டு காப்பாத்தி வச்சா, ஒரு பருக்க சாப்பாடு சாப்பிடாம, ஒரு சொட்டு தண்ணீ குடிக்காம உங்களுக்காக தவம் இருக்கா.. நாளுக்கு நாள் அவளோட உடல்நில மோசமாகிட்டே வருது.. இந்த விசயத்துல தப்பு பண்ணுனது நானும் நீங்களும் தான்.. அவ ஒரு சூழ்நிலை கைதி.. நீங்க நேசிச்சவ இப்போ மரண படுக்கையில கிடக்காள்.. உங்களால ஒரு உயிர் போனா உங்களால நிம்மதியா இருக்க முடியுமா.. இல்ல உங்க குடும்பத்துல இருக்குறவங்க எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம இருப்பாங்களா?…” என்று கேட்க 

இளவஞ்சி பேச பேச, அமரும் தேஜாவும் கூட பலவகையான முக பாவனைகளை காட்ட, வீரேந்திரனோ கல்லை விழுங்கியவன் போல் எந்த உணர்வையும் காட்டாமல் இறுகி போய் நின்றிருந்தான்.

“நீங்க சொல்றீங்களே பொண்ணுங்கள வெறுக்குறீங்க.. காதல வெறுக்கிறீங்கனு.. இனியும் அந்த காதல வெறுக்க உங்க வஞ்சி உயிரோட இருக்கணும்.. தயவு பண்ணி தண்டனைய எனக்கு குடுங்க, அவள கல்யாணம் பண்ணிக்குங்க.. கண்டிப்பா ஒரு நாள் அவ மேல இருக்குற கோபம் உங்களுக்கு மாறும்.. அப்போ அவ உங்க கூட இருக்கணும்…” என்று கலங்கி அடைந்த குரலில் கூறிய இளவஞ்சி 

“தேஜா என்ன வீட்டுல விட்டுறீங்களா?…” என்று கேட்க 

அவனும் அவளை கை தாங்கலாக பிடித்து காரிற்கு அழைத்துச் செல்ல பார்க்க, அவளால் காலை எடுத்து ஒரு அடி கூட வைக்க முடியவில்லை. தடுமாறி விழ போனவளை தாங்கி, கைகளில் தூக்கிக் கொண்டான் தேஜா. 

இளவஞ்சியும் மிகவும் முடியாத காரணத்தால் எதுவும் சொல்லவில்லை.

அவளை காரில் அமர வைத்தவன், வீரேந்திரனை திரும்பி கவலையாக பார்க்க, அமர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் கண்களால் நம்பிக்கை குடுத்தான்.

அதன் பின்னர் தான் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அமர் வீரேந்திரனின் தோளில் “வீரா!…” என்று கையை வைக்க, தோளை உதறிக் கொண்டவன் வேகமாக சென்று கார் கதவை திறக்க, அவன் பின்னே ஓடி வந்த அமர் அவனை தடுத்து “வீரா நான் ஓட்டுறேன்.. நீ பக்கத்துல இரு…” என்று சொல்ல 

அவனை முறைத்துப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் மற்றைய பக்கம் வந்து ஏறிக் கொண்டான். 

“எங்க?…” என்று கேட்க 

“வீட்ட…” என்று மட்டும் தான் பதில் வந்தது.

அமரும் காரை எடுத்தவன் வீரேந்திரனை வீட்டில் இறக்கி விட, அழுத்தமான காலடித்தடத்துடன் வீட்டினுள் நுழைந்தவன், ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்து பூ தொடுத்துக் கொண்டிருந்த லட்சுமி தேவியை கண்டு, ஒரு நொடி நின்று, பின் வேகமாக சென்று சோஃபாவில் அமர்ந்து, அவர் மடியில் தலையை வைத்து படுத்துக்கொண்டான். 

அவனை ஏமாற்றாத, அவன் வெறுப்புக்கு ஆளாகாத ஒரே பெண் அவர் தான். இருந்தும் அன்று உடைந்து நின்ற போது கூட தாய் மடி தேடாதவன் இன்று தேடியது ஏனோ.

லட்சுமி தேவிக்கு ஆச்சரியம் தான், சென்னையில் இருந்து வந்ததிலிருந்து இறுகிப் போய் அவரிடம் கூட விரைப்பாக திரிந்தவன், இன்று அரவணைப்பு தேடும் குழந்தையாக மடியில் படுத்துக்கொண்டதும், உள்ளம் நெகிழ மகன் தலையை கோதி விட்டார்.

அன்று ரௌத்திரமாக, கண்கள் சிவக்க, எரிமலையின் சீற்றத்தோடு வீரேந்திரன் கேட்ட கேள்வி “உன் பேர் என்ன?…” என்று 

அழுது சிவந்த கண்களில், பயம், பரிதவிப்பு, பதட்டம், கலக்கம் என்று அனைத்தையும் தேக்கி வைத்து, உடல் நடுங்க, குரல் பிசிறு தட்ட “வஞ்சிக் கொடி…” என்று மெதுவாக சொன்னாள் அவனின் காதலி.

இன்றும் அந்த குரல் காதில் கேட்க, அன்னையின் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டவன் விழிகளை இறுக்கி மூடிக் கொண்டான்.

தாயின் மடி சொர்க்கம் அல்லவா. அவன் மனதின் இரைச்சல்கள் ஓய்ந்து தூக்கத்திற்கு சென்றான்.

ஆனால் சென்னையில் இளவஞ்சின் வீட்டில், தனக்காக வழங்கப்பட்ட அறையில், அவனை நினைத்து ஊனை உருக்கி, உயிரை வருத்தி, தூக்கத்தை தொலைத்து, ஒரே ஒரு முறை வஞ்சி என்று ஆசையாக தன்னவன் அழைக்க மாட்டானா என்று காத்திருக்கின்றாள்.

ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்று தெரியும், அதனால் தான் அவன் நேசத்தை இழந்தவள், தன் உயிரையும் இழக்க சித்தம் கொண்டு மரணத்திற்காக காத்திருக்கிறாள்.

வைத்தியருடன் அவளின் அறைக்கு வந்தார் திகாம்பரி , வைத்தியரும் எப்போதும் போல் வஞ்சிக் கொடியை பரிசோதித்து விட்டு, திகாம்பரியை பார்த்து இடவலமாக தலையை ஆட்டியவர் வெளியே போக, 

துவண்டு போய், படுக்கையில் கலைந்த ஓவியமாக, வெறித்த பார்வையுடன் கிடக்கும் வஞ்சிக் கொடியை கவலையாக பார்த்து விட்டு அவரும் வெளியே வந்தார்.

மருத்துவரோ “சேலைன் மூலம் எத்தன நாளைக்கு வஞ்சிய இப்படியே வச்சிருக்க முடியும்னு தெரியல.. ஏற்கனவே அடி பட்டு நிறைய ரெத்தம் வெளியேறிடுச்சு.. இப்போ எதுவுமே சாப்பிடாம இத்தன நாள் இருக்குறதால உடல்ல ஏற்கனவே குறஞ்சிருக்குற ரத்த அளவு, ஹீமோகுளோபின் மேலும் பாதிக்கப்படும், ஏன் நினைவிழப்பு கூட வரலாம்,

நீரிழப்பு ஏற்பட்டா சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படலாம்,

மிகவும் மோசமான நிலையில உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எப்படியாவது அவங்கள சாப்பிட வைங்க என்று…” என்று ஏற்கனவே கூறியதை தான் கூறினார்.

“எங்க டாக்டர்.. எதையுமே கேக்குறா இல்ல.. இப்போ கைய அசைக்க முடியல அதனால தான் சேலைன் போட முடியுது.. இல்லனா முன்ன மாதிரி அதையும் பிச்சு எறிஞ்சிடுவா…” என்று கவலையாக சொல்ல 

“உங்க பொண்ணு வஞ்சிக்காக தானே அவங்க காதலிச்ச பையன தேடி போனாங்க.. ஏதாவது நல்ல செய்தி கிடைச்சுதா?…” என்று கேட்க 

“இல்ல டாக்டர்.. அந்த பையன் சரியான கோபகாரன்.. அவன் கிட்ட பேசவே முடியல, ஆனா கண்டிப்பா வஞ்சியோட சேத்து வைப்பேன்னு என் பொண்ணு உருதியா இருக்கா…” என்று திகாம்பரி சொல்ல 

“கூடிய சீக்கிரம் அது நடந்தா நல்லது…” என்ற மருதுவர் சென்று விட 

வஞ்சிக் கொடியின் அறையை பெரும் மூச்சு விட்டு பார்த்த திகாம்பரி சென்று விட்டார்.

தீயில் இறங்கி நிற்பது நீயாக இருக்கலாம்… 

தினம் தினம் உயிர் கருகும் வலியை சுமப்பது நானாகும்… 

என் காதல் கொண்டு உனக்கு கவசம் அமைத்தேன், எப்படி அறியாமல் விட்டேன் உன் காதல் என் கண்ணீர் துடைக்க கூட வராது என்று… 

க்ஹூம் உன் காதல்! என் காதல்! பிரிந்து நிற்கின்றது நம் காதல்!…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top