அத்தியாயம் 1❤️
அந்த அரங்கம் முழுதும் கரவொலி முழங்கியது.
“தி பெஸ்ட் பிசினஸ்மேன் அவார்ட் கோஸ் டு மிஸ்டர் ஹரி விஷ்ணு!” என்றனர்.
ஆறடி உயரக் கட்டுமஸ்தான உடல், உடற்பயிற்சி செய்த வாட்டசாட்டமான தேகம், அடங்காத கேசத்தைக் கோதியபடி இருக்கையை விட்டு எழுந்தான் அவன்.
மாநிறம், மீசை மற்றும் தாடிக்குள் புதைந்து கிடக்கும் உதடுகள். மறந்தும் கூட அவன் முகத்தில் துளி அளவு கூட சந்தோஷம் இல்லை.
விறுவிறுவென்று மேடை ஏறிச் சென்றான் ஹரி விஷ்ணு என அழைக்கப்படும் விஷ்ணு. விருதை வாங்கினான்.
“ஓகே.. மிஸ்டர் ஹரி விஷ்ணு சார்…” என்று அந்தத் தொகுப்பாளர் பெண் பேசத் தொடங்கினாள்.
“விஷ்ணு!” என்றான் அவன் அழுத்தமாக.
“ஓகே மிஸ்டர் விஷ்ணு, கடந்த மூணு வருஷமா நீங்கதான் பெஸ்ட் பிசினஸ்மேனா இருக்கீங்க. இப்போ நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று கேட்டாள் அந்தப் பெண்.
“ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்,” என்று அங்கே இருக்கும் அனைவரையும் பார்த்துப் பேசினான். “உங்க சப்போர்ட் இல்லாம என்னால இதை அடைஞ்சிருக்க முடியாது. தேங்க்ஸ் ஃபார் ஆல்,” என்றான் அவன்.
“ம்ம்…” என்ற அந்தப் பெண், “எப்போ நீங்க எங்களுக்கு எல்லாம் கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க?” என்றாள் புன்னகையுடன்.
அவன் முகம் சட்டென மாற, “சீக்கிரம்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அந்தப் பெண்ணுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதை மறைத்துக் கொண்டு, அவள் அடுத்த நிகழ்வைப் பேசலானாள்.
அவனுக்கோ அங்கே நிற்கவே பிடிக்கவில்லை. தனது பென்ஸ் காரில் ஏறிச் சென்றுவிட்டான்.
விடாமல் அவனது அலைபேசி ஒலி எழுப்பிக்கொண்டே இருக்க, அதற்கு உயிர் கொடுத்தான்.
“ஐ ஆம் சாரி விஷ்ணு…” என்றாள் பிரியா . (மேடையில் பேசிய பெண் தான் பிரியா ).
அவனோ, “எனக்கு உன்கிட்ட பேச விருப்பம் இல்லை,” என்று இணைப்பைத் துண்டிக்கப் போனான்.
“ஹே ஹே… ப்ளீஸ் விஷ்ணு, சாரி,” என்றாள் ரேகா கெஞ்சலாக.
“நீ எதுக்கு அப்படி கேட்ட?” என்றான் அவன் பல்லைக் கடித்துக்கொண்டு.
“அ… அது விஷ்ணு… எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு, நான் அப்புறம் பேசுறேன்,” என்று போனை வைத்துவிட்டாள்.
அவன் முகம் கடுகடுவென இருந்தது. வாகனத்தை அதிவேகத்தில் செலுத்தினான். அவன் சென்றது என்னவோ அவனது கடற்கரை இல்லத்திற்குத்தான்.
உள்ளே சென்றவன், நேரே அவனது அறைக்குச் சென்றான். அங்கே இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மதுவை எடுத்து, ஒரே மூச்சில் கடகடவெனக் குடித்தான். போதை தலைக்கேற, மஞ்சத்தில் பொத்தென்று விழுந்தான்.
கண்ணில் இரு சொட்டுக் கண்ணீர் கசிந்தது.
‘ஏண்டி என்னை விட்டுப் போன? உனக்கும் என்னைப் பிடிக்கலையா? நான் என்ன அவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேனா?’ என்று நினைத்தவன், அவளது நினைவுகளோடு அப்படியே தூங்கிப்போனான்.
யார் அந்த ‘அவள்’?
இந்த இரும்பு மனிதனான ஹரி விஷ்ணு, அவளை நினைத்து வருந்தும் அளவிற்கு அவள் யார்?
அவள்தான் இக்கதையின் நாயகியோ?
பார்ப்போம் வாருங்கள்,
அந்த விஷ்ணுவின் அவளை!
விஷ்ணுவின் அன்பானவள் பெயர் அனிதா.
அனிதா அப்படி எங்கே போனாள் இந்த ஹரி விஷ்ணுவை விட்டு? என்றுதானே நினைக்கிறீர்கள்? கொஞ்சம் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடுவோம்.
—
இங்கே…
“அனிதா… அனிதா…” என்று கூறிக்கொண்டே ஓடிவந்தான் வருண்.
அந்த இடம் முழுவதும் இருட்டாக இருந்தது, நிலவின் வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்தது. அலைகள் கடற்கரையை முத்தமிட்டுச் சென்றுகொண்டிருந்தன.
பெண்ணவள் அந்தப் பௌர்ணமி நிலவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். வருணின் சத்தம் கேட்டுத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
அவளைக் கண்டவன் அவளை நோக்கிச் சென்றான். “அனிதா…” என்றான். அந்தப் பாசக் குரலில் தவிப்பு, சோகம், சந்தோஷம் என்று பல உணர்வுகள் கலந்திருந்தன.
அவனைப் பார்த்தாள் அவள். அவளின் கண்களைப் பார்த்தே கண்டுகொண்டான் அவன், அவள் அழுதிருக்கிறாள் என்று. அவனுக்கு நெஞ்சு வலித்தது.
அது ஏன்?
“அனிதா…” என்றான் அவன் மீண்டும்.
“போ… என்கிட்ட வராத! எதுக்கு என்கிட்ட வந்த? நீ… நீ… என்னைத் திட்டிட்டல, போ…” என்றாள் அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு.
அவளைத் தலைசாய்த்துப் பார்த்தான். அவளோ கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தாள்.
பிறை நெற்றி, வில் போன்ற புருவம், கோலிக்குண்டு கண்கள், கூர் நாசி, சிவந்த உதடு என்று அவளைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். அவ்வளவு அழகு! அவளையே இமைவெட்டாமல் பார்த்தான்.
“வருண், நான் உன்மேல கோபமா இருக்கேன்,” என்றாள் மூக்கு சிவக்க.
அவனோ, “ஓ… அப்படியா? நான் உனக்கு ஒன்னு தரணும்னு நினைச்சேன், வேண்டாம் விடு,” என்றான்.
“என்னது அது? அப்படியா?” என்று கோபத்தை மறந்து அவனிடம் ஆவலாகக் கேட்டாள்.
“நீதான் கோபமா இருக்கியே, வேணாம் விடு,” என்றான் அவன் அவளைச் சீண்டும் பொருட்டு.
“யாரு??? யாரு கோபமா இருக்கா?? அப்படியெல்லாம் இல்ல… நீ அது என்னன்னு காட்டுப்பா, ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.
“ம்ம் சரி சரி காட்டுறேன்,” என்று அவள் ஆசையாகக் கேட்ட ஐஸ்கிரீமை அவளிடம் நீட்டினான்.
அவளோ அதை ஆசையோடு பார்த்தாள். வெண்ணிலா (Vennila) ஐஸ்கிரீம்! அதைத் தன் கரம் நீட்டி வாங்கி, ஆசை தீர ரசித்து ருசித்துச் சாப்பிட்டாள்.
அவள் ஆசையாகச் சாப்பிடுவதைப் பார்த்தான் அவன். அவனைப் பார்த்தவள், “உனக்கு வேணுமா?” என்று கேட்டாள். ‘இல்லை’ என்பது போலத் தலையை ஆட்டினான் அவன். அவள் மீண்டும் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.
“இன்னும் சின்னப் பிள்ளை மாதிரியே சாப்பிடுற,” என்று அவள் மூக்கில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமைத் துடைத்துவிட்டான்.
அவனை மூக்கு சிவக்க முறைத்தவள், “நான் ஒன்னும் சின்னப் பிள்ளை இல்லை,” என்றாள்.
அவனோ “ம்ம்…” என்று சிறு புன்னகை உதிர்த்துவிட்டு, கடலை வெறித்துப் பார்த்தான்.
“ரொம்ப அழகா இருக்குல,” என்றாள்.
“ஆமாம்,” என்றான் அவன்.
“வருண்… அனிதா…” என்று கூறிக்கொண்டே அங்கே வந்தான் சரவணன். இருவரும் அவனைத் திரும்பிப் பார்க்க, அவர்கள் அருகில் வந்தான் சரவணன்.
“என்னம்மா இப்படியா எங்களை இப்படித் தவிக்க விடுவ? உன்னை எங்கெல்லாம் தேடுறது?” என்றான் சரவணன் பாசமாய்.
“அண்ணா, சாரி அண்ணா,” என்றாள் மெல்ல.
“சரி வாங்க போலாம், ரொம்ப நேரம் ஆச்சு,” என்றான் சரவணன். மூவரும் வீட்டை நோக்கிச் சென்றனர்.
“எனக்கு ரொம்பத் தூக்கம் வருது,” என்று கூறிவிட்டு அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
“எனக்கும் தூக்கம் வருதுடா, நானும் போறேன்,” என்று வருண் தன் அறை நோக்கிச் செல்ல முயல, “நான் உன்கிட்ட பேசணும்,” என்றான் சரவணன்.
‘என்ன?’ என்பது போல் கேள்வியாகப் பார்த்தான் வருண்.
“நீ உன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்க? அடுத்து என்ன செய்யலாம்னு நினைக்கிற?” என்றான் சரவணன்.
“என் மனசுல என்ன… அடுத்த சி.எம் (CM) எப்படி ஆகலாம்னு யோசிக்கிறேன்,” என்றான் வருண் விளையாட்டாக.
அவனை முறைத்த சரவணன், “என்னடா நக்கலா?” என்றான்.
“பின்ன என்னடா… நான் என்ன நினைக்க?” என்றான் வருண்.
“சரி, நான் நேரடியாகவே கேட்கிறேன்… அனிதாவைப் பத்தி நீ என்ன நினைக்கிற?” என்றான் சரவணன்.
“அனிதாவுக்கு என்ன?” என்றான் அவன் எதையும் காட்டிக்கொள்ளாமல்.
“நீ தெரிஞ்சுதான் பேசுறியா?” என்றான் சரவணன்.
“இங்க பாருடா, நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு நல்லாவே புரியுது. இதுல நான் சொல்ல ஒன்னும் இல்ல,” என்றான்.
“ஒன்னும் இல்லையா? நீ அவகிட்ட எப்ப சொல்லப் போற?” என்றான் சரவணன் விடாமல்.
“ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவன், “எனக்குச் சொல்லணும்னு தோணல,” என்றான் வருண்.
“என்ன?” என்றான் சரவணன் அதிர்ச்சியாக.
“அவ எந்தச் சூழ்நிலையில இங்க இருக்கான்னு உனக்கு நல்லாவே தெரியும். அதனால் இனிமே இந்த விஷயத்தைப் பத்திப் பேச வேண்டாம்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான். போகும் அவனையே வெறித்துப் பார்த்தான் சரவணன்.
—
“கூப்பிட்டீங்களா அண்ணே?” என்று உள்ளே வந்தான் முரளி.
“என்ன நிலவரம்?” என்று கேட்டார் தனசேகரன் அதிகாரக் குரலில்.
“அ.. அது அண்ணே…” என்று இழுத்தான் முரளி.
“சொல்லு முரளி, என் பொண்ணு எங்க?” என்று கேட்டார் ஆதங்கத்துடன்.
“அது அண்ணே… இன்னும் பாப்பாவைப் பத்தி எதுவும் தெரியல,” என்றான் நடுங்கும் குரலில்.
“ஒரு வருஷம் ஆறு மாசமாத் தேடுறீங்க, இன்னும் கிடைக்கல!” என்றார் கோபமாக.
“அது அண்ணே… பாப்பாவுக்கு எதுவும்…” என்று அவன் இழுக்க, “என்ன?” என்றார் தனசேகரன் கம்பீரமாக.
“இல்லை அண்ணே, இனி நானே நேர்ல போய் தேடுறேன்,” என்றான் வேகமாக.
“நீயா?…” என்றார் தனசேகரன்.
“ம்ம்… அதுவும் சரிதான். போயிட்டு வா முரளி, ஆனா வந்தா என் பொண்ணோடதான் வரணும்,” என்றார் கட்டளையாக.
“சரி அண்ணே,” என்று அவன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
அந்நேரம், “அட தம்பி, சாப்பிட்டுப் போங்க,” என்றார் செல்வி. தனசேகரனின் மனைவிதான் செல்வி. இந்தத் தனசேகரன் – செல்வி தம்பதியரின் புதல்விதான் அனிதா!
“இல்லை அக்கா, நான் போகணும்,” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான் முரளி.
“ம்ம்…” என்று பெருமூச்சு விட்ட செல்வி, “வாங்க சாப்பிடலாம்,” என்றார் கணவரிடம்.
வெள்ளிக்கிழமை என்பதால் சாம்பார், ரசம், மோர், உருளைக்கிழங்கு வறுவல், எண்ணெய் கத்தரிக்காய்க் கூட்டு, அப்பளம் என்று சுவையான சைவ உணவு விருந்து பரிமாறினார் செல்வி. தனசேகரனும் ரசித்து ருசித்துச் சாப்பிட்டார். “நல்லா இருந்துச்சு,” என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.
அதன் பின் செல்வி சாப்பிட அமர்ந்தார். மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும், சமையல் செய்வது எப்பொழுதும் செல்வி மட்டும்தான். செல்வியின் சமையலுக்குத் தனசேகரன் அடிமை என்று கூடக் கூறலாம்.
செல்வி தன் மகளை நினைத்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அருமையான ருசியான சாப்பாடுதான், ஆனால் அவருக்கு எதுவும் தொண்டைக்குள் இறங்கவில்லை. தன் மகள் எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? நலமாக உள்ளாளா? சாப்பிட்டாளா இல்லையா? பாதுகாப்பாக இருக்கிறாளா என்று நினைத்தபடி பேருக்கு உணவைக் கிளறினார் செல்வி.
“அம்மா…” என்று கூப்பிட்டாள் வாணி. அவ்வீட்டில் வேலை செய்யும் பெண் அவள். அவளது குரல் கேட்டு அவளைப் பார்த்தார் செல்வி கேள்வியாக.
“அது அம்மா… என் பையனுக்கு ஸ்கூல்ல ஆண்டு விழா, நான் போயிட்டு வரவான்னு கேட்க வந்தேன்,” என்றாள்.
“ம்ம்.. போயிட்டு வா வாணி,” என்றார் செல்வி சோர்வாக.
“ரொம்ப நன்றிம்மா,” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றாள் வாணி.
கொஞ்சம் தூரம் சென்றவள், அங்கு நின்றிருந்த ஒரு காரில் ஏறினாள்!
யார் அவள்? காரில் செல்லும் அளவிற்குப் பணக்காரியா அவள்?
அப்படி என்ன நிலைமையில் அனிதா வருணோடு இருக்கிறாள்?
தொடரும்…
.