அத்தியாயம் 1
“நவநீதன் வெட்ஸ் தனிஷா” என்று வாசலில் ஜொலித்துக் கொண்டு இருந்தது பெயர்ப்பலகை…
ஆம் இன்று நவநீதனின் திருமண நாள்…
சக்திவேல் வீட்டின் கடைக்குட்டியின் திருமணம் என்றால் கேட்கவும் வேண்டுமா?
மண்டபமே கலகலவென இருந்தது…
விருந்தினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டு இருந்தனர் இரு வீட்டினரும்…
பல்லவி மேடிட்ட வயிற்றுடன் அமர்ந்து இருக்க, “அங்க இங்க ஓடி திரிய கூடாது புரியுதா?” என்று அவளுக்கு சிரித்தபடி மிரட்டிய கஜன், எழுந்து சென்று இருக்க, பல்லவி அருகே வந்து அமர்ந்தான் அர்ஜுன்…
“என்னடா வேர்த்துப் போய் இருக்க?” என்று கேட்டுக் கொண்டே, அவன் நெற்றியை டிஸ்ஸுவினால் துடைத்து விட்ட பல்லவியிடம், “அத விடு, டாக்டர் வீட்ல ரொம்ப வெட்டியோ?” என்று வழக்கமான கிண்டல் குரலில் கேட்டான்.
“ச்ச ச்ச, அவரை கைல பிடிக்கவே முடியாது, நீ ஏன் அப்படி கேக்கிற?” என்று அவள் கேட்க, அவளது மேடிட்ட வயிற்றைப் பார்த்து விட்டு பெருமூச்சுடன், “பார்த்தா அப்படி தெரியலையே, நான் சீர் செய்தே நடுத்தெருவில் நிற்கணும் போல” என்றான்.
பல்லவி சத்தமாக இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, “இதுவும் ட்வின்ஸ் தான் டா” என்று சொல்ல, “முடியல பல்லவி” என்றான்.
“சரி நீ சீர் ஒன்னும் செய்ய தேவல” என்று அவள் சிரித்தபடி சொல்ல, “அதெல்லாம் ஒன்னும் இல்ல, சும்மா சொன்னேன்” என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டில் இருந்து ஒரு நகைப்பெட்டியை எடுத்தவன், “ராகவிக்கு செயின் ஒன்னு எடுத்தேன், உனக்கும் சுகானாவுக்கும் சேர்த்து எடுத்தேன்” என்றான்.
“எனக்கெதுக்குடா இதெல்லாம்?” என்று அவள் கேட்க, “பச், போட்டுக்கோ” என்று சொல்லி திணிக்க, “அழகா இருக்கு” என்று அதனை பார்த்துக் கொண்டே அவள் சொன்னாள்.
இதே சமயம், தனது பெண் குழந்தையுடன் மல்லுக்கு நின்ற ராகவி அருகே வந்து அமர்ந்த கஜனோ, “என் மருமக என்ன சொல்றா?” என்று கேட்டான்.
“அவ அப்பா போலவே, சரியான பிடிவாதக்காரி” என்று ராகவியின் வாயால் அர்ஜுனின் மகள் அகல்யாவுக்கு திட்டு விழுந்தது…
அகல்யாவும் அதனை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், “அம்மா எனக்கு அந்த கேக் வேணும்” என்று ராகவியின் மடியில் படுத்து சிணுங்க ஆரம்பித்து விட்டாள்.
“பார்த்தீங்களா அண்ணா, இப்போ தான் கேக் சாப்பிட்டா, திரும்ப வேணுமாம், இதோட எத்தனையாவது கேக் தெரியுமா?” என்று ராகவி குற்ற பத்திரிகை வாசித்தாள்.
“டெய்லி தான் கொடுக்க கூடாது, எப்போவாச்சும் கொடுக்கலாம், தப்பில்லம்மா” என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த கேக்கை எடுத்து அகல்யாவிடம் நீட்டினான் கஜன்.
அவளுக்கும் ராகவி போல உருண்டை விழிகள் தான்…
“தேங்க்ஸ் மாமா” என்று அவள் விழிகளை உருட்டி சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அங்கே வந்து சேர்ந்தார்கள் கஜனின் புத்திரர்களான யாழினியன் மற்றும் குழலினியன்…
இருவருமே கஜனை போல வயதுக்கு மீறிய உயரம் கொண்டவர்கள்.
வேஷ்டி சட்டை அணிந்து இருந்தார்கள்…
அப்படியே கஜனை உரித்து வைத்த தோற்றம்…
இருவரும் ஓடி வந்தது என்னவோ அகல்யா அருகே தான்.
“அகல்யா என் கூட விளையாட வா” என்று யாழினியனும் குழலினியனும் அகல்யாவை பிடித்து இழுக்க, அவள் கையில் இருந்த கேக் கீழே விழ, “ஐயோ கேக்” என்று அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.
“டேய் அவளை சாப்பிட விடுங்கடா” என்று அவர்களை அதட்டிய கஜனோ, “யாழிம்மா” என்று அழைக்க, அங்கே பாவாடை சட்டையில், “என்னப்பா” என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தாள் அவன் செல்ல மகள்.
“தம்பிங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போங்க, அகல்யாவை சாப்பிட விடுறாங்க இல்ல” என்று சொல்ல, “சரிப்பா” என்று சொன்னவளோ, எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, அவனும் அவளுக்கு முத்தமிட, அவளும் சிரித்துக் கொண்டே, “வாங்கடா, இப்படி தான் சாப்பிடுற பாப்பாவை டிஸ்டர்ப் பண்ணுவீங்களா? கொஞ்சமாவது மென்னர்ஸ் இருக்கா?” என்று தம்பிமாரை அங்கிருந்து இழுத்துச் சென்றாள்.
அவர்களும் யாழினி என்றால் அடங்கி விடுவார்கள்…
இதனிடையே கஜன் நீட்டிய அடுத்த கேக்கை வாங்கிய அகல்யாவும், “நான் பாட்டி கிட்ட போறேன், அப்போ தான் நிம்மதியா சாப்பிடலாம்” என்று சொல்லிக் கொண்டே ஓடிச் சென்று விட்டாள்.
இதே சமயம், நடந்து சென்ற யாழினியை ரசனையாகப் பார்த்த ராகவியோ, “பெரிய மனுஷி ஆயிட்டா” என்று சிரித்தபடி சொல்ல, “என்னோட ஒரே இளவரசி” என்றான் மென் புன்னகையுடன்…
“அப்போ அடுத்ததும் இளவரசுனுங்க போல” என்று ராகவி கேட்க, இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, “அத விடு, உன் பொண்ணுக்கு செம டிமாண்ட், வளர்ந்ததும் இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுக்க போறானுங்க” என்று சொல்ல, அவளோ, “அதுக்காக எல்லாம் உங்க ஸ்பீடுக்கு எனக்கு குழந்தை பெத்துக்க முடியாதுப்பா” என்று சொன்னவளோ மேலும், “ஆரண்யன் மட்டும் யாழினியை விட வயசு கூட இருந்தா அவளை என் வீட்டு மருமக ஆக்கி இருப்பேன்… மிஸ் ஆயிடுச்சு” என்று சொல்ல, கஜன் சத்தமாக சிரித்துக் கொண்டான்.
இதே சமயம் கஜனின் அடுத்த பக்கம் வந்து அமர்ந்த அர்ஜுனோ, “மச்சான் இதோட நிறுத்துற ஐடியாவா? இல்லை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ போறீங்களா?” என்று கேட்டான்.
“கண் வைக்காதடா” என்று சிரித்தபடி அவன் தோளில் கஜன் கையை போட, “அடுத்ததும் ட்வின்ஸ்ன்னு கேள்விப்பட்டேன்” என்றான் அவன்.
“நிஜமாவா?” என்று ராகவி எட்டிப் பார்த்து கேட்க, கஜனும், “ம்ம்” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டே…
“இதுக்கு இல்லையா ஒரு எண்டு” என்று அவள் சிரிக்க, “கடவுளா கொடுக்கிறார் டி, நான் என்ன பண்ணட்டும்” என்றான்.
“கடவுள் கொடுக்கல நீங்க கொடுக்கிறீங்க” என்றான் அர்ஜுன்…
“டேய் நான் உன் அக்கா புருஷன் டா, அந்த மரியாதை கொஞ்சமாச்சும் கொடு டா” என்று சொல்ல, “மனசாட்சி இருக்கா உங்களுக்கு… நீங்க அஞ்சு, இப்போ ராம் மூணு… ஜீவி ரெண்டு எனக்கு கணக்கு பத்து” என்றான்…
கஜனும், “ஹெலோ, நாங்களும் தான் பண்ணனும்… நீ ரெண்டு, வந்தனா ரெண்டு” என்று சொல்ல, “ரெண்டும் ரெண்டும் நாலு தான்… எனக்கு பத்து சார்” என்றான்.
“அட, ஜீவியோட சேர்த்து எங்க நாலு பேரோட சீர் வரும் டா… நீ ஒருத்தன் தான் எங்களுக்கு கொடுக்கணும்” என்று சொல்ல, “சரி சரி விடுங்க” என்றான் அவன்…
கஜனோ ராகவியிடம், “பாரேன் எஸ்கேப் ஆகுறத” என்று சொல்ல, அவளும் சத்தமாக சிரிக்க, அவளை எட்டிப் பார்த்த அர்ஜுனோ, “அவங்களுக்கு போட்டியா பெத்துக்கலாம் டி” என்று சொல்ல, “கொன்னுடுவேன்” என்றாள் அவள் ஒற்றை விரலை நீட்டி…
“பார்த்தீங்களா உங்க வீட்டு பொண்ண?” என்று அர்ஜூன் சிரித்துக் கொண்டே கேட்க, அவனோ, “சுமக்க போறது அவ தானே…” என்றான்.
“தங்கச்சிக்குன்னு சொன்னதும் ஒரு நியாயம், என் அக்காவுக்கு ஒரு நியாயமா?” என்று கேட்டான்.
“டேய் உன் அக்கா தான் ஆசைப்பட்டு பெத்துக்கிறா, நான் என்ன பண்ணட்டும்?” என்று அவன் சொல்ல, “நீங்க கொடை வள்ளல்ன்னு இதுல எல்லாம் ப்ரூஃப் பண்ணனும்னு இல்ல, கேட்டதும் அள்ளி அள்ளி கொடுப்பாராம்” என்று கிண்டலாக சொல்லி விட்டு எழுந்து செல்ல, “டேய்” என்று கஜன் சிரித்தபடி அதட்டியது காற்றில் கரைந்து போனது…
ராகவியோ வாயை மூடி சிரிக்க ஆரம்பித்து விட, “இப்போ நீ எதுக்கு சிரிக்கிற?” என்றான் அவன்…
“சிரிப்பு வருதே, நான் என்ன பண்ணட்டும்” என்று அவள் சொல்ல, ” உங்க கூட முடியல, சரி சமையலை பார்த்துட்டு வந்திடுறேன்” என்று சொல்லி அவன் எழுந்து கொண்டான்.
இதே சமயம், வந்தவர்களைப் பார்த்து தலையசைத்துக் கொண்டே நடந்து சென்ற அர்ஜுனின் கண்ணில் பட்டது என்னவோ ஆரண்யனும் யாழினியும் சண்டை போடும் காட்சி தான்.
“சின்ன பசங்க கிட்ட சாக்லெட்டை பிடுங்கி எடுக்கிறியே… கொடு டா” என்று ஆரண்யனை அதட்டிக் கொண்டு இருந்தாள் யாழினி.
“மச்சானுங்களுக்குள்ள ஆயிரம் இருக்கு, நீ தள்ளு” என்று சொல்லிக் கொண்டே, யாழினியனையும் குழலினியனையும் பார்த்த ஆரண்யனோ, “என்ன சாக்லேட் வேணுமா? கொடுக்க முடியாது” என்றான் கிண்டலாக…
“உன் கிட்ட சாக்லேட் இருக்கு தானே, அவனுங்களோடத எதுக்குடா எடுக்கிற?” என்று யாழினி மல்லுக்கு நின்றாள்.
“எனக்கு எல்லாம் வேணும்” என்றான் ஆரண்யன். அவனைப் பார்த்துக் கொண்டே பிடரியை வருடிய அர்ஜுனோ, ‘நம்மள போல வந்து பிறந்து இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டே, “டேய் எதுக்குடா சின்ன பசங்க கூட சண்டைக்கு போற?” என்று கேட்டபடி ஆரண்யன் அருகே செல்ல, “மாமா உங்க பையனை நீங்க சரியா வளர்க்கவே மாட்டிங்களா?” என்று அர்ஜுனுக்கும் யாழினி வாயால் திட்டு விழுந்தது…
“ஏன் டி எனக்கு திட்டுற, உன் அத்தை கொடுக்கிற இடம் தான்” என்று அவளிடம் சொல்லி விட்டு ஆரண்யனைப் பார்த்த அர்ஜுன், “இப்போ கொடுக்க போறியா இல்லையா?” என்று இடையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டே கேட்டான்.
ஆரண்யனும் இடையில் இரு கைகளை வைத்துக் கொண்டு அர்ஜுனை ஏறிட்டுப் பார்த்தவன், “முடியாது முடியாது” என்று சொல்ல, யாழினியனும் குழலினியனும் அழ ஆரம்பித்து விட்டார்கள்…
யாழினிக்கு அவர்கள் அழுததுமே கோபம் தான் வந்தது…
“உன் கிட்ட சாக்லேட் இருக்கு தானே, ஏன் அடுத்தவங்களோடதுல ஆசை படுற?” என்று மீண்டும் கேட்டாள். அவள் தான் அநியாயத்தைக் கண்டாலே பொங்கி விடுவாளே.
“நான் அப்படி தான்” என்று ஆரண்யன் சொல்ல, “அறைஞ்சேன்னா, மாறி மாறி பேசிட்டே இருக்க” என்று அர்ஜுன் பொறுமை இழந்து அதட்ட, அவனுக்கு கொஞ்சமும் பயம் இல்லை…
அர்ஜுனையே முறைத்துப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்.
“டேய் உனக்கு கொஞ்சமும் பயம் இல்லையா? பயப்படுற போல அட்லீஸ்ட் நடி டா, என் மானமே போகுது” என்று அர்ஜுன் புலம்ப, ஆரண்யன் அதற்கும் அசரவில்லை….
“மாமாவை பார்க்க எனக்கே பாவமா இருக்குடா” என்று யாழினியே சொல்ல, “உன்னால என் நிலமைய பார்த்தியா?” என்று கேட்டான் அர்ஜுன் ஆரண்யனிடம்…
“ஐ டோன்ட் கெயார்” என்றான் ஆரண்யன்…
‘உன் அம்மா போல பிறந்து தொலைச்சு இருக்கலாம், என்னை போல பிறந்து என் உசிரை வாங்குறான்… இப்போ தெரியுது, மிஸ்டர் பார்த்தீபன் என்ன வச்சிட்டு என்ன பாடு பட்டு இருப்பாருன்னு’ என்று நினைத்துக் கொண்டே, கழுத்தை வருடிக் கொண்டே திரும்ப, அங்கே அவர்களை தான் பார்த்தீபனும் பைரவியும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்.
இருவருக்கும் சிரிப்பு வேறு…
“உனக்கு தேவை தான் டா” என்று பார்த்தீபன் சத்தமாக சொல்ல, “என் பையன் நான் சொல்றத கேப்பான், இப்போ பார்க்கிறீர்களா?” என்று சவாலாக கேட்டு விட்டு, ஆரண்யனைப் பார்த்தவன், “மானம் போகுது டா, சொல்றத கேளுடா” என்று கெஞ்சுதலாக கேட்டான்.
“முடியாது முடியாது” என்று எங்கோ பார்த்துக் கொண்டே சொன்னவன், சட்டென அர்ஜுனுக்கு பின்னே வெறித்துப் பார்த்துக் கொண்டே, இடையில் இருந்த கையை இறக்கி விட, அர்ஜுன் சட்டென திரும்பிப் பார்த்தான்…
அங்கே மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு நின்று இருந்தது என்னவோ கஜன் தான்…
கஜன் ஒரு பார்வை தான் பார்த்தான்…
ஆரண்யன் கையில் இருந்த சாக்லெட்டை யாழினியனுக்கும் குழலியியனுக்கும் கொடுத்து விட, கண்களால் கஜன் அழைத்தான்…
மெதுவாக தயங்கி தயங்கி நடந்து சென்றான்.
அவன் உயரத்துக்கு குனிந்தவன், “உனக்கு என்ன வேணுமோ என் கிட்ட கேளு, நான் வாங்கி கொடுக்கிறேன், யார் கிட்டயாச்சும் இப்படி புடுங்கி எடுக்கிறத பார்த்தேன், அப்புறம் என்ன பண்ணுவேன்னு தெரியும் தானே” என்று கேட்டான்.
“தெரியும் மாமா” என்றான் அவன் மென் குரலில்…
அவன் கன்னத்தை தட்டியவன், “இதெல்லாம் தப்புடா, அதிரடியா எந்த விஷயத்தையும் அடைய நினைக்க கூடாது. புரியுதா?” என்று கேட்க, “ம்ம்” என்றான்.
அர்ஜுன் குரலை செருமிக் கொண்டே பிடரியை வருடியவன், ‘இடைல நமக்கும் ஒரு ஊமை குத்து குத்தியாச்சு’ என்று நினைத்துக் கொண்டான்.
அவனைப் பார்த்து விட்டு அர்ஜுனைப் பார்த்தவன், “இவனை கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு அனுப்பு, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
அர்ஜுனும், “ஆஹ் நீங்களே வச்சுக்கோங்க” என்று சொல்ல, “அப்பா” என்றான் ஆரண்யன் கடுப்பாக…
“என்னடா?” என்று கேட்க, “நீங்க சொல்றது எல்லாம் கேட்கிறேன் பா” என்றான் சிணுங்களாக…
“ஆஹ் அப்படி வா வழிக்கு, இல்லன்னா மாமா வீட்ல விட்டுடுவேன்” என்று சொல்ல, “கேக்கிறேன்னு சொல்றேன்ல” என்று சொன்னவன், அருகே இருந்த யாழினியன் மற்றும் குழலியனுக்கு முத்தமிட்டு, “நான் கிஸ் கூட பண்ணிட்டேன்” என்றான்…
கஜனுக்கு சிரிப்பாகி விட்டது…
அடக்கிக் கொண்டே, “இனி ஏதும் பண்ணுனா, என் கிட்ட சொல்லு அர்ஜுன்” என்று சொல்லி விட்டு அர்ஜுனின் தோளில் கையை போட்டுக் கொண்டே நடந்து செல்ல, அர்ஜுனோ, “அவன எப்படி நீங்க கன்ட்ரோல் ல வச்சு இருக்கீங்க? என்னாலேயே முடியல” என்றான்…
கஜனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, “போன முறை ஜுரம் வந்து நான் தானே இன்ஜெக்ஷன் போட்டேன். அப்போ இருந்து அவனுக்கு என்னை பார்த்தா பயம்” என்று சொல்ல, “உங்க தங்கச்சி கிட்ட சொல்லுங்க, அவ தான் ரொம்ப செல்லம் கொடுக்கிறா அவனுக்கு” என்று சொல்ல, கஜனோ, “அவ மேல தப்பு மொத்தமா சொல்லிட முடியாது… ஜெனெடிக்” என்று கிண்டலாக சொல்லிக் கொண்டே நகர, அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன், “தங்கச்சியை காப்பாத்துறதுக்கு எப்படி எல்லாம் பேசுறீங்க” என்று சொன்னான்….
கஜனும் கண் சிமிட்டி சிரித்துக் கொள்ள, இருவரும் சமையல் நடக்கும் இடத்துக்கு சென்றார்கள்…
அங்கே விஜய் வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டே நடக்க, அவனுக்கு பின்னே அவனது மூத்த மகள் கிருஷ்ணி, அவன் வேஷ்டியை பிடித்துக் கொண்டே நடக்க, அவள் பாவடையை பிடித்துக் கொண்டே, ஒரு வயதான அவனது மகன் விஷ்ணு நடந்து சென்றான்.
விஷ்ணு இப்போது தான் நடை பழகிக் கொண்டு இருப்பான் போலும், அவன் நடப்பதை சிரித்தபடி தள்ளி நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் வந்தனா. அவள் அருகே வந்து நின்ற கஜனோ, “பெரிய மனுஷன் நடக்கிறத பாரேன்” என்று சொல்ல, அர்ஜுனும், “செம்ம கியூட்டா இருக்கான் அவன்” என்றான் சிரித்துக் கொண்டே.
வந்தனாவோ, “ரெண்டும் அவங்க அப்பா போலவே” என்று சொல்ல, “விஜய் போல குழந்தைங்கன்னா சந்தோஷப்படணும். எங்க வீட்ல என்னை போல ஒருத்தன் பிறந்து எல்லாரோட உயிரையும் வாங்கிட்டு இருக்கான்” என்று அர்ஜுன் சலித்துக் கொள்ள, “அவனை நான் பார்த்துக்கிறேன், நீ ஒன்னும் வருத்தப்படாதே, ஒரு மாதிரி ஒரு லைனுக்குள்ள கொண்டு வந்திடலாம்” என்று கஜன் சொல்ல, “உங்கள தான் நம்பி இருக்கேன், என் அப்பா என்னால கஷ்டப்பட்ட போல, எனக்கு கஷ்டப்பட முடியாது” என்று சொன்னான்…
இதனைக் கேட்டு வந்தனாவும் கஜனும் சிரித்துக் கொள்ள, விஜய் சட்டென திரும்பிப் பார்த்தான்… அவன் திரும்பியதும், கிருஷ்ணியும் திரும்பினாள்.. விஷ்ணுவும் திரும்பினான்…
“மூணு பேரும் ஒண்ணா திரும்புறத பாருங்களேன்” என்று சொன்ன கஜனோ, “டேய் இங்க வாடா” என்று விஷ்ணுவை அழைக்க, “மாமா” என்று சொல்லிக் கொண்டே குடு குடுவென ஓடி வந்தான் அவன்… இடையில் விழுந்தும் விட்டான்…
“ஐயோ” என்று சொல்லிக் கொண்டே, வந்தனா அவனை நோக்கி செல்ல முயல, எட்டி அவள் கையை பற்றிய கஜனோ, “அவனே எந்திரிப்பான், நீ சும்மா இரு” என்று சொல்லிக் கொண்டே விஷ்ணுவைப் பார்க்க, அவனும் எழுந்து, குடுகுடுவென கஜனை நோக்கி ஓடி வந்தான். அவனை அள்ளி தூக்கிக் கொண்ட கஜனோ, “என்னடா குட்டி அடி பட்டிச்சா?” என்று கேட்க, அவனும் இதழ்களை பிதுக்கி ஆம் என்று தலையாட்ட, “அது சீக்கிரம் சரி ஆயிடும்” என்று சொல்லிக் கொண்டே, குழந்தையின் கன்னத்தில் முத்தமிட, குழந்தையும் சிரித்துக் கொண்டது…
விஜய்யும் கிருஷ்ணியின் கையை பற்றிக் கொண்டே, அவ்விடம் வந்து சேர, “ரெண்டும் உன்னை போலவே விஜய்” என்றான் அர்ஜுன்…
விஜய்யும் அழகாக சிரித்துக் கொண்டே, வந்தனாவை ரசனையாகப் பார்க்க, அவளும் கண் சிமிட்டி சிரித்துக் கொண்டாள்.
இதே சமயம் ஆறு மாத கைகுழந்தையுடன் அங்கே வந்து சேர்ந்த ராம்குமாரோ, “என்னடா எல்லாரும் இங்க நிக்கிறீங்க?” என்று கேட்டான்.
கஜனின் கையில் இருந்த விஷ்ணுவோ, “ஐ பாப்பா” என்று ராம்குமாரின் கடைக்குட்டியான அஞ்சலியை பார்த்துக் கொண்டே சொல்ல, “டேய் உன் பார்வையே சரி இல்ல, என் பொண்ணு மேல கண்ணு வைக்காதே” என்று ராம்குமார் அவனை கிண்டல் செய்ய, “முறைப்பொண்ணு தானே” என்றான் அர்ஜுன்…
“உங்க பொண்ணை எங்க வீட்டு மருமகளா அனுப்புங்க, நான் கவனமா பார்த்துக்கிறேன்” என்று வந்தனா சொன்னாள்.
ராம்குமாரோ, “அப்போ என் மூத்த சிங்கக்குட்டிக்கு உன் பொண்ண கொடு, அவன் கிருஷ்ணா இவ கிருஷ்ணி” என்று சொல்ல, “டீல் டீல்” என்றாள் வந்தனா.
“டேய், வளர முதல் என்னடா பேசிட்டு இருக்கீங்க, வளர்ந்து அவங்களே முடிவெடுக்கட்டும், குழந்தைங்க இருக்கும் போது இத பேசாதீங்க… அவங்க இல்லாத நேரம் உங்க சம்பந்தத்தை பேசுங்க, ஆசையை வளர்த்துக்கிட்டு அது நடக்கலைன்னா அவங்களுக்கு தான் வருத்தம் ஆயிடும்…” என்று கஜன் சிரித்தபடி கேட்டுக் கொண்டான்.
குரலில் ஒரு கண்டிப்பும் சேர்ந்து இருந்தது… போன தலைமுறைகளில் நடந்த தவறுகள் இந்த தலைமுறையில் நடந்து விடவே கூடாது என்று உறுதியாக இருந்தான்.
உடனே ராம், “சரி இனி பார்த்துக்கிறோம்… நம்ம தனியா பேசலாம் வந்தனா” என்று கண் சிமிட்டி சொன்னவனோ, “எங்க ஜீவி?” என்று கேட்க, “இப்போ தான் கால் பண்ணுனான், நேத்து கொஞ்சம் வேலை போல, சீக்கிரம் வந்திடுவான்” என்று அர்ஜுன் சொல்ல, அவன் வண்டியும் மண்டபத்தை அடைய நேரம் சரியாக இருந்தது…
அவன் கையை பற்றிக் கொண்டே, அவன் மகன் நடந்து வர, மேடிட்ட வயிற்றுடன் அவன் அருகே நடந்து வந்தாள் நேத்ரா…
அவர்களைக் கண்ட சுகானாவோ, “என்ன இவ்ளோ நேரம்?” என்று நேத்ராவிடம் கேட்டு விட்டு, ஜீவிதனைப் பார்க்க, “வேலை டி” என்றான் அவன்…
நேத்ராவோ, “எங்க உங்க குட்டி இளவரசி?” என்று கேட்க, “அவ அப்பா கிட்ட இருக்கிறா, என்னை வேலை பார்க்கவே விட மாட்டா, அது தான் ராம் கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன்” என்று சொல்ல, அவ்விடம் வந்து சேர்ந்த பல்லவியோ, “வா நேத்ரா, எப்படி இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அணைத்து விடுவித்தாள்.
“ரெண்டு பேருக்கும் ஒரே மாசம் தானே, உங்க வயிறு ஏன் பெருசா இருக்கு?” என்று கேட்க, பல்லவியோ, கண் சிமிட்டி ரெண்டு என்று காட்டி இருக்க, ஜீவிதனோ, “எப்படி டி இப்படி நான் ஸ்டாப் ஆஹ் ரிலீஸ் பண்ணிட்டே இருக்கீங்க?” என்று சிரித்தபடி கேட்டான்.
“கடவுள் கொடுக்கிறார் டா” என்று பல்லவி சொல்ல, “உன் புருஷன் கொடுக்கிறாருன்னு சொல்லு” என்று ஜீவிதன் சொல்ல, “ச்சீ, நீயும் அர்ஜுனும் ஏன் டா இப்படியே பேசிட்டு இருக்கீங்க” என்று சத்தமாக சிரித்தபடி கேட்டாள் பல்லவி…