மோகினிக்கு இப்போது வெற்றியை நினைக்கவே அருவருப்பாக இருந்தது…
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, நீலாவை பார்த்தவளுக்கு எப்படி சமாதானம் சொல்வது என்றே தெரியவில்லை…
“நீலா” என்றாள் தழுதழுத்த குரலில்…
கண்ணீரை துடைத்து விட்டு, மோகினியை ஏறிட்டு பார்த்தவளோ, “இப்படி பட்டவனுக்காக தான் அண்ணாவை உள்ள தள்ளி இருக்கீங்க” என்றாள்.
மோகினியோ, “அவனுக்காக நான் பழி வாங்க வந்தது உண்மை தான்… இப்போ அவனை கல்யாணம் பண்ணிக்க இருந்ததை நினச்சு அருவருப்பா இருக்கு… அவன் சாக வேண்டியவன் தான், அதுக்காக உன் அண்ணா ஒன்னும் உத்தமன் இல்லை, கொலை பண்ணி இருக்கான், சட்டத்தை கைல எடுக்க அவன் யாரு? உன் அண்ணா உள்ள போனது ஒன்னும் தப்பில்ல” என்றாள்.
என்ன தான் வெற்றி மேல் இருந்த காதல் ஒரே கணத்தில் மொத்தமாக மறைந்து போனாலும், கொலை செய்த ராவணனை எல்லாரும் தூக்கி வைத்து கொண்டாடுவது போல அவளால கொண்டாட முடியவில்லை…
போலீஸ் ரத்தம் அல்லவா?
நல்லவனோ கெட்டவனோ, கொலை செய்தால் அது கொலை தான் என்கின்ற மனநிலையில் இருந்தாள்…
நீலாவுக்கு ஏனோ மோகினி பேசியது பிடிக்கவில்லை, “நான் கிளம்புறேன், அண்ணா நல்லவர் தான்” என்று சொல்லி விட்டு செல்ல, மோகினி எதுவும் பேசாமல், அவள் முதுகை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்…
மோகினிக்கு நீலாவின் வாழ்க்கையை சரியாக்க வேண்டும் என்கின்ற முனைப்பு மட்டும் தான்.
மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருப்பாள் என்று தெரிந்தது…
சற்று முன்னர் நீலாவிடம் கொஞ்சம் அழுத்தமாக பேசியதற்காக தன்னை தானே கடிந்து கொண்டவள், ‘இனி கொஞ்சம் மென்மையா பேசணும்’ என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்…
அறுத்த செயினை அவள் குப்பைக்குள் தான் போட்டு இருந்தாள்.
ஒரு மாதிரி அழுத்தமாக இருந்தது…
அழுகை எல்லாம் வரவில்லை…
மனதளவில் உறுதியானவள் ஆயிற்றே…
இப்படியே நாட்கள் நகர, இரு நாட்கள் கழித்து நீலா வந்தாள்.
பெரிதாக எதுவும் நடந்ததை பற்றி பேசவில்லை…
இயல்பான கலந்துரையாடல் தான் இருந்தது…
முதல் இருந்ததை விட இப்போது நீலா மேல் சற்று அதீத அக்கறை தான் மோகினிக்கு…
இதனிடையே அடிக்கடி, ராஜதுரை மற்றும் மீனாட்சி வந்து குழந்தையை பார்த்து விட்டு செல்வார்கள்…
மோகினியுடன் பேச்சு வார்த்தை குறைவு தான், கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.
குழந்தையுடன் தான் அதிகமாக நேரம் செலவிடுவார்கள்…
வயதானவர்கள் என்பதால் அவளும், பெரிதாக கண்டு கொள்வது இல்லை…
ஒதுங்கிக் கொள்வாள்…
அதுவும் வெற்றி பற்றி கேள்விப்பட்டதில் இருந்தே முரண்படுவதை குறைத்துக் கொண்டாள்…
அவளுக்கும் டியூட்டி ஆரம்பித்து விட, நீலா தான் குழந்தையை அதிகமாக பார்த்துக் கொண்டாள்.
வேலைக்கு இன்னொரு வயதான பெண் ராக்கம்மாவையும் உதவிக்கு நியமித்து இருந்தாள் மோகினி…
குழந்தையும் வளர ஆரம்பித்து இருந்தது…
“அம்மா” என்று அவளை அழைக்கவும் ஆரம்பிக்க, அவளுக்கோ அப்படி ஒரு பூரிப்பு…
அவளுக்கென்று ஒரு உயிர்…
ஜெகன், நீலாவிடம் சொல்லி, குழந்தையின் புகைப்படத்தை ரகசியமாக அலைபேசியில் எடுத்து வந்து, ராவணனிடம் காட்டுவான்….
குழந்தையை இமைக்காமல் பார்த்து இருப்பான் அவன்…
இப்படியான ஒரு நாளில் அன்று நீலாவுக்கு கவுன்சிலிங் இருக்க, அன்று மோகினி லீவு போட்டு வீட்டில் நின்று இருந்தாள்.
நீலாவும் ஹாஸ்பிடல் சென்று இருந்தாள்…
கவுன்சிலிங்கை முடித்து விட்டு திரும்பியவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன…
காலையில் சாப்பிடவில்லை என்பதால் என்னவோ மயக்கமாக இருக்க, அப்படியே அங்கே இருந்த இருக்கையில் சட்டென அமர்ந்தவள் தென்பட்டது என்னவோ ரிஷியின் விழிகளில் தான்.
மோகினி வீட்டில் அவள் இருப்பதால் என்னவோ அவளை நன்றாகவே தெரியும்…
‘இது நீலா தானே’ என்று முணுமுணுத்தபடி அவள் அருகே வந்தவன், “நீலா ஆர் யூ ஓகே?” என்று கேட்க, அவளோ, “தலை சுத்துது” என்று சொல்லிக் கொண்டே, அப்படியே மயங்க, அவளை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டான்.
வைத்தியசாலை தானே…
அங்கேயே அவளை அனுமதித்தவனுக்கு தெரியும், இது பசி மயக்கத்தினால் உண்டான மயக்கம் என்று…
அதனால் பெரிய விஷயமாக மாற்றாமல், உணவை வாங்கி கொடுத்து விட்டு, அவளை ஏற்றிக் கொண்டு காரில் புறப்பட்டு இருந்தான்.
அமைதியாக வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“காலைல சாப்பிட்டு வந்திருக்கலாமே” என்று சொல்ல, அவளோ, “டாக்டர் சித்தார்த் கிட்ட தான் அப்பாயிண்ட்மெண்ட், நேரத்துக்கே வர சொன்னார்” என்று சொல்ல, அவனுக்கு வைத்தியரின் பெயரை கேட்டதும் புரிந்து விட்டது, ஏதோ மனநலம் சம்பந்தமான சிகிச்சை எடுக்கின்றாள் என்று…
அதன் பிறகு துருவி எல்லாம் கேட்கவில்லை…
அவள் வீட்டில் விட்டவன், நேரே வந்தது என்னவோ மோகினியை தேடி தான்.
அவள் குழந்தையை தூங்க வைத்து விட்டு, அவள் உடைகளை கழுவி காயப்போட்டுக் கொண்டு இருக்க, “அக்கா, எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் ரிஷி…
“சொல்லுடா, வேலை எப்படி போகுது? என்ன நேரத்துக்கே வந்துட்ட? உங்க அம்மா ஸ்டேஷன் ல இருக்காங்க, வீட்டு திறப்பு இருக்கா என்ன?” என்று கேட்டாள்.
போலீஸ் குவாட்டர்ஸ் என்பதால் அடுத்தடுத்த வீடுகள் தான்.
அவனும், “அதெல்லாம் இருக்கு, இன்னைக்கு நீலா ஹாஸ்பிடல் வந்தா” என்று சொல்ல, மோகினி பெருமூச்சுடன், “ஆமா, அதனால தான் நான் லீவு போட்டேன்” என்றாள்.
“சாப்பிடாம வந்து மயங்கிட்டா, அப்புறம் அவளை வீட்ல கொண்டு விட்டு வந்தேன்” என்றவனோ, “நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்றான்.
மோகினியும், “என்னடா?” என்க, “அவ ஏன் கவுன்சிலிங் போறா, அது பத்தி தெரியுமா என்ன?” என்று கேட்டான்.
“தெரியும் , ஆனா கொஞ்சம் ப்ரைவேட் மேட்டர்” என்றாள் மோகினி…
“அப்போ ஓகே, சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்… சொல்லணும்னு இல்ல” என்று சொல்லிக் கொண்டே நகர போனவனை, “ரிஷி” என்று அழைத்தாள் மோகினி…
அவனும் திரும்பி பார்க்க, “என் கிட்ட எப்போவும் ஒரு விஷயம் சொல்வியே… அதே மனநிலை இப்போவும் இருக்கா?” என்று கேட்டாள்.
“எத பத்தி?” என்று அவன் கேட்க, “கல்யாணம் பண்ணிக்கிறதுன்னா, வாழ்க்கைல ரொம்ப பாதிக்கப்பட்ட பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன், அப்படினு சொல்வியே” என்று கேட்டாள்.
அவனோ, “அந்த மனநிலை எப்போவும் இருக்கு, அம்மாவை யாருமே கல்யாணம் பண்ணிக்கல, அப்பா பேர் தெரியாம தானே நானே வளர்ந்தேன், அப்படி ஒரு பொண்ணு வாழ கூடாதுன்னு நினைக்கிறன்” என்றான்.
ஆம் விசாலாட்சிக்கு பல ஆண்களால் என்றோ நடந்த விபரீதம் தான், ரிஷி உருவாகவே காரணம்…
தந்தை யார் என்றே தெரியாமல் கர்ப்பம் வேறு…
குழந்தையையும் பெற்று கொண்டார்.
ஊரில் இஷ்டத்துக்கு பேசினார்கள்…
ஊரார் வாயை அடைக்க தான் போலீசில் சேர்ந்தார்.
போலீஸ் ஆனதும் ஊர் வாய் தானாக பயத்தில் மூடிக் கொண்டது…
தனியாக குழந்தையை வளர்த்து, இன்று வைத்தியர் ஆக்கி இருக்கின்றார்.
அதனாலேயே அவனுக்கு சமூக அக்கறை மிகவும் அதிகம்…
தாய் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று தெரியும்…
அந்த விஷயம் தான், அவனது இந்த முடிவுக்கும் காரணம்…
மென் சிரிப்புடன் அவனை பார்த்த மோகினியோ, “அப்போ உள்ள வா, என்ன விஷயம்னு சொல்றேன்” என்று சொல்லி, அவன் உள்ளே அழைத்து சென்று அமர வைத்தவள், நீலாவை பற்றி எல்லாமே சொன்னாள்…
சட்டென அவன் விழிகள் மோகினியின் கழுத்தில் படிய, “அவ கதையை சொன்ன அடுத்த கணமே, செயினை அறுத்து எறிஞ்சுட்டேன்” என்றார்.
“வருத்தமா இல்லயா?” என்று கேட்டான்.
“அப்படி ஒருத்தன காதலிச்சதுக்கு வருத்தப்பட்டேன், அவன் தான் செத்துட்டானே, அப்புறம் என்ன?” என்று கேட்டாள்.
“அப்போ மந்தாகினியோட அப்பா கூட சேர்ந்து வாழலாமே” என்று இழுக்க, “எனக்கு தெரியும்… எல்லாரும் இதுல தான் வந்து நிற்ப்பீங்கன்னு, யார கொலை பண்ணுனாலும் அவன் கொலைகாரன் தான்… வெற்றி மோசமானவன் என்கிறதுக்காக, ராவணன் நல்லவன்னு ஆயிட மாட்டான், முதல் நீ நீலா பத்தி என்ன நினைக்கிறன்னு சொல்லு” என்றாள்.
அவன் பெருமூச்சுடன், “அவ சரின்னு சொன்னா, கல்யாணம் அடுத்த முகூர்த்தத்திலேயே பண்ணிக்கிறேன்” என்று சொல்ல, மோகினியும், “சரி உன் அம்மா கிட்ட பேசிட்டு, அடுத்த முடிவு எடுப்போம்” என்று சொன்னாள்…
அன்று விசாலாட்சி வேலை விட்டு வந்ததும், மோகினியே அவரிடம் சென்று பேச, விசாலாட்சிக்கு எந்த மறுப்பும் இல்லை…
நீலாவின் மனநிலையை அவரால் உணர கூடியதாக இருக்க, “எனக்கு மனப்பூர்வமான சம்மதம் மேம்” என்று தான் சொன்னார்…
இந்த பக்கம் எல்லாமே சரியாகி விட்டாலும், இப்போது, ராஜதுரை வீட்டுக்கு சென்று பேச வேண்டும்…
நீலா நேரெடியாக கேட்டால் வேண்டாம் என்று தான் சொல்வாள் என்று மோகினிக்கு நன்றாகவே தெரியும்…
அதனால் ரிஷியையும் விசாலாட்சியையும் அழைத்துக் கொண்டே, குழந்தையுடன் ராஜதுரை வீட்டுக்கு முதன் முதலில் சென்றாள்.
அன்று வெள்ளிக்கிழமை மாலை நேரம் இருக்கும்…
திருமண விஷயம் என்பதால் புடவை அணிந்து தான் சென்று இருந்தாள்…
வாசலில் குழந்தையுடன் நின்ற மோகினியை பார்த்ததுமே, “அங்கேயே நில்லும்மா” என்றார் மீனாட்சி…
“என்னடா வந்ததும் துரத்துறாங்களா?” என்று ரிஷியிடம் மோகினி ரகசியமாக கேட்க, “அப்படி எல்லாம் இருக்காது, குழந்தையை பார்க்க வர்றவங்க தானே” என்று சொன்ன கணமே, ஆரத்தி தட்டுடன் வந்த மீனாட்சியோ, “முதன் முறையா வீட்டுக்கு குழந்தையோட வர்ற. அதனால தான்” என்று சொல்லிக் கொண்டே, ஆரத்தி எடுத்த பின்னர் தான் உள்ளே அழைத்தார்…
மோகினியும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டாலும், கேட்க கொஞ்சம் சங்கடமாக இருந்தது…
நீலாவோ அங்கே வந்து சுவரில் சாய்ந்து நின்றவளுக்கு எதற்காக வந்திருக்கின்றார்கள் என்று புரியவே இல்லை…
சற்று நேரத்தில் ராஜதுரையும் அவர்கள் வந்த செய்தி கேட்டு, அறைக்குள் இருந்து வந்து ஹாலில் அமர்ந்தவர், “என்ன காத்து இந்த பக்கம் வீசுது?” என்று கேட்டார்.
மோகினியோ, “சுத்தி வளைச்சு பேச விரும்பல” என்று ஆரம்பிக்க, “ஆமா அப்படியே உனக்கு சுத்தி வளைச்சு பேச தெரிஞ்சுட்டாலும்” என்றார் அவர்…
“கொஞ்சம் சும்மா இருங்க” என்று மீனாட்சி தான் அவரை தடுத்து நிறுத்தி விட்டு, “நீ சொல்லும்மா, இவருக்கு எப்போவும் இப்படி தான் பேச தெரியும்” என்று சொல்ல, அவரோ, “ஆமா, நீ பெரிய பேச்சாளர் பாரு” என்று சொல்லி விட்டு மோகினியை பார்த்தார்.
அவளுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே, “இது ரிஷி” என்று அவனை காட்ட, “ஆஹ் தெரியும்… டாக்டர் பையன் தானே” என்று கேட்டார் ராஜதுரை…
மோகினியும், “ம்ம்” என்றவளோ மேலும், “நீலாவை கல்யாணம் பண்ணி வைக்க யோசிச்சேன்” என்று சொல்ல, ராஜதுரையின் முகம் இறுகி போக சட்டென நீலாவை பார்த்தார்.
அவள் அவசரமாக இல்லை என்று தலையாட்ட, “நீலா எல்லாமே என் கிட்ட சொல்லி இருக்கா, ரிஷிக்கும் தெரியும்” என்று சொன்னாள் மோகினி…
ராஜதுரையோ, “அவளுக்கு ஒரு நல்லது நடந்தா எங்களை விட சந்தோஷப்பட யாரும் இல்லை… ஆனா” என்று இழுக்க, “நான் அவ கூட கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான் ரிஷி…
ராஜதுரைக்கும் இந்த திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, “நீலா, கொஞ்சம் வெளிய போய் தம்பி பேசுறத கேட்டுட்டு வாம்மா” என்று சொல்ல, நீலாவுக்கு மறுக்க முடியவில்லை…
திருமணம் என்றாலே கடுப்பாக இருந்தது…
அதே எரிச்சலுடன் சென்று வெளியே நின்று இருக்க, ரிஷியும் எழுந்து அவளுடன் பேச வாசலுக்கு சென்றான்…
அத்தியாயம் 10
❤️ Loading reactions...