மேடையில் நின்று இருந்தனர் அதிரூபனும் அவந்திகாவும்… நண்பர்கள் ,உறவினர்கள் தொழில் முறை நண்பர்கள் என பலர் அந்த நிச்சயதார்த்த விழாவிற்கு வருகை தந்து இருந்தனர்….
அதியமான் அனைவரையும் முகம் கொள்ள புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்று கொண்டு இருந்தார்..
ஒற்றை மகனது நிச்சியதார்தத்தை வெகு விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்து இருந்தார் மிகுந்த ஆசையுடன்…
மகனை மாலையும் கழுத்துமாக காணும் போது மனம் நெகிழ்ந்து விட்டது அவருக்கு..
மேடையில் நின்றிருந்த அதிரூபன் மற்றும் அவந்திகாவின் இதழ்களில் கூட புன்னகை அரும்பி இருந்தது…
அச்சமயம் முக்கியமான விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கு கவனித்துக் கொண்டு இருந்த ரேவந்த்தின் பார்வை அனிச்சையாக மேடையில் நின்றிருந்த அதிரூபனை ஏறிட்டது…
அவனை அந்நிலையில் கண்டதும் கண்கள் கலங்கியது அவனுக்கு… அந்நேரம் அதிரூபனும் ரேவந்தை பார்த்திட ஏற்கனவே உள்ளுக்குள் உடைந்து போயிருந்தவனுக்கு இப்போது ரேவந்தின் கலங்கிய விழிகளை கண்டதும் இன்னும் நொருங்கிப் போனான்…
பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டிருந்தான் அதிரூபன்…
சிரித்தவாறு இருந்த அவந்திகாவின் பார்வை ஆண்கள் இருவரிடத்திலும் வந்து நின்றது…
அவர்களது பார்வையில் தெரிந்த ஏக்கம், அளவு கடந்த காதல், வேதனையை பார்த்ததும் அவந்திகாவிற்கு உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது …
அவள் இந்நிலைக்கு வர காரணம் அதியமான் மட்டுமே…அவர் ஒருவரால் மட்டும் தான் அவந்திகா இந்த மேடையில் கொஞ்சம் கூட விருப்பம் இன்றி அதிரூபன் அருகே திணிக்கப்பட்ட புன்னகையுடன் நின்று கொண்டு இருக்கிறாள்…
தன் நிலையை எண்ணி எண்ணி மிகவும் வேதனைக்கு உள்ளானாள் அவந்திகா ..
அன்று அவந்திகாவும் அதிரூபனும் சற்று நெருக்கமாய் நின்றிருப்பதை கண்டதும் அதியமான் மகன் இவளை தான் காதலிக்கிறான் என தவறாக எண்ணிக் கொண்டவர் இருவரையும் அணைத்து வாழ்த்தினை கூறிவிட்டிருந்தார் …
அத்தோடு அவர் நிற்கவில்லை…
” சீக்கிரமே நான் எங்கேஜ்மென்ட்க்கு ஏற்பாடு பண்றேன் ..ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. நீ ஒருத்தரை லவ் பண்றேன்னு சொன்னதும் என்னால நிம்மதியா ஆபீஸ்க்கு கூட போக முடியல அதி… அதான் கிளம்பி இங்க வந்துட்டேன்.. நல்ல வேலை உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தேன் மனசு நிறைஞ்சு போயிருக்கு.. நான் கிளம்புறேன் ..பாய் அதி… டேக் கேர் அவந்திகா ..இரண்டு பேரும் எப்போம் சந்தோஷமா இருக்கணும் ..” என மனதார வாழ்த்து கூறியவர் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார்…
அவர் சென்றதும் அவ்வளவு தான் அதிரூபனை பிடித்துக் கொண்டாள் அவந்திகா …
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..?? பாஸ் வந்து என்னை நீங்க லவ் பண்றதா சொல்றாரு ..??? என்ன இதுவும் உங்க பிளானா..??? அசிங்கமா இல்ல உங்களுக்கு..??” என பல்லை கடித்து கூறியவளை கடுப்புடன் பார்த்த அதிரூபன்,
” வாயை மூடுறியா..!” என அந்த அறையை அதிரும் வண்ணம் கத்தியை விட்டிருந்தான். …
“நானே அப்பா இப்படி சொல்லுவார்னு எதிர்பார்க்கல.. நீயா லூசு மாதிரி நினைச்சுட்டு இருக்காத ..” என்றவன் முன்பு வந்து நின்றவள்,
” அது எப்படி உங்க அப்பா தான் தெளிவா சொல்றாரே நீங்க யாரையோ லவ் பண்றதா சொல்லி இருந்தீங்கனு… அவன் பார்க்குறதுக்காக தான் வேணும்னே என்கிட்ட க்ளோசா இருக்கிற மாதிரி நடிச்சீங்களா..?? அருவருப்பா இருக்கு உங்களை பார்த்தாலே..” என மீண்டும் மீண்டும் அவனை அசிங்கபடுத்தியவளை கொலை வெறியுடன் பார்த்த அதிரூபன்,
” பைத்தியம் மாதிரி உளறாதா.. அப்பா எனக்கு மேரேஜ்க்கு அலைன்ஸ் பார்த்து இருக்காங்க.. நான் வேண்டாம்னு சொல்றதுக்காகத்தான் லவ் பண்றேன்னு சொல்லி இருந்தேன்.. ஆபீஸ்க்கு வாங்க பேசலாம்னு சொல்லி இருந்தேன்.. ஆனா அவர் இப்படி திடீர்னு வந்து நிப்பாருனு நினைச்சு கூட பார்க்கல… இங்க பாரு தேவையில்லாம நீயா கண்டதையும் இமாஜின் பண்ணிக்காத ..புரிஞ்சுதா..??.. நான் அவர்கிட்ட பேசுறேன்.. எனக்கும் உன்னை மாதிரி ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசை இல்லை ..” என்றதும் அவன் முன்பு இருக்கரம் கூப்பியவள்,
” ரொம்ப சந்தோஷம்… அந்த ஆசை மட்டும் இருக்குன்னு தெரிஞ்சது மொத்தமா கொலை பண்ணிடுவேன் உங்களை..” என அவனை நேருக்கு நேராக மிரட்டியவளை கடுப்புடன் பார்த்தவன் அங்கிருந்த இருக்கையை காலால் உதைத்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டிருந்தான். ..
அவன் அறைக்குள் வந்த நேரம் சிறிது நேரத்திலேயே ரேவந்தும் உள்ளே வந்திருந்தான் ..
தன் டையை தளர்த்தியவாறு மூச்சு வாங்க மேசையில் கரங்களை ஊன்றியபடி நின்றிருந்த அதிரூபனுக்கு தந்தை இழுத்து விட்ட விடயத்தை எண்ணி தலைவலியாக இருந்தது ..
அவனை அந்நிலையில் கண்ட ரேவந்தும் ,
“என்ன காலையிலேயே பெரிய பாஸ் வந்து இருக்காரு… அதுவும் ரொம்ப சந்தோஷமா போறாரு.. என்னடா மேட்டர்..?” என கேட்டவாறே ரூபன் அருகே வந்தான்..
அவனை உச்சபட்ச கடுப்புடன் பார்த்த அதிரூபன் நடந்ததை சுருக்கமாக கூறிவிட்டு தலையில் அடித்து கொண்டவன்,
” கடுப்பா இருக்குடா ..போயும் போயும் அவளை நான் லவ் பண்றேன்னு அப்பாவா நினைச்சுக்கிட்டாரு.. எங்கேஜ்மென்ட் வேற அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்றத வேற சொல்றாரு ..இப்ப என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல ரே…” என உள்ளே போன குரலில் கூறியதும் அவன் பேசிய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட ரேவந்த் அதிரூபனை விழிகள் சுருக்கி பார்த்து ,
“அப்போ நீ யாரை லவ் பண்றதா சொல்லணும்னு நினைச்ச..??” என சந்தேகமாக கேட்டு வைத்தான்…
தன் காதலியை அழுத்தமாய் பார்த்த அதிரூபன் சிறு தயக்கத்திற்கு பின்னர் ,
“நம்மளை பத்தி விஷயத்தை சொல்லிடலாம்னு நினைச்சேன்டா..!” என்றதும் இப்போது அதிர்வது ரேவத்தின் முறையாயிற்று …
“பைத்தியமாடா நீ..?? நம்மளை பத்தி அவர்கிட்ட சொல்லலாம்னு முடிவு பண்ணி இருக்க..?? என்கிட்ட இது பத்தி கேட்டியா நீ ..??” என எகிறி விட்டிருந்தான் ரேவந்த் …
அதிரூபன் தலையில் கை வைத்துக் கொண்டு ,
“வேற என்னடா பண்ண சொல்ற ..?? அப்பா ஒரு பொண்ணு போட்டோவை காட்டி புடிச்சிருக்கானு சொல்லு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு ஒத்த காலில் நிற்கிறார்.. அவரை எப்படி சமாதானப்படுத்துறதுனு எனக்கு தெரியலையே.. நம்ம விஷயம் தெரிஞ்சா உடைஞ்சு தான் போவாரு.. ஆனா வேற வழி தெரியலையேடா ..” என ஆதங்கமாக கூறியதும் ரேவந்த் அவனது இரு தோள்கள் பிடித்து,
” உங்க அப்பாவை நீ சாதாரணமா எடை போட்டுட்ட ரூப்.” என்றதும் தன் காதலியை அதிர்ந்து போய் பார்த்த அதிரூபன்,
“ என்னடா சொல்ற..??”
” நீயே யோசிச்சு பாரு ..நீங்க எப்படிப்பட்ட குடும்பம் ..பரம்பரை பரம்பரையா பிசினஸ் செய்றவங்க.. உங்க தாத்தா இந்த கம்பெனி ஆரம்பிச்சு இருந்தாலும் அவரும் அவரோட அப்பா அவரோட தாத்தானு எல்லாருமே பணக்காரங்க தான்..
அப்படி இருக்கும் போது நீ ஒரு கேனு உங்க அப்பாக்கு தெரிஞ்சா என்னை உயிரோடு விடுவாருன்னு நினைக்கிறியா..?” என்றதும் பதறிவிட்டான் அதிரூபன் ..
“ஏன்டா இப்படி பேசுறே??” என்றதும் இடவலமாக தலையசைத்து,
“உண்மையை தான் பேசுறேன்.. நீயே யோசிச்சு பாரு உங்க அப்பா கிட்ட சொன்னதும் உன்கிட்ட கோபப்படுவார் கத்துவார்.. நீ எனக்கு சப்போர்ட்டிவா நின்னா உன்னை கொல்றதுங்கு கூட உங்க அப்பா யோசிக்க மாட்டாரு ரூப்…
அப்புறமா அவர் என்னையும் கொன்னுடுவாரு ..இதெல்லாம் தேவையா ..?? பேசாம அவர் சொல்ற பொண்ணுக்கு ஓகே சொல்லிட்டு அந்த பொண்ணு கிட்டயே நீ வேற யாரையோ லவ் பண்றனு என்னை வேண்டான்னு சொல்லிடுன்னு சொல்லி இருக்கலாம்.. இப்ப பாரு அந்த அவந்திகாவை வேற தேவையில்லாம இழுத்து விட்டாச்சு..!” என்றதும் தலையை பிடித்தபடி இருக்கையில் அமர்ந்து விட்டான் அதிரூபன்…
” அதுதான்டா எனக்கும் கடுப்பா இருக்கு ..அவ வேற என்கிட்ட எகறிட்டு வரா.. என்ன பண்றதுன்னு தெரியல..” என இருவரும் யோசிக்கும் போது ரேவந்தின் மூளையில் பளிச்சென ஒரு யோசனை வந்தது…
தன் காதலனை தலை சாய்த்து பார்த்த ரேவந்த் ,
“நீ ஏன் அவந்திகாவை கல்யாணம் பண்ணிக்க கூடாது..” என்றவனது வார்த்தையில் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்த அதிரூபன்,
” டேய் என்னடா பேசுற..???” என பதற்றத்தில் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டிருந்தான்…
ரேவந்தும் அவன் முன்பு வந்து நின்று,
” நீயே யோசிச்சு பாரு.. நம்ம விஷயம் அவளுக்கு தெரியும்.. நம்ம அவளை பிளாக் மெயில் பண்ணி தான் அடக்கி வாசிக்க வைச்சிருக்கோம்…
அப்படி இருக்கும் போது நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊருக்கு பொம்மையா உன் பொண்டாட்டியா இருப்பா… ஆனா நீயும் நானும் எப்பவும் போல சந்தோஷமா இருக்கலாம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது..” என்றதும் அதிரூபனால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
” இது… தப்பு ரேவந்த்…!” என்று தான் கூறினான்…