இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்கும், அன்று அர்ஜுனின் குடும்பம் சக்திவேலின் வீட்டுக்கு வந்திருந்தது.
காரில் இருந்து இறங்கும் போதே, “இப்படி அடிக்கடி வந்தா உங்க அப்பா என்னடி நினைப்பார்? பேசாம இந்த ஊர்லயே வந்து இருந்திடலாம் போல இருக்கு” என்றான் சலிப்பாக…
“நல்ல ஐடியா, அத்தை மாமான்னு எல்லாரையும் அழைச்சிட்டு இங்கேயே வந்திடலாம்” என்று விழிகளை உருட்டி ராகவி சொல்ல, “சொல்லுவடி, சொல்லுவ, அப்புறம் நான் டெய்லி எல்லா வேலையும் பார்க்க அங்கே போகணும்” என்று திட்டிக் கொண்டே, மகள் அகல்யாவை தூக்கியவன், “நீயாவது என் பேச்சை கேளுடி” என்றான்…
அவளோ, “அப்பா” என்று சொல்லிக் கொண்டே, அவனை இறுக அணைத்து முத்தமிட்டுக் கொள்ள, “அப்படியே உன் அம்மா மாதிரி” என்றான் கடைக்கண்ணால் ராகவியைப் பார்த்துக் கொண்டே…
அவளுக்கும் கேட்டது…
கூச்சமும் வந்து விட்டது…
சிரிப்பை அடக்கிக் கொண்டே, முன்னே சென்று விட, ஆரண்யனை சுற்றி அந்த வீட்டின் குட்டி ஆண்கள் குழு “அண்ணா”, “மச்சான்” என்று அழைத்துக் கொண்டே, குவிந்து கொண்டது…
அன்று அவர்கள் வீட்டில் தான் விருந்து…
சக்திவேலோ, “சம்பந்தி அழைச்சார், தனேஷ்வரனுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னார், அங்கே யாருமே இல்லையாம், நம்ம ஊர்ல பண்ண ஆசைப்படுறார்” என்று சொல்ல, கஜனோ, “நம்ம எல்லாம் இருக்கோம் தானே, எல்லாமே பார்த்து பண்ணிடலாம்” என்று சொல்லி விட்டு நவநீதனைப் பார்த்தவன், “என்னடா மச்சானோட கல்யாணத்துக்கு எல்லாமே ரெடி பண்ணிடலாம் தானே” என்று கேட்டான்.
அவனும், “பேஷா பண்ணிடலாம்” என்று சொல்லிக் கொண்டே, தனிஷாவைப் பார்க்க, அவளும் மென்மையாக சிரித்துக் கொண்டாள்.
அன்று மாலை நேரம் போல, “அத்தை” என்று சொல்லிக் கொண்டே தனிஷா முன்னால் வந்து நின்றான் ஆரண்யன்.
“என்னடா ??” என்று அவள் கேட்க, “பாட்டு படிக்க போறேன்” என்றான். அவனை ஒரு மார்க்கமாக பார்த்த தனிஷாவோ, “பாடும், கேட்டு பொற்காசுகளை அள்ளி வழங்குறேன்” என்றாள் கிண்டலாக.
“பட்டர் ஃப்ளை பட்டர் ஃப்ளை வெயார் ஆர் யூ கோயிங்” என்று பாடினான். தனிஷாவோ, “சூப்பரா பாடுற” என்று கையை தட்ட, “மாமா தான் சொல்லி கொடுத்தார்… ஏதோ கோட் வெர்ட்ன்னு நினைக்கிறன்… எனக்கு புரியல… உங்களுக்கு புரிஞ்சுதா??” என்று கேட்க , அவனை வீடு வாசலில் சாய்ந்து நின்று பார்த்த நவநீதனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
‘இவன் என்ன இவ்ளோ ஷார்ப் ஆஹ் இருக்கான்’ என்று நினைத்து முடிக்கவில்லை, புடவையை இழுத்து சொருகிக் கொண்டு அவன் முன்னே பத்திரகாளியாக நின்று இருந்தாள் தனிஷா…
“என்னடி??” என்றான்.
“சின்ன பையன் கிட்ட சொல்லி அனுப்புற விஷயமா இது??” என்று பற்களை கடித்தபடி சீறினாள்.
“அவனுக்கு புரியாதுடி” என்று நவநீதன் சொல்ல, “வளர்ந்து புரியும்ல அப்போ உங்களையும் என்னையும் பத்தி என்ன நினைப்பான்??” என்று கேட்க, ‘ஆத்தி இந்த கோணத்துல நாம யோசிக்காம விட்டோமே’ என்று நினைத்து தலையை உலுக்கிக் கொண்டான் அவன்.
“நேத்து யாழினி வந்து தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லன்னு படிக்கிறா… இன்னைக்கு இவன் வந்து பட்டர் ஃப்ளை பட்டர் ஃப்ளை வெயார் ஆர் யூ கோயிங் ன்னு கேக்கிறான்…. உங்களுக்கென்ன லூசா??” என்று இன்னும் ஆத்திரம் தீராமல் திட்ட, அவனோ, “அத விடுடி, உனக்கு புரிஞ்சிடுச்சுல்ல” என்று கண்களை சிமிட்டி கேட்க அவனை முறைத்துப் பார்த்தாள் பெண்ணவள்.
முறைத்து விட்டு நகரப் போனாள்.
எட்டி அவள் கையை பற்றியவன், “ஹேய் லைலா” என்றான்…
“யாரும் பார்க்க போறாங்க நவா” என்று அவள் உறுவிக் கொள்ள, சட்டென கையை விட்டவன், “செம்ம மூட் ல இருக்கேன்” என்றான்.
“அதுக்குன்னு இப்போவா?” என்று கேட்டபடி சுற்றிப் பார்க்க, “முடியலடி, என்ன பண்ண சொல்ற?” என்று கேட்டான்.
“எல்லாரும் வந்திருக்கும் போது நம்ம ரெண்டு பேரும் ரூமுக்குள்ள போனா நல்லவா இருக்கும்?” என்று கேட்டாள்.
அவள் இதழ்களை பார்த்து இருந்தவன், குரலை செருமிக் கொண்டே விழிகளை நோக்க, “அப்போ நைட் லேட் பண்ணாம வந்திடணும். டீலா?” என்று கேட்டாள்.
“டீல் டீல்” என்று சொல்லி அவனை சமாளிப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது…
‘சரியான அலைஞ்சான்’ என்று வாய்க்குள் புலம்பியவள் மனமோ, ‘நம்மளும் அப்படி தானே’ என்று தனக்கு தானே காறித் துப்பியும் கொண்டது.
அன்று கிளம்பும் போது ராகவி, துளசியை அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.
அர்ஜுன் நாடியில் கையை குற்றியபடி கார் பொன்னேட்டில் ஏறி அமர்ந்து இருக்க, அவன் அருகே தான் ஆரண்யனும் அமர்ந்து இருந்தான்.
அவனும் நாடியில் கையை குற்றியபடி பார்த்து இருக்க, “என்னடா அப்பாவும் பையனும் பிளாக் அண்ட் பிளாக் ல ஒரே போஸ் ல இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே, கஜன் அங்கே வர, “உங்க தங்கச்சி, அடுத்த வாரம் வர தான் போறா, ஏதோ நான் அழைச்சு போய் கொடுமை படுத்துற போலவே ஒவ்வொரு முறையும் அழுதுட்டு இருக்கா” என்று சொல்ல, “நானும் அது தான் பா நினைக்கிறன்… எப்படி தான் கண்ணுல இருந்து இவ்ளோ தண்ணி வருதோ?” என்று ஆரண்யன் கேட்க, கஜனோ இருவரையும் பார்த்து விட்டு, “அது ஒரு எமோஷன், நீயும் வேணும்னா உன் அக்காவை கட்டிப்பிடிச்சு அழுதுட்டு வா” என்றான் அர்ஜுனிடம்…
அர்ஜுனோ, “இப்போ பாருங்க என் பெர்ஃபோர்மன்ஸை” என்று சொல்லிக் கொண்டே, பாய்ந்து இறங்கிய கணம், “அப்பா” என்றான் ஆரண்யன்…
“என்னடா?” என்று அர்ஜுன் கேட்க, “அங்கே பாருங்க” என்று கையை நீட்டினான்…
அங்கே அகல்யா, யாழினி மற்றும் கிருஷ்ணியை அணைத்து அழுது கொண்டு இருந்தாள்.
“அடிப்பாவி, என் குட்டிக்கும் அழ பழக்கி இருக்கா இவ” என்று திட்ட, கஜனுக்கே சிரிப்பு வந்து விட்டது…
வாயில் கையை வைத்து குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட, அர்ஜுனோ, “டேய் நம்ம மட்டும் ஏன் சும்மா இருக்கனும்? நீ யாரையும் அணைச்சு அழுதுட்டு வா, நான் யாரையும் அணைச்சு அழுதுட்டு வர்றேன், பல்லவி சுகானா, அங்கே இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே செல்ல, ஆரண்யனோ அங்கே காரில் சாய்ந்து நின்ற கஜனைப் பார்த்து, “நம்ம ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சு அழலாமா?” என்று கேட்டான்…
“என்னடா பயம் விட்டு போச்சா?” என்று கஜன் கேட்க, “அது ஃபீலிங் மாமா, ஃபீலிங்” என்றான்.
“சரி வாடா” என்று கஜன் அவனை அணைத்துக் கொள்ள, அவனோ எச்சிலை தொட்டு கண்ணில் வைத்தவன், அழுவது போல பாசாங்கு செய்ய, அவனுக்கோ சிரிப்பு வந்து விட்டது…
“சரியான ஆள் டா நீ” என்று சொல்லி, அவனை சிரித்தபடி அணைத்துக் கொண்டான்…
இதே சமயம் துளசி அருகே நின்று இருந்த பல்லவி அருகே வந்த அர்ஜுனோ, “பல்லவி” என்றான்…
“என்னடா?” என்று அவள் கேட்க, “அடுத்த வாரம் வரைக்கும் உன்னை பார்க்காம எப்படி இருக்க போறேனோ தெரியல” என்று சொல்லிக் கொண்டே, அவளை அணைத்து அழுவது போல நடிக்க, பல்லவிக்கு புரிந்து விட்டது…
சிரிப்பும் வந்தது… அடக்கிக் கொண்டாள்.
சக்திவேலும் ஓரமாக இருந்து துளசியையும் ராகவியையும் சலிப்பாக தான் பார்த்துக் கொண்டு இருந்தார்…
ஒவ்வொரு முறையும் அழுது கொண்டு இருந்தால் அவரும் என்ன தான் செய்வார்…
சக்திவேலுக்கு அர்ஜுனை பார்த்ததுமே சிரிப்பு வந்து விட, மெலிதாக சிரித்தும் கொண்டார்…
ராகவி அழுவதை நிறுத்தி விட்டு, அர்ஜுனை அதிர்ந்து பார்க்க, அவனோ, “சுகானா உன்னை விட்டுட்டு அடுத்த வாரம் வரைக்கும் எப்படி இருக்க போறேனோ?’ என்று கேட்டு, அவளையும் அணைத்து அழுவது போல பாசாங்கு செய்ய, எல்லாரும் வாயை மூடி சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்…
இடையில் ஆரண்யன் வேறு, “மாமா, ஒரு வாரம் மாமா, ஒரு வாரம்” என்று சொல்லி அவனும் தனது பங்குக்கு நடித்துக் கொள்ள, வாயடைத்து போனது என்னவோ ராகவி தான்…
ஆரண்யனின் புலம்பலைக் கேட்டதும், அடக்க முடியாமல் எல்லோரும் வாய் விட்டே சிரித்து வேறு விட்டார்கள்…
ராகவியோ அர்ஜுனையும் ஆரண்யனையும் மாறி மாறி முறைத்து விட்டு, “அம்மா, இந்த அப்பாவும் புள்ளையும் என்னை நிம்மதியா அழ கூட விடுறாங்க இல்லை” என்று திட்டியவள், அங்கே அழுது கொண்டு இருந்த அகல்யாவை தூக்கி இடையில் வைத்தபடி, “நீயும் ஏன் டி அழுற?” என்று கேட்க, “அக்கா” என்று யாழினியை அழுதபடி காட்டினாள்.
உடனே அர்ஜுன், “உனக்கு மட்டுமா அழ தெரியும்? எங்க எல்லாருக்கும் அழ தெரியும்…” என்று சொல்ல, “ச்ச” என்று சொல்லிக் கொண்டே, காரை நோக்கி நடக்க, “ஏன் டா இப்படி?” என்று பல்லவி சிரித்துக் கொண்டே, அர்ஜுனின் தோளில் அடி போட்டாள்.
“விட்டா அழுதுட்டே இருப்பா, ஒவ்வொரு முறையும் முடியல பல்லவி” என்று சொல்லிக் கொண்டே துளைசியை பார்க்க, அவரோ கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டே சிரித்துக் கொண்டார்.
அவனோ, “அத்தை அழுறீங்களா என்ன?” என்று கேட்க, “இல்ல மாப்பிளை. கண்ணுல தூசு” என்று சொல்ல, சக்திவேல் சத்தமாகவே சிரித்துக் கொள்ள, “கொஞ்சம் சும்மா இருங்க சண்டியர் மச்சான்” என்று அவருக்கு வாய்க்குள் வெட்கத்துடன் திட்டிக் கொண்டார் துளசி.
அதனை தொடர்ந்து, நவநீதன் அருகே வந்த அர்ஜுனோ, “டேய் தானாவோட கல்யாணம் செமயா பண்ணுறோம், ஓகே?’ என்று கையை நீட்ட, அவனும் கையை அடித்துக் கொண்டே, “கலக்கிடலாம் மச்சான், ஆனா என்ன அவன் தான் அப்பாவா ப்ரொமோட் ஆயிட்டு, புருஷனா ப்ரொமோட் ஆகுறான்” என்று சொல்ல, நவநீதன் அருகே நின்ற தனிஷா அவன் இடையில் கிள்ளி விட்டாள்.
“கிள்ளாதடி” என்று திட்டிய நவநீதனை அதிர்ந்து பார்த்த அர்ஜுனோ, “நிஜமாவாடா?” என்று கேட்க, “ஆமா, ரகசியம் காக்குறாங்களாம்” என்று சொன்னான் சிரித்துக் கொண்டே…
அர்ஜுனோ, தனிஷாவைப் பார்த்து, “உன் தம்பியை சின்ன பையன்னு நினைச்சேன், சரியான பார்ட்டி தான்… வரட்டும், வச்சு செஞ்சுடலாம்” என்று சொல்ல, அவளோ சிரித்துக் கொண்டே, “அப்பா கிட்ட அடி வாங்காம விட்டதே பெரிய விஷயம்” என்றாள்.
அர்ஜுனோ நவநீதனிடம், “பாரேன், பார்க்க பச்சை புள்ள போல இருந்துட்டு என்ன பண்ணி இருக்கான்னு” என்று சொல்ல நவநீதனும், “எனக்கும் கேட்டதும் மயக்கமே வந்திடுச்சு, நானே இன்னும் ப்ரோமோஷன் வாங்கல, அவன் வாங்கிட்டான்” என்று சொல்ல, அதற்கும் தனிஷா கிள்ளி விட்டாள்.
“உனக்கு உன் பிரச்சனை டா” என்று சொன்ன அர்ஜுனோ தனிஷாவிடம் “என்னம்மா, எங்க வீட்டு பையனை கிள்ளி டாச்சர் பண்ணுற?” என்று கேட்க, “ஐயோ அண்ணா சும்மா தான்” என்று சொன்னாள்.
“இப்படியே பண்ணிட்டு இருந்த பாரு, என் பொண்டாட்டியை விட்டு உனக்கு கிள்ள விட்ருவேன், அவளும் நல்லா கிள்ளுவா தெரியுமா?” என்று கிண்டலாக மிரட்ட, “அர்ஜுன்” என்று ராகவி அழைத்தாள்.
நவநீதனோ, “இந்த பொம்பிளைங்களே கிள்ளி கிள்ளி தான் புருஷனை கொடுமை படுத்துவாங்க போல” என்று சொல்ல, “ஆமாடா, ஆம்பிளைங்களுக்கு பாதுகாப்பே இல்ல” என்று சொன்ன நேரம், மீண்டும், “அர்ஜுன்” என்று அழைத்தாள் ராகவி.
“இப்போ பாரேன் உன் அக்கா எனக்கு கிள்ளுவா” என்று சொல்லிக் கொண்டே அவள் அருகே செல்ல, “என்னை கிண்டல் பண்ணிட்டு, நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று அர்ஜுனின் தோளில் கிள்ள, அர்ஜுனோ, நவநீதனைப் பார்த்து, தோளை வருடிக் கொண்டே, “சொன்னேன் பார்த்தியா?” என்று கேட்க, அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டான்.
“என்ன சொன்னீங்க??” என்று இப்போது ராகவி கேட்க, “உன் வீர சாகசங்களை தான்” என்று கிண்டலாக சொன்ன அர்ஜுன் காரில் ஏற அவளும் இதழ்களை சுளித்துக் கொண்டே காரில் ஏறிக் கொண்டாள்.