அத்தியாயம் 2

அத்தியாயம் 2

 

வளவன் மற்றும் சுரதையின் ஒற்றை மகள் தான் நறுமுகை…வளவன் கம்பெனி ஒன்றில் மேனேஜராக பணிபுரிகிறார்….சுரதை பொறுப்பான குடும்பத்தலைவி… சுறுசுறுப்பான பெண் என்றால் அது நறுமுகை தான்…சுரதைக்கு உதவி செய்யும் நேரத்தில் மட்டும் அவள் அப்படி ஒரு சோம்பேறி… 

 

ஒற்றை மகள் என செல்லம் கொஞ்சிட மாட்டார்கள்…கண்டிப்பும் இருக்கும் அதேசமயம் பெண்பிள்ளை என்பதால் கட்டுப்பாடும் சற்று அதிகம் தான்…பெண்பிள்ளை பெயருக்கென்று படித்தால் போதும் என்பது தான் வளவனின் கருத்து…அதனால் பெரியதாய் அவளது படிப்பு விஷயத்தில் அக்கறை காட்டிட மாட்டார்…அதே சமயம் அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…அதை மட்டும் தான் பார்ப்பார் வளவன்…

 

சுரதையும் பெரியதாய் படித்தது இல்லை அத்தோடு மகளின் படிப்பு விஷயத்திலும் தலையிட மாட்டார்…அதற்காக கண்டுக் கொள்ளாது இருந்திடவும் மாட்டார்…பெண்ணிற்கு படிப்பு முக்கியம் என்று மட்டும் அடிக்கடி கூறிடுவார்…

 

உடன்பிறந்தவர்கள் என யாரும் இல்லை நறுமுகைக்கு…வளவனின் அண்ணன் வீடு பக்கத்து தெருவில் தான் உள்ளது…

 

நறுமுகை பிறந்து ஐந்து வருடம் கழித்து தான் வளவனின் அண்ணன் பாரிக்கு குழந்தை பிறந்தது…இரண்டு பெண் பிள்ளைகள்…ரோகிணி ராகினி….அவர்களுடன் தான் எப்போதும் சுற்றுவாள் நறுமுகை…

 

 

கல்லூரியின் ‘ஹாப்பியான’ பெண் என்றால் அது நறுமுகை தான்… . எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பாள்… கேண்டீன், கிரவுண்ட் என எல்லா இடத்திலும் அவளுக்கு நண்பர்கள் இருப்பார்கள்…. பேசும் கலையில் கில்லாடி (Excellent Communication Skills)…

எவரிடமும் தயக்கமின்றிப் பழகுவாள்… இவளைப் பார்த்தால், “இவளுக்குத் தெரியாத விஷயமே இருக்காது” என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்…

அவள் ஒரு “ஃபோட்டோகிராஃபிக் மெமரி” (Photographic Memory) கொண்டவள். ஒரு பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே படம் பிடித்தது போல மனப்பாடம் செய்துவிடுவாள்…

 

செமஸ்டர் தேர்வுகளில்  குறைந்தது எண்பது சதவீதம் மேல் மதிப்பெண் வாங்கிவிடுவாள்…

ஆசிரியர்களுக்கும் அவளைப் பிடிக்கும்…, ஏனனில் அவள் பேப்பர் எப்போதும் ‘நீட்’ ஆக இருக்கும்…

ஆனால், ஒரு சின்ன ஃபார்முலாவை மாற்றிப் போட்டாலோ அல்லது பாடப்புத்தகத்தில் இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டாலோ அவள் அப்படியே ஸ்தம்பித்து விடுவாள்.…

 

மனப்பாடம் செய்து‌ மட்டுமே எழுதுவதால் அவளுக்கு இது ஒரு பெரும் குறை…அதை தவிர்த்து வேறெதும் பெரியதாய் குறை என கூறிட முடியாது அவளிடத்தில்…

 

 

 

ப்ராஜெக்ட் எனும் சவால் (The Project Crisis)

வெறும் மனப்பாடம் செய்யும் படிப்பு அல்ல, அது ஆராய்ச்சியைச் சார்ந்தது… இப்போதுதான் அவளது நிஜமான சிக்கலே தொடங்குகிறது எனலாம்…

 

(Theory) மனப்பாடம் செய்து ஒப்புவிப்பாள், ஆனால் அதை எங்கே, எப்படி பயன்படுத்துவது (Application) என்று கேட்டால் அவளுக்குத் தெரியாது.…

 

ப்ராஜெக்ட் என்பது சுயமாகச் செய்ய வேண்டியது… புத்தகத்தில் இல்லாத விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும் போது, இதுவரை அவளுக்குக் கைகொடுத்த “மனப்பாட சக்தி” இப்போதும் உதவுமா??….பார்ப்போம்…

தன்னை எப்போதும் ஒரு “புத்திசாலி”யாகக் காட்டிக் கொள்ளவே விரும்புவாள் நறுமுகை… அதனால் தனக்கு அடிப்படை விஷயங்கள் தெரியாது என்பதை மறைக்க மிகவும் போராடிடுவாள். இது அவளுக்கு ஒரு விதமான மன அழுத்தத்தைத் தரும்…

அவளது நண்பர்கள் அவளிடம் வந்து சந்தேகம் கேட்பார்கள் அவள் அதிக மார்க் வாங்குவதால்… ஆனால், அவர்களுக்கே புரியும் வகையில் அவளால் எதையும் விளக்க முடியாது.அது அவளது பலவீனமும் கூட…

 

இரண்டு நாட்கள் விடுமுறையை தனது பெரியப்பா மகள்களுடன் சந்தோஷமாக கழித்தாள் நறுமுகை…இரண்டாவது நாள் இரவு கவிதாவிற்கு நாளை எத்தனை மணிக்கு வர வேண்டும் என அலைப்பேசியில் அழைத்து கேட்டவளிடம்,

 

“நாகராஜன் சாருக்கு கால் பண்ணி கேட்டேன்டீ..அவர் ஒன்பது மணிக்கு காலேஜ்ல இருக்க சொன்னாரு…நீயும் வந்துடு…”

 

“சரி கவிதா..என்ன பண்ற?”

 

“சும்மா படிக்கிறடீ… ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண போறோம் அந்த அண்ணா ஏதாவது கேள்வி கேட்டா பதில் சொல்லனும்ல..”என்றதும் தான் தாமதம் பக்கென்று ஆனது நறுமுகைக்கு,

 

” என்னடி சொல்ற..??? கேள்வி எல்லாம் கேட்பாங்களா..?” என கேட்டதும்,

 

” பின்ன கேட்காம இருப்பாங்களா..?? நம்மளுக்கு கைட் பண்ண போறாங்க நம்மளுக்கு என்ன தெரியும் அப்படின்னு அவங்களும் தெரிஞ்சுப்பாங்க..!  சும்மா ஏதாவது ஒன்னை காட்டி இது என்ன..??  இது எதுக்கு யூஸ் பண்ணுவாங்கன்னு கேட்டா அந்த டைம்க்கு நம்ம திருத்திருன்னு முழிச்சுக்கிட்டா இருக்க முடியும்..?? சும்மாவாது படிச்சிருக்க வேண்டாமா? ” என கவிதா பதிலளிக்கவும் தூக்கி வாரி போட்டது நறுமுகைக்கு…

 

அவள்தான் இரண்டு நாட்களாய் நன்றாக கோட்டம் அடித்து இருந்தாளே.. இப்போது படிக்க வேண்டும் என்றால் என்ன செய்துவிடுவாள்..

அதுவும் இதோ இன்னும் சிறிது நேரத்தில் உறங்குவதற்கான நேரம் வந்து விடும் ..அதற்குப் பிறகு படிக்க வேண்டும் என கூறினால் நிச்சயம் தந்தை அவளை திட்டி விடுவார் ..

 

“சரி கவிதா நான் வைக்கிறேன்..”  என அழைப்பை துண்டித்தவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது ..

 

காலையில் கல்லூரிக்கு செல்லும் வழக்கமான பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டவள் அத்தனை பொறுப்பாக ஒவ்வொன்றையும் பார்த்தவாறு மனதிற்குள் அசை போட்டுக்கொண்டு வந்தாள்..

 

நறுமுகையோ மனதிற்குள்,

‘ அந்த விக்ரமே யாருன்னு தெரியலை அத்தனை பேர் முன்பு ஏதேனும் கேள்வி கேட்டு தனக்கு தெரியலைனா என்ன செய்வது மிகவும் அவமானமாகி விடாதா..?’  என எண்ணி கொண்டிருக்க அவளது இன்னொரு மனமோ,

 

‘ அதெல்லாம் பார்த்துக்கலாம்.. நம்மளுக்கு சொல்லி தரத்துக்கு தானே அவங்க இருக்காங்க..’  என  முரண்டு பிடித்ததும் 

‘ப்ச் பாத்துக்கலாம்’ என்கிற மனநிலைக்கு இறுதியில் வந்தவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க துவங்கினாள் .…

சரியான நேரத்திற்கு அடுத்தடுத்து வந்து இருந்தனர் கவிதாவும் நறுமுகையும் கல்லூரிக்கு.. நேரே நான்காவது தளத்திற்கு சென்றிட அவ்வளவாய் கல்லூரியில் ஆட்களே இல்லை.. இருந்தும் ph.d செய்யும் மாணவர்கள் மட்டும் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தனர் …

 

நேரே லேபிர்க்கு தான் வந்தனர் பெண்கள் இருவரும்.. அங்கு இருந்த சாமுவேலை கண்டதும் இருவரும்,

 

” குட் மார்னிங் அண்ணா..”என்கிற குரலில் தலை உயர்த்தி பார்த்த  சாமுவேல் நல்ல கருநிற கண்ணனாய் வெண்ணிற சட்டையும் அதற்கு எடுப்பாய் க்ரே கலர் பேண்ட்டும் அணிந்து இருந்தவன் ,

 

” குட் மார்னிங்மா.. என்ன கரெக்ட் டைம்க்கு வந்துட்டீங்க போல..?”  என்றதும் இருவரும் சின்னதாய் புன்னகைத்தனர்..

“சரி பேக் அங்க ஓரமா வச்சுட்டு.. ஒரு நோட் பேனா மட்டும் எடுத்துட்டு வாங்க..”  என்றதும் இருவரும் ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வந்த நேரம் சரியாக அவ்வறைக்குள் நுழைந்து இருந்தான் அவன் விக்ரம்..

 

” நறுமுகை..!”  என்கிற அழுத்தமான  அழைப்பில் சட்டென்று ஒரு அதிர்வு வந்தது நறுமுகைக்கு…

 

சடாரென்ற தலை திருப்பி பார்த்தவளது விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன ..அன்று பார்த்த அதே நெடுநெடுவென வளர்ந்தவன் தான் அது …

 

அவளை அழுத்தமாய் பார்த்தவாறு அருகே வந்த விக்ரம்,

 

” நீங்க தானே நறுமுகை…?” எனக் கேட்டதும் ஆமாம் என்று தலை அசைத்தவளின் உள்ளங்கையும் உள்ளங்காலும் சில்லிட்டுப் போனது பயத்தில்..

எச்சிலை விழுங்கி கொண்டு அவனைப் பார்த்திட ..அவனும் சாமுவேலையை தலை திருப்பி பார்த்து,

 

” நான் பார்த்துக்கிறேன் சாமுவேல்..” என்றதும் சாமவேலும் தோள்களை குலுக்கி கொண்டு சரி என்று கூறியவன் கவிதாவிடம் பேசத் துவங்கினான்..

நறுமுகையோ விக்ரமின் பின்னால் சென்றிட ..அங்கு ஓரிடத்தில் அவளை நிற்க வைத்துவிட்டு கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவளை பார்த்த விக்ரம்  தாங்கள் செய்யப் போகும் ப்ராஜெக்ட் பற்றிய எல்லாம் அவன் எடுத்ததும் பேசிடவில்லை,

 

” டைம் கீப் அப் பண்றது ரொம்பவே முக்கியம் …ஏன்னா நம்ம ப்ராஜெக்ட்ல பண்ற ஒவ்வொரு டெஸ்ட்டும் அந்தந்த டைம் குள்ள முடிச்சாகணும்.. அப்பதான் நம்மளுக்கு ரிசல்ட் நல்லா வரும்.. இதெல்லாம் பேசிக்ஸ் தான்.. ஏற்கனவே பிஎஸ்சி எம்எஸ்சி பிராக்டிகல் பண்ணும் போது இதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருப்ப.. அதுக்கப்புறம் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் எல்லாம் யூஸ் பண்றது ரொம்ப ரொம்ப கவனமா யூஸ் பண்ணனும்..

நீ இந்த லேப்குள்ள நுழைஞ்சதுமே முதல் வேலையா உன் கையில நீ கிளவுஸ் போட்டுக்கணும்.. புரிஞ்சுதா..?

அண்ட் மோர் ஓவர் …மாஸ்க் கம்பல்ஸரி லேப் கோர்ட்ல இருக்கணும்.. சின்னதா ஒரு நோட்டும் பேனாவும் எப்பவும் இருக்கணும்..

கவனமாவும் இருக்கணும்.. நான் ஒன்னு சொன்னா அதை சொன்ன நேரத்துல முடிக்கணும்.. புரியுதா ..?

சப்போஸ் ஏதாச்சும் தெரியலனா தயங்காம என்கிட்ட கேளு ..” என சில பல அறிவுரைகளை வழங்கிட ஆரம்பத்திலேயே கண்ணை கட்டியது நறுமுகைக்கு ..

அனைத்திற்கும் மண்டையை மண்டையை ஆட்டியவளது உடல் மொழியும் பார்வையையும் பார்த்து அவளிடம் ஏதோ சரியில்லை என கண்டு கொண்டான் விக்ரம்..

இருந்தும் முதல்நாள் என்கிற  பயத்தினால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என எண்ணிக்கொண்டவன் அவள் செய்யப்போகும் ப்ராஜெக்ட்டின் பத்தி சற்று விளக்க கூறலானான்..

ஏதேனும் ஒரு மூலிகை தாவரத்திலிருந்து காயத்தை குணப்படுத்தும் களிம்பை உருவாக்க வேண்டும் இதுதான் அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ப்ராஜெக்ட் …

 

தலை திருப்பி அவளைப் பார்த்த விக்ரம்,

 

” சொல்லு ஹெட்டிங் கேட்டல.. இதுல இருந்து உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?” என்றதும் சிறிது யோசித்தவளுக்கு பயத்திலும் படபடப்பிலும் மூளையில் ஒன்றும் தோன்றவில்லை …

 

“அது ..பிளான்ட்ஸ் வந்து.. நாமளே ஆயில்மெண்ட்.. தயாரிப்போமா..??  அதுவும் நானா..?”  என அவள் மீது நம்பிக்கை இல்லாது விக்ரமிடம் கேட்டிடவும் விழிகள் சுருக்கி அவளை பார்த்த விக்ரம் பல்லை கடித்துக் கொண்டு ,

 

“நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்..?? முட்டாள்…

ப்ராஜெக்ட் பண்ண போறோம். அதற்கான ஹெட்டிங் என்னனு சொல்றேன்.. நானா பண்ண போறேன்னு கேக்குற..?? அப்ப நான் பண்ணனுமா ..?” என சற்று காட்டமாக கேட்டதும் பதறியவள்,

 

” அப்படி இல்லண்ணா… அது..” சட்டென அவள் முன்பு விரல் நீட்டி,

 

” லுக் இந்த அண்ணா கிண்ணா இதெல்லாம் வேண்டாம்.. கால் மீ சார் ..அண்டர் ஸ்டாண்ட்..?” என்றதும் நொடியில் முகம் வாட்டமாகிவிட்டது நறுமுகைக்கு..

” ஓகே சார் ..” என உள்ளே‌ போன குரலில் கூறியவளிடம்,

“ம்ம்ம்…சொல்லு என்ன சொல்ல வந்த ..?”

 

“அது ..எந்த மாதிரி பிளான்ட்ஸ் வச்சு நாம இதெல்லாம் செய்ய போறோம்..?”  என்றதும் அவனும் தோள்களை குலுக்கக் கொண்டு,

 

” நீ தான் சொல்லணும்.. படிச்சிருக்கல..?? என்ன மாதிரி பிளான்ட்ஸ் எல்லாம் வெச்சி நம்ம காயம்  குணமாகும்னு.. ஜஸ்ட் பேசிக்கா யோசி..”  என்றதும் திருத்திருவென விழித்த நறுமுகைக்கு ஒன்றும் மூலையில் உதயமாகவில்லை..

அவளைப் பார்த்து உஷ்ண பெருமூச்சு விட்ட விக்ரம் ,

 

“இப்ப ஏதாவது காயம் பட்டுச்சுன்னா வீட்ல என்ன பண்ணுவாங்க.??  வேப்பிலை அரைச்சு போடுவாங்களா..? மஞ்சள் கூட போடுவாங்களா..?”  இதெல்லாம் என்னது..?? இன்பெக்ஷன் ஆகாம இருக்கணும் அப்படிங்கறதுக்கா போடுறது ..அதே மாதிரி தான் நம்ம பிளான்ட்ஸ்ல எவ்வளவோ இருக்கு… ஒன்னு ஒன்னுத்துக்கும் ஒரு ஒரு குணம் இருக்கு ..இப்ப நம்மளுக்கு விளம்பரத்துக்கு வர சோப்புகளிலேயே மஞ்சள் சேர்ந்துருக்கு ,கற்றாழை சேர்ந்திருக்கு, வேப்பிலை சேர்ந்திருக்கு, துளசி சேர்ந்திருக்கு…

ஒன்னொன்னா விளம்பரம் போடுறாங்க.. அது மாதிரி தான்…ம்ம்ம் ஓகே.. நான்  இப்போ உனக்கு ஆப்ஷன் தரேன்.. முருங்கைக்கீரை, வேப்பிலை, துத்தி இதுல ஏதாவது ஒன்னை செலக்ட் பண்ணு ..அதிலிருந்து நம்ம ஆயின்மென்ட்  தயாரிக்கலாம்…”  என்றதும்  முகம் மலர்ந்தவளாய்,

 

” முருங்கைக்கீரை  பண்ணலாம் சார்…வேப்பிலை கூட பண்ணலாம்…எங்க வீட்ல இரண்டு மரமும் இருக்கு…” என ஆவலாய் கூறியதும் அவளை மேலிருந்து கீழாக பார்த்த விக்ரம்,

 

” இரண்டுமே கிடையாது.. துத்தி பண்ணலாம் ..” என ஒரே போடாய் போட்டதும் அவனையே பாவமாக பார்த்து வைத்தாள் நறுமுகை…

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top