அத்தியாயம் 22

அன்று பெண்கள் அனைவரும் புடவை தான்  அணிந்து  வர வேண்டும் என ட்ரஸ் கோட் வேறு போட்டு  இருந்தனர் ஜீனியர் மாணவர்கள்.…

நறுமுகைக்கு என்ன புடவை அணிவது என்றே தெரியவில்லை..

பின் ஒருபழியாய் தங்க நிறத்தில் ஒரு புடவையை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள்… விக்ரம் கூட எத்தனையோ முறை கேட்டுப் பார்த்து விட்டான் ‘எந்த புடவை அணியப் போகிறாய்?’ என்று…

 

ஆனால் நறுமுகை அவனிடம் தெரிவிக்கவே இல்லை… மறுநாள் விழா கோலாகலமாக ஆரம்பமானது…

 

சீனியர் மாணவ மாணவிகள் அனைவரும் வண்ண வண்ணமாக அழகழகாய் ஆடை அணிந்து வலம் வந்திட.. அதில் தானும் ஒருவளாய் கல்லூரிக்கு வந்திருந்தாள் நறுமுகை…

தங்க நிறத்தில் மெல்லிய சரிகை வைத்து

புடவை ஒன்றை ஒரு பக்கம் மட்டும் பின் குத்தி மீதியை தொங்கவிட்டபடி அணிந்திருந்தவள் முடியை சின்ன கல் வைத்த கிளிப்பினால் அடக்கி மீதியை அழகாய் தோகை போல விரித்து விட்டிருந்தாள்…

 

சிறிது அலங்காரமும் செய்து பார்க்கவே தேவதை போல காட்சி அளித்தாள் நறுமுகை…

 

அவளை தேடி வந்த விக்ரமின் பார்வையில் பெண்ணவள் பட்டுவிட அவ்வளவுதான் மூச்சு விட கூட மறந்தவனாய் அவளது அழகில் மெய் மறந்து நின்று விட்டான்…

அவளது கண்களும் அவனை தான் தேடியது போல அங்கும் இங்கும் சுற்றி திரிந்து இறுதியில் பெண் அவளின் கருவிழிகள் இரண்டும் அதற்குரிய இடத்தை வந்து சேர்ந்ததும் அவளது பார்வையும் அவனிடத்திலேயே தேங்கி நின்று விட்டிருந்தது.…

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்க அந்நேயம்ங,

 

“முகை செம அழகா இருக்க போ..!”  என்ற ஜானின் குரலில் தான் தன்நிலை அடைந்த நறுமுகை சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் …

 

ஜானோ அவளுக்கு அருகே வந்து நின்று,

 

” செம அழகா இருக்க முகை… வா உள்ள போகலாம் ..” என்றதும் விக்ரமைப் பார்த்து சின்ன தலையசைப்பை தந்துவிட்டே அங்கிருந்து நகர்ந்து சென்றாள் பெண்ணவள்…

அன்று முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக சென்றது.. நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது.. பின் சீனியர் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என என்னென்னவோ ஏற்பாடு செய்திருந்தனர் ஜுனியர்கள்…

 

அவ்வப்போது அருந்துவதற்கு ஜூஸ் தந்திருந்தனர்… மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…அனைவரும் தங்கள் தோழமையுடன் சிரித்து பேசி உண்டு முடித்தனர்…

 

  மாலை நான்கு மணி போல விழா முடிந்து விட சீனியர் மாணவர்களுக்கான பரிசு பொருளையும் தந்து விட்டிருந்தனர்… அவர்களது வகுப்பு சார்பாக ஜான் தான் மேடை ஏறி பேசினான்..

 

அவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு ஜான் பேச பேச மனதெல்லாம் கலங்கத் தொடங்கியது…

இளங்கலையும் முடித்தாயிற்று முதுகலையும் முடிக்க போகிறார்கள் இதற்கு அடுத்து வேலைக்கு செல்ல வேண்டும்… கல்லூரி வாழ்வு இத்தோடு முடிய போகிறது என எண்ணும்போது அனைவருக்கும் சற்று வேதனையை தந்தது..

 

ஒரு சிலர் அழுதே விட்டனர்.. நறுமுகைக்கு கண்கள் கலங்கினாலும் வெளிப்படையாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை..

ஒரு வழியாக விழாவும் முடிந்து விட ஒவ்வொருவராய் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாயினர்..

கவிதாவும் நறுமுகையிடம்,

 

” கிளம்பலாமாடி ..?” என கேட்டதும் அவளது பார்வை ஆர்வமாக  யாரையோ தேடியது… அதை புரிந்து கொண்டவள் தலையை சலிப்பாக ஆட்டி,

 

” இது வேலைக்கே ஆகாது ..அவர் கூட போக போறியா..?”  என கேட்டதும்,

 

“ தெரியலடி.. அவர் எதுவும் சொல்லல ..நான் கேட்டுட்டு வந்துடட்டுமா..?”

 

” சரி போன் பண்ணி கேளு ..” என்றதும் அவசரமாய் தனது கைபேசியை எடுத்துக் கொண்டு யாரும் இல்லாத இடத்திற்கு ஓடினாள் நறுமுகை…

 

தன்னவனுக்கு அழைப்பு விடுத்திட அதற்காகவே காத்திருந்தது போல உடனே அழைப்பை ஏற்ற விக்ரம்,

 

“வெளிய போலாமா நறு…?”  என கேட்டதும் அவளது இதயம் நின்று துடைத்தது ஆச்சரியத்தில்…

 

சட்டென இதழ் விரி புன்னகைத்துக் கொண்டவள் ,

 

“உங்க கிட்ட கேட்கலாம்னு தான் கால் பண்ணேன்…”

 

“ சரி நீ பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணு.. நான் வரேன்..”

 

“ம்ம்ம்.. சரிங்க..”  என அழைப்பை துண்டித்தவள் கவிதாவிடம் விஷயத்தை கூறிட கவிதாவும் இரு புருவங்களையும் உயர்த்தி,

 

“ம்ம்ம்… இன்னிக்கி ரொமான்ஸ் தானே ..?” என கேலி செய்யவும் அதில் விழி விரிய கவிதாவை பார்த்த நறுமுகை அவள் கையிலே ஒன்று போட்டு,

 

“ப்ச்… சும்மா இரு கவிதா..  அப்படி எல்லாம் இல்லை..”  என பேசும் போதே வெட்கப்பட்டாள் நறுமுகை…

அதை கண்ட கவிதாவும்,

 

” உன் மூஞ்சை பார்த்தாலே தெரியுது.. அவர் சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க மாட்டேன்னு..” என்றதும் உதட்டை சுழித்துக் கொண்டு,

 

” அப்படிலாம் ஒன்னும் இல்லைடீ…அவர் கிட்ட கூட வர மாட்டாரு..” என அவளுக்கே அவள் பேசுவது அபத்தம் என நன்றாக தெரியும்…இருந்தும் வேறு வழி இல்லையே…!

 

“ சீக்கிரமா வீட்டுக்கு போக பாருடி.. ரொம்ப லேட் பண்ணாத ..”

 

“சரிடி ..” என பேசியவாறு பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தனர் இருவரும்…

அதன் பின் விக்ரமோ ஒன்றுக்கு இரண்டு முறை தன் முகத்தை கழுவி தலையை வாரி நன்றாக இருக்கிறோமா என கழிவறையில் இருக்கும் கண்ணாடியில் பார்த்துவிட்டே கல்லூரியில் இருந்து வெளியேறி வந்தான்…

 

காரை எடுக்கலாம் என போன சமயம் அங்கு வந்து இருந்தார் பேராசிரியர் ஒருவர்…

 

” விக்ரம் என்னை கொஞ்சம் எம்.எம்.டீ காலேஜ் வரைக்கும் டிராப் பண்ணிரியா..?”  என்றதும் திடுக்கிட்டு போன விக்ரமிற்க்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை..

 

அத்தோடு மறுக்கவும் முடியாது.

” சா…ர்…” என இழுக்கவும்,

 

” என்ன விக்ரம் அர்ஜென்டா வெளியே போறியா ..?” என ஒருவித தவிப்புடன் கேட்டதும் இப்போது மறுத்தால் நன்றாக இருக்காது  என்பதால் ,

 

“நீங்க வாங்க சார் …நான் உங்களை டிராப் பண்றேன்…”  என அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டான்..

 

மறுக்காது நறுமுகைக்கும் ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டிருந்தான்… அவன் தான் அனுப்பியுள்ளான் எனத் தெரிந்ததும் அடுத்த நொடியே  அதை திறந்து பார்த்த நறுமுகை அதிலிருந்து செய்தியை கண்டதும் சற்று நேரத்தில் முகம் சுணங்கி விட்டாள்… 

 

கவிதாவும்,

 

” என்னடி..? வந்துட்டாராமா..?’

 

“ இல்லடி அர்ஜெண்டா வெளியே போறேன் வெயிட் பண்ணுன்னு சொல்றாரு ..”

 

“அப்ப லேட் ஆகுமா..?”

 

“ தெரியலையே..”

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்தும் விக்ரம் வரவே இல்லை… நறுமுகை தான்  மனம் கேளாது தன்னுடன் நிற்பவளிடம்,

 

” நீ கிளம்பு கவிதா.. அவர் தான் வரேன்னு சொல்லி இருக்காருல்ல.. நான் போய்க்கிறேன் ..உனக்கு பஸ் இப்ப காலியாக வரும்ல ..?” என்றதும்,

 

” பரவாலடி ..இப்ப வீட்டுக்கு போனா மட்டும் என்ன பண்ண போற..? நாளைக்கு எந்த ஒர்க்கும் கிடையாது.. லீவு தானே ..உன்னை தனியா விட்டுட்டு போகனுமா.. விடு…” என்றதும் அடுத்த பத்து நிமிடத்தில் விக்ரமின் கார் அவர்கள் முன்பு வந்து நின்றது..

ஜன்னலை இறக்கிய விக்ரம் முதலில் கவிதாவிடம் தான் மன்னிப்பு வேண்டினான்,

 

“ சாரி கவிதா.. ரொம்ப லேட் பண்ணிட்டேனீ…பழனிச்சாமி சார் டிராப் பண்ண சொல்லி இருந்தாரு அதுக்காக தான் போனேன்..”

 

“ஓஓ…பரவாலண்ணா… ”

விக்ரம் தான் அனைவர் முன்பு மட்டும் சார் என அழைக்க சொல்லி இருந்தான்…இப்போது இவர்கள் தானே இருக்கிறார்கள் அதனால் அண்ணா என்றே இயல்பாக அழைத்தாள்…

 

  அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கவிதாவிற்கான பேருந்து வந்து நின்றது காலியாக… அதை கண்டும் நறுமுகை தான் ,

 

“கவிதா பஸ் காலியா வந்திருச்சு பாரு..”

 

” சரிடி நான் போயிட்டு வரேன்.. நீயும் சீக்கிரமா வீட்டுக்கு போ..வரேண்ணா.. பாய் முகை”  என பஸ்ஸில் ஏறிக்கொண்டாள் கவிதா…

 

நறுமுகைக்கு கை அசைத்தவாறு கவிதாவும் சென்றுவிட ..பேருந்தின் பின்பக்கத்தை பெருமூச்சுடன் பார்த்த நறுமுகை பின் காரில் ஏறிக் கொண்டாள் ..

 

அவள் ஏறி அமர்ந்ததும் அங்கிருந்து முதலில் சற்று தள்ளி வந்தவன் பின்பு வேகத்தை சற்று குறைத்தவனாய் ,

 

“கரெக்டா காரை எடுக்க வந்தேன் பழனிச்சாமி சார் வந்துட்டாரு …ஏதோ அர்ஜென்ட் ஒர்க் போல.. முடியாதுன்னு சொல்ல முடியல.. அதான் டிராப் பண்ணிட்டு வர இவ்வளவு லேட் ஆயிடுச்சு..”

 

“ம்ம்ம்… இருக்கட்டும்ங்க.. இதுல என்ன இருக்கு ..?”

 

“நீ கவிதாவை கிளம்ப சொல்லி இருக்க வேண்டியது தானே..? அவளை எதுக்கு இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வச்ச..?”

 

“ நான் சொல்லி பார்த்தேன் அவ தான் கேக்கல …உன்னை கார்ல ஏத்தி விட்டு அப்புறம் நான் போய்க்கிறேன்னு நிக்கிறா நான் என்ன பண்றது ..?”

“உனக்காக இவ்வளவு பண்றா அப்புறம் ஏன் பேசாம இருக்கா..?” என்றதும் சட்டென நறுமுகை அமைதியாகிவிட்டாள்…

 

அவளை ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு நேரே சாலையை பார்த்த விக்ரம்,

 

” நானும் உன்கிட்ட கேட்கனும்னு  நினைச்சேன்… அப்படி என்னதான் பிரச்சனை உங்களுக்குள்ள..?” மென்மையாய் சிரித்த நறுமுகை,

 

” அதுதான் எனக்கும் தெரியல..”  என்றதும் அவளை  பார்த்தவன்,

 

“ தெரியாம தான் இவ்வளவு நாளா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்களா..?”

 

கண்களை இறுக மூடி திறந்து இருக்கையில் சாய்ந்து கொண்டவள்,

 

” காலேஜ் படிக்கும் போது நான், கவிதா, கௌசல்யா, அஸ்வினி நாலு பேரும் ஒண்ணாதான் இருப்போம்…

கவிதாவுக்கு என் மேல ரொம்பவே பொசிஸிவ்…யாராவது என்கிட்ட பேசினாலோ…என் பக்கத்துல உட்காந்தாலோ அவ்வளவு கோபம் வரும் அவளுக்கு…

அதுவும் நாங்க படிச்சது கேர்ள்ஸ் காலேஜ்.. பொண்ணுங்க நிறைய பேரு என்கிட்ட வந்து வந்து பேசிகிட்டு இருப்பாங்க..

எதுக்கு அவங்க கிட்ட பேசின..?? அவங்க பக்கத்துல ஏன் உட்காருறேன்னு??  ஒரே சண்டை போடுவா… ஏன் கௌசல்யா அஸ்வினி பக்கத்துல உட்கார்ந்தா கூட அவளுக்கு அவ்வளவு கோபம் வரும்..

எந்நேரமும் என் கையை புடிச்சுகிட்டு இருப்பா.. அப்பப்போ சின்ன சின்ன கிப்ட் கொடுத்துப்பா.. நானும் தருவேன்.. எனக்கும் அவளை ரொம்பவே பிடிக்கும்..

பட் அவளுக்கு இருக்கிற அந்த பொசிஸிவ்னஸ் எனக்கு இல்ல.. ரெண்டு பேருக்கும் அது தான் வித்தியாசமே தவிர மத்தபடி  அவளுக்கு என்னை எவ்வளவு பிடிக்குமோ அதே மாதிரி தான் எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்..

 

ஏன் ஒரு தடவை எங்களுக்குள்ள சண்டை வந்துடுச்சு அப்ப நான் அவ கிட்ட பேசலன்னு கைய கூட கட் பண்ணிக்கிட்டா ..” என்றதும் இதை கேட்ட விக்ரமின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன..

 

” கையை கட் பண்ணிக்கிட்டாளா..??? பைத்தியமா அவ ..??’

 

“ம்ம்ம்…எனக்கு செம கோவம் வந்துருச்சு.. அதுவும் அன்னிக்கு செமஸ்டர் எக்ஸாம்ஸ் வேற.. காலையில வந்து காட்டுறா நீ பேசலன்னு நான் கையை கட் பண்ணிக்கிட்டேன்னு..

அப்படியே நல்லா பொளந்துகிட்டு இருக்கு.. புது பிளேட் வைச்சு கட் பண்ணிக்கிட்டாளாம்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. பளாருன்னு ஒரு அரை விட்டேன்.. அப்புறம் எக்ஸாம் முடிஞ்சதும் பக்கத்துல இருக்க கிளினிக்  கூட்டிட்டு போய் தான் மருந்து போட்டு கட்டு போட்டு வந்தோம்…. இனி இப்படி பண்ணாத கவிதா நீ முதல்ல உங்க அப்பா அம்மாவை பாரு அதுக்கப்புறம் ஃப்ரண்டை பார்க்கலாம்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாலும் அவ கேக்கல..

அந்த அளவு என் மேல பைத்தியமா இருந்தா விக்ரம்…”

 

இதை கேட்ட விக்ரமிற்கு சிரிப்பதா கோபப்படுவதா என தெரியவில்லை..

முட்டாள் தனமான அன்பு கொண்டிருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது அவனுக்கு ..

அவன் மனதில் ஒன்று தோன்றிட அதை மறைக்காது,

” உனக்காக கையவே கட் பண்ணிக்கிட்டானு சொல்ற.. அப்படி இருந்தவ தான் இப்ப இவ்வளவு தூரம் மாறிட்டாளா.. ” என்றதும் நறுமுகையின் சிரம் தாழ்ந்தது…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top