அத்தியாயம் 35

காட்டு   கத்தலாக கத்திக் கொண்டிருந்தார் சுகன்யா… மருமகள் மீது அவ்வளவு கோபம் எழுந்தது அவருக்கு…

 

நறுமுகையிடம் பேசி விட்டு வந்தாயா என மகனிடம் ஆயிரம் முறை கேட்டு விட்டார் …அவனும் எவ்வளவோ மழுப்பி பார்த்தான் பின் முடியாது விஷயத்தை போட்டு உடைத்திட ..அவ்வளவு தான் பொங்கி எழுந்து விட்டார்..

 

” இன்னும் ஒரு வருஷமா??? என்ன விளையாடலாறாளாமா அவ..???  கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் கிட்ட ஆயிடுச்சு.. இன்னும் ஒரு வருஷமாம்…!

 

என்ன நினைச்சுட்டு இருக்கா அவ மனசுல..???  இங்க பாரு விக்ரம் இது மாதிரி அவ பண்ணிட்டு இருந்தானா எனக்கு வேற வழி கிடையாது அவளை அறுத்து விட்டு உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைச்சிடுவேன்..”  என்றதும் அன்னையை திடுக்கிட்டு பார்த்த விக்ரம் ,

 

“என்னம்மா பேசிகிட்டு இருக்கீங்க..???  ஏற்கனவே பிரச்சனையா இருக்கு.. இதுல நீங்க வேற இப்படி பேசினா என்ன அர்த்தம் ..???”

 

“என்னால முடியல விக்ரம்.. என் பையன் வாழ்க்கை இப்படியே ஹாஸ்பிடல்  ஹாஸ்பிடல்னு ஓடி போய் விடுமோன்னு பயமா இருக்கு… எல்லோரும் குழந்தை குட்டினு பார்க்கும் போது எனக்கும் என் பையன் குழந்தை குட்டியோட சந்தோஷமா வாழனும்னு ஆசை இருக்காதா.. 

ஏன் உனக்கு ஆசை இல்லை..??? உன் குழந்தை… உன் உயிர்ல வளர்ந்து பிறக்கிற குழந்தையை உன் கையால ஏந்தனும்னு உனக்கு ஆசை இல்லையாடா..??? சொல்லு…”  என நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல கேட்டதும் ஒரு கணம் ஒரே ஒரு கணம் தன் குழந்தையை தனது மென் கரங்களால் ஏந்துவது போன்ற ஒரு காட்சி மனக்கண்ணில் வந்து சென்றது.…

 

சிலிர்த்துப் போனது அவனது  மேனி அந்நொடியில்…

 

தலையை அழுந்த கோதி கொண்டு தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவனாய்,

 

” ம்மா ப்ளீஸ்… அதே ஆசை நறுமுகைக்கும் இருக்கும் தானே? அவளை  பத்தி ஏன்ம்மா யோசிக்க மாட்டேங்கிறீங்க..??”  என கேட்டதும் அவ்வளவு தான் எகிறி விட்டார் சுகன்யா…

 

” யாருடா யோசிக்காம இருக்கா..??? நான் அவளை பத்தி யோசிக்காம இருக்கேனா..??

 

டாக்டர் ரெண்டு மாசம் கழிச்சு வர சொன்னாங்க.. சரி அவங்க அப்பாக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு ..இந்த டைம்ல அவதான் பாத்துக்கணும்னு‌ நானும் விட்டேன்.. 

 

இப்ப தான் அவங்க அப்பா பரவாலாம இருக்காரே.. ஹாஸ்பிடல் போக வேண்டியது தானே..? அதை விட்டுட்டு இன்னும் ஒரு வருஷம் கழிச்சு போகலாம்னு சொன்னா என்ன அர்த்தம்..???

 

இப்பவே நெகட்டிவ் காட்டுது…இன்னும் வயசு ஏற ஏற டாக்டர்ஸ் தர மருந்தெல்லாம் அவள் உடம்பு ஏத்துக்குமா..??? அவளோட கர்ப்பப்பையும் குழந்தையை தாங்குற அளவுக்கு ஸ்ட்ராங்காவாது இருக்கணும்ல… எல்லாமே யோசிக்கணும் விக்ரம்…

 

காய்ச்சல் வருது …மருந்து கசக்குதுனு அப்பறம் குடிக்கலாம் அப்பறம் குடிக்கலாம்னு விட்டா  ஜன்னி தான் வரும்..

 

அதுக்கான மருந்து பிடிக்கலைன்னாலும் குடிச்சா தான் ஜுரம் தூரமா போகும்…

அவகிட்ட பேசு.. அப்படி இல்லையா நானே அவங்க அம்மா கிட்ட பேச வேண்டியது இருக்கும் ..” என எச்சரித்துவிட்டு சென்று விட்டார்..

 

விக்ரம் தந்தையை தனக்கு துணையாக பார்வையால் நோக்கினான்..

 

தேசிங்கன் எப்போதும் மனைவிக்கு எதிராகத்தான் பேசுவார்… இம்முறை சுகன்யா பேசிய பேச்சில் அவரது கருத்தை ஆமோதிப்பவராய் மகனை நோக்கி,

 

“இன்னும் ஒரு வருஷம் ஏன் தள்ளி போடனும் விக்ரம்..?? முகை கிட்ட பேசி புரிய வை..”  என திட்டவட்டமாக உரைத்து விட உள்ளுக்குள் சோர்ந்து தான் போனான் விக்ரம் …

 

மீண்டும் நறுமுகையை சந்தித்து எப்படியேனும் இம்முறை அவளை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்கிற நோக்கத்துடன் பேசலானான்…

 

நறுமுகை முன்பு தயக்கமாக சொன்னதை இப்போது உறுதியுடன் கூறிவிட்டாள்…

 

“ ப்ளீஸ் விக்ரம் …என்னால வலி தாங்க முடியல ..கொஞ்ச நாள் ஆகட்டும் ..குழந்தைனு நினைச்சாலே எனக்கு வலி தான் ஞாபகம் வருது…”

 

” அதுக்காக குழந்தையை பெத்துக்காம இருக்கலாம்னு முடிவில் இருக்கியா..??”  என பட்டென்று கேட்டதும் விலுக்கென்று அவனை அடிபட்ட பார்வை பார்த்த நறுமுகை,

 

” நான் அப்படி சொல்ல வரலை… கொஞ்சம் என் நிலைமையையும் புரிஞ்சுக்கோங்கனு தானே கேட்கிறேன்…”  என் தன்மையாகவே எடுத்துரைத்தாள்…

 

விக்ரமிற்கு அதை எல்லாம் கேட்கும் பொறுமையை இல்லை …

 

அவனது பொறுமை எல்லாம் எங்கேயோ தூர போய்விட்டது..

 

” சொன்னா நீ புரிஞ்சுக்கோ.. நறு இனியும் ஒரு வருஷம் லேட் பண்ணா அது இன்னும் லேட் ஆகும்…

உனக்காக இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஹாஸ்பிடலுக்கு போகலாம்… அதுக்குள்ள உன்னை நீயே தயார் படுத்திக்கோ..”  என எப்படியேனும் அவளை  சம்மதிக்க வைத்திட வேண்டும் என எண்ணத்துடன் அவன் பேசிட… ஆனால் நறுமுகை இம்முறை பிடிவாதமாக மறுத்து விடவும் அவ்வளவுதான் விக்ரமிற்கு சுர் என்று கோபம் ஏறிவிட்டது …

 

“நீ பண்றது எல்லாம் வேணும்னே இருக்கு… ஐவிஎஃப் பண்றவங்களை போய் பாரு… எப்படா டாக்டர் கூப்பிடுவாங்க அடுத்த முறை எப்படி ட்ரை பண்றதுன்னு அதை தான் யோசிப்பாங்க.‌‌..

 

நீ என்னடானா இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு ஓடி ஒளிய பார்க்குற..??? எனக்கு சுத்தமா பிடிக்கல நறுமுகை”  என தனது பிடித்தமின்மையை வெளிப்படையாகவே கூறிவிட்டதும் உள்ளுக்குள் உடைந்து தான் போனாள் நறுமுகை… 

 

“சரி விக்ரம் உங்களுக்கு என்ன குழந்தை தானே வேணும்.. சரி அப்போ நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க.. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ..” என அவன்  குழந்தைக்காக இன்னொரு திருமணம் செய்தாலும் அவளுக்கு கவலை இல்லை என்பது போல கூறியதும் இப்போது உள்ளுக்குள் நொறுங்குவது  விக்ரமின் முறையாயிற்று…

 

இயலாமை அதிக கோபத்தை தந்திட.. வேகமாக எழுந்து நின்றவனது முகம் ஆத்திரத்தில் சிவந்து போய் விட்டிருந்தது…

 

அவனது இந்த கோபம் பயத்தை தந்தாலும் அழுத்தமாக அமர்ந்தபடி  இருந்தவளை ஏகத்துக்கும் முறைத்து பார்த்தவன்,

 

” அப்படியா சரி …உனக்கு அது தான் விருப்பம்‌னா தான் இன்னொரு கல்யாணம் தாராளமா பண்ணிக்கிறேன்…” என அவளை   உடைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தான் விக்ரம் …

 

அவனுக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும் இது கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள் தான் என்று..

ஆனால் உதிர்த்த சூழ்நிலை இருவரையும் மிகவும் உடைய செய்திருந்தது…

 

அவள் எப்படி தன்னை இன்னொருத்தியை திருமணம் செய்ய சொல்லலாம் என்று கோபம் இவனுக்கு ..

 

தான் தான் முட்டாள்தனமாக பேசுகிறோம் என்றால் அவனும் பதிலுக்கு இன்னொருத்தியை திருமணம் செய்து கொள்கிறேன் என எவ்வளவு எளிதாக கூறிவிட்டான் என கோபம் அவளுக்கு …

 

இருவரும் அவரவர் நிலையில் இருந்தனர் …

 

சுகன்யா வேறு நறுமுகல என்ன கூறினால் என விக்ரமிடம் கேட்டுக் கொண்டே இருக்க கோபத்தில் தனக்கு முன் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்த விக்ரமோ ,

 

“அவ என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றா …போதுமா..???  போய் பொண்ணை பாருங்க… அவளை தூக்கி எறிஞ்சிட்டு இன்னொரு  கல்யாணம் பண்ணி உங்களுக்கு பேரனையோ பேத்தியையோ கைல கொடுக்கிறேன் நல்லா வளர்த்து ஆளாக்குங்க…”  என ஆத்திரத்தில் கத்தி விட்டு  விருட்டென்று வெளியேறி விட்டான்…

எப்போது மகனது வாயில் இப்படி ஒரு வார்த்தை வந்ததோ சுகன்யா கோபப்படவில்லை இதையே நடத்திட முடிவு செய்யதவராய்  வக்கீல் ஒருவரிடம் பேசி விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை நறுமுகையின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார் சுகன்யா…

 

கணவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்கிற துயரத்தில் இருந்த சுரதை தான் கடிதத்தை வாங்கி இருந்தார்…

 

மகனின் பெயரை பார்த்ததும் என்னவென்று பிரித்துப் பார்த்தவருக்கு அது விவாகரத்து நோட்டீஸ் என அறிந்த நொடி தீ கங்குகளை தலையில் கொட்டியது போல துடிதுடித்து விட்டார்…

 

வேகமாக மகளிடம் அழுதவாறு சென்றவர்,

 

” அய்யோ முகை …உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே…??? மாப்பிள்ளை உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்காருடி…”  என கதறிய அன்னை கூறிய செய்தியில் உச்சபட்ச அதிர்ச்சியில் சமைந்து போய்விட்டாள் நறுமுகை…

தன்னவனா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளான்..??? என அப்போது கூட அவளது மனம் நம்பிட மறுத்தது…

வேகமாக தாயிடம் இருந்த காகிதத்தை வாங்கி பார்த்திட அதில் இருந்த செய்தியை கண்டவள் இடி விழுந்த மரமாய் இடிந்து போய் அமர்ந்து விட்டாள்… 

 

அவளது விழிகளில் இருந்து கண்ணீர் சரசரவென இறங்கியது… சுரதை தரையில் அமர்ந்து விட்டவர் மகளின் மடியில் தலை சாய்த்து,

 

” நான் எந்த ஜென்மத்துல பாவம் பண்ணுனேனோ உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே… என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுனு  எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்லிட்டு திரிஞ்சனே..! ஊர் முழுக்க நெஞ்சை நிமித்திக்கிட்டு நடந்தேனே..! இப்போ உன் வாழ்க்கை நாசமா போச்சே..??

கடவுளே இன்னும் என்னவெல்லாம் பண்ண போற நீ…???”  என  கதறிய அன்னையின்  வார்த்தைகள் எதுவும் அவளது காதில் ஏறவே இல்லை…

 

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ மெல்ல கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தவள் கதவில் சாய்ந்து ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டு கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தாள்…

 

இப்போது கூட அவளது மனம் இந்த செய்தியை நம்பிட மறுத்தது …தானே நேரடியாக அவனிடம் கேட்டு விடலாம் என முகத்தை கழுவிக்கொண்டு கைப்பையை எடுத்தவள்,

 

“ நீ கவலைப்படாதம்மா… நான் அவர்கிட்ட போய் பேசுறேன்..”

 

” நானும் வரேன்டி.. நான் மாப்பிள்ளை கால்ல விழுறேன்” என்ற அன்னையை அவசரமாய் கடிந்து கொண்டவள்,

 

” பைத்தியம் மாதிரி பண்ணாதம்மா.. நான் முதல்ல பேசுறேன் …யார் கால்லையும் நீ விழ வேண்டாம் …அப்பா கிட்ட எதுவும் சொல்லிட்டு இராக்க வேண்டாம் …பெரியப்பா கிட்டயும் எதையும் சொல்லிடாத..”  என எச்சரித்து விட்டு  சென்றாள்… 

 

மதிய நேரம் என்பதால் மாணவர்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தனர்…

ஆட்டோ பிடித்து உள்ளே சென்றவள் அலுவலக அறையில் விக்ரமின் அறையைக் கேட்டு அறிந்து கொண்டு நேரே அவனது அறைக்கு சென்றாள் …

 

மனையாளை அங்க எதிர் பார்த்திடாத விக்ரம் விழிகள் சுருக்கி எழுந்து நிற்க.. பெண்ணவளும் அவனை இப்படி ஏமாற்றி விட்டாயே என்கிற பார்வையுடன் எதிர்கொண்டு உள்ளே சென்றவள்,

 

” என்ன பண்ணிட்டு இருக்கீங்க..??”  என கேட்கும் போதே அவளது குரல் அடைத்தது..

 

விக்ரமோ வந்ததும் வராததுமாக இப்படி கேட்கிறாளே என,

 

“இப்ப என்ன உனக்கு பிரச்சனை ..??” என அலட்சியமாக கேட்டதும் சுர்ரென்று ஏறியது நறுமுகைக்கு ,

 

“இன்னொரு கல்யாணத்துக்கு தயார் ஆகிட்டீங்க போல.. ” என கேட்டதும் சுருக் என்று இருந்தது விக்ரமிற்கு…

 

நொடியில் முகம் மாறியவன் பின் இறுகிய முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க.. பெண்ணவளும்,

 

” அது எப்படி  விக்ரம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம உங்களால இப்படி நடந்துக்க முடியுது..???  உங்களுக்கு மட்டும் தான் குழந்தை வேணும்னு நினைப்பிருக்கா..???

ஏன் எனக்கு நினைப்பு இல்லையா..?? 

 

என் கூட இருந்துட்டு குழந்தைக்காக இன்னொருத்தியை தேடி போறே உங்களை என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல..!”  என பல்லை கடித்துக் கொண்டு வார்த்தைகளை விட்டதும் கையை ஓங்கி விட்டான் அவளை அறைவதற்கு…

 

அதிர்ந்து போய் அவனை பார்த்ததும் இறுதி நொடியில் கையை கீழிறக்கியவன் தனது கையை சுவற்றில் முட்டிக்கொண்டு ,

 

“ஆமாண்டி நான் கேடு கெட்டவன் தான்.. எனக்கு குழந்தை தான் முக்கியம். போதுமா ..??”

 

“ஓஓ…அதான் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்களா விக்ரம் ..??” என்றதும் இன்னும் தலையை அழுந்த கோதிக் கொண்டவன்,

 

” ஆமா நான் தான் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினேன்.. இப்ப என்ன அதுக்கு..???  உனக்கு வேணும்னா மூடிட்டு வந்து என்கூட இரு… இல்லையா சைன் போட்டு போய் தொலை…”  என வார்த்தைகளை விட்டு விட.. கண்களில் கண்ணீருடன் அவனைப் பார்த்த நறுமுகை,

 

” இதுக்கு எல்லாம் நீங்க அனுபவிப்பீங்க ..” என கரகரத்த குரலில் கூறி விட்டு வேகமாக வெளியேறி விட்டாள்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top