சரியாக அவந்திகா தன்னுடைய அறை வரும் வரை முகத்தை சுருக்கி கொண்டு இருந்தவள் அவளது அறைக்கு பக்கவாட்டில் மேனேஜர் எனும் பலகையை கண்டதும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு அப்பலகையை மென்மையாக பார்த்தாள் அகந்திகா…
கை நீட்டி அதை தடவி பார்த்தவளது இதழில் நிறைவான புன்னகை தவழ்ந்தது….. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்…
அத்தனை நேர்த்தியாக இருந்தது அந்த அறை… தனது கைப்பையையும் லேப்டாப்பையும் மேசை மீது வைத்து விட்டு அவ்வறையை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள்…மனதிற்கு அமைதியை தந்தது …
பின் பால்கனி பக்கம் சென்று பார்த்திட… அத்தனை அழகாக காட்சி தெரிந்தது… அவை அனைத்தையும் உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்தவாறு இருந்த அவந்திகாவின் காதில் கம்பெனி அலைபேசியின் சத்தம் கேட்டது…
அழைப்பை ஏற்று காதில் வைத்த நேரம்,
” மேம் பாஸ் வந்தாச்சு..உங்களை பார்க்க வர சொன்னாரு” என்றதும்,
” ஓகே நான் பார்த்துக்குறேன்… தேங்க்யூ..” என்று விட்டு அழைப்பை துண்டித்தவள் இந்த மாத ஃபேக்டரியின் கணக்கு வழக்கு அடங்கிய கோப்பையை எடுத்துக்கொண்டு அதிரூபனின் அறைக்கு சென்றாள் அவந்திகா…
தங்க நிற எழுத்துக்களால் அதிரூபனின் பெயர் பொறிக்கப்பட்ட கதவை தட்டியதும் ,
“கம் இன்..” என தன் கம்பீரமான குரலில் அவளை உள்ளே அழைத்தான் அதிரூபன்…
வரவழைக்கப்பட்ட சிறு புன்னகையுடன் அவனை எதிர் கொண்டாள் அவந்திகா.. கையில் கோப்புடன் அவன் முன்னே சென்று நின்றதும் அதிரூபனும் பெயருக்கென்று சிரித்தவாறு,
” டேக் யுவர் சீட் அவந்திகா..” என்றதும் அவனுக்கு முன்னே இருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவள்,
“ மார்னிங் சார்..”
“ மார்னிங் அவந்திகா ..!…இனி இங்க தான் நீங்க ஒர்க் பண்ணனும் ரூம் உங்களுக்கு ஓகே தானே..?”
“யா… ஓகே தான் சார் …ரொம்ப நல்லா இருக்கு..”
“ம்ம்ம்…வேற எதாவது அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணனும்னாலும் தைரியமா சொல்லுங்க நான் பண்ணி தரேன் ..எதுக்காகவும் தயங்க வேண்டாம்..” என உண்மையாக கூறியதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
” சரி இதுல உங்களோட இன்னைக்கு வேலைக்கான ஃபைல்ஸ் இருக்கு செக் பண்ணிக்கோங்க… ஏதாவது டவுட்னா என்கிட்ட கேளுங்க..” என்றதும் அவன் தந்த கோப்பினை வாங்கிக் கொண்ட அவந்திகா விழிகள் சுருக்கி ஒரு கணம் மேலோட்டமாக அனைத்தையும் பார்த்துவிட்டு,
” பெர்ஃபெக்ட்… ஓகே சார் தேங்க்யூ..” என்றதும் அவளுடன் கை குலுக்கிய அதிரூபன்,
” பெஸ்ட் ஆப் லக் அவந்திகா. அண்ட் வெல்கம் ஆபீஸ் ..” என்றதும் சிறு புன்னகையுடன் அவனது வாழ்த்தை ஏற்றுக் கொண்டாள்…
அதிரூபனை பார்த்துவிட்டு அறையில் இருந்து வெளியே வரும் போது, ரேவந்த் எதிரில் வந்தான்…
அதுவரை வேகமாக நடந்து வந்தவன் அவள் அதிரூபனின் அறையில் இருந்து வருவதை கண்டதோடு அவள் கையில் இருந்த கோப்பைப் பார்த்துக்கொண்டே,
“புது மேனேஜரை பாரு…ம்ம்ம்…சொகுசு வாழ்க்கை தான்..” என ஒரு வித நக்கலாக கூறவும் அவந்திகா,
“ஆமாம்…சொகுசு வாழ்க்கை தான்..அதுக்கு என்ன இப்போ…?” என திமிராகவே கேட்டாள்…
ரேவந்த் அவளை ஆச்சரியம் போல பார்த்து,
“கம்பெனில முதல் நாள். ஆனா இவ்வளவு கான்ஃபிடன்ஸா?” என இதழ்களை பிதுக்கி கேட்கவும் அவந்திகா சிரித்தபடி,
“வேலை தெரிஞ்சவங்களுக்கு கான்ஃபிடன்ஸ் இருக்கும்.” என நிமிர்வாக பதில் அளித்தாள்…
ரேவந்த் விடாது,
“அப்படியா? இங்க வேலை மட்டும் தெரிஞ்சா போதாது… யார்கிட்ட எப்படி பேசணும்னும் தெரிஞ்சிருக்கணும்.” என பற்களை கடித்து சிரித்துக் கொண்டே கூறினான்…
அவந்திகா,
“அது நல்லவங்ககிட்ட பேசுறப்போ தானே தேவைப்படும்?” என அவனை போலவே நக்கலாக கேட்டு வைத்தாள்…
அதில் ரேவந்தின் முகம் கறுத்து போனாலும் அதை வெளிக்காட்டி கொல்லாது,
“நான் நல்லவன் இல்லன்னு சொல்ல வர்றீங்களா?”
“நீங்களே அப்படின்னு எடுத்துக்கிட்டா… அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என அவனுக்கு திருப்பி பதில் அளித்து விடவும்
ரேவந்த் அவளை முறைத்தபடி அங்கிருந்து சென்று விட்டான்…
ஏனோ அவந்திகாவின் இந்த திமிர் பேச்சு ரேவந்த்திற்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை…
இவ்வளவு பெரிய கம்பெனியின் சிஇஓ ஆன அதிரூபனே தன்னிடம் விழுந்து கிடக்கும் போது சாதாரண ஒரு பெண் அதுவும் மேனேஜராக பணிபுரிந்து வருகிறாள் அவளுக்கு இவ்வளவு திமிரா..? என தேவையே இல்லாமல் அவந்திகா மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டு இருந்தான் ரேவந்த் …
தன் சுய உழைப்பில்..தன் திறமையில் இவ்வளவு தூரம் முன்னேறி வந்து இருப்பவளுக்கு தான் ஒவ்வொன்றின் அருமையும் தெரியும் …தன் தன்மானத்தை சீண்டினால் அது யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும் …அதை ரேவந்த்தால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை …
அவளுக்கான வேலைகள் அனைத்தையும் கனகச்சிதமாக செய்து முடித்திருந்தாள் அவந்திகா… அதிரூபனிடம் மட்டும் சற்று மரியாதை கொடுத்து நடந்து கொள்பவள் ரேவந்த் எல்லாம் ஒரு ஆளாக கூட மதிப்பதில்லை …
ஏற்கனவே அவள் இங்கு அடிக்கடி வந்து போவதால் பலருக்கு முன்னமே அவளை தெரியும் என்பதால் பலர் தானாகவே அவளிடம் வந்து பேசினர்…
யாராக இருந்தாலும் ஒரு எல்லையுடன் தள்ளி வைத்து பேசினாள் அவந்திகா .…
அன்று சீக்கிரமே தன் வேலையை முடித்துக் கொண்டவள் அலுவலகம் முடியும் நேரம் வீட்டிற்கு தன் காரினை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்…
அந்த கண்ணாடி சுவர் அருகே நின்று கொண்டு கீழே அவந்திகா காரில் செல்வதை பார்த்த ரேவந்த்,
” இன்னிக்கு முதல் நாள் அதனால போனா போகட்டும்னு உன்னை சும்மா விட்டேன்.. நாளைக்கு இருக்குடி உனக்கு.. நான் கொடுக்கிற வேலையில நீ ஏன்டா என்கிட்ட மோதுனோம்னு நினைப்ப பாரு..” என சபதம் ஏற்றுக் கொண்டவன் அதிரூபனை தேடி சென்று விட்டான் …
மறுநாள் வழக்கம் போல நேரத்திற்கே அவந்திகா அலுவலகத்திற்கு வந்து விட்டிருந்தாள்…
இன்று அவளுடன் அதிரூபன் தான் லிப்டில் ஏறி இருந்தான்… அவனைக் கண்டதும் எப்போதும் உதட்டில் இருக்கும் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் எதிர்கொண்டவள்,
” குட் மார்னிங் சார்..” என்றதும் அவனும்,
“ மார்னிங் அவந்திகா..ஆபிஸ் ஓகேவா உங்களுக்கு ..?”
“யா… கம்ஃபர்டபுலா தான் இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்லை..!”
சரி என்பதோடு முடித்துக் கொண்டான்.. அதன் பின் இருவரும் அவரவர் அறைக்கு சென்று விட்டனர் …
அன்று மதியம் சாப்பிடலாம் என தனது மதிய உணவு பையை எடுத்துக் கொண்டு வெளிவந்த நேரம் அதியமான் அங்கு வந்திருந்தார்…
அவரை கண்டதும் சட்டென முகம் மலர்ந்தவள்,
” பாஸ்…” என்கிற அழைப்போடு அவரை நெருங்கிட.. மகனோடு பேசிக்கொண்டவாறு நின்றிருந்தவர் அவந்திகாவின் அழைப்பில் சட்டென தலை திருப்பி பார்த்து புன்னகையுடன் வளை எதிர் கொண்டார்…
“குட் ஆப்டர்நூன் பாஸ்..” என்றதும்,
” குட் ஆப்டர்நூன்ம்மா… வேலையெல்லாம் எப்படி போகுது..?? உனக்கு எல்லாம் வசதியா இருக்கா..?? முக்கியமா உனக்கு பிடிச்சிருக்கா ..?” என்றதும் மென்மையாய் சிரித்து கொண்டவள்,
” எல்லாமே பிடிச்சிருக்கு பாஸ்.. எனக்கு எது சரின்னு உங்களுக்கு தெரியாதா..?” என அவரை எப்போதும் தனக்கு முன்னுதாரணமாக வைத்திருப்பதால் அவ்வாறு கூறியிருந்தாள் அவந்திகா…
அதில் அவளை கனிவாய் பார்த்த அதியமான்,
” எனக்கு தெரியும் உனக்கு நிச்சயம் இந்க வேலை பார்க்கறது பிடிக்கும்னு ..உனக்கு நிறைய திறமை இருக்கு அவந்திகா… அதை நீ இன்னும் இம்ப்ரூவ் பண்ணிக்கணும் …
உன்னோட திறமை அந்த ஃபேக்டரியோட நின்னுட கூடாது.. அதுக்காக தான் உன்னை நான் இங்க மாத்தினேன்..” என மனதார கூறியவரை நெகிழ்ச்சியாக பார்த்து வைத்தாள் அவந்திகா…
அதிருபன் எதிலையும் தலையிடவில்லை அமைதியாக இருவரையும் பார்த்தவாறு நின்று இருந்தான்.. அப்போது தான் அதியமான் அவள் கையில் இருந்த பையினை பார்த்து விட்டு,
“ லஞ்ச் சாப்பிட போறியா? ”
“ஆமா பாஸ்…” என்றதும்,
” வாம்மா நானும் இன்னிக்கு என் பையன் கூட லன்ச் சாப்பிடலாம்னு தான் வந்தேன்.. நீயும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ..” என்றதும் தயங்கிய அவந்திகா அதிரூபனை ஒரு பார்வை பார்த்து விட்டு,
” இட்ஸ் ஓகே பாஸ்.. நீங்க சார் கூட சாப்பிடுங்க.. நான் கேண்டீன்ல சாப்பிடுகிறேன்..” என்றவளை விடாப்பிடியாக தங்களுடன் சாப்பிடுமாறு அழைத்து வந்து விட்டார்..
அதிரூபனுக்கும் அதில் பெரிதாய் ஆட்சேபனை ஏதும் இல்லாததால் தோள்களை குலுக்கிக் கொண்டு தன் தந்தையுடன் சென்றுவிட்டான்..
அதிரூபனின் அறையில் இருக்கும் மற்றொரு அறையில் உணவு மேசையில் ரேவந்த் அதிரூபனுக்கான மதிய உணவை பொறுப்பாக எடுத்து வைத்து கொண்டு இருந்தான்…
இன்று மதியம் சாப்பிடும் முன்னர் தங்கள் இருவரும் காதலை ஆசே தீர பறிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற நினைப்போடு இதழில் உண்டான ஒருவித மந்தகாச புன்னகையுடன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்து வைத்தான் ரேவந்த்…
ஆசையாக தன்னவனுக்கு காத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதிரூபனை கதவை திறந்து கொண்டு வருவதை கண்ட ரேவந்தின் முகம் பட்டென மலர்ந்தது…
ஆனால் அந்த மலர்ச்சி அடுத்த கணமே காணாது போய் இருந்தது அவனுக்கு அடுத்த வந்த அதியமானை கண்டதும்…அதில் சட்டென முகம் வாடி விட்டது…
அவனது ஏமாற்றத்தை இன்னும் வலு சேர்க்கும் விதமாய் அவர்களுடன் அவந்திகா வருவதை கண்டவனுக்கு முகம் வெந்து போனது…