அடுத்த நாள் இருந்து அர்ஜுனுடன் அவன் நாட்கள் நகர்ந்தன…
ட்ரைவிங் பழகினான்…
அவனுக்கு ட்ரைவிங் பழக்குவதற்குள் அர்ஜுன் நொந்து நூடில்ஸ் ஆகி விட்டான்…
“டேய் மெதுவா போடா”, “இது உன் இடம் இல்லை, சிட்டி”, “ரோட்டை பார்த்து ஓட்டு டா” , “இப்போ கூலிங் க்ளாஸ் போடலன்னா குறைஞ்சிடுவியா என்ன?” என்று தான் அர்ஜுனின் அலறல் தினமும் தவறாமல் இருக்கும்…
எல்லா இடங்களுக்கும் கூடவே அழைத்து சென்றான்…
இருவருக்குமான நெருக்கம் இன்னுமே அதிகமாகிப் போனது.
இப்படியான ஒரு நாளில் தான், இன்ஸ்டாக்ராமில் வெளிநாட்டுக்கு படிக்க சென்ற தனது நண்பனின் புகைப்படத்தைப் பார்த்தான்…
நண்பர்கள் நண்பிகளுடன் புகைப்படங்களாக போட்டு இருந்தான். சுதந்திரமாக அவன் இருப்பது போன்ற உணர்வு நவநீதனுக்கு உருவானது…
‘வாழுறான் டா’ என்று நினைத்தவன் இப்போது எல்லாம் பெண்களுக்கு ஹாய் மெசேஜ் அனுப்பவே பயந்து போனான்…
‘ஹாய் சொன்னாலும் என் பேரை எழுதி வச்சுட்டு தூக்குல தொங்கிடுங்க, இதுங்கள நம்ப முடியாது’ என்று நினைத்துக் கொண்டவனுக்கு இயல்பான ஹார்மோன்களின் ஆர்ப்பாட்டங்கள் அதிகமாகவே இருந்தன… கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்…
அந்த வயதுக்கே உரிய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அவனுக்குள்…
எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டே இருப்பதால் ஒரு வித விரக்தி இப்போதெல்லாம்…
எங்கே போனாலும் அவனுக்கு பின்னே ஒருத்தன் நிற்பான்…
ஃபக்டரி போனால் விஜய் நிற்பான், இங்கே வந்தால் அர்ஜுன் நிற்பான், வீட்டில் மொத்த பேரும் நிற்பார்கள்…
தனிமை அவனுக்கு தேவை… இந்த கண்காணிப்பே இல்லாத ஒரு சூழலில் கொஞ்ச நாட்கள் இருக்க மனம் ஏங்கியது.
‘இங்கயே இருந்தா என்னை ஒருத்தி கிட்ட பிடிச்சு கொடுத்து, அவங்க கண்காணிப்புல வாழ விட்ருவாங்க, அப்புறம் எப்போவும் சுதந்திரமா இருக்கவே முடியாது ‘ என்று நினைத்தவனோ, லாப்டாப்பை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வெளிநாட்டு யூனிவேர்சிடிகளுக்கு எம் பி ஏ படிக்க விண்ணப்பங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டான்… ஓரிரு மாதங்கள் கழிய, அவனுக்கு அவுஸ்ரேலியா யூனிவெர்சிடியில் இருந்து பதில் வந்து இருந்தது…
ஆம் அங்கே அவனுக்கு இடம் கிடைத்து விட்டது…
“எஸ்” என்று வானுக்கும் பூமிக்கும் துள்ளியவன் ஹாலுக்குள் செல்ல, அங்கே இருந்த பார்த்தீபனோ, “சாப்பிடலையாடா?” என்று கேட்டார்.
“இல்ல மாமா, எனக்கு அவுஸ்ரேலியாவில எம் பி ஏ படிக்க கிடைச்சு இருக்கு, ஊருக்கு கிளம்பி, அப்பா கிட்ட விஷயத்தை சொல்லணும்” என்றான்…
“அட நல்ல விஷயமாச்சே” என்று சந்தோஷப்பட்ட பார்த்தீபனுக்கு தான் அவனைப் பற்றி தெரியாதே. கஜனின் தம்பி என்பதால் அப்படியே நினைத்து விட்டார் போலும்…
அந்த வீட்டில் இருக்கும் க்ரூப்பில் டூப்பு அவன் என்கின்ற ரகசியம் அர்ஜுனுக்கு மட்டுமே தெரியும்…
அங்கே வந்த அர்ஜுனோ, “டேய் என்னடா? ஃபாரின் போய் படிக்க போறியா? இது புதுசா இருக்கே, நம்ம லிஸ்ட்லேயே இல்லையே” என்று அவனை மேலிருந்து கீழ் சந்தேகமாக பார்க்க, “மச்சான், ஒருத்தன் படிக்க போறான்னா சந்தோஷப்படுங்க இப்படி சந்தேகப் படாதீங்க” என்றான்…
அர்ஜுனோ, “டேய் என் அப்பாவுக்கு உன்னை பத்தி சரியா தெரியாம இருக்கலாம், ஆனா எனக்கு நல்லாவே தெரியும்” என்றான்.
“மச்சான் நிஜமாவே படிக்க தான் போறேன்” என்று சொன்னவனுக்கு சிரிப்பும் வந்து விட, சிரிப்பை அடக்கிக் கொண்டே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்…
அர்ஜுனோ, “படிக்க போறியா இல்லையான்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது” என்று சொல்ல, அங்கே வந்த ராகவியோ, “டேய் அவுஸ்ரேலியா போக போறியா என்ன?” என்று கேட்டாள்.
“ம்ம் ஒரு வருஷம் தான். எம் பி ஏ” என்றான்.
அர்ஜுனோ, “முதல் உன் அப்பாவும் அண்ணாவும் விடுறாங்களான்னு பாரு” என்று சொல்ல, “அதுக்கு தான் இப்போவே கிளம்ப போறேன்” என்று நவநீதன் சொன்னான்.
அர்ஜுனோ, தனது அடுத்த கார் சாவியை நீட்டியவன், “தனிய டிரைவ் பண்ணி போய் என் மானத்தை காப்பாத்து” என்று சொல்ல, நவநீதனும் சிரித்தபடி கார் சாவியை வாங்கியவன், ஆரண்யனுக்கும் அகல்யாவுக்கும் முத்தமிட்டு விட்டு, எல்லோரிடமும் சொல்லி விட்டு, கிளம்பி விட்டான்.
அவன் காரை தனியாக ஓட்டி வந்து இருக்க, காரில் இருந்து இறங்கியவனை ஆச்சரியமாக பார்த்த ராம்குமாரோ, “பெரியப்பா, இன்னைக்கு இடியோட மழை தான்” என்றான்.
“அப்படியா? நியூஸ் ல அப்படி சொல்லலையே” என்று சொல்லிக் கொண்டே சக்திவேல் வெளியே வர, “நவா தனியா கார் ஓட்டி வந்து இருக்கான் ல” என்றான் ராம்குமார் சிரித்துக் கொண்டே…
சக்திவேலோ, “வாடா, இப்ப தான் வீட்டுக்கு வர தோனிச்சா?” என்று கேட்க, அவனுக்கோ இதனை எப்படி சொல்வது என்று சங்கடம்…
இதே சமயம், “சித்தப்பா, எனக்கு என்ன வாங்கி வந்தீங்க” என்று யாழினி கேட்டு அவன் கவனத்தை திருப்ப, “அவசரமா வந்ததுல மறந்துட்டேன் குட்டி, ஈவினிங் ஏதும் வாங்கி தர்றேன்” என்று அவளுடன் பேசி விட்டு, உள்ளே வந்தவனோ, “அப்பா கொஞ்சம் பேசணும்” என்றான்.
“என்னடா?” என்று கேட்டார் சக்திவேல்…
குரலை செருமிக் கொண்டே, “எம் பி ஏ படிக்க போறேன்” என்றான்.
“நல்ல விஷயம் தானே, நம்ம காலேஜ்” என்று ஆரம்பிக்க, “இங்க இல்ல, அவுஸ்ரேலியாவுல, சீட் கிடைச்சு இருக்கு, ஒரு வருஷ கோர்ஸ்” என்று அவசரமாக முடித்து இருக்க, “என்னது? வெளிநாடா? அதெல்லாம் தேவை இல்லை, இங்கயே படி” என்று சொல்லிக் கொண்டே, முதல் முட்டுக் கட்டையுடன் வந்து நின்று இருந்தார் துளசி…
நவநீதனோ, “அம்மா எடுத்ததுமே இல்லன்னு சொல்லாதீங்க” என்று ஆரம்பிக்க, “அங்கே போய் என்னடா செய்ய போற? இங்க படிக்கவா இடம் இல்ல?” என்று கேட்டார் சக்திவேல்…
அப்போது தான் கஜன் வீட்டுக்கு வந்திருக்க, நவநீதனோ, “அண்ணா, அவுஸ்ரெலியாவுக்கு படிக்க போக சான்ஸ் கிடைச்சு இருக்கு, அப்பா விடுறார் இல்ல” என்று அவனிடம் வந்து நிற்க, அவனோ, “அங்கே போய் என்ன செய்ய போற? இங்கயே படி” என்றான்…
அவனை சின்ன பையனாகவே பார்த்தவர்களுக்கு சட்டேன்று தனியே தூர இடத்துக்கு அனுப்ப விருப்பம் இல்லை…
அவனுக்கோ கோபம் வந்து விட்டது…
“எப்போ பார்த்தாலும் இப்படி தான்… எனக்குன்னு ஒரு சுதந்திரமே இந்த வீட்ல இல்லை… என்னை யாராவது வெள்ளக்கார குடும்பத்து கிட்ட தத்து கொடுத்து விடுங்க” என்று திட்டிக் கொண்டே மாடியேறி சென்றான்.
ராம்குமாரோ, “இந்த வயசுல யாரும் தத்து எடுத்துக்க மாட்டாங்க” என்று சொல்ல, “உங்களுக்கு என் ஃபீலிங்ஸ் எல்லாமே கிண்டல் தான்” என்று அவனுக்கும் திட்டி இருந்தான்.
சக்திவேலோ, “வந்ததுமே ஆரம்பிச்சுட்டான்” என்று சலித்துக் கொள்ள, கஜனோ, “அம்மா இன்னைக்கு ஆடு சமைச்சிடுங்க, நவா வந்திருக்கான் ல” என்று சொல்லி விட்டு வாசலுக்கு சென்றவன், “இது அர்ஜுன் வண்டி தானே” என்று அங்கே நின்ற ராம்குமாரிடம் கேட்டான்.
“ம்ம் அவனே ஓட்டி வந்தான்” என்று ராம்குமார் சொல்ல, “பரவாயில்லையே, அர்ஜுன் நல்லா ட்ரெயின் பண்ணி இருக்கான், நம்மளால முடியாத ஒன்னை அவன் செஞ்சு இருக்கான்” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்ட கஜன் கண்ணில், மணலில் கால் புதைய நடந்து திரிந்த அவனது ரெட்டையர்கள் தான் தென்பட்டார்கள்…
எல்லோருடைய குழந்தைகளும் அங்கே தான் விளையாடிக் கொண்டு இருக்க, ராம்குமாரோ, “ரெண்டு பேரும் பெலேன்ஸ் ஆஹ் நடக்க பழகிட்டானுங்க” என்று சிரித்தபடி சொல்ல, “அவனுங்க அக்கா தான் இனி பாவம்” என்று சொல்லிக் கொண்டே யாழினியை பார்த்தான் கஜன்…
அவளோ, “அங்க ஓடாதடா, இங்க ஏன் ஏண்டா போற?” என்று இரட்டையர்களை பார்த்துக் கொண்டது மட்டும் அல்லாமல், ராம்குமாரின் மகனின் பின்னாலும் ஓடித் திரிந்தாள்.
“நெக்ஸ்ட் ஜெனரேஷன் காட் மதர்” என்று சொல்லி ராம்குமார் சிரிக்க, அங்கே வந்த சுகானாவிடம், “சித்தி சும்மா தானே இருக்கீங்க, சீக்கிரம் வாங்க, என்னாலே எல்லாரையும் பார்த்துக்க முடியல, எவ்வளவு வேலையை தர்றீங்க” என்று சலித்துக் கொள்ள, “ஹெலோ, நீயா பார்த்துக்கிறேன் பார்த்துக்கிறேன்னு தூங்கிட்டு இருந்தவனை தூக்கிட்டு வந்துட்டு, இப்ப எனக்கு திட்றியா?” என்று கேட்டபடி சுகானா அவ்விடம் செல்ல, அவளோ கண் சிமிட்டி சிரித்துக் கொண்டாள்.
அதனை தொடர்ந்து, எல்லோரும் வேலைக்கு கிளம்பி விட்டார்கள்…
நவநீதன் மொட்டை மாடியில் அமர்ந்து இருந்தான் தவிர, யாருடனும் பேசவில்லை…
துளசி சாப்பிட கூப்பிட்டார்.
“என்னை தனியா விடுங்க” என்று திட்டினான்…
“சண்டியர் மச்சான், அவன் சாப்பிட கூப்பிட்டாளே திட்றான், என்னன்னு கேளுங்க” என்று சொல்ல, “அப்படியே நான் சொன்னதும் கேட்டுட்டு தான் உன் புள்ள மறுவேலை பார்ப்பான் பாரு” என்று சொன்ன சக்திவேலும் மதியழகன் மற்றும் தயாளனுடன் அவர்களது பங்காளி ஒருவரின் விசெஷத்துக்கு கிளம்பி விட்டார்…
“என் கதையை இங்க யாருமே கேக்கிறது இல்லை” என்று துளசி புலம்பி விட்டு ஜெயந்தியைப் பார்க்க, “நான் சொன்னா அவன் கேட்கவே மாட்டான், விஜயா சொன்னாலும் கேட்க மாட்டான்” என்று சொன்னவளோ, அங்கே வந்த பல்லவியைப் பார்த்து, “பல்லவி சொன்னா மட்டும் கேட்டுப்பான்” என்றார்.
அவளும் அப்போது தான் கல்லூரியில் இருந்து வந்தவள், “என்னாச்சு அத்தை?” என்று கேட்க, ‘நவா வந்து இருக்கான்” என்றார் துளசி…
“அப்படியா? எங்க ஆள காணோம்?” என்று கேட்க, “மொட்டை மாடில வெயிலில உட்கார்ந்துட்டு இருக்கான், சாப்பிட வர்றான் இல்லை, அவனுக்காக ஆடு அடிச்சு குழம்பும் வச்சு இருக்கேன்” என்றார் துளசி சோகமாக…
“என்னாச்சு அவனுக்கு?” என்று கேட்டுக் கொண்டே பல்லவி மாடியேற, ஜெயந்தியோ, “அவுஸ்ரேலியாவுக்கு படிக்க போறானாம்னு காலைல கேட்டான். யாரும் விடல, கோச்சுக்கிட்டான், அவனை வெள்ளக்கார குடும்பத்து கிட்ட தத்து கொடுக்கட்டாம்னு சொல்லிட்டு இருக்கான்…” என்றாள் விஜயா..
“ஓஹ்” என்று மென் சிரிப்புடன் சொல்லிக் கொண்டே மொட்டை மாடிக்கு பல்லவி செல்ல, அங்கே உச்சி வெயிலில் நாடியில் கையை வைத்தபடி அமர்ந்து இருந்தான் நவநீதன்.
“என்னடா இங்க இருக்கிற?” என்று கேட்டுக் கொண்டே பல்லவி வர, “என்னை தனியா விடுங்க அண்ணி” என்று சொன்னபடி முகத்தை வேறு பக்கம் திருப்பி இருந்தான்.
அவன் அருகே வந்து அவள் அமர, “நீங்க ஏன் வெயில்ல இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே, அவளைப் பார்க்க, “நீயும் தானே இருக்கிற, சரி அந்த நிழலில உட்கார்ந்து பேசலாம்” என்று சொல்லி அவள் நிழலுக்குள் செல்ல, அவனும் சென்றான்…
அங்கே இருந்த சீமெந்து கட்டில் நவநீதன் அமர்ந்து கொள்ள, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்ட பல்லவியோ, “என்னடா பிரச்சனை? சொன்னா தீர்த்து வைக்க முடியுமான்னு பார்க்கிறேன்” என்றாள்.
“நீங்க அண்ணாவுக்கு தானே சப்போர்ட்” என்றான் அவன்…
“அப்படி எல்லாம் இல்லை, நீ பிரச்சனையை சொல்லு” என்றாள்.
அவளைப் பார்த்தவனின் கண்கள் ஒரு மாதிரி கலங்கி விட்டன…
“எனக்கு அவுஸ்ரேலியா போகணும், அங்க படிக்கணும்” என்றான்…
அவனை மேலிருந்து கீழ் பார்த்தவளோ, “படிப்புல அவ்ளோ ஆர்வமா நவா?” என்று கேட்டாள்…
“பார்த்தீங்களா? நீங்களும் கிண்டல் பண்ணுறீங்க??” என்று சொல்லிக் கொண்டே அவன் எழுந்து கொள்ள, “சாரி சாரி, நீ உட்காரு, நான் கிண்டல் பண்ணல, உன்னை தனியா விடுறத்துக்கு இஷ்டம் இல்லை போல” என்றாள்…
“அது தான் ஏன்?” என்றான் அவன்…
“உன் மேல விருப்பம் டா” என்றாள் அவள்…
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று சொல்ல, “விருப்பம் இல்லன்னு எப்படி சொல்லுவ, கைக்குள்ள வச்சு பார்த்துக்கிறாங்க தானே, உன் தலையில எந்த சுமையும் இல்லை… உன் வயசு பசங்க எல்லாரும் எவ்ளோ கஷ்டத்துல இருக்காங்க, நீ கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கிறாங்க, அதுல என்னடா தப்பு?” என்று அவள் கேட்க, “ஐயோ அண்ணி, அது தான் பிரச்சனையே… எனக்கு கொஞ்சம் தனியா இருக்கனும்… எனக்கு இதுக்குள்ள இருக்க கஷ்டமா இருக்கு, கொஞ்ச நாள் எனக்காக தனியா வாழ ஆசைபடுறேன்… நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை, ஆனா எல்லாரும் என்னை அப்படி தான் பார்க்கிறாங்க” என்று சொன்னவனுக்கு கண்களில் இருந்து நீர் விழுந்து விடும் போல இருந்தது…
அவன் மனம் அழுத்தமாக இருக்கின்றது என்று பல்லவிக்கு புரிந்தது…
அதீத கவனிப்பும் கட்டுப்பாடும் அவனுக்கு பிடிக்கவில்லை…
சின்ன பிள்ளையாகவே வீட்டில் எல்லோரும் பார்த்துப் பழகி விட்டார்கள்…
ஆளுமை நிறைந்த வீட்டில் அவன் பேச்சு சபை ஏறாது தானே…
அவளும், “சரி நான் உன் அண்ணா கிட்ட பேசுறேன், நீ சாப்பிட வா” என்றாள்…
“இல்ல பசிக்கல” என்று சொல்ல, “சாப்பிடாம இருந்தா போல எல்லாம் சரி ஆயிடுமா?” என்று பல்லவி கேட்க, அவனுக்கு ஏனோ பல்லவியை மீறி பேச தோன்றவில்லை…
“சரி வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே, அவன் வர, அவனை அமர வைத்து, அவளே சாப்பாடு போட்டு கொடுத்தாள்…
சாப்பிட்டு விட்டு அவன் அறைக்குள் நுழைய, அவளும் பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அன்று இரவு குளித்து விட்டு வந்த கஜனோ, அங்கே படுக்கை விரிப்பை விரித்துக் கொண்டு இருந்த பல்லவியின் இடையை பற்றி கழுத்தில் முகம் புதைக்க, அவளோ, “கஜன்” என்று சொல்லிக் கொண்டே, அவனை நோக்கி திரும்ப, அவள் முகத்தை தாங்கி, இதழில் இதழ் பதித்து முத்தமிட ஆரம்பித்து விட்டான்…
சட்டென உருகிக் குழையப் போன மேனியை கட்டுக்குள் கொண்டு வந்தவளோ, அவன் மார்பில் கையை வைத்து விலக்கிக் கொள்ள, “என்னடி?” என்றான் அவன் மோகமாக…
“பேசணும்” என்றாள் அவள் அவனையே பார்த்துக் கொண்டே, “இப்போ தான் பேசணுமா? இன்னைக்கு தான் நம்ம வாரிசுங்க எல்லோரும் அம்மா கூட பிரச்சனை பண்ணாம போய் தூங்கி இருக்காங்க, இந்த நேரத்துல என்னடி?” என்றான்…
அவளோ, “அது தான் நைட் முழுக்க டைம் இருக்குல்ல, நான் நவா பத்தி பேசணும்” என்றாள்.
“சரி பேசலாம்” என்று சொல்லிக் கொண்டே, கட்டிலில் அமர்ந்தவன், அவளை இழுத்து மடியில் அமர வைக்க, “இப்படி இருந்தா எனக்கு பேச வராது” என்றபடி விலகி இருந்தாள்…
“ரொம்ப தான் டி பண்ணுற” என்று சொன்ன கஜனோ, “ம்ம், சொல்லு, என்ன சொன்னான்?” என்று கேட்க, “அவன் ஆசைப்பட்ட போல படிக்க அனுப்பலாமே, ஒரு வருஷம் தானே” என்றாள்.
“அம்மா ஏங்கி போயிடுவாங்க பல்லவி, அவன் உன்னோட வீட்டுக்கு போனதுக்கே, எப்போ வருவான்னு கேட்டுட்டே இருந்தாங்க, அத மறந்துட்டியா? எனக்கு அவன் படிக்க போறதுல ஒன்னும் இல்லை, அவங்களுக்காக தான் பார்க்கிறேன்” என்றான்.
“ஆனா அவன் ரொம்ப ஸ்ட்ரெஸ் ல இருக்கான் கஜன், இன்னைக்கு அழுதான் தெரியுமா?” என்று கேட்க, “என்ன அழுதானா?” என்று கேட்டான் கஜன் அதிர்ச்சியாக…
“ம்ம், அவன் வயசுக்கு அவன் கொஞ்சம் சுதந்திரமா இருக்க, ஆசைப்படுறான்” என்று சொல்ல, கஜனோ, “இங்க அவனுக்கு என்ன சுதந்திரம் இல்ல?” என்று கேட்டான்…
அவனை மேலிருந்து கீழ் பார்த்தவளோ, “மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, அத பார்த்து பண்ணு, இத பார்த்து பண்ணுன்னு, அவனை ஓவர் ப்ரொடெக்ட் பண்ணுறீங்க எல்லாரும்… அவனுக்கு அது கஷ்டமா இருக்கு” என்றாள்…
கஜனிடம் பெருமூச்சு, “ம்ம்” என்றான்…
“ஒரு வருஷம் அவன் ஆசைப்படி இருக்கட்டுமே” என்று சொல்ல, கஜனும், “ம்ம், நீ சொல்றதும் சரி தான், நான் அப்பா கிட்ட பேசுறேன்” என்று அவன் சொல்ல, அவளோ மென் புன்னகையுடன், “நான் இப்போ உங்க மடியில உட்காரட்டுமா?” என்று கேட்டாள்…
அவனும் சிரித்துக் கொண்டே, “உன் பாரத்தை என்னால தாங்க முடியாது” என்றான்…
“அப்போ?” என்று அவள் விழி விரித்து கேட்க, “என் பாரத்தை நீ தாங்குடி” என்று சொல்லிக் கொண்டே, அவள் இதழ்களை சிறை செய்து இருந்தான்.