அத்தியாயம் 8
இப்படியே நாட்கள் நகர, மோகினி தனது வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தினாள்.
ஆங்காங்கே ராவணன் மீதுள்ள பாசம் காரணமாக, ஊர் மக்கள் ஏதும் குழப்பம் செய்வார்கள் தான்…
எல்லாவற்றையும் சமாளிக்கவும் செய்தாள் அவள்…
இதனிடையே அவள் கருவில் அவன் குழந்தையும் வளர ஆரம்பித்தது…
ராஜதுரைக்கு அவள் மீது ஆத்திரம் இருந்தாலும், அவள் குழந்தையை கலைக்காமல் பெற்றுக் கொள்ள நினைத்தது அவள் மீதான பார்வையை கொஞ்சமாக மாற்றியது…
கொஞ்சமாக தான், மொத்தமாக கோபம் குறைந்து எல்லாம் விடவில்லை…
நான்கு வருஷம் அவர் வளர்த்த ஒருவனை உள்ளே வைத்து விட்டாளே, அந்த கோபம் அவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விடுமா என்ன?
இப்படியான ஒரு நாளில், தோட்டத்தில் இருந்து வந்த ராஜதுரையோ, வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருந்த ஜெகனிடம், “போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு போயிடலாம் டா” என்றார்.
“ஏன் ஐயா?” என்று கேட்டவனிடம், “சொல்றத கேளு டா” என்று சொல்ல, வண்டியும் போலீஸ் நிலையம் முன்னே நிறுத்தப்பட்டது…
ராஜதுரையும் ஜீப்பில் இருந்த பை ஒன்றை எடுத்தவர், வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டே போலீஸ் நிலையம் உள்ளே நுழைந்தவர், விறு விறுவென மோகினியின் இருக்கை முன்னே வந்து அமர்ந்து விட்டார்…
மோகினியோ, “என்ன விஷயம்? ஏதும் காம்ப்லைன்ட் கொடுக்க வந்திருக்கீங்களா?” என்று கேட்க, “கொடுக்கிறதுன்னா உன் மேல தான் கொடுக்கணும், நான் அதுக்கு வரல” என்று சொல்லிக் கொண்டே மேசையில் பையை தூக்கி வைக்க, அதனை புரியாமல் பார்த்தாள் பெண்ணவள்…
உள்ளே மாங்காய்கள் இருந்தன.
“இது எதுக்கு?” என்று கேட்டாள்.
“வாய்க்கு புளிப்பா தேவைப்படும் சாப்பிடு” என்று சொல்லி விட்டு எழ, “இதெல்லாம் எனக்கு வேணாம் எடுத்துட்டு போங்க” என்றாள்.
“எனக்கு வேணாம்னு சொன்னா கோபமா வரும், சாப்பிடு” என்று மிரட்டலாக சொல்லி விட்டு செல்ல, அங்கே நின்ற விசாலாட்சியோ, “என்ன மேம் உங்களையே மிரட்டிட்டு போறார்” எனறு கேட்டார்.
மோகினியோ சலிப்பாக தலையை இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே, “இத நீங்களே ஸ்டேஷன் ல இருக்கிறவங்களுக்கு கொடுத்து சாப்பிடுங்க” என்று சொல்ல, விசாலாட்சியும் அதனை எடுத்துக் கொண்டு சென்றார்.
சற்று நேரத்தில் மாங்காய் வெட்டிய துண்டுகளும், உப்பும் மோகினியின் மேசைக்கும் வந்து சேர்ந்தது…
வேண்டாம் என்று சொல்ல நினைக்கின்றாள் தான், ஆனால் மசக்கையால் என்னவோ சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசை தோன்றுவதை தடுக்க முடியவில்லை…
அதனை வாங்கி சாப்பிட்டவள் மனமோ, ‘சாப்பாடுன்னா இந்த சூடு சொரணை எங்க போகுதோ தெர்ல’ என்று தனக்கு தானே திட்டியும் கொண்டாள்…
இதே சமயம், வீட்டுக்கு வந்த ராஜதுரையிடம், “போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போனீங்களாம்னு கேள்விப்பட்டேன், என்னவாம் மகராசி?” என்று கேட்டார் மீனாட்சி…
“அதுக்குள்ள விஷயம் வந்துடுச்சா என்ன? என்ன தான் இருந்தாலும், அந்த குழந்தையை சுமந்து பெற யோசிச்சா பாரு, அதுக்காகவே கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாம்னு தோணுது” என்று அவர் சொல்லி விட்டு செல்ல, மீனாட்சி கொஞ்சமாக அந்த வார்த்தைகளுக்கு பின்னே யோசிக்க ஆரம்பித்து விட்டார்…
நாட்களும் இப்படியே நகர, ஐந்து மாத கருவை தான் சுமந்து கொண்டு இருந்தாள் மோகினி…
இப்போதெல்லாம் போலீஸ் யூனிஃபோர்ம் அணிவது இல்லை. சுடிதார் தான் அணிவாள்…
விசாலாட்சியுடன் சந்தைக்கு வந்திருந்தாள்.
ரெண்டு நாட்களில் விசாலாட்சியின் மகன் ரிஷி, மருத்துவ படிப்பை முடித்து விட்டு இன்டெர்ன் ஆக வேலை செய்ய அந்த ஊருக்கு வர இருக்கின்றான்…
அவனுக்கு சமைத்து போடவே, இறைச்சி, காய் கறிகளை வாங்க வந்திருந்தார்கள்…
மோகினியோ, “அவனுக்கு ஆட்டுக்கறி தானே பிடிக்கும், அதயே வாங்கிடலாம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, “ஐயோ கோழி ஈரல் கொடுங்க” என்று சொன்னபடி ஒருத்தி…
எங்கேயோ கேட்ட குரல் என்று சட்டென திரும்பி பார்த்தாள் மோகினி…
இடையில் குழந்தையை வைத்துக் கொண்டு நின்று இருந்தது வேறு யாருமல்ல காந்தா தான்…
அவள் மகன் ஆதவ்வை கைக்குழந்தையாக தூக்கியது…
இப்போது இடையில் வைக்கும் அளவுக்கு வளர்ந்து இருந்தான்…
மோகினியை பார்த்து பொக்கை வாயை திறந்து சிரிக்க, மோகினியின் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை…
காந்தாவோ, “என்னடா அங்க பார்த்து சிரிக்கிற, இந்த பக்கம் பாரு” என்று மகனின் முகத்தை திருப்பி விட, “சின்ன குழந்தை டி” என்றாள் மோகினி…
“ஆஹ் அதுக்கு எங்களுக்கு தெரியும்” என்று அவளை பார்த்து கடுப்பாக சொல்லி விட்டு காந்தா முகத்தை திருப்பிக் கொள்ள, “சரி கொடு தூக்கிட்டு கொடுக்கிறேன்” என்று மோகினி கையை நீட்ட, “இல்ல மாட்டேன்” என்றபடி காந்தா ரெண்டடி தள்ளி நின்றாள்.
மோகினிக்கு சிரிப்பு தான் வந்தது…
அவளுக்கு ராவணனை தானே பிடிக்காது, மற்றும் படி யார் மீதும் எந்த கோபமும் இல்லையே…
“ரொம்ப பண்ணாம கொடு டி” என்று திட்டியபடி, அவளிடம் இருந்து குழந்தையை வாங்க காந்தாவும் பெரிதாக அவனை பற்றி பிடிக்கவில்லை…
ஆதவ்வும் சட்டென மோகினியுடன் ஒட்டிக் கொள்ள, “எப்படி டா இருக்க?” என்று அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்து விட்டாள் மோகினி…
“இதெல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா அண்ணன்னு வந்தா மட்டும்” என்று காந்தா இடையில் ஜாடை பேச, “இது குழந்தை, அவன் கொலைகாரன்” என்று பதில் கொடுத்த மோகினி, மீண்டும் குழந்தையை காந்தாவிடம் கொடுத்தவள், “நேரம் இருந்த குவாட்டர்ஸ் பக்கம் வா, அண்ணன் நொண்ணன்னு பேசாத, எனக்கு அவன் மேல மட்டும் தான் கோபம், உங்க யார் மேலயும் எந்த கோபமும் இல்ல” என்று சொன்னவள், விசாலாட்சியுடன் நகர, அவள் முதுகை புரியாமல் திரும்பி பார்த்தாள் காந்தா…
அன்று இரவு குழந்தையை தூங்க வைத்து விட்டு, ஜெகனின் கைவளைவில் படுத்துக் கொண்டே, மோகினியை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தாள்…
“இது என்ன போங்கா இருக்கு, ஆடு பகை குட்டி உறவாமா? அவனை பிடிக்காது, ஆனா நாங்க தோஸ்தாமா?” என்று ஜெகன் கேட்க, “எனக்கும் அவளை புரிஞ்சுக்கவே முடியல” என்றாள்…
“அவ வீட்டுக்கு போறது பிரச்சனை இல்லை, ஆனா பார்த்து பழகு டி, எங்கயும் கேமரா வச்சு இருக்க போறா” என்று சொல்ல, “எனக்கு கேமெரா வச்சு என்ன பயன்?” என்று சலிப்பாக கேட்டாள் காந்தா…
இப்படியே இரு நாட்கள் கடந்து இருக்கும், மோகினியின் வீட்டில் ஒரே தடல் புடலாக இருந்தது…
ரிஷி வந்து விட்டானே, அதன் பிறகு கேட்கவும் வேண்டுமா?
விதம் விதமாக சமைத்து, அவனுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தார்கள் விசாலாட்சி மற்றும் மோகினி…
“இவ்ளோ சாப்பிட்டா என்னோட ஹெல்த் என்னதுக்கு ஆகுறது?” என்று அவன் சலிக்க, “இளந்தாரி பையன் டா, நிறைய சாப்பிட்டா தானே ஓடி ஆடி விளையாடலாம்” என்றார் விசாலாட்சி…
“நான் என்ன ஹாஸ்பிடல் ல ஓடி ஆடியோ விளையாட போறேன்?” என்று கேட்டவனோ, “அக்கா நீங்களும் சாப்பிடுங்க, பேசிட்டே சாப்பிடலாம்” என்றான்.
மோகினியும் சிரித்தபடி அமர்ந்து உணவை தட்டில் எடுத்து வைத்து சாப்பிட, “கேக்கிறேன்னு கோச்சுக்காதீங்க” என்று இழுத்தான்.
“டேய் கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியா?” என்று விசாலாட்சி அதட்டினார்…
“அவனை விடுங்க, என்ன கேக்கிறான்னு பார்ப்போமே” என்று சொல்லி விட்டு, மோகினி அவனை புருவம் சுருக்கி பார்க்க, “குழந்தையை கலைக்காதது எனக்கு சந்தோசம் தான், ஆனா உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?” என்று கேட்டான்.
மோகினியோ, “எனக்கு குழந்தை வேணும் அவ்ளோ தான், கல்யாணம் பண்ணிக்க இப்போ தோணல, தோணுற போது நானே சொல்றேன், எனக்கு மாப்பிள்ளை பாரு” என்று அவன் வாயை ஒரே வார்த்தையில் அடைத்து விட, “இதுக்கு மேல நான் என்ன பேசுறது?” என்று சலித்துக் கொண்டான் அவன்…
அவன் ஹாஸ்பிடலில் அடுத்த நாளே ஜாயின் பண்ணி இருக்க, பெரிதாக எந்த பிரச்சனையும் அங்கே உருவாகவில்லை…
அவரவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்…
மோகினிக்கும் வயிறு பெரிதாக தெரிய ஆரம்பிங்க, ஏழு மாத கருவை சுமந்து கொண்டு இருந்தாள்…
அன்று வெள்ளிக்கிழமை, நீல நிற மெட்டர்னிட்டி உடை அணிந்து தான் ஸ்டேஷனுக்கு புறப்பட்டு இருந்தாள் பெண்ணவள்.
அவளது வண்டி ஸ்டேஷன் வாசலில் நின்ற சமயம், அங்கே நிறைய பேர் வந்து இருப்பது போன்ற உணர்வு…
“என்ன பிரச்சனை முருகன்?” என்று கேட்டுக் கொண்டே அவள் இறங்கி ஸ்டேஷன் உள்ளே சென்றவளுக்கு மயக்கம் வராத குறை தான்…
ஊரையே அழைத்துக் கொண்டு வந்திருந்தது வேறு யாருமல்ல, ராஜதுரை மற்றும் மீனாட்சி தான்.
கூடவே, நீலா, ஜெகன், காந்தா, அவர்களது பையன் என்று எல்லாருமே வந்திருந்தார்கள்…
கையில் ஆளாளுக்கு தாம்பூல தட்டுகள் வேறு…
அவள் இருக்கையில் பூ அலங்காரம் எல்லாம் செய்து இருக்க, மோகினிக்கு கடுப்பாகி விட்டது…
“இதுக்கெல்லாம் யார் அல்லவ் பண்ணுனது?” என்று சீறிக் கொண்டே உள்ளே வர, அங்கே நின்றவர்கள் கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.
“எனக்கு எல்லாம் அனுமதி யாரும் கொடுக்க தேவையில்லை” என்று அங்கே கால் மேல் கால் போட்டு இருந்த ராஜதுரையிடம் இருந்து பதில் வந்தது…
கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டே, “உங்களுக்கு என்ன சார் வேணும்?” என்றாள் நிதானமாக…
“ஆஹ், வளைகாப்பு பண்ணனும்?” என்று சொன்னவரை ஆழ்ந்து பார்த்தவள், “யாருக்கு?” என்று கேட்க, “இங்க நீ மட்டும் தானே மாசமா இருக்க? அப்போ உனக்கு தான்” என்று நேரடியாகவே சொல்லி விட்டார்.
அவளுக்கு ஐயோடா என்று இருந்தது…
“இது போலீஸ் ஸ்டேஷனா இல்ல வேற எதுவுமா?” என்று சீற, “அதெல்லாம் தெரியாதும்மா, உன் வயித்துக்குள்ள இருக்கிறது எங்க வீட்டு பையனோட வாரிசு, இப்போ வளைகாப்பு பண்ண விடலைன்னா, வாசலில உட்கார்ந்து போராட்டம் பண்ணுவோம்” என்க, விசாலாட்சியோ, “வளைகாப்பு தானே மேம், சரின்னு சொல்லிடுங்க, ஈவினிங் கோர்ட்டும் இருக்கு நமக்கு, இவங்க கிளம்ப மாட்டாங்க போல” என்று சொன்னார்.
மோகினிக்கு இவர்களை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை…
எரிச்சலுடன், “சரி பண்ணி தொலைங்க” என்று சொல்ல, “இப்படி லாம் கோபப்பட கூடாது, சிரிச்ச போல அங்கே உட்காரும்மா” என்று அவள் கையை பற்றி அமர வைத்தார் மீனாட்சி…