அத்தியாயம் 9

வீட்டுக்கு வந்ததுமே குளியலறைக்குள் சென்றான் நவநீதன்.

ஷவரை திறந்து விட்டு கீழே நின்றவனுக்கு மேனியில் இன்னும் சிலிர்ப்பு அடங்கவில்லை…

கஷ்டப்பட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டே,  குளித்து விட்டு வந்தவனுக்கு மீண்டும் மீண்டும் அவள் எண்ணம் தான்…

இன்னுமே அந்த முத்தம் இதழ்களில் தேங்கி நிற்கும் உணர்வு…

இதழ்களை நாவினால் வருடியவனோ, தனது அலைபேசியை தேடினான்…

அங்கே இல்லை…

அவள் பைக்குள் வைத்த நினைவு…

வாங்க மறந்து விட்டான்…

‘ஷிட்’ என்று சொன்னவனோ மேலும், ‘சரி நாளைக்கு வாங்கிக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டே படுத்து விட்டான்.

இதே சமயம் குளித்து விட்டு வந்த தனிஷாவின் பைக்குள் இருந்த நவநீதனின் அலைபேசி அலறியது… 

அவள் அவளாகவே இல்லை. 

அவனை பற்றி எதுவுமே தெரியாமல் முத்தம் வரைக்கும் சென்று விட்டாளே…

மனதளவில் அவ்வளவு பலவீனமாகி இருப்பதை நினைத்து தன் மீதே ஆத்திரம்.

அலைபேசி சத்தம் கேட்டதும், “இது என்ன மஜ்னு ஃபோனோட டோனா இருக்கு?” என்று யோசித்துக் கொண்டே பையை திறந்து பார்த்தாள்…

அவன் அலைபேசி தான்…

“கஜன் அண்ணா” என்று விழுந்தது. வீடியோ கால் வந்து கொண்டு இருந்தது…

‘பச், இப்போ என்ன பண்ணுறது?’ என்று யோசித்துக் கொண்டே அலைபேசியை மேசையில் வைத்தாள். 

சற்று நேரத்தில் அடிப்பது நின்றது…

அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாக வேண்டும்…

முத்தம் வரைக்கும் சென்று விட்டாள்…

இதற்கு மேல் அவனை ஆராய்ந்து ஆக வேண்டிய கட்டாயம்…

அவன் அலைபேசியை எடுத்தாள்.

அவன் பாஸ்வேர்டை எதேர்ச்சையாக அவதானித்து இருக்கின்றாள்… 

நினைவில் இருந்தது…

அவன் அலைபேசியினை ஆராய்வது சரியா தவறா என்றும் தெரியவில்லை…

ஆனாலும் அவள் நிலைமை கை மீறி போய் விட்டதே… அவனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, அலைபேசியை அன்லாக் செய்தாள்.

அவன் புகைப்படம் தான் இருந்தது… 

கேலரியை பார்த்தாள்…

அதிலும் அவன் அவுஸ்ரேலியா வந்து எடுத்த புகைப்படங்கள் மட்டும் இருந்தன… 

அர்ஜுன் இங்கே வரும் போது கொடுத்து விட்ட அலைபேசி தானே அது…

இதனை வைத்து அவள் என்ன அறிந்து கொள்ள முடியும்? 

அடுத்து அவனது இன்ஸ்டாக்ராம் அக்கவுன்ட் தான் கண்ணில் பட்டது…

அதனை அழுத்தினாள்…

அவன் அக்கவுன்டிலும் அவன் தான் இருந்தான்… 

“இட்ஸ் மீ என்எஸ்” என்று பெயர் இருந்தது…

முழுப்பெயர் கூட இல்லை.

‘அதென்ன என் எஸ்?’ என்று யோசித்துக் கொண்டே, அவனது மேசெஜ்ஜுகளை திறந்தாள்.

அவ்வளவு தான்…

அவள் தூக்கமே தொலைந்து போனது.

அழுதாள்…

வாய் விட்டு அழுதாள்…

இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை…

அதற்கு மேல் அவள் அதனை ஆராய விரும்பவில்லை…

அவன் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாள்…

இத்தனை பெண்களை காதலித்து இருக்கின்றான்…

சிலரிடம் அந்தரங்கமான கேள்விகளை கூட கேட்டு இருக்கின்றான்…

ஆத்திரமாக வந்தது…

அவன் முத்தம் இப்போது அருவருத்தது…

எத்தனை பேரை முத்தமிட்ட வாயினால் தன்னை முத்தமிட்டு இருப்பான் என்று நினைக்கவே கோபமாக வந்தது…

அவன் பேச்சில் மட்டும் தான் மன்மதன், அவன் நிஜத்தில் முத்தமிட்டதும் கட்டி அணைத்ததும் அவளை மட்டும் தான் என்று அவளுக்கு தெரியாதே…

கற்பனைகள் கண்ட மேனிக்கு ஓட, ‘நாளைக்கு இருக்கு அந்த ராஸ்கலுக்கு’ என்று திட்டியவளுக்கு எப்போது விடியும் என்கின்ற மனநிலை தான்…

ஆனால் இதனை எல்லாம் அறியாமல் தூங்கி எழுந்த நவநீதனோ, “இன்னைக்கு அவ கிட்ட லவ்வை சொல்லிடனும்… இதுக்கு மேல மறைச்சு பயன் இல்லை… அவ பேர் கூட தெரியலையே” என்று முணுமுணுத்தபடி ஆயத்தமானவன் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பூங்கொத்தையும் வாங்கிக் கொண்டான்… 

இதே சமயம் தனிஷாவோ அழுதழுது கண்கள் வீங்கி கேன்டீனின் உள்ளே சாப்பாட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

“ஹாய் லைலா” என்று ஒரு குரல்… 

அவன் தான் என்று தெரிந்தது…

தலையை குனிந்து கொண்டே, பையில் இருந்த அவனது அலைபேசியினை எடுத்து அவன் முன்னே வைத்தாள்.

“வெட்கமா? முகத்தையே பார்க்க மாட்டேங்குற?” என்று கேட்டான்…

‘இப்படி தான் பேசி பேசி எல்லாரையும் மயக்கி இருக்கான்’ என்று நினைத்தவளோ, “கொஞ்சம் வெளிய போய் பேசலாமா?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா” என்று சொல்லிக் கொண்டே, அவன் மென் புன்னகையுடன் எழ அவளும் எழுந்து கொண்டாள்….

அவன் கையில் இருந்த பூங்கொத்தையும் பார்த்துக் கொண்டாள்…

ஒரு வழியாக யாரும் இல்லாத ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்…

விழிகளை சுற்றி நோட்டமிட்டான்…

யாரும் இல்லை.

“யாருமே இல்லை, நேத்து போல இன்னைக்கு ஒரு கிஸ் அடிச்சிட வேண்டியது தான்” என்று நினைத்தவனோ, அவள் அருகே சென்று, பூங்கொத்தை நீட்டினான்…

அவளும் அவனை ஏறிட்டுப் பார்த்தபடி அதனை வாங்க, “ஐ லவ் யூ” என்று சொன்னவன், சற்றும் தாமதிக்காமல் அவள் முகத்தை தாங்கி இதழில் இதழ் பதித்து விட்டான்.

அவளுக்கோ ஆத்திரம்…

பூங்கொத்தை கீழே போட்டவள், அவன் மார்பில் கையை வைத்து, வேகமாக தள்ளிக் கொண்டே, ஓங்கி ஒரு அறை…

அதிர்ந்து விட்டான்..

கன்னத்தை பொத்திக் கொண்டே அவனைப் பார்க்க, “எத்தனையாவது ஆள் டா நான்?” என்று கேட்டாளே பார்க்கலாம்…

“லைலா” என்று அவன் ஆரம்பிக்க, “ஷாட் அப், உன் இன்ஸ்டா பார்த்தேன், எப்படி எல்லா பொண்ணுங்க கூடவும் நூல் விட்டு இருக்கன்னு பார்த்தேன்… ச்சீ இப்படி ஒரு கீழ் தரமான பிறவியா நீ?” என்று சீறினாள்…

“ஏய் மரியாதையா பேசு” என்று அவன் ஒற்றை விரலை நீட்டி மிரட்ட, “பொண்ணுங்கள மயக்கி அவங்க கூட ஜாலியா இருந்து, கழட்டி விடுற பொறுக்கி, உனக்கு எதுக்குடா மரியாதை?” என்றாள்…

அவனோ, ‘நம்ம பண்ணாதது எல்லாமே சொல்றாளே’ என்று நினைத்தவனோ, “என்னோட ஃபோனை ஏன் நீ பார்த்த?” என்று கடுப்பாக கேட்டான்…

“ஓஹோ, இது தான் அப்போ சாருக்கு பிரச்சனையா? பார்த்ததால தான் உன்னை பத்தி தெரிஞ்சது… உன்னை போய் லவ் பண்ணி, இந்த வாய்க்கு போய் நேத்து கிஸ் அடிச்சு இருக்கேன், எத்தனை பேர் மேல வாய் வச்சு இருப்ப நீ?” என்று கேட்டாள் அழுகையுடன்…

அவனோ, ‘என்னை பெரிய லெவல் ல கற்பனை பண்ணிட்டு இருக்கா போல’ என்று நினைத்தபடி, “இங்க பாரு லைலா, நான் கிஸ் அடிச்சது உன்னை மட்டும் தான்” என்று ஆரம்பிக்க, “வர்றே வா, நல்லா பண்ணுற நாடகம்” என்று கையை தட்டினாள்.

“ஹேய், உண்மையா உன்னை எனக்கு பிடிக்கும் டி” என்று சொல்ல, “செருப்பால அடிப்பேன்” என்றாள்…

அவனுக்கு பொறுமை போய் விட்டது…

“உனக்கென்ன பெரிய பேரழகின்னு நினைப்பாடி?? உன்னை விட சூப்பர் பிகரை கல்யாணம் பண்ணி காட்டுறேன் டி…  த்ரிஷா இல்லன்னா திவ்யா, நானும் பார்த்துட்டே இருக்கேன், இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க, என்னை விட ஹாண்டஸம் ஆஹ் ஒருத்தன் கிடைக்கவே மாட்டான்…” என்று அவன் சொன்னதும் ,  “போடா போடா பொறுக்கிப் பயலே… நீ இல்லன்னா மூலைல உட்கார்ந்து அழுவேன்னு நினைச்சியா?? உன்னை விட ஹாண்ட்ஸம் ஆஹ் ஒருத்தனை கல்யாணம் பண்ணி என் வாட்ஸ் அப் டி பி ஆஹ் வைக்கிறேன்..அத பார்த்து நீ ஒப்பாரி வை ” என்று சீறியவள் விறு விறுவென செல்ல, “சரி தான் போடி, உன்ன போல பஜாரி கிட்ட இருந்து நான் தப்பிட்டேன்” என்றான்…

அவளோ நிலத்தில் இருந்த கல்லை தூக்கி ஏறிய, “ஏய் பேச்சு பேச்சா இருக்கனும், பஜாரி” என்று திட்டி விட்டு, அவனும் சென்று விட்டான்…

என்ன தான் சண்டை போட்டாலும் அவளுக்கும் சரி, அவனுக்கும் சரி மனம் ஒரு மாதிரி இருந்தது…

அவளைப் பொறுத்தவரை அவன் பெண்களை மயக்கும் பொறுக்கி…

அதனால், அலைபேசி எண்ணையும் தனது பாதுகாப்புக்காகமாற்றி விட்டாள்…

கேன்டீனுக்கு வருவதையும் நிறுத்திக் கொண்டாள்…

அவனுக்கோ மனம் எல்லாம் ஒரு வித வெறுமை…

கோபத்தை விட்டு அலைபேசிக்கு அழைத்தான்…

பதில் இல்லை…

அவள் உண்மையான பெயர் கூட தெரியாது…

எங்கே சென்று தேடுவது…

வாங்கிய அறை நினைவில் வந்து போனது…

‘அவ வேணாம் நவா, உன்னை வாழக்கை முழுக்க வச்சு அப்புறம் கொடுமை பண்ணுவா’ என்று தன்னை தானே சமாதானப்படுத்தியவனுக்கு அங்கே இருக்கவே இஷ்டம் இல்லை…

சந்தோஷம் தேடி தனியாக வந்தான்…

இப்போது இந்த காதல் வலியில் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது…

பைக்கை விற்றவன், சொல்லாமல் கொள்ளாமல் வந்து இறங்கி விட்டான்…

அன்று அதி காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்த துளசிக்கோ இன்ப அதிர்ச்சி…

“டேய் நவா வந்துட்டியா?” என்று கேட்டு அவனை அணைத்துக் கொள்ள, துளசியின் சத்தம் கேட்டு எல்லோரும் ஹாலுக்குள் வந்து விட்டார்கள்…

நவநீதன் அப்படியே நின்று இருந்தான்…

கஜனோ, “என்னடா? லீவா?” என்று கேட்க, “இல்லை என்று தலையாட்டினான்…

“அப்புறம் என்ன??” என்று சக்திவேல் கேட்க, “அப்போ நான் வந்தது உங்களுக்கு இஷ்டம் இல்லையா?” என்று எகிறிப் பாய்ந்தான்…

“நீ தானே போன? நாங்களா அனுப்புனோம்?” என்று சக்திவேல் கேட்டான்.

“நான் இனி இங்க தான் இருப்பேன்” என்றான்…

கஜனோ, “என்ன தான் டா ஆச்சு?” என்று கேட்க, “உங்கள எல்லாம் மிஸ் பண்ணுறேன்” என்று சொன்னவன் விறு விறுவென அறைக்குள் செல்ல கஜனைப் பார்த்த சக்திவேலோ, “இவனுக்காக தான் அவ்வளவு பணம் கட்டுனியா?” என்று கேட்க, அவனோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பல்லவியைப் பார்த்தான்…

அவளோ, ‘அட நம்ம பக்கம் திரும்புதே’ என்று நினைத்துக் கொண்டே, “எனக்கென்ன தெரியும்?” என்று கேட்டாள்…

“அது சரி, நீயும் என்ன தான் செய்வ?” என்று கேட்டபடி கஜனும் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அறைக்குள் வந்ததுமே குப்பற விழுந்தான் நவநீதன்.

அவள் தனக்கு சரிபட்டு வர மாட்டாள் என்று புரிந்தாலும், கொஞ்சம் ஆழமாக காதலித்து விட்டான் போலும். 

சட்டேன அவள் நினைவுகளில் இருந்து வெளி வரவே முடியவில்லை. 

எதிலும் மனம் லயிக்கவில்லை… ஒரு வித வெறுமை மனதை சூழ்ந்து கொண்டது.

இப்போதும் அவளுக்கு முத்தமிட்ட நினைவுகள் வந்து போக, “ச்ச அவ பேர் கூட தெரியாது” என்று சொல்லிக் கொண்டே தலையணைக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது…

மீண்டும் எழுந்த நேரம் மணி பன்னிரெண்டை கடந்து இருந்தது…

நெட்டி முறித்துக் கொண்டே வெளியே வந்தான்…

அங்கே ஹாலில் அர்ஜுனும் யாழினியும் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார்கள்…

அவன் ஏதோ அவளை கிண்டல் செய்ய, “மாமா” என்று அவள் சிணுங்கிக் கொண்டே இருந்தாள்…

“மச்சான் எப்போ வந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே, நவநீதன் யாழினி அருகே அமர்ந்து அவளை அணைத்து முத்தமிட, “ச்சீ, குளிக்காம பக்கத்துல வராதீங்க, நாறுது, போய் குளிச்சிட்டு வாங்க” என்று அவனுக்கு யாழினி வாயினால் திட்டு விழுந்தது…

“இவ ஒருத்தி போதும் டா, இந்த வீட்டையே ஆட்டி வைக்க” என்று அர்ஜுன் சொல்லி சிரிக்க, “எங்க வீட்டு ராஜ மாதா இவ, நான் குளிக்கும் வரைக்கும் என்னை விட மாட்டா, குளிச்சுட்டு வர்றேன்” என்று சொன்ன நவநீதன் அவள் கன்னத்தில் கிள்ளி விட்டு எழுந்து கொண்டான்..

அவளோ, “ஆஹ் வலிக்குது” என்று சத்தம் போட்டாள்.

இதே சமயம் அர்ஜுனுக்கு டீயை கொண்டு வந்து துளசி கொடுக்க, அங்கே வந்து அமர்ந்தார் சக்திவேல்…

அர்ஜுனும், “ஏன் திரும்ப வந்து இருக்கான்?” என்று கேட்க, சக்திவேலோ, “கேட்டா அவன் எங்க கிட்ட பதிலே சொல்ல மாட்டான், உன் கிட்ட சொன்னா கேட்டு எங்க கிட்ட சொல்லு, எல்லாத்துக்கும் மேல இந்த கடையை எடுத்து நடத்த சொல்லு, இன்னும் என்ன அவனுக்கு டைம்? விஜய் பாவம் தனியா கஷ்ட்படுறான்… சில நாள் இரவுல வர்றதும் இல்லை… அன்னைக்கு வந்தனா சொல்லி கவலைப்பட்டா, இவன் போனா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும். நான் பேசப் போனா ஏதாவது திட்டினாலும் திட்டுவேன், நீயே பேசிடு” என்று சொல்ல, அவனும், “சரி மாமா” என்று சொன்னான்… 

ஏனையவர்களை விட, அர்ஜுனுடன் நவநீதனின் நெருக்கம் அதிகம்…

அதனாலேயே அர்ஜுனை பேச சொல்லி இருந்தார் சக்திவேல்…

அர்ஜுனும் டீயை குடித்துக் கொண்டு இருக்க, “நம்ம சிங்கக் குட்டி என்ன பண்ணுறான்?” என்று கேட்டார் சக்திவேல்…

“வரும் போது ஒரே அழுகை… இவ்ளோ தூரம் கார்ல இருக்கவும் மாட்டான்… அத பிடிச்சு இத பிடிச்சு சேட்டை பண்ணிட்டே இருப்பான். அது தான் விட்டு வந்தேன்” என்று அர்ஜுன் சொல்ல, “நல்ல துறு துறுன்னு இருக்கிறான், அவன் ஒரு இடத்துல இருந்தாலே அந்த இடம் கல கலன்னு இருக்கு” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டார் சக்திவேல்… 

அதனை தொடர்ந்து, நவநீதனும் குளித்து விட்டு வந்து விட, அர்ஜுன் அவனை அழைத்துக் கொண்டே, மாமரத்தின் கீழ் வந்து நின்றவன், “அவுஸ்ரேலியா எப்படி இருந்திச்சு?” என்று கேட்க, “நல்லா தான் இருந்திச்சு” என்று பெருமூச்சுடன் சொன்னவனோ மேலும், “பைக்கை வித்துட்டேன், உங்க பணத்தை கொடுக்கிறேன்” என்று சொன்னான்…

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீயே வச்சுக்கோ” என்று அர்ஜுன் சொல்ல, “தாரளா பிரபு மச்சான் நீங்க” என்று நவநீதன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top