யுகம்-1

சிங்கப்பூர்!!! பார்ப்பவர்கள் மயங்கி கிடக்கும் சொர்க்க பூமி. வானுயர்ந்த கட்டிடங்கள், படுத்து உறங்க கூடிய சுத்தமான பாதைகள் என கண்ணுக்கு  விருந்தளிக்கும் நாடு அது. அங்கே தான் அர்ஜூன் குரூப் ஆப் கம்பனிஸ் என்ற ஹை டெக் பெயர் பலகையுடன் வானை தொட்டு நிற்கும் கட்டிடத்தில் டிசைன் என்ஜினீயர் ஆக பணிபுரிகிறாள் வைஷ்ணவி.

வைஷ்ணவி ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண். பொது நிறமும் மெல்லிய வனப்பான உடலமைப்பும் பேசும் கண்களும் கொண்ட சாதாரண அழகுள்ள  கவர்ச்சியான  பெண். எப்போதும் உடலுக்கேற்றவாறு மாடர்ன் ஆக ஆபாசம் இன்றி உடை அணிவதில் அவளை மிஞ்ச ஆளில்லை. பெரிதாக யாருடனும் பேசமாட்டாள். ஆனால் பேச்சுக்கும் கிண்டலுக்கும் மறு பேச்சு பேசுவதில் வல்லவள்.

கோவப்பட வேண்டிய இடங்களில் கோவப்படும் நேர்மையானவள். அவளுக்கென அங்கு இரு உயிர்  நண்பர்கள் இருக்கிறார்கள்,  கார்த்திக் மற்றும் கீர்த்தனா.

அவள் வேலை செய்யும் கம்பெனி இந்திய உரிமையாளரின் நிறுவனமாதலால், அங்கு வேலை செய்யும் 80% ஆன தொழிலாளர்கள் தமிழ் பேசுபவர்கள். கீர்த்தனா அழகான குடும்ப பாங்கான பெண்.

சிவந்த நிறமும் பளிங்கு கண்களும் கூரான நாசியும் என அழகு தேவதை போல இருப்பாள். அங்கே வேலை செய்யும் ஆண்களின் கனவுக்கன்னி அவள் தான். புடவை அணிந்து பூ வைத்து வேலைக்கு வரும் அழகை பார்க்கவே அங்கு இருப்பவர்களுக்கு தெகிட்டாது.  அவர்களிடமிருந்து கீர்த்தனாவை காப்பது வைஷ்ணவி தான்.

ஆனால் அவர்களின் எந்த பார்வையையும் கீர்த்தனா சட்டை செய்வதில்லை. அவளுக்கென்று உள்ளம் கவர்ந்த யாரும் இதுவரையில் இல்லை. அவளது குடும்ப பொறுப்புகளும் காதலுக்கு வழி விட்டதில்லை. எல்லோரும் வீட்டை விட்டு உழைப்புக்காக சிங்கப்பூர் வந்திருப்பதால் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தனர். கீர்த்தனாவும்   வைஷ்ணவியும் ஒரு பிளாட் இல் வீடு எடுத்து தங்கி இருக்க அதே பிளாட் இல் மேல் தட்டில் கார்த்திக் தன் அக்கா குடும்பத்துடன் தங்கி இருந்தான். இப்படி தான் இவர்களுக்குள் ஒரு பிணைப்பு உருவானது.

கீர்த்தனாவுக்கு அப்பா இல்லை, சின்ன வயதிலேயே ஹார்ட் அட்டாக் இல் இறந்துவிட்டார். இரு தங்கைகள், இருவரையும் கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு அவளுடையது. அதனாலேயே இன்ஜினியரிங் படித்து முடித்ததும் சிங்கப்பூர் வந்து உழைக்க தொடங்கி விட்டாள்.

அவள் சிங்கப்பூரில் காலடி வைத்து 3 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் அவளது வீட்டு நிலைமை முன்னேறி விட்டது.

கார்த்திக் அழகான பையன். கொஞ்சம் பூசின போல உடல்வாகு உள்ளவன். ஆனால் ரொம்ப சோம்பேறி. கொஞ்சம் துடுக்குத்தனமும் கேலி கிண்டலும் உள்ளவன். அவனுக்கு எப்போதும் வெள்ளை மனது. எதையும் உளறி கொட்டி விடுவான். அவனுக்கென்று எந்த பொறுப்புகளும் இல்லை. அக்கா கல்யாணம் முடித்து சிங்கப்பூர் இல் செட்டில் ஆகி விட்டார்.

அப்பா இந்தியாவில் பெரிய தொழில் அதிபர். அப்பாவின் தொழிலில் ஈடுபாடு இல்லாமல், தான் படித்த இன்ஜினியரிங் படிப்பை பயன்படுத்துவதற்கும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் சிங்கப்பூர் வந்துவிட்டான். வைஷ்ணவிக்கு ஒரு அக்கா திருமணம் முடித்துவிட்டார். பணக்கார குடும்பம், அப்படி இருந்தும் இந்தியாவில் வசிக்க பிடிக்காமல் இங்கு வந்து வேலை பார்க்க தொடங்கி விட்டாள். ரொம்ப அழுத்தக்காரி. மூவரும் ஒன்றாக வேலைக்கு செல்வதும் வருவதுமாக அவர்கள் வாழ்க்கைச் சென்றது. சனி ஞாயிறு தினங்களில் ஊர் சுற்றுவதும் ஏதும் கோர்ஸ் செய்வதுமாக நிம்மதியாக இருந்தனர்.

அந்த நிம்மதி அவர்கள் புது எம்.டி வரும் வரைக்கும் தான் என்று யாருக்கும் தெரியவில்லை. அர்ஜுனிடம் இருந்து 70% ஷேர்ஸ் ஐ இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் கொடி கட்டி பறக்கும் இளம்தொழில் அதிபன் ஆத்ரேயன் வாங்கி இருந்தான் இரு நாட்களுக்கு முதல்.

அர்ஜுன் மிகவும் அன்பான பண்பான குணமுள்ளவன். மற்ற ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஜாம்பவானாக திகழ்ந்தாலும் கட்டுமான தொழிலை நடத்த முடியாமல் திணறி வருகிறான்.

இதனை  அவதானித்த அவன் தந்தை அந்த ஷேர்ஸ் ஐ விற்று அதனை ஏற்றுமதி இறக்குமதி துறையில் முதலிடுவதற்கான ஐடியாவை  கொடுத்தார். ஷேர்ஸ் ஐ முழுமையாக விற்க மனமில்லாமல் 70% மட்டும் விற்பதற்கு முடிவெடுத்தார். 30 வருடங்களாக அவர் கட்டி வளர்த்த தொழில் சிங்கப்பூரின் மிக பெரிய நிறுவனமாக வளர்ந்து நின்றது. எனினும் சில மாதங்களாக அர்ஜுனின் அசமந்த போக்கால் சில அடிகளை ஆத்ரேயன் கன்ஸ்டருக்ஷனிடம் வாங்கி இருந்தது.

தலைக்கு மேல் வெள்ளம் போக கூடாது என்று நினைத்த அர்ஜுனின் தந்தை தர்மேந்திரன் 70% ஷேர்ஸ் ஐ ஆத்ரேயன் கன்ஸ்டருக்ஷனுக்கு விலை பேசி விட்டார். அர்ஜுனுக்கு இது அவமானமாக இருந்தாலும் தந்தை பேச்சின் நியாயம் விளங்கியதும் தந்தையின் முடிவிற்கு சம்மதித்தான். உடல் நிலை காரணமாக தர்மேந்திரனால் தொழிலை கவனிக்க முடியவில்லை.

30% ஷேர்ஸ் காக கம்பனிக்குச் செல்ல அர்ஜூனுக்கும் விருப்பமில்லை. சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் செல்ல தங்கை அனாமிகாவுக்கு  அவன் அந்த வாய்ப்பை அளித்தான். அனாமிகா திமிரும் கோவமும் உடைய அழகான பெண்.  நினைத்ததை அடைய துடிக்கும் மனம் கொண்டவள்.

புது எம்.டி யின் வருகையை கேள்விப்பட்ட தொழிலாளர்கள் எல்லாரும் கவலையில் இருந்தனர்.

ஏனெனில் அவர்கள் ஆத்ரேயனை பற்றி நல்ல விதமாக கேள்விப்படவில்லை. அவனுக்கு கீழ் வேலை செய்வதும் அடி மாடாக போவதும் ஒன்று என்று அறிந்துக் கொண்டனர்.

அன்று திங்கட்கிழமை வைஷ்ணவி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். கார்த்திக்கின் பெண் வடிவம் அவள்.

அதில் கீர்த்தனா மட்டும் சுறுசுறுப்பானவள். “வைஷு எந்திரிடி இன்னைக்கு நம்ம புது எம்.டி இரண்டு பேரும்  வரப்போறாங்க. புது எம்.டி ரொம்ப மோசமாம் நம்ம காவ்யா அக்கா சொன்னாங்க. டைமுக்கு போகாட்டி அவ்வளவுதான். நானும் இவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன்… தூங்குறத பாரு தூங்கு மூஞ்சி” என்று திட்டியவாறே தண்ணியை எடுத்து வைஷ்ணவி மேல ஊற்றி விட்டாள்.

வைஷ்ணவி, “கீது என்னடி இதெல்லாம்? கொஞ்சம் தூங்க விடேன் டி” என்று சிணுங்கியவாறே கண்ணை  மூடியபடி பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

கீர்த்தனா மனதுக்குள் சிரித்தபடி, “நீ குழந்தை தான் டி” என்று முணுமுணுத்தாள். திடீரென்று கார்த்திக் நினைவு வர, “கும்பகர்ணன் எழும்பிட்டானோ தெரியல” என்று முணுமுணுத்த படி கார்த்திக்கின் தொலைபேசிக்கு அழைத்தாள்.

கார்த்திக் அழகாக உடுத்தி ரெடி ஆக இருந்தான், எல்லாம் புது எம்.டி க்கு ஐஸ் வைக்க தான். கீர்த்தனா அழைத்ததும், “ஐ அம் ரெடி”  என்றவாறே கீர்த்தனா வீடு இருக்கும் தளத்திற்கு லிப்ட்டில் வந்து சேர்ந்தான். அப்போது தான் வைஷ்ணவி பல் துலக்கிக் கொண்டு இருந்தாள். கீர்த்தனா கதவில் தட்டியபடி வைஷ்ணவிக்கு வசை பாடிக் கொண்டிருந்தாள்.

கார்த்திக் வந்ததும் முன்னுக்கு சோபாவில் தொலைபேசியை நோண்டியபடி அமர்ந்து விட்டான். ஒருவாறு வைஷ்ணவி குளித்து முடித்து ரெடி ஆகி வந்தாள். நீல நிற டெனிம் ஜீன்ஸ் உம் முழங்கை வரை மடிக்க பட்ட சிவப்பு நிற செக் ஷர்ட் உம் காஜல் மட்டுமே கண்ணுக்கு தீட்டி வேற எந்த மேக்கப்பும் இல்லாமல் கழுத்து வரை வெட்டி கலர் செய்யப்பட்ட முடியை சேர்த்து பேண்ட்(band) போட்டவாறே லிஃப்டை நோக்கி நடந்து வந்தாள்.

வழக்கம் போல  கீர்த்தனா பச்சை நிற சாரி கட்டி பூ வைத்து பொட்டு வைத்து மிதமான மேக்கப் போட்டிருந்தாள். கார்த்திக்கின் கண்கள் வழக்கம் போல கீர்த்தனாவை அளவிட்டது. கீர்த்தனா அருகில் வைஷ்ணவி நிற வேறுபாட்டினால் ரொம்ப சுமாராகவே தெரிந்தாள். அதற்காக அவள் வருத்தப்பட்டது கிடையாது. உடம்பு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ளுவாள். மாடர்ன் உடை  போடுவதற்காகவே சாப்பாட்டில்  கட்டுப்பாடாக இருப்பாள். கார்த்திக்கின் சிவந்த நிறத்துக்கு முழங்கை வரை மடிக்கப்பட்ட கருப்பு ஷர்ட் ரொம்ப பொருத்தமாக இருந்தது. மூவரும் ஏறியதும் கார்த்திக் காரை கிளப்பிக் கொண்டு ஆபீஸ்க்கு விரைந்தான்.

அங்கு இருக்கும் கான்டீன் தான் மூவருக்கும் விருப்பமான இடம். கார்த்திக் வழமை போல் சிக்கனும் கீர்த்தனா சாண்ட்விச்சும் சாப்பிட வைஷ்ணவி பழமும் கிரீன் டீயும் ஆர்டர் பண்ணி சாப்பிட தொடங்கினாள். அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தான் விக்ரம் பூங்கொத்துடன்.

அதனை கீர்த்தனாவிடம் நீட்டி,

“யூ ஆர் லுக்கிங் சோ பியூட்டிஃபுல் ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ”  என்றான். இதெல்லாம் சகஜமப்பா என்ற தோரணையில் கீர்த்தனா அதனை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

இதற்கெல்லாம் முடிவுகட்ட நினைத்த வைஷ்ணவி உடனே, “இங்க பாரு விக்கி யூ ஆர் நோட் லக்கி பிகாஸ் யூ ஆர் லுக்கிங் ஸ்பூக்கி“ என்றவள் மேலும் தொடந்து, “உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா” என்றபடி அவன் காது நோக்கி குனிந்தாள். 

“அவ ஒரு ஆம்பள… ஆபரேஷன் பண்ணி பெண்ணாகி இருக்கா… உனக்கு அது பரவாயில்லை என்றால் நீ அவளை கட்டிக்கோ” என்றாள் காதில் ரகசியமாய். கீர்த்தனாவும் கார்த்திக்கும் எவ்வளவோ ஒட்டு கேட்டும்  அவள் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.

விக்ரமோ  அவளை நம்பாத பார்வை பார்த்தான். உடனே அவள், “இங்கே வா!”  என்று அவனை கீர்த்தனா அருகில் இழுத்து,  அவன் காதுக்குள் மிக ரகசியமாக, “கொஞ்சம் உற்று  பார், அவள்… சாரி சாரி… அவன் மீசை இன்னும் உதிரவில்லை” என்றாள்.

பெண்களுக்கு ஹோர்மோன் பிரச்சனையால் சிறிதாக மீசை அரும்புவது இயல்பு என்ற உண்மை தெரியாத விக்ரம் ஒரு கணம் ஆடி போனான்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவன், கீர்த்தனாவை விசித்திரமாக பார்த்துவிட்டு,

“சாரி சிஸ்… ப்ரோ… நான் சொன்னதை மறந்துருங்க” என்று பிதற்றியவாறு  அங்கிருந்து விறுவிறு என்று  நடந்துவிட்டான்.

கீர்த்தனா ஒன்றும் புரியாமல், “அப்படி என்னடி சொன்ன ?” என்றாள் வைஷ்ணவியிடம். “உண்மையை சொன்னேன்” என்று கெத்தாக சொன்னவள் கையை மடித்து விட்டுக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து கேன்டீனுக்குள் நுழைந்த விக்ரமின் நண்பர்கள்  கீர்த்தனாவை ஆச்சரியமாக பார்த்து பக்கத்தில் இருந்தவர்களிடம் கிசு கிசுத்துக் கொண்டிருந்தார்கள். கீர்த்தனாவுக்கு உடனே விளங்கி விட்டது. ‘இந்த வானரம் ஏதோ எசகு பிசகா சொல்லியிருக்கு’ என்று மனதில் நினைத்தவள், கீர்த்தனாவை நோக்கி அனல் பார்வை வீசி, “இப்போ நீ என்ன சொன்னாய் என்று 

சொல்லலனா உன்ன கொன்னு போட்டிருவன்” என்றாள் குரலில் கோபத்தை தேக்கி.

உயிர் நண்பியின் கோபம் மனதை நெருட, “கூல் பேபி கூல், உனக்கு இனி இந்த தொந்தரவு வர கூடாது என்ற நல்லெண்ணத்தில் நீ ஒரு ஆம்பளை ஆபரேஷன் பண்ணி பொண்ணா மாறியிருக்கா என்றேன்… அவ்வளவுதான்” என்றால் அசால்ட்டாக. கீர்த்தனா நண்பியை பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டாள்.

உடனே கார்த்திக், ‘நீ ஆம்பளையா இருந்தா கூட நான் உன்ன கல்யாணம் பண்ணுவேண்டி…எனக்கு தேவை உன் மனசுதான்’ என்று யோசித்தவன், ‘சீ என்ன இது தறி கெட்ட யோசனை’ என்று தன்னை தானே மனதுக்குள் கடிந்த படி, “கிளம்பலாமா ?” என்றான். எழுந்தவனின் கைகள் தவறுதலாக கீர்த்தனாவின் கைகளில் உரசிக் கொண்டது.

அந்த தொடுகையில் கொஞ்சம்  தடம் மாறி இதயம் துடித்தது. இந்த தடுமாற்றம் கிட்ட தட்ட 100 தடவையாவது நடந்திருக்கும். அப்படியிருந்தும் அவன் தன் காதலை இதுவரை சொல்லாமல் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தான். எங்கே அவள் நிராகரித்தால் நட்பை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால்.

வெளியில் சிரித்தாலும் புது எம்.டி என்றதும் எல்லாருக்கும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்தது. புது டிஜிட்டல் பெயர் பலகையில் ஆத்ரேயன்  கன்ஸ்டருக்ஷன்ஸ் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

மணி 9.00 ஆனதும் எல்லாரும் வாசலில் குழுமி இருந்தனர். வெள்ளை நிற பென்ஸ் இல் அனாமிகா வெள்ளை நிற ஸ்கர்ட், வெள்ளை நிற கோர்ட் அணிந்து ஒய்யாரமாக இறங்கினாள்.

24 வயது பெண்ணை கண்டதும் யார் முகத்திலும் ஈ ஆடவில்லை. கடமையின் நிமித்தம் வரவேற்று உபசரித்தார்கள். சிறு பெண் கீழே வேலை செய்ய வேண்டுமா என்ற ஈகோ எல்லாரிடமும் காணப்பட்டது. நிஷாவிடம் இருந்து பூங்கொத்தை பெற்ற அனாமிகா தனது புது அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கோ தொழிலில் எந்த அனுபவமும் இல்லை, அவள் தங்கி இருப்பதோ ஆத்ரேயனின் வழி நடத்தலுக்காக.

எல்லாரும் வேலையில் மூழ்கி இருந்த நேரம் 11.30 போல அலுவலகத்துக்கு அழைத்து இன்னும் 5 நிமிடங்களில் வருவதாகவும் 12.00 க்கு அனைவருக்கும் மீட்டிங் ஏற்பாடு பண்ணும் படியும் கூறி இருந்தான் ஆத்ரேயன். அவனை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் பூச்செண்டு கொடுப்பதில் முறுகல் உருவாக, கடைசியில் அனாமிகா தலையிட்டு தானே கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது. 

சொன்ன நேரத்துக்கு அதாவது 11.35 க்கு வெள்ளை நிற ஜாகுவார் கார் கட்டட வாசலில் சீறிக் கொண்டு வந்து நின்றது. டிரைவர் இருக்கையிலிருந்து ஆத்ரேயன் கம்பீரமாக இறங்கினான். முப்பது வயசு வாலிபன் அவன். ஆறடி உயரமும் நன்கு சிவந்த நிறமும், அலை அலையென கேசமும் பெரிய கண்களும் கூரான நாசியும் ட்ரிம் செய்யப்பட தாடி மீசைக்கிடையில் செதுக்கிய உதடுகளும் என ஆணழகனாகவே இருந்தான். கருப்பு நிற ஜீன்ஸ் உம் வெள்ளை நிற ஷர்ட் உம் கருப்பு நிற கோர்ட் உம் என கம்பீரமாகவே இருந்தவன் புஜங்களில் முறுக்கேறிய தசை கோலங்கள் கோட்டை மீறி வெளியே தெரிந்ததிலே குழுமி இருந்த எல்லா பெண்களும் ஆர்வத்துடன் நோக்கினர். அனாமிகாவை சொல்லவே தேவையில்லை. வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். சின்ன பெண் அல்லவா?

“ஹலோ மிஸ் அனாமிகா” என்று சொடக்கு போட்டதும் தான் அவள் தன்னிலை அடைந்தாள். கையில் இருந்த பூச்செண்டை பெற்றுக் கொண்டு சன் கிளாஸ் ஐ கழட்டி ஒரு வசீகர சிரிப்பை அவளிடம் சிந்தினான். அதில் அவள் மூர்ச்சையாகாத குறை தான்.

சொன்ன நேரம் போல 12.00

க்கு மீட்டிங் தொடங்கியது. கோர்ட்டை கழட்டிவிட்டு முழங்கை வரை மடிக்கப்பட்ட ஷர்ட் உடன் வருகை தந்த ஆத்ரேயனை பார்த்து கீர்த்தனா, “ஹீ ஐஸ் சோ ஹாட்”  என்று மற்ற இருவரிடமும் முணுமுணுத்தாள்.

அதை கேட்ட வைஷ்ணவியும் கார்த்திக்கும் அவளை விசித்திரமாக பார்த்தனர். கீர்த்தனா வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையா? என்றபடி

அது ஆத்ரேயன் காதிலும்  தெளிவாகவே விழுந்தது.  உடனே அவன் கீர்த்தனாவை பார்த்து, “யூ ஆர் ஆல்சோ லுக்கிங் சோ பியூட்டிஃபுல் இன் திஸ் சாரீ” என்று கூறி சினேகமாக சிரித்தான்.

அதனை கேட்டதும் கீர்த்தனாக்கு ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது என்றால் கார்த்திக்கிற்கு இனம் புரியாத பயம்  உருவானது. 

விக்ரம் தன் சகாக்களிடம், “கிழிஞ்சுது… பாஸுக்கு உண்மை தெரியல போல… நம்மள போல அவரும் ஏமாந்துட்டார் பாவம்…” என்றான் ரகசியமாக. ஆனால் அந்த ரகசியம்  கீர்த்தனாக்கும் வைஷ்ணவிக்கும் தெளிவாகவே விழுந்தது.

அதை கேட்டதும்  வைஷ்ணவி தன் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டாள்.  அடக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சத்தமாக சிரித்து விட்டாள். கீர்த்தனாவோ வைஷ்ணவியை முறைத்துக் கொண்டிருந்தாள். “சாரிடி, என்னால முடியல” என்று வாயில் கை வைத்து சிரித்தவள் ஆத்ரேயனை மறந்து போனாள்.

ஆத்ரேயன் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு அவளை கூர்மையாக நோக்கினான்.

தன்னை சட்டை செய்யாமல், அவள் தொடர்ந்து சிரித்ததை பார்த்து கடுப்பானவன், சத்தமாக, “வில் யூ ப்ளீஸ் ஷட் அப் அண்ட் கெட் அவுட்” என்றான் பார்வையை விலக்காதவாறு. அவன் சத்தம் கேட்டு பயத்தில் உறைந்தவள், தான் செய்த தவறை நினைத்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

முதல் மீட்டிங்லேயே வெளியே செல்வது நெருடலாக இருக்க, “சார், கட்டாயம் போகணுமா?” என்று கேட்டுவிட்டு தலையை குனிந்துக் கொண்டாள். அவளுக்கு தெரியும் ஏதோ பெரிய டோஸ் விழ போகுது என்று. “டெபனட்லி” என்றவன் மற்ற அனைவரையும் பார்த்து, “இந்த ஸ்டுபிட் ஒரு நிமிஷம் இங்க இருந்தா கூட நான் வெளிய போயிருவேன்… டெஸிஷன் இஸ் யூவர்ஸ்” என்றான் கையை கட்டிய படி.

எல்லாரும் வைஷ்ணவியை நோக்கி, “ப்ளீஸ், கொஞ்சம் வெளியே போ வைஷ்ணவி” என்றனர் இறைஞ்சுதலாக. கீர்த்தனாவும் கார்த்திக்கும் அவளை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தனர் நோட்புக்கை எடுத்தவள் தலையை குனிந்தபடி விட்டு வெளியேறினாள்.

எல்லாரையும் வைத்து தன்னை வெளியே அனுப்பியவன் செயலால் அவளுக்கு ஆத்திரம்  அதிகரித்தது. கண்களில் அவமானம் தாங்காமல் நீர் கோர்த்திருந்தது.

❤️ Loading reactions...
3 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top