யுகம்-12

ஆத்ரேயனின் மனநிலை தெரியாமல் அனைவரும் குழம்பி போய் இருந்தனர். அவன் எதுவும் நடக்காத படி சர்வ சாதாரணமாக இருந்தான்.  வைத்தியசாலைக்கு அதன் பிறகு அவன் வருகை தரவில்லை. மலர்வேந்தன் அவனிடம் சம்மதம் கேட்டாரா? இல்லையா? என்று அனைவருக்கும் குழப்பமாக இருந்தது.

கார்த்திகேயனுக்கோ கல்யாணத்துக்கு ஏற்பாடு  பண்ணுவதா?இல்லையா? என்று குழப்பம்… அனைத்துக்கும் ஒரு முடிவு கட்ட அடுத்த நாள் சாப்பிடும் போது ஆதியிடம்,  “ஆதி… ஆத்ரேயன் ஏதும் சொன்னானா கல்யாணத்தை பற்றி??” என்று  கேட்டார்.

அவனோ, “இல்லையப்பா… அவன் நேற்று வந்த களைப்பில் படுத்து தூங்கி விட்டான். இன்னும் எழும்பவேயில்லை” என்றான்.

சிறிது நேரம் கழித்து தூங்கி எழும்பிய கண்களுடன் வந்தவன், “அம்மா காபி” என்றபடி சோபாவில் உட்காந்தவாறே அன்றைய பத்திரிக்கையை புரட்டினான்.

காபியை கொண்டுச் சென்ற மாலதியிடம் அவனிடம் கேட்குமாறு கண்களால் சைகை செய்தார் கார்த்திகேயன். அவனிடம் காபியை கொடுத்தவர், “மாமா என்ன சொன்னார் ???” என்று கேட்டார்.

“எதை பற்றி?” என்று கேட்டான்   பத்திரிக்கையை புரட்டியபடி . கார்த்திகேயனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. பொறுமை இழந்தவர், “உன் கல்யாணத்தை பற்றி ஒன்னும் சொல்லவில்லையா ??” என்று சீறினார்.

தலையை  நிமிர்த்தாமலே,

“உங்க கிட்ட என்ன சொன்னார்??” என்று கேட்டபடி காபியை அருந்தினான். ‘நான் கேள்வி கேட்டால் இவன் என்னையவே திரும்ப கேள்வி கேட்பானா???’ என்று மனதுள் நினைத்தவர், அவனின் அலட்சிய போக்கால் அறிந்துக் கொண்டார் இவனுக்கு விஷயம் தெரியுமென்று. 

இப்போது ஆத்திரம் கொண்டால் காரியம் கெட்டு விடும் என்று நினைத்தபடி, “உனக்கும் ஆதிக்கும் வைஷ்ணவியையும் வர்ஷினியையும் கல்யாணம் பண்ணி வைத்தால் தான் அவன் ஆபரேஷன் செய்ய போவானாம்” என்று கூறினார்.

“அதுக்கு நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?” என்று கேட்டான். “இதென்னடா வம்பா போச்சு? நான் அவனுக்கு அப்பாவா ? இவன்  எனக்கு அப்பாவா ?” என்று முணு முணுத்தவர், “நீ சம்மதம் சொன்னால் ஏற்பாடு செய்யலாம்” என்றபடி அவனை   கூர்ந்து நோக்கினார்.

பெருமூச்சு ஒன்றை விட்டவன்,

“என் சம்மதம் உங்களுக்கு  எதுக்கு? உங்க நண்பனின் உயிர் பெரிதாக இருந்தால் ஏற்பாடு  பண்ண வேண்டியது தானே” என்றவன், காபி கப் ஐயும் பத்திரிக்கையையும் அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு  மாடியேறிவிட்டான்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “உங்கள் நண்பனின் உயிருக்காக நான் சம்மதிக்கிறேன்” என்று மறைமுகமாக சொன்ன மகனை அவரால் மனதுக்குள் மெச்சாமல் இருக்க முடியவில்லை. கோகிலாவுக்கும் மலர்வேந்தனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பெண்கள் வீட்டு சார்பில் கல்யாண வேலைகளை கார்த்திகேயனே மேற்கொண்டார்.

தனது முடிவு சரியா தவறா என்று புரியாமல் அதை பற்றி இனி சிந்திக்க கூடாது என்று முடிவெடுத்த ஆத்ரேயன்  கல்யாணம் வரை யாருடனும் பேசப்போவதில்லை என்று உறுதியாக இருந்தான். தொலைபேசியில் மட்டும் ஒரு சில தொடர்புகளை மேற்கொண்டவன் அறையிலேயே முடங்கி போனான்.

வைஷ்ணவி தான் அவள் வீட்டில் ருத்ர தாண்டவமாடிவிட்டாள்… இந்த கல்யாணத்தை நிறுத்தும் வழி தெரியாமல் சங்கடப்பட்டவள் கல்யாணத்துக்கு முதல் நாள் நேரே ஆத்ரேயனை தேடி போனாள். அவனால் மட்டுமே இதை நிறுத்த முடியும் என்று அறிந்தவள், மாலதி கீழே வர சொன்னபோது கல்யாணத்துக்கு பிறகு பேசிக்கலாம் என்று மறுத்து அனுப்பினான். 

பொறுமை இழந்த வைஷ்ணவி, “ரொம்ப தான் ஓவரா  பண்றான் அத்தை… நானே போய்  பேசிக்கிறேன்” என்றவாறே அவன் அறையை நோக்கி மாடி ஏறினாள்.

கதவை தட்டியதும் கட்டிலில் படுத்தவாறே கால் மேல் கால் போட்டு ஒரு கையை தலையின் கீழும் மறு  கையில் தொலைபேசியும் என சிறு  காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தவன், “கம் இன்” என்றான்.

உள்ளே வந்தவள் அவன் அமர்ந்திருந்த தோரணையிலும் உடையிலும் சங்கடப்பட்டு போனாள். ‘விவஸ்தை இல்லாம எப்படி படுத்திருக்குது பாரு’ என்று மனசுக்குள் அவனை அர்ச்சித்துவிட்டு, “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.  வைஷ்ணவி போயிருப்பாள் என்று எதிர்பார்த்தவன் அவள்  திடு திடுவென்று அறைக்குள் வந்ததும் முதலில் கொஞ்சம் தடுமாறியவன் பின் சுதாரித்துக் கொண்டான்.

அப்படியே இருந்தபடி,

“பேசலாமே” என்றான் நிமிர்ந்து பார்க்காமல். “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை எப்படியாச்சும் நிறுத்திருங்க” என்றவள் மேல் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது அவனுக்கு. ஆனால் பொறுமை காத்தவன் நிதானமாக, “இதை உன் அப்பாவிடம் சொல்” என்றவன் அதுக்கு மேல் ஒரு வார்த்தை கூட  பேசவில்லை. ‘என்ன இவன் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் இருக்கிறான்’ என்று நினைத்தவள் தயங்கியபடி செல்லாமல் நிக்க.  தலையை நிமிர்த்தி அவளை பார்த்தவன்,

 “இன்னும் ஏதும் பேசணுமா?”  என்று கேட்டான்.

“இல்லை” என்று தலையை ஆட்டியவளிடம், “இப்படி என்னை வெறிச்சு பார்த்துக் கொண்டிருந்தது போதும்.  நாளை மீதியை பார்த்துக்கொள்ளலாம்… இப்போ கொஞ்சம் வெளியில் போ” என்றவன் தொலைபேசியில் கவனத்தை செலுத்தினான். விரைவாக வெளியே வந்தவளுக்கு பிறகு தான் அவன் இரட்டை அர்த்தத்தில் பேசியது உறைத்தது. கோபம் வந்தாலும் 

திரும்ப போனால் ஏதும் இன்னும் அசிங்கமாக பேசி விடுவானோ என்ற பயத்தில் ‘உன்ன கொல்லாம விடமாட்டேன் ராஸ்கல்’ என்று மனசுக்குள் திட்டிக்   கொண்டிருந்தாள்.

அந்நேரம் பார்த்து மேலே வந்த ஆதி, “என்னம்மா கல்யாண பொண்ணு மாப்பிள்ளையை  பார்க்க அவ்வளவு ஆசையா???” என்று கேலி பண்ணினான். அவனை பார்த்து மரியாதையை நிமித்தம் சிரித்தவள் அவனுக்கும் சேர்த்து மனதுக்குள் திட்டி விட்டு வெளியேறினாள்.

வீட்டுக்கு வந்த வைஷ்ணவி எப்படி கல்யாணத்தை நிறுத்துவது என்று புரியாமல்  குழம்பி போனாள். கடைசியில், ‘கடவுள் பார்த்துப்பார்’ என்று மனதில்  நினைத்தபடி கல்யாண நாளுக்காக காத்திருந்தாள்.

அனைவரும் கோவிலுக்கு காலையிலேயே வந்திருந்தனர். மலர்வேந்தன் வீல் சேர் இல்  இருந்தார்.10 மணிக்கு வைத்தியசாலைக்கு போக வேண்டி இருந்தது ஆபரேஷனுக்காக. மணபெண்கள் இருவரும் ஒரே வேலைப்பாடுடைய சிவப்பு நிற சேலை கட்டி மிதமான மேக்கப் போட்டு இருந்தனர். மணமகன்கள் இருவரும் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாகவே இருந்தனர். வைஷ்ணவி கடைக்கண்ணால் ஆத்ரேயனை பார்த்தாள். அவனோ எந்த முகபாவனையும் காட்டாமல் சாதாரணமாக இருந்தான்.

‘இவன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கான்?’ என்று அவளுக்கு குழப்பமாகவே இருந்தது. ஐயர் மந்திரம் சொல்ல மேளதாளங்கள் மத்தியில் தலையை குனிந்து அவன் கையால் மங்கள நாணை பெற்றுக் கொண்டாள். மூன்று முடிச்சு இட்டவன் அப்போது தான் அவள் முகத்தை நோக்கினான்.கட்டுப்படுத்த முடியாமல் அவள் கண்களிலிருந்து கண்ணீர்  வழிந்தது. யாருக்கும் தெரியாமல் கண்களை துடைத்தவள் ஆத்ரேயனை நிமிர்ந்து பார்க்க அவ்வளவு நேரமும் சாதாரணமாக இருந்தவனின் முகம் இறுகி போனது.

இறுகிய முகத்துடன் எல்லா சம்பிரதாயங்களையும் செய்தவனை பார்க்க அவளுக்கே பயமாக இருந்தது.  எல்லாம் முடிந்ததும் வைத்தியசாலைக்கு சென்றவர்கள் மலர்வேந்தனை ஆபரேஷன் தியேட்டர்க்குள்  அனுப்பி வைத்து விட்டு வெளியில் காத்திருந்தனர். மலர்வேந்தன் நிறைந்த மனசுடன் அவர் உள்ளேச் சென்றார். கழுத்தில் புது தாலியுடனும் நெற்றி வகிட்டில் ஆத்ரேயானால் வைக்கப்பட்ட குங்குமத்தோடும் கண்கள் மூடி கண்ணீர் வழிந்தோட சுவரில் சாய்ந்து நின்றாள் வைஷ்ணவி. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆத்ரேயன்.

ஆபரேஷன் முடியும் வரை அங்கேயே நின்றவர்களுக்கு பதற்றமாகவே இருந்தது. சில மணி நேரங்கள் கழித்து ஆபரேஷன் திருப்தியாக முடிந்தது என தியேட்டரில் இருந்து வந்த வைத்தியர்கள் கூறினார்கள்.

அப்போது தான் எல்லாருக்கும் மனசு திருப்தியாகவே இருந்தது.

கார்த்திகேயனும் கோகிலாவும் வைத்தியசாலையிலேயே இருக்க மாலதி ஆரத்தி எடுப்பதற்காக வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு ஆதி, வர்ஷினி, ஆத்ரேயன் மற்றும் வைஷ்ணவி கார்த்திகேயன் வீட்டுக்குச் சென்றனர். அனைவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்த மாலதி நால்வரையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கும்படி கூறினார். ஆரத்தி எடுத்து முடித்து வீட்டுக்குள் காலை வைத்ததும் வைஷ்ணவியை திரும்பி கூட பார்க்காமல்  விறு விறு என்று ஆத்ரேயன் மாடி படி ஏறி விட்டான்.

மாடியேறும் போது, ‘நான் தாலி கட்டும் போது நீ அழுததுக்கு இது தாண்டி தண்டனை இன்னும் அனுபவிப்ப’ என்று வன்மையாக நினைத்தவனுக்கு தெரியவில்லை எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிக்க போவது அவன் தான் என்று. இப்போது விக்கித்து நின்றது வைஷ்ணவி மட்டுமல்ல வர்ஷினியும் கூட தான். என்ன இருந்தாலும் தங்கை வாழ்க்கை அல்லவா?

வைஷ்ணவியை மாலதி கூட்டிச் சென்று தனது அறையில் ஓய்வெடுக்கச் சொன்னார். அவருக்கு பயம் மகன் மருமகளை காயப்படுத்தி விடுவானோ என்று.  கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கியபடி கண் மூடி  சோபாவில் சாய்ந்து இருந்தாள்.  ஆதித்யன் வர்ஷினி ஜோடி வைஷ்ணவியின் வாழ்க்கையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை தொடங்க மனம் இடம் கொடுக்கவில்லை. மலர்வேந்தன் வீட்டுக்கு வந்த பிறகு தங்கள் வாழ்க்கையை தொடங்க முடிவெடுத்தனர்.

ஆத்ரேயன் அறைக்குச் செல்ல பயந்துக் கொண்டு மாலதி அறையில் ஓய்வெடுத்த வைஷ்ணவி அப்படியே உறங்கிவிட்டாள் மாலதியும் வைஷ்ணவியை எழுப்பவில்லை. சூரியன் உதயமானதும் தான் அவளுக்கு தான் அப்படியே உறங்கிவிட்டது தெரிந்தது.

காபி கப்புடன் வந்த மாலதியை நோக்கி, “மன்னிச்சிருங்க அத்தை உங்க ரூம்லயே தூங்கிட்டேன்” என்றாள் உண்மையான வருத்தத்துடன். “பரவாயில்லையம்மா இந்தா காபி இதை ஆத்ரேயனுக்கு கொண்டு கொடு” என்றவாறே காபி கப்பை நீட்டினார். “அத்தை எனக்கு பயமா இருக்கு” என்றாள் விழிகளை உருட்டியபடி. “இப்போ அவன் திருந்திட்டான்டா” என்றவரை வெற்று பார்வை பார்த்தவள் மனசுக்குள், ‘அந்த நெட்டையனின் நடிப்புல நீங்களும் மயங்கிட்டீங்களே அத்தை’ என்று நினைத்தாள். அவர் மனசை நோகடிக்க கூடாது என்ற எண்ணத்தில் ஒரு வகை உதறலுடன் அதனை பெற்று மாடிப்படி நோக்கி ஏறினாள்.

ஆத்ரேயன் குளித்து முடித்து இடுப்பில் வெள்ளை டவலை கட்டிக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று ஈரமான தலையை கோதியவாறு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். வைஷ்ணவி பயத்துடன் கதவை தட்ட, “எஸ் கம் இன்” என்றவன் வைஷ்ணவியை எதிர்பார்க்கவில்லை. அதே போல் அவளும் அவனை இந்த நிலையில் எதிர் பார்க்கவில்லை. ஈரம் சொட்டிய பரந்து விரிந்த மார்பும் சிக்ஸ் பேக் உடலும் பெரிய புஜங்களும் சிவந்த நிறமும் என ஆணழகன் போல் நின்றவனை பார்த்து மலைத்தவள், மனதுக்குள், ‘எப்போ பார்த்தாலும் கவர்ச்சி நடிகை போல போஸ் கொடுத்துக்கிட்டு…ச்சே’ என்று நொடித்துக் கொண்டாள்.

அவள் தன்னை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவன் போனை வைத்துவிட்டு அவளை நோக்கி,

“பார்த்து  ரசிச்சு முடிஞ்சதுனா இப்போ சொல்லு  எனக்கு எத்தின மார்க்ஸ் போடலாம்? அண்டைக்கு 05 தானே போட்ட” என்றான்.  இதயம் படபடக்க மற்ற பக்கம் திரும்பியவள்  ‘என்ன பற்றி என்ன  நினைச்சிட்டு இருக்கான்? ஏதோ அவன் பின்னால் நான் சுத்துற போல அவனே கற்பனை பண்ண வேண்டியது. பிறகு நம்மள போட்டு வதைக்க வேண்டியது இடியட்’ என்று மனசு திட்டவும்  செய்தது. ‘உண்மையாவே நீ அவனை சைட் அடிச்ச தானே!’ என்று மனசு கவுண்டரும் கொடுத்தது.    பின்னாலிருந்து கையை முன் கொண்டுவந்து காபி கப்பை வாங்கியவன் அவள் படபடப்பை பார்த்து சிரித்தபடியே, “நான் கேட்டதுக்கு நீ இன்னும் விடை சொல்லல” என்றான்.

அவளும் சளைக்காமல், “இப்போ மைனஸ் 5” என்றாள் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு.

“அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்” என்று சிரித்தவாறே கேட்டவன்.

அவளை இழுத்து அவளோடு நெருங்கி கண்ணாடியில் நின்றவாறு, “நீயே சொல்லு நமக்கு ஜோடி பொருத்தம் இருக்குதா? என் கலர் என்ன? உன் கலர் என்ன?” என்றபடி அவளை உதறி தள்ளிவிட்டான்.

அதில் அதிர்ச்சியடைந்தவள், “நான் வேணாம் என்று சொல்லியும் அப்போ என்னை எதுக்கு கல்யாணம்

பண்ணிக்கிட்டீங்க?” என்றாள் குரலில் வலியை தேக்கி.

கோபம் கொப்பளிக்க அவளருகில் அழுத்தமான காலடிகளுடன் வந்தவன், “உன்னை நான் தான் நிராகரித்து இருக்கணும், நீ என்னை நிராகரித்து அந்த கல்யாணம் நின்றதாக இருக்க கூடாது. அதுக்காக தான் டி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” என்றான் கண்களில் பழி வெறி பளபளக்க.

“சீ… இதெல்லாம் ஒரு காரணமா? இதனால் ரெண்டு பேரின் வாழ்க்கையும் நாசமாகி விட்டதே” என்று கோபமாக உரைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. கேலி புன்னகையை முகத்தில் தவழ விட்டவன், “ரெண்டு பேரோடதுமா? உன்னுடையது மட்டும் என்று சொல்லு… உன்னை விவாகரத்து பண்ணிய பிறகு என் கண்ணசைவுக்கே 1000 பெண்கள் பின்னால் வருவார்கள்… ஆனால் நீ ரொம்ப பாவம்…” என்று உச்சு கொட்டியவன் ஒரு பத்திரத்தை எடுத்து அவள் முன் நீட்டினான்.

ஆம் அது சமரச விவகாரத்துக்குரிய பத்திரம். அதில் ஏற்கனவே கையெழுத்து இட்டிருந்தான். ‘கழுத்தில் தொங்கிய தாலியின் மஞ்சள் காய முன் விவாகரத்தா?’ என்று  யோசித்தவளுக்கு நெஞ்சில் யாரோ ஈட்டியால் குத்தியது போல இருந்தது.

“இதில் கையெழுத்து இட்டு தா… மாமாவின் உடல் நிலைக்காக உன்னை இப்போ சும்மா விடுறேன். அவர் முழுமையாக குணமடைந்ததும் இது கண்டிப்பாக நீதி மன்றத்துக்கு செல்லும்…எனக்கு நீ எப்போவும் தகுதி இல்லாத மனைவி தான்” என்றவன் அவளை கூர்ந்து பார்த்தான்.

“கல்லுக்குள்ளும் ஈரம்”  என்று வாய் விட்டு விரக்தியாக கண்ணீருடன் அவனை பார்த்து சொன்னவள் ஒரு வார்த்தையும் பேசாமல் அதில் கையெழுத்து இட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். “உனக்கு ரொம்ப திமிரடி” என்றவனுக்கு  அவளின் கையெழுத்தை பார்க்கும் போது நெஞ்சில் ஒரு வலி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து சாப்பிடுவதற்காக கீழே வந்தவன் வைஷ்ணவியை காணாமல், அங்கு இருந்த வர்ஷினியிடம், “அண்ணி வைஷ்ணவி எங்கே?” என்று கேட்டான். “அவ வீட்டுக்கு போய் இருக்கிறா குளிச்சு கிளம்புறதுக்காக” என்றதும் சாப்பிடாமல் அவர்களின் வீட்டை நோக்கி நடந்தான்.

அவளறைக்குள் சென்றவன் பாத்ரூமுக்குள் அவள் குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவள் கட்டிலில் தொப்பென்று விழுந்தவன் அவள் வரும் வரைக்கும் காத்திருந்தான். “ரூமை எப்படி வச்சிருக்கா பாரு” என்று திட்டிக் கொண்டே படுத்திருந்தான். அவளின் அறை நேர்த்தியாக இருந்தாலும் அவனளவுக்கு இருக்கவில்லை.

குளித்து முடித்து கதவை திறந்தவள் அவன் கட்டிலில் படுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவளாக  கதவை படாரென மூடிக் கொண்டாள்.

‘எதுக்கு இவன் இங்கே வந்தான் ? நான் எப்படி இந்த நிலையில் செல்ல முடியும்?’ என்று யோசித்தவளுக்கு வழி ஒன்றும் புலப்படவில்லை.  அவள் கதவை திறந்து மூடியதை கவனித்தவன், “எவ்வளவு நேரமாக உள்ளே இருப்பதாக உத்தேசம்?” என்று கேட்டான்.

கொஞ்சம் தைரியம்  வர பெற்றவளாக, “எதுக்கு இங்க வந்தீங்க? நான் தான் கையெழுத்து இட்டு கொடுத்து விட்டேனே… வெளிய போங்க நான் உடை மாற்றணும்”  என்றாள் .

“கையெழுத்திட்டாலும் இன்னும் விவகாரத்தாகவில்லை. இப்போவும் நீ என் மனைவிதான்” என்றவன் மேலும், “நான் ஒன்றும் உன்னோட ரொமான்ஸ் பண்ண வரல. இன்று ராத்திரி கல்லூரிக்கு போகணும் ரெடியா இரு. அத சொல்ல தான் வந்தேன்” என்றவனின் மனசாட்சி, ‘அதை சொல்ல  நீ இங்க வரணுமாடா?’ என்று கேள்வி கேட்டது.

“சரி…இப்போ நீங்க போங்க ப்ளீஸ்” என்று அவள் சத்தமிட, கட்டிலில் இருந்து எழுந்தவன், “புதுசா பார்க்கிற போல ரொம்பதான் பண்ணுறா” என்று முணு முணுத்தபடி வெளியேறிவிட்டான். அது அவள் காதிலும் தெளிவாக விழ தலையில் அடித்துக் கொண்டாள்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top