அந்திரன் ராவண ஈஷ்வரனின் அலுவலகத்தின் கலந்தாய்வு அறைக்கு வரதன் வந்து இதோ கிட்ட தட்ட ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ராவணனை அவரால் சந்திக்க முடியவில்லை. தன் தொழிலில் உச்சத்தை தொட்ட பிறகு அவர் இவ்வளவு நேரம் காத்திருப்பது இன்று தான், அதாவது சுமார் இருபது வருடத்திற்கு பிறகு வரத பெருமாள் இன்று தான் காத்திருக்கிறார். எவ்வளவு முயன்றும் அவரால் பொறுமையாக இருப்பது போல நடிக்க கூட முடியவில்லை, நேரம் கடக்க கடக்க முகத்தில் கடுமையின் அளவு கூடி கொண்டே சென்றது. அவரது கைவிரல்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட தண்ணீர் அடங்கிய கண்ணாடி குவளை, இதோ எப்பொழுது வேணுடுமானாலும் உடைந்து விடுவேன் என்கின்ற நிலையில் இருக்க, அவன் வந்தான்! அவனது சாகாக்கள் ஒன்பது பேரும் சூழ்ந்திருக்க, தன் கருப்பு நிற லெதர் ஷூ பள பிளக்க வரதனை பார்த்தபடி அவர் எதிரே உள்ள நாற்காலியில் அமர்த்தலாக வந்தமர்ந்தான் ராவணன்.
‘பலே கில்லாடி தான்! இருந்த இடத்திலே இருந்து கொண்டு சக்திவேல் துவங்கி அத்தனை பேரையும் அலறவிட்டு, இதோ என்னையே நேரில் வரவழைத்து விட்டானே!’ எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவரால் ராவணனின் ஆளுமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஒருகணம் அவனை எண்ணி வியந்து அடுத்த நொடி தான் வந்த நோக்கத்தில் கவனம் செலுத்த துவங்கியவர் அவனிடம் பேச ஆரம்பிக்கவும்,
“என்ன வேலையும் கொடுத்துட்டு, பின்னாடியே வேவும் பார்க்குறீங்களா?” அவன் புருவம் உயர்த்தி கேட்டவிதத்தில் வரதன் லேசாக தடுமாறினார்.
“அதுவந்து ராவணா நீன்னு இல்லை எல்லாருக்கும் பண்றது தான். வேலை ரிஸ்குல, பொருளும் முக்கியம், நீயும் முக்கியம், எல்லாம் நம்ம சேஃப்ட்டிக்கு தான்” – நம்ம, பாதுகாப்பு போன்ற கவரும் சொற்களை பயன்படுத்தி தப்பிக்க பார்த்தார்.
“அப்படினா அதோட நிப்பாட்டிக்கணும், அதை விட்டுட்டு நான் யார் கூட இருக்கேன்? என் கூட யார் இருக்கா? அவங்க யார்?என்கிறதெல்லாம் வேவு பார்க்கிறது, உங்களுக்கு தேவையே இல்லாத ஆணி.” தாம் தூமென்று கத்தவில்லை ஆனால் தன் கோபத்தை தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுத்தினான்.
“அட உன் தனிப்பட்ட விஷயம் எங்களுக்கு எதுக்குப்பா? நீ ஏதோ தப்பா புரிஞ்சி வச்சிருக்க” என்று அவர் சமாளிக்கவும் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவன், தேவராஜை பார்த்து கண்ணை காட்ட, அடுத்த சில நிமிடத்தில் ராவணனை கண்காணிக்க அனுப்பிய ஆடவன் மற்றும் வரதனின் தமயன் விக்ரமையும் தேவராஜ் அழைத்து வர,
முகம் ஒருபக்கம் வீங்கி, நடக்க முடியாது நடந்து வரும் தமையனை பார்த்து உள்ளுக்குள் கொதித்தவர் வெளியே கற்சிலையை போல அமர்ந்திருந்தார்.
“இவனை தானே என்னை வேவு பார்க்க அனுப்புனீங்க?இன்னைக்கு காலையில இருந்து ஆஷ்ரம வாசல்ல சுத்திட்டு இருக்கான். இவனுக்கு அங்க என்ன வேலை?” என்று கூர்மையாக அவரை பார்த்தபடி வினவ, வரதனால் சமாளிக்க முடியவில்லை, ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்கிற நிலையில் அமைதியாக இருந்தவரிடம்,
“இதுல எங்களை போட்டு தள்ளுறதுக்கு பெரிய பெரிய ரௌடிங்கள வேற அனுப்பியிருக்கீங்க” விக்ரமை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூறினான்.
கிண்டல் பண்றானா என்ன? உணர்வுகள் துடைக்கப்பட்ட ராவணனின் முகத்திலோ மற்றும் குரலில் இருந்தோ அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சுற்றியிருந்த ஒன்பது பேரின் இதழில் வந்து போன கோணல் புன்னகை, அவர் சந்தேகத்தை தெளிவுபடுத்த, ‘நான் பார்த்து வளர்ந்து வந்தவன் இவனெல்லாம் என்னை பேசுகிறானே’ என்று எண்ணியவர்க்கு அவன் முன்னால் அமர்ந்திருப்பது பற்றியெரியும் நெருப்பின் மேல் இருப்பது போல இருக்க, அவனிடம் தேவை இருக்கும் ஒரே காரணத்திற்காக பல்லை கடித்து சகித்துக்கொண்டவர்,
“ராவணா சரக்கை எடுத்ததும், நீ கொடுத்திருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காது. நான் என்ன பண்றது மேல இருந்து பிரஷர், அதான் அப்படி பண்ண வேண்டியதா போச்சு. நீ எதுவும் வருத்தப்பட்டுக்காத” என்றவரை கரம் உயர்த்தி தடுத்தவன்,
“வருத்தமா!?” என்று கோணலாக புன்னகைத்துவிட்டு, “இதுல வருத்தப்பட என்ன இருக்கு? வரதன் யாருன்னு எனக்கு தெரியும், ராவணன் யாருன்னு உங்களுக்கு தெரியும், இப்போ இன்னும் நல்லாவே தெரிஞ்சிருக்கும்.” என்றவன், “விஷயத்துக்கு வாங்க” என்றான்.
“சக்தி வேல் சார் நேத்து உன்கிட்ட சொன்னது தான்”
“ம்ம்ம் அவரு சொன்னாரு, ஏதோ. நீங்க சொல்லுங்க என்ன விஷயம்?” அவன் பாவனை அவருக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியது, ஆனாலும் ஆத்திரப்பட்டு காரியத்தை கெடுத்து, சண்டையிடுவதற்கான நேரம் இது இல்லை. எப்படியாவது சரக்கை வாங்கி சக்தி வேலிடம் ஒப்படைக்கவேண்டும் எனவே பொறுமையும் நிதானமும் மிக முக்கியம் என்பதால் வரதன் பொறுமையாக,
“சரக்கு முக்கியம் ராவணா, நேரத்துக்கு கொடுக்க வேண்டியது. டெலிவரி சரியான நேரத்துக்கு பண்ணலைன்னா பிரச்சனை ஆகிரும்”என்றார். அங்கு அவரது வணிக புத்தி பேசியது.
“ம்ம் நீங்க சொல்றதும் சரி தான். பிரச்சனை வர கூடாது. நேரத்துக்கு குடுக்கணும், ம்ம்ம் நான் என்ன பண்ணனும்?” என்றானே பார்க்கலாம். வரதன் நொந்து விட்டார். எல்லாம் தெரிந்தும் தன்னை பேச விட்டு புதியது போல கதை கேட்கும் ராவணனை ஒன்னும் செய்ய முடியாத தன் நிலையை எண்ணி வெறுப்பானவர்,
“பேசினபடி சரக்கையும் ஆதாரங்களையும் குடு ராவணா, பேசினதை விட அதிகமா நீ கேட்கிறதை நாங்க கொடுக்குறோம்” பொறுமையை இழுத்து பிடித்து வைத்துக்கொண்டு கூறினார்.
“ஓகே தென் டீல் பேசுவோமா” நன்றாக நாற்காலியில் சாய்ந்தமர்ந்து நிதானமாக கேட்டான்.
“உனக்கு எவ்வளவு வேணும்”
“ம்ஹூம் எனக்கு பணம் வேண்டாம். அதுக்கு பதிலா பரந்தாமனோட கேஸ் நான் சொல்ற மாதிரி க்ளோஸ் ஆகணும், முக்கியமா இதுல அஜூதியா பெயரோ என் பசங்க பெயரோ வர கூடாது. கேஸ் க்ளோஸ் ஆன அடுத்த செகண்ட் பொருளும் சரக்கும் உங்க கிட்ட இருக்கும்” நான் உன்னை விட கைதேர்ந்த வணிகன் என்றது அவனது கோரிக்கை.
அவ்வளவு பெரிய விடயத்தை கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் கூறியவனை வரதனும் விக்ரமும் திகைப்புடன் பார்க்க, தன் நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டவனோ விக்ரமை பிடித்து வரதனை நோக்கி தள்ளி, “போகும் பொழுது உங்க ரௌடி சாரையும் கூட்டிட்டு போங்க” என்றவன் தன் சகாக்களுடன் அறையை விட்டு வெளியேறினான்.