“அண்ணா உங்களுக்கும் என்னை தெரியலையா?” சந்ருவை பார்த்து கண்ணீர் வடிய அஜூதியா கேட்க, அவளது எந்த கேள்விக்கும் பதில் சொல்லாதவன் அவளை கீழே ஆள் அரவமற்ற கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்றான்.
“தெரிஞ்சவங்களா ராவணன்?” என அவனுடன் டீல் பேசவந்தவன் ராவணனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற அஜூதியா போன திசையை பார்த்தபடி ஆர்வத்துடன் கேட்க, அவனை தன் பற்களை கடித்தபடி அழுத்தமாக பார்த்த ராவணன், “இல்லை” என்றான் எரிச்சலுடன்.
ஆனால் அவனோ “ஹான் என்ன” என்று ராவணனிடம் கேட்டுவிட்டு அஜூதியாவையே எட்டி எட்டி பார்க்க, ஆத்திரத்தில் கண்ணாடி டேபிளை தட்டிய ராவணன், “இல்லை” என்று இன்னும் சத்தமாக சொல்ல, டேபிள் அதிர ராகமாய் வந்த ராவணனின் அடிக்குரல் சீற்றத்தில் உடல் லேசாக அதிர ராவணனை பார்த்தவன் அவனது அனல் பார்வை கண்டு பயத்துடன் அவனை பார்க்க,
“இல்லைன்னு சொன்னேன்” என்றான் ராவணன்.
“ஓ” – ‘இதற்கு ஏன் இத்தனை ஆக்ரோஷம்’ என்று எண்ணியவனுக்கு சில நொடிகளில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
“என்ன பண்றது சில விஷயத்தை சில பேருக்கு கத்தி தட்டி புரியிறமாதிரி சொல்ல வேண்டியிருக்கு” தான் அடித்ததில் கீறல் விழுந்த அந்த தடித்த கண்ணாடி டேபிளை பார்த்தபடி எள்ளலாக கூறினான் ராவணன். ‘அந்த பெண்ணை பார்த்தத்திற்கான எதிர்வினை தான் இது, ஆக டேபிளில் விழுந்த அடி தனக்கு விழவேண்டியது’ என்பதை புரிந்து கொண்டவனின் முகம் கருத்துவிட அதை திருப்தியாக பார்த்த ராவணன்,
“அவ்வளவு தான் வேலை முடிஞ்சதும் நான் கால் பண்றேன்” – ‘என்கிட்ட வேலையோட நிப்பாட்டிக்கணும்’ என்னும் தோனியில் பேசிவிட்டு அங்கிருந்து வேகநடையுடன் வெளியேறினான்.
“சொல்லுமா என்ன விஷயம்? எந்த பிரச்சனையும் இல்லையே” என அஜூதியாவிடம் தன்மையாக வினவினான் சந்ரு.
“நல்லா இருக்கேன் அண்ணா, அவருக்கு என்னை நிஜமாவே நியாபகம் இல்லையா அண்ணா”
“அதெல்லாம் இருக்கு அதுக்காக அங்க வந்தா நீ அப்படி பேசுவ, எங்களை பார்த்தா நான் யாருன்னு தெரியுதுல” அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்து அஜூதியா அலையசைக்க,
“ம்ம்ம் நாங்க கெட்டவங்கன்னா அங்க இருந்தவனுங்க ரொம்ப மோசமானவங்க, நீ அங்க வந்து அவங்க முன்னாடி ராவணன் கிட்ட ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசினா உனக்கு தான் மா பிரச்சனை”
“ஓ எனக்காக தான் அவர் அப்படி நடந்துக்கிட்டாரா?”என பெண்ணவள் இதழ் மலர கேட்க, சந்ருவுக்கு இவ்வளவு நடந்தும் புன்னகைக்கும் அஜூதியாவை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
“ம்ம், சரி சொல்லுமா எதுக்கு வந்த”
“அவரை பார்க்கணும்ண்ணா”
“அவருன்னா ராவண் பையாவையா” வேண்டுமென்றே கேட்டான்.
“ம்ம்” என்று அவள் முகம் சிவக்க தலையையசைக்கும் பொழுதே,
“உனக்கு என்ன வேணும் ஹான்?” என்று சீறியபடி வேகமாக அங்கே வந்த ராவணன் அஜூதியாவின் முழங்கையை இறுக்கமாக பிடித்து, சுவற்றில் அவளை சாய்த்தபடி வினவினான்.
“அது வந்து அது” அவன் போட்ட சத்தத்தில் அவளால் பேச முடியவில்லை தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போல வார்த்தைகள் வர மறுத்தது.
“சொல்லு” தன் வலக்கரத்தை ஓங்கி சுவற்றில் குத்தியபடி அதட்ட, திடுக்கிட்டவள்! இன்னும் சுவற்றுடன் ஒன்றி நிற்க, தேவராஜ், விக்கி, சந்ரு என அவனது ஆட்களுக்கே அஜூதியாவை பார்க்க பாவமாக இருந்தது. ஆனாலும் ராவணன் இருக்கும் பொழுது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் அமைதியாக இருக்க, ராவணனின் பார்வை மொத்தமாக அஜூதியா மீது தான் பதிந்திருந்தது.
அத்தனை பயத்திலும் தன்னை அடிக்கடி தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்த அவளது படபடத்த பெரிய விழிகளும் அது சிந்திய பார்வையும் இத்தனை ஆண்டுகள் அவனுக்குள் அடங்கிக்கிடந்த வாலிப உணர்வுகளை தட்டி எழுப்பி ஆணவனை எங்கோ திசை தெரியா அடர்ந்த வனத்திற்குள் அழைத்து சென்று அவனை தவிக்க வைத்தது.
‘நோ நோ இவ என்னை என்ன பண்ணிட்டு இருக்கா?’ என உள்ளுக்குள் திணறினாலும் வெளியே அதே அழுத்தமான பார்வையோடு தான் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளது பிறை நுதலில் சிறிய கீற்றாய் இருந்த குங்குமம் உச்சந்தலையில் இருந்து வழிந்த வியர்வையில் களைந்து செந்நிற துளியாய் அவளின் புருவத்தின் ஓரத்தில் விழாவா வேண்டாமா என நின்றுகொண்டிருக்க, தன்னை மறந்து அதை துடைக்க போன தன் விரல்களை சிரமப்பட்டு அடக்கியவன் தன் பார்வையை திசை திருப்ப முயற்சித்தபொழுது அவளின் உதட்டிற்கு மேல் குட்டி குட்டியாக அரும்பியிருந்த வியர்வை துளிகளை பார்த்தவன்,
தன் கரம் கொண்டு அவளின் இடை வளைத்து, அப்படியே மடியில் அமரவைத்து தன் இதழ் கொண்டு துடைத்து, அவள் விலக இவன் மறுக்க என விடாப்பிடியாக அவளை இன்னும் தன்னுடன் நெருக்கமாக இழுத்தணைத்து, அவள் கெஞ்ச இவன் மிஞ்ச என அவளின் செந்நிற இதழையும் மூச்சுமுட்ட சேர்த்தணைத்து, அவளது வளைந்த கழுத்தில் இளைப்பாற முகம் புதைத்து, தன்னவளின் நீண்ட அடர்ந்த கேசத்தின் சரிவில் வாசம் பிடித்து என அவனது மனதில் முகிழ்த்த பொல்லாத ஆசைகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போக, மிக சிரமப்பட்டு தறிகெட்டு ஓடிய தன் மனதிற்கு கடிவாளமிட்டவன், ‘இனி ஒருநொடி அங்கிருந்தாலும் ஏதாவது தப்பாகிவிடும்’ என்று தோன்றவும், சற்றென்று அவளிடம் இருந்து தன் பிடியை தளர்த்திவிட்டு வேகமாக அங்கிருந்து செல்ல, அவன் சென்றதும் தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டவளுக்கு அன்று தன்னை காப்பற்றி விட்டு காரில் வேகமாக அவன் மறைந்து சென்றது நினைவிற்கு வர, ‘ஐயோ போறாரு விட்டா மறுபடி எப்படி பார்க்கிறது’ என்று எண்ணியவள், இவ்வளவு நடந்தும் கொஞ்சமும் அசராது,
“நில்லுங்க கொஞ்சம் நில்லுங்க” என்றபடி அவனை நோக்கி விரைந்தவள். ஆனால் அவனோ நிற்காமல் காரில் ஏறப்போகவும், “ராவணன்” என சத்தமாக அழைத்தபடி அவன் முன்னே லேசாக மூச்சு வாங்க அவள் வந்து நிற்க, ‘இவ்வளவு கத்தியும் என்ன இவள்? கொஞ்சம் கூட அசராமல் வந்து நிற்கிறாள்’ என வியப்பாக அவளை பார்த்தவன், ‘இவ என்னை ஒருவழி பண்ணாம விட மாட்டா’ என்று தனக்குள் முணுமுணுத்தபடி முன் நெற்றியை கோதிக்கொண்டே அவளை பார்த்தான்.
“என்ன உன் பிரச்சனை? உனக்கு என்ன தான் வேணும்?”நிதானமாக கேட்டான்.
“நீங்க தான் வேணும்” ஆள்க்காட்டி விரலை அவனை நோக்கி சுட்டிக்காட்டியபடி கூறினாள். அவளின் பதிலில் முதலில் அதிர்ச்சியடைந்த அவனது சகாக்களுக்கு, பிறகு சிரிப்பு வந்துவிட இதழை இறுக்கமாக மூடி கட்டுப்படுத்திக்கொண்டவர்கள் தங்களின் அண்ணனின் திணறலை ஆர்வமுடன் வேடிக்கை பார்க்க, அவளை ஒருகணம் இறுக்கமாக முறைத்தவன், கைக்குட்டையால் தன் நெற்றியில் சட்டென்று துளிர்த்த வியர்வையை துடைத்தபடி வேகமாக தன் காரில் ஏறி கதவை அடித்து சாற்ற, “ஏங்க நில்லுங்க, ராவணன் உங்களோட வலெட்” என அஜூதியா தடுக்க தடுக்க ராவணனின் ஜாகுவார் நிற்காமல் ஓடியது.