முகம் மலர சந்துருவுடன் அரட்டை அடித்தபடியே கீழே வந்த அஜூதியாவோ, எதேச்சையாக சமையலறையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவள், அதே அதிர்ச்சியுடன்,
“அண்ணா… அவரு சமைப்பாரா?” என்று வியப்புடன் வினவினாள்.
“ம்ம்… நாங்க எல்லாருமே பண்ணுவோம். ஆனா அண்ணன் இருந்தா அவர்தான் பண்ணுவாரு. வேற லெவல்ல இருக்கும்.”
“ஓ…” என்றவளோ, இன்னும் சில நொடிகள் நின்று தன்னவனை கண்குளிரக் ரசித்தவள், மீண்டும் மற்றவர்களுடன் இணைந்து அரட்டை அடிக்கத் துவங்கினாள்.
அப்பொழுது விக்கிக்கு ஏதோ கால் வரவும், அவனோ அலைபேசியில் பேசிக்கொண்டே தக்காளியை வெட்டிக்கொண்டிருக்க,
“அண்ணா, என்கிட்ட கொடுங்க. நான் வெட்டுறேன்… நீங்க பேசுங்க,” என்று புன்னகையுடன் கூறியவள், அவனிடம் இருந்த தட்டை வாங்கி வெட்டத் துவங்கினாள்.
அஜூதியாவுக்கோ ராவணனைப் பார்க்க வேண்டும் போல இருக்கவும், நிமிடத்திற்கு ஒருமுறை சமையலறை வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவனோ வெளியே வருவதாகத் தெரியவில்லை என்றதும் அவளது முகம் வாடிவிட்டது.
அப்பொழுது பசங்களுடன் சிரித்தபடியே, அஜூதியாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் சந்துரு,
“பார்த்து ஒரு யூசும் இல்லை. நீ இங்க இருக்கிற வரைக்கும் அவர் வெளிய வரமாட்டாரு. உனக்கு வேணும்னா நீ தான் போகணும்,” என்றான்.
“ரொம்பத்தான் பண்றாருண்ணா…” என்று சலித்துக்கொண்டவளைப் பார்த்து சந்துரு சிரிக்க,
அவளுக்கோ கொஞ்ச நேரம் கூட அங்கே அமர முடியவில்லை. தன்னவனைப் பார்த்தே ஆக வேண்டும் போலத் தோன்றவும் அவள் எழுந்துகொள்ள,
பேச்சு சுவாரஸ்யத்தில் யாருமே அவளைக் கவனிக்காதது இன்னும் வசதியாகிப் போக, சந்துருவை மட்டும் பார்த்து கண்சிமிட்டியவள், கையில் வைத்திருந்த தட்டுடனே தன்னவனைக் காணச் சென்றாள்.
சந்துருவோ அஜூதியாவின் செய்கையில் சிரிப்புடன் அமர்ந்திருக்க,
இங்கே ராவணனின் நிலைமையோ இன்னும் மோசம்.
எண்ணம் முழுவதும் அவனவளே உலா வர, சற்று முன் அவள் கொடுத்த முத்தம் பதிந்த தன் வலது மார்பை கண்களை மூடியபடி வருடிக்கொண்டிருந்தான்.
முரடன் அவனுக்கு வெட்கமெல்லாம் வருமா என்பது போல, காது மடல்கள் சிவந்துபோக நின்றிருந்தவனைத் தன் மனதிற்குள்ளே கொஞ்சி தீர்த்தவள்,
“ம்ஹூம்…” என்ற செருமலுடன், அப்பொழுதுதான் உள்ளே வந்தது போல பாவனை செய்தபடி உள்ளே வரவும், அவனுக்கு சில நொடிகளுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
மிகவும் சிரமப்பட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், சப்பாத்தியை சுடுவதில் கவனம் செலுத்துவது போல, இல்லை… இருப்பது போல காட்டிக்கொள்ள முயன்றான் ராவணன்.
உள்ளே நுழைந்தது முதல் அஜூதியாவின் பார்வை முழுவதும் ராவணன் மீதே செல்ல,
கருப்பு நிற சட்டையின் இரண்டு பட்டன்களும் தாராளமாகத் திறந்திருக்க, கைகளில் கரண்டியோடு வியர்வை வழிய நின்றிருந்தவனை மையலாகப் பார்த்தவள், மெல்ல நடந்து அவன் அருகே வந்து நிற்க, ராவணன் திரும்பி கூட பார்க்கவில்லை.
அவளது கொலுசின் சத்தம் மிக அருகில் கேட்கும்போதே அவள் அருகே வருவதைப் புரிந்துகொண்ட ராவணன், காரியமே கண்ணாக நின்றான்.
அஜூதியாவோ அவனை ரசித்தபடியே, கையில் இருந்த தட்டை அவனுக்கு முன்னால் வைத்தவள், பிறகு அதில் இருந்து தக்காளியை எடுத்து, அவன் அருகே நின்றுகொண்டே கத்தியால் நறுக்கியபடி, ராவணனுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்குப் பிடிக்காது… முரடா, உன்னை ரசித்தேன்… தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது… கர்வம், அதை மதித்தேன்…” என்று குறும்பாக முணுமுணுத்தாள்.
உடனே, “ஷட் அப்!” என்ற ராவணனோ அவளை முறைத்துப் பார்த்தான்.
அவளோ ஒன்றுமே தெரியாதவள் போல தக்காளியை வெட்டியபடியே அவனைப் பார்த்தவள்,
“இந்தப் பாட்டு பிடிக்கலையா? சரி… வேற பாடுறேன்” என்று கூறி அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள்,
“சித்தம் கிளுகிளுக்க… ரத்தம் துடிதுடிக்க…முத்தம் நூறு விதமோ” என்று பாடிக்கொண்டே அவன் மார்பைப் பார்த்தாள்.
அதே இடம்.
சற்று முன்பு தன்னுடைய இதழ் பட்டுச் சென்ற அதே இடம்.
அவன் தன்னை மறந்து வருடி ரசித்துக்கொண்டிருந்த அதே இடம்.
ராவணனுக்கு அவளது பார்வை எங்கே செல்கிறது என்பது புரிந்துவிட,
‘அப்போ உள்ள வரும்போது பார்த்துருக்காளா?’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவன், சட்டென்று தன் சட்டையின் பட்டன்களைப் போட்டு சரி செய்துகொள்ள, அதைப் பார்த்தவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“என்ன?” என்று அவன் கடுமையாகக் கேட்க,
“ஒண்ணுமில்லையே…” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.
அவளை ஒருகணம் அழுத்தமாகப் பார்த்தவனோ,
“எதுக்கு இங்க நிக்கிற? முதல்ல கிளம்பு,” என்றான்.
“அதெல்லாம் போக முடியாது. பார்த்தா தெரியலையா? உங்களுக்கு தான் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்.”
“உன் உதவி எனக்குத் தேவையில்லை.”
“ஆனா எனக்கு உங்களுக்கு உதவி செய்யணுமே.” கண்சிமிட்டி கூற ராவணன் அவளை முறைத்தான்.
அஜூதியாவோ அவனது எந்த முறைப்பையும் பொருட்படுத்தாமல் மீண்டும்,
“முடி குத்தும் உந்தன் மார்பு… என் பஞ்சு மெத்தை…” என பாட ஆரம்பித்தாள்.
‘இந்தப் பொண்ணு…’ என்று எண்ணிய ராவணனோ, தன் கீழ் உதட்டைக் கடித்து புன்னகைக்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டவன்,
“வெளிய போ,” என்று முகத்தை இறுக வைத்துக்கொண்டு கூறினான்.
“போக முடியாது,” என்று அவன் விழிகளைப் பார்த்துக் கூறியவள்,
“ஏன் இப்படி பொய்யா நடிக்கிறீங்க?” என்று சற்று ஆதங்கத்துடனே கேட்டுவிட்டாள்.
அவள் விழிகளைப் பார்க்க முடியாமல் தடுமாறியவனோ,
“யாரும் இங்க நடிக்கல,” என்று ஆத்திரத்துடன் கூறினான்.
“அப்படியா?” என்று நிதானமாகக் கேட்டவள், அதே நிதானத்துடன் அவன் முகத்தை ஒரு கணம் பார்த்தாள்.
பிறகு வெளியே சென்று தன் கைப்பையை எடுத்து வந்தவள், அவன் அறையில் இருந்து எடுத்து வந்த தனது சலங்கையை அவன் முகத்திற்கு நேராகக் காட்டினாள்.
ஸ்தம்பித்துப்போனவன் அஜூதியாவின் விழிகளைப் பார்த்தபடி,
“சந்…” என்று சந்துருவை அழைக்க வாயெடுத்த மறுகணம், வேகமாக அவன் அருகே வந்தவள் அவனது வாயைத் தன் கரம் கொண்டு மூடி,
“கத்தாதீங்க,” என்று கூறியவள், அவன் அடுத்து பேசுவதற்குள் தன் கழுத்துச் சங்கிலியை எடுத்து சற்று எம்பி அவன் கழுத்திலேயே அணிவித்துவிட்டாள்.
அவன் அதிர்ந்து பார்க்க,
“இது என் அப்பா, அம்மாவோட கடைசி நினைவு. நிறைய நாள் இது என்கிட்ட இல்லையேன்னு வருத்தப்பட்டிருக்கேன். ஆனா இனிமே வருத்தப்படமாட்டேன்… அதான் எனக்கு நீ இருக்கியே,” என்று கண்கலங்கக் கூறியவள், அவன் எதிர்வினை ஆற்றுவதற்குள் அவனது தாடியடர்ந்த கன்னத்தில் முத்தமிட் அவனுக்கு உயிர் போய் உயிர் வந்தது.
பிறகு ஆணவன் அந்த அதிர்வில் இருந்து மீள்வதற்குள் அவனது காதில்,
“ஐ லவ் யூ ராவணா… ஐ லவ் யூ சோ மச்…” என்று ஆத்மார்த்தமாகக் கூறிவிட்டு, அவனது கனல் விழியோடு தன் விழிகளைக் கலக்கவிட்டவள், அடுத்த நொடி சட்டென்று ராவணனின் மார்பில் கன்னம் வைத்து அவனை இடையோடு கட்டிக்கொள்ள, ஆறடி ஆண்மகனோ பெண்ணவளின் அதிரடியில் அரண்டுதான் போனான்.
புத்தி விலக்கச் சொன்னாலும், காதல் கொண்ட மனமோ அணைக்கச் சொல்ல, மிகவும் சிரமப்பட்டு அஜூதியாவைத் தன்னிடமிருந்து வேகமாக விலக்கியவன், வரவழைக்கப்பட்ட கோபத்தை முகத்தில் பூசிக்கொண்டு,
“ஏய், இங்க பாரு…” என்று திட்ட ஆரம்பிக்கவும், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவளோ அதிகாரம் தூள் பறக்க,
“நீ எல்லாருக்கும் சமைச்சு… நான் எப்போ சாப்பிடுறது? எனக்கு ஏதாவது செஞ்சு கொடு,” என்றதும் ராவணன் அவளை முறைக்க,
“பசிக்குது பா…” என்று கண்களை உருட்டியபடி தன் வயிற்றில் கை வைத்து அவள் கேட்ட விதத்தில், எங்கிருந்து அவன் கோபம் கொள்ள?
அவள் கேட்டதைச் செய்யத் துவங்கினான் ராவணன்.
ராவணனோ அஜூதியாவின் முகத்தைக்கூட பார்க்காமல் நிற்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளோ,
“எனக்கு எதுவும் இல்லையா?” என்றாள்.
அவள் என்ன கேட்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன், நிமிர்ந்து அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.
அதற்கெல்லாம் அசரும் ஆளா அவள்?
“நிறைய எல்லாம் வேண்டாம்… கொஞ்சம் போதும். சின்னதுனாலும் ஓகே,” என்று கண்களைச் சுருக்கிக் கேட்க, அதற்கும் அவன் முறைக்க,
“சரி, சரி… கஷ்டப்பட்டு ஒண்ணும் முறைக்க வேண்டாம். நாளைக்கு எனக்கு முக்கியமான டே. நாளைக்கு முழுக்க என் கூட இருங்க… அது போதும்,” என்று கண்சிமிட்டினாள்.
அவனோ அவளைப் பார்த்தபடியே அவசர உணவாக சப்பாத்திக்கு இடையே முட்டையை வைத்து ரோல் செய்து தட்டில் வைத்துக் கொடுத்தவன்,
“ஏய், இங்க பாரு… உனக்கு புரியல இதெல்லாம் சரி வராது,” என்றான்.
அவளோ அவனது பார்வை தன் மீது இருப்பதை அறிந்தும் அறியாதது போல உணவிலேயே கவனமாக இருக்க,
“ஏய், உன்னைத் தான்!” ராவணன் அதட்டினான்.
அஜூதியாவோ அவன் முகம் பார்க்காமல்,
“என் பேர் ஒண்ணும் ஏய் இல்லை,” என்றாள் சப்பாத்தியை மென்றபடி.
கடைசியில் வழியில்லாமல் இறங்கி வந்த ராவணன், கண்களை இறுக்கமாக மூடி திறந்து,
“தியா…” என்று கொஞ்சம் மென்மையாக அழைக்க,
நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவளோ,
“ராவணா…” என்று உதடுகளில் மீண்டும் குறும்புப் புன்னகை மலர அழைத்தாள்.
ராவணனோ,
“கொஞ்சமாவது பயப்படுடி,” என்றான்.
அதற்கு அவளோ சம்பந்தமே இல்லாமல்,
“இன்னும் ஒரு ரோல்,” என்க
சொல்லி முடிப்பதற்குள் இரண்டு ரோல்கள் அவள் தட்டில் இருந்தன.
உண்மையில் அவளைச் சமாளிக்க முடியாமல் தவித்தான் ராவணன்.
ஆனால் அவனது தவிப்பிற்குச் சொந்தக்காரியோ, மேலும் அவனைத் தவிக்க வைக்கும் பொருட்டு தட்டை சிங்கில் போட்டுவிட்டு,
“அவ்வளவுதானா? எனக்கு வேற எதுவும் கிடையாதா?” என்று கேட்கவும்,
நெற்றியை நீவியவனோ,
“தியா… தயவு செஞ்சு போறியா?” என்று கேட்டான்.
அதற்கு அவளோ மீண்டும்,
“மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது இந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுது மச்சான் எப்போ சொல்ல போற.. பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற” என்று பாடலை முணுமுணுக்க, தன் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்ட ராவணனோ,
“தயவு செஞ்சு போடி,” என்றான்.
“ப்ச்… அதை ஏன் கடிக்கிறீங்க? அதான் என்னுடையது இருக்கே,” என்று அவள் கண்ணடிக்கவும்,
“தியா!” என்று ராவணன் கொஞ்சம் அழுத்தமாக அழைத்தான்.
“சரி… போறேன்,” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டே நடந்தவள், வாசலை நெருங்கியதும்,
“ராவணா…” என்று அழைத்தாள்.
அவனோ இம்முறை சலிப்புடன்,
“என்ன?” என்று கேட்க,
இருவரின் விழிகளும் மோதிக்கொண்ட அந்தத் தருணத்தில், ஒன்றும் இல்லை என்பது போலத் தலையை இடவலமாக அசைத்தவள், சிறு நாணத்துடன் அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்ற மறுகணம் மூச்சை வெளியிட்டு, வேகமாகத் துடிக்கும் தன் மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்ட ராவணனின் காதில், வெளியே நின்றபடி சந்துரு மற்றும் தன் சகாக்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அஜூதியாவின் சத்தம் விழ, இப்பொழுது ராவணனின் இதழ்கள் தானாகவே புன்னகைத்துக்கொண்டன.