அந்த இரவு கடலின் பேரிரைச்சலுக்கு நடுவிலும், அவர்கள் இருவரின் இதயங்களுக்குள் மட்டும் ஒரு பேரமைதி நிலவியது.
அந்த நிசப்தத்தை கலைக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடியே படுத்திருந்தனர்.
ராவணனின் ஆயுதம் பழகிய முரட்டுக் கரங்கள், மிக மிக மென்மையாக அஜூதியாவின் சிகையை வருட, கண்ணீர் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்க, மெதுவாகத் தன் விழிகளை மூடிக்கொண்டாள் பெண்ணவள்.
சற்று நேரத்திற்கு முன்பு வரை கண்ணீரில் நனைந்திருந்த அந்த முகத்தில், இப்போது உறக்கத்தின் மெல்லிய சாயல் படர்ந்திருந்தது.
ஒரு சில வினாடிகளில் அவள் உறக்கத்திற்குச் சென்றிருந்தாலும், அவளது கரங்கள் மட்டும் அவனது இடையை கொஞ்சம் இறுக்கமாகவே பற்றியிருக்க,
அவள் படுத்திருந்த முறையில் வெகு நேரம் இருந்தால் அவள் கைகள் வலிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டு, மெல்ல அவன் விலக்கப் பார்க்க,
“எங்க போற?” அரைத் தூக்கத்தில் சிறு கோபத்துடன் வினவினாள்.
“எங்கையும் போகல மா… இப்படியே தூங்கினா உனக்குத்தான் கை வலிக்கும் டா. அதான் சரி பண்றேன்” புன்னகையுடன் கூறினான்.
“ம்ம்” என்றபடி இன்னும் அவனோடு ஒன்றியவள், அவன் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள, அந்த அணைப்பில் அவளது காதலோடு சேர்த்து அவன் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கையும் தெரிந்தது.
அதை உணர்ந்த ராவணனின் அதரங்கள் மெல்லிய கர்வப் புன்னகையில் வளைந்தன.
பின்பு குனிந்து அவள் முகத்தைப் பார்த்தவனது பார்வை இன்னும் மென்மையாக மாற,
அவளது கன்னத்தில் கோடு கோடாக இருந்த கண்ணீர் தடங்களைத் தன் கட்டைவிரலால் மெதுவாக வருடியவன், அப்படியே அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்பு அவளது நெற்றியில் மெதுவாக இதழ் பதித்தவன், அவளை இன்னும் சற்றே தன்னோடு அணைத்துக் கொள்ள, அவன் அலைபேசி ஒலித்தது.
ராவணன் உடனே எடுத்து காதில் வைக்கவும் போட் கரையை அடைந்து விட்ட செய்தி வர, சரி என்றவனுக்கு அஜூதியாவின் உறக்கத்தைக் கெடுக்கும் விருப்பம் கொஞ்சமும் இல்லை.
@@@@
காலை நேரத்தில் கடலின் மிதமான அலைச்சத்தம் மெல்லிய ராகமாய் கேட்க, வழக்கத்தை விட வெகு நேரம் கழித்தே கண் விழித்தாள் அஜூதியா.
எழும்பத் தோன்றாது தன் விழிகளை மட்டும் சுழலவிட்டவளின் விழிகளும் மனமும் தன்னவனைத்தான் தேடியது. அவன் இல்லை என்றதும் மெதுவாக எழுந்தமர்ந்தாள்.
சுற்றி அறையை நோட்டம் விட்டவள்,
“இது வீடு போல இருக்கு இங்க எப்போ வந்தோம்? நேத்து போட்ல தானே இருந்தோம்.” என்று யோசிக்கும் பொழுதே, நேற்று, ‘தூங்குடா இன்னும் டைம் ஆகும்’ என்று ராவணன் சொன்னது நினைவுக்கு வர,
“இதுவும் அவர் வீடு தானா? போட்ல இருந்து தூக்கிட்டா வந்தார். அதுகூட தெரியாம தூங்கிருக்கேன்” என்று புன்னகைத்துக் கொண்டவளுக்கு, நேற்று நடந்த அனைத்தும் அவள் கண்முன்னே மீண்டும் மீண்டும் காட்சிகளாய் ஓடியது.
புன்னகை மறந்து முகம் சட்டென்று வாடிவிட,
“எனக்கு மட்டும் ஏன் இப்படி?”
என்ற வலி நெஞ்சை அழுத்தினாலும், அடுத்த நொடியே அந்த வலியின் நடுவில் ராவணனின் முகம் வந்து நின்றது.
தன்னை இறுக்கமாக அணைத்த கரங்கள்.
தன் கண்ணீரைத் தாங்க முடியாமல் கலங்கிய அந்த விழிகள்.
“நான் இருக்கேன் டி.”
என்ற அவனது குரல் காதுகளில் மீண்டும் ஒலிக்க, இதுவரை வலியில் சுருங்கியிருந்த அவளது இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.
அதன் பிறகு நேற்றைய சிந்தனை எதுவும் இல்லை. பெண்ணவளின் எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருக்க, எதைப் பற்றியும் யோசிக்காது தன் இரு முழங்காலிலும் முகம் வைத்தபடி ஜன்னல் பக்கம் தெரிந்த கடலின் அழகை ரசனையாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கான காலை உணவுடன் அங்கே வந்தவனோ தன்னவளின் அழகை கதவோரமாக நின்றபடியே ரசித்துக் கொண்டிருந்தான்.
நேற்று இரவு முழுவதும் கண்ணீரில் நனைந்திருந்த அந்த முகம் இப்போது தெளிந்திருக்க, அதில் நேற்றைய வலி இல்லை என்பதே ராவணனுக்கு ஒரு வித நிம்மதியைக் கொடுக்கவும், அதே நிம்மதியுடன் உள்ளே அவன் செல்ல இருந்த கணம், பெண்ணவளின் செயலில் அவன் அப்படியே நின்றுவிட்டான்.
கடலை ரசித்துக் கொண்டிருந்த அஜூதியாவோ, தன்னைத் தன்னவன் பார்த்துக் கொண்டிருப்பது கூட தெரியாது, அப்படியே தான் அணிந்திருந்த அவனது மேல் சட்டையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, பக்கவாட்டாகத் திரும்பி சட்டையின் காலரைப் பற்றி அவன் வாசத்தை நுகர்ந்தாள்.
அவளவனின் மணம்…!
ஆழமாக இழுத்துத் தன் நெஞ்சாங்கூடு எங்கும் நிரப்பிக்கொண்டாள்.
ஏதோ அவனையே அணைத்துக் கொண்டு இருப்பது போல ஒரு பிம்பம்!
நேற்று நிஜத்தில் அணைத்துக் கொண்டு கிடந்தபோது வராத வெட்கம், இப்பொழுது நினைத்ததற்கே வரவும் அஜூதியாவின் முகம் அநியாயத்திற்கு சிவந்து விட்டது.
அதேநேரம் அவளது செய்கையில், காதோரம் ரகசியம் பேசித் தழுவிச் செல்லும் இளந்தென்றல் காற்று, சொல்லாமல் கொள்ளாமல் சட்டென்று தன் தேகத்தை முத்தமிட்டது போல, சிலிர்த்துப் போனான் ராவணன்.
சொல்லத் தெரியவில்லை, ஆனால் அவனுள் எழுந்த உணர்வுகள் அனைத்தும் ஒருமாதிரி அவனைப் படுத்தி எடுத்தது.
புதுசாகவும் இருந்தது.
பிடித்தும் இருந்தது.
ஏதேதோ தோன்றியது.
அணைத்துக் கொண்டு முத்தமிட வேண்டும் போல் இருந்தது.
இருந்தாலும் மிகச் சிரமப்பட்டுத் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவனுக்கு வெட்கத்தையும் புன்னகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
வழக்கம் போல தன் கீழ் அதரத்தை மடித்துத் தன் பற்களிடையே சிறை வைத்தவனுக்கு, இப்பொழுது தன்னவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர, மெதுவாகத் தன் சுயம் மறந்து அமர்ந்திருந்தவளின் அருகே வந்து நின்றவன், மெல்ல குனிந்து அவள் காதில் தன் சூடான மூச்சுக்காற்று தீண்ட,
“அதான் நான் இருக்கேனே” என்று கூறிவிட்டு, தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்று அவளது அதிர்ந்த விழிகளைப் பார்த்து சட்டென்று ஒற்றைக் கண்ணடித்து விட்டு தட்டை டேபிளில் வைக்க,
‘ஐயோ இவர் எப்போ வந்தார்? பார்த்துட்டாரா? இப்போ என்ன சொல்றார்? அவரையும் அணைத்துக் கொண்டு இது போல ஆஹான் குடுப்பாங்க குடுப்பாங்க ஆசை தான்!’ – பெண்ணவளின் இதயம் வேகமாகத் துடித்தது.
அவன் விலகிய நேரம் இவள் வம்படியாக அவனை முத்தமிட்டிருக்கிறாள், கட்டி அணைத்திருக்கிறாள், சீண்டிருக்கிறாள் தான்.
ஆனால் அவன் காதலை அவன் மூலமாக அறிந்த பிறகு, அதுவும் இப்பொழுது அவன் காட்டும் நெருக்கத்திலும் சீண்டல் பேச்சிலும்,
பெண்ணவளுக்கு ஆசையும் வந்தது!
நெஞ்சம் கொஞ்சம் படபடக்கவும் செய்தது!
தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டவள், அப்படியே அமர்ந்திருக்க, இதற்கு மேல் அவளை சங்கடப்படுத்த விரும்பாதவன் அவளை இயல்பாக்கும் பொருட்டு,
“ஹீட்டர் ஆன் பண்ணிருக்கேன். உள்ள உனக்கு வேண்டிய திங்ஸ் இருக்கு. ஃப்ரெஷ் ஆகிட்டு வா, சாப்பிடலாம்” என்று கூறவும், சரி என்பதாய் தன் தலையை அசைத்து விட்டு எழுந்து கொண்டவள், நிலத்தில் தன் கால் வைக்க, நேற்று அளவு இல்லையென்றாலும் இன்று கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.
“ஸ்ஸ்” சிறு முனகலோடு பக்கவாட்டாகத் திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு, ‘நேற்று போல இன்றும் தூக்கிக்கொண்டால் என்ன? நானா கேட்க முடியும்?’ என்று கோபம் வர, ஆனால் அவனோ தன் அலைபேசியில் பிஸியாக இருக்கவும், பெருமூச்சோடு அடுத்த அடி எடுக்கப் போனவளை ராவணன் தன் கைகளுக்குள் அள்ளிக்கொண்டான்.
அஜூதியாவோ அதிர்ந்து அவன் விழிகளைப் பார்க்க, இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொண்டது.
பிறகு மெல்ல அவளை குளியல் அறையில் இறக்கி விட்டவுடன், பாத் டப்பில் உள்ள வெந்நீரின் கொதிநிலையைப் பரிசோதித்து விட்டு, மீண்டும் அவள் சுதாரிப்பதற்குள் அவளைத் தன் கையில் ஏந்திக்கொண்டு தன்னவளை பாத் டப்பிள் மெதுவாக அமர வைத்து, அவள் நெற்றியில் வந்து விழுந்திருந்த முடியை காதோரம் ஒதுக்கி,
“டேக் யுவர் டைம், வெளிய வெயிட் பண்றேன்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு நகர்ந்து விட, சொல்லாமலே தன் தேவை அறிந்து செய்து முடிக்கும் ராவணன் மீது அஜூதியாவுக்கு காதல் கூடிக்கொண்டே சென்றது.
@@@@@@
குளித்து முடித்துவிட்டு, குளியலறைக்கு உள்ளே இருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தவளுக்கு அங்கே அவள் முன் அவளுக்காக இருந்த ஆடை அணிகலன்களைப் பார்த்ததும் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டாலும், முகத்தில் ஒரு வித வெட்க புன்னகை தானாக ஒட்டிக்கொண்டது.
அளவு தெரியாததால் எல்லா அளவிலும் நான்கு ஐந்து இருக்க, இதழ் பிரித்து சிரித்துக் கொண்டவள், அவனை வெகு நேரம் காக்க வைக்க விரும்பாது அவனது கருப்பு நிற ஷர்ட்டுக்குப் பொருத்தமாகத் தானும் அங்கு இருந்த ஒரு கருப்பு நிற கவுனை அணிந்து கொண்டு வெளியில் வர, புன்னகையுடன் அவளை நெருங்கியவன் தன்னவளை கையில் ஏந்த முன்னைந்த கணம், அவன் நெஞ்சில் கரம் வைத்து தடுத்தவள்,
“இப்போ வலி கொஞ்சம் பெட்டரா இருக்கு… நடந்திடுவேன்” என்று கூறி சோஃபாவில் வந்து அமர, ஏற்கனவே தான் எடுத்து வைத்திருந்த முதலுதவிப் பெட்டியுடன் அவள் முன்னால் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், தன் தொடை மீது அவள் பாதத்தை வைத்து, எங்கே வலித்துவிடுமோ என்பது போல மென்மையாக மருந்து போட்டு விட, அஜூதியாவின் விழிகள் அவனைத்தான் ரசித்தது.
நொடிக்கு ஒரு முறை ரசிக்க வைத்துக் கொண்டே இருந்தால் அவள் தான் என்ன செய்வாள்? நாடியில் கைவூன்றி தன்னவனைத்தான் கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ மருந்து போட்டு முடித்ததும் அவள் முகம் பார்த்தவன், அவள் தன்னையே பார்ப்பது தெரிந்ததும்,
“என்ன?” என்பது போல புருவம் உயர்த்த, அவளோ ஒன்றும் இல்லை என்பதாய் தலையசைத்தவள், அவன் விலகவும் சட்டென்று அவன் சட்டையின் காலரைப் பற்றிக்கொள்ள, இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்தது.
சில நொடிகள் அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது தாடியடர்ந்த கன்னத்தை மெதுவாக வருட, ராவணனின் கண்கள் மெதுவாக மூடிக்கொண்டது.
அதை கண்டு மென்மையாகப் புன்னகைத்தவளோ, அவனது இரு கன்னங்களையும் தன் கையில் ஏந்திக்கொண்டு மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டவள், என்ன நினைத்தாளோ சட்டென்று அவன் இதழில் லேசாக பட்டும் படாமல் தன் இதழை வைத்துவிட்டு எடுத்துவிட, ராவணனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
முத்தமிடப் போகிறாள் என்று தெரியும். அதிகபட்சமாக கன்னத்தில் கொடுப்பாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ அவனது இதழைத் தீண்டியிருக்க, அவனது உணர்வுகள் ஆர்ப்பரிக்கத் துவங்கியது.
இப்பொழுது பதில் முத்தம் அவன் வழங்க வேண்டும்.
அவளது எதிர்பார்ப்பும் அதுதான். அலைபாயும் அவளின் விழிகளைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது.
முத்தத்துடன் நிறுத்திவிட முடியும் என்றால் பரவாயில்லை. ஆனால் அவளால் அவனுள் உண்டான உணர்ச்சி அலைகள் பேராசை கொண்டு மொத்தமும் வேண்டும் என்று பேயாட்டம் போடுகின்றதே.
என்ன செய்ய?
இதற்காகவா இங்கே அழைத்து வந்தான்?
நேற்று அவள் இருந்த நிலையைப் பார்க்க முடியாது, அவளை மனதளவில் தேற்றி, பழைய நிலைக்கு அவளை கொண்டு வரத் தானே அழைத்து வந்தான்.
அதுவும் நேற்று துவங்கி இந்த நொடி முதல், தன்னிடம் ஒரு கேள்வி கூட கேட்காது தன்னோடு இருப்பவளின் கண்ணியம், தன் உணர்வுகளைத் தாண்டி பெரிதல்லவா என்று எண்ணியவன்.
செய்வதறியாது அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனது எண்ணங்களை அவன் சொல்லாமலே புரிந்து கொண்டவளோ அவனை சங்கடப்படுத்த விரும்பாது,
“என்ன… உங்களச் சாப்பிடுற எண்ணமெல்லாம் இல்லை?” என்று அவன் விரிந்த விழிகளைப் பார்த்து கேலியாகச் சொல்லவும், தன் குரலைச் செருமிக்கொண்டவன் பதிலுக்கு,
“நான் வேண்டாம்னு சொல்லலையே” என்று சீண்டலுடன் சொல்லிவிட, முத்தம் என்ன முத்தம்… நுனி விரல் கூட தீண்டாது தன்னவளை சிவக்க வைத்து விட, தடுமாறியவளோ,
“ஹான்… ரொம்ப நேரம் ஆகிடுச்சுல, அதான் பசிக்குது” சமாளிப்புடன் கூற, அவனோ,
“எனக்கும் தான்” என்று கண்ணடிக்க, அவளால் அவனது பார்வையின் வீச்சைத் தாங்க முடியவில்லை.
ஒருவித படபடப்புடன் அமர்ந்திருந்தவளின் தவிப்பை ரசித்தவன். அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அவளுக்கு உணவைப் பரிமாறிவிட்டு, தானும் உணவை உண்ண ஆரம்பித்துவிட, வார்த்தைகள் தாண்டி இருவரின் இதயங்களும் பேசிக்கொண்டன.