ராவணா 44

ராவணனின் ஆஃபிஸ், வீடு என்று அதிகாரிகள் சல்லடை போட்டுத் தேட, ராவணனின் முகமோ எந்த உணர்வையும் காட்டாது மிகவும் நிர்மலமாக இருந்தது.

அவன் கார் ஷோரூமில் இருந்த அனைத்து கார்களின் சீட்டுகளும் கிழிக்கப்பட்டபோதும் சரி, முக்கிய ஆவணங்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டபோதும் சரி, அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

அவனது உணர்வுகளை எதிர்பார்த்து அவன் முகத்தையே பார்த்த ஆத்மனுக்கோ, படுதோல்வியே மிஞ்சியது.

அப்பொழுது காவலர்கள், 

“சார், டிரக்ஸ் கிடைச்சிருச்சு” என்று ஆத்மனிடம் குரல் கொடுக்கவும் இகழ்ச்சியாகச் சிரித்தவன்,

“எவ்வளவு பெரிய விஷயத்துல நீ சிக்கியிருக்கன்னு உனக்குத் தெரியுதா?” அதே பாவனையோடு கேட்டான்.

அதற்கு எந்தப் பதிலும் சொல்லாத ராவணன் நிமிர்ந்து நின்று ஆத்மனின் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க,

ஆத்மனுக்குக் கோபம்தான் வந்தது.

“என்ன பண்ணினாலும் வெளிய வர முடியாது, வரவும் விட மாட்டேன் ” பல்லைக் கடித்துக்கொண்டு சீறினான்.

‘அதையும் பார்ப்போம்’ என்பது போல ராவணன் தெனாவட்டாகப் பார்க்க, ஆத்மனுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.

அன்று தான் கலங்கி நின்றது போல ராவணனும் கலங்கி நிற்க வேண்டும் என்று எல்லாம் செய்த ஆத்மனோ, அது நடக்காமல் போகவும் ராவணனின் உறுதியில் பல்லைக் கடித்தான்.

அப்பொழுது அங்கு வந்த காவலர்கள், “சார், மேலே இருக்கிற ரூமைத் தவிர மற்ற எல்லா இடத்துலயும் செக் பண்ணியாச்சு” என்று சொல்ல,

பறிமுதல் செய்யப்பட்டவற்றை வண்டியில் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டவன், இப்பொழுது ராவணனைப் பார்க்க, அவனோ,

“அதான் வச்சதை எடுத்தாச்சுல்ல கிளம்பலாம், அந்த ரூமெல்லாம் திறக்க முடியாது” என்றான் இறுக்கமாக.

அவனது பதிலில் புருவம் சுருக்கிப் பார்த்த ஆத்மன், வேண்டுமென்றே ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற வெறியில் நேரே மேலே இருக்கும் ராவணனின் அறையை நோக்கிச் சென்று, தன்னுடன் வந்த காவலர்களைப் பூட்டை உடைக்கச் சொல்லி உத்தரவிட்டான். 

அடுத்த நிமிடம் பூட்டு உடைபடவும், ராவணனின் உணர்வுகளை அவதானித்துக்கொண்டே அறையின் கதவில் கை வைத்தான்.

அப்பொழுது ஆத்மனின் கரத்தைப் பிடித்துக்கொண்ட ராவணன்,

“அங்க வேண்டாம்” என்று அழுத்தமாகச் சொல்ல,

“தள்ளுடா,” என்றபடி ஒருவித அலட்சியப் பார்வையுடன் அவனது கையைத் தட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் ஆத்மன்.

அறைக்குள் நுழைந்தவனின் பார்வை அங்கிருந்த அலங்காரங்களை நோட்டமிட, அவன் பார்வையில் அத்தனை வக்கிரம்.

வெள்ளை விரிப்பில் ஆங்காங்கே ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்த கட்டிலைப் பார்த்தவன்,

“ஓ இதான் காரணமா? ச்ச்” என்று நக்கலாக உச்சுக்கொட்டினான்.

அதன் பின் ராவணனின் முகமாற்றத்தைத் திருப்தியாக உள்வாங்கிக்கொண்டு, வேண்டுமென்றே ராவணனைப் பார்த்தபடி அந்தக் கட்டிலில் அநாகரிகமாகப் படுத்தவன், அங்கிருந்த ரோஜா இதழ்களை விரல்களால் வருடியபடி,

“ம் அழகான பொண்ணு என்ன செய்ய? யாருக்குக் கொடுத்து வச்சிருக்கோ!” என்று பெருமூச்சு விட்ட அடுத்த நொடி,

நரம்பு புடைக்க, தன் ஒற்றைக் கரத்தால் அந்த மரக்கட்டிலின் ஒரு புறத்தைத் தூக்கியவன், ஆத்மன் சுதாரிப்பதற்குள் அப்படியே அதை வேகமாகச் சுவரை நோக்கி வீசினான்.

ராவணனின் அந்த அதிரடித் தாக்குதலில், ஒற்றைக் கால் கட்டிலுக்கு வெளியே கிடக்க, படுத்திருந்த ஆத்மனின் முட்டி அவன் சுதாரிப்பதற்குள் சுவரில் பலமாக மோதி கடுமையான வலியை அவனுக்கு ஏற்படுத்த, அடுத்த நொடி கட்டில் தரையில் வந்து விழுந்த சத்தத்தில் அறையே அதிர்ந்தது.

அதோடு நிறுத்தாத ராவணனோ, கட்டிலில் இருந்து ஆத்மனின் சட்டையைப் பற்றி இழுத்து நிறுத்தியவன்,

“தொலைச்சிருவேன்!” என்று பற்களைக் கடித்தபடி மிரட்டிய மறுகணம்,

ஆத்மனோ அவனது பிடியிலிருந்து திமிராக விலகி,

“டூட்டில இருக்கிற போலீஸ் மேலேயே கை வைக்கிறியா? ஹான்” என்று கத்தியவன், தன்னைச் சுற்றியிருந்த போலீஸாரை நோக்கி,

“அரெஸ்ட் ஹிம்!” என்று கட்டளையிட்டான்.

@@@@@@

மணவறையில் அமர்ந்தபடி, ஆதரவின்றித் தனியாகக் கிடந்த பொன்மஞ்சள் தாலியை வெறித்தபடி இருந்த அஜூதியாவை என்ன சொல்லிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் அனைவரும் கவலையில் இருக்க,

தன்னைத் திடப்படுத்திக்கொண்ட இந்திராவோ, கண்ணீரைத் துடைத்தபடி அஜூதியாவிடம் வந்து,

“வீட்டுக்குப் போலாம் பா,” என்றாள்.

அதற்கு மறுப்பாகத் தலையசைத்தவளோ,

“அவர் வருவார் வந்ததும் போலாம்,” என்று தீர்க்கமாகக் கூறினாள்.

அவளது கண்களோ இன்னமும் அந்தத் தாலியையே வெறித்துக்கொண்டிருந்தன.

எல்லோருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்திருக்க, எல்லாமே கைமீறிப் போயிருந்தது.

லாயர் வந்து அனைத்தையும் சொன்னபொழுது, எல்லாருக்கும் அனைத்துக் கதவுகளும் அடைபட்ட உணர்வுதான் இருந்தது.

ஏதோ விசாரணை வேண்டுமென்று சீண்டியிருக்கிறான், விசாரணை முடிந்து ராவணனை அழைத்து வந்துவிடலாம் என்று எல்லாரும் நினைத்திருக்க, இப்படி ஆத்மன் வீடு, ஆஃபிஸ் வரை வந்து திட்டம் போட்டு வஞ்சிப்பான் என்று யாருமே எண்ணவில்லை.

விடியற்காலை சந்துரு வந்து, “எல்லாம் ரெடி அண்ணா, உள்ள வைக்கச் சொல்லியிருக்கேன்” என்று சொன்னதும், மண்டபத்திலிருந்து வீட்டுக்குக் கிளம்பிய ராவணனைத் தடுத்தவன், 

“நீங்க ஏன் அண்ணா போறீங்க? நாங்க பார்த்துக்கிறோம்” என்று சொன்னதற்கு கூட,

“இல்லை நான் பார்த்துக்கிறேன்டா” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றானே!

ஆக, ராவணன் வீட்டுக்குப் போய்விட்டு மீண்டும் மண்டபத்துக்கு வந்த பிறகுதான் இவ்வளவையும் ஆத்மன் செய்திருக்கிறான், கிட்ட தட்ட அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் ஒவ்வொருவரின் அசைவுகளையும் கவனித்திருக்கிறான்.

நாம் முட்டாளாக இருந்திருகிறோம்!

எண்ணும்பொழுதே சந்துருவுக்கு, ஆத்மனைக் கொன்று போடும் ஆத்திரம் வந்தது.

ஆனால், அதற்கான நேரம் இது அல்லவே!

“வேற வழியே இல்லையா சார்? அண்ணனை இன்னைக்கு பெயில் எடுக்க முடியாதா?” லாயரிடம் வினவினான் சந்துரு.

அதற்கு அவரோ,

“இது டிரக் கேஸ் (Drug Case). கிலோ கணக்குல போதைப் பொருள் பறிமுதல் பண்ணியிருக்காங்க. அவங்ககிட்ட ஸ்ட்ராங் எவிடென்ஸ் (Strong Evidence) இருக்கு. இப்போ உடனடியாக அவரை வெளியே எடுக்குறது ரொம்ப கஷ்டம்.

ராவணனை கஸ்டடி எடுக்க போலீஸ்க்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. இன்னும் ரெண்டு நாள் கோர்ட் லீவு. நம்மளால உடனடியாக எதுவும் பண்ண முடியாது.

மேல இருந்து பிரஷர் கொடுத்தாலும் ஆத்மன் கண்டுக்கவே மாட்டேங்கிறான். இப்போ பிரச்சனை ராவணன் வீட்டுக்கு வர்றதுல இல்லை.

இன்னைக்கு விசாரணை முடிஞ்சதும், நாளைக்குள் அவரை ஜூடிஷியல் கஸ்டடிக்கு அனுப்ப வாய்ப்பு இருக்கு. அங்க அவரு பாதுகாப்பா இருக்கணும்.

ஆத்மனோட பிஹேவியர் பார்த்தா சந்தேகமா இருக்கு. ஸீ (See) நான் என் சைட்ல உள்ள எல்லாத்தையும் பார்த்துக்குவேன். நீங்க அவரோட பாதுகாப்பை மட்டும் உறுதி பண்ணிக்கோங்க,” என்றார்.

வீடு, ஆஃபிஸ் என்று ராவணன் சார்ந்திருந்த எல்லா இடங்களிலிருந்தும் கிலோ கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

அதில் எதுவுமே உண்மை இல்லை என்றாலும், அவன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிக்காமல் ராவணனால் எங்கும் வர முடியாது.

இந்த உண்மையை அஜூதியாவிடம் எப்படிச் சொல்வது?

சொன்னால் தாங்குவாளா?

எப்படி முடியும்?

“வந்துவிடுவேன்” என்று அவன் சொன்ன ஒரு வார்த்தையை மட்டும் நம்பி, சிலை போல மணிக்கணக்கில் அமர்ந்திருப்பவளுக்கு, அவன் வர மாட்டான் என்று தெரிந்தால் நொறுங்கிப் போய்விடுவாளே!

அவளது விழிகள் இன்னமும் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தன.

அவளோ, ‘தியா’ என்ற தன்னவனின் அழைப்பிற்காக ஏங்கிக்கொண்டிருக்க,

“அஜூ” மீண்டும் இந்திராதான் அழைத்தாள்.

அஜூதியாவின் இந்த வெறித்த தோற்றம் பயத்தைக் கொடுத்திருக்க, எங்கே இப்படியே விட்டால் இவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்தவள்,

“சொன்னா கேளு, வீட்டுக்கு வா பொறுமையா பேசலாம்” என்றாள்.

“என்ன பேசிட்டு இருக்க? அதான் அவர் வருவாருன்னு சொல்றேன்ல, உனக்கு வேணும்னா நீ போ,” என்க, அதில் கோபம் கொண்ட இந்திரா,

“புரிஞ்சுக்கோ அஜூ, உன்னை இப்படி பார்க்க பயமா இருக்கு. முதல்ல என் கூட வா,” என்றாள் அழுத்தமாக.

ஆனால் அஜூதியாவோ,

“அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் மறுத்துவிட, அதில் இன்னுமே ஆத்திரம் கொண்டவள், 

“அவர் வர மாட்டாருடி!” என்றாள் சத்தமாக.

அதைக் கேட்ட அஜூதியாவோ கண்களில் நீர் திரள, 

“அவர் வருவாரு இந்து” என்று உடைந்த குரலில் பாவம் போல சொல்லவும், அவளை அணைத்துக்கொண்ட இந்திராவுக்குக் கண்ணீர் முட்டியது. 

அவர்களை பார்த்த அனைவருக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

தோழியின் கண்ணீரில் என்ன உணர்ந்தாளோ, நிதானமாய் அனைவரின் சோர்ந்த முகத்தையும் பார்த்த அஜூதியாவுக்கு அவர்கள் சொல்லாமலே ஏதோ புரிவது போல தோன்றவும், இப்பொழுது தன் தோழியிடம், 

“எனக்கு அவரைப் பார்க்கணும்” என்றாள் கெஞ்சலாக.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top