❤️அத்தியாயம் 《18》

“சித்தி! என்னையே அவமானப்படுத்திட்டீங்க! இருங்க… சித்தப்பாகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு முடிவு கட்டுறேன்!” என்று சிணுங்கினாள் மீனாட்சி.

ஜானகி அதைச் சிரித்துக்கொண்டே கடந்து சென்றார். “போடி… உன் சித்தப்பா எனக்கே பயந்து எங்கயோ ஓடி ஒளிஞ்சுட்டாரு! நீ போய் புகார் சொல்லு!”

மித்ரன் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த மீனாட்சிக்குக் கோபம் உச்சிக்கேறியது.

‘இவன் சிரிப்பை இன்னைக்கே அடக்கியே ஆகணும்…’, என்று மனதிற்குள் சபதம் எடுத்தாள்.

மெல்ல அவன் அருகே வந்து, “டீ கேட்டீங்கள்ல… இருங்க, இதோ போட்டுட்டு எடுத்துட்டு வர்றேன்,” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

மித்ரன் குழப்பமடைந்தான்.

‘இவ்வளவு ஓட்டு ஓட்டுறோம்… ஆனா இவ என்னடான்னா சிரிச்சுக்கிட்டே டீ கொண்டு வர்றேன்னு சொல்றாளே… ஒருவேளை லூசா இருக்குமோ?’

என்று நினைத்தபடி சோபாவில் அமர்ந்தான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, மீனாட்சி ஒரு அழகான டீ கப்புடன் வந்து, “இந்தாங்க… உங்க ஸ்பெஷல் டீ!” என்று நீட்டினாள்.

மித்ரன் ஆர்வமாக அதை வாங்கி ஒரு பெரிய மிடறு குடித்தான். அடுத்த நொடியே…

“ப்ஹூ!” என்று அப்படியே கீழே துப்பிவிட்டு அலறினான். நாக்கு எரிய, கப்பை மேசையில் படார் என்று வைத்துவிட்டு, கொலைவெறியுடன் அவளை முறைத்தான்.

மீனாட்சி கைகளைக் கட்டிக்கொண்டு நக்கலாகச் சிரித்தாள்.

“எப்படி இருந்துச்சு? எங்க வீட்டு ஸ்பெஷல் மிளகாய்ப்பொடி டீ!”

மித்ரன் பற்களைக் கடித்தபடி, “அடிப்பாவி! பக்கத்துல வாடி… உன்னை என்ன பண்றேன்னு பாரு!” என்று எழுந்தான்.

“போடா!” என்று கத்தியபடியே சிரித்துக்கொண்டு ஓடினாள் மீனாட்சி.

அப்போது அங்கே வந்த வள்ளியம்மை, “தம்பி… ஆரியனையும் ருத்ரனையும் கொஞ்சம் எழுப்பிடுறியா? நேரம் ஆகுது,” என்றார்.

“சரிங்க அத்தை,” என்று சொல்லிவிட்டு மித்ரன் அறைக்குள் சென்றான்.

ருத்ரனின் அறையில் அவன் இல்லை. ‘சரி… ஆரியன் அறையில் இருப்பான்’ என்று நினைத்து அங்கே சென்றான். ஆனால் அங்கும் யாரும் இல்லை. குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டதால், ஆரியன் குளித்துக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து வெளியே வந்தான்.

கடைசியாக நந்திதாவின் அறைக்கதவைத் தட்டினான். கதவைத் திறந்த ருத்ரனைப் பார்த்ததும், மித்ரனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“டேய்! நீ இங்க என்னடா பண்ற?” என்று பதற்றத்துடன் கேட்டான்.

ருத்ரன் சாதாரணமாக, “ஏன்டா இப்படி ஷாக் ஆகுற? என் பொண்டாட்டி ரூமுக்குள்ள நான் இருக்கிறதுல என்ன தப்பு?” என்றான்.

“யாராவது பார்த்தா என்ன ஆகும்னு யோசிச்சியா? உனக்கு ஒண்ணும் ஆகாது… ஆனா என் அக்காவைப் பத்தி யாராவது தப்பாப் பேசினா நான் என்ன பண்றது? முதல்ல நீ உங்க வீட்ல எல்லாத்தையும் சொல்லு. அதுக்கப்புறம் ஒரே ரூம்ல இல்ல… எங்க வேணாலும் இருந்துக்கோ!” என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அடுத்த இரண்டு நாட்களும் மித்ரன் சொன்ன வார்த்தைகளே ருத்ரனின் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தன. அதனால், நந்திதாவின் அறைக்குச் செல்வதைத் தவிர்த்தான்.

ஆரியனும் யஷ்வியிடம் பேசத் துடித்தான். ஆனால் வீட்டில் இருந்த கூட்டமும், ஜமுனாவின் கண்காணிப்பும் அவனைத் தடுத்தன.

கோவில் திருவிழா…

அன்று காலை வீடு முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

ஊரே அந்தத் திருவிழாவிற்காகக் காத்திருந்தது. பெண்கள் பூஜைத் தட்டுகளைத் தயார்செய்துக்கொண்டிருந்தனர்.

வள்ளியம்மை பாசத்தோடு நந்திதாவுக்கும் யஷ்விக்கும் தலா ஒரு பூஜைத் தட்டைக் கொடுத்தார்.

அதைப் பார்த்த ஜமுனாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.

“என்ன அண்ணி இப்படிப் பண்றீங்க? வீட்டுக்கு விருந்தாளியா வந்த பொண்ணுங்க கையில போய் முதல்ல பூஜைத் தட்டைக் கொடுக்குறீங்களே!” என்று உரத்த குரலில் கேட்டார்.

அங்கே ஒரு கணம் மயான அமைதி நிலவியது.

கீதா மெல்லப் புன்னகைத்து, “நாங்க அப்படிப் பார்க்கல அண்ணி… இந்த ரெண்டு பேரும் எங்க வீட்டுப் பொண்ணுங்க மாதிரிதான்,” என்று நிலைமையைச் சமாளிக்க முயன்றார்.

ஆனால் ஜமுனா விடவில்லை.

“இருந்தாலும் ஒரு முறைன்னு ஒண்ணு இருக்குதே அண்ணி… இவங்க யாருன்னே தெரியாம இப்படித் தலையில தூக்கி வச்சு ஆடுறது சரியில்லை,” என்று சொல்லிவிட்டு, தன் மகள்களை அழைத்து, நந்திதா மற்றும் யஷ்வியின் கைகளிலிருந்த பூஜைத் தட்டுகளைப் பிடுங்கி அவர்களிடம் கொடுத்தார்.

சுஜித்ராவும் தாரணியும் வெற்றிப் புன்னகையுடன் அந்தத் தட்டுகளை வாங்கிக்கொண்டனர்.

நந்திதாவும் யஷ்வியும் செய்வதறியாமல் ஒரு கணம் திகைத்து நின்றனர்.

ஜமுனா அவ்வாறு தட்டுகளைப் பிடுங்கியபோது ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

‘யாரோ ஒருவருக்காக திருவிழா சந்தோஷத்தை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?’ என்று நினைத்த அவர்கள் அமைதியாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.

கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், கூட்டம் ஒவ்வொரு பக்கமாகப் பிரிந்தது.

மீனாட்சி, யஷ்வி மற்றும் நந்திதாவை அழைத்துக்கொண்டு, ஊரின் திருவிழா வரலாறுகளையும் பழக்கவழக்கங்களையும் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டே நடந்தாள்.

அப்போதுதான் அவளது பார்வை ஒரு காட்சியில் நிலைத்தது.

சற்று தொலைவில், மித்ரன் இரண்டு பெண்களுடன் நின்றுகொண்டு, உலகமே மறந்தது போலச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததும் மீனாட்சியின் உள்ளத்தில் ஏதோ ஒரு எரிச்சல் எழுந்தது.

உடனே நந்திதாவிடம் திரும்பி,

“நீங்க ரெண்டு பேரும் போங்க… நான் இதோ ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்,” என்றாள்.

“தனியா எங்க போற மீனா?” என்று நந்திதா கேட்டாள்.

“பக்கத்துலதான் அக்கா… சீக்கிரம் வந்துடுவேன்,” என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமலே மித்ரனை நோக்கி வேகமாக நடந்தாள்.

நேராக அவன் முன்னால் சென்று நின்றாள்.

அவளைப் பார்த்ததும் மித்ரன் குழப்பமாக,

“இங்க என்ன பண்ற? அத்தை தேடுவாங்க… போ,” என்றான்.

மீனாட்சி அவனை முறைத்துக்கொண்டே,

“அண்ணன் உங்களைக் கூப்பிட்டாரு,” என்றாள்.

“சரி… நீ போ. நான் இதோ வரேன்,” என்றான் மித்ரன் அலட்சியமாக.

அப்போது அருகில் இருந்த பெண்களில் ஒருத்தி,

“யாருப்பா இது? உன் ரிலேஷனா?” என்று கேட்டாள்.

மித்ரன் பதில் சொல்ல வாய்திறப்பதற்குள், மீனாட்சி முந்திக்கொண்டாள்.

“இவரைக் கட்டிக்கப் போறவ நான்!” என்று உறுதியாகச் சொன்னாள்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் மித்ரன் அப்படியே உறைந்து நின்றான்.

அந்தப் பெண்கள் ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு,

“ஓ… அப்படியா! ரொம்ப சந்தோஷம். ஜோடி சூப்பரா இருக்குப்பா! சரி வா… இவங்க ரெண்டு பேரும் தனியா பேசட்டும். நாம கிளம்பலாம்,” என்று சொல்லிவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தனர்.

அவர்கள் சென்றதும், மித்ரன் எரிமலையாக வெடித்தான்.

“விளையாடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு மீனா! என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?”

மீனாட்சி சற்றும் பதற்றப்படாமல் அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.

“யார் விளையாடுறா? நான் உண்மையைத்தான் சொன்னேன்… நான் உங்களை லவ் பண்றேன்!”

மித்ரன் அதிர்ச்சியில் திகைத்துப் போனான்.

“லூசாடி நீ?”

“இப்பதான் நான் உங்களை நேர்ல பார்க்கிறேன் மித்ரன். ஆனா ருத்ரன் அண்ணா உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காரு. உங்க கேரக்டர் பிடிச்சுப்போய் அப்பவே மனசுல ஒரு இடம் கொடுத்துட்டேன்.

இப்போ நேர்ல பார்த்ததும் அது காதலா மாறிடுச்சு.

நீங்க ஓகே சொன்னா… இப்போவே வீட்டிலேயே சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்,” என்றாள் துணிச்சலாக.

மித்ரன் தலையில் கை வைத்துக்கொண்டான்.

“லூசு மாதிரி உளறாதே… போடி அங்கிட்டு!” என்று கத்திவிட்டு, திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றான்.

மீனாட்சி அங்கேயே நின்று, அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் இதழ்களில் குறும்பான புன்னகை விரிந்தது.

‘இப்போ போடா… நாளைக்கு நீயே என் பின்னாடி வந்து நிற்ப. அப்போ இருக்கு உனக்கு!’ என்று மனதிற்குள் சவால் விட்டுக்கொண்டாள்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top