❤️அத்தியாயம் 《25》

நந்திதா தன் அம்மா காயத்ரியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“அம்மா, அவனுக்குத் தெரியாமலேயே பொண்ணு பார்த்துட்டோமே? அவனுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!” என்று கவலையுடன் சொன்னாள்.

“தெரிஞ்சா என்ன பண்ணுவான்? இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள நான் அவனைச் சமாளிச்சிடுவேன். நீயும்தான் பேசினியே, அந்த வீட்டு ஆளுங்க எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கன்னு. உன் வீட்டு ஆளுங்க மாதிரியே இருக்காங்க. அந்தப் பொண்ணு மும்பையில படிச்சிருந்தாலும், இப்போ அவங்க அப்பா பிசினஸைப் பார்த்துட்டு எவ்வளவு அடக்கமா பேசுறா! பார்க்கவே ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுது,” என்றார் காயத்ரி.

“ஓ! இப்பவே உன் மருமகளுக்குச் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டியா?” என்று நந்திதா கிண்டலாகக் கேட்க,

“ஆமா. எப்படியும் பக்கத்துல இருக்கப்போறவ என் மருமகதான். அப்போ அவளுக்குத்தானே சப்போர்ட் பண்ணுவேன்!” என்றார் காயத்ரி உறுதியாக.

“சரி சரி… நீ உன் மருமகளுக்கே சப்போர்ட் பண்ணு. நான் இன்னைக்கு ஈவினிங் கிளம்பிடுவேன். நாளைக்கு மீனா வர்றா. நான் போகணும்,” என்றாள் நந்திதா.

“சரிம்மா… அப்போ காமாட்சி அம்மாவுக்குப் பிடிச்ச பலகாரம் செஞ்சு தர்றேன். கொண்டு போய்க் கொடு,” என்றார் காயத்ரி.

“அம்மா… நான் பிளைட்ல போறேன். பலகாரம் எல்லாம் என்னால தூக்கிட்டுப் போக முடியாது,” என்று நந்திதா மறுக்க,

“ஐயோ… கொஞ்சம்தான்டி! கொண்டு போயேன்,” என்று எதையும் கேட்காமல் சமையலறையை நோக்கிச் சென்றார் காயத்ரி.

 

அடுத்த நாள் மதியம்…

மீனாட்சி வீட்டுக்கு வந்தாள். வந்த வேகத்தில் ஓடிச் சென்று தன் பாட்டியையும் சித்தியையும் கட்டியணைத்துக் கொண்டாள்.

“எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பீங்களே?” என்று வாஞ்சையோடு கேட்டாள்.

“ஆமாண்டி… நாங்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம். அதுக்குள்ள வந்துட்டியே!” என்று பாட்டி விளையாட்டாகச் சொல்ல,

“எனக்குத் தெரியும் பாட்டி… நீ ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பன்னு!” என்று சிரித்தாள் மீனாட்சி.

சற்று நேரத்திற்குப் பிறகு,

“ஆமா… எங்க அண்ணியைக் காணோம்?” என்று மீனாட்சி கேட்டாள்.

“அவ தம்பி மித்ரனுக்குப் பொண்ணு பார்த்திருக்காங்களாம். அது விஷயமாப் பேசி முடிக்கப் போயிருக்கா,” என்றார் வள்ளியம்மை.

அதைக் கேட்ட மாத்திரத்தில் மீனாட்சிக்கு இதயமே நின்றுவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

“என்னம்மா சொல்றீங்க? எப்போ போனாங்க அண்ணி?” என்று தவிப்புடன் கேட்டாள்.

“உங்க அண்ணி போயிட்டு ரெண்டு மூணு நாள் ஆகுது. நேத்து நைட் கால் பண்ணா. பேசி முடிச்சாச்சு, நாளைக்கு வந்துடுவேன்னு சொன்னா,” என்றார் பாட்டி.

“ஓ… சரி பாட்டி. எனக்குத் தலைவலிக்குது… நான் ரூமுக்குப் போறேன்,” என்று கூறிவிட்டு, அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் தன் அறைக்குள் சென்றாள்.

கதவைத் தாழிட்டவள், அப்படியே கதவில் சாய்ந்து நின்று அழ ஆரம்பித்தாள்.

“அப்போ நான் சொன்ன காதலுக்கு அவ்வளவுதானா? மித்ரன் என்னைப் பற்றி கொஞ்சம்கூட யோசிக்கலையா? நான்தான் அவனை நினைச்சுப் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன். அவன் இன்னொரு கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டானே… அதுவும் சரிதான். அவன் என்ன, என்னையா காதலிக்கிறான்?” என்று மனதிற்குள் குமைந்து அழுதுகொண்டே, எப்போது உறங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை.

 

மாலை வேளையில் வேலை முடிந்து வந்த ருத்ரன், கூடவே நந்திதாவையும் அழைத்து வந்தான். அவர்கள் கார் வீட்டினுள் நுழைந்த அதே சமயம், பின்னால் வந்த காரிலிருந்து ஆரியனும் இறங்கினான்.

நந்திதாவைப் பார்த்ததும் ஆரியன்,

“கல்யாண விஷயமெல்லாம் என்ன முடிவாச்சு, நந்திதா?” என்று கேட்டான்.

“எல்லாம் பேசி முடிச்சாச்சு,” என்று அவள் சொல்ல, மூவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

வீட்டின் வரவேற்பறையில் பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

இவர்களைக் கண்டதும் பாட்டி,

“வாம்மா நந்திதா! எப்படி இருக்க? உங்க அம்மா நல்லா இருக்காங்களா?” என்று நலம் விசாரித்தார்.

“நல்லா இருக்காங்க பாட்டி,” என்றாள் நந்திதா புன்னகையுடன்.

“போன காரியம் என்ன ஆச்சு?” என்று பாட்டி மீண்டும் வினவ,

“அதான் போன்ல சொன்னேனே பாட்டி… எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்க,” என்றாள்.

“ரொம்ப சந்தோஷம்! எல்லாம் நல்லபடியா நடக்கும்,” என்று வாழ்த்தினார் பாட்டி.

அப்போது ருத்ரன்,

“பாட்டி, மீனா வந்துட்டாளா?” என்று கேட்டான்.

“ஆமாப்பா. அவ மதியமே வந்துட்டா. ரொம்ப களைப்பா இருக்குன்னு சொல்லிட்டு ரூமுக்குத் தூங்கப் போயிட்டா,” என்றார் பாட்டி.

“இவ்வளவு நேரமாவா தூங்குறா?” என்று ஆரியன் ஆச்சரியமாகக் கேட்க,

“ஆமாப்பா,” என்றார் வள்ளியம்மை.

“சரி,” என்று சொல்லிவிட்டு, ருத்ரனும் ஆரியனும் தங்கள் அறைகளுக்குச் சென்றார்கள். நந்திதா அங்கிருந்த பெண்களோடு பேச்சில் மூழ்கினாள்.

 

இரவு உணவு நேரத்தில்தான் மீனாட்சி வெளியே வந்தாள்.

எப்போதுமே கலகலப்பாக இருக்கும் அவள், இன்று மிகவும் அமைதியாகச் சாப்பிடுவதை கவனித்த ருத்ரன்,

“என்னாச்சு மீனா? உடம்பு சரியில்லையா? ஒரு மாதிரியா இருக்க?” என்று அக்கறையுடன் கேட்டான்.

“இல்லண்ணா… நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருந்தபோது, ஆரியன் மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்.

“மீனா… உனக்குக் கல்யாணம் பண்ணணும்னு வீட்டுல எல்லாரும் ஆசைப்படுறாங்க. நீ என்ன சொல்ற?”

அவன் கேட்டதைக் கேட்டு மீனாட்சி அதிர்ந்து போனாள்.

“என்னண்ணா சொல்றீங்க? எனக்கு ஏன் இப்பவே கல்யாணம்?”

“உன் படிப்பு முடியப் போகுதுதானே? அப்போ கல்யாணம் பண்றதுக்கும் சரியா இருக்கும்,” என்றான் ருத்ரன்.

“அண்ணா… இப்போதைக்கு வேண்டாமே…” என்று அவள் தயங்க,

“ஏன் வேண்டாம்? சரியான காரணத்தைச் சொல்லு,” என்று ஆரியன் அழுத்தமாகக் கேட்டான்.

காரணத்தைச் சொல்ல முடியாமல் மீனாட்சி திணறுவதைக் கண்ட பாட்டி, அவள் அருகில் வந்து அமர்ந்தார்.

“இங்க பாரு மீனா… உன் அண்ணன் கல்யாணம்தான் தாத்தா ஆசைப்பட்ட மாதிரி நடக்கல. அதனால உன் கல்யாணத்தையாவது அவர் ஆசைப்படி நடத்தணும்னு பார்க்குறாரு. தாத்தா முன்ன மாதிரி இல்லம்மா. என்கிட்டயே சரியா பேசுறது இல்ல. நீ சொல்லப்போற முடிவில்தான் நம்ம வீட்டோட சந்தோஷம் திரும்ப வர்றது இருக்கு,” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

உடனே ருத்ரன் குறுக்கிட்டு,

“பாட்டி, ஏன் இப்படிப் பேசி அவளைக் கட்டாயப்படுத்துறீங்க? அவளுக்கு விருப்பம் இருந்தா மட்டும்தான் இந்தக் கல்யாணம் நடக்கும்,” என்று உறுதியாகச் சொன்னான்.

மீனாட்சி அனைவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க. யோசிச்சு என் முடிவைச் சொல்றேன்,” என்றாள்.

அனைவரும் அவளுடைய முடிவுக்குச் சம்மதித்தார்கள்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top