“ஏய்… சொன்னா கேளுடி! அழாதன்னு சொன்னா அழாம இருக்க மாட்டியா? இன்னும் கொஞ்ச நேரத்துல லிப்ட் சரியாகிடும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு!” என்று சற்றுக் கோபமாகவே கத்தினான் ஆரியன்.
அவன் குரல் கேட்டதும், உள்ளே யஷ்வியின் அழுகைச் சத்தம் சட்டெனக் குறைந்து தேம்பலாக மாறியது.
வெளியே நின்றுகொண்டிருந்த ஆரியனுக்கும் ஒரு நிமிடம் மனம் சங்கடமாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு ருத்ரன் ஆரியனுக்கு போன் செய்தான்.
“அண்ணா, இன்னும் அஞ்சு நிமிஷத்துல லிப்ட் சரியாகிடும்!” என்றான் ருத்ரன்.
“சரிடா… நீங்களும் மித்ரனும் கீழே வாங்க,” என்று போனை வைத்த ஆரியன், அங்கிருந்த கூட்டத்தினரை சற்று விலகி நிற்குமாறு கூறினான்.
அவன் சொன்னதும் அனைவரும் சற்று தள்ளி நின்றனர். ஆரியன் மட்டும் லிப்ட் கதவின் முன்னால் தனியாக நின்றிருந்தான்.
சரியாக ஐந்தாவது நிமிடத்தில், சிறிய சத்தத்துடன் லிப்ட் கதவு திறந்தது. இருட்டுக்குள் சிக்கித் தவித்த யஷ்வி, கதவு திறந்ததும் வெளிச்சத்தைப் பார்த்த வேகத்தில், முன்னால் நின்றிருந்த உருவத்தை நோக்கி ஓடி வந்தாள்.
பயத்தின் உச்சியில் இருந்தவள், யோசிக்காமல் ஆரியனைக் கட்டிக்கொண்டாள்.
ஆரியனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளைக் கண்ட அந்தக் கணமே, அவனது பழைய நினைவுகள் மின்சாரம் பாய்ந்தது போல மனதிற்குள் வந்து சென்றன. அந்த நினைவுகளிலிருந்து அவன் மீள்வதற்குள், இவள் இப்படி வந்து அணைத்ததில் அவன் அப்படியே உறைந்து நின்றான்.
கண்களில் வழிந்த கண்ணீரால் முன்னால் நின்றிருப்பது யார் என்று தெரியாமல், ருத்ரன் என்று நினைத்தே யஷ்வி அவனிடம் தஞ்சமடைந்திருந்தாள். அவளது கண்ணீர்த் துளிகள் அவன் நெஞ்சில் பட்டபோதுதான் ஆரியன் சுயநினைவுக்கு வந்தான். ஆனால், அவளை விலக்கித் தள்ள அவனுக்கு மனம் வரவில்லை.
ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு, அவனையும் அறியாமல் அவளை அரவணைக்கச் செய்தது.
அவன் அவளது தலையைக் கோதியபடி அமைதியாக நின்றான். வாயால் எந்த ஆறுதலையும் சொல்லவில்லை. ஆனால், அவனது அணைப்பிலேயே அந்த ஆறுதல் இருந்தது.
அவன் வாய் திறந்து எதையாவது சொன்னால், அவள் தன்னை விட்டு விலகிவிடுவாள் என்று அவனது ஆழ்மனம் நினைத்ததோ என்னவோ, அவன் மௌனமாகவே இருந்தான்.
அப்போது கீழே இறங்கி வந்த ருத்ரனும் மித்ரனும், அங்கே நடந்துகொண்டிருந்த காட்சியைப் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றனர்.
யஷ்வியைத் தழுவி ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த ஆரியனைக் கண்டதும், இருவரும் சில நொடிகள் உறைந்து போனார்கள். அந்த இடத்தில் நிசப்தம் மட்டுமே நிலவியது.
அந்த மௌனத்தைக் கலைக்க விரும்பிய ருத்ரன், மெதுவான குரலில், “அண்ணா…” என்று அழைத்தான்.
அந்தக் குரல் கேட்டதும் ஆரியன் மெல்லத் தலைநிமிர்ந்து பார்த்தான். அதே கணத்தில், மயக்கத்தில் இருந்து விடுபட்டவள் போல யஷ்வி திடுக்கிட்டு விழித்தாள்.
‘யாரைத் தழுவிக்கொண்டிருக்கிறோம்?’ என்ற குழப்பத்தில் அவள் நிமிர்ந்து பார்க்க, ஆரியனின் பார்வையும் அவளது பார்வையும் நேருக்கு நேர் சந்தித்தன.
நேரமே அப்படியே நின்றுவிட்டது போன்ற ஒரு உணர்வு இருவருக்குள்ளும் தோன்றியது.
சட்டென்று சுதாரித்த யஷ்வி, திகைப்புடன் அவனிடமிருந்து விலகி நின்றாள். அவள் விலகிய அந்த நொடியில், ஆரியனின் மனதிற்குள் இனம் புரியாத ஒரு வெறுமை வந்து போனது.
பதற்றத்துடன் நின்றிருந்த யஷ்வியின் அருகில் சென்ற ருத்ரன்,
“ஏய்… பயப்படாதே. இவர் என் அண்ணா,” என்றான்.
“அண்ணாவா?”
அந்த ஒரு வார்த்தை யஷ்வியை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அவள் மெதுவாகத் திரும்பி ஆரியனைப் பார்த்தாள்.
ஆரியனின் கண்களில் குழப்பமும் லேசான குற்ற உணர்ச்சியும் இழையோடியது. யஷ்வியின் கண்களிலோ இன்னும் அந்தப் பயம் முழுமையாக விலகவில்லை.
அமைதியைக் கலைத்த மித்ரன்,
“யஷ்வி, இப்போ உனக்கு ஓகேவா? ஒன்னும் பயமில்லையே?” என்று அக்கறையுடன் கேட்டான்.
“இல்ல… எனக்கு ஒன்னும் இல்ல… நான் நல்லாத்தான் இருக்கேன்…” என்று திக்கித் திணறிப் பதிலளித்தாள்.
“சரி வா… நாம வீட்டுக்குக் கிளம்பலாம்,” என்று ருத்ரன் அவளை அழைத்தான்.
அப்போது ஆரியன் இடைமறித்தான்.
“டேய், எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் கிளம்பணும். நீயும் மித்ரனும் இங்கேயே இருங்க. நான் யஷ்வியை வீட்டில் விட்டுட்டுப் போறேன்.”
அவன் சொன்னதைக் கேட்ட ருத்ரனும் மித்ரனும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.
யஷ்விக்கு ஆரியனுடன் தனியாகச் செல்லப் பயமாக இருந்தது. அவள் ருத்ரனின் கையைப் பிடித்துக்கொண்டு,
“டேய்… நான் உன் கூடவே வரேன்டா…” என்று அழுகையும் பயமும் கலந்த குரலில் கூறினாள்.
ஆரியனின் முகம் சட்டென்று இறுகியது.
“இங்கிருந்து நீ என்ன பண்ணப் போற? கிளம்புன்னு சொன்னா கேட்கணும்!”
என்றான் கடுமையாக.
அவனது அந்த அதட்டலான குரல் யஷ்வியை மீண்டும் நிலைகுலையச் செய்தது. உதட்டைக் கடித்தபடி அவள் மௌனமாக அழத் தொடங்கினாள்.
“அண்ணா… அவ ஏற்கனவே பயந்து போயிருக்கா. அதான் அப்படிச் சொல்றா,” என்று ருத்ரன் மென்மையாகச் சமாதானப்படுத்த முயன்றான்.
“எனக்குத் தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்க,” என்று கறாராகச் சொன்ன ஆரியன், யஷ்வியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
அவளால் எதிர்க்க முடியவில்லை. மௌனமாக அவனுக்குப் பின்னால் நடந்தாள்.
அவர்கள் செல்வதையே ருத்ரனும் மித்ரனும் ஒருவித கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொடரும்…