அவளைத் தூக்கிட்டு இங்கே வந்த பிறகு, அவதான் என் உலகம். எனக்குன்னு இங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு. அவளை ஒரு நிமிஷம் கூட கண்ணுல இருந்து மறைக்க மாட்டேன்… மத்தவங்க யார்கிட்டயும் அவளை விடவே மனசு வராம, நானே தாயாவும் தந்தையாவும் வளர்த்தேன் தம்பி…”
அவர் சொல்லும்போதே யஷ்வியின் மீதான அந்தப் பாசம் அவர் குரலில் தளும்பியது.
“ஆனா அவளுக்குப் பயம் ரொம்ப ஜாஸ்தி. தனியா இருக்கவே மாட்டா… நிழல் மாதிரி நான் கூடவே இருக்கணும்னு நினைப்பா. ஸ்கூல் வீட்டுக்கு பக்கத்துலயே இருந்ததுனால எப்படியோ சமாளிச்சுட்டா.
ஆனா காலேஜ்னு வந்ததும், போகவே மாட்டேன்னு அடம் பிடிச்சா… வேற வழி இல்லாமதான், தினமும் அவளோடவே காலேஜுக்கு வந்து அவ கண்ணுல படுற மாதிரி இங்கேயே நின்னுட்டு இருக்கேன்,” எனத் தன் இயலாமையை அவர் பகிர்ந்துகொண்டார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் ருத்ரனுக்கும் மித்ரனுக்கும் ஒரு கணம் இதயம் கனத்தது. ஒரு பெண் இவ்வளவு பயத்துடன் இருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை.
உடனே ருத்ரன் முன்னே வந்து, “அங்கிள்… இனிமே யஷ்வியைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அவளை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க நிம்மதியா கடைக்குப் போங்க,” என்றான் நம்பிக்கையான குரலில்.
அவர் பதறிப்போய், “இல்ல தம்பி… அவ என்னைத்தான் தேடுவா…” எனத் தயங்கினார்.
மித்ரன் புன்னகையுடன், “அங்கிள், நாங்க இருக்கோம்ல… நீங்க டென்ஷன் ஆகாம கிளம்புங்க,” என்றான்.
அவர் இன்னும் யோசிப்பதைக் கண்ட ருத்ரன், “என்ன அங்கிள்… எங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று மென்மையாகக் கேட்க, அந்தத் தந்தை வேறு வழியின்றி, மனமில்லாத மனதுடன் அங்கிருந்து மெதுவாகக் கிளம்பிச் சென்றார்.
அவர் சென்றதும், இருவரும் தங்கள் வகுப்புகளுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் மனம் முழுவதும் அந்தப் பெண்ணின் நினைவே இருந்தது. மதிய உணவு இடைவேளையின் போது, இருவரும் யஷ்வியைத் தேடி வெளியே வந்தார்கள்.
அப்போது, கல்லூரி வளாகத்தின் ஒரு பெரிய மரத்தடியில்… அந்தப் பெண்ணைக் கண்டார்கள்.
அவள்தான் யஷ்வி.
சுற்றிலும் இருக்கும் எதையும் கவனிக்காமல், அழுது கொண்டே அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்தது. தன்னைத் தாங்கிப் பிடிக்க ஒரு துணையில்லையே என்கிற ஏக்கம் அவளிடம் தெரிந்தது.
அவள் அருகே ருத்ரனும் மித்ரனும் மெதுவாகச் சென்றார்கள். யாரோ நிழல் ஆடுவதைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் யஷ்வி.
அந்த ஒரு பார்வையில்…
தன் நிழலைத் தேடும் ஒரு குழந்தையின் பயம், யார் இவர்கள் என்கிற தயக்கம், “என்னைத் தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என உதவி கேட்கும் தவிப்பு… என அனைத்தும் கலந்திருந்தது. அவளது கண்கள் இன்னும் ஈரமாகவே இருந்தன.
“ஏன் அழற?” – ருத்ரனின் குரலில் இருந்த அக்கறை அவளை ஏறிட்டுப் பார்க்க வைத்தது.
“பெரியப்பா… பெரியப்பா வேணும்…” என்று விம்மினாள் யஷ்வி.
ருத்ரன் மெதுவாக அவள் கையைப் பற்றி, அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான். மித்ரனும் ருத்ரனும் அவள் இருபுறமும் அரணாக அமர்ந்து கொண்டார்கள்.
“ஏன் இப்படிப் பயப்படுற? நாங்கதான் உன் கூட இருக்கோம்ல…” என்றான் மித்ரன் புன்னகையோடு.
ஆனால் யஷ்வியின் அழுகை ஓய்ந்தபாடில்லை.
ருத்ரன் அவள் கண்களை நேராகப் பார்த்து, “இங்க பாரு யஷ்வி… இனிமே உன் பெரியப்பா தினமும் இங்கே வர மாட்டாரு. அதுக்கு பதிலா நாங்க ரெண்டு பேரும் உன் கூடவே இருப்போம்.
நீ சமத்துப் பொண்ணா இருக்கணும்… சரியா?” என்றான்.
அவள் மெதுவாகத் தலை தூக்கி ருத்ரனைப் பார்த்தாள்.
“நீங்க யாரு? என்னை எதுக்காக நீங்க பார்த்துக்கணும்?” – அந்தப் பயம் இன்னும் அவள் குரலில் ஒட்டிக்கொண்டிருந்தது.
ருத்ரன் சிரித்துக்கொண்டே, “நாங்க உன் பெரியப்பாவோட பிரண்ட்ஸ்!” என்றான்.
“அப்படியா? அவர் உங்ககிட்ட என்னை பார்த்துக்கச் சொன்னாரா?” என்று ஒரு குழந்தையைப் போல அவள் அப்பாவியாகக் கேட்க, மித்ரன் உடனே, “ஆமாம்,” என்று சொன்னான்.
“அப்படின்னா… நீங்க ரெண்டு பேரும் இனிமே என் கூடவே இருப்பீங்களா?” – இது அவளது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் கேள்வி.
ருத்ரனும் மித்ரனும் ஒரு சேர, “ஆமாம்!” என்றார்கள். அந்த ஒரு வார்த்தை அவளுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
திடீரென முகம் சீரியஸாக, “அப்போ என் கிளாஸ்ல ஒருத்தன் என்னைத் தினமும் கிண்டல் பண்ணுவான்… அவனை நீங்க அடிப்பீங்களா?” என்று கேட்டாள்.
“அவன் என்ன சொன்னான்?” – மித்ரன் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டான்.
“நான் தினமும் பெரியப்பாவை வரச் சொல்றேன்னு என்னைத் டீஸ் பண்றான்…” என்று அவள் முகம் சுளிக்க, ருத்ரன் அவளைத் தேற்றினான்.
“சரி, அவனை நாங்க கவனிச்சுக்கிறோம். நீ இப்போ அழாம கிளாஸ்க்குப் போ.”
அன்று முதல் யஷ்வியின் உலகம் மாறத் தொடங்கியது. பெரியப்பாவுக்குப் பிறகு அவள் அதிகம் நம்பும் மனிதர்களாக ருத்ரனும் மித்ரனும் மாறினார்கள்.
அவர்கள் எங்கே சென்றாலும், ஒரு சிறிய நிழலைப் போல யஷ்வியும் கூடவே இருப்பாள். ருத்ரனும் மித்ரனும் அவள் வீட்டிற்குச் செல்லத் தொடங்க, அந்த நட்பு காலப்போக்கில் ஒரு பிரிக்க முடியாத பந்தமாக மாறியது.
நாட்கள் உருண்டோடின. ருத்ரனும் மித்ரனும் தங்கள் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்ப வேண்டிய நாள் வந்தது. அந்தச் செய்தி யஷ்வியை நிலைகுலைய வைத்தது. அவர்களைப் பிரிய மனமில்லாமல் அவள் கதறி அழுததைக் கண்டு அவள் பெரியப்பா ஒரு முடிவெடுத்தார்.
“சரி யஷ்வி, இப்போ உனக்கு விடுமுறை தானே? நீ ருத்ரன் மற்றும் மித்ரனோட இந்தியாவுக்குப் போய் ஒரு மாசம் இருந்துட்டு வா. உன் படிப்பு முழுசா முடிஞ்சதும் நாம நிரந்தரமா இந்தியாவுக்கே போயிடலாம்,” என்றார்.
அந்த ஒரு வார்த்தைதான் அவளது கண்ணீரைத் துடைத்தது. இதோ, அந்த நம்பிக்கையுடன்தான் இப்போது மூவரும் இந்தியா நோக்கிய விமானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.