மாலை நேரம். சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தான். வானம் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, கிராமமே திருவிழா கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் மூழ்கியிருந்தது.
அனைவரும் கோவிலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். ஆண்கள் அனைவரும் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து கம்பீரமாக இருந்தார்கள். பெண்கள் வண்ணமயமான பட்டுப் புடவைகளில் தேவதைகளைப் போல காட்சியளித்தனர். குழந்தைகளும் புதிய உடைகளில் உற்சாகமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அனைவரும் கோவிலை அடைந்தனர். கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. தீபங்களின் ஒளியும், மணியின் ஓசையும், நாதஸ்வர இசையும் அந்த இடத்தையே தெய்வீகமாக மாற்றியிருந்தது.
அனைவரும் பக்தியுடன் சாமி தரிசனம் செய்து கும்பிட்டனர். அதன்பிறகு சாமி ஊர்வலம் ஆரம்பமானது. ஊர்வலத்தில் கலந்து கொண்டு சாமியுடன் செல்ல ஆண்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
பெண்கள் வீட்டிற்குத் திரும்பப் போவதாகக் கூறினர்.
“சரி, நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க. நாங்க ஊர்வலம் முடிஞ்சதும் வர்றோம்,” என்றனர் ஆண்கள்.
அப்போது யாழினியும் சர்வேஷும் ஆண்களுடன் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தனர். எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில் அவர்களையும் கூட்டிச் செல்ல அனைவரும் சம்மதித்தனர்.
பெண்கள் வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.
சிறிது நேரம் எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே யாழினிக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. அவள் சிணுங்கி அழத் தொடங்கினாள்.
அதைப் பார்த்த கதிர், ஆதிரனிடம் வந்து,
“ஆதி, யாழினி அழுவுறாடா. நான் வீட்டுக்குப் போயிட்டு நிலா கிட்ட விட்டுட்டு வரேன்,” என்றான்.
“சரிடா, போயிட்டு வா,” என்றான் ஆதிரன்.
அப்போது கதிர்,
“சர்வேஷ் எங்கடா?” என்று கேட்டான்.
“அவன கோகுல் தூக்கி வச்சிருக்கான்டா,” என்றான் ஆதிரன்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், சர்வேஷைத் தூக்கிக் கொண்டு கோகுல் அவர்கள் அருகே வந்தான்.
ஆதிரனை பார்த்தவுடன் சர்வேஷ் மகிழ்ச்சியாக அவன் பக்கம் தாவினான். உடனே ஆதிரனும் அவனைத் தூக்கிக் கொண்டான்.
“சர்வேஷ் கண்ணா, மாமாவோட வாங்க. அம்மா கிட்ட விட்டுட்டு வரேன்,” என்று கதிர் அழைத்தான்.
உடனே சர்வேஷ் தலையசைத்தான்.
“நான் வரல மாமா. நான் இங்கேயே இருக்கேன்.”
“உனக்குத் தூக்கம் வரலையா?” என்று கேட்டான் கதிர்.
“இல்ல மாமா. நீங்க போங்க. நான் வரல,” என்று பிடிவாதமாகச் சொன்னான்.
அதைப் பார்த்த ஆதிரன் சிரித்தபடி,
“சரிடா, இவன் வரலைன்னு சொல்றானே. நீ கிளம்பு. யாழினியை விட்டுட்டு வா. நான் சர்வேஷைப் பாத்துக்குறேன்,” என்றான்.
“சரி,” என்று கூறிய கதிர், யாழினியைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
அதன் பிறகு சர்வேஷ் ஆதிரனை விட்டு யாரிடமும் செல்லவில்லை. அவன் முழு நேரமும் ஆதிரனின் தோளிலேயே இருந்தான்.
சிறிது நேரம் கழித்து விக்ரம் அருகே வந்து,
“ஆதி, சர்வேஷ் என்கிட்ட தாங்க. எவ்வளவு நேரம் நீங்க தூக்கி வச்சிருப்பீங்க?” என்று கேட்டான்.
“பரவால்லடா. அவன் யார்கிட்டயும் போக மாட்டேங்கிறான். நானே பாத்துக்குறேன். இன்னும் கொஞ்ச நேரம் தானே,” என்றான் ஆதிரன்.
விக்ரமும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சிரித்தபடி நின்றான்.
அதன்பிறகு சாமி ஊர்வலம் நிறைவடைந்து மீண்டும் கோவிலை அடைந்தது. இறுதி பூஜைகளும் முடிந்தன.
அதன் பின்னர் ஆதிரன், கதிர், கோகுல், விக்ரம் நால்வரும் சேர்ந்து வீட்டிற்குக் கிளம்பினர். சர்வேஷ் மட்டும் ஆதிரனின் கைகளிலேயே இருந்தான்.
வீட்டுக்குள் நுழைந்தபோதும் அவன் ஆதிரனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த கதிர்,
“கொடு டா, நான் தூக்கிட்டு போறேன்,” என்று கூறி சர்வேஷை வாங்க முயன்றான்.
ஆனால் கதிரின் கைகள் தன்னைத் தொட்ந்தவுடன் சர்வேஷ் தூக்கக் கலக்கத்திலேயே கண்களைத் திறந்து பார்த்தான். அடுத்த நொடியே ஆதிரனின் கழுத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.
“வரமாட்டேன்…” என்று சொல்லும் விதமாக முகத்தைச் சுளித்துக் கொண்டு அழத் தொடங்கினான்.
அதைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்.
ஆதிரன் மெதுவாக அவன் முதுகைத் தடவிக் கொடுத்து,
“சரி விடுடா. அவன் தூக்கத்துல இருக்கான். என் கூடவே தூங்கட்டும். அவன் அழுதானா நான் தூக்கிட்டு வரேன்,” என்றான்.
அதற்குப் பிறகு வேறு யாரும் எதுவும் சொல்லவில்லை.
சர்வேஷைத் தன் மார்போடு அணைத்தபடி, அவன் தூக்கம் கலைந்து விடாதபடி கவனமாக ஆதிரன் மாடி அறையை நோக்கி நடந்தான்.
அவன் செல்லும் வழியையே சிறிது நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கதிரின் மனதில் ஒரு விதமான நெகிழ்ச்சி தோன்றியது. சர்வேஷ் ஆதிரனிடம் காட்டும் பாசத்தையும், ஆதிரன் அவனைப் பார்த்துக் கொள்ளும் அக்கறையையும் நினைத்து அவன் மனம் மகிழ்ந்தது.
பிறகு ஒரு சிறிய புன்னகையுடன் கதிரும் தனது அறையை நோக்கி நடந்து சென்றான்.
காலைப் பொழுது மிக அழகாகவே விடிந்தது. இரவு முழுவதும் திருவிழாவின் உற்சாகத்தில் இருந்த அந்த வீடு, காலையின் அமைதியில் ஒரு புதிய புத்துணர்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தது. சூரியனின் மெல்லிய ஒளிக்கதிர்கள் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த அனைவரின் மனதிலும் ஒரு இனிய உணர்வை ஏற்படுத்தின.
சமையலறையில் லட்சுமியும் புஷ்பாவும் நின்று கொண்டிருந்தனர். வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது. சமையல் செய்து கொண்டிருந்த பெண்களுடன் பேசிக் கொண்டே அவர்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். இடையிடையே சிரிப்புச் சத்தங்களும் கேட்டு கொண்டே இருந்தன.
ஹாலில், அஞ்சலியும் நிலாவும் சோபாவில் அமர்ந்து டீ குடித்தபடியே ஏதோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். திருவிழா, நேற்று நடந்த நிகழ்வுகள், உறவினர்களின் கலகலப்பான பேச்சுகள் என்று அவர்களது உரையாடல் நீண்டு கொண்டே இருந்தது.
வீட்டிற்கு வெளியே, ஸ்ரீராமும் செந்திலும் சில பெரியவர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். திருவிழாவின் ஏற்பாடுகள் பற்றியும், ஊரின் விஷயங்கள் பற்றியும் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்தார்கள் ஆதிரையும் மித்ராவும்.
ஆதிரை நேராக நிலாவிடம் வந்து,
“சர்வேஷ் எங்கடி? இன்னும் தூங்குறானா?” என்று கேட்டாள்.
அவளது கேள்வியைக் கேட்ட நிலா குழப்பமாகப் பார்த்தாள்.
“சர்வேஷ் எங்க ரூம்ல இல்லடி,” என்றாள்.
“என்னடி சொல்ற?”
“அவன் அண்ணாவோட தானே கோவில்ல இருந்து வந்திருப்பான். நேத்து இரவு உங்க கூட இல்லையா?” என்று ஆதிரை ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“இல்லடி. உங்க அண்ணா சர்வேஷை தூக்கிட்டு வரல,” என்றாள் நிலா.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆதிரையின் முகத்திலும் பதற்றம் தோன்றியது.
“என்னடி சொல்ற? அப்போ சர்வேஷ் எங்க போனான்?” என்று அவள் அவசரமாகக் கேட்டாள்.
இருவரும் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்தான் கோகுல்.
அவர்களின் பதற்றமான முகங்களைப் பார்த்தவன்,
“ஐயோ! ஏன் இப்படி பயந்து நிக்கிறீங்க?” என்று சிரித்தபடி கேட்டான்.
பிறகு உடனே,
“சர்வேஷ் ஆதிரன் மச்சான் ரூம்லதான் தூங்குறான்,” என்றான்.
“என்ன?” என்று ஒரே நேரத்தில் கேட்டார்கள் ஆதிரையும் நிலாவும்.
“ஆமா. நேத்து கோவில்ல. இருந்து அவன் ஆதிரன் மச்சானை விட்டே யார்கிட்டயும் போகல. முழு நேரமும் அவர் கூடவேதான் இருந்தான்.”
கோகுல் கூறியதை அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“வீட்டுக்கு வந்ததும் கதிர் அண்ணா அவனைத் தூக்க முயற்சி பண்ணாரு. ஆனா சர்வேஷ் அவர்கிட்ட போகவே மாட்டேன்னு அழ ஆரம்பிச்சிட்டான். ஆதிரன் மச்சான் கழுத்தை கட்டிக்கிட்டு விடவே இல்ல.”
அதை நினைத்துக் கொண்டு கோகுல் சிரித்தான்.
“அதுக்குப் பிறகு ஆதிரன் மச்சான், ‘அவன் தூக்கத்துல இருக்கான். என் கூடவே தூங்கட்டும்’ன்னு சொல்லிட்டு சர்வேஷைத் தூக்கிக்கிட்டு அவரோட ரூமுக்குப் போயிட்டாரு.”
“ எழுந்ததும் அவங்களே கீழே வருவாங்க. என்றான் கோகுல்
அவன் கூறியதை கேட்டதும் நிலாவிற்கு நிம்மதியாக இருந்தது.
ஆனால் ஆதிரையின் முகம் மட்டும் மெல்ல மாறியது.
கோகுல் சாதாரணமாகச் சொல்லிச் சென்ற விஷயம், அவளது மனதில் வேறு விதமான எண்ணங்களை எழுப்பியது.
“நேத்து இரவு முழுக்க சர்வேஷ் ஆதிரன் கூடவே இருந்தானா?”
“வீட்டுக்கு வந்த பிறகும் அவனை தன் அறைக்கு தூக்கிக்கொண்டு போனாறா?”
“ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லாமல்?”
அவளது மனதில் கோபம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
சர்வேஷ் அவளது மகன். அவனைப் பற்றிய எந்த விஷயமாக இருந்தாலும் தன்னிடம் சொல்ல வேண்டியது தானே? ஆனால் ஆதிரன் அப்படிச் செய்யவில்லை என்பதே அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
“என்ன நினைச்சுட்டு இருக்காரு? சர்வேஷ் அவர்கிட்ட ஒட்டிக்கிட்டான் என்றாலே எதுவும் சொல்லாம அவரோட ரூம்ல தூங்க வச்சிடலாமா?”
“ஒரு தடவையாவது என்னிடம் சொல்லணும் என்று கூட தோணலையா?”
என்று மனதிற்குள் பொருமினாள்.
அவளது முகத்தில் தோன்றிய கோபத்தை பார்த்த நிலா,
“என்னடி ஆதிரை? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.
“ஒன்னுமில்லை…” என்று கூறினாலும், அவளது குரலில் இருந்த கடுமையை நிலா உணர்ந்தாள்.
ஆதிரையின் பார்வை தன்னையும் அறியாமல் மாடிப்படிகளை நோக்கிச் சென்றது.
“எழுந்து கீழே வரட்டும்…
என்று மனதிற்குள் முடிவு செய்தாள்.
அவளுக்குள் எழுந்த அந்த கோபம் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.
தொடரும்