💓அத்தியாயம் 《1》

சென்னை, அண்ணா நகர்.

“நிலா… நிலா!” என்று 

கதிர் உற்சாகத்தில் கத்திக்கொண்டே மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கி வந்தான். சத்தம் கேட்டுச் சமையலறையிலிருந்து நிலா வெளியே வந்தாள். பெயருக்கேற்றார் போல நிலவு போன்ற முகம் அவளுக்கு.

“என்னங்க அவசரம்? ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் நிலா.

 

“நிலா, என் பிரண்டு வர்றதுக்கு நேரமாச்சு. சமைச்சு முடிச்சுட்டியான்னு கேக்கத்தான் கூப்பிட்டேன்” என்றான் கதிர்.

அவள் முறைத்துவிட்டு, “என்னங்க… நாலஞ்சு பேரா வர்றாங்க? ஒரே ஒரு பிரண்டு தானே வர்றாரு! இதுக்கு காலையில இருந்து ஏன் இப்படி பதறுறீங்க? என்னையும் வேலை செய்ய விட மாட்டீங்க” என்று அலுத்துக்கொண்டாள்.

 

“சாரிடி… அவனப் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. இந்தியாவே வரமாட்டேன்னு சொல்லிட்டு இருந்தவன், இப்ப அம்மா வற்புறுத்தலால் வர்றான். என் பெஸ்ட் பிரண்டு உனக்குத் தெரியும்தானே!” என்றான் கதிர்.

அவன் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் நிலா மீண்டும் சமையலறைக்குள் செல்ல,

 

கதிர் போனை காதில் வைத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றான். அப்போது, கதிர் மற்றும் நிலாவின் மூன்று வயது மகள் யாழினியும், கதிர் தங்கை மகன் சர்வேஷும் அங்கு ஓடி வந்தார்கள்.

“அம்மா எங்கேப்பா?” என்று யாழினி கேட்க, “அம்மா வேலையா இருக்கா செல்லம். நீங்க ரெண்டு பேரும் போயிட்டு தோட்டத்துல விளையாடுங்க” என்று வீட்டில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து அவர்களைத் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தான் கதிர்.

 

சிறிது நேரத்தில் வீட்டின் வாசலில் ஒரு விலையுயர்ந்த கார் வந்து நின்றது. காரின் கதவைத் திறந்து கொண்டு ஆறடி உயரத்தில், கம்பீரமாக, கிளின் ஷேவ் செய்து, கூலிங் கிளாஸ் அணிந்த ஸ்மார்ட் ஆன ஒருவன் கீழே இறங்கினான். அவன் ஆதிரன் அவனைக் கண்டதும் கதிர் ஓடிச் சென்று அவனை இறுகக் கட்டியணைத்துக்கொண்டான்.

“எப்படிடா இருக்க? உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு?” என்றான் கதிர்.

 

“ஒரு ஆறு வருஷம் இருக்குமா? நல்லா இருக்கேன்டா” என்றான் ஆதிரன்.

“சரி வா, உள்ள போகலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் கதிர். உள்ளே வந்ததும் நிலாவை அழைத்தான்.

“நிலா, இவன் தான் என் பிரண்டு ஆதிரன்” என்று அறிமுகப்படுத்தினான். நிலா கையெடுத்துக் கும்பிட்டு, “வாங்க அண்ணா!” என்று மரியாதையோடு வரவேற்றாள்.

 

ஆதிரன் அவளைப் பார்த்து மென்மையாக, “எப்படிம்மா இருக்க?” என்று கேட்க, “நான் நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் நிலா.

“ஏண்டா, அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டு வரல?” என்று கதிர் கேட்க, “ஊர்ல இருந்து அப்பாவோட தங்கச்சி வர்றாங்கடா. அதான் அவங்க வர முடியல, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்னு சொல்லி இருக்காங்க” என்றான் ஆதிரன்.

 

இருவரும் சோபாவில் அமர்ந்தார்கள். நிலா, “நீங்க பேசிட்டு இருங்க, நான் உங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிச் சமையலறைக்குள் சென்றாள். அவள் சென்றதும், அவர்கள் பழைய நினைவுகளைப் பேசத் தொடங்கினார்கள்.

அப்போது குழந்தைகள் இருவரும் ஓடி வந்தார்கள். புதியவனை கண்டதும் பயந்து கதிரின் அருகில் நின்றார்கள். 

 

“பயப்படாதீங்க செல்லம், இவன் தான் என் பிரண்டு ஆதிரன்” என்று அறிமுகப்படுத்தினான். இருந்தாலும் பயம் குறையவில்லை. கதிர் மடியில் இருவரும் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

ஆதிரன் யாழினியைப் பார்த்து கைகளை நீட்டி அழைக்க, அவள் பயந்து தன் தந்தையின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அடுத்து சர்வேஷை அழைக்க, அவன் மென்மையாகச் சிரித்துவிட்டு ஆதிரனிடம் தாவினான். 

 

அவனும் அவனைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு, “ஸோ க்யூட்! உங்க பேர் என்ன?” என்று கேட்டான்.

“என் பெயர் சர்வேஷ்” என்று மழலை குரலில் கூறினான். “குட் நேம்!” என்று சொல்லி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான் ஆதிரன்.

சர்வேஷ் ஆதிரனைப் பார்த்து, “உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே…” என்று தன் பிஞ்சு முகத்தை சுருக்கி, மழலை மாறாத குரலில்  கேட்டான்.

“நான் ஃபாரின்ல இருந்து வந்தேன்” என்றான் ஆதிரன்.

ஓ… ஃபாரின்ல இருந்தீங்களா? அப்போ என் அப்பாவை ஏன் கூட்டிட்டு வரல?” என்று சர்வேஷ் கேட்க, ஆதிரனுக்குப் புரியவில்லை. ஆனால், அதைக் கேட்ட கதிரின் முகம் மாறியது. ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்த நிலாவின் கண்களில் நீர் திரண்டது.

அதை உணர்ந்த ஆதிரன், எதுவும் சொல்லாமல் ஜூஸை வாங்கிச் சிறிது குடித்துவிட்டு சர்வேஷிற்கும் கொடுத்தான். அவன் மடியிலேயே அமர்ந்து ஜூஸைக் குடித்தான்.

அப்போது மாடிப்படிகளில் ஒரு பெண் இறங்கி வந்தாள்.

 

நீல நிற சல்வார் அணிந்திருந்தாள். நெற்றியில் சிறு கருப்புப் பொட்டு, தலை பின்னல், கழுத்தில் சின்ன செயின், காதில் சிறிய கம்மல் – இவ்வளவுதான் அவள் அலங்காரம். இதிலேயே அவள் தேவதை போலத் தெரிந்தாள். ஆனால், அவள் முகத்திலும் கண்ணிலும் உயிர்பே இல்லை.

மாடியிலிருந்து வந்தவள் நேராகக் கதிரின் முன் நின்றாள். 

 

கதிர், “ஆதிரன், இவ தான் என் தங்கை ஆதிரை” என்று அறிமுகப்படுத்தினான். ஆதிரன் அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான். கதிர், “ஆதிரை, இவன் தான் என் பிரண்டு ஆதிரன்” என்றான்.

அவளும் அவனைப் பார்த்து, “வணக்கம்” என்று கூறிவிட்டு, “அண்ணா, நான் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்” என்றாள்.

“தனியாவா போற?” என்று கதிர் கேட்க, “ஆமா அண்ணா” என்றாள்.

 

லஞ்ச் ரெடி ஆயிடுச்சு, ஆதிரை சாப்பிட்டுப் போ” என்றாள் நிலா.

“இல்ல நிலா, நான் கோயில் போயிட்டு வந்து சாப்பிடுறேன். நீ எனக்காக வெயிட் பண்ணாத, அண்ணாவோட சேர்ந்து சாப்பிடு” என்று கூறிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

குழந்தைகள் இருவரும், “அம்மா… அத்தை! நாங்களும் வர்றோம்!” என்றார்கள்.

ஆதிரை தன் அண்ணனைப் பார்க்க, கதிர், “நீ தனியா போற, இவங்களையும் கூட்டிட்டுப் போனா உனக்குத் தொந்தரவா இருக்கும்” என்றான்.

 

இல்ல அண்ணா, நான் பாத்துக்கறேன்” என்று சொல்லி யாழினியைத் தூக்கிக்கொண்டு, சர்வேஷையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

“சரிடா, நீ வா நாம சாப்பிடலாம்” என்றான் கதிர்.

இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள். ஆதிரன் நிலாவையும் சாப்பிடச் சொன்னான். “இல்ல அண்ணா, நீங்க சாப்பிடுங்க. ஆதிரை வர வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்” என்றாள் நிலா.

 

அவங்க சொல்லிட்டுத்தான் போனாங்க, அவங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேணாம்னு சொன்னாங்களே” என்றான் ஆதிரன்.

கதிர் சிரித்துக்கொண்டே, “டேய், அவங்க ரெண்டு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ்! ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க மாட்டாங்க. அவ்வளவு க்ளோஸ். என்னைப் பத்தி கூட நிலா கவலைப்பட மாட்டா. ஸ்கூல் பிரண்ட்ஸ், இப்ப வரைக்கும் அப்படிதான்” என்று சொன்னான்.

அவன் சொல்வதைக் கேட்டு, ஆதிரன் ஒன்றும் பேசாமல் சாப்பிடத் தொடங்கினான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top