💓அத்தியாயம் 《4》

அஞ்சலியின் குடும்பம் ஆதிரன் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆதிரன் காலையில் அலுவலகம் சென்றவன் மாலைதான் வீடு திரும்புவான். அஞ்சலியின் குடும்பத்தினரிடம் அவன் பெரிய அளவில் பேசிக்கொள்வதில்லை; அவர்களும் அவனைத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கியே இருந்தார்கள். அந்த வீட்டையே கலகலப்பாக வைத்திருந்தது கோகுல்தான்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆதிரன் மொட்டை மாடியில் நின்று யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். திடீரென அவன் முன்னால் துள்ளிக்குதித்து வந்தான் கோகுல். அவனை முறைத்தபடி, ‘டேய்! ஒழுங்கா நடந்து வர மாட்டியாடா? குரங்கு மாதிரி இப்படித் தாவிக்குதித்துக் கொண்டிருப்பியா?’ என்றான் ஆதிரன் எரிச்சலுடன்.

 

என்ன மச்சான் நீங்க இப்படிச் சொல்றீங்க? நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லத்தானே இப்படிப் பாய்ந்து வந்தேன்’ என்றான் கோகுல்.

‘சரி, என்ன விஷயம்?’ என்று ஆதிரன் கேட்க, ‘ரொம்ப, ரொம்ப முக்கியமான விஷயம் மச்சான்! ‘நீங்களே கண்டுபிடிங்க! என்றான் கோகுல்.

‘டேய் லூசு! நீ சொல்ல வந்ததை நான் எப்படிடா கண்டுபிடிப்பேன்?’ என்று ஆதிரன் கத்த, 

 

என்ன மச்சான் நீங்க? வெளிநாடெல்லாம் போயிட்டுப் பெரிய படிப்பு படிச்சிருக்கீங்க, ஒரு சின்ன விஷயத்தைக் கூட உங்களால கண்டுபிடிக்க முடியலையே!’ என்று கோகுல் நக்கலாகச் சிரித்தான்.

‘டேய்! ஏதோ முக்கியமான விஷயம் சொல்லப்போறேன்னு கூப்பிட்டுட்டு, இப்ப என்னையே கலாய்க்கிறியா? இன்னைக்கு வீட்ல வேற யாரும் கிடைக்கலையா உனக்கு? 

 

எப்ப பார்த்தாலும் எங்க அம்மா கூடவே சுத்திட்டு இருப்ப, அவங்க எங்க போயிட்டாங்க?’ என்று கேட்டான் ஆதிரன்.

‘அத்த கோயிலுக்குப் போயிட்டாங்க மச்சான்’ என்றான் கோகுல். ‘ஓ… அதுதான் உனக்கு ஆள் கிடைக்காம என்கிட்ட வந்துட்டியா?’ ஆதிரன் கேட்க, ‘ஆமா மச்சான், அத்தையும் சித்தியும் கோயிலுக்குப் போயிட்டாங்க. மாமாவும் சித்தப்பாவும் ஏதோ வேலையா வெளிய போயிட்டாங்க. 

 

இப்போ வீட்ல இருக்கிறது நீங்க, நானு, அப்புறம் அஞ்சலி, விக்ரம் தான். அஞ்சலியும் விக்ரமும் ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து எதையோ யோசிச்சுட்டு இருக்காங்க, அதுதான் உங்களைத் தேடி வந்துட்டேன்’ என்றான் கோகுல்.

ஆதிரன் அவனை முறைத்துவிட்டு, ‘உனக்கு வேற வேலை இல்லனா? போய் சீரியல் பாரு! எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நான் கிளம்பணும்’ என்று திரும்பினான். ஆனால் கோகுல் விடுவதாக இல்லை. ‘மச்சான், நான் என்ன சொல்ல வந்தேன்னு நீங்க கேட்கவே இல்லையே!’ என்றான்.

 

ஆதிரன் தலையைப் பிய்த்துக்கொள்ளும் நிலையில் இருந்தான். ‘சரி, சொல்லித்தொலை!’ என்று சலித்துக்கொண்டான் ஆதிரன்.

‘மச்சான், இந்த ஒரு வாரமா கவனிச்சுட்டு இருக்கேன். விக்ரமும் அஞ்சலியும் புருஷன் பொண்டாட்டி மாதிரியே இல்ல மச்சான்!’ என்று கோகுல் சொன்னதும், ஆதிரன் நெற்றியைச் சுருக்கி அவனைப் பார்த்தான்.

 

அவங்க ரெண்டு பேரும் சரியா பேசிக்கிறதே இல்ல. அஞ்சலி இருக்கிற இடத்துல விக்ரம் இருக்க மாட்டார், விக்ரம் இருக்கிற இடத்துல அஞ்சலி இருக்க மாட்டாள். அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்கு மச்சான், நான் இதைக் கண்டுபிடிச்சிட்டேன்!’ என்றான் கோகுல்.

‘லூசு மாதிரி பேசாத! 

 

புருஷன் பொண்டாட்டி எப்பவும் ஒரே இடத்துல ஒட்டிக்கிட்டே இருக்கணுமா? அவங்க தனித்தனியா இருக்காங்கன்னு நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத’ என்று ஆதிரன் கூறினான்.

‘இல்ல மச்சான், நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. நான் பார்த்தவரைக்கும் அவங்க ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கிட்டதில்லை. 

 

விக்ரம் எதாவது சொல்லணும்னா சித்தி கிட்ட சொல்லித் தான் சொல்லுறார். அன்னைக்கு அத்தை அவங்க ரெண்டு பேரையும் கோயிலுக்குப் போகச் சொன்னாங்க, அதுக்கு அஞ்சலி முடியாதுன்னு சொல்லிட்டா!’

‘டேய்! அவளுக்குக் கோயில் போக முடியாதுங்கறதுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும்’ என்று ஆதிரன் சொல்ல, 

 

‘நானும் அப்படித்தான் மச்சான் நினைச்சேன். ஆனா, அதே அன்னைக்கு சாயங்காலம் அத்தையோட கோயில் போயிருக்கா. அவளுக்குக் கோயில் போறதுல பிரச்சனை இல்ல, விக்ரம் கூட போறதுதான் பிரச்சனை!’ என்று கோகுல் குண்டைத் தூக்கிப் போட்டான்.

 

ஆதிரன் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான். ‘என்னடா சொல்ற?’

‘ஆமா மச்சான்! ஏதோ தப்பா இருக்கு. ஒருவேளை அஞ்சலி மனசுல இன்னும் நீங்கதான் இருக்கீங்களோ? அதுதான் விக்ரமை விட்டு விலகி இருக்காளோ?’ என்றான் கோகுல்.

‘டேய்! அறிவு கெட்டவனே! இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்காத. 

கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு, என்ன பேசுறன்னு தெரியாம பேசாத!’ என்று ஆதிரன் கோபமாக அதட்டினான்.

‘மச்சான், நான் சொல்றதைக் கேளுங்க… ஒருவேளை அஞ்சலி உங்களைக் காதலிச்சதுனால விக்ரம் அவளை விட்டு விலகி இருக்காரோ?’ என்று கோகுல் சந்தேகத்தைக் கிளப்ப, 

ஆதிரன் கோபமடைந்து அவனை விரட்டினான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதிரனின் போன் அடித்தது. மறுமுனையில் பேசிய நபர், ‘ஹாய் ஆதிரன், உங்க ஃப்ரெண்ட பத்தி சொல்லியிருந்தீங்கல்ல? நான் அவருக்குக் காலையில இருந்து கூப்பிடுறேன், ரீச் ஆகல. நீங்க அவர்கிட்ட பேசிட்டு என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்றீங்களா?’ என்றார். ‘ஓகே சார்’ என்று ஆதிரன் போனை வைக்கும் போதே, அவனுக்குத் தவிப்பு கூடியிருந்தது. உடனே கதிருக்கு அழைத்தான். கதிர் போனை எடுத்துச் சொன்ன விஷயம் ஆதிரனை அப்படியே உறைய வைத்தது!”

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top