அஞ்சலியின் அறையிலிருந்து வெளியே வந்த விக்ரமின் கையைப் பிடித்துக் கொண்டு, அவனை இழுத்தபடியே நேராக மாடிக்குச் சென்றான் கோகுல்.
விக்ரமுக்கோ அவன் எதற்காக இப்படித் திடீரென்று தன்னை மாடிக்கு அழைத்துச் செல்கிறான் என்று புரியவில்லை. இருந்தாலும், கோகுலின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்தவன் எதுவும் கேட்காமல் அவன் பின்னாலேயே சென்றான்.
மாடிக்குச் சென்றதும், கோகுல் முதலில் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். கீழே யாரும் வருகிறார்களா என்று உறுதி செய்துவிட்டு, விக்ரமை நோக்கித் திரும்பினான்.
“என்ன மச்சான்… நான் கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆச்சா? அஞ்சலி சமாதானம் ஆயிட்டாளா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.
அதைக் கேட்டதும் விக்ரம் அவனை முறைத்துப் பார்த்தான்.
“கொஞ்சம் சமாதானம் ஆனா…” என்று இழுத்தவன், அடுத்த நொடியே எரிச்சலுடன் பெருமூச்சு விட்டான்.
“ஆனா… அதுக்குள்ள ஒரு போன் வந்து எல்லாத்தையும் முடிச்சு விட்டுருச்சு!”
“என்ன சொல்றீங்க?” என்று ஒன்றும் புரியாமல் விழித்தான் கோகுல்.
விக்ரம் அவனைப் பார்த்தபடியே, அஞ்சலியின் அறைக்குள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற ஆரம்பித்தான்.
அவன் கூறி முடித்ததும், கோகுலின் முகத்தில் ஆச்சரியமும் குழப்பமும் கலந்திருந்தது.
“ஒரு நிமிஷம்… அந்தப் பொண்ணு ஏன் இந்த நேரத்துல உங்களுக்கு கால் பண்றா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“எனக்கு என்ன தெரியும்?” என்று எரிச்சலுடன் பதிலளித்த விக்ரம். “அதைக் கேக்குறதுக்குள்ளதான் அஞ்சலி என் போனை உடைச்சுட்டாளே!”
“அடப்பாவி!” என்று வாயைப் பிளந்த கோகுல், அடுத்த நொடியே சிரிக்க ஆரம்பித்தான்.
விக்ரம் அவனைப் புரியாமல் பார்த்தான்.
“எதுக்கு இப்படி சிரிக்கிற?”
கோகுல் சிரிப்பை அடக்கிக்கொண்டு விக்ரமைப் பார்த்தான்.
“அஞ்சலி உங்களை எதுவும் செய்யாமல் போனை மட்டும் உடைச்சாலே… அதுக்கே சந்தோஷப்படுங்க மச்சான்!”
“அதென்ன உண்மைதான்!” என்று விக்ரமும் உடனே ஒத்துக்கொண்டான்.
அவன் சொன்ன விதமே கோகுலுக்கு இன்னும் சிரிப்பை வரவழைத்தது.
“என்னடா… சிரிக்கிற?” என்று விக்ரம் அவனை முறைத்தான்.
“வேற என்ன மச்சான் செய்ய சொல்றீங்க? உங்க நிலைமையைப் பார்த்தா சிரிப்புதான் வருது!” என்றான் கோகுல்.
“நீ தானே ஐடியா கொடுத்த? இப்போ என்னை கிண்டல் பண்ற?”
“என்னோட ஐடியா நல்லாதான் ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அந்தப் பொண்ணு இடையில கால் பண்ணினதால்தான் அஞ்சலிக்கு கோபம் வந்துச்சு,” என்றான் கோகுல்.!”
“நானே எதிர்பார்க்கலடா… என்றான் விக்ரம்
சில நொடிகள் இருவரும் அமைதியாக நின்றனர்.
பிறகு கோகுல் விக்ரமைப் பார்த்து, “ஆனா ஒன்னு மட்டும் புரியுது மச்சான்…” என்றான்.
“என்ன?”
“அஞ்சலி உங்க மேல கோபமா இருக்காங்கன்னு நினைச்சேன். ஆனா இப்போ பார்த்தா… கோபத்தைவிட உங்க மேல இருக்குற உரிமைதான் அதிகமா இருக்கு போல!”
கோகுல் அப்படிச் சொன்னதும் விக்ரம் அவனைப் பார்த்தான்.
“உரிமையா…?” என்று மெதுவாக முணுமுணுத்தான்.
அவனுடைய அந்த மாற்றத்தை கவனித்த கோகுல், உடனே அவன் தோளில் தட்டினான்.
“அதெல்லாம் இப்போ யோசிக்காதீங்க. முதல்ல உங்க போனுக்கு என்ன பண்ணப் போறீங்கன்னு யோசிங்க. போன் இல்லாம எப்படி இருப்பீங்க?”
அதைக் கேட்டதும் விக்ரம் மீண்டும் அவனை முறைத்தான்.
“அதுதான் இப்போ உனக்கு இருக்கும் பெரிய பிரச்சனை!”
“போன் உடைஞ்சது பெரிய பிரச்சனையா? இல்ல அஞ்சலி இன்னும் கோபமா இருக்காங்களே… அது பெரிய பிரச்சனையா?”
கோகுல் வேண்டுமென்றே கேட்டதும், விக்ரம் அவனைப் பார்த்து ஒரு நொடி அமைதியாக இருந்தான்.
பிறகு அவன் உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
“ரெண்டுமேதான்!”
“அதுதான் என் மச்சான்!” என்று சொல்லி கோகுல் சிரிக்க, விக்ரமும் அவனைப் பார்த்தபடி சிரித்தான்.
அதன் பிறகு வந்த நாட்களில், அஞ்சலி விக்ரமிடம் இருந்து வெகுவாக விலகியே இருந்தாள். அவன் இருக்கும் இடத்தில் அவள் இருப்பதைத் தவிர்த்தாள். அவனிடம் பேச வேண்டிய சூழ்நிலை வந்தாலும், தேவையான வார்த்தைகளுக்கு மேல் ஒரு வார்த்தைகூட பேசாமல் ஒதுங்கிக் கொண்டாள்.
விக்ரமும் அவளைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை.
அஞ்சலியின் கோபம் இன்னும் முழுமையாகத் தணியவில்லை என்பதை அவனும் புரிந்துகொண்டிருந்தான். அதனால், ‘கொஞ்ச நாள் போகட்டும்… அவளாகவே சமாதானமாகிவிடுவாள்’ என்று நினைத்து, அவளுக்கு வேண்டிய இடைவெளியைக் கொடுத்துவிட்டான்.
இப்படியே நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தன.
ஆதிரனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது.
அன்று காலையில் ஆதிரன் வழக்கம்போல் அலுவலகத்திற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். சட்டையை அணிந்து கண்ணாடி முன் நின்று தன் தலைமுடியைச் சரி செய்து கொண்டிருந்தபோது, அவன் முன் வந்து நின்றாள் ஆதிரை.
அவள் முகத்தில் ஏதோ ஒரு தயக்கம் தெரிந்தது.
“இன்னைக்கு ஆபீஸ் போயிதான் ஆகணுமா?”
ஆதிரன் புருவத்தைச் சுருக்கிப் பார்த்தான்.
“வீட்ல இருந்து என்ன பண்ணப் போறேன்? ஆபீஸ் போகத்தானே வேண்டும்.”
கதிர் அண்ணா வீட்டுக்குப் போகணும்.”
அவள் சொன்னதும் ஆதிரன் உடனே திரும்பிப் பார்த்தான்.
“கதிர் வீட்டுக்கா? என்ன திடீர்னு?”
“ம்…”
“ஏன்? என்ன விஷயம்?”
“அங்கே போயிட்டு சொல்றேன்.”
ஆதிரன் அவளைச் சந்தேகமாகப் பார்த்தான்.
ஆதிரை சிறிது நேரம் அமைதியாக நின்றாள்.
பிறகு அவனைப் பார்த்து, “உங்களால வர முடியுமா… முடியாதா?” என்று கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதும் ஆதிரனுக்கு வேறு வழியில்லாமல் போனது.
“சரி… வாரேன்.”
அவன் சொன்னதும் ஆதிரையின் முகத்தில் உடனே ஒரு சிறிய நிம்மதி தெரிந்தது.
இருவரும் ஒன்றாகக் கீழே இறங்கி வந்தனர்.
அவர்கள் கீழே வந்ததும், அங்கே இருந்த காட்சியைப் பார்த்த ஆதிரன் அப்படியே நின்றுவிட்டான்.
வீட்டில் இருந்த மொத்த குடும்பமும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தனர்.
“என்ன இது?” என்று சுற்றிலும் பார்த்தவன், “நீங்க எல்லாம் எங்க கிளம்பிட்டீங்க?” என்று கேட்டான்.
அதற்கு ஸ்ரீராம் பதில் சொன்னார்.
“கதிர் வீட்டுக்குப் போகணும்னு ஆதிரை சொன்னாப்பா. அதுதான் எல்லாரும் கிளம்பிட்டோம். ஏன்? உனக்குத் தெரியாதா?”
ஆதிரன் உடனே தன் அருகில் நின்றிருந்த ஆதிரையைத் திரும்பிப் பார்த்தான்.
அவளோ ஒன்றும் தெரியாதது போல நின்றிருந்தாள்.
“எனக்கு இப்பதான் சொன்னா!” என்றான் ஆதிரன்.
அதைக் கேட்டதும் கோகுல் தலையைச் சாய்த்து ஆதிரையைப் பார்த்தான்.
“அப்படி என்ன எல்லாரையும் கூட்டிட்டு போற அளவுக்கு முக்கியமான விஷயம் அது? ஏதாவது விசேஷமா?” என்று கேட்டான்.
அவனுடைய கேள்வியைக் கேட்டதும் அங்கிருந்த அனைவருடைய கவனமும் ஆதிரையின் மீது திரும்பியது.
ஆதிரை ஒரு நொடி அனைவரையும் பார்த்தாள்.
பிறகு சற்றும் பதற்றமில்லாத குரலில்,
“அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா… நீங்க வாங்க. எல்லாரும் அங்கே போகலாம்,” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லையா?” என்று கோகுல் மீண்டும் சந்தேகமாகக் கேட்டான்.
“ம்… அங்கே போயிட்டு சொல்றேன்.”
அவள் மீண்டும் அதே பதிலைக் கூறியதும், கோகுல் ஆதிரனைப் பார்த்தான்.
ஆதிரனும் எதுவும் புரியாமல் தோளைக் குலுக்கினான்.
“சரி… எதுவா இருந்தாலும் அங்கே போய் தெரிஞ்சுக்கலாம். வாங்க,” என்றார் ஸ்ரீராம்.
அதன்பிறகு அனைவரும் ஒன்றாக வீட்டை விட்டு கிளம்பினர்.
கதிரின் வீட்டை நோக்கி அவர்கள் பயணம் தொடங்கியது.
அவர்களின் கார்கள் கதிரின் வீட்டுக்குள் நுழையும்போதே, வாசலிலேயே கதிரும் நிலாவும் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
கார்கள் உள்ளே வருவதைக் கண்டதும், நிலாவின் முகம் மலர்ந்தது. குறிப்பாக, காரிலிருந்து சர்வேஷ் இறங்கியதைக் கண்டதும் அவளால் அங்கேயே நிற்க முடியவில்லை.
“சர்வேஷ்!” என்று ஆசையுடன் அழைத்தவள், அவனை நோக்கி ஓடிச் சென்றாள்.
நிலாவைக் கண்டதும் சர்வேஷும் உடனே அவளை நோக்கி ஓடி வந்தான். நிலா அவனைத் தூக்கிக் கொள்ள, அவனும் “அத்தை!” என்று சொல்லியபடி அவளுடைய கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டுக் கொண்டான்.
“என் செல்லக்குட்டி… அத்தையைப் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சா?” என்று நிலா அவனைத் தூக்கி கொஞ்சினாள்.
“ம்… ரொம்ப!” என்று சர்வேஷ் மழலைக் குரலில் சொல்ல, நிலா அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் முகத்திலும் இயல்பாகவே புன்னகை மலர்ந்தது.
கதிர் அனைவரையும் அன்புடன் வரவேற்று,
“வாங்க… வாங்க… எல்லாரும் உள்ளே வாங்க,” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
அனைவரும் உள்ளே செல்ல முற்பட்டபோது, ஆதிரன் மட்டும் கதிரின் கையைப் பிடித்து அவனை அங்கேயே நிறுத்தினான்.
“ஒரு நிமிஷம் இரு.”
“என்னடா?”
“என்னடா விசேஷம்?”
கதிர் புரியாமல் அவனைப் பார்த்தான்.
“என்ன விசேஷம்?”
“ஒரு விசேஷமும் இல்லடா!”
“அப்போ ஏன் காலையிலேயே உன் தங்கச்சி எங்க எல்லாரையும் இங்கே கூட்டிட்டு வந்திருக்கா?
ஆதிரன் பேசிக்கொண்டே இருக்க, கதிர் தன் தங்கையை நினைத்தபடி தலையைச் சொறிந்தான்.
“அதுதான் எனக்கும் தெரியலடா. எனக்கும் காலையில்தான் கால் பண்ணா. ‘அண்ணா, நாங்க இன்னைக்கு எல்லாரும் வீட்டுக்கு வரோம். நீ ஆபீஸ் போக வேண்டாம்… வீட்டிலேயே இரு’ன்னு சொன்னா. அவ்வளவுதான். எதுக்குன்னு கேட்டா அங்கே வந்து சொல்றேன்னு சொல்லிட்டா.”
“அட… நீயும் தெரியாமதான் இருக்கியா?”
“ம். எனக்கே ஒண்ணும் புரியல.”
“சரி, வா. அவளே சொல்லுவா.”
இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் சென்று சோபாவில் அமர்ந்தனர்.
அதே நேரத்தில் ஆதிரை, அஞ்சலியை நோக்கி திரும்பினாள்.
“அஞ்சலி… வா, நாம போய் நிலாவுக்கு சமையல்ல கொஞ்சம் உதவி பண்ணலாம்.”
“சரி.”
அஞ்சலியும் உடனே அவளுடன் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.
சமையலறைக்குள் சென்றதும், நிலாவும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.
“என்ன செய்யணும்னு சொல்லு நிலா,” என்றாள் ஆதிரை.
“முதல்ல இதை வெட்டிக் கொடு…”
மூவரும் சமையலில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
அந்த நேரத்தில் சர்வேஷை மித்ரா தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“என் செல்லம்… இவ்வளவு பெருசா வளர்ந்துட்டியா?” என்று அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தாள் மித்ரா.
“அத்தை… என்னை கீழே விடுங்க,” என்று சர்வேஷ் சிரித்தபடி திமிறினான்.
“அதெல்லாம் முடியாது. இன்னும் கொஞ்ச நேரம் என் கிட்டதான் இருக்கணும்.”
அவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவர்கள் வீட்டிற்குள் வந்ததிலிருந்தே கோகுலின் பார்வை மட்டும் மித்ராவின் மீதே இருந்தது.
அவள் சர்வேஷைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவதையும், அவளுடைய முகத்தில் தெரிந்த அந்தப் சிரிப்பை கோகுல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய அருகில் சோபாவில் அமர்ந்திருந்த விக்ரமின் கண்களுக்கு அந்தப் பார்வை தப்பவில்லை.
சில நொடிகள் கோகுலைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், பின்னர் மெதுவாக அவன் அருகில் தலையை மட்டும் சாய்த்தான்.
யாருக்கும் கேட்காத அளவுக்கு மெதுவான குரலில்,
“என்ன மச்சான்… பார்வையில ஒரு மார்க்கமா இருக்கு?” என்று கேட்டான்.
அவன் அப்படித் திடீரென்று கேட்டதும், கோகுலுக்கு தூக்கிவாரிப் போட்டது.
“என்னது?”
சட்டென்று விக்ரமைத் திரும்பிப் பார்த்தான்.
பிறகு தான் தான் மித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்ததும், பதற்றமாக,
“ஐயோ மச்சான்… நான் சர்வேஷை பார்த்துட்டு இருந்தேன்!” என்றான் அவசரமாக.
விக்ரம் அவனை சில நொடிகள் உற்றுப் பார்த்தான்.
பிறகு புருவத்தை உயர்த்தியபடி,
“ஓ… அப்படியா?” என்றான்.
“ஆமா!”
“சர்வேஷ் நம்ம வீட்டுல நம்ம கூடத்தான் இருக்கான். அப்போ எல்லாம் அவனைப் பார்க்காம, இங்கே வந்து தான் பார்க்கணுமா?” என்று கேட்டான் விக்ரம்.
கோகுல் உடனே விக்ரமின் கையைப் பிடித்து,
“சும்மா இருங்க மச்சான்!” என்றான்.
அவனுடைய முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்ததும் விக்ரமுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“சரி… சரி… நான் சும்மா இருக்கேன்.”
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், மீண்டும் கோகுலை நோக்கித் திரும்பி,
“நீ உன் வேலையை கண்டினியூ பண்ணு,” என்றான்.
“மச்சான்!”
“என்ன?”
“உங்களை…”
“சரி சரி… நான் ஒண்ணும் சொல்லல!”
என்று சொல்லிவிட்டு விக்ரம் அடுத்த நொடியே அந்தப் பக்கமாகத் திரும்பினான்.
அங்கே கதிர், ஆதிரன், ஸ்ரீராம் மூவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். விக்ரமும் அவர்களுடன் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டான்.
கோகுல் மட்டும் ஒரு பெருமூச்சு விட்டபடி மீண்டும் மித்ரா இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
அவள் இன்னும் சர்வேஷை கொஞ்சிக் கொண்டுதான் இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் கோகுலின் முகத்தில் மீண்டும் அந்த மெல்லிய புன்னகை தோன்றியது.
தொடரும்