1 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 1

 

இந்து சமயத்தின் அழமான நம்பிக்கையின்படி தமிழ் மண்ணில், ஓர் ஆண்டு என்பது வெறும் நாட்களின் தொகுப்பு அல்ல. இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தோடு இணைந்த ஒரு புனித பயணம். இந்த பயணம்  உத்ராயணகாலம், தட்சிணாயணகாலம் என்று இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு காலமும், ஆறு மாத கால அளவீடாக நேர்த்தியாக வரையறுக்கப்பட்டுள்ளன. 

தை மாதத்தின் முதல் நாளில் தொடங்கி ஆனி மாதம் வரை, உத்ராயணகாலம் என்றும், இந்த காலத்தில் சூரியன் தன் தேரை வடக்கு திசை நோக்கிச் செலுத்துவான் என்றும், இதன் விளைவாக, நமக்கு பகல் பொழுது நீண்டதாகவும், இரவு பொழுது குறுகியதாகவும் இருக்கும் என்றும், இந்த காலத்தில் சுபகாரியங்கள், தானங்கள், தியானங்கள், யாகங்கள் மற்றும் ஆன்மீக சடங்குகள் செய்தால் பல மடங்கு புண்ணிய பலன்களை பெறலாம் என்றும்… 

ஆடி மாதத்தின் முதல் நாளில் தொடங்கி மார்கழி மாதம் வரையில், சூரியன் தன் வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துவிட்டு, தெற்கு திசையை நோக்கி திரும்புவான் என்றும், நமக்கு இரவு பொழுது நீண்டதாகவும், பகல் பொழுது குறுகியதாகவும் இருக்கும் என்றும், இந்த காலத்தில் அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பிராணவாயு அதிகமாக கிடைப்பதாகவும், ஜீவாதார சக்தி பூமியில் முழுமையாக நிரம்புவதாகவும் நம்பப்படுகிறது. இது நம் ஆத்மாவை பலப்படுத்த உகந்த காலம் என்பதால், பண்டைய ஜோதிட நூல்கள் தட்சிணாயண காலத்தை ‘சக்தி மாதம்’ என்று போற்றி புகழ்கின்றன.

ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும்  சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் இந்த மாதத்தில்தான்  நடத்தப்படுகின்றன. வேப்பிலை ஆடையும், கூழ் வார்த்தலும், பொங்கல் வைத்தாலும், தீச்சட்டி ஏந்துதலுமாக ஊரே  திருவிழாவாக கொண்டாடுகின்றனர். பக்தர்கள் திரளாக திருவிழாவில் கலந்துகொண்டு, அம்மனின் அருளை, இன்று வரை பெற்று கொண்டிருக்கின்றனர். எண்ணற்ற வேண்டுதல்களை, பக்தரின் பக்திகேற்ப, கருணையோடு அன்னை பராசக்தியும்  கருணையோடு செவிமடுத்து, அவர்களின் துயர் துடைத்து வருகிறாள். 

மற்றும் சிலர் அவரவர் குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாட்டையும், குடும்பத்தை வழிநடத்தும் முன்னோர்களின் வழிபாட்டையும் மறக்காமல், முறைதவறாமல் கடைபிடிப்பது இந்த மாதத்தின் தனிச் சிறப்பாகும். அத்துடன், புதுமணத் தம்பதிகளுக்கான ஆடிப்பூரம், தலைஆடி போன்ற உறவுகளைப் பலப்படுத்தும் குடும்ப நிகழ்வுகளையும் கொண்டாடுகின்றனர்.

மற்றொரு முக்கிய தகவலாக, “ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற சொல்வடையும் இந்த மாதத்திற்கு உண்டு. இந்த பழமொழி சும்மா ஒன்றும் பிறக்கவில்லை. ஆடி மாதத்தின் சூரிய ஒளிக்கதிர்கள் இளம்பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சரியான வெப்பத்தை தருவதால், விவசாயிகள் இக்காலம் நோக்கி காத்திருந்து விதைகளைத் தூவுகின்றனர். அதனால், அடுத்த உத்தராயண காலத்திற்குள் செழிப்பான அறுவடையை கொடுத்துவிடும்.

இந்து சமயத்தில், ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்புகள் இருந்தாலும், மாதம் முழுவதும் சிறப்பான நாட்களை கொண்ட சிறந்த மாதமாகவே, ஆடிமாதம் இன்று வரையிலும் பலராலும் அனுசரிக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.  

ஆன்மீகமும், வாழ்வியலும் இணைந்த இந்த ஆடி மாதத்தில், மக்கள் தங்கள் இல்லங்களுக்கு தேவையான  புதிய உடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் என்று பலவற்றை கடைகளில் வாங்குவதை ஒரு நல்வாய்ப்பாக கருதுகின்றனர். 

இதை நன்குணர்ந்த வியாபாரிகள், தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவும், அவர்களிடம் நன்மதிப்பை பெறவும்,  வியாபாரத்தை பெருக்கவும் “ஆடி ஆஃபர்” என்ற கவர்ச்சிகரமான தள்ளுபடிகளையும், “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” போன்ற வியக்கத்தக்கச் சலுகைகளையும் வாரி வளங்குகின்றனர்.  

இந்த வணிக உத்திகள் மக்களை கவர்ந்து, விற்பனையை அதிகரிக்கின்றன. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் கணிசமான லாபம் பெறுவதுடன், மாநிலத்தின் பொருளாதார சுழற்சியும் மேம்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையில் நிறைவான பொருட்களும் கிடைக்கிறது. 

சுருக்கமாக, ஆடி மாதம் என்பது வெறும் ஒரு தமிழ் மாதம் மட்டுமில்லாமல், கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு, குடும்ப நிகழ்ச்சிகள் என்று மிக சிறப்பான நாட்களை கொண்டிருப்பதால், சென்னையில் எப்பவும் பரபரப்புடன், மக்கள் கூட்டம் அதிகமாக காட்சியளிக்கும் தெருக்களில் ஒன்றான வர்த்தக வீதியில்,  கோவில் வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்த “ராஜா டெக்ஸ்டைல்ஸ்” என்ற பெரிய ஜவுளிக்கடை, ஆடி மாதத்திற்காக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  கடையை சுற்றிலும் கட்டப்பட்டிருந்த வண்ண விளக்குகளை பார்க்க, மாலை நேரத்து நட்சத்திரங்களை போல மின்னி ஜொலித்து கொண்டிருந்தது. 

பிரமாண்டமான வடிவமைப்புடன் இருந்த  கடையின் வெளிதோற்றத்தை பார்த்துவிட்டு, ‘வெளிதோற்றமே இவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தால் கடையின் உள்ளே எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்குமோ? ஆடி மாதத்திற்கான என்னென்ன கவர்ச்சிகரமான, சிறப்பான சலுகைகளை எல்லாம் வைத்துள்ளார்களோ?’ என்று அக்கடையின் வெளியில் கூடியிருந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தில், சிலர் பேசிக் கொண்டார்கள். 

மற்ற நாட்களில் கடைக்குள் வரும் வாடிக்கையாளரை விட, ஆடி மாதத்தில் சற்று  அதிகமாக வாடிக்கையாளர்கள் கடைக்குள் வருவார்கள் என்று கணித்து வைத்திருந்த அந்த கடையின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜகுமாரன், வெளியில் நின்றிருந்த காவலாளியை அலைபேசியில் அழைத்து, “வெளிய நிலவரம் எப்படி இருக்கு? நம்ம கடைக்கு முன்னாடி எத்தனை பேர் நிற்கிறாங்க?” என்று, ஒரு சிறிய எதிர்ப்பார்ப்புடன் கேட்டான். 

“கூட்டமா நிறைய பேர் நிற்கிறாங்க சார்” என்றவர், கூட்டத்தில் கடையை பற்றி வாடிக்கையாளர் கிசுகிசுத்த தகவலையும் சேர்த்து  மகிழ்ச்சியான குரலில் கூறினார். 

அச்செய்தியை கேட்டு மனதிற்குள் மகிழ்ந்தவன், கடையின் வடிவமைப்பு தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று, இரவு பகலாக, ஆட்களை வைத்து கவனத்துடன், தான் வடிவமைத்தததிற்கு பலன் கிடைத்துவிட்டதாக  எண்ணியவன், தனது திட்டமிடலும் உழைப்பும் வீண் போகவில்லை என்று நினைத்தவாறு, அழைப்பை துண்டித்துவிட்டு அருகில் இருந்த ஒலிபெருக்கியை கையில் எடுத்தான். 

“அனைவருக்கும் வணக்கம்! இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ கடைக்குள் துப்புரவு பணிகள் முடிந்து, கதவுகள் திறக்கப்படும். அதுவரை அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறு கடை நிர்வாகம் சார்பில்  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இன்று மிகவும் மங்களகரமான நாள் என்பதால், வழக்கத்தைவிட  அதிகமான வாடிக்கையாளர்கள்  கடைக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, அனைவரும், உங்களுடைய குழந்தைகளையும், உடைமைகளையும் மிகவும் கவனமுடன் பார்த்து கொள்ளுங்கள் என்று  நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை செய்கிறோம்.

மற்றும் உங்கள் வசதிக்காக, தேநீர், மோர், குடிநீர் ஏற்பாடு செய்திருக்கிறோம். வரிசையாக வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதுவரை உங்கள் ராஜா டெக்ஸ்டைல்ஸ்க்கு நீங்கள் கொடுத்த, அன்பிற்கு, ஆதரவிற்கு நிர்வாகத்தின் சார்பில்  மனமார்ந்த  நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இனி வரும் ஒவ்வொரு நாட்களிலும் உங்களோட அன்பும் ஆதரவும் வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம். நிச்சியமாக உங்களது தேவைகளை புரிந்து கொண்டு, நியாயமான விலையில் சிறந்த பொருட்களை எப்பவுமே வழங்க நாங்க தயாராக காத்து கொண்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்! நன்றி” என்று கூறிவிட்டு ஒலிப்பெருக்கியை கீழே வைத்தான். 

கடையினுள் பக்தி மனம் கமிழ விநாயகர் துதி  ஒலிக்க துவங்கியது.  வரவேற்பு அறையின் முன்பிருந்த விநாயகர் சிலையின் முன்பு,  வேலையாட்கள் கூடினார்கள். சிலர் மட்டும் வழக்கமான துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். 

சிறிது நேரத்தில் அனைவரும் வரவேற்பு இடத்தின் முன்பு வந்து கூடியதும், ராஜகுமாரனை பணிவுடன் அழைத்தார் மேலாளர். 

உடனே, தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து, பூஜையில் கலந்து கொண்டான். 

சுவாமிக்கு தீபாராதனை காட்டி முடித்து, அனைவரும் சுவாமியை மனமுருகி வேண்டி முடித்ததும், அனைவரையும் உற்காசகப்படுத்தும்விதமாக பேச தொடங்கினான். “இந்த நல்ல நாளை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்! இன்னைக்கு, தமிழகம் முழுவதும் உள்ள, நம் கடைகளில் சிறப்பான விற்பனை நடைபெற வேண்டும். அதன் மூலம் நம் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். நம் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும். நம் குடும்பங்கள் மட்டுமல்லாமல், நமக்கு இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய ஒவ்வொரு வாடிக்கையாளரும், மற்றும் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும். நம் பாரத நாடு ஒரு உயர்ந்த நாடாக மாற வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டிகொண்டு, நம் வேலையைத் தொடங்குவோம்.

இந்த மாதம் நீங்கள் நிறைய வியாபரம் செய்து, உங்கள் வருமானம் உயர வேண்டும் என்று, அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். எல்லாரும் நல்லா பண்ணுங்க. ஆல் த பெஸ்ட்” எனக் கூறிவிட்டு, கதவை திறக்கும்படி பணித்தான். 

அவ்வேளையில் சந்தனம், குங்குமம், தூபங்கள், பூக்களின் நறுமணம் கலந்து கடையெங்கும் ஒரு தெய்வீகமான பக்தி மணம் கமிழ ஆரம்பித்தது. 

கடவுளின் அருளோடும், நிறைவான மனதோடும், கடையின் பிரதான கதவு திறக்கப்பட்டது. அடுத்த கணமே வெள்ளமென வாடிக்கையாளர்கள் கூட்டமாக, கடைக்குள் நுழைந்தார்கள்.

பட்டுச்சேலைகள், தினசரி உடைகள், பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான  ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், சமையல் பாத்திரங்கள் என்று விதவிதமான பொருட்கள் ஆறு மாடியில், ஒவ்வொரு பகுதியாக பிரித்து அழகாக அடுக்கப்பட்டிருந்ததில், தனக்கு தேவையான பகுதிக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரும் பிரிந்து செல்லவும், விற்பனைப் பிரதிநிதிகள் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கினார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் புன்னகையுடன் அணுகி, அவர்கள் கேட்கும் ஆடைகளை எடுத்து விரித்து காட்ட தொடங்கினார்கள்.

ராஜகுமாரன், தனது பிரத்யேக அறையினுள் இருந்த பெரிய கண்ணாடி ஜன்னலின் வழியாக கடையின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஆரம்பித்தான். 

சில நொடியில் அந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அவனின் கூரிய பார்வை, ஒரு குறிப்பிட்ட விற்பனைப்பிரதிநிதி மீது படிந்தது. 

வாடிக்கையாளரிடம் ஒரு பட்டுச்சேலையை எடுத்து காட்டி கொண்டிருந்தான். ஆனால், அவனது முகத்தில் ஒருவித சோர்வு, உற்சாகமற்ற பார்வை, புன்னகையே இல்லாத முகத்துடன், ஏதோ ஒரு கடமைக்காக செய்து கொண்டிருந்தான். அவனது சோர்வான முகம் அந்த இடத்தின் கலகலப்பிற்கு முரணாக தெரிந்தது. 

அவனை கவனித்து கொண்டிருந்த ராஜகுமாரனுக்கு அவனின் செயல் சற்று வருத்ததை கொடுக்கவும், ‘வியாபாரம் என்பது ஒரு அற்புத கலை. அது வெறும் பொருட்களை விற்பது மட்டுமல்ல. வாடிக்கையாளருடன் ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்தி, அவர்களின் தேவையை புரிந்துகொண்டு, அதற்கேற்ப பொருட்களை அறிமுகப்படுத்தி, இருபக்கமும் ஒரு சுகமான விற்பனையை நிறைவு செய்து, இறுதி வரை வாடிக்கையாளருக்கு ஒரு நிறைவான சேவையை கொடுப்பது என்பதை, முதலில் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்’ என்று மனதிற்குள் முடிவெடுத்தவனாக, தனது அறையிலிருந்து வெளிவந்து, அந்த விற்பனைபிரதிநிதி எதார்த்தமாக தன்னை பார்த்ததும், சைகையால் அருகில் வரும்படி அழைத்தான். 

மற்றொரு விற்பனைபிரதிநிதியிடம், தன்னுடைய வாடிக்கையாளரை பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு, உள்ளங்கையில் படர்ந்த வேர்வையைத் துடைத்தபடி சற்று தயக்கத்துடனும், பயத்துடனும் ராஜகுமாரனை அணுகினான் அவன். 

அவனை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை கனிவோடு பார்த்தான் ராஜகுமாரன். “என்ன தம்பி!… உன் முகத்துல புன்னகையே இல்ல. ஒரு உற்சாகமில்ல. மொத்தத்துல சந்தோஷமே இல்ல. என்னாச்சி?” என்று புன்முறுவலுடன் கேட்டான். 

​அந்த கேள்வி ஒரு முதலாளியிடம் இருந்து வந்த அதிகாரக் குரலாக இல்லாமல், ஒரு அண்ணனின் அக்கறையாக இருந்ததால், அவன் தடுமாறினான்.

 “ஒ…ஒன்னுமில்ல சார்” என்று தழுதழுத்த குரலில் சிரமப்பட்டு கூறினான்.

ஹாய் ப்ரெண்ட்ஸ்!

போட்டியின் ரூல்ஸ்படி லைக்ஸ் அண்ட் கமெண்ட் அதிகம் பெறுகிற கதை தான் வெற்றி பெறும். ஸோ… உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸை மறக்காமல் கொடுத்துவிட்டு செல்லவும். மீண்டும் நாளை சந்திப்போம். தினமும் ஒரு அத்தியாயம் பதிவிடுகிறேன். மறக்காமல் வந்து படியுங்கள். இந்த கதை மிக எளிமையாக எழுதியிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன் 

பை…

அன்புடன்

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top