அத்தியாயம் : 15
அன்று மாலை தேவயானி இருந்த அறைக்குள் வந்த ராஜகுமாரன், அவள் குளியலறைக்குள் இருக்கும் சத்தம் கேட்டு குளித்து கொண்டிருக்கிறாள் போல என நினைத்து, அறையிலிருந்து நகர எத்தணித்தான்.
அவன் அறைக்குள்ளே வருவான் என்று எதிர்பாராத தேவயானி, எதார்த்தமாய் குளியல் அறையிலிருந்து வெளிய வந்தததும், அவனை கண்டு பதற்றத்துடன், “சார்… ஸ்ஸ்…வேதாவை கண்டுபிடிச்சிட்டிங்களா?” என்று அவசரகதியில் கேட்டாள்.
அவள் குரல் கேட்டு திரும்பியவன், அவளது கண்களில் மகிழ்ச்சியின் மின்னல் வெட்டி மறைவதை கண்டு, ‘கவலையோடு இருந்தவள் இப்போது மகிழ்ச்சியோடு இருக்கிறாள். அவள் மகிழ்ச்சிக்கு காரணமென்ன?’ என்று புரிந்துகொள்ள முடியாமல், “இல்லை” என்றான் தளர்ந்த குரலில்.. அந்த ஒற்றை வார்த்தையில் அவனது அத்தனை கவலைகளும் அடங்கியிருந்தன.
அவனின் முகத்தில் சோர்வும், கவலையும் கலந்திருப்பதை கண்டவள், அமைதி காக்க, “ஆண்டாள் மேடம், உன்னை காணோம்னு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திக்காங்க. அவங்ககிட்ட பேசினேன். நீ ஸ்வேதானு நினைச்சி உன்னை அழைச்சிட்டு வந்தேன். நீ ஸ்வேதா, இல்லைனு தெரிஞ்சதும் உன்னை விடலாம் நினைச்சேன். ஆனால், இப்போதைக்கு உனக்கு உடம்பு சரியில்லை. சரியானதும் ஆசிரமம் அழைச்சிட்டு வர்றேன்னு சொன்னேன்.
அவங்க உன் குரலை கேட்டால்தான் உன்னை காணோம்னு கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கிக்குவேனு சொன்னாங்க. அவங்களுக்கு போன் பண்ணித்தர்றேன் கேஸ்ஸை வாபஸ் வாங்க சொல்லு. இல்லன்னா… நீதான் ஸ்வேதா என் அண்ணனை மனரீதியா டார்ச்சர் பண்ணி சாகடிச்சனு உன்மேல நான் கேஸ் கொடுப்பேன்” என்று, கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியவன் இறுதியில் ஒரு மிரட்டல் குரலில் கூறினான்.
‘அய்யோ போலீஸ்ஸ்டேஷனுக்கு போறதுக்கு பதிலாக இங்கையே இருந்திடலாம். இந்த இடம்தான் நமக்கு சிறந்த பாதுகாப்பு’ என்று பயத்துடன் மனதிற்குள் எண்ணியவள், “போன் பண்ணி தாங்க சார் நான் பேசறேன்” என்றாள்.
அவளது முகத்தில் தெரிந்த அப்பட்டமான பயத்தை கூர்மையாக கவனித்தபடி, ஆண்டாளுக்கு அழைப்பு விடுத்தான். சில வார்த்தைகள் பொதுவாக பேசிவிட்டு, அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.
“தேவயானி இவர் சொல்றதெல்லாம் உண்மையாம்மா? நீ நல்லாயிருக்கல்ல. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?” என்று அன்பாக ஆண்டாள் கேட்டகவும்,
அவளது குரலில் வழிந்த அன்பும், அக்கறையும் தேவயானியை ஒரு கணம் மனம் உருக வைத்தது. அந்த அன்பில் மனம் மகிழ்ந்தவளாக, “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை மேடம். இவங்க என்னை நல்லா பார்த்துகிறாங்க. நீங்களும் என் அப்பாவும் அம்மாவும் என்னை நினைச்சி பயப்படாதிங்க. நான் சீக்கிரம் குணமாகி ஆசிரமத்துக்கு வந்திருவேன்”
“உடம்புக்கு என்னம்மா? நீ நல்லாத்தான இருந்த???” என்று பதட்டத்துடன் கேட்டாள் ஆண்டாள்.
ஒரு நொடி தயங்கினாள். ராஜகுமாரன் அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து, “திடீர்னுதான் உடம்பெல்லாம் அடி..ச்சி போட்டது போல வலி எழுந்திரிக்க முடியலை ஆன்ட்டி. அப்புறம் இவங்க சிஸ்டர் டாக்டராக இருக்காங்க. அவங்க வந்து ட்ரீட்மென்ட் பார்த்தாங்க. அவங்க… ஒரு நாலு நாளைக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க. இப்ப கொஞ்சம் பரவாயில்லை மேடம் ரெஸ்ட்டில் இருக்கேன்” என்று பொய் கூறினாள்.
“நான் என் பையனை அனுப்புறேன் நீ அவனோட வந்திரு. நாம ஆசிரமத்தில் வச்சி உனக்கு ட்ரீட்மென்ட் பார்ப்போம். நீயே அவர் வீட்டில் இருக்கணும்?” என்று, அவள் பெரிய ஆபத்தில் இருப்பதாய் நினைத்து சந்தேகமாய் ஆண்டாள் கேட்கவும்,
தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிக்கும் ஒரு தாயின் பாசத்தை ஆண்டாளின் குரலில் உணர்ந்தவள், இந்த கள்ளம்கபடமில்லாத அன்பு கிடைக்க இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று ஒரு நிமிடம் மனதிற்குள் எண்ணியவளாக, “அந்த ஸ்வேதாவை இவங்க கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணலாம்னு நினைக்கிறேன் மேடம். அவளால்தான் நான் ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கேன். எந்த தப்பும் பண்ணாமல் நான் ஏன் ஓடி ஒளியணும்? இனி நான் ஓட போறதில்லை. திருப்பி அடிக்க போறேன். நான் பட்ட வலி வேதனைக்கு இவங்க கூட சேர்ந்து, அவளை தண்டிக்க போறேன்” என்று கோபமாக கூறினாள்.
அவளின் குரலில் ஒரு உறுதியை கண்டவன், அடுத்து அவர்கள் பேசுவதில் கவனத்தை செலுத்தினான் ராஜகுமாரன்.
“நீ வாழ வேண்டிய பொண்ணும்மா இப்படியெல்லாம் பேச கூடாது தப்பு. நீ புறப்பட்டு ஆசிரமம் வா. இல்லை நான் கார் அனுப்புறேன். நீ இருக்கிற அட்ரஸ் சொல்லு”
“மேடம்!… அந்த ஸ்வேதாவால இவங்க அவங்க அண்ணனையே இழந்து நிற்கிறாங்க. ஒவ்வொருத்தரையும் மிரட்டி பணம் பறிச்சிட்ட இருந்தவள், இப்ப பணத்துக்காக ஒருத்தரை சாகடிச்சிட்டாள். இதுபோல பணத்துக்காக இவள் பாட்டிற்கு தப்பு பண்ணிட்டே இருப்பாள், ஆனால் அவளை போல நான் இருக்கிறதால அவள் செய்த தவறுக்கு நான் தண்டனையை அனுபவிக்கணுமா நீங்களே சொல்லுங்க? அவளை கண்டுபிடிச்சி அவள் கையை காலை உடைச்சி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வீதியில பிச்சை எடுக்க விடணும் மேடம். அப்ப… ஒரு நாயும் அவளை சீண்டாது அவள் வேதனையில் துடிதுடிச்சி சாவாள்”
தேவயானியின் முகத்தில் தெரிந்த கலவரத்தை கண்டவன், ‘ஆமாம்! ஸ்வேதா துடிதுடிச்சி சாகணும்’ என்று மனதிற்குள் கொடூரமாக எண்ணினான்.
“கடவுள் ஸ்வேதாவுக்கு தண்டனை கொடுப்பார்ம்மா. நீ அவளுக்கு தண்டனை கொடுக்கிறேனு, உன் வாழ்கையை கெடுத்துக்காத. நீ முதல்ல அந்த ஸ்கூல் வேலையில் ஜாயின் பண்ணு. உன் அப்பாவுக்கு பரிபூரணமா உடம்பு சரியானதும் நானே ஒரு நல்ல பையனை பார்த்து, என் சொந்த செலவில் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன். அதனால இந்த பழிவாங்கிற எண்ணம் வேண்டாம்மா, அது உன் வாழ்கையையே அழிச்சிரும்” என்று அன்பாக அறிவுரை வழங்கினாள்.
இவ்வாறாக ஆண்டாள் பேசி கொண்டிருப்பதை கேட்க, பொறுமை இழந்தவனாக, சட்டென்று அவளிடமிருந்து அலைபேசியை வாங்கி, “மேடம் நான் குமார் பேசிறேன். இந்த பெண்ணோட வாழ்க்கைக்கு நான் பொறுப்பு. நீங்க கவலைபடாதிங்க நிச்சியமாக இந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினையும் வர நான் விட மாட்டேன். அட் த சேம் டைம்… நீங்க நினைக்கிறது போல ஒரு நல்ல இடத்தில் இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பேன் என்னை நம்புங்க” என்று அழுத்தமான குரலில் கூறினான்.
“பழிக்கு பழி தீர்வாகாதுப்பா. உங்க சுயநலத்திற்காக ஒரு அப்பாவி பெண்ணோட வாழ்க்கையை சீராழிச்சிடாதிங்க”
“நிச்சயமாக மாட்டேன் மேடம். தேவயானிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சின் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அடுத்த நொடி அறையிலிருந்து வெளியேற எத்தணித்தான்.
“சார்” என்று அவசரகுரலில் அவனை அழைத்தாள் தேவயானி.
சட்டென்று நின்றவன் அவள் புறம் அதே வேகத்தில் திரும்பி, ‘என்ன’ என்பது போல கேள்வியாய் பார்த்தான்.
“மேடம்!… எங்களுக்கு நிறைய உதவி பண்ணிட்டாங்க. அவங்ககிட்டையே திரும்ப உதவி கேட்க தயக்கமாக இருக்கு. அதனால எனக்கு நீங்க எந்த வேலை கொடுத்தாலும் நான் செய்றேன் சார். வீட்டு வேலையாக இருந்தாலும் செய்றேன். என் அப்பா அம்மாவுக்கு நீங்க எனக்கு கொடுக்கிற சம்பளபணம் உதவியா இருக்கும்” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
ஒரு நிமிடம் யோசித்தவன், பின்னர் “பெருமாள் மாமாகிட்ட கேட்டு இந்த வீட்டுக்குள்ளையே எதாவது வேலை செய். பட் ஒன் கன்டிஷன் நீ வீட்டைவிட்டு வெளிய போக கூடாது” என்று கராராக கூறினான்.
“ஸ்வேதா கிடைக்கிற வரை நீங்களே என்னை போக சொன்னாலும் இனி நான் போக மாட்டேன் சார். வெளிய போனால் அவள்னு நினைச்சி எனக்கு தேவையில்லாததான் ஆபத்து வரும்.
ஆனால், அவள்னு நினைச்சி மத்தவங்க என்கிட்ட தவறா நடக்க பார்த்தாங்க. ஆனால், நீங்களோ உங்க ஆட்களோ என்கிட்ட கன்னியமா நடந்துக்கிறிங்க. அதுதான் எனக்கு இங்க இருக்கிறதுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கிது” என்றவளின் முகம் சட்டென்று கோபமாக மாறியது.
“பணத்துக்காகத்தான, ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய அவளுடைய பெண்மையை வைத்து இவ்வளவு தவறையும் பண்றாள். அவள் கையை காலை உடைச்சி தெருவில் பிச்சை எடுக்க விட்டால், என்ன பண்ணுவாள். உதவிக்குன்னு உறவாடிய… யாரும் வர மாட்டாங்க. அப்பத்தான் அவளுக்கும் புத்தி வரும். அப்படி ஒரு கொடுமையான தண்டனையை நீங்க அவளுக்கு கொடுக்கணும். அதை நான் பார்க்கணும் சார்”
அவள் வார்த்தைகள் ராஜகுமாரனின் மனதை ஏதோ செய்தன. ‘உண்மையில் வெறுப்பின் உச்சியில் பேசுகிறாளா? இல்லை நல்லவள் போல நடித்து, இவள் என்னை ஏமாற்ற பார்க்கிறாளா?’ என்ற சிறு சந்தேகம் அவனுள் எழுந்தது.
“அவளோட நிலைமை அவளை போல இருக்கிறவங்களுக்கு ஒரு பாடமா அமையும். அவள் தெருவில் பிச்சை எடுக்கும்போது, நான் ஸ்வேதா இல்லை தேவயானினு தலைநிமிர்ந்து வீதியில நடக்கணும். ஆனால், தனி ஆளா இருந்து என்னால் அவளை தண்டிக்க முடியாது சார். நிச்சயமா உங்களால அவளை கண்டுபிடிச்சி தண்டிக்க முடியும். அவளை… நீங்க தண்டிக்கிற வரை, நான் சத்தியமா இந்த வீட்டை விட்டு வெளிய போக மாட்டேன். என்னை நீங்க முழுசா நம்பலாம் சார்” என்றாள் தேவயானி, அவளது குரலில் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
இவளை நம்பலாமா இல்லை நம்ப கூடாதா என்று யோசித்தவாறே, அவளிடம் எதுவும் கூறாமல், தன் அறையை நோக்கி நடந்தான்.
வழக்கம்போல அவளது அறைக்கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டுத்தான் செல்வான். இன்று அறையை பூட்டாமல், மறந்து தன் அறைக்குள் நுழைந்தான். அவள் கூறியதை பற்றி தீர்க்கமாக யோசித்தான்.
‘அண்ணனையே ஏமாற்றிய ஸ்வேதாவோட தங்கைத்தான இவள், இவளுக்கு அவள் புத்தி இருக்காமலா இருக்கும்? நல்லவள் போல பேசி, என்னை ஏமாற்ற நினைக்கிறாள். நான் ஏமாற மாட்டேன்’ என்று விடாப்பிடியாக ஆணித்தரமாக மனதிற்குள் எண்ணினான்.
தேவயானியோ, ‘என்மீது நம்பிக்கை வைத்துதான் அறையை பூட்டாமல் சென்றுவிட்டார். இனி, இந்த வீட்டில் நான் கைதி இல்லை. இங்கு ஒரு வேலையாள்’ என்று மகிழ்ச்சியாக மனதிற்குள் எண்ணியவாறு, கதவை பூட்டி கொண்டு மஞ்சத்தில் சரிந்தாள்.
மறுநாள் அதிகாலை ஐந்து மணியளவில் அறையிலிருந்து தயக்கத்துடன் வெளியே வந்தவள், சமையலறைக்குள் நின்றிருந்த பெருமாள் அருகில் சென்று, “அங்கிள் எதாவது வேலை இருந்தா கொடுங்க? நான் செய்றேன்” எனக் கேட்டாள்.
அவரோ எதோ பேய்யை பார்த்து பயப்படுபவர் போல, “நீ ஏன்ம்மா ரூம்ல இருந்து வெளிய வந்த? தம்பிக்கு தெரிஞ்சா திட்ட போறாங்க? உன் ரூம்க்கு போ” என்று பதட்டத்துடன் கூறினார் பெருமாள்.
“இல்லை அங்கிள். எனக்கு ஒரு வேலை வேணும்ன்னு நேத்து சார்கிட்ட கேட்டேன். அவர்தான் உங்ககிட்ட கேட்டு வேலை செய்ய சொன்னாங்க” என்று உற்சாகமாக கூறினாள்.
அவள் கூறுவதை நம்பாது அவளை சந்தேகமாய் பார்த்தவர், “நீயே இங்கையே இரு. எங்கையும் போயிடாத இதோ வர்றேன்” எனக் கூறிவிட்டு ராஜகுமாரன் அறைக்குள் வேகமாக நுழைந்தார்.
அலைபேசியில் ஏதோ பார்த்து கொண்டிருந்தவனிடம், “தம்பி அந்த பொண்ணு எதாவது வேலை கொடுங்கனு, நீ சொன்னதாக என்கிட்ட வேலை கேட்கிறாள்” என்று அவசரகதியில் கூறிவிட்டு அவனது வார்த்தைக்காக பதட்டத்துடன் காத்திருந்தார். ஒருவேளை அவள் வீட்டிலிருந்து தப்பித்துவிட்டாள் என்ன செய்வது என்ற பதட்டத்துடன் நின்றிருந்தார்.
“எதாவது சின்ன சின்ன வேலை கொடுங்க மாமா. ஆனால், அவள் மேல கொஞ்சம் கவனத்தை வைங்க. வீட்டை விட்டு அவள் வெளியே போகாமல் பார்த்துக்கங்க” என்றான் ராஜகுமாரன்.
“சரிங்க தம்பி” என்றவர், அவளிடம் வந்து காய்கறிகளை நறுக்கி தரும்படி கூறினார்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
உண்மையில் ஸ்வேதாவும் தேவயானியும் இருவரா?அல்லது ஒருவரா என்ற கேள்விக்கு பதில் தாருங்கள்.
அப்படியே ஒரு லைக் கொடுத்திருங்க.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.