அத்தியாயம் : 21
தன் உயிருக்கு உயிராய் நம்பிய ஒருவரே தன் அண்ணனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததை ராஜகுமாரனால், ஒரு நிமிடம் கூட ஏற்று கொள்ளவே முடியவில்லை.
நேற்று வரை தன் நிழலாக, குடும்பத்தில் ஒருவராக, எல்லாவற்றிற்கும் மேலாக தன் நம்பிக்கையின் தூணாக, இருந்த பெருமாள்தான், நடந்த சதிக்கு சொந்தக்காரன் என்ற உண்மையை, அவன் மூளை முழுமையாக நம்ப மறுத்தது.
எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் கூட, தன் குடும்ப உறுப்பினர் போல தங்களை பார்த்து கொண்ட மனிதன், தன் அண்ணனின் உயிர்போக காரணமாய் இருந்துவிட்டு, எதுவும் அறியாதவர் போல இத்தனை நாளும் தன் கண்ணெதிரே தன்னுடன் வாழ்ந்து வந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போதே அவனுக்கு பித்துப்பிடிப்பது போலிருந்தது.
அண்ணனின் இழப்பிற்காகத்தான் பட்ட வேதனைகளும், தேடிய அலைச்சல்களும், ஒவ்வொரு இரவும் நெஞ்சை பிழிந்த தவிப்புகளும் கண்முன்னே வர, மறுபக்கம் எல்லாம் பார்த்து கொண்டு, தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாரே, என்று நெஞ்சுக்குள் சொல்ல முடியாத வலியில் துடித்தான்.
காலில் விழுந்து கதறி கொண்டிருக்கும் பெருமாளை பார்க்க… பார்க்க, ராஜகுமாரனின் கைகளும் கால்களும் ஆத்திரத்தில் நடுங்கின.
கோபம் தலைக்கேற, அதைவிட பல மடங்கு ஏமாற்றமும் வெறுமையும், அவனது நெஞ்சை உலுக்க, ‘இவரையா என் அண்ணன் தன் சொந்த மாமாவாக மதித்தான்?’ என நினைத்து வருந்தினான்.
கண்களில் கொப்பளித்த கண்ணீரை தன் வன்மமான கோபத்தால் மறைக்க முயற்சித்தவன், ஆவேசமாய் ஒரு அலறலுடன் அவரை தன்னிலிருந்து தள்ளிவிட்டான். “என் அண்ணனை அநியாயமா கொன்னுட்டிங்களே” என்று பெருமாளை பார்த்து கை நீட்டி கேட்டவன், நிலை தடுமாறி கீழே விழுக போக, அச்சமயம் அவனுக்கு பின்னால் இருந்த தேவயானியும், சங்கரும் அவனை தாங்கி பிடித்தனர்.
“என் அண்ணன் உனக்கு என்னைய்யா குறை வச்சாரு?”
“அய்யோ இல்லை தம்பி. நான் வேணும்ன்னே செய்யலை. நான்தான் சாக நினைச்சேன்… அது எப்படியோ நடந்து போச்சி” என்று மீண்டும் அவன் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.
“குமார் இந்த நம்பிக்கை துரோகியை போக சொல்லு. இல்லை நான் எதாவது பண்ணிருவேன். நா…ன் இவரு மேல மரியாதை வச்சிருந்தேன் அதை கெடுத்துக்க வேணானு நினைக்கிறேன்” என்று ஆத்திரம் பொங்க கத்தினான் ராஜகுமாரன்.
“தம்பி தம்பி என்னை மன்னிச்சிட்டேனு சொல்லுங்க தம்பி” என்று பெருமாள் கேட்க,
“இந்த ஜென்மத்துல என் முன்னால வந்து நின்றாத போ….போயிரு” என்று கர்ஜித்தான்.
குமாரோ, “யோவ் வாய்யா” என்று அவரது கைப்பிடித்து வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து சென்றான்.
“குமாரு நான் வேணும்ன்னே பண்ணலைப்பா. ராஜா என் மகன் போலப்பா. ஆனா, அவனை நானே என் கையால கொல்லலை. துப்பாக்கி எப்படி வெடிச்சதுனு தெரியாது” என்று அழுதவாறு கூறினார்.
“நீ அண்ணன் இறந்த அன்னைக்கே… இந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்டிருந்தன்னா, ஒருவேளை உன்னை குமாரண்ணே… மன்னிச்சிருப்பாரு. ஆனா, நாங்களா கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் நீ நல்லவன்போல நாடகமாடுற பத்தியா, அதை என்னாலையே ஏத்துக்க முடியலை. எப்படிய்யா… அந்த மனுஷனால ஏத்துக்க முடியும்? நீ இதுநாள் வரை அடுத்தவங்க மேலதான பழி போட்டுட்டு இருந்த. ஒருதடவையாச்சும் உண்மையை சொல்லணும்னு உனக்கு தோணுதுச்சா” என்று, அவரின் நெஞ்சை துளைக்கும்படியாக கேள்வி கேட்டான். பெருமாள் அதற்கு பதில் சொல்லாமல் கண்கள் கலங்கியவாறு நின்றிருந்தார்.
“போய்யா… திரும்பி இங்க வந்திடாத” என்று சொல்லிவிட்டு மாடிக்கு விரைந்தான் குமார்.
கண்கள் கலங்கியவாறு தன் உடைகளை எடுத்து கொண்டு, வீட்டைவிட்டு வெளியில் வந்தவர், நாற்பது வருடமாக வேலை பார்த்தவருக்கு துரோகம் செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வுடன், அந்த வீட்டை ஒருதரம் பார்த்துவிட்டு, கண்கள் கலங்க நடக்க ஆரம்பித்தார்.
அந்த தெரு முக்கில், எதிரே வரும் லாரியை கவனிக்காமல் மன உளைச்சலுடன் நடந்துசென்றவர் விலகி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல், அப்படியே சென்று, லாரிக்குள் நசுங்கி சம்பவ இடத்திலேயே அடுத்த நொடி பரிதாபமாக உயிர் இழந்தார்.
உடனே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடியது. அந்த தெரு மக்கள் அவரை அடையாளம் கண்டு ராஜகுமாரனின் வீட்டு வாசலில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் விஷயத்தை கூறினார்கள்.
அவர் இறந்த விஷயம் வாட்ச்மேனால், வீட்டில் உள்ள அனைவரையும் சென்றடைந்தது. ஆனால், யாரும் அவரை போய் பார்க்கவில்லை.
இடிந்து போய் நின்றிருந்த ராஜகுமாரனிடம், “பெருமாள் அவரே அவருக்கு தண்டனை கொடுத்துகிட்டாருண்ணே” என்றான் குமார்.
“நான் அவர் சாகணும்னு நினைக்கலைடா. அவரு துரோகம் பண்ண வலியைத்தான் என்னால இன்னும் தாங்க முடியலை” என்று சொல்லி அழுதான் ராஜகுமாரன்.
“அண்ணே… நீங்க வருத்தப்படாதிங்க. நாங்க உங்களுக்கு இருக்கோம். எங்க உயிரே போனாலும், நாங்க உங்களுக்கு கனவிலும் துரோகம் பண்ண மாட்டோம்ண்ணே” என்று சங்கர் சமாதானம் கூற,
அவனை கம்பீரமாக பார்த்த அனைவரும் அவரின் கண்ணீரை பார்க்க விரும்பவில்லை. “சார்… அழாதிங்க சார்” என்று மெல்லிய குரலில் கூறினாள் தேவயானி.
அப்பொழுதுதான் கவனித்தான் அவள் தன்னை தாங்கி கொண்டு நிற்பதை…
மெல்ல நேராக நிமிர்ந்து நின்றவன், தன் கண்களை துடைத்து கொண்டு, “இந்த ஆளைவிட்டிருங்க” என்று அந்த பப்பில் வேலை பார்த்தவனை குறிப்பிட்டு கூறினான்.
அவனோ, “அண்ணே நான் வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறேன். உங்க வீட்டுல எதாவது டிரைவர் வேலை இருந்தா கொடுங்கண்ணே. உங்களுக்கு விசுவாசமா இருப்பேன். பணமில்லாதனால தான் ஒரு கோபத்துல உங்க வீட்டுக்குள்ள வந்தேன். ஆனா, இனிமேல் எந்த தப்பும் பண்ண மாட்டேன். எனக்கு வேலை மட்டும் கொடுங்கண்ணே. உங்களுக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்” என்று கெஞ்சி கேட்டான்.
அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “ஒரு வாரம் கழிச்சி வா” என்றான்.
“ரொம்ப தேங்க்ஸ்ண்ணே” என்று அந்த பப் ஊழியன் கூற,
ராஜகுமாரனோ எதுவும் பேசாது தன்னுடைய அறையை நோக்கி படியிறங்கினான்.
“யோவ் உன் பெயரு என்ன?” என்று அந்த பப்பில் வேலை பார்த்தவனிடம் அவனது கயிறை அவிழ்த்து விட்டவாறு குமார் கேட்க,
“கார்த்திக்” என்றான் அவன்
“உன்னால்தான்ய்யா… எங்க அண்ணன் சாவுக்கான மர்மம் தெரிஞ்சது. நீ வீட்டுக்குள்ள வந்தது, ஒருவேளைக்கு நல்லதா போச்சி பாரு. இவ்வளவு நாள் எங்க கூடவே இருந்த துரோகியை நாங்க கண்டுபிடிக்க நீ உதவி பண்ணிருக்க.. கண்டிப்பா அண்ணன் உனக்கு நல்லவேளையா போட்டு தருவாரு” எனக் கூறிவிட்டு, அவனை அனுப்பி வைத்தான்.
அவன் சென்றதும், “பெருமாள் இப்படி பண்ணுவாருனு நான் கனவுல கூட நினைக்கலைய்யா” என்று சங்கரிடம் புலம்பினான் குமார்.
“அதானடா… நம்ம அண்ணனையும் கொன்னுட்டு பணத்தையும் எடுத்துட்டு போயிருக்காரு பாரு. அவருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ, அவரு பொண்ணு கல்யாணத்தை அண்ணன்தான முன்ன நின்னு நடத்தி வச்சாரு. சீர்வரிசை எல்லாம் செஞ்சாரு”
அவ்விருவரும் புலம்புவதை கேட்டு கொண்டிருந்த தேவயானிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏதோ தன் வீட்டில் ஒரு துக்கம் நடந்தது போன்று மனதிற்குள் வருந்தினாள். குறிப்பாக ராஜகுமாரனை நினைத்தும் பெருமாளை நினைத்தும் பெரிதும் வருந்தினாள்.
அவ்விருவரின் எதிர்பாராத இறப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளாத சூழலில் அங்கு அனைவரும் தவித்து கொண்டிருக்க, “நாங்கதான் ராஜாவை கொல்லலைனு இப்ப உண்மெயெல்லாம் தெரிஞ்சிருச்சுல! அப்புறம் எதுக்கு எங்களை இன்னும் இப்படி அடைச்சு வச்சிருக்கீங்க? எங்களை விட்டுடுங்க, நாங்க கிளம்புறோம்!” என்று சற்று ஆவேசமாக கத்தி கேட்டாள் ஸ்வேதா.
அவளது திமிரான பேச்சைக் கேட்ட குமாருக்குக் கோபம் தலைக்கு ஏறியது. “என்னடி திமிரு உனக்கு? நீ கொலை பண்ணலதான் ஆனா, எங்க அண்ணனை காதலிக்கிற மாதிரி நாடகமாடி ஏமாத்தி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குனியே… அதுக்கு உனக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேள்வியாய் அவளை பார்த்தான்.
அதற்கு ஸ்வேதா துளியும் பயப்படாமல், “நான் பணத்துக்காக ஏமாத்தினேன். அதை நானே ஒத்துக்கிட்னேன். ஆனா, நான் கொலை பண்ற அளவுக்கு போகலையே! உங்க கூடவே இருந்த ஒரு ஆள்தான ராஜா சாக காரணம். அவரையே நீங்க ஒண்ணுமே செய்யாம விட்டுட்டீங்க. அப்ப எங்களை மட்டும் எதுக்காக சித்திரவதை செய்யணும்? எங்களை விடக் கூடாதா?” என்று எதிர்த்து நின்றாள்.
அவளது அகம்பாவமான பேச்சை கண்ட குமார் கோபத்தில் பற்களைக் கடித்தான். “இருடி… உன்னை என்ன பண்றதுன்னு அண்ணன்கிட்ட கேட்டுட்டு வர்றேன்” என்று மிரட்டிவிட்டு, சங்கருடன் கீழே இறங்கினான் குமார்.
கீழே இருந்த ராஜகுமாரன் அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள். அவனோ, மஞ்சத்தில் குப்புறபடுத்து தலையணையில் முகம் புதைத்து, கண்கள் கலங்கி கொண்டிருந்தான்.
அண்ணனை இழந்த சோகமும், நம்பிய மனிதர் செய்த துரோகமும், அவரின் மறைவும் அவன் மனதை சுக்குநூறாக உடைத்திருந்தது.
அவனை அந்த கோலத்தில் பார்ப்பதற்கே குமாருக்கும் சங்கருக்கும் சங்கடமாக இருக்க, மெல்ல அவனருகே சென்றவர்கள், “அண்ணே…” என்று பரிவுடன் அழைத்தனர்.
திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்த ராஜகுமாரனின் சிவந்த கண்களையும் அழுது வடிந்த முகத்தை பார்த்தும், “அண்ணே கவலைப்படாதிங்க” என்றான் சங்கர்.
அடுத்தநொடி, தன் முகத்தை துடைத்து கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான் ராஜகுமாரன்.
“அண்ணே… அந்த ஸ்வேதாவை என்ன பண்றது? நாங்க தப்பு பண்ணல, எங்களை விடுங்கன்னு ரொம்ப திமிரா பேசிட்டு இருக்கா” என்று கோபத்துடன் கூறினான் குமார்.
ஒரு நொடி மௌனமாக இருந்த ராஜகுமாரன், ஸ்வேதா மீது எழுந்த கோபத்தை அடக்கி கொண்டு, “முதல்ல தேவயானியை ஆசிரமத்துல கொண்டு போய் விட்டுட்டு வாருங்க. இல்லை அவள் கன்னியாகுமரி போகணும்னு ஆசைப்பட்டாலும், அங்கே போய் விட்டுட்டு வாங்க. அந்த ஸ்வேதாவை என்ன பண்ணலாம்னு, நான் அப்புறம் சொல்றேன். அதுவரைக்கும் அவங்க இரண்டு பேரையும் கட்டி போடுங்க. அவங்களுக்கு சாப்பாடு, தண்ணீனு எதுவும் கொடுக்க கூடாது” என்று அமைதியான ஆனால் உறுதியான குரலில் உத்தரவிட்டான்.
“சரிங்கண்ணே” என்று தலையாட்டிய இருவரும், உடனே மாடி அறைக்கு விரைந்தனர்.
அங்கே தேவயானி அமைதியாக நின்று கொண்டிருக்க, அவளிடம் சென்று, “ம்மா தேவயானி… அண்ணன் உன்னை போக சொல்லிட்டாரு. உன்னை ஆசிரமத்துலயோ இல்லை நீ கன்னியாகுமரி போக விருப்பப்பட்டா… உன்னை கொண்டு போய் விட சொன்னாரு, கிளம்பும்மா” என்றனர்.
அவர்கள் சொல்வதைக் கேட்ட தேவயானிக்கு ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும், மறுபுறம் துயரத்தில் வாடும் ராஜகுமாரனை நினைத்து மனதிற்குள் பாரத்தை உணர்ந்தாள்.
அதே நேரத்தில், அதை கேட்ட ஸ்வேதா உடனே குறுக்கிட்டு, “அப்ப நாங்களும் போகலாமா?” என்று ஆவலோடு கேட்டாள்.
அவளை ஒரு கேவலமான பார்வை பார்த்த குமார், “இல்லை… உங்களை இன்னும் அண்ணன் போக சொல்லலை. அண்ணன் உங்களை விட சொல்ற வரை இங்கேயேதான் நீங்க இருக்கணும்” என்று கூறியவன், அவளையும் அவளது தாயையும் சேரில் அமரவைத்து, கயிற்றால் பலமாக கட்டி போட்டான்.
“உங்க அண்ணனை கூப்பிடு நான் அவர்கிட்ட பேசணும். எங்களை மட்டும் ஏன் அவர் கட்டி போட சொன்னாரு” என்று கத்தினாள் ஸ்வேதா. அதையெல்லாம் சங்கரும், குமாரும் காதில் வாங்கவே இல்லை.
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
ஸ்வேதாவிற்கு என்ன தண்டனை ராஜகுமாரன் கொடுப்பான் என்று எதாவது ஐடியா இருக்கிறதா? கமெண்ட் மூலம் கூறுங்கள்.