அத்தியாயம் : 23
மறுநாள், பாஸ்கரின் அறுவை சிகிச்சைக்காக அவரை தயார் படுத்த கற்பகத்துடன் சேர்ந்து பாஸ்கரை கவனித்து கொண்டாள் தேவயானி.
அன்று… மதியம் சுமார் இரண்டு மணியளவில் அறுவை சிகிச்சை எந்தவித தடையுமின்றி மிகச் சிறப்பாக நடந்து முடிந்து, மருத்துவர்கள் வெளியே வந்தார்கள். “அவர் மயக்கத்துல இருக்காரு. ஈவினிங் கண் விழிச்சிருவாரு. நீங்க போய் பார்க்கலாம்” என்று நம்பிக்கையான வார்த்தையை கூறிவிட்டு நகர்ந்தார்கள்.
மாலை ஆறுமணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பாஸ்கர், கண் விழித்து விட்டதாக செவிலிப்பெண் கூறவும், தேவயானியும், கற்பகமும் அவரை சென்று பார்த்தனர்.
மெல்ல கண்களை விழித்து விழித்து பார்த்தவர், மகளையும் மனைவியையும் அடையாளம் கண்டதும் மெல்ல உதடுகள் விரித்து புன்னகைத்தார்.
“தைரியமா இருங்கப்பா, சீக்கிரமே வீட்டுக்குப் போயிடலாம்” என்று இருவரும் ஆறுதல் கூறிவிட்டு வெளியில் வந்தனர்.
மறுநாள் காலை… மருத்துவர்கள் பாஸ்கரை பரிசோதித்துவிட்டு, “இனி எந்த பயமும் இல்லை அவர் பூர்ணிமா குணமாகிட்டாரு. ஆப்ரேஷன் பண்ணிருக்கிறதால கொஞ்சநாளைக்கு மாத்திரை மட்டும் சாப்பிட வேண்டியிருக்கும். இப்ப… நார்மல் வார்ட்டுக்கு அவரை மாத்திருவோம். ஒரு மூணு நாளு கழிச்சி நீங்க வீட்டுக்கே போகலாம்” என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துவிட்டு நகர்ந்தனர்.
அந்த வார்த்தையே கேட்டதும் மனதில் இருந்த கவலை நீங்கி ஆனந்த கண்ணீருடன் கற்பகமும், தேவயானியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
கற்பகம் தன் கண்களை துடைத்து கொண்டே, “உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனதுல இருந்துதான்டி நம்ம வீட்டுக்கு பீடை பிடிச்ச மாதிரி, அந்த இரண்டு பீடைங்களும் நம்ம வீட்டுக்கு வந்ததுங்க. அடுத்தடுத்து நாம பிரச்சனை…. பிரச்சனைனு பயந்து ஓடுனோம். அப்பப்பா… அதெல்லாம் இப்ப எப்படி மாயமா மறைஞ்சதுனு தெரியாதளவுக்கு நம்ம நிலைமை சரியாகிருச்சி. ஒருவகையில பார்த்த, நம்ம நிலைமையை உங்க ஓனர்தான் சரிபடுத்தி கொடுத்தாரு. அந்த தம்பி குடும்பம் குட்டினு நல்லா சந்தோஷமா வாழணும்” என்று மனதார வாழ்த்தினாள்.
‘ஆம்… ராஜகுமாரன் நன்றாக வாழ வேண்டும்’ என்று தேவயானியும் மனதிற்குள் எண்ணி கொண்டாள்.
அச்சமயம் குமார் நினைவிற்கு வரவும், ‘ஆப்ரேஷன் முடிஞ்சதும் சொல்ல சொன்னாங்களே’ என எண்ணியவாறு, அவனுக்கு அழைத்து விஷயத்தை கூறினாள்.
“ரொம்ப சந்தோஷம்மா. இன்னும் ஒருநாள் கூட, உங்க அப்பாவோட இருந்து அவரை நல்லா கவனிச்சிட்டு வாம்மா. நான் அண்ணன்கிட்ட சொல்றேன்” என்று குமார் சொல்லவும்,
“சரிங்கண்ணா” என்றவள், சிறிது தயங்கியவாறு, “அண்ணா…ஒரு சின்ன உதவி வேணும்” எனக் கேட்டாள்.
“என்னம்மா என்னென்னு சொல்லு?” என்று அன்போடு கேட்கவும்,
“அம்மாவும் அப்பாவும் எங்க சொந்த ஊருக்கே போக போறாங்க. அதனால சென்னையில நாங்க பிடிச்ச வீட்டுல இருந்து, செங்கல்பட்டுல இருக்கிற, எங்க சொந்த வீட்டுக்கு, சாமானை ஏத்தி இறக்க ஆள் வேணும். உங்களுக்கு அப்படி யாராவது தெரியுமா?”
“எத்தனை ஆள் வேணும்னு சொல்லு. நூறு பேர்னாலும் கொண்டு வந்து நிறுத்துவேன். நமக்கு அவ்வளவு பசங்க தெரிஞ்சவங்க இருக்காங்கம்மா” என்று சற்று குரல் உயர்த்தி கூறினான்.
அவனின் பதிலில் நிம்மதி அடைந்தவள், “ஒரு நாலு பேரு போதும். பணம் எவ்வளவு கேட்பாங்கண்ணா?”
“உனக்கு நான் ப்ரீயாவே பண்ணித்தர சொல்றேன். வேறு எதுவும் உதவி வேணுமா?”
“இல்லைண்ணா”
“சரி என்னைக்கு வீட்டுக்கு போகணும்? என்ன… ஏது… விபரம்? எல்லாத்தையும் எனக்கு வாட்ச்ஆப் பண்ணிரு. நான் நீ சொல்ற அட்ரஸ்க்கு ஆளை அனுப்பிடுறேன். அவன் வண்டியோட நேரா அங்க வந்திருவான்”
“சரிங்கண்ணா… நான் உங்களுக்கு வாட்ச்ஆப் பண்றேன். ரொம்ப தேங்க்ஸ்ண்ணா. போனை வைக்கிறேன்” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவள், கற்பகத்திடம் விபரத்தை தெரிவித்தாள்.
விபரத்தை கேட்டு மகிழ்ந்தவள், “நாம இந்த ஊருக்கு வந்த புதுசுல… கெட்டவங்க கையில மாட்டிக்கிட்டோம். இப்ப… கடவுள் நல்லவங்க கையில நம்மளை ஒப்படைச்சிருக்காரு. அவங்க மூலமா… நமக்கு நல்லது நடக்குது” என்றவள் நினைவு வந்தவளாக, “ஆண்டாள் மேடத்துக்கிட்ட அப்பாவுக்கு ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சது, நாங்க எங்க சொந்த ஊருக்கே போக போறோம்னு ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லிரும்மா” என்றாள் கற்பகம்.
ஆசிரமம் வைத்து நடத்தும் ஆண்டாளுக்கு அழைத்து, தந்தையின் உடல்நிலை சீராகி வருவதை பற்றி கூறிவிட்டு, ‘நாங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம்’ என்றாள்.
“சரிங்கம்மா… இப்போ ப்ராப்ளம் எதுவும் இல்லேல. இனி நிம்மதியா சந்தோஷமா இருங்க. எப்போதாவது சென்னை வந்திங்கன்னா… மறக்காம நம்ம ஆசிரமத்துக்கு வந்துட்டு போங்க” என்று அன்போடு அழைத்தாள்.
“கண்டிப்பா மேடம்…” என்றவள் ஒரு நொடி தாமதித்து,“நீங்க எங்களுக்கு செஞ்ச உதவியை நாங்க எப்பவும் மறக்க மாட்டோம். ரொம்ப தேங்க்ஸ் மேடம். போனை வச்சிடுறேன்” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
இப்போது வாழ்க்கை மிக அழகாகவும், அமைதியாகவும் நகர்வது போல அவளுக்கு தோன்றியது. கடந்த ஒரு வருடமாக ஸ்வேதாவால் ஏற்பட்ட கொடுமையான பிரச்சினைகளால், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாது செத்துவிடலாமா? என்று நினைத்த அந்த இருண்ட நாட்களை, தற்போது நினைத்து பார்த்தவள், அன்று பட்ட வேதனைகளுக்கெல்லாம் சேர்த்து வைத்து, இன்று இறைவன் நல்லதொரு வாழ்க்கையை கொடுத்திருப்பதாக எண்ணியவள், இனிமேல் தன் குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மனதிற்குள் ஆசை கொண்டாள்.
சென்னையிலிருந்து மீண்டும் தன் சொந்த ஊரில் இருக்கும் தங்களது சொந்த வீட்டிற்கு சாமான்களை மாற்றினாள்.
மறுபுறம், ராஜகுமாரனின் பங்களாவில் சூழல் சற்று மாறியிருந்தது. அண்ணனின் இழப்பையும், பெருமாள் செய்த துரோகத்தின் சுமையையும் எண்ணி சோர்வடைந்துவிடாமல், அதில் இருந்து முழுமையாக வெளிவர, தன் தொழிலில் முழு மூச்சுடன் இறங்கினான் ராஜகுமாரன்.
அண்ணன் ஆசையாக கட்டியெழுப்பிய அந்த சாம்ராஜ்யத்தை மேலும் பலமடங்கு வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று தனது உலகத்தை சுருக்கி கொண்டு ஓடி கொண்டிருந்தான்.
ஸ்வேதாவிற்கும், அவளது தாய்க்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று மறந்தே போனான்.
“அண்ணா ஸ்வேதாவும் அவங்க அம்மாவும் சாப்பாடு கேட்டு கத்துதுங்க” என்று குமார் வந்து கேட்கவும்,
“ஒருவேளை மட்டும் சாப்பாடு கொடு அதுவும் பழைய சோறு கொடு” என்று கோபமாக கூறிவிட்டு சென்றான்.
மாடியில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வேதாவும், அவளது தாயும் அவர்களை எதிர்க்காது கொடுத்த பழைய சாப்பாட்டை சத்தம் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு அமைதியை கடைபிடித்தனர். ஆனால், தங்களை என்ன செய்ய போகிறார்களோ என்ற பயம் அவர்களை மெல்ல மெல்ல மனதிற்குள் வாட்டி கொண்டிருந்தது.
அன்று… மருத்துவமனையில் தந்தையை தாயின் அரவணைப்பில் விட்டுவிட்டு, ராஜகுமாரனின் பங்களாவிற்கு வேலைக்கு திரும்பினாள் தேவயானி.
பங்களாவின் வாசலில் அவளை கண்டுவிட்டு, முகமலர்ச்சியுடன் வரவேற்றான் குமார். “வாம்மா… அப்பா நல்லாயிருக்காரா?” என்று அக்கறையோடு விசாரித்தான். அதே போல சங்கரும் விசாரித்தான். மற்ற வேலையாட்களும் அவளிடம் வந்து பாஸ்கரனின் நிலைமையை பற்றி விசாரித்தார்கள்.
அனைவரும் தன் குடும்பத்தின் மேல் காட்டிய அந்த உண்மையான அக்கறையிலும் அன்பிலும் நெகிழ்ந்து போனவள், அவர்களுக்கு பதிலளித்துவிட்டு புன்னகையுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.
‘இன்று அனைவருக்கும் ஒரு விருந்து சாப்பாடு மாதிரி சமைச்சு கொடுக்கணும்’ என முடிவெடுத்தவளாக தன் வேலையில் மூழ்கினாள்.
சிறிது நேரத்தில், அலுவலக வேலை அலுப்புடனும் கடுமையான சோர்வுடனும் பங்களாவிற்குத் திரும்பி வந்தான் ராஜகுமாரன். வரவேற்பறையில் இருந்த பெரிய சோபாவில் சோர்வாக அமர்ந்தவன், பின்னோக்கி தலையை சாய்த்து கண்களை மூடி கொண்டான்.
அச்சமயம் சமையலறையிலிருந்து வெளியில் வந்த தேவயானி, சோபாவில் சோர்வாக அமர்ந்திருந்த ராஜகுமாரனை பார்த்தாள். அவனது முகத்தில் வழிந்த, அந்த களைப்பை கண்டதும் அவளுக்குள் ஒரு சின்ன கரிசனம், அவன்மீது எழ, தயங்கியபடியே அவனருகே சென்று, “சார்…” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
அவளின் அழைப்பில் கண் திறந்தவன் அவளை பார்த்ததும், அவளுடைய தந்தையை பற்றி நலம் விசாரித்தான்.
அவனது அந்த அக்கறையான உபசரிப்பில் மற்றவர்கள் போல அவனுடன் இயல்பாக பேசுவதற்கு தைரியத்தை வரவழைத்து கொண்டவள், “உங்களுக்கு… தலை எதுவும் வலிக்குதா சார்? உங்களை பார்த்தா ரொம்ப டயர்ட்டா தெரியுறீங்க. சாப்பாடு ரெடியா இருக்கு, சாப்பிடுறிங்களா? இல்லைன்னா… டீ ஆர் காஃபியோ போட்டு எடுத்துட்டு வரவா?” எனக் கேட்டாள்.
“லைட்டா தலைவலிக்கிற மாதிரிதான் இருக்கு… டீயே போட்டு கொண்டு வாம்மா” என்று உத்தரவிட்டான்.
“சரிங்க சார்” என்று தலையசைத்துவிட்டு மின்னல் வேகத்தில் சமையலறைக்கு சென்றவள், பத்தே நிமிடங்களில் ஏலக்காய் மணம் கமழ, சூடான சுவையான தேநீரை தயாரித்து, ஒரு அழகான பீங்கான் கப்பில் ஊற்றி அவன் முன்பு வந்து நீட்டினாள்.
“தேங்க்ஸ்ம்மா” என்று கூறியவாறே அந்த சூடான கோப்பையை வாங்கி பருகினான்.
அந்த தேநீரின் சுவை தொண்டையில் இறங்கிய அடுத்த நொடியே, அவனது பாரமான தலைவலி சற்று பறந்துபோனது போன்ற ஒரு நிம்மதியான உணர்வை அடைந்தான்.
தேநீரை பருகிவிட்டு கோப்பையை மேஜைமீது வைக்கும்போது, சமையலறையிலிருந்து பாத்திரங்களை டைனிங்டேபிள் மீது கொண்டு வந்து வைக்கும் தேவயானியை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கினான்.
தன்னிடம் தேநீரை நீட்டும்போது, அவள் முகத்தில் இருந்த, அந்த உண்மையான அக்கறையையும், பரிவையும் எண்ணி பார்த்து, ‘இவளை போய்… ஆரம்பத்தில் என்னவெல்லாமோ நினைத்தோம். எப்படியெல்லாம் துன்புறுத்தினோம்’ என்று குற்றவுணர்வு மேலோங்க மனதிற்குள் தவித்தான்.
‘எந்த சூழலிலும் தன் நற்பண்பை விட்டு கொடுக்காத, ஒரு தூய்மையான பெண் இவள்… இவளையா… நாம் தவறா எடை போட்டோம்?’ என்று தன்னை தானே நொந்து கொண்டான்.
கடந்த சில நாட்களாக அவளது ஒவ்வொரு செயலிலும், அவன் கவனித்த அந்த பணிவும், நேர்மையும், புத்திசாலித்தனமும், அவனுக்குள், அவள்மீது ஒரு பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
‘இத்தனை சிரமங்களையும் தாண்டி வாழும் இந்த பெண்ணின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும். இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டியது என் பொறுப்பு’ என்று, மனதிற்குள் உறுதி கொண்டான்.
‘நிச்சயமாக… தேவயானியின் வாழ்க்கையில் இனி எந்த துயரமும் வராதபடி, ஒரு நல்ல குடும்பத்தில், தகுதியான ஒருவருக்கு கைப்பிடித்து கொடுக்கக்கூடிய, அனைத்து ஏற்பாடுகளையும் நான் முன்னின்று செய்ய வேண்டும்’ என்று தனக்குள்ளேயே ஒரு ரகசிய முடிவை எடுத்தான்.
அவளை வெறும் ஒரு சமையற்காரியாகவோ, அல்லது வேலைக்கார பெண்ணாகவோ இனி அவன் பார்க்க போவதில்லை. தன்குடும்பத்தில் ஒரு பெண்ணாகவே பார்க்க தொடங்கியிருந்தான்.
இனி அவளது எதிர்காலம் அவனால் பிரகாசிக்க காத்திருப்பதை அறியாமல், தன் வேலைகளில் மூழ்கியிருந்தாள் தேவயானி. ராஜகுமாரனோ, எழுந்து தன் அறைக்குள் மறைந்தான்.
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.