அத்தியாயம் : 3
குமாரின் அழுகுரல் ராஜகுமாரனின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், உடனே அண்ணனை பார்க்க செல்ல வேண்டும் என்ற பெரும் வெறி அவனுள் தோன்ற, மேற்கொண்டு பேச வார்த்தையின்றி, சட்டென்று அழைப்பைத் துண்டித்தான். பட்டென்று தனது நாற்காலியிலிருந்து எழுந்தான்.
உடல் முழுவதும் ஒருவித பதட்டமான உணர்வு. கைகள் நடுங்கின, கால்கள் தள்ளாடின. இத்தனை காலம் அவனுள் குடி கொண்டிருந்த அவனது மன உறுதி சரிந்தன. கண்களில் லேசாக நீர் அரும்பியது. பார்க்கும் எல்லாமே ஒருவித மங்களாக தெரிந்தது.
தன் தலையை பலமாக உலுக்கிக் கொண்டவன், கண்களைத் துடைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே ஓடினான்.
கடையினுள் மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கி கொண்டிருந்த அந்தக் கூட்டத்தை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
அந்த சந்தோஷ குரல்களுக்கு நடுவே, ஓட்டப்பந்தய வீரன் போல சலனமற்று ஓடித் தன் வாகனத்தை அடைந்தான்.
ஏற்கனவே கடைக்கும் வீட்டிற்கும் நீண்ட தூரம். சாதாரணமான நாளிலே இந்த பிரபலமான சாலையில் செல்வது இமயமலையில் ஏறுவது போலக் கடினமானது. இன்று வேறு மங்களகரமான நாள். தற்போது சாலையில் கூட்ட நெரிசலாக இருக்கிறது என்ற விரக்தியில், கூட்டத்தை சமாளித்து சிரமப்பட்டு வாகனத்தில் விரைந்தான்.
வாகன நெரிசலுக்கு நடுவே சிக்கித் தவித்த ராஜகுமாரனுக்கு, அண்ணனைக் காணத் துடித்த ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல நீண்டு அவனை வாட்டி வதைத்தது. உள்ளுக்குள் ஒருவித தவிப்பு தீயாய் எரியத் தொடங்கியது.
‘அண்ணனுக்கு ஒன்றுமாயிருக்காது’ என்று மீண்டும் மீண்டும் தனக்குள் எண்ணியும் கொண்டான்.
‘சீக்கிரம் அண்ணனை காண வேண்டும். அண்ணனுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பண்ணான்? ஒருவேளை சங்கர் கூறுவது பொய்யா? அண்ணனும் சங்கரும் சேர்ந்து நமக்கு எதுவும் விளையாட்டு காட்டுகிறார்களா?’ என்று ஆயிரம் கேள்விகள், அவன் மூளையை குடைந்தன. அது நிஜமாக இருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில், மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொள்ளும் நோக்கில் வீட்டு வேலையாட்களுக்குத் தனித்தனியாக அழைப்பு விடுத்தான்.
அவனது ஒவ்வொரு அழைப்பிற்கும், மறுமுனையிலிருந்து ஒரேவிதமான துயரமான பதில்கள்தான் அவனுக்கு பரிசாக கிடைத்தன.
“ஆமாம்ண்ணா… அண்ணன் நம்மளை விட்டு போயிட்டாரு…” என்று அவர்கள் கதறி அழுத ஒவ்வொரு வார்த்தையும் அவன் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்தன.
இறுதியாக மிஞ்சியிருந்த அந்தச் சிறு நம்பிக்கையும் சிதைந்துவிட, திடீரெனச் சுவாசிக்கக் காற்று கிடைக்காமல் திணறுவது போலவும், ஆர்ப்பரிக்கும் கடலில் அலைகள் எல்லாம் ஒரேயடியாக ஓய்ந்து மௌனமாகிவிட்டது போலவும் ஓர் உணர்வு. உச்சக்கட்டத் துயரம் மெல்ல மெல்ல அவனது ஆன்மாவைக் கவ்வ ஆரம்பிக்க, கம்பீரமாக இருந்த அவன் உடல் மெல்லத் தளர ஆரம்பித்தது.
குழந்தை பருவத்திலேயே பெற்றோரை இழந்த ராஜகுமாரனுக்கு, அவனை விட பத்து வயது மூத்தவனான ராஜவர்மன்தான் உலகமே. அவனுக்குத் தாய் போலப் பாசத்தை பொழிந்து, தந்தை போல விரல் பிடித்துப் பாதை காட்டி, ஒரு நண்பனை போல தோள் கொடுத்தவன் ராஜவர்மன்தான். கூலி வேலை செய்து, தன் பசியைப் பொறுத்துக்கொண்டு, தம்பி ராஜகுமாரனை ஒரு குறையுமின்றி வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கினான்.
ராஜகுமாரன் படித்து முடித்ததும், “எவ்வளவு நாள்தான் அடுத்தவரிடம் வேலை செய்வது? சொந்தமாக தொழில் தொடங்கினால் என்ன?” என்ற எண்ணம் ராஜவர்மனுக்குத் தோன்றியது. தங்களது பாரம்பரியக் குலத் தொழிலான பட்டுச்சேலை வியாபாரத்தையே கையில் எடுக்கத் தீர்மானித்தான். தனது பல ஆண்டுகாலச் சேமிப்புப் பணத்தை முழுமையாக முதலீடு செய்து, ஒரு சிறிய பட்டுச்சேலைக் கடையை ஆரம்பித்தான் ராஜவர்மன்.
அண்ணனின் கனவுக்குத் தோள் கொடுக்க, ராஜகுமாரனும் வேறொரு வேலைக்குச் சென்றுகொண்டே, தனது ஓய்வு நேரங்கள் முழுவதையும் அண்ணனுக்கு உதவியாகச் செலவிட்டான்.
ராஜவர்மனின் இடைவிடாத கடின உழைப்பும், ராஜகுமாரனின் கூர்மையான புத்திசாலித்தனமும் கைகோர்த்தபோது, அந்தச் சிறிய கடை ஒரு ஆலமரம் போல வளரத் தொடங்கியது.
நகரின் பிரதான வீதியில் இருந்த இடத்தையே விலைக்கு வாங்கி, பிரம்மாண்டமான முறையில் கடையை உயர்த்தினார்கள். வெறும் துணிக்கடையோடு நின்றுவிடாமல், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் என மக்கள் தேவைப்படும் அனைத்தையும் ஒரே இடத்தில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள்.
நாளாக நாளாக, ஒவ்வொரு மாவட்டமாகத் தங்களது கிளைகளைப் பரப்பி, தமிழ்நாடு முழுவதும் ஒரு மாபெரும் வணிகச் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். ராஜவர்மன் உற்பத்தியிலும் நெசவு நுணுக்கங்களிலும் கவனம் செலுத்த, ராஜகுமாரன் நவீன வியாபாரத் தந்திரங்களையும் கடையை விரிவுப்படுத்தும் பணிகளையும் கவனித்துக்கொண்டான்.
கடந்த ஐந்து வருடங்களில், ராத்திரியும் பகலும் உழைத்து அசுர வளர்ச்சி அடைந்தார்கள். அந்த உழைப்பின் பலனாக, ஒரு பெரிய அரண்மனை போன்ற அழகான வீட்டைக் கட்டி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் பால் காய்ச்சிக் குடிபுகுந்திருந்தார்கள். “இனி அடுத்த சுபகாரியமாக, அண்ணன் திருமணம், நம் வீட்டில் மேளதாளத்தோடு நடைபெற வேண்டும்” என்று ராஜகுமாரன் எண்ணி கொண்டிருந்தான்.
இப்படி ஒரு மகத்தான வளர்ச்சியின் உச்சியிலும், மகிழ்ச்சியின் ஆரவாரத்திலும் இருந்த வேளையில், ராஜவர்மன் இப்படி ஒரு விபரீதத்தைச் செய்யலாமா? துக்கத்திற்கு நடுவே ராஜகுமாரனுக்கு இப்போது கோபம் கோபமாக வந்தது. ஆத்திரம் பொங்கியது. எப்படி அவனால் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்தது? இவ்வளவு பெரிய வியாபாரத்தையும், தான் ஆசை ஆசையாகக் கட்டிய அரண்மனை போன்ற வீட்டையும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தம்பியான தன்னையும் தனியே தவிக்கவிட்டுச் செல்ல அவனுக்கு எப்படி மனம் வந்தது?
ராஜவர்மனின் இந்தத் திடீர் மரணம் ராஜகுமாரனுக்கு மட்டுமில்லை; அவர்களின் கடை ஊழியர்கள், வியாபாரக் கூட்டாளிகள், குடும்ப நண்பர்கள் என அனைவருக்கும் ஒரு பேரிடி செய்தியாக இருந்தது.
அவன் வீட்டின் வாயிலை அடைந்த சமயம், அங்கே ஏற்கனவே ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. கடையின் உரிமையாளராக, கம்பீரமாகப் பார்த்த அதே ராஜகுமாரனை இப்போது ஒரு அனாதையாகப் பார்த்த மக்கள் பதறினர். அவனது வாகனத்தைக் கண்டதும், தெரிந்தவர்களில் சிலர் ஓடி வந்து அவனிடம் விக்கித்து நின்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே துயரத்தில் இருந்த ராஜகுமாரனின் இதயத்தை அவர்களது அழுக்குரல் ஏதோ கத்தியை கொண்டு குத்திக் கிழிப்பது போல வலியை கொடுக்க, இனி, ராஜவர்மன் இல்லை என்ற நிதர்சனம், அவனை முற்றிலுமாக நிலை குலைய வைத்தது.
வாகனத்தின் கதவை திறந்து இறங்கியவன், அவர்களின் பிரம்மாண்டமான வீட்டை வெறித்து நோக்கினான். கடந்த ‘ஆறு மாதங்களுக்கு முன்புதான், இதே வாசலில் அண்ணன் ராஜவர்மன் பூரண கும்ப மரியாதையோடு, என் கையை பிடித்து கொண்டு பெருமிதத்துடன் வீட்டிற்கு உள்ளே நுழைந்தான். இன்று, அதே வாசலில் அவன் மரணத்திற்காக, நிறைய பேர் கூடி நின்று கண்ணீரோடு என்னை வரவேற்கிறார்கள்’ என நினைத்தவாறு தள்ளாடிய கால்களுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
என்ன செய்து அண்ணனை திரும்ப உயிரோடு கொண்டு வருவது? இனி, அண்ணன் உயிரோடு தனக்கு கிடைக்க மாட்டானா என்ற ஏக்கமும், பெரும் ஆத்திரமும், அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பிக்க,
அவன் உள்ளே நுழையும்போது, வேலையாட்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். ஒவ்வொருவர் முகத்திலும் அதிர்ச்சியும், “இனி என்னவாக போகிறதோ?” என்ற அச்சமும் கலந்திருந்தது.
ராஜவர்மன் அறையை நோக்கி, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஏதோ சுமக்க முடியாத பெரும் பாரத்தை சுமப்பது போல மனமும், உடலும் துக்கத்தை தாங்கமுடியாமல் கணப்பதாக உணர்ந்தான். நேராக அண்ணனின் அறை இருக்கும் திசை நோக்கி நடந்தான். அவன் கால்கள் தள்ளாடினாலும், அண்ணனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற வேகம் அவனை உந்தித்தள்ளியது.
வீட்டின் நடுகூடத்தில் தினம் தினம் பார்க்கும் வேலையாட்கள், உறவினர்கள், நெருங்கியவர்கள் வருத்ததுடன் நிற்பதை பார்த்து, ‘அண்ணன் திருமணம்தான் தனது வீட்டில் அடுத்த சுபகாரியமாக இருக்க வேண்டும்’ என்று ஆசை கொண்டிருந்தவன், ‘அண்ணனின் மரணத்திற்காக அனைவரும் வரும்படியாகிவிட்டதே’ என்ற ஆதங்கத்தில் கண்கள் கலங்கினான்.
“வாண்ணா அண்ணாவை வந்து பாருண்ணா” என்ற புலம்பல்கள்,
அவனுள் இருந்த தவிப்பை அதிகப்படுத்த, ராஜகுமாரனின் கால்கள், தன்னியல்பாக ராஜவர்மன் அறைக்குள் நுழைந்தன.
அறையினுள் நிலவிய மயான அமைதி, அவனை மிரட்டியது. மேலும் சுவர் மற்றும் கண்ணாடியில் படிந்திருந்த இரத்த கறைகள், அவனை மரணபயத்திற்கு அழைத்து சென்றது.
அறையின் மையத்தில், ஒரு மெல்லிய வெண்ணிறத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு உடலை கண்டதும் மொத்தமாக உடைந்து போனான்.
ராஜவர்மனுக்கு அருகில் வாயை மூடி அழுது கொண்டிருந்த அவர்களது அத்தையான கமலா, ராஜகுமாரனை கண்டதும், “குமரா என்னடா ராஜா இப்படி பண்ணிட்டான்?” எனக் கேட்டவாறு அவனை எழுந்து வந்து கட்டி கொண்டாள்.
ஏற்கனவே துன்பத்தின் எல்லையில் தத்தளித்து கொண்டிருந்தவன், கமலாவின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது, அடுத்த நொடி தன்னை பிடித்திருந்த அத்தையை விலக்கி நிற்க வைத்துவிட்டு, வேகமாக சென்று போற்றியிருந்த துணியை பட்டென்று விலக்கி, மூச்சடைக்க ராஜவர்மனை வெறித்து பார்த்தான்.
எவ்வளவு பெரிய கஷ்டத்திலும், எந்தவொரு குழப்பமான சூழ்நிலையிலும், ராஜவர்மனின் முகம் சிறிது புன்னகையால் நிறைந்திருக்கும். அவன் சோர்ந்து போகிற ரகமே இல்லை. ஆனால், இப்போது ஒருவித சோகத்தில் பரிதாபமாக உறைந்திருந்தது. கண்களின் ஓரத்தில் காய்ந்த கண்ணீர் வரிகளும், நெற்றியில் இருந்து வழிந்த இரத்தக்கறையும், நடந்த பயங்கரத்தை உணர்த்த, ராஜகுமாரனால் தாங்க முடியவில்லை. அப்படியே ராஜவர்மன் உடலின் மீது சரிந்தான். நடந்த துயரத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. “இல்லை… இது உண்மை இல்லை.. அண்ணா எழுந்திரு” என்று கத்தி அழைத்தான்.
சுற்றியிருந்தவர்கள் வேகமாக அருகில் வந்து அவனை பிடித்து இழுத்தார்கள். “விடுங்க அவன்கிட்ட நான் பேசணும். ஏன் என்னை விட்டுட்டு போனானு நான் கேட்கணும். விடுங்க” என்று ஆர்பாட்டம் செய்தான். வெளியில் நின்றிருந்த அனைவரும் ராஜவர்மன் அறைக்குள் ஓடி வந்தார்கள்.
“கொஞ்சம் மனசை தேத்திக்கப்பா” என்று கூட்டத்தில் ஒருவர் ஆறுதல் கூற,
அதெல்லாம் அவன் காதில் விழுகவில்லை. “விடுங்க என் அண்ணன்கிட்ட நான் பேசணும். அவன் என்கிட்ட சொல்லாமல் போய்ட்டானே. எதுவுமே சொல்லலையே” என்று நெஞ்சில் அடித்து கொண்டு அழுதவன், அடுத்த கணம், “உனக்கு என்னாச்சு? ஏன் என்னை தனியா விட்டுட்டு போன? நான் உன்கூடதான இருந்தேன். ஏன்டா இப்படி பண்ண?” அவனது குரல், அங்கிருந்த அனைவரது இதயத்தையும் நொறுக்கியது.
அந்த அறையில், ராஜகுமாரன் மனமுடைந்து அழும் அவனது அழுகுரல் மட்டுமே கேட்டது. அங்கிருந்த அத்தனை பேரும் ராஜகுமாரனின் நிலையை பார்த்து உள்ளம் உருகி போனார்கள்.
தாய், தந்தை இருவரையும் இழந்து, அண்ணனையே உலகமாக நம்பி வாழ்ந்தவன், இப்படி திடீரென அண்ணனையும் இழந்து நிர்க்கதியாக நிற்பது கண்டு அனைவரும் கண்கலங்கினார்கள்.
சில பெண்கள் தூக்கம் தாளாது தங்களது முந்தானையால் வாய் மூடி கொண்டு கண்ணீர் விட, ஆண்களில் சிலர் அவனை எப்படி தேற்றுவது என்று தங்களுக்குள், தனிந்த குரலில் பேசி கொண்டார்கள்.
“கொஞ்ச நேரம் விடுங்கப்பா அவன் துக்கம் போற வரை அழட்டும். பாவம் சின்ன வயசுல இருந்தே இரண்டு பேரும் ஒன்னுமன்னா இருந்தவங்க. இப்படி தீடீர்னு போயிட்டா எப்படிப்பா… அவனால தாங்கிக்க முடியும்?” என்று ஒருவர் கூற,
“இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி? நல்ல நேரம் பார்த்து நல்லபடியா அவனை அடக்கம் பண்ண வேண்டாமா? வாழ்ந்தாலும், இந்த கொஞ்சநாள்ல, அவன் பெயருக்கேத்தபடி ராஜா போல வாழ்ந்துட்டு போயிருக்கான். வெங்கடேசன் நீங்க இப்படி நின்னுட்டு இருந்தா எப்படி? ஆக வேண்டிய காரியத்தை பாருங்க. அவனுக்கு எல்லாம் சரியா பண்ணதான், அடுத்து இந்த குடும்பத்தை ராஜா செழித்து வாழ வைப்பான்” என்றார் பெரியவர் ஒருவர்.
அவர் கூறியதன் அர்த்தம் புரிந்து கொண்ட கமலாவின் கணவரான வெங்கடேசன், ராஜகுமாரனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்
கதை நகர்வு எப்படி இருக்கிறது. ராஜவர்மன் மரணம் நிச்சியம் உங்களை வருத்தமடைய செய்திருக்கும். ராஜகுமாரன் வருந்துவதை பார்த்து உங்களுக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்கும். கமெண்ட் பாக்ஸில் உங்களது கருத்துகளை கூறுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம். பை…
அன்புடன்
சாய்லஷ்மி.