யுகம்-5

குளியலறையில் வெம்மை தீர குளித்து விட்டு வெளியே  வந்தவள், கீர்த்தனா உறங்கி இருப்பதை பார்த்து நிம்மதியாக பெருமூச்சு ஒன்றை விட்டாள். கீர்த்தனாவும் தனது நண்பிக்கு தர்மசங்கடத்தை அளிக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் தூங்குவதற்குச் சென்றிருந்தாள்.

கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை. அவனின் முத்தம் அவள் சிறுக சிறுக உணர்ச்சிகளை அடக்கி கட்டிவைத்திருந்த அரணை ஒரு நொடியில் உடைத்தெறிந்தது.  விட்டத்தை பார்த்தது போல படுத்தவள் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மீட்ட தொடங்கினாள்.

 

**********************************************************************************************************************************************

 

அதிபரின் அறைக்குள் ஒரே களேபரமாக இருந்தது. வாயிலிருந்து ரத்தம் வடிந்தபடி அந்த 15 வயது சிறுவன் ஆத்ரேயன் கண் நிறைய கோபத்துடன் நின்றிருந்தான், பக்கத்தில் ஒரு கண் வீங்கிய நிலையில் பருத்த உடலுடன்  12 வயது சிறுமி வைஷ்ணவி  அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இருவரையும் கூர்மையான பார்வை பார்த்த அதிபர் அங்கு நின்ற காவலாளியிடம், “இவர்கள் இருவரினதும் சகோதரர்களை வர சொல்” என்று கூறினார். சிறிது நேரத்தில் அவ்விடத்தை அடைந்தனர் ஆத்ரேயனின் அண்ணா ஆதித்யனும் வைஷ்ணவியின் அக்கா வர்ஷினியும்.

ஆத்ரேயன் அருகில் வந்த ஆதி, “என்னடா பண்ணி வச்சு இருக்க?” என்று அடக்கிய கோபத்துடன் ரகசியமாக கேட்டான். அவனுக்கு பதிலளிக்காமல் அவன் அப்போதும் வைஷ்ணவியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

ஆனால் கண் வீங்கிய வைஷுவை கண்ட வர்ஷினியோ, “அம்மு என்னாச்சுடா? கண் இப்படி வீங்கி இருக்கு?” என்று உண்மையான பரிவுடன் அவள் கண்ணை ஆராய்ந்தாள். அவளுக்கு நன்கு தெரியும் எப்படியும் தன் தங்கை சண்டைக்கு போகமாட்டாள் வந்த சண்டையை விடமாட்டாள் என்று. 

அதற்கு வைஷ்ணவியோ, “இவன் தான் அக்கா என்னை குண்டு குண்டு என்று கூப்பிட்டவன். அப்படி கூப்பிடாதடா… என்று சொல்லியும் கூப்பிட்டான். எனக்கு வந்த கோபத்துக்கு நான் அவன் வாயிலேயே குத்து விட்டேன், படுபாவிப்பய என் கண்ணில குத்தி விட்டான். கிண்டல் பண்ணினது அவன் தப்பு தானே அக்கா?” என்றவள் அவன் வாயில் குத்தியதிற்கான காரணம் அவன் கெட்ட வார்த்தையில் தன்னை அசிங்கமாக திட்டியது என்பதனை மறைத்துவிட்டாள். அதனை சொன்னால் அவன் பாடு திண்டாட்டம் என்று பாவப்பட்டு தான் அதனை மறைத்ததே. “ரொம்ப வலிக்குதாடா?” என்று பரிவுடன் அவளை தடவியவள் ஆதித்யனை நோக்கி ஒரு சோகமான பார்வையை பார்த்தாள். ஆதித்யனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய்… நான் உன் தம்பி வாய் உடைஞ்சு போய் இருக்கிறேன்… உனக்கு ரொமான்ஸ் கேக்குதா?” என்று ரகசியமாக கர்ஜித்தவனை பார்த்து அடக்கி வாசித்தான்.

ஆதித்யனுக்கு ஆத்ரேயனை விட இரு வயதுகள் அதிகம்… ஆனால் மென்மையான சுபாவம் கொண்டவன். ஆத்ரேயனின் கோபம் என்றால் வீட்டில் 

எல்லாருக்கும் ஒரு வித பயமிருக்கும் ஆதியையும்  சேர்த்து.

அதிபர்,  வந்தவர்கள் இருவரையும் நோக்கி, “இவங்களை சிக் ரூம்க்கு கொண்டு போய் பிரஸ்ட் எய்ட் கொடுங்க… உங்கப்பா இருவரையும் வர சொல்லி இருக்கிறேன். அவங்களிடம் பேசிக் கொள்ளலாம்.” என்றார். அதற்கு அதிர்ந்தவர்கள் பெரியவர்கள் மட்டுமே. சின்னவர்கள் இருவரும் சாதாரணமாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து ஒரே காரில் வந்து இறங்கினர் மலர்வேந்தனும் கார்த்திகேயனும்.

அதிபர் இருவரையும் நோக்கி நடந்ததை விவரித்தார். “இது உங்க பசங்களுக்கு லாஸ்ட் வார்னிங் இனி இந்த பிரச்சனை வராமல் நீங்க தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றார். “ஓகே சார்” என்றவர்கள் பசங்களை பார்க்கச் சென்றனர்.

அங்கு நின்ற வர்ஷினியையும் ஆதியையும் பார்த்து, “உங்க ரெண்டு பேருக்கும் உங்க தம்பி தங்கச்சியை ஒழுங்கா பார்த்துக்க தெரியாதா?” என்று திட்டியபடி மலர்வேந்தன் ஆத்ரேயனிடமும் கார்த்திகேயன் வைஷ்ணவியிடமும் சென்றனர். இதை பார்த்த ஆதி, “ஆமா உங்க பசங்க குழந்தைங்க பாருங்க…” என்று வெளியில் திட்ட முடியாததை மனதுக்குள் திட்டி முடித்தான்.

ஆத்ரேயனின் தலையை வருடியவர், “வலிக்குதாப்பா?” என்று குரலில் அக்கறையுடன் வினவினார். ஆண் குழந்தை இல்லாத மலர்வேந்தனுக்கு ஆத்ரேயன் மேலே தனி பாசம். யார் சொன்னாலும் கேட்காத ஆத்ரேயன் அவர் அன்புக்கு மட்டும் அடிமை. தன் சின்ன மகள் மேல் கொள்ளை பிரியம் இருந்தாலும் ஆத்ரேயனை அவளுக்கு முன்னால் விட்டு கொடுக்க மலர்வேந்தனுக்கு விருப்பமில்லை. 

அவருக்கு எப்போதும் ஆத்ரேயனின் ஆளுமை மேல் ஒரு பிரம்மிப்பு இருக்கும். கார்த்திகேயனும் மலர்வேந்தனும் ஒரே கட்டுமான துறை கம்பெனியில் பார்ட்னர்ஸ் ஆக இருந்தனர். அவர்களின் கம்பெனி இந்தியா முழுதும் பரந்து கிடந்தது. சிங்கப்பூரிலும் ஆரம்பிக்க அடித்தளமிட்டனர். தன் சின்ன மகனை எப்போதும் கடிந்துக் கொண்டிருக்கும் கார்த்திகேயனிடம் மலர்வேந்தன் கூறுவார்.

 “அவன் நீ எதிர்பார்க்காத எட்டாத உயரத்துக்கு வருவான் பாரு” என்று… “உன் சின்ன மருமகனை நீ தான் புகழ வேண்டும்” என்று அவரும் பதிலுரைப்பார். 

அதே போல் துறு துறுவென பேசிக் கொண்டு சிரித்து விளையாடும் வைஷ்ணவி என்றால் கார்த்திகேயனுக்கு  உயிர்.

“அந்த ராஸ்கல் என்ன சொன்னாலும் காதில வாங்கிக்காதம்மா. குண்டா இருந்தா தான் அழகே… அந்த மடையனுக்கு அதெல்லாம் விளங்காது.” என்று மகனை திட்டியபடி வைஷ்ணவியை வருடிக் கொடுத்தார். ஏற்கனவே கோபத்திலிருந்த ஆத்ரேயனின் முகம் கோரமாகி இருந்தது. இதனை கவனித்த ஆதி, ‘ஆஹா…அப்பா…சனியனுக்கு தந்தி அடிச்சுட்டாரே… இன்னைக்கு யார் யார் தலை உருளப்போகுதோ?’ என்று மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

மலர்வேந்தனும் கார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல தூரத்து உறவினர்களும் கூட.  மாலதியின் ஒன்று விட்ட அண்ணன் தான் மலர்வேந்தன்.  மலர்வேந்தன் கோகிலா தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் வர்ஷினி மற்றும் வைஷ்ணவி. வர்ஷினி அவள் தாயின் ஜாடை, சிவந்த நிறமும் கூரான நாசியும் மெல்லிய உடல்வாகு உடைய அழகியவள். வைஷ்ணவி தந்தையை போல மங்கிய நிறமும் குண்டான உடல் வாகு என இருப்பாள்… இருவரையும் சகோதரிகள் என்று நம்புவது கடினம்.

ஆனால் கார்த்திகேயனின் இரு புதல்வர்களான ஆதித்யன், ஆத்ரேயன் இருவரும் நல்ல  உயரமும் சிவந்த நிறமும் என கட்டுமஸ்தான ஆண்கள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக விளையாடிய நான்கு பேருக்குள்ளும் வைஷ்ணவி வித்தியாசமாக தெரிவாள். சாப்பாடும் தூக்கமும் தான்  அவள் அன்றாட கடமைகள்.  ஒன்றாக வளர்ந்த ஆதியும் வர்ஷியும் கண்களால் காதலிக்க தொடங்கி விட்டனர்.

ஆத்ரேயனுக்கு வைஷ்ணவி எப்போதும் எதிரி தான். சின்னவர்களான வைஷ்ணவியும் ஆத்ரேயனும் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பார்கள். வைஷ்ணவியை  அவள் தோற்றத்தை வைத்து எப்போதும் கிண்டல் செய்வது ஆத்ரேயனின் வழக்கம். வைஷ்ணவியும் அதனை சட்டை செய்ய மாட்டாள்.

ஆனால் இன்று அவன் தன்னை பார்த்து சொன்ன கெட்ட வார்த்தையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆத்ரேயன் எப்போதும் தன் பிழையை உணராதவன். ஈகோ அதிகம் உள்ளவன். தன் அழகில் கர்வம் உள்ளவன். பதின் வயதிலேயே உடம்பை முறுக்கேற்றுவதற்கு ஜிம் செல்ல தொடங்கி இருந்தான். தனக்கு பிடித்தவர்களுக்கு உயிரை கொடுப்பதிலும் பிடிக்காதவர்களின் உயிரை எடுப்பதிலும் வல்லவன்.

வைஷ்ணவி குறும்பு காரி… எதையுமே அவ்விடத்தில் மறந்து விட்டு வாழ்க்கையை அனுபவிக்கும் சுதந்திர பறவை.  மனசுக்குள் எதையும் போட்டு குழப்ப மாட்டாள்.  திட்டினால் கூட அடுத்த கணம் அணைத்துக் கொள்ளும் பாசக்காரி. அதனால் வைஷ்ணவி எல்லாருக்கும் செல்லம் அதனாலேயே ஆத்ரேயனுக்கு அவள் மேல் வெறுப்புண்டானது.

அவள் தோற்றமும் அவனுக்கு வெறுப்பை உண்டாக்கியது. அந்த வெறுப்பை தணிப்பதற்காகவே ஆத்ரேயன் மேல் அளவு கடந்த பாசத்தை காட்டினார் மலர்வேந்தன். அவ்வெறுப்பு நிரந்தர பகையாக மாறியது மூன்று மாதங்கள்  முன் நடந்த சம்பவத்தால்.

இப்படி தான் மூன்று மாதங்கள் முன்பு, தனக்கு தேவையான புத்தகத்தை கேட்டு கார்த்திகேயனின் வீட்டுக்கு வைஷ்ணவி வந்திருந்தாள்.

“ஆதி அத்தான் எனக்கு உங்க வரலாறு புத்தகத்தை தர முடியுமா?” என்றபடி வந்தவள், “ஐ!! குலாப்ஜாமுன்”  என்றபடி   ஆத்ரேயனின் தட்டிலிருந்த குலாப்ஜாமூனை எடுத்து வாய்க்குள் போட்டாள். அதிலேயே சினம் கொண்ட சிங்கமாக சிலிர்த்து நின்றவனை சட்டை செய்யாது மாலதியை நோக்கி, “ரொம்ப நல்லா இருக்கு அத்தை…. புத்தகம் எங்கே இருக்கு என்று சொல்லுங்க அத்தான் நான் போய் எடுத்துக்கிறேன். நீங்க சாப்பிடுங்க” என்று பரிவாக கூறியவளை நோக்கி,

“நேற்று ஆத்ரியின் ரூமில் வச்சுதான் படிச்சேன்.அவன் மேசையில் இருக்கும் எடுத்துக்கோம்மா” என்றான். சிரித்து விட்டு சிட்டாய் மாடிக்கு பறந்து போனாள் வைஷ்ணவி.

தன் அனுமதி இல்லாமல் தன் அறைக்குச் செல்ல அனுமதி அளித்த ஆதியை முறைக்க ஆத்ரேயன் தவறவில்லை. அவனுக்கு தந்தை என்றால் மட்டும் கொஞ்சம் பயம். அதனாலேயே அமைதி காத்தான்.

தமையனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவன் தலையை குனிந்தபடி சாப்பிட தொடங்கினான்.

அறைக்கு வந்த சுட்டிப்பொண்ணு வைஷ்ணவி அழகாகவும் சுத்தமாகவும்  அலங்காரப்படுத்தப்பட்ட அறையை பார்த்து வியந்தாள். இன்று தான் முதல் முறை உள்ளுக்குள் வந்திருக்கிறாள். ஆத்ரேயனுக்கு எதிலும் நேர்த்தி சுத்தம் வேண்டும். ஷர்ட் இல்  ஒரு சின்ன கசங்கல் இருந்தால் கூட அதனை அணியமாட்டான். ரூம் துப்புரவாக இல்லாவிட்டால் அவன் அம்மாவின் பாடு திண்டாட்டம் தான்.

தன் தாய்க்கும் தமையனுக்கும் மட்டுமே அங்கு அனுமதி. வேலைக்காரர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. தன் தாய் தான் சுத்தப்படுத்த  வேண்டும் என்று எதிர்பார்ப்பான். அவரும் மகனுக்காக அதை செய்ய தவறுவதில்லை. “சின்னத்தான் இந்த ரூமுக்குள் அப்படி என்ன தான் பண்ணுவார்? எப்போ பார்த்தாலும் இங்கே பூட்டிட்டு இருப்பது தான் அவர் வேலை போல” என்று முணு முணுத்தபடி தனக்கு தேவையான பாட புத்தகத்தை தேட தொடங்கினாள். பாடபுத்தகங்களுக்கு நடுவில் அரை குறை ஆடை அணிந்த  பெண்களின் படங்கள் அடங்கிய ஒரு புத்தகம் அவள் கையில் வந்து சேர்ந்தது. 

அதை பார்த்தவள் முகத்தை சுளித்து, ‘ச்சே… என்ன கருமம்டா இது?’ என்று நினைத்தவாறே அதனை கார்த்திகேயனிடம் காட்ட விறு விறுவென்று கீழே ஓடி வந்தாள். துப்புரவு செய்யும் போது பல தடவை மாலதி கையிலும் அது சிக்கி இருக்கிறது. விடலை பையனிடம் கேட்க சங்கோஜப்பட்டுக்கொண்டு கணவனுக்கும் தெரியாமல் அதனை மறைத்துவிடுவார். ஆதிக்கு அது பெரிய  விஷயமில்லை, அதனை தன் தம்பிக்கு விநியோகிப்பதே அவன் தான்.

கீழே ஓடி வந்தவள், “மாமா இங்கே பாருங்க… அசிங்கமான புத்தகம் ஒன்று ஆத்ரி அத்தான் அறையில் இருந்திச்சு” என்றபடி அதனை அவரிடம் கொடுத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆத்ரேயனுக்கும் ஆதிக்கும் புரையேறியது என்றால் மாலதி மனதுக்குள், ‘ஐயோ…! வைஷ்ணவி ஏனம்மா இப்படி பண்ணின?’ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார். ஆதியின் கண்கள் பயத்தில் கலங்கிவிட்டது.

ஆத்ரேயனுக்கு தர்மசங்கடமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. ‘அடியேய் குள்ளச்சி… இப்படி என்னை மாட்டி விட்டதுக்கு உன்னை சும்மா விடமாட்டேன் டி’ என்று மனதுக்குள் அவளை அர்ச்சித்தபடி இருந்தான். புத்தகத்தை பார்த்து கண் சிவக்க கோபம் கொப்பளிக்க நின்ற கார்த்திகேயனின் கைகள் அவன் கன்னத்தை பதம் பார்த்தது.

இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை வைஷ்ணவி உட்பட. “யாரடா? இந்த புத்தகத்தை உனக்கு தந்தது?” என்று ருத்ரமூர்த்தியாக மாறி இருந்தவரை பார்த்த ஆதியின் கண்களிலிருந்து பயத்தில் இரு சொட்டு கண்ணீர் கீழே சிந்தியது. ஆதி கண்களால் கெஞ்சியதை பார்த்து பழியை தான் ஏற்றுக்கொண்டான்.

“நான் தான் வாங்கினேன். இந்த வயதில் நீங்களும் இப்படி தானே இருந்திருப்பீர்கள்.இது பருவக்கோளாறு” என்றான் தோள்களை உலுக்கி. அவனுக்கு தவறை ஒத்துக் கொள்ளும் பழக்கம் எப்போதும் இல்லை. தவறை நியாயப்படுத்துவதே அவனின் சுபாவம்.

அதை கேட்டு அதிர்ந்த ஆதி மனதுக்குள், ‘பரதேசி வாய கொஞ்சம் மூடிட்டு இருக்க மாட்டியாடா? உனக்கு வாயில சனி’ என்று திட்டிக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவரை அவனின் பேச்சு ஆத்திரத்தை கிண்டிவிட இடுப்பில் இருந்த பெல்ட் ஐ கையில் எடுத்து எழுந்து நின்றவர் சாப்பிட்ட கையாலேயே கதிரையில் இருந்தவனுக்கு விட்டார் ஒரு அடி . இடுப்பில் பெல்ட் ஐ கழட்டும் போது கொஞ்சம் பயந்து நடுங்கியவன் அவர் அடியை தாங்கி நின்றான். சளைக்காமல் தனக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருந்தவனை பார்த்தவருக்கு கண நேரத்தில் அவனில் ஒரு பிரம்மிப்பு ஏற்பட்டது உண்மை.

அதனை மறைத்தவர் அடுத்தடுத்த அடிகளை அவனுக்கு கொடுத்தார். 

அவன் கெஞ்சி இருந்தால் கூட ஒரு அடியுடன் விட்டிருப்பார்… ஆனால் அவனின் அந்த திமிர் அவரின் கோபத்தை பன்மடங்கு ஆக்கியது.

அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவனின் பார்வை மட்டும் வைஷ்ணவியை விட்டு அகலவில்லை. அந்த பார்வையில் அவள் உறைந்து போனாள். கீழே விழுந்தவனையும் பொருட்படுத்தாமல் அவர் அவனுக்கு சரமாரியாக தாக்கினார். அவரை தடுக்க வந்த மாலதிக்கும் ஆதிக்கும் கூட அடி விழுந்தது.

தனது வேலையால் தான் ஆத்ரேயன் அடிவாங்குகிறான் என்று உணர்ந்த வைஷ்ணவி ஓடிச் சென்று அவருக்கும் அவனுக்கும்  இடையில் இரு கைகளையும் சமாந்தரமாக நீட்டியபடி அவனை காத்து நின்றிருந்தாள். ஓங்கிய அவர் கை அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.

“அத்தான் பாவம் மாமா அவருக்கு வலிக்கும்…  அடிக்கவேணாம் ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் கண்களில் இருந்து இரு கண்ணீர் துளிகள் உருண்டு விழுந்தது. இந்த சின்ன வயதில் அவள்  தன் மகன் மீது அவள் அன்பை பார்த்தவருக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது. “சரியம்மா…உனக்காக நான் அடிக்க மாட்டேன்” என்று அவளை அணைத்துக் கொண்டவர் ஆத்ரேயனை நோக்கி, “இவளால் நீ தப்பினாய்” என்று கூறி முறைத்தபடி கைகழுவச் சென்றார்.

அவள் தன்னை காத்தது அவனுக்கு அவமானமாக இருந்தது உடனே வாயை திறந்து, “அவளால் தானே அடிவாங்கினேன்..அவளுக்காக ஒன்றும் என்னை அடிக்காமல் இருக்க தேவையில்லை” என்று மேலும் ஏதோ கூற வந்தவனை நோக்கி வந்த ஆதி அவனின் வாயை பொத்தி இருந்தான்.  கைகழுவிவிட்டு வாசலுக்குச் சென்றவர் அவனை திரும்பி பார்த்து ஏதோ கூற வந்தவர் மனைவியின் கண்களிலும் பெரியவன் கண்களிலும் தெரிந்த கெஞ்சல்களை கண்டு பெரு மூச்சு விட்டுக் கொண்டு வெளியேறிவிட்டார்.

அவர் சென்றதும், “கண்ணா…” என்று மகன் அருகில் ஓடி வந்த மாலதியை கண்களால் எட்ட நிறுத்தியவன், தன்னை எழுப்பி விட்ட தமையனின் கைகளை உதறிவிட்டு கண்களில் கண்ணீருடன் நின்றிருந்த வைஷ்ணவிக்கு அருகில் வந்தான். 

அவர் அடித்ததுக்காக அவன் ஒரு சொட்டு கண்ணீர் விடாதது அவனின் மன உறுதியை காட்டியது.  உடல் முழுதும் கன்றி சிவந்த காயங்களுடன் அவளை நோக்கி கெந்தி கெந்தி நடந்து வந்தவன், அவளை வெறுப்புடன் நோக்கி, “நடிக்காதடி, இதற்கு  நீ  வாழ்க்கை முழுதும் அனுபவிப்பாய்… அனுபவிக்க வைப்பேன்” என்று சீற்றத்துடன் உரைத்துவிட்டு கஷ்டப்பட்டு மாடி ஏறினான்.

மாலதி மூலம் நடந்ததை கேள்விப்பட்ட மலர்வேந்தன் தான் மனமுடைந்து போனார். கார்த்திகேயனை நேரில் சென்று சந்தித்தவர், “தோளுக்கு மேல் வளர்ந்தவனை இப்படி தான் அடிப்பாயா?” என்று வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். அடித்து விட்டு அலுவலகத்துக்கு  வந்தவருக்கும் மகனின் நினைப்பாக இருந்தது. கலங்கிய கண்களுடன், “அவனை திருத்த வேற வழி தெரியலடா” என்றார்.

“அதெல்லாம் ஒரு குற்றமாடா? அது பருவக்கோளாறு… போக போக சரியாகி விடும் நீயும் 

அந்த வயசில் இப்படி தான் இருந்தாய் மறந்து விட்டாயா?” என்று தன் மகன் சொன்னதையே சொன்ன மலர்வேந்தனை பார்த்தவர், “அதுவும் சரிதான்” என்று  சொல்லியது மட்டுமல்லாமல் இனி மகனின் மேல் கை வைக்கமாட்டேன் என்று நண்பனிடம் சத்தியம் செய்து கொடுத்தார்.

மகனின் கோபம் தணியும் வரை பொறுத்திருந்து விட்டு கன்றியிருந்த காயங்களுக்கு மருந்து போட வந்த மாலதி கட்டிலில் வெற்று மார்புடன் படுத்திருந்தவனின் காயங்களை பார்த்து கண்ணீர் விட்டார். காயத்தை மெதுவாக வருடியவர் அதில் மருந்தை அழுதபடி தடவினார்.

“கண்ணா ஏன் டா இப்படி இருக்கிறாய்?” என்று விம்மினார்.

“நீங்க எதுக்கும்மா அழுகிறீங்க? செய்த தப்புக்கு தானே அப்பா அடித்தார்.பரவாயில்லை விடுங்க” என்று சொன்னவனால் வைஷ்ணவியை மட்டும் மன்னிக்க முடியவில்லை. மேலும் அவரிடம்,  “அந்த குள்ளச்சியை பழிவாங்காமல் விடமாட்டேன் அம்மா… அவ கண்டிப்பா அனுபவிப்பா…” என்றவனின் கண்களில் பழி வெறி தெரிந்ததை கண்ட மாலதி அதிர்ந்து நின்றார். இப்போது அவனிடம் பேசினால் பிரச்சனை பெரிதாகும் என்று நினைத்தவர் வாயை மூடிக் கொண்டார். ஆனால் மனதுக்குள், “அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்க டா…” என்று முணுமுணுத்தார்.

அந்த நேரம் அங்கு வந்த ஆதியை  பார்த்து, “இதெல்லாம் நீ வாங்க வேண்டிய அடிடா” என்று சிரித்தபடி கூறியவனை பாசத்தோடு அணைத்துக்கொண்டான். அண்ணனுக்காக அடி வாங்கிய மகனை பூரிப்புடன் பார்த்தவர் பெரியவனை பார்த்து முறைக்கவும் தவறவில்லை. தன் அன்னையின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்து நின்றான் பெரியவன்.

வீட்டுக்கு வந்த மலர்வேந்தன் மகளிடம், “ஆத்ரி அத்தான் பாவமம்மா உன்னால் தானே பாரு எவ்வளவு அடி … அவன் என்ன தப்பு செய்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு திருத்தப்பார். இப்படி எல்லாரிடமும் சொல்லி அவனை அவமானப்படுத்தாதேம்மா…” என்று அன்புடன் எடுத்துரைத்தார் அதனை கேட்ட வைஷ்ணவியும், “சரியப்பா” என்று தலையசைத்தவாறே சென்றுவிட்டாள்…

அதன் பிறகு ஆத்ரேயனுக்கு  வைஷ்ணவியிடம் எப்போதும் வம்பிழுப்பதும் அவளை வார்த்தைகளால் காயப்படுத்துவதும் தான் வேலை.  தந்தையின் சொல்லுக்காக பொறுமை காத்தவள், இன்று அவனின் வார்த்தைகளால் பொறுமை காற்றில் பறந்துவிட அவனின் வாயில் ஓங்கி ஒரு குத்து விட்டாள். வைஷ்ணவி தன் வாயில் குத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவளிடம் கை நீட்டினான்.

அவனின் பதில் தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை.

வீட்டுக்கு காயத்துடன் வந்த மக்களை பார்த்த மாலதிக்கும் கோகிலாவுக்கும் தெரிந்துவிட்டது இது ஆத்ரேயனினதும் வைஷ்ணவியினதும் கைவண்ணம் என்று.

வீட்டுக்கு வந்த ஆத்ரேயன் பெயருகேற்றபடி தனது வீட்டிலுள்ள தொலைக்காட்சி பெட்டியை போட்டுடைத்தான். “அம்மா அந்தாள் கிட்ட சொல்லி வைங்க என் பிரச்சனைல தலையிட வேணாம் என்று” என கர்ஜித்தவனின் கன்னத்தை மாலதியின் கைகள் பதம் பார்த்தது.

“என்னடா அப்பாவை மரியாதை இல்லாம பேசிக்கிட்டு… இன்னோரு தரம் வார்த்தையை விட்டால் அடுத்த கன்னமும் பழுக்கும்” என்றவரை முறைத்து  விட்டு விறு விறுவென மாடி ஏறினான். 

“எப்போதும் அடிக்காத அம்மா என்னை அடிச்சதுக்கு நீ தான் டி காரணம்… உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன்” என்று காரணமில்லாமல் வைஷ்ணவி மேல அவனே பகையை தானே வளர்த்துக்கொண்டான்.

ஆனால் வைஷ்ணவியோ, “அவசரப்பட்டு அத்தானுக்கு குத்தி விட்டேன் ம்மா” என்று கவலையுடன் கோகிலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளின் பாசத்தில் நெகிழ்ந்த கோகிலா அவளை அணைத்துக்கொண்டார்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top