வெளியில் வந்தவன் முதலில் சென்றது அனாமிகா வீட்டுக்கு தான்… வீட்டுக்கு வந்த அனாமிகா பதட்டத்துடன் வாசலில் நின்று தொலைபேசியில் அந்த தடியன்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே சீறிக் கொண்டு பாய்ந்து வந்த அவன் காரை அவளை மோதுவது போல் கொண்டு நிறுத்தியவன் பாய்ந்து இறங்கினான். அவனின் அதிரடியில் சற்று தடுமாறியவள் பயந்தபடி பின்னால் சென்றாள். காரை விட்டு இறங்கியவன் அவளை துளைத்தெடுக்கும் பார்வையுடன் நெருங்கி வந்தான்.
அவன் வருவதை பார்த்து பயந்து உள்ளே ஓடிச் சென்று, விடுமுறை தினமாதலால் ஹாலில் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் அருகில் போய் நின்றாள்.
அவன் தான் யாருக்கும் பயப்பட்டதாக சரித்திரம் கிடையாதே. “என்ன ஆத்ரேயா?” என்று கேட்டுக் கொண்டே எழும்பிய அர்ஜுனை பார்த்து முறைத்தவன் அவன் பின்னால் நின்ற அவள் கையை பிடித்து இழுத்து கீழே தள்ளினான்.
கண பொழுதில் அவனிடுப்பில் இருந்த பெல்ட்டை கழட்டியவன் அவள் முகம் தவிர்த்து உடலெங்கும் அடிக்க தொடங்கினான். அவனடியை தாங்க முடியாமல் அனாமிகா கதற உள்ளேயிருந்து ஓடி வந்த தர்மேந்திரனும் அவர் மனைவியும் திகைத்து நின்றனர். முகம் சிவந்து ஆக்ரோஷமாக நின்றவனின் பக்கத்தில் செல்ல கூட பயந்து போய் நின்றனர். அவனின் ஆள் பலம் பண பலம் தெரிந்தவர்கள். அதனால் கையாளாக தனத்துடன் நிற்க, முதலில் சுதாரித்தவன் அர்ஜுன் தான்.
தங்கை ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாள் என்று யூகித்தவன், தங்கை அழுவதை தாங்க முடியாமல் ஓடிச் சென்று “ஆத்ரேயன் ப்ளீஸ் ஸ்டோப் இட்” என்றபடி ஆத்ரேயனை பின்னால் இழுத்து பிடித்தான்.
தன்னை பிடித்த அர்ஜுனை உதறி தள்ளியவன் அவனை நேராக பார்த்து, “உன் தங்கை என்ன செய்திருக்கிறாள் தெரியுமா?” என்று கேட்டான். அர்ஜுனும் புருவம் சுருக்கி யோசிக்க, “என் மனைவியை ஆள் வைத்து ரேப் பண்ண பார்த்திருக்கிறாள். அத்துடன் அவள் மேலிருந்து கீழே விழுந்ததும் அவளை அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறாள். இப்போ அவ ஹாஸ்பிடலில் கையும் காலும் உடைந்து படுத்த படுக்கையில் இருக்கிறாள். இந்த ராட்சசிக்கு நீ சப்போர்ட் பண்றியா ??” என்று சினம் தெறிக்க கேட்டான்.
அவன் திருமணம் ஆனவன் என்பது அர்ஜுனுக்கு புதிய விஷயமாக இருந்தாலும் தங்கை செயலை நினைத்து ஆத்திரம் பொங்கி வந்தது. ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தி சாகடிக்கும் அளவுக்கு கொடூரமானவள் என்று அவனுக்கு அன்று தான் தெரியும். அவளை நினைத்து வெட்கம் கொண்டவன் அவனை விட்டு தள்ளி நின்று கை கட்டிக் கொண்டு அவளை அடிக்குபடி கையால் சைகை காட்டினான்.
அண்ணனின் நடவடிக்கையில் அதிர்ந்தவள் அனாமிகா மட்டுமில்ல அனாமிகாவின் தாயும் தர்மேந்திரனும் தான். போலீசுக்கு போனால் அனாமிகா தான் முதலில் ஜெயிலுக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்று நினைத்தவர்கள் அமைதியாக இருந்தனர். பெல்ட்டை எடுத்து கோபம் தீரும் வரை எல்லா இடமும் அடித்தவன் தந்தைக்கு தப்பாத மகன் என்று நிரூபித்தான். ஒரு கட்டத்தில் மகள் அடிவாங்குவதை பொறுக்க முடியாத அனாமிகாவின் தாய் தான் அவன் காலை பிடித்தவாறே விட்டு விடுமாறு கெஞ்சினார். அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடிப்பதை நிறுத்தியவன் வலியால் முனகியவளை பார்த்தவாறே கீழே மண்டியிட்டு அமர்ந்தவன், “உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன் என் மனைவி மேல கை வச்சா நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று… இப்போ கூட நீ செய்த வேலைக்கு உன்னை அரெஸ்ட் பண்ணி காலம் பூரா ஜெயிலுக்குள்ள போட்டிருப்பேன். ஆனா அவள் உயிரோட இருக்கிறதால இப்போ தப்பிச்சிட்ட…” என்று கோபம் கொண்டு உறுமியவன், தர்மேந்திரனை நோக்கி திரும்பி, “உங்களுக்காகவும் அர்ஜுனுக்காகவும் தான் நான் இவளை சும்மா விடுறேன். இனி இவ என் கண்ணில பட கூடாது” என்று சீறியபடி வெளியேறினான்.
தர்மேந்திரன் அனாமிகாவை நோக்கி வந்து அவளின் மேல் காறி துப்பியவர், “நீயெல்லாம் பொண்ணே இல்ல ராட்சசி” என்று திட்டினார். அர்ஜுனை கூப்பிட்டவர், “உன் அத்தைக்கு போன் போடு இவளை உன் அத்தை மகனுக்கு கல்யாணம் பண்ணி அமெரிக்காவுக்கு அனுப்பி விடுவோம்” என்றார்.
இது அனைவருக்கும் அதிர்ச்சி தான். அவன் அனாமிகாவை விட 16 வயது மூத்த தபுதாரன். அதிர்ச்சியடைந்தாலும் இனி அவளை இங்கு வைத்திருப்பது ஆத்ரேயனுக்கு கோபத்தை அதிகரிக்கும் என்று அறிந்த அர்ஜுன் தந்தையின் முடிவுக்கு சம்மதித்தான். அனாமிகாவின் தாய்க்கு விருப்பமில்லா விட்டாலும் ஒன்றும் பேச முடியாமல் அமைதி காத்தார்.
வலியுடன் எழும்பியவள், “எனக்கு அந்த கிழவன் வேணாம்” என்று சொல்ல திரும்பி பார்த்து முறைத்தவர், “நான் சொல்றத கேட்கா விட்டால் வெளிய போடி உனக்கு சொத்தில் பங்கில்லை.” என்று கூறி அவள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். வேற வழி இல்லாமல் பயந்தவள், “மன்னிச்சிருங்க அப்பா… நீங்க சொல்றத கேக்கிறேன்” என்று கண நேரத்தில் சொத்துக்காக மாறினாள்.
காரில் வரும் போது பிரேக்கிங் நியூஸ் இல் திடீரென கார் வெடித்து சிதறியதால் இருவர் பலி என்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. செய்தியை கேட்டு மனசு விட்டு திருப்தியாக சிரித்தவன், “தட்ஸ் மை பாய்” என்றபடி வண்டியை வைத்தியசாலைக்கு விட்டான்.
வைத்தியசாலையில் ஆத்ரேயன் வைஷ்ணவி மேல் காட்டிய அக்கறையில் திகைத்த கார்த்திக்,
“சார் ரொம்ப நல்லவர்… அவர் கீழ வேலை செய்ற நமக்கு ஏதும் என்றால் இப்படி துடிச்சு போறார். எனக்கு ஏதும் நடந்தா கூட இப்படி தான் அழுவாரோ ??” என்று கேட்டவனை முறைத்து பார்த்த கீர்த்தனா, “உன்னை எல்லாம் பெற்றாங்களா இல்ல செஞ்சாங்களா ???” என்று கேட்டாள்.
“ஏன் டி நான் ஏதும் தப்பா கேட்டு விட்டேனா?” என்று கேட்டவனிடம், “அட அரை லூசே வைஷ்ணவி தான் ஆத்ரேயன் சாரோட மனைவி” என்றாள்.
அவள் சொன்னதில் அதிர்ந்தவன், “என்னடி சொல்ற? உண்மையாவா? ஒரு வேளை நம்மள கண்காணிக்க வந்த ஸ்பையாக இருப்பாளோ??? நீ ஆத்ரேயன் சாரோட பேசுற கடுப்புல அவரை பற்றி வைஷ்ணவி கிட்ட சொல்லி திட்டி வேற இருக்கிறேன்” என்று படபட வென பேசினான்.
“ஆமா நீ பெரிய ப்ரெசிடெண்ட் பாரு உனக்கு ஸ்பை வைக்க. உன் மூளையில தீய வைக்க… ஸ்பையும் இல்ல ஒண்ணுமில்ல ரெண்டு பேருக்கும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் அதுவும் உன்னால தான்” என்றாள்.
“என்னாலயா ?? நான் என்ன பண்ணினேன் ??” என்று கேட்டவனிடம், “அவர் முன்னாடியே வைஷ்ணவியை கொஞ்சி குலாவலையா?” என்று பொறாமையுடன் கேட்க, “ஐயோ இப்போ தான் எனக்கு எல்லாம் நினைவு வருகிறது. ஆமா டி … அவர் முன்னாலேயே என்ன எல்லாம் பண்ணி இருக்கிறேன். ச்சீ… என்ன நினைத்தாரோ தெரியல” என்றவன் ஏதோ நினைவு வந்தவனாக, “ஆ அன்று அது தான் கேட்டாரா நான் காதலிக்கிற விஷயம் வைஷுவோட கணவனுக்கு தெரியுமானு? இப்போ நான் என்ன செய்வேன்..? எனக்கு ஒரே தர்ம சங்கடமா இருக்கு” என்று புலம்ப தொடங்கினான்.
“ஐயோ கொஞ்சம் நிறுத்துறியா ?? உன்ன கட்டிட்டு நான் என்ன பாடு படபோறனோ தெரியல” என்று தன்னிலை மறந்து சலித்துக் கொண்டாள்.
“நீ சலிச்சுக்கிற அளவுக்கு நான் மக்கு இல்ல. எனக்கும் எல்லாம் தெரியும்” என்று கண்ணடிக்க, அதன் பின்பு தான் அவளுக்கு கார்த்திக்குடன் அளவு தாண்டி பேசியது நினைவு வந்தது. அதுவும் அவனருகில் நெருக்கமாக இருந்து கொண்டு.
அப்படியே மெதுவாக எழும்பியவள் எதுவும் பேசாமல தள்ளி இருந்த கதிரையில் போய் இருந்தாள். ‘ரொம்ப ஓவரா தான் பண்ணுறா?’ என்று மனதுக்குள் சலித்தவன் தொலைபேசியை நோண்ட தொடங்கினான்.
வைத்தியசாலையை அடைந்த ஆத்ரேயன்… கீர்த்தனா மற்றும் கார்த்திக் இருக்குமிடத்துக்கு விரைந்தான். அவன் வருகையை அறிந்து எழும்பி நின்ற கார்த்திக்குக்கு அருகில் வந்தவன் அவன் தோளில் கை போட்டபடி அவனருகில் தொய்ந்து அமர்ந்தான்.
பேச தொடங்கியவர்கள் சற்று நேரத்தில் நண்பர்களாகி போனார்கள். ஆத்ரேயன் முதன் முறை வாயை திறந்து தன் வாழ்க்கையை பற்றி கார்த்திக்குக்கு கூறினான்.
சிறிது நேரம் கழித்து வைஷ்ணவியை போய்
பார்க்கும் படி டாக்டர் கூற உள்ளேச் சென்ற ஆத்ரேயன் கட்டிலில் மயக்கத்திலிருந்த வைஷ்ணவியை பார்த்த மனவருத்தத்தில், “என்னை நம்பமாட்டியாடி ?” என்று முணுமுணுத்தவன் கண்களில் இருந்து கண்ணீர் துளி உருண்டோடியது.
அதை கையால் துடைத்தவன் அவளருகில் வந்தான். கைகளில் காலில் கட்டுகளுடனும் உடலில் காயங்களுடனும் படுத்து இருந்தவளை பார்க்க அவன் நெஞ்சம் பதறியது.
அவளருகில் குனிந்தவன் அவளுக்கு வலிக்குமோ என்று பயந்து அவளிதழ்களில் மென்மையாக முத்தமிட்டு விட்டு வெளியேறினான். அவளை தனியறைக்கு மாற்ற ஒரு கிழமையானது. கண் விழித்தவளுக்கு ஆத்ரேயன் கண்ணில் படவே இல்லை. பொறுமையிழந்து
கீர்த்தனாவிடம்,
“எனக்கு அடிபட்டது அவருக்கு தெரியுமா???” என்று கேட்டாள்… அவளருகில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள், “எவருக்கு ?” என்று கேட்க… அவளை பார்த்தவள் தர்மசங்கடமாக, “ஆத்ரேயன்க்கு” என்றாள்.
“தெரியாது” என்றவளிடம், “ஏன் சொல்லவில்லை ??” என்று கேட்க,
“பொம்பள பொறுக்கிக்கு நான் எதுக்கு சொல்லணும்??” என்று பதிலளித்தவளுக்கு வைஷ்ணவியின் வாழ்க்கையை பற்றி கார்த்திக் மூலம் தெரிந்திருந்தது.
கலங்கிய கண்களுடன் இருந்த வைஷ்ணவியை பார்த்து கார்த்திக் தான் பரிதாபப்பட்டு, “கொஞ்சம் சும்மா இரு கீர்த்தனா” என்றவன் முதல் நாள் வந்து பார்த்து விட்டு போனதையும் அனாமிகாவுக்கு என்ன ஆனது என்றும் கூறினான்.
வைஷ்ணவியை பார்த்து விட்டு வந்த ஆத்ரேயனுக்கு அவள் மேல் கோபம் குறையவில்லை. “சந்தேக பிசாசு.” என்று திட்டியவன், மனதுக்குள், ‘உனக்கு பிடிக்காம நீ என்னோட வாழ தேவையில்லை வைஷ்ணவி… நீ ஆசைப்பட்ட டிவோர்ஸ் கண்டிப்பா கிடைக்கும்’ என்று சொல்லிக் கொண்டான். அவளை பார்க்க உந்துதல் எழுந்தாலும் கீர்த்தனாவும் கார்த்திக்கும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவன் வைத்தியாசாலை பக்கமே தலை வைத்து படுக்கவில்லை… அடிக்கடி கார்த்திக்குக்கு போன் செய்து நிலவரத்தை கேட்பான். ஒரு கிழமையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகு வீட்டில் வைத்து பார்க்க சொல்லி இருந்தார்கள் வைத்தியர்கள்…
டிஸ்சார்ஜ் ஆகும் நாளில் எல்லா பணமும் கட்டப்பட்டிருந்தது. “யார் கட்டினார்கள் ??” என்று கேட்க, கீர்த்தனா, “உன் புருஷன் தான்” என்றாள் அலட்சியமாக.
அவன் தன்னை பார்க்க வரவில்லை என்ற ஆதங்கத்தில்,
“மற்றையவர்களின் பணத்தில் நான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை… எல்லாத்தையும் செட்டில் பண்ணனும்” என்றதும் அவளை புருவம் சுருக்கி பார்த்தவள் இளக்காரமாக சிரித்தாள். “இப்போ எதுக்குடி சிரிக்கிற ???” என்று கேட்க… ஆத்ரேயன் சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் பொறுமை இழந்த கீர்த்தனாவோ, “அப்போ நீ உன் பிரஸ்ட் இயர் இல் இருந்து செட்டில் பண்ணனும்” என்றாள். “வாட் ???” என்று அதிர்ச்சியடைந்தவளிடம்.
“உன்னோட 2nd இயர் இலிருந்து உன் படிப்பு செலவு, நீ தனியா தங்கி இருந்த போது உன் செலவு, ஏன் நீ பார்க்கும் வேலை கூட அவர் தயவால் தான்…” என்று சினம் பொங்க கூறியவள், “நீ இப்படி சந்தேகப்பட்டே அந்த மனுஷனுடைய மனசை உடைச்சிட்ட… இனி அதை ஒட்ட வைக்க முடியும்னு எனக்கு தோணல…” என்றவள் மேலும் நின்றால் அவளை காயப்படுத்தி விடுவோமோ என்ற பயத்தில் வெளியேறினாள்.
அவள் சொன்னதை கேட்டு கண்ணீர் விட்டவள் கார்த்திக்கை பரிதாபமாக பார்த்தாள். ‘அப்போ என் அப்பாவின் பணமில்லையா அது??’ என்று நினைத்தவளுக்கு எங்கயாவாது சென்று இடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“கார்த்திக் நான் அவரை பார்க்கணும்” என்றாள். தலையை ஆட்டியவன் ஆத்ரேயனுக்கு எடுத்து விபரத்தை சொல்ல அவளிடம் கொடுக்க சொன்னவன், “என்ன??” என்று ஒற்றை வரியில் கேட்டான்.
“என்ன மன்னிச்சிருங்க” என்றவளிடம், “வேற ஏதும் இருக்கா?” என்று கேட்க… அவன் உதாசீனத்தில் மனமுடைந்தவள், “இல்லை” என்றபடி தொலைபேசியை கார்த்திக்கிடம் கொடுத்தாள்.
கார்த்திக்கிடம் பேசியவன் தொலைபேசியை வைத்து விட்டான். வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டவளுக்கு எந்த வேலையும் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டவாறே கையிலும் காலிலும் தலையிலும் கட்டுகளுடன் படுத்த படுக்கையாக இருந்தவளுக்கு அவசர வேலைக்கு கூட குளியலறை வரை செல்ல உதவி தேவைப்பட்டது.
கீர்த்தனாவும் வைஷ்ணவிக்காக அலுவலகத்துக்கு செல்லாமலிருக்க கார்த்திக்கை கூப்பிட்டு விசாரித்தவன் யோசனையில் ஆழ்ந்தான். வேலையிலிருந்து இடையில் தனது வீட்டுக்குச் சென்றவன் கோட்டை எல்லாம் கழட்டி எறிந்து விட்டு வைஷ்ணவியை தேடிச் சென்றான்.
கீர்த்தனாவும் எதுவும் பேசாமல் வழி விட அவளறைக்குள் சென்றவன் அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் நடந்தான்.
அவன் அருகில் வருவதை பார்த்து மருண்டவள் அவன் கண்களை பார்த்த படியே இருந்தாள். அருகில் நெருங்கி வந்தவன் அவளை கைகளில் குழந்தை போல தூக்கியபடி தனது வீட்டை நோக்கி நடந்தான். போகும் போது கீர்த்தனாவிடம், “வீல் சேர் ஐயும் மெடிசினஸ் ஐயும் கொண்டு வந்து தரமுடியுமா ??” என்று கேட்க அவளும் அதேயெல்லாம் எடுத்துக் கொண்டு அவன் பின்னால் விரைந்தாள்.
அவளை தனது கட்டிலில் படுக்க வைத்தவன் கீர்த்தனாவிடம் அனைத்தையும் பெற்றுக் கொண்ட படி, “நான் இனி பார்த்துக்கிறேன். நீங்க வேலைக்கு போகலாம்” என்றான்.
கீர்த்தனா சென்றவுடன் வைஷ்ணவி பயந்தபடி, “உங்களுக்கெதுக்கு சிரமம்?” என்று தொடங்க அவளை பார்த்து அவன் முறைத்ததில் அவள் குரல் தானாக அடங்கியது. அவளை முறைத்தபடியே ஷர்ட்டை கழட்டியவனை பார்த்து பயந்தவள் அவன் பெல்ட்டில் கை வைக்க, “ஐயோ” என்று கண்ணை மூடிக் கொண்டாள்.
‘இப்போ இவ எதுக்கு இப்படி சீன் போடுறா?? இந்த நிலையிலும் நான் உன்னை ஏதும் பண்ணி விடுவேன் என்று பயப்படுறியே…. என் மேல உனக்கு எப்போவும் நம்பிக்கையே இல்லையா?’ என்று மனம் வெறுக்க உதட்டை சுளித்து யோசித்தவன் குளிப்பதற்காக டவலை
எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான். கொஞ்ச நேரம் எந்த அரவமும் இல்லாமல் இருக்க கண்ணை திறந்தவள் குளியலறை கதவை அவளை பார்த்தபடி அடித்து சாத்தியவனின் சினம் கொண்ட பார்வையில் ஒரு கணம் உறைந்து போனாள்.
கட்டிலில் இருந்தவளுக்கு அவசரமாக இயற்கை அழைத்தது. ‘ஐயோ இந்த கொடுமைக்கு நான் கீர்த்தனா கூடவே இருந்திருப்பேனே. இப்போ என்ன பண்றது???’ என்று யோசித்தபடியே கட்டிலில் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தாள். குளித்து முடித்து வெளியே வந்தவனுக்கு அவள் முகத்தை சுளித்தபடி இருப்பது வித்தியாசமாக தோன்ற அருகில் வந்தவன் அவள் உடலசைவை வைத்து கண்டு பிடித்து விட்டான். அவளை உடனடியாக தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் விட்டவன் திரும்பி நின்றுக் கொண்டான். “நீங்க வெளிய போங்க ப்ளீஸ்” என்று கெஞ்ச தலையிலடித்தபடி வெளியே வந்து நின்றான். சிறிது நேரம் கழித்து, “கொஞ்சம் வரீங்களா??” என்றழைக்க உள்ளேச் சென்றவன், அவளை நெருங்கி அவளை குளிப்பாட்டும் பொருட்டு அவள் போட்டிருந்த ஷர்ட்டை கழட்ட பட்டன் இல் கை வைத்தான்.
அவனின் இந்த செயலை எதிர்பாராதவள், “என்ன செய்ய போறீங்க?” என்றபடி தனது இரு கைகளாலும் அவன் கையை பிடித்து தடுக்க, கோபத்தில் நிமிர்ந்து பார்த்தவனின் கண்களை பார்த்து தனது கைகளை தானாக விலக்கிக் கொண்டாள்.
குளிப்பாட்டி உடையை அணிவித்தவன், அவளை கட்டிலில் படுக்க வைத்தான். அவளுக்கு தான் எல்லாம் அவஸ்த்தையாகி போனது. அவள் வாய் திறந்து கேட்காமலே அவள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தான். அவளை குளிப்பாட்டுவது தொடக்கம் சாப்பாடு ஊட்டுவது வரை அவளுக்குரிய அனைத்து வேலைகளையும் அவனே செய்தான். செய்வதற்கு அருவருக்கும் விஷயங்களை கூட முகம் சுளிக்காமல் செய்தான். அவன் பார்வையில் காமம் இருக்கவில்லை அருவருப்பு இருக்கவில்லை… ஒரு குழந்தையை தாய் கவனிப்பது போல் கவனித்துக் கொண்டான். அவன் கவனிப்பில் அவளின் குற்ற உணர்வு தான் கூடிக் கொண்டு போனது. இப்படி பட்டவனை சந்தேகப்பட்டு மனதை உடைத்து விட்டேனே என்று தினமும் கவலைப்பட்டாள். அவன் காதலை புரிந்துக் கொள்ளாமல் விட்டதை நினைத்து வெம்ப தொடங்கினாள். வீட்டிலிருந்தே கம்பெனிகளை கவனித்தவன் அதுக்கு மேலாக வைஷ்ணவியை கவனித்தான். இது வரைக்கும் அவன் அனாவசியமாக ஒரு வார்த்தை அவளுடன் பேசவில்லை. அவள் கேட்கும் கேள்விகளுக்கு தலை ஆட்டுவான் அல்லது ஒரு வரியில் பதில் சொல்லுவான். எப்போதும் அவள் முன்னே இறுக்கமான முகமாகவே இருப்பவன் மற்றவர்களிடம் மட்டும் சிரித்து பேசினான்.
“நம்ம கிட்ட சிரிச்சா பல்லு கொட்டிருமா என்ன ??” என்று எப்போதும் அவனுக்கு திட்டியபடி இருந்தவள், ஒரு நாள் அவனுடன் மனசு விட்டு பேச முடிவெடுத்தாள்.
அன்று அவளை கட்டிலில் இருத்தி வைத்து கீழே இருந்து அவள் கால் பாதத்தை தனது தொடையில் வைத்து மருந்து கட்டிக் கொண்டிருந்தான். இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்தவள், “என்னை மன்னிக்க மாட்டீங்களா? என் கூட பேச மாட்டீங்களா?” என்று கேட்க ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவன் குனிந்து தனது வேலையை தொடர்ந்தான். அவனை நினைத்து குற்ற உணர்ச்சி பெருக இடது கையை அவன் கேசத்துக்குள் கொண்டு சென்று வருடியவள் அவன் தலையை மெதுவாக இழுத்து கொஞ்சம் குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அவளின் முத்தத்துக்கு எதிர்ப்பு காட்டாமல் அவனும் அவள் இழுத்த இழுப்புக்கு இசைந்து போனான். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. அப்படியே கையை அவன் சொர சொரப்பான கன்னத்தில் வைத்தவள் அதை வருடியபடி அடுத்த கன்னத்தில் முத்தமிட்டாள். எதுவும் சொல்லாமல் அவளை பார்த்த படி இருந்தவன், அவள் இதழ்களை நெருங்க அவள் இதழில் கை வைத்து தடுத்தவன், “மருந்து கட்டியாச்சு, நான் போகலாமா?” என்று கேட்டான். அவனின் இந்த உதாசீனம் மனதில் கவலையை கூட்ட சரி என்று தலை ஆட்டியவளை நேராக படுக்க வைத்தவன் அறையிலிருந்து வெளியேறினான்.
அதன் பிறகு அவனுடன் பேசுவதை அவளும் தவிர்த்து விட்டாள். சில வாரங்கள் கழித்து குணமாகிய பின் வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்று விட்டு வீட்டுக்கு கூட்டி வந்தவன் அவளை கீர்த்தனா வீட்டுக்கு கொண்டு போய் விட்டான்.
இதனை எதிர் பாராமல் அதிர்ச்சியடைந்தவள் அவன் பின்னால் சென்றாள். கதவை திறந்து உள்ளேச் சென்றவனுக்கு பின்னால் அவளும் உள்ளேச் சென்றாள். “பச்…” என்று சலித்தவன், “என்ன” என்பது போல் பார்க்க, “உங்க கூட பேசணும்” என்றாள்.
பின்னால் நகர்ந்து சுவரில் சாய்ந்து ஒரு காலை சுவரில் குற்றியபடி கை கட்டி நின்றவன், “பேசு” என்பது போல சைகை செய்ய, “என்ன மன்னிக்கமாட்டீங்களா??” என்று கேட்டாள்.
ஒரு பெரு மூச்செடுத்து விட்டவன், “இங்கே பாரு வைஷ்ணவி… என் மேல் உனக்கு நம்பிக்கை இல்ல… அப்படி நம்பிக்கை இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம்… அதோட நீ கேட்ட விவாகரத்து விரைவாக கிடைச்சிரும். அடுத்த கிழமை அண்ணா கிட்ட பத்திரத்தை கொடுத்து அனுப்ப சொல்லி இருக்கிறேன். அதில நீயும் நானும் கையெழுத்து போட்டால் போதும்… உடைந்த மனசை எப்போதும் ஒட்ட வைக்க முடியாது” என்றான் தீர்மானமாக.
விவாகரத்து என்றதும் அதிர்ச்சியடைந்தவள் கண்ணீருடன், “ஏன் இப்படி …” என்று தொடங்கியவளை கை காட்டி நிறுத்தியவன், “இதுக்கு மேல் பேசி என் நேரத்தை வீணாக்காதே. உன்னால ஒரு மாசமாக நான் ஆபீஸ் போகல… இனியாச்சும் என்னை வேலை செய்ய விடுறியா ப்ளீஸ்..?” என்றவனை மீறி அவளால் எதுவும் பேச முடியவில்லை
பெருமூச்செடுத்தவள், “ஓகே சார்… உங்க இஷ்டபடியே என்ன விவாகரத்து பண்ணி உங்க தகுதிக்கு ஏற்ற போல் யாரையும் கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றவளிடம், “விவாகரத்து நீ கேட்டது” என்றான். “கல்யாணம் முடித்த ஆரம்பத்தில் நீங்க கேட்டதாக ஞாபகம்” என்றவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தான். “இனி உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். உங்க இஷ்டப்படி வாழுங்க. என்னை பார்த்து கொண்டதுக்கும் எனக்கு இது வரைக்கும் செலவு செய்ததுக்கும் ரொம்ப நன்றி… எவ்வளவு என்று கணக்கு போட்டு சொன்னால் நான் திருப்பி தருவேன்” என்றவள் அவனை எப்படியாவது சீண்டி பேச வைக்க வேண்டுமென்று யோசித்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்ததை அவன் செய்தால் அவன் ஆத்ரேயன் அல்லவே… அவளை கூர்ந்து பார்த்தபடி, “நாளைக்கு ஆபீஸ்ல வந்து டீடெயில்ஸ் வாங்கிக்கோ” என்றான்.
அவன் பதிலை கேட்டு அதிர்ந்தவள், ‘இந்த நெட்டையனுக்கு இது சரி வராது’ என்று யோசித்தபடி “ஓகே” என்றபடி அவனை நெருங்கி நடந்தாள்.
‘என்ன செய்ய போகிறாள் ?’ என்று புருவத்தை சுருக்கி யோசித்தவன் காலை கீழே இறக்கி கட்டிய கைகளை பாக்கெட்டில் விட்டபடி நிமிர்ந்து நின்றான். அவனை நெருங்கி வந்து அவன் உயரத்தை பார்த்து மலைத்தவள், ‘இவனை யாரு இப்படி நெட்டையா பிறக்க சொன்னது? இதுக்குள்ள நிமிர்ந்து வேற நிக்குறான். மனுசனுக்கு இவனால் எவ்வளவு கஷ்டமப்பா’ என்று மனதுக்குள் புலம்பியபடி அவனை ஒட்டி நின்று அவன் காலில் தன் காலை வைத்து ஏறி அவன் இதழை தன் இதழால் சிறை செய்தாள்.
அதிர்ந்து நின்றவன் நெகிழாமல் தன்னை கட்டுக்குள் கொண்டு வர சிரமப்பட்டு போனான். அவளை அணைத்துக் கொள்ள பரபரத்த கையை பாக்கெட்டில் வைத்து அடக்கியவன், விறைத்தபடி நின்றான். அவனின் விறைத்த தோற்றம் அவளுக்கு மனவலியை கொடுக்க, ‘தன்னை உண்மையாகவே வெறுத்து விட்டான்’ என்று நினைத்தவள் கீழிறங்கி, “நன்றி எல்லாத்துக்கும்… இனி உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்” என்று சொல்லி விட்டு தன் வீட்டுக்குச் சென்றாள்.
அவள் சென்றதும் தான் அவனுக்கு மூச்சு விட கூடியதாக இருந்தது. “ராட்சசி” என்று திட்டியவன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் குளிக்கச் சென்றான்.