யுகம்-26

அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றவள் நேரடியாக ஆத்ரேயன் அறைக்குச் சென்றாள். ‘வந்துட்டா தொந்தரவு செய்ய…. இன்னைக்கு செலவு லிஸ்ட் கேட்டு கொடுமை படுத்த போறா’ என்று சலித்தவன் அவளை பாராமுகமாகவே இருந்தான். அவளும், “க்கும் க்கும்…” என்றதும், “கேக்குது சொல்லு…” என்றான். “எங்கே நான் கேட்டது?” என்றவளை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவன்,

“உனக்கு புரியும்படி பேசவே தெரியாதா?” என்று கேட்க, வாயை சுளித்தவள், “எனக்கு இது வரைக்கும் செலவு செய்த லிஸ்ட்” என்றாள்.

ஒரு பெருமூச்சு எடுத்தவன்,

“கட்டின பொண்டாட்டிக்கு செலவு செய்ததுக்கு கணக்கு போட நான் ஒன்றும் கையாலாகாத புருஷன் இல்ல.” என்று அவளை கூர்ந்து பார்த்தபடி கூறினான். அவனது உரிமையான பேச்சு அவள் உயிர் வரை  ஊடுருவிச் சென்றது. ‘அப்போ  நெட்டையனுக்கு நம்ம மேல இப்போவும் ஒரு கண் இருக்கு’ என்று மனதுக்குள் நினைத்தவள் அவனை சீண்டும் முகமாக, “அப்போ நேற்று சொன்னீங்க?” என்று கேட்டாள்.

‘இவ நம்மள விட மாட்டா போல’ என்று நினைத்தவன், “அது நேற்று இது இன்னைக்கு” என்று சொன்னான். அவன் பேச்சில் சிரிப்பு வந்தாலும் அதை கட்டுப்படுத்தியவள், “அதெப்படி…” என்று தொடங்க போக… அவளை நிமிர்ந்து சினம் கொண்டு பார்த்தவன், “என்ன கொஞ்சம் வேலை செய்ய விடுறியா ப்ளீஸ்… நீயும் ஒண்ணும் செய்ய மாட்ட… என்னையும் இப்போ செய்ய விடுறது இல்ல” என்று சீறினான். ‘ஓகே, சிங்கத்துக்கு கோபம் வந்திடுச்சு…’ என்று நினைத்தவள் கழுத்தை நெடித்தபடி அறையை விட்டு வெளியேறினாள்.

நிறைய நாள் கழித்து வந்திருப்பதால் கூட்டமொன்றுக்கு ஆயத்தப்படுத்தி இருந்தான் ஆத்ரேயன். கூட்டத்துக்கு வந்தவளை அவன் திரும்பி கூட பார்க்கவில்லை. ‘என் கிட்டயேவாடா?’ என்று நினைத்தவள் கையிலிருந்த புத்தகத்தை கீழே வேணுமென்று போட்டாள். சத்தம் கேட்டு அவள் பக்கம் திரும்பியவனை யாருக்கும் தெரியாமல் பார்த்து கண்ணடித்து உதட்டை குவிக்க அவளை முறைத்த படியே பேச தொடங்கினான்.

அவள் எங்கே இனி கூட்டத்தை கவனிப்பது?? அவனை கன்னத்தில் கை வைத்து, ‘அழகனடா… நீ..!” என்று மனதுக்குள் கூறியபடி ரசித்துக் கொண்டிருக்க இருக்க அதை கடைக்கண்ணால் கண்டுக் கொண்டவனுக்கு ஒரு சிலிர்ப்பு உண்டாகியது.

அவள் தன்னை பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு பல பல கற்பனைகளை  உருவாக்க அவனுக்கும் கவனம் சிதறியது. அவளை அடிக்கடி பார்க்க சொல்லி மனம் கட்டளையிட அதை தவிர்க்க நினைத்தவன், ‘இருடி உனக்கு வைக்கிறேன் ஆப்பு’ என்று நினைத்தபடி,  “வைஷ்ணவி நீங்க என்ன நினைக்குறீங்க ?” என்று கேட்டான்.

அவன் எதை பற்றி கேக்கிறான் என்று புரியாதவள் கொஞ்ச நேரம் திரு திரு வென முழிக்க இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்தவன், “இங்க வந்தா கொஞ்சமாச்சும் வேல செய்யணும்… உங்க கனவு கற்பனை எல்லாம் வீட்ல வச்சுக்கோங்க… அண்டர்ஸ்டாண்ட் ??” என்று குரலில் கஷ்டப்பட்டு கோபத்தை தேக்கி உறுமினான்.

அவள் சலித்தபடி, “என்ன சார் பண்றது எனக்கு என் ஹஸ்பண்ட் நினைவாகவே இருக்கு” என்றாள் ஏக்கமாக… அவனிடம் அதுவரை யாரும் இப்படி தைரியமாக பேசியதில்லை. வந்த சிரிப்பை கீர்த்தனாவும் கார்த்திக்கும் கட்டுபடுத்திக் கொண்டனர். அவள் அடிபட்டு வைத்தியசாலையில் இருந்தது அனைவருக்கும் தெரியும் ஆனால் யாருக்கும் ஆத்ரேயன் வைஷ்ணவியின் உறவு முறை தெரியவில்லை.

அனைவருக்கும் முன்னால் அவளின் சலித்த பேச்சில் கோபம் எட்டி பார்க்க, “ஜஸ்ட் கெட் அவுட்” என்றான். ‘இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல எப்போ பார்த்தாலும் என்ன வெளியே துரத்துறதே வேலையா போச்சு’ என்று நினைத்தவள்  விறு விறுவென வாசலை நோக்கி நடந்தாள். அனைவரும் அவனையே பார்த்திருக்க அவனோ வைஷ்ணவியை துளைத்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

வாசலுக்கு சென்றவள் திரும்பி அவனை பார்த்து முத்தம் கொடுப்பது போல் உதட்டை குவித்து விட்டு சிரித்தபடி சென்று விட்டாள். ‘என்ன கொல்லுறடி ராட்சசி’ என்று மனதுக்குள் திட்டியவன் கூட்டத்தை தொடர்ந்தான். அவன் மனம் முழுதும் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருந்தது.

புது பெரிய ப்ராஜெக்ட் ஒன்று வந்ததால் அனைவரும் அதில் மூழ்கினர். வைஷ்ணவிக்கு தான் இருப்பு கொள்ளவில்லை. ஆத்ரேயன் நினைவாகவே இருந்தது. ஆனால் ஆத்ரேயனோ வேலையில் மும்முரமாக இருந்தான். அனைத்தையும் மறந்து வேலையில் ஈடுபடுவது அவனுக்கே உரிய கொடையாகும்.

கொடுத்த வேலையை முடிக்காதவள் பகலில் கூட அவனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். அனைவரின் கோப்புகளும் ஆத்ரேயன்  மேசைக்கு வந்தாலும் வைஷ்ணவியின் கோப்பு மட்டும் வரவில்லை. வேலை என்றால் புலியாய் சீறுபவனுக்கு எரிச்சல் மூல அறையில் சில ஊழியர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தவன் வைஷ்ணவியை வர சொல்லி இருந்தான்.

முதல் என்றால் பயத்துடன் உள்ளே நுழைபவள் இப்போது தனது உள்ளம் கவர் கள்வனை பார்க்க ஆர்வத்துடன் உள்ளேச் சென்றாள் .

அவளை கண்டதும் பொரிய  தொடங்கினான். “ஸ்டுபிட் …  நேரத்துக்கு கொடுத்த வேலையை முடிக்காட்டி எதுக்கு இங்க வரீங்க? வீட்டில் வேலை செய்ய வேண்டியது தானே… நீங்க எல்லாம் இன்ஜினியரிங் படிக்க தகுதி இல்ல… இடியட்” என்று திட்ட அவளுக்கோ சிரிப்பு தான் வந்தது.

இதழ்களுக்கிடையில் அவளின் அடக்கப்பட்ட சிரிப்பை கண்டு கொண்டவனின் பிபி எகிற,

“இட்ஸ் நாட் எ ஜோக்… நாளைக்கு காலைல எனக்கு ப்ராஜெக்ட் முடிச்சிருக்கணும்… இல்லாவிட்டால் யூ வில் ஸீ டிஃப்ரன்ட் மீ” என்றான். அதுக்கும் அவள் அசராமல் வேணுமென்றே கம்பீரமாக நின்று, “ஓகே சார் ஐ வில் டூ மை பெஸ்ட்” என்றாள் அவளின் நடவடிக்கை அவனின் கோபத்தில் நீரை ஊற்றி அணைக்க சிரிப்பை கட்டுப்படுத்தியபடி, “யூ கேன் கோ” என்றான்.

வரும் போது, “என்னடி இன்னைக்கு செம டோஸ் போல” என்று கீர்த்தனா கேட்க, “ஆமாடி… எனக்கு வேலை செய்யவே விருப்பமில்லாம இருக்கு” என்று சளைத்தவள் வீட்டுக்கு வந்தும் எதுவும் செய்யவில்லை. கீர்த்தனாவுக்கும் முடிக்க வேண்டிய சில வேலைகள் இருந்ததால் அவளையும் தொந்தரவு படுத்த விரும்பாததால் கார்த்திக்கை அழைத்தாள். அவனோ அன்று அக்காவின் குடும்பத்துடன் வெளியேச் சென்றிருக்க அவளுக்கு ஆத்ரேயன் நினைப்பு வந்தது. லாப்டாப்பை தூக்கிக் கொண்டுச் செல்பவளை பார்த்த கீர்த்தனா,

“எங்கடி போற??” என்று  கேட்க, “புகுந்த வீட்டுக்குடி” என்று கண்ணடித்து சிரித்தபடி அவன் வீட்டின் முன்னே நின்றாள்.

கதவை தட்டியதும் கதவை திறந்தவன் வெற்று  மார்புடன் காற்சட்டை மட்டும் போட்டிருந்தவனை ஏக்கமாக பார்த்த அவள் கண்கள் அவனின் முறுக்கேறிய மார்பில் நிலைத்தது. காதல் போதையில் தள்ளாடியவள் தன்னிலை மறந்து அப்படியே லேப்டாப் உடன் கண்ணை அசைக்காமல்  நின்றாள். அவள் பார்வை செல்லும் இடத்தை கவனித்தவனுக்கு சிரிப்பு வர அதை கட்டுபடுத்தியப்படி  அவள் முன் சொடக்கிட்டு அவளை தன்னிலைக்கு கொண்டு வந்தவன், புருவத்தை உயர்த்தி “என்ன ?” என்று கேட்டான். “சீ என்ன நினைச்சிருப்பான்?” என்று அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன, சற்று சுதாரித்தவள், “உள்ளே வரலாமா??” என்று கேட்டாள். கதவு நிலையில் சாய்ந்து கையை கட்டியபடி நின்றவன் பைஜாமாவும் ட்ஷிர்டும்  போட்டிருந்தவளை மேலிருந்து  கீழ் வரை பார்த்தவன், ‘செமயா இருக்கடி’ என்று மனதுக்குள் நினைத்துவிட்டு, “எதுக்கு ??” என்று கேட்டான்.

“எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.  “அதுக்கு உள்ள வரணும் என்று அவசியமில்லை இங்கேயே கேட்கலாம்” என்றான். ஏனென்றால் அவனுக்கு அவன் மேலயே நம்பிக்கை இல்லை.

“நின்றுக் கொண்டே கேட்க எனக்கு கஷ்டமா இருக்கு… எனக்கு உட்காந்தா தான் கேட்க வரும்” என்றவளை முறைத்துக் கொண்டே, “உள்ள வா” என்றபடி முன்னோக்கி நடந்தான். பின்னால் வந்தவள் கதவை அடித்து சாத்த கதவையும் அவளையும் ஒரு மார்க்கமாக  மாறி மாறி பார்த்தவன் சோபாவில் இருந்தபடி அவளையும் உட்கார சொன்னான். அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவள், “உங்க கற்புக்கு  நான் கியாரண்ட்டி” என்றாள். “ஓஹ் காட்” என்று தாடையில் கை வைத்தவன், “இப்போ சொல்லு” என்றான்.

லாப்டாப்பை டீபாயில் வைத்தவள், “என் ஆபீஸ்ல ஒரு சிடு மூஞ்சு ஒருத்தன் இருக்கான்பா… எப்போ பார்த்தாலும் என்ன திட்டிக்கிட்டே இருக்கான். இந்த பிராஜெக்ட்  இன்னைக்கே முடிக்கணுமாம்… நானே தப்பி பிழைச்சு பாஸ்  பண்ணி இருக்கேன். ரொம்ப கஷ்டமா இருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா ப்ளீஸ்..?” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கை கூப்பி கெஞ்சினாள். தன்னை அவள் சிடு மூஞ்சு என்றதும் எழுந்த கோபம் அவள் கெஞ்சிய தோரணையில் அணைந்தது.

சிரித்தவன், “உனக்கு என்ன செய்து தரணும் ???” என்று உடலை முன்னால் கொண்டு வந்து நாடியில் கை குற்றியபடி கேட்டான்.

லேப்டாப் ஐ அவன் புறம் திருப்பியவள், “எல்லாம்” என்றாள். அவளின் பதிலில் அதிர்ந்தவன் புருவத்தை  உயர்த்தி, “ப்ராஜெக்ட் உனக்கா? இல்ல எனக்கா?” என்று கேட்க,

“ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ் செய்து தாங்க” என்று கேட்டாள் .

அவளை பார்த்து பெருமூச்சு விட்டவன் லாப்டாப்பை எடுத்து அவள் இதுவரை செய்ததை ஆராய்ந்தான். ஓரளவுக்கு செய்திருந்தவளை மனதுக்குள் மெச்சியவன் மிகுதியை செய்ய தொடங்கினான்.

அவன் செய்து தர முடிவெடுத்ததால் சந்தோசம் எழ  சோபாவிலிருந்து எழும்பியவள், அவனருகில் வந்து அவன் கன்னத்தை கிள்ளி, “தட்ஸ் மை  பாய்” என்றாள்.

அவளை பார்த்து முறைத்தவன்,  “நீ போ செய்து விட்டு கூப்பிடுறேன்” என்று கூற, 

“இல்ல நான் இங்கேயே இருக்கிறேன்…” என்றபடி முன்னால் இருந்த சோபாவில் படுத்து தனது தொலை  பேசியை நோண்ட தொடங்கினாள். கை மட்டும் தான் தொலைபேசியிலிருந்தது  கண் முழுக்க அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தது. அதனை அறிந்தவன், “எவ்வளவு நேரத்துக்கு இப்படி சைட் அடிக்கிறதா உத்தேசம் ??” என்று கேட்டான் லாப்டாப்பிலிருந்து கண்ணை விலக்காதபடி.

அவன் தன்னை கண்டு கொண்டதில் அவமானம் வர அதை மறைக்கும் பொருட்டு, “நீங்க எப்போதும் இப்படி தான்  அரை குறையாக தான்  இருப்பீங்களா?” என்று தனது நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டே விட்டாள்.

அவள் கேட்டதில் வாய் விட்டு சிரித்தவன் விடை சொல்லாமல் தனது வேலையை தொடர்ந்தான். சும்மாவே அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் அவன் சிரிப்பில் சொக்கி போனாள். ‘இப்படி சிரிச்சு என்னை கொல்லாதேடா…’ என்று மனதுக்குள் நினைத்தவள், “இப்போ கேக்கிறதுக்கு பதில் சொல்ல போறீங்களா இல்லையா?” என்றவளின் கண்களை ரசனையாக பார்த்தவன், “உனக்கு முன்னால் இப்படி இருப்பது எனக்கு தவறாக தெரியவில்லையே” என்று உதட்டை பிதுக்கி சொன்னான். அவன் கூறியது அவளுக்கு சங்கடத்தை கொடுக்க, அதை சமாளிக்கும் பொருட்டு கண்ணை மூடி படுத்துக் கொண்டாள். படுத்தவளை பார்த்தவன் மென்மையாக சிரித்துக் கொண்டான். படுத்தவள் கண நேரத்தில் தூங்கி போனாள்.

நிமிர்ந்து பார்க்காமல் அவளது  வேலையை அரை மணி நேரத்தில் முடித்தவன் அவளை பார்க்க அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். “இம்சைடி நீ” என்று சலித்தவன் அவளை அணைத்து தூக்கும் போது  எழுந்த உணர்ச்சிகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்த நினைத்தவன் அது முடியாமல் போக அவளை அப்படியே படுக்க வைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் இதழ் நோக்கி குனிய அந்த சந்தர்ப்பத்தில் அவள் கண்களை திறந்துக் கொண்டாள்.

அவள் கண்களை மெதுவாக திறந்ததில் ஒரு கணம்  ஆடியவன், அவளை கூர்ந்து பார்க்க அவளோ தூக்க கலக்கத்தில் கண்களை மறுபடி மூடி மீண்டும் தூங்க தொடங்கி விட்டாள். அவளின் செய்கையால் சிரித்தவன் அவளை குழந்தை போல தூக்கியபடி கீர்த்தனா வீட்டில் கொண்டு படுக்க விட்டான்.  லாப்டாப்பையும் கொண்டு கீர்த்தனாவிடம் கொடுத்தவன் வீட்டுக்கு வந்து அவளை நினைத்தபடியே  தூங்கிபோனான்.

அடித்த நாள் அலுவலகத்துக்கு வந்தவள் கெத்தாக லாப்டாப்பை தூக்கியபடி அவன் அறையில் இருந்தவர்களுக்கு முன்னால்  கொண்டு வந்து ஆத்ரேயனிடம் கொடுத்தாள்.

“நீங்க சொன்ன போல எல்லாம் முடிச்சுட்டேன் சார்” என்றவளை பார்த்து சிரிப்பதா அழுவதா என்ற நிலையில் நின்றவன். “லெட்ஸ் ஸீ” என்றான்.

லாப்டாப்பை ஓபன் பண்ணியவளுக்கு அவன் எங்கே சேவ் பண்ணி இருக்கிறான் என்று கூட தெரியவில்லை. ஒவ்வொரு போல்டராக திறந்தவள் அடிக்கடி எல்லாரையும் பார்த்து சமாளிக்கும் முகமாக, “ஹி ஹி” என்று வேற சிரித்துக் கொண்டாள். பொறுமை இழந்த ஆத்ரேயன் அவளிடம் லாப்டாப்பை வாங்கி பைலை  திறந்து பார்த்தான்.

‘ஓ இங்கேயா இருக்கு’ என்று யோசித்தவள் அவன் அடுத்து என்ன செய்ய போகிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.  ‘இருடி வர்றேன், என்னையவே உன் வேலையை செய்ய வைக்கிறாயா?’  என்று மனசுக்குள் கருவியவன்,  லாப்டாப்பினை அவள் பக்கம் காட்டி, “வைஷ்ணவி இதுக்கு ஏன் இந்த போர்ஸ் போட்டீங்க ??” என்று கேட்க அப்போது தான் முதல் முறையாக அவன் செய்த டிசைனை  பார்த்தாள்.

‘என்ன கருமம்டா இது? ஏதேதோ கேட்கிறானே?’ என்று யோசித்தவள், “எதுக்கு சார்?” என்று கேட்டாள். “இதுக்கு” என்று அவன் தெளிவாக சுட்டிக் காட்ட திரு திரு என முழித்தவள், “அது வந்து…” என்று தலையை சொறிந்தபடி அவனை கண்களால்  கெஞ்சினாள்.

வந்த சிரிப்பை கொடுப்புக்குள் அடக்கி சிரித்தவன், “ஓகே… நீங்க போங்க” என்றான். 

“அப்பாடா” என்றவள் ஓட்டமும் நடையுமாக தனது இருக்கையை அடைந்திருந்தாள்.

இப்படியே ஒரு கிழமை கழிய, சுற்றுலா செல்லும் பொருட்டு ஆத்ரேயனின் குடும்பத்தினர் அனைவரும் அவன் வீட்டுக்கு வந்திருந்தனர். வர விருந்த கோகிலாவும் மலர்வேந்தனும் கோவில் திருவிழாவின் பொருட்டு ஒரு கிழமை கழித்து வர இருப்பதாக இருந்தது. சுற்றுலாவை விட வைஷ்ணவியை பற்றி அனைத்தும் கேள்வி பட்டவர்களுக்கு வைஷ்ணவியை பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அனைவரும் அவள் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று கொலை வெறியில் இருந்தனர்.

ஆத்ரேயன் அனைவரையும் வரவேற்க சென்றதால் அவன் அன்று அலுவலகத்துக்கு வருகை தரவில்லை. வைஷ்ணவி அவனை காணாமல் ஏங்கி போனாள். வீட்டுக்கு வரும் போது அவன்  வீட்டிலிருந்து பெரிய சத்தங்கள் கேட்க யாரோ வந்திருப்பதை அறிந்தவள், அங்கு செல்வதற்கு அவள் கால்கள் பரபரத்தது.

ஆட்களுக்கு முன் தனியாக செல்ல சங்கடமாக இருந்ததால் கீர்த்தனாவிடமும் கார்த்திக்கிடமும் கெஞ்சி கூத்தாடி அங்கு செல்ல அவர்களையும் கூட்டிச் சென்றாள். கதவை தட்டியதும் திறந்தது வர்ஷினி. சந்தோஷத்துடன் வைஷ்ணவி, “அக்…” என்றழைக்க போக, “ஆத்ரேயன் உங்களை தேடி யாரோ மூன்று பேர் வந்திருக்காங்க” என்றபடி உள்ளேச் சென்று விட்டாள். “மூன்று பேரா?” என்று கேட்டபடி வந்தவன் இவர்கள் மூவரையும் கண்டதும், “வாங்க” என்று வரவேற்று உட்கார சொன்னான். யாரும் வைஷ்ணவியை கண்டுக்கவே இல்லை. அது அவளுக்கு பெரும் வலியாக இருந்தது. நடுவில் கீர்த்தனா இருக்க இரு புறமும் மற்றைய இருவரும் இருந்து கொண்டனர்.

அவர்களுக்கு முன்னால் ஆதி லேப்டாப் உடனும் நடுவில் கார்த்திகேயன் பேரனை தூக்கி கொஞ்சியவாறும் இருக்க தனி இருக்கையில் ஆத்ரேயன் இருந்து கொண்டான். ஆதி அனைவரையும் பார்த்து சினேகமாக சிரித்து விட்டு குனிந்துக் கொண்டான். கார்த்திகேயன் பேரனுடன் விளையாடியதில் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அக்காவின் மகனை தூக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கட்டுப்படுத்தியவாறே குற்ற உணர்ச்சி பொங்க தலை குனிந்து இருந்தாள் வைஷ்ணவி. ‘வராமலே இருந்திருக்கலாமோ’ என்று கூட யோசித்தாள். “என்ன விஷயம்?” என்று கேட்ட ஆத்ரேயனிடம் கார்த்திக், “சும்மா தான்” என்றான். அந்நேரத்தில் மூவருக்கும் குலாப்ஜாமூனும் பழரசமும் எடுத்தபடி வந்த மாலதி அனைவரையும் பார்த்து புன்னகைத்தார். வர்ஷினியும் அங்கு வந்தபடி, “எல்லாரையும் அறிமுகப் படுத்த மாட்டீங்களா?” என்று ஆத்ரேயனிடம் கேட்க, “கண்டிப்பா” என்றபடி, “இது கார்த்திக், எங்க ஆபீஸ்ல சீஃப் டிசைன் என்ஜினீயர்” என்று கூற ஆதி எழுந்து கை குலுக்கினான். “இது கீர்த்தனா, எங்க ஆபீஸ்ல டிசைன் என்ஜினீயர் ஆக இருக்கிறா” என்று கூற அவளும் அனைவரையும் பார்த்து தலையாட்டினாள்.

கடைசியாக வைஷ்ணவியை காட்டி, “இது…” என்று தொடங்க, மாலதியோ, “யார்டா இந்த பொண்ணு சர்க்கஸ் காரி போல” என்று கேட்க அனைவருக்கும்  சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. சிரிப்பை அனைவரும் கட்டுப்படுத்த வர்ஷினி முடியாமல் சிரித்து விட்டாள்.  அவள் சிரித்தது வைஷ்ணவிக்கு கோபத்தை கூட்ட அவளை  முறைத்தபடி நின்றாள்.

கீர்த்தனாவோ சல்வாரில் நீள முடியுடன் மூக்குத்தி குத்தி மகாலட்சுமி போல இருக்க, வைஷ்ணவியோ நீண்ட முடியை கழுத்து வரை வெட்டி அதுக்கு கலர் பண்ணி பைஜாமாவும் டீஷர்டும் போட்டிருந்தாள். தாலியும் இல்லாமல் பொட்டும்  இல்லாமல் அவள் நின்ற நிலை மாலதிக்கு எரிச்சலை உருவாக்கவே அப்படி கேட்டு விட்டார். அவருக்கு தெரியவில்லை அவர் மகன் வைஷ்ணவி எப்படி இருந்தாலும் அவள் மேல் பைத்தியமாக இருக்கிறான் என்று.

இவங்க பெயர் “வைஷ்ணவி” என்று கூற அவள் யாரையும் பார்க்காமல் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் நடவடிக்கையை சிரித்தபடி ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அனைவரையும் இருக்க சொன்ன ஆத்ரேயன் தானும் அமர்ந்து சாப்பிட சொன்னான். வைஷ்ணவிக்கு கோபம் தலைக்கேற எதையும் தொடாமல் குனிந்தபடியே இருந்தாள்.

அவளை சீண்டுவதற்காக கீர்த்தனாவிடம்,  “மஹாலட்சுமி போல இருக்கம்மா…  கல்யாணம் ஆகிடுச்சா?” என்று கேட்க கீர்த்தனா, “இல்லை” என்று தலை ஆட்டினாள். “என் மகனை கட்டிக்கிறியா?” என்று கேட்க அதிர்ந்தது வைஷ்ணவி மட்டுமல்ல கார்த்திக்கும் கீர்த்தனாவும்.

ஆத்ரேயன் அன்னையின் திருவிளையாடலை கால் மேல் கால் போட்டு ரசித்துக் கொண்டிருந்தான். ஆதியும் லாப்டாப்பை மூடிவிட்டு வைஷ்ணவியையே பார்த்துக் கொண்டிருந்தான். வைஷ்ணவி மாலதியை அனல் பறக்க பார்க்க கீர்த்தனாவோ கார்த்திக்கின் கையை பிடித்து, “இல்ல ஆன்ட்டி நான் இவரை தான் காதலிக்கிறேன்” என்று கூற, வைஷ்ணவி அவரை பார்த்து நக்கலாக சிரித்தாள். ஆத்ரேயன் அவள் சிரிப்பை ரசித்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் வைஷ்ணவியின் இதழ்களை தாபத்துடன் நோக்கியது. அதை கண்டு கொண்ட ஆதியோ, “நாங்களும் இருக்கோம்டா கொஞ்சம் அடக்கி வாசி” என்று கூற ஆதியை பார்த்து சிரித்துக் கொண்டான்.  அவள் சிரிப்பை சட்டை செய்யாத மாலதி, “என் பையன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்” என்று சலித்துக் கொண்டார்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top