வீட்டுக்கு வந்தவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் பார்வையை நினைத்து பதறியபடி இருந்தவள் அவனுக்கு தொலைபேசியில் அழைத்தாள். அவள் அழைப்பை பார்த்தவன் தொலைபேசியை அணைத்து விட்டு தனது வேலையை பார்க்க தொடங்கினான்.
‘நெட்டையன் தொடங்கிட்டான்’ என்று சலித்தவள் தூங்க தொடங்கினாள். அடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்றவள் வேலை செய்ய மனமில்லாமல் ஆத்ரேயனை தேடி வம்பிழுக்கச் சென்றாள். வேலை பளுவில் இருந்தவன் அவளை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு தனது வேலையை தொடங்கினான். தன்னை அவன் கவனிக்கவில்லை என்று கோபமுற்றவள் விறு விறுவென நடந்து வந்து அவன் முன்னால் இருந்த கதிரையில் இருந்தாள். அவன் அதுக்கும் அசைந்தான் இல்லை. அவன் கையிலிருந்த கோப்பை பறிக்க அவனோ, “ஏய்” என்று திட்ட வந்து திட்டாமல் மேசையிலிருந்த அடுத்த கோப்பை எடுத்து படிக்க தொடங்கினான்.
பொறுமை இழந்த வைஷ்ணவி, “இப்போ என்ன பண்ணிட்டேன் என்று இப்படி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள். பெருமூச்சு ஒன்றை எடுத்தவன், “ஏன் உனக்கு தெரியாதா?” என்றான். “கீர்த்தனா பாவம் தானே” என்றவளை கேலியாக பார்த்தவன், “அவளுக்கு கல்யாணம் ஆன பிறகும் அவ கூட இருக்கிற உத்தேசமா ?” என்று கேட்டான்.
இவனுக்கு பதில் சொல்லி மாளாது என்று நினைத்தபடி “ஆதி அத்தான் வேற பார்த்துட்டார்” என்றாள் தலையை குனிந்த படி வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியவன், “எதை பார்த்தார்?” என்று கேட்க அவனை முறைத்தவள், “எனக்கு சங்கடமா இருக்கு” என்றாள்.
“அவன் ஒரு பையனுக்கு அப்பா ம்மா” என்று கேலியாக கூறியவனை பார்த்தவள், “சரி,இப்போ என்ன பண்ணனும்?” என்று நிதானமாக கேட்டாள். “ஒண்ணும் பண்ண தேவையில்லை… நான் தந்த வேலையை பார்த்தா மட்டும் போதும்” என்று மறுபடி கோப்புக்குள் நுழைந்து விட்டான்.
பொறுமை இழந்தவள் அவனருகில் செல்ல வர கோப்பை தூக்கி போட்டவன் சாய்விருக்கையை பின்னால் தள்ளி உந்தி எழுந்தவன் மேசையிலிருந்த நீண்ட மீட்டர் கோலை எடுத்து அவள் வயிற்றில் ஒரு முனையை வைத்து தள்ளி நிப்பாட்டினான். அவளோ அவன் செய்கையை விசித்திரமாக பார்க்க, “தயவு செய்து பக்கத்தில் வராதே. என்னை வேலை செய்ய விடு ப்ளீஸ். நீ சீண்டி விட்டு போக நான் தான் தனியா கஷ்டப்படணும்” என்றவனை கூர்ந்து பார்த்தவள் விறு விறுவென வெளியேறிவிட்டாள்.
பெருமூச்செடுத்தவன் கதிரையில் தோய்ந்து அமர்ந்தான். அவளோ தனது இருக்கைக்கு போய் இருந்தவள், “பெரிய உத்தமன் போல நடிக்கிறதை பாரு” என்று பொரிந்தபடி இருந்தாள். வீட்டுக்கு வந்தவள் அக்கா குடும்பத்துடன் விளையாட செல்ல அங்கிருந்த ஆத்ரேயன் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவளும் முகத்தை சுளித்துக் கொண்டு மற்றைய அனைவருடனும் பேசியவள் தாயுடனும் தந்தையுடனும் தொலைபேசியில் உரையாடி சமாதானமானாள்.
ஒரு முடிவு எடுப்பதற்காக தனியாக இருந்த கீர்த்தனாவை பார்க்க கார்த்திக் வைஷ்ணவி வீட்டுக்கு வந்திருந்தான். அவனை உள்ளே அழைக்க சங்கடப்பட்டவள் வாசலில் நின்று, “வைஷ்ணவி இல்லை” என்று கூறி நெளிந்தாள். “அப்போ வசதியா போச்சு” என்றவன் அவளை தாண்டி உள்ளேச் செல்ல “எங்க போறீங்க?” என்றபடி பின்னால் சென்றாள் கீர்த்தனா. சோபாவில் இருந்தவன், “இங்க பாரு கீர்த்தனா, நான் எங்க அம்மா, அப்பா, அக்கா, அத்தான் எல்லாரிடமும் சம்மதம் வாங்கி விட்டேன். நீ உன் அம்மா கிட்ட பேசவில்லையா?” என்று கேட்க “ஐயோ எனக்கு பயமா இருக்கு” என்றாள். அந்நேரம் பார்த்து அவளது அம்மா தொலைபேசியில் அழைக்க அதை உயிர்ப்பித்து காதில் வைத்தாள். “சொல்லுங்கம்மா” என்றதும் மறு முனையிலிருந்து, “கீர்த்தனா, உன்னை பொண்ணு பார்க்க உன்னோட வேலை செய்யும் கார்த்திக் என்ற பையனோட அம்மா அப்பா வந்திருக்காங்க என்னம்மா சொல்ல?” என்று கேட்க அடப்பாவி என்பது போல கார்த்திக்கை பார்த்தவள், “சம்மதம் என்று சொல்லுங்கம்மா” என்றாள்.
அவர் வைத்ததும், “எப்படி ஐயாவோட பெர்போர்மன்ஸ்” என்று ஷர்ட்டை உயர்த்தி காட்டி கேட்க, “சூப்பர்” என்று சொல்லி கண்ணடித்தாள். அதுக்கு மேல் நின்றால் ஏதும் விபரீதமாகி அவள் வாயால் திட்டு வாங்க வேணுமென்று பயந்தவன், “நான் வரேன்” என்றபடி வெளியேறிவிட்டான். அவன் வெளியேறியதின் அர்த்தம் விளங்க, ‘சோ ஸ்வீட் கார்த்திக்’ என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டாள்.
இரவானதும் வைஷ்ணவியும் கீர்த்தனாவுடன் வந்து விடுவாள். அடுத்த நாள் பின்னேரம் அனைவரும் விளையாட பாட்மிண்டன் கோர்ட்டுக்குச் சென்றனர். ஆதியும் ஆத்ரேயனும் யார் ஜெயிக்கப்போவது என்று சொல்ல முடியாதளவுக்கு சளைக்காமல் விளையாட அவர்கள் இருவரையும் அனைவரும் கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். வர்ஷினி ஆதிக்கு சப்போர்ட் பண்ண, வெளியில் காட்டா விட்டாலும் ஆத்ரேயன் வெற்றியடைய வேண்டும் என்று வைஷ்ணவி நினைத்துக் கொண்டாள். போட்டி முடிவே இல்லாமல் செல்ல அலுத்து போன கார்த்திகேயன், “வாங்கப்பா உங்க ஆட்டம் ஒரே அலுப்பாக இருக்கிறது” என்று கூப்பிட்டார். சிரித்தபடி இருவரும் கையை அடித்து விட்டு இளைப்பாற வந்தனர்.
ஆதிக்கு அருகில் வர்ஷினி குழந்தையுடன் தண்ணீர் போத்தலுடன் போய் இருக்க வைஷ்ணவி மாலதி பக்கத்திலேயே இருந்தாள். “ஏன்மா அங்க பாரு உன் அக்காவை நீயும் இருக்கியே” என்று மாலதி உதட்டை சுளிக்க, “போதும் போதும்” என்றவள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஆத்ரேயன் அருகில் சென்றாள். “கிட்ட போனா நெட்டையன் திட்டுவான் போகாவிட்டால் இவங்க திட்டுவாங்க… என் வாழ்க்கையை பாரு ஆஞ்சநேயா” என்றபடி அவள் ஆத்ரேயன் முன்னால் போய் நின்றவள் வியர்த்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.
அவளிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கியவன் முகத்தை திருப்பி வேற எங்கோ பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியை பார்த்த படியே நீரை அருந்தினான்.அருந்தி முடித்ததும் அவள் முன் சொடக்கிட்டு, “ஹெலோ என்ன விளையாடலாமா? பாட்மிண்டன் சாம்பியன்” என்று நக்கலாக கேட்டவனை உறுத்து விழித்தவள், பழையபடியே “என்ன பெட்?” என்று கேட்டாள்.
அவளை இளக்காரமாக பார்த்தவன், “நீயே சொல்” என்று கூற, “நான் சொல்றத செய்யணும்” என்றாள். அவளை நோக்கி கை கூப்பியவன், “இப்போ யாரை கல்யாணம் பண்ணிக்க சொல்ல போறதாக உத்தேசம்?” என்று நக்கலாக கேட்க… அவள் மனதில் இனம் புரியாத கவலை குடி கொண்டு அது அவள் முகத்திலும் பிரதி பலித்தது.
அதை கண்டு பதறியவன், “ஹே நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்று அவளை பார்த்து கண்ணடித்தான். என்றாலும் மனம் ஆறாதவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “இப்போ எதுக்கு அழுகிற? எல்லாரும் நம்மள தான் பார்க்க போறாங்க…ப்ளீஸ்” என்று தர்ம சங்கடப்பட்டவனுக்காக கண்ணீரை துடைத்தவள், “நான் வர்றேன்” என்ற படி வெளியேறினாள். “பச்…” என்றவன் அனைவரிடமும் சொல்லி விட்டு அவள் பின்னே சென்றான்.
கீர்த்தனா வீட்டுக்குள் நுழைய போனவளை கையை பிடித்து தடுத்தவன் விறு விறுவென தனது வீட்டு தனது அறைக்குள் அழைத்து வந்து முதலில் அறையை தாழ்ப்பாள் போட்டான். “கொஞ்சம் இரு குளிச்சிட்டு வர்றேன்” என்றவன் குளியலறைக்குள் நுழைந்து சிறிது நேரத்திலேயே வெளியேறினான். எதுவும் பேசாமல் கட்டிலில் இருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. தான் செய்த அனைத்து தவறுகளையும் நினைத்து கண்ணீர் விட்டாள். வெளியே வந்தவன் கீழே மண்டியிட்டு இருந்தபடி அவள் முகத்தை நிமிர்த்தி, “என்னடி?” என்று ஏக்கமாக கேட்க அவளும் அவனை நோக்கி, “நான் செய்தது தப்பு தானே ?” என்று கேட்டாள். “நான் செய்ததை விடவா?” என்று கேட்டவனை கேள்வியாக பார்க்க.
பெரு மூச்செடுத்தவன், “உன் மனசை நிறைய தடவை காயப்படுத்தி இருக்கிறேன், உன்னை வெறித்தனமாக பலாத்காரம் பண்ணி இருக்கேன். எல்லாத்துக்கும் மேலாக உன்னிடம் ஒரு தடவை கூட வாயை திறந்து மன்னிப்பு கேட்கவில்லை. இப்போ என்னை மன்னிப்பாயா?” என்று அவள் கரம் பற்றி மன்னிப்பு வேண்டிட அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவளறியாமல் அவளுக்காக பல தடவை கண்ணீர் சிந்தியவன் முதல் முறை அவள் முன்னே அழுதான்.
இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க, “ச்சீய்… த கிரேட் ஆத்ரேயன் அழுவது சகிக்கல” என்று முகத்தை சுளித்தாள். “போடி” என்றபடி முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தவன், “அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்க, “நான் வீட்டுக்கு போக போறேன்” என்று எழும்பிச் சென்றவளை வெட்டவா? குத்தவா? என்று பார்த்தவன், “போடி போ… உனக்கு கல்யாணம் ஆகிருச்சு மறந்திராத” என்றவன் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டான்.
“சரி தான் போடா” என்றபடி கதவை திறக்க அனைவரும் அங்கு வந்திருந்தனர். எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தவள், ஆத்ரேயன் வெளியில் வரவில்லை என்று அவன் அறையை பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிய தூக்கம் போட்டு விட்டு வந்தவன் அவள் போகாமல் இருப்பதை பார்த்து கண்ணை விரித்தபடி அவளருகில் வந்து நெருங்கி அமர்ந்தான். அனைவர் முன்னிலும் அவன் நெருக்கம் ஏதோ செய்ய எழும்ப போனவளை கை பிடித்து தடுத்தவன் அவள் தோளில் கை போட்டுக் கொண்டான்.
அவன் காதருகில் சென்றவள், “எல்லோரும் பார்க்கிறாங்க ப்ளீஸ் விடுங்க” என்று கெஞ்சியவளை நோக்கியன், “நான் உன் புருஷன்டி” என்றான். தான் சொல்லி கேட்கமாட்டான் என்று அறிந்தவள் அவன் கை வளைவிலேயே இருந்தாள்.
நேரம் ஆனதும் வீட்டுக்குச் செல்ல போனவளை முறைத்தவன் விறு விறுவென தனது அறைக்குள் சென்று புகுந்தான்.அனைவரும் அதிர்ந்து பார்க்க, ‘ஐயோ எல்லார் முன்னாடியும் என்ன இது?’ என்று நினைத்தவள் அனைவரையும் பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்து விட்டு அவன் அறையை நோக்கி நடந்தாள். திறந்திருந்த கதவை தாழ் போட்டு உள்ளே நுழைந்தவள், கட்டிலில் தொலைபேசியை பார்த்துக் கொண்டு படுத்திருந்தவனை பார்த்து, “என்ன இது எல்லார் முன்னாடியும்? என்ன நினைப்பாங்க ?” என்று கேட்டவளை முறைத்தவன், “இப்போ எதுக்குடி என் அறைக்கு வந்தாய்?இப்போ மட்டும் ஒண்ணும் நினைக்க மாட்டாங்களா?நீ என் பொண்டாட்டி அந்த நினைவு உனக்கு இருக்கா இல்லையா?” என்று கேட்க, “அதெல்லாம் இருக்கு” என்றவள் அவனருகில் கட்டிலில் உட்கார்ந்தாள்.
அவள் உட்கார பாய்ந்து எழுந்தவன், “நீ முதல் கிளம்பு” என்று சீறினான். “நான் போகமாட்டேன்” என்றபடி வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தவளை கையை பிடித்து இழுத்தான் வெளியில் தள்ளும் பொருட்டு. “விடுடா ராட்சஸா” என்று கத்தியபடி கீழே இருந்து விட்டாள். “இம்சைடி நீ” என்று அவளை தூக்கிக் கொண்டு வெளியேற போனவனின் கழுத்தை இறுக்கி பிடித்தவள் அவன் கையிலிருந்த படியே அவன் இதழில் தன் இதழை பதித்தாள்.
அவளை தூக்கி வெளியேற போனவன் அவள் இதழ் முத்தத்தால் அவளை கொண்டு வந்து கட்டிலில் போட்டு அவள் மேல் படர தொடங்கினான். அவள் செயலை தனதாக்கிக் கொண்டவன், அவளை இழுத்து தனது வன்மையான இதழ்களை அவள் இதழ்களுடன் இணைத்தான். அவனுக்கு சளைக்காமல் அவளும் இசைந்து கொடுத்தாள். இருவரின் உணர்ச்சிகளும் உடைப்பெடுத்ததில் இதழ் முத்தத்தில் தொடங்கிய காதல் கூடலில் முடிந்தது. சிறு வயதிலிருந்தே சேர்த்து வைத்த காதலை ஒரே நாளில் வெளிப்படுத்தும் பொருட்டு ஆத்ரேயன் அவளை மீண்டும் மீண்டும் நாடினான்.
இரவு இருவரும் சாப்பிடாமலே இருக்க மற்றயவர்களும் அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. காலையில் அவளுக்கு முன்னே எழுந்தவன் அவளை தொந்தரவு செய்ய மனமில்லாமல் இருவருக்கும் காபியை போட்டுக் கொண்டு அறைக்குள் சென்றான்.
“எந்திரிடி” என்று அவளை எழுப்ப அவளோ சத்தமாக, “நீங்க என்ன நேற்று தூங்கவே விடல… ப்ளீஸ் நான் தூங்கணும்” என்று கத்தியது பாதி திறந்த கதவினூடு வெளியிலிருந்த அனைவருக்கும் கேட்டது. கடைசியில் தர்மசங்கடப்பட்ட ஆத்ரேயன் கதவை அடைத்து விட்டு வந்து, “இப்போ எதுக்குடி கத்துற?” என்று கேட்க சத்தமாக அவனை பார்த்து சிரித்தவள், “அப்படி தான் கத்துவேன்” என்றாள். “உன் வாயை எப்படி அடைக்கிறேன் பாரு” என்றபடி அவளை நெருங்கி அவள் இதழை சிறை செய்திருந்தான்.
அவனை மார்பில் கைகளால் தள்ளியவள், “விடிஞ்சிடுச்சு” என்றாள். “அதுக்கு?” என்று கேட்டபடி அவளை நெருங்கியவனை பார்த்து வெட்கப்பட்டவள் கண நேரத்தில் ஓடிச் சென்று குளியலறைக்குள் தாழ்ப்பாள் போட்டாள். “போடி போ… எப்படியும் இங்கே தானே வரணும்” என்றவன் சிரித்தபடி வெளியேறினான். குளித்து வந்தவளுக்கு வெளியில் செல்ல தர்மசங்கடமாக இருக்க அறைக்குள்ளேயே தங்கி விட்டாள். நீண்ட நேரமாகியும் வெளியில் வராமலிருக்க, “எப்போ வரைக்கும் இங்கே இருக்கிறதாக உத்தேசம் ?” என்றபடி வர்ஷினி உள்ளே நுழைந்தாள். தர்மசங்கடப்பட்டு சிரித்தவளை நோக்கிய வர்ஷினி, “வா வந்து சாப்பிடு…” என்றபடி அவளை இழுத்துச் சென்றாள். தான் கூப்பிட்டால் எப்படியும் முரண்டு பிடிப்பாள் என்று தெரிந்த ஆத்ரேயன் தான் வர்ஷினியை அனுப்பி வைத்தான்.
இரு நாட்கள் கழித்து வைஷ்ணவியின் தாயையும் தந்தையையும் அழைக்க விமான நிலையத்துக்குச் செல்ல அவன் ஆயத்தமாகியபடி தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி, “ஏய், நீ வரலையா?” என்று கேட்க, கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தவள் கீர்த்தனா வீட்டை நோக்கி ஓடினாள். “இவளுக்கு என்னாச்சு?” என்றபடி ஆயத்தமாக சிறிது நேரத்தில் சிவப்பு நிற சாரி உடுத்தி அவன் முன்னால் நின்றாள்.
குட்டை முடியும் சாரியுமாக நின்றவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், “உனக்கு இது செட் ஆகல. என் வைஷு குட்டிக்கு ஜீன்ஸ் தான் செமயா இருக்கும்” என்று கூறி கண்ணடிக்க, உதட்டை சுளித்தவள், “இதெல்லாம் என் அம்மாக்கு புரியாது” என்றபடி கையிலிருந்த பெட்டியிலிருந்து தாலியை கொடுத்து கட்டி விட சொன்னாள்.
தாலியையும் அவளையும் பார்த்தவன், “முடியாது போடி” என்றபடி தனது வேலையை பார்க்க தொடங்கினான். “ஓய், என்னாச்சு ?” என்று கேட்க, “நான் தாலி கட்டும் போது எப்படியும் அழுவ… அத பார்த்து எனக்கு கோபம் வரும்… ஒண்ணும் தேவையில்லை நீயே போட்டுக்கோ” என்றான்.
“ஐயோ அது அப்போ… இது இப்போ” என்றவள் அவன் கையில் தாலியை திணித்திருந்தாள். அவள் கண்ணை பார்த்தபடி தாலியை போட்டு விட்டவனுக்கு அவள் முகத்தில் படர்ந்திருந்த வெட்கமும் சிரிப்பும் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுத்த உணர்வை கொடுத்தது.
“சரி போ” என்றவனிடம் “ஹெலோ இதெல்லாம் யாரு போட்டு விடுவா?” என்று கேட்க மோதிரத்தையும் மெட்டியையும் போட்டவன் அவள் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்து விட்டு வாயில் கை வைத்து சிரித்தான். அவன் சிரிப்பை விசித்திரமாக பார்த்தபடி கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்த அவளுக்கே சிரிப்பு வந்தது. அவளின் ஸ்டைல் ஆன ஹேர் கட்டுக்கு எதுவுமே பொருந்தவில்லை.
“பூவும் வைக்கவா?” என்று நெருங்கி வந்து நக்கலாக கேட்டவனை முறைத்தவள், “ஒண்ணும் வேணாம் போடா” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியபடி வெளியேறினாள்.
அவர்கள் இருவரின் மாற்றம் அனைவருக்கும் நிம்மதியளிக்க எல்லோரும் சந்தோஷமாக சுற்றுலாவை அனுபவித்தார்கள். ஒரு மாத முடிவில் அனைவரும் இந்தியா செல்ல ஆயத்தமாகும் போது அனைவரையும் அணைத்து அணைத்து ஒப்பாரி வைத்தாள் வைஷ்ணவி.
அவளின் ஒப்பாரியை முகம் சுருக்கி பார்த்தவன் அவளருகில் நெருங்கி, “பேசாம நீயும் போ… சத்தியமா முடியல உன் அலப்பறை” என்றவனை முறைத்தவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அனைவரும் புறப்பட்டதும் சோகமாக இருந்தவளை நோக்கி வந்தவன், “உன் சோகத்தை எப்படி போக்க போறேன் பாரு” என்றபடி அவளை தன்னறைக்கு தூக்கிச் சென்றான்.
நாட்கள் மாதங்களாக வைஷ்ணவியும் கர்ப்பமுற்றாள். தாயிடம் செல்ல அடம்பிடித்தவளை கட்டாயப்படுத்தி தன்னுடன் நிக்க வைத்து அண்ணனுக்கு தப்பாத தம்பி என்று நிரூபித்தான். “நான் நல்லா உன்ன பார்த்துபேன்டி” என்று சொன்னவன் அவளை தாங்கு தாங்கு என்று தாங்கினான்.
அவனுடனேயே அலுவலகத்துக்குச் சென்றவள் எந்த வேலையும் செய்யாமல் நாவல், படம் என்று காலத்தை கடத்த அவள் வேலையையும் சேர்த்து அவனே செய்து முடித்தான். நிறை மாசமாக நடக்க முடியாமல் ஆத்ரேயன் அறைக்கு வந்தவள் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து மூச்சு வாங்கினாள். சட்டை போட்டு இருந்தவளின் கால் வீங்கி இருப்பதை பார்த்தவன் டையை கழட்டி எறிந்து விட்டு அவளருகில் வந்து கீழே உட்கார்ந்தபடி அவள் காலை தூக்கி தனது தொடையில் வைத்து மசாஜ் பண்ண தொடங்கினான்.
பதறியவள், “ஐயோ இது ஆபீஸ்” என்று சொல்ல அவளை வாயை மூட சொல்லி சைகை செய்தவன் தனது வேலையை தொடர்ந்தான். அந்நேரம் பார்த்து உள்ளே வந்த கார்த்திக், “சாரி” என்றபடி வெளியேற போக, ஆத்ரேயனோ, “பரவாயில்லை வாடா, நீ வீட்டுல செய்றது தானே” என்று கண்ணடித்தான். கீர்த்தனாவும் அந்நேரம் கர்ப்பமுற்று இருந்தாள்.
“என்ன பொண்டாட்டி வேலையையும் சேர்த்து முடிச்சாச்சா?” என்று கேட்ட ஆத்ரேயனிடம், “அங்கே மட்டும் என்ன வாழுதாம்” என்று கேட்க வைஷ்ணவியோ, “நான் தான் என் வேலைய செய்கிறேன்” என்றாள் கழுத்தை நெடித்தபடி, “ஆ! நீ இங்கே என்ன வேலை செய்யிற என்று எங்களுக்கு தெரியும்” என்று கார்த்திக் கூற அவனை முறைக்க முயன்று தோற்று சிரித்து வைத்தாள். காலை பிடித்து விடும் ஆத்ரேயனை கண் வெட்டாமல் பார்த்தவள் அவன் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டாள். சிரித்தபடியே அவனும் நெற்றியை அவளருகில் கொண்டுச் சென்றான். இதை பார்த்த கார்த்திக் தர்மசங்கடப்பட்டு, “நானும் இங்கே தான் இருக்கிறேன்” என்று கூற, ஆத்ரேயன் அவனை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
வைஷ்ணவியோ கார்த்திக்கை பார்த்து நக்கலாக சிரித்தபடி ஆத்ரேயன் கன்னத்தில் முத்தமிட அதையும் சிரித்தபடியே வாங்கியவன் அவள் காலை பிடித்துக் கொண்டிருந்தான். தர்மசங்கடபட்ட கார்த்திக், “நான் வர்றேன்பா… புருஷன் பொண்டாட்டிக்கு இடையில நான் எதுக்கு?” என்றபடி வெளியேற போக, “டேய் நில்லுடா” என்று கூப்பிட வாசலில் நின்று திரும்பி, “என்ன?” என்று கேட்டவனிடம், “இதையும் பார்த்துட்டே போ” என்று கூறியபடி அவள் முகத்துக்கு அருகில் சென்று முழங்காலில் எழுந்து நின்றவன் அவள் இதழ்களில் தனது இதழ்களை பதித்தான்.
“ஐயோ கருமம் கருமம்” என்றபடி அவனும் புலம்பிக் கொண்டு வெளியேறினான் கார்த்திக். அவன் செல்வதை பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டனர்.
மாதங்கள் வருடங்களாக…
சமையலறையில் அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்த ஆத்ரேயனை நோக்கி அவனின் மூத்த மகன்,
“அப்பா” என்று தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கியவாறு அவன் காலை கட்டி பிடித்துக் கொண்டான்.
“குட் மோர்னிங் இஷான்” என்று சிரித்தபடி அவனை தூக்கி அங்கிருந்த சமையல் கட்டில் இருக்க வைத்தவன் தனது வேலையை தொடர, “ஏன் அப்பா அந்த சோம்பேறியை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ??? எனக்கு பிடிக்கவே இல்ல… காபி கூட போடாம தூங்குது” என்று சொல்லியவனை பார்த்து சத்தமாக சிரித்தவன்,
“அம்மாவை அப்படி எல்லாம் சொல்ல கூடாதுப்பா. அம்மா பாவம் தானே… தங்கச்சி பாப்பா இரவு பூரா தூங்க விடலையே.” என்றதும் முகத்தை சுளித்தவன் ஆத்ரேயன் தந்த காபியை குடிக்க தொடங்கினான்.
பின்னால் வந்த அவனின் இரண்டாவது பையனுக்கும் பாலை கொடுத்தவன் இருவரையும் டிவி பார்க்க விட்டு விட்டு அறைக்குள்ளே போனான்.
இஷானை ஆத்ரேயன் கண்டிக்க மாட்டான் ஆனால் ஆத்ரேயனின் கோபத்தை உரித்து வைத்து பிறந்தவனை வைஷ்ணவி அடித்து வெளுத்து விடுவாள். அந்த ஆதங்கத்தில் தான் அவனுக்கு அம்மா என்றாலே எரிச்சலாய் இருக்கும். கதவை அடைத்துவிட்டு அறைக்குள் இரு காபி கப்களுடன் வந்தவன் பெண் குழந்தையை அணைத்தபடி தூங்கியவளை பார்த்து நெற்றில் முத்தமிட்டு புன்னகையுடன் அவளை தாண்டி தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி பக்கத்தில் இருந்த தொட்டிலில் படுக்க வைத்தான். பின்னர் அவளருகில் படுத்தவன் அவளை பின்னால் அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
“ப்ளீஸ் விடுங்க நான் தூங்கணும்” என்று அவனின் கையை தட்டியவளை சட்டை செய்யாமல் மேலும் அணைப்பை இறுக்க சிணுங்கியபடி அவன் புறம் திரும்பியவள் அவன் வெற்று மார்பில் தலை வைத்து அவனை அணைத்தபடி தூங்க தொடங்கினாள்.
“எந்திரிடி கும்பகர்ணி” என்று அவன் எழுப்ப, “கொஞ்ச நேரம் ப்ளீஸ்” என்றவள் அவனை விட்டு விலகவில்லை. “இஷான் திட்டுற அளவுக்காடி தூங்குவ??? மணி பத்து ஆச்சுடி … எழும்பு டி” என்றவனை அணைத்தபடியே நாடியை அவன் மார்பில் குற்றி நிமிர்ந்து பார்த்து கண்ணடித்தவளின் தோரணையில் மயங்கியவன் அவள் முகத்தை ஏந்தி அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அந்நேரம் பார்த்து கதவு தட்ட பதறி விலக்கியவனை பார்த்து கிளுக்கி சிரித்தவள், “உங்க சீமந்த புத்திரர்கள் தான்” என்றபடி திரும்பி படுத்துக் கொண்டாள். அவனும் புன்னகையுடன் சென்று கதவை திறக்க, “கதவை பூட்டிட்டு என்னப்பா பண்றீங்க???” என்று சலித்தபடி கேட்ட இஷானுக்கு பதில் சொல்ல சங்கடப்பட்டு போனான். வைஷ்ணவியோ சிரித்தபடி அனைவருக்கும் முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
உடனே, “ஸ்கூலுக்கு போகணும் ரெடி ஆகுங்க” என்றவன் மகன்கள் இருவரையும் பாடசாலைக்கு செல்ல ஆயத்தமாக்க தொடங்கினான். இருவரும் ஆயத்தமானதும் அவனும் ஆயத்தமாகி ஹாலில் இருந்து அவர்களுக்கு ஷூ போட்டு விட்டு எழுந்து கார் கீயை எடுத்த சமயம் சிறிய தூக்கம் போட்டு எழுந்த வைஷ்ணவி அவன் பின்னால் வந்து அவன் இடையை கட்டி அணைத்து அவன் முதுகில் கன்னத்தை பதித்தவள், “எனக்கு இன்னொரு பொண்ணு வேணும் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள். உடனே அவள் கையை தனது வயிற்றில் இருந்து விலக்கி விட்டு அவளை திரும்பி பார்த்து முறைத்தவன், “ஏன் டி உனக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணு போதாதா?” என்று கேட்டான். “இல்லை” என்றவளிடம் நெருங்கியவன், “நீ வலியில அழுறதை பார்க்க முடியலடி” என்று அவள் முகம் தாங்கி சொல்லிக் கொண்டிருக்க, “அப்பா… இந்த தத்தியோட பேசாம வாங்கப்பா நேரமாச்சு” என்ற மூத்த மகனை, “டேய்” என்றபடி அடிக்க ஓடினாள் வைஷ்ணவி. அந்நேரம் பார்த்து அவளின் ஆறு மாத குழந்தை அழ, “உனக்கு இருக்குடா” என்றபடி குழந்தையை தேடிச் சென்றாள். அனைத்தையும் பார்த்து ரசித்தவன் தன்னிரு பையன்களையும் கார்த்திக்கின் பெண்ணையும் கூட்டிக் கொண்டு பாடசாலைக்கு விட தயாரானான்.
பாடசாலை முடிந்து வந்து சேர்ந்ததும் தான் தாமதம், “கார்த்திக் அங்கிள் பேமிலியோட… வாங்கப்பா வெளிய போய் சாப்பிடுவோம்” என்றான் இஷான். மகனுக்கு இல்லை என்று சொல்பவனா ஆத்ரேயன்? உடனே, “சரி” என்றவன், அனைவரையும் ஒருவாறு ஆயத்தமாக்கி எடுக்க போதும் போதும் என்றாகி விட்டது அவனுக்கு.
கீர்த்தனாவின் மூத்த பெண் பிரகன்யா அசரடிக்கும் அழகு கொண்டவள் இஷானின் ஒரே வயதை ஒத்தவள். கார்த்திக், கீர்த்தனா இருவரின் அழகையும் சேர்த்து பிறந்த பேரழகி… அவளுடன் எப்போதும் வம்பளப்பதே இஷானின் பொழுது போக்கு.
ஹோட்டலுக்குள் வைஷ்ணவி தனது கைக்குழந்தையை தூக்கி கொண்டு வர ஆத்ரேயனோ குழந்தைக்கு தேவையான பொருட்களை பையில் போட்டு தூக்கிக் கொண்டு வந்தான்.
கார்த்திக் ஆத்ரேயனின் நான்கு வயது பையனையும் கீர்த்தனா தனது மூன்று வயது பெண்ணையும் தூக்கி வர இஷானும் ப்ரகன்யாவும் நடந்து வந்தனர்.
ஒரு பெரிய மேசையில் அனைவரும் இருக்க அவர்களுக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. கிட்ஸ் மீல்ஸ் சாப்பிட தொடங்கிய போது கைகழுவாமல் சாப்பிட போன ப்ரகன்யாவின் கையை பிடித்த இஷான், “நீ சாப்பிடும் போது கை கழுவ மாட்டியா??” என்று கேட்க அதிர்ந்த ஆத்ரேயனும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் பிரகன்யாவோ, “நான் கழுவுனா என்ன கழுவாட்டி உனக்கென்ன?” என்றபடி சாப்பிட தொடங்கினாள்.
அதில் அவன் கோவம் அதிகரிக்க அவள் மேல் மேசையிலிருந்த தண்ணீரை ஊற்றி விட்டான். “டேய் என்னடா பண்ற ?” என்று வைஷ்ணவி அதட்ட, அதை சட்டை செய்யாமல் சாப்பிட தொடங்கியவனின் தலைமுடியை பிடித்த பிரகன்யா “ஏய்” என்றபடி அவன் தலையை சுழற்ற தொடங்கினாள்.
இஷானும் பதிலுக்கு அவள் தலைமுடியை பிடித்து உலுக்க விளையாட்டு விபரீதமாகுவதை உணர்ந்த ஆத்ரேயன், “வரலாறு திரும்புகிறது” என்று வைஷ்ணவி காதில் சொல்லி விட்டு எழுந்தவன் கார்த்திக்குடன் சேர்ந்து இருவரையும் பிரித்தெடுப்பதற்குள் களைத்து விட்டான்.
ஒருவாறு சமாதானமாகி வீட்டுக்கு வந்ததும் கதவை பூட்டிய வைஷ்ணவி குழந்தையை ஆத்ரேயனிடம் கொடுத்து விட்டு புடவையை எடுத்து இடையில் சொருகியவள் பூவாஸில் வைக்கப்பட்டிருந்த பிரம்பை எடுத்து எட்டி இஷானின் தலைமுடியை பிடித்து சரமாரியாக அடிக்க தொடங்கினாள். “இனி பொண்ணுங்களோட சேட்டை பண்ணுவியாடா” என்று கேட்டு கேட்டு அடிக்க ஆத்ரேயனுக்கு பழைய நினைவில், ‘இது தனக்கும் சேர்த்து விழ வேண்டிய அடி’ என்று நினைத்துக் கொண்டான்.
“ஐயோ வலிக்குது .விடுங்கம்மா” என்று கத்தியும் அவள் விடாமல் அடிக்க பொறுமை இழந்தவன், “அப்பா…இந்த பஜாரி அடிக்குது பார்த்துட்டு இருக்கீங்களே, காப்பாத்துங்கப்பா…” என்று கத்த, “யாருடா பஜாரி?” என்று கேட்டு கேட்டு அவனை மேலும் அடித்தாள். அவனோ அவளை தள்ளி விட்டு ஓட அவள் துரத்த தொடங்கினாள்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ஆத்ரேயன் தனது கையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு ரெண்டாவது மகனையும் அறைக்குள் இருக்க சொல்லி விட்டு வெளியே வர அவனை நோக்கி முன்னால் ஓடி வந்த இஷான் அவனை தாண்டி அறைக்குள் சென்று கதவை சாத்த பின்னால் ஓடி வந்த வைஷ்ணவியை அறைக்குள் செல்லாமல் குறுக்கால் பாய்ந்து தடுத்து நிறுத்தினான் ஆத்ரேயன். மூச்சு வாங்க இடையில் வந்து தடுத்தவனை முறைத்த படி நின்றவள் கைகளை பிடித்து, “ஏன் டி என்ன விட இப்படி பல மடங்கு உனக்கு கோவம் வருது?” என்று கேட்க, அவளோ, “இவன் என்ன பண்ணினான் என்று பார்த்தீங்க தானே?” என்று சீறினாள்.
“அப்போ நீ எனக்கும் தான் அடிக்கணும்” என்று கண்ணடிக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அது இப்போ இல்ல முதல்…” என்றாள் அவன் மார்பில் சாய்ந்தவாறே, “உன்ன போல ஒருத்தி அவனுக்கும் வந்து சேருவா, அவனும் என்னை போல வாயை மூடி கொடுமையை அனுபவிப்பான்” என்று அவளை வருடியவாறு கூறியவனுக்கு செல்லமாக தோளில் தட்டியவள், “நான் உங்கள கொடுமை படுத்துறேனா ?” என்று கேட்க, “ஆமாடி ராட்சசி… என்னை விட்டு தள்ளி தள்ளி போய் கொடுமை படுத்துறடி” என்றபடி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். அங்கே அவர்களுக்கு அழகான வாழ்க்கை மலர்ந்திருந்தது.
முற்றும்…