மறுநாள் முற்றிலும் ஒரு முடிவுடன் வந்திருந்தாள் நறுமுகை.. அவள் லேபிற்கு செல்லவில்லை, வெளியே யாரோ ஒருத்தற்காக காத்துக் கொண்டிருந்தாள்.. அந்நேரம் படியில் ஏறி வந்த விக்ரமை பார்த்ததும் சட்டென பரபரப்பானவள் இரண்டடி எடுத்து வைத்து,
“ சார்..” என அழைத்ததும் அந்த நிசப்தமான இடத்தில் அவளது மெல்லிய அழைப்பு அவனது செவியை அடைந்திருந்தது..
விழிகள் சுருக்கி தலை திருப்பி பார்த்த விக்ரம்,
“ லேப்புக்கு போகல? இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என கேட்டதும் தலைகுனிந்த நறுமுகை,
“ நான் ப்ராஜெக்ட் பண்ணல சார்” என ஒரு வழியாய் கூறியதும் விக்ரமின் விழிகள் இரண்டும் கூர்மையாய் அவளை அளவிட்டது..
அவன் ஏதேனும் கூறுவான் என எதிர்பார்த்த நறுமுகை அவன் பதில் ஏதும் கூறாததால் மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை தயக்கமாக பார்த்தவள்,
“ நான் நாகராஜன் சார் கிட்ட சொல்லிக்கிறேன் சார்.. எனக்கு எதுவும் வராது.. தேவையில்லாம உங்க டைமும் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்லிடுறேன்..” என பேசும் போதே அவளது கண்கள் சிவந்து கலங்க ஆரம்பித்தது..
தலையாட்டிபடி ஒரு கரத்தை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்து தலை சாய்த்து அவளைப் பார்த்த விக்ரம்,
“ ப்ராஜெக்ட் பண்ணாம என்ன பண்ண போறீங்க?” என்றதும் விரக்தியாய் இதழ் வளைத்து சிரித்து தலை குனிந்தவள்,
“ காலேஜ் விட்டு நின்னுடலாம்னு இருக்கேன்” என முட்டாள்தனமான முடிவை எடுத்தவளை பார்த்து பெருமூச்சுடன் முகத்தை திருப்பிக் கொண்டவன்,
“ம்ம்ம்.. அப்புறம்?”
“எனக்கு எதுவுமே தெரியல சார்.. கண்டிப்பா எனக்கு ப்ராஜெக்ட் எல்லாம் பண்ண முடியாது, எனக்காக நீங்களும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு.. வீட்லயும் எனக்கு அலையன்ஸ் பாத்துட்டு இருக்காங்க.. அதனால நான் பாதியிலேயே போயிடலாம்னு இருக்கேன் “ என்றதும் விக்ரம் இப்போது மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்,
“ சோ .. நீ ப்ராஜெக்ட் பண்ணாததுக்கு இது ஒரு காரணம் இல்ல?” என்றதும்,
“ சார்..” என இழுத்தவள் முன்பு கைநீட்டி தடுத்த விக்ரம்,
“ கல்யாணம் பண்ண போறதால தான் ப்ராஜெக்ட் பண்ண மாட்டேன்னு முன்னாடியே சொல்லி இருக்கலாமே நறுமுகை “ என்றதும் வேகமாக மறுப்பாய் தலையசைத்தவள் ,
“அப்படி இல்ல சார்.. எனக்கு தான் எதுவுமே வரமாட்டேங்குதே சார்.. அதான் .. எதுக்குனு ..” என மென்று முழுங்கியவளை சலிப்பாக பார்த்த விக்ரம்,
“ யுனிவர்சிட்டில உனக்கு படிக்கறதுக்கான சான்ஸ் கிடைச்சிருக்கு.. அதை எப்படி யூஸ் பண்ணிக்கனும்னு நினைக்கறதை விட்டுட்டு பாதியிலேயே போயிட்டா எல்லாம் சரியாயிடுமா சொல்லு?… இப்படி பாதிலேயே போறதுக்கு எதுக்கு நீ படிக்கணும்? அதுக்கு பதிலா படிக்கணும்னு ஆசைப்படுறவங்க யாருக்காவது ஒருத்தருக்கு கிடைத்திருக்கும்ல உன்னோட சீட்.. அது எதை பத்தியும் கவலை கிடையாது உனக்கு.. ஒன்னு தெரியலனா அவ்வளவு தான் விட்டுட்டு போயிடனும்ல..? உன் கூட படிக்கிறவங்களை போய் எல்லாரையும் கேட்டு பாரேன்.. ஒரு ப்ராஜெக்ட் பண்றாங்கன்னா அவங்களுக்கு ஸ்டார்டிங்ல இருந்து எண்டிங் வரையும் எல்லாமே தெரியுமானு ?”
“தெரியாது தான் சார்.. ஆனா எனக்கு பேசிக் கூட தெரியாதே அதுக்கு நான் என்ன பண்றது? நேத்து நீங்க கொஸ்டின் எழுத சொல்லி பேப்பர் கொடுத்தீங்க ஆனா அதை கூட என்னால பண்ண முடியல “ என சிறு தேம்பலுடன் கூறியதும் விக்ரம் ,
“அதெல்லாம் விடுங்க.. இன்னைக்கு என்ன ஒர்க்? அதை மட்டும் பாருங்க.. தேவை இல்லாம இதெல்லாம் நெனச்சுக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதீங்க.. ஒரு விஷயம் தெரியலனா அதை எப்படி கத்துக்கலாம்னு தான் பார்க்கணுமே தவிர நம்மளுக்கு தெரியல அதனால விட்டுட்டு வந்துடலாம்னு நினைக்க கூடாது புரிஞ்சுதா..?
இப்ப நீங்க இந்த படிப்பை வேண்டாம் என்று பாதில விட்டுட்டு போறீங்க.. சப்போஸ் பியூச்சர்ல நம்ம படிச்சிருந்தா அட்லீஸ்ட் ஒரு பத்து பேருக்காது சொல்லிக் கொடுக்கலாமே ஒரு டியூஷன் எடுக்கலாமேனு உங்களுக்கு தோணூம் அதனால பல்ல கடிச்சுக்கிட்டு இந்த ப்ராஜெக்ட் டை பண்ண பாருங்க..” என்றதும் நறுமுகைக்கு ஐயோடா என்றானது..
இவனிடம் கூறிவிட்ட பின்னர் நாகராஜன் இடமும் பேசிவிட்டு கல்லூரியை விட்டு சென்ற சென்று விட்டுவிடலாம் என எண்ணி இருந்தவள் துத்தி செடியை கொண்டு வரவே இல்லை..
இப்போது இவன் இவ்வாறு பேசிடவும் பக் என்று ஆனது அவளுக்கு.. நாகராஜன் இடம் கூட பேச வேண்டாம் விக்ரமிடம் பேசினால் போதும் போல அத்தனை எளிதாக மனதை மாற்றி விட்டானே!..
அவன் கூறிய பின்னர் கூட கைகளை பிசைந்து கொண்டு நின்றவளை கேள்வியாக பார்த்தவன்,
“ இன்னும் என்ன நின்னுட்டு இருக்கீங்க?.. வாங்க லேபுக்கு” என்றதும் அவள் ஏதோ கூற வர அதை எதையும் கவனிக்காது முன்னே சென்றவன் பின்னாடியே சென்ற நறுமுகைக்கு பயம் அடிவயிற்றில் கலக்கியது ..
உள்ளே நுழைந்தவன் தன்னுடைய லேப்டாப் பையையும் அருகே மற்றொரு கவரையும் மேடையில் எடுத்து வைத்தான்.. நறுமுகையும்,
“ சார் அது வந்து..”
“துத்தி எடுத்துட்டு வந்தீங்களா?” என அவள் எதிர்பார்த்த கேள்வியை கேட்டதும், நறுமுகைக்கு அழுகை வராத குறையாய்,
“ உங்ககிட்டையும் சார் கிட்டயும் சொல்லிட்டு காலேஜ் விட்டு நிக்க போறேன்னு நெனச்சு.. “
“ நெனச்சு..? சொல்லுங்க.. “
“ அதனால எடுத்துட்டு வரல சார்..’ என்றவளை அழுத்தமாக பார்த்தவன் கொண்டு வந்த கவரை எடுத்து நீட்டி,
“ இதுல சுத்தி தான் இருக்கு..புடிங்க’ என்றதும் நறுமுகையின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன..
“நிஜமாவா..?” என்றவள் கவரை பிரித்திட அனைத்தும் அத்தனை பிரஷ்ஷாக இருந்தது..
ஒரு இலையிலும் கூட சிறு ஓட்டை இல்லாது நன்றாக இருந்தது.. நறுமுகையே ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து,
“ நீங்களா சார் கொண்டு வந்தீங்க?” என்றதும் அவனும் லேப்டாப்பை திறந்தவாறு,
“ம்ம்.. ஆமா .. “
“தேங்க்யூ சார்.. தேங்க்யூ சோ மச்..திரும்ப அந்த இடத்துக்கு போயிருந்தாலும் இந்த அளவு நல்லா இருக்க துத்தி மாதிரி கிடைச்சிருக்காது.. தேங்க்யூ சார்” என்றதும் அவளை தலை திருப்பி அழுத்தமாக பார்த்தவன்,
“ அதில் இருக்கிற இலை தனித்தனியா பிரிச்சு முதல்ல கழுவி காய வையுங்க..” என்றதும் வேகமாக தலையாட்டியவள் அதற்கான வேலைகளை துவங்கினாள் ..
இலைகளை பதமாய் உருவி எடுத்தவள் பின் அவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி ஈரம் போக வைத்தவள் பின்பு அதை நிழலில் உலர்த்தி வைத்தாள் ..
அவள் செய்வதை ஒரு கணம் பார்த்த விக்ரம் தன் கை கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு பின் நறுமுகையிடம் வந்து,
“ நல்லா காயனும்.. அடிக்கடி திருப்பி திருப்பி போடுங்க சீக்கிரம் காஞ்சிடும்.. சன்லைட்ல மட்டும் வைக்கக்கூடாது புரிஞ்சுதா?”
“ ஓகே சார்..”
“அப்புறம் என்னென்ன பண்றீங்களோ அதெல்லாம் அப்பப்போ நோட்ஸ் எடுத்து வச்சுக்கணும்.. என்ன இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் யூஸ் பண்றீங்க? இப்ப நம்ம ஏதாவது கெமிக்கல் ஆட் பண்றோம் அப்படினா எவ்வளவு எம்எல் அந்த குவான்டிட்டி எல்லாமே எழுதி வைக்கணும்.. புரிஞ்சுதா?”
“ஓகே சார் .. நான் தெளிவா நோட் பண்றேன்.. “
“ம்ம்.. அதுக்காக ஒரு நோட்டை ஃபாலோ பண்ணிக்கோங்க..’
“ ஓகே சார்..” என அவன் கூறுவதை கவனமாக உள்வாங்கிக் கொண்டவள் தன் வேலையை தொடர்ந்தாள் ..
கவிதாவும் நறுமுகையிடம் வந்தவள் ,
‘ என்னடி இலை கிடைச்சிருச்சா?’
“ஆமாடி.. சாரே எடுத்துட்டு வந்து கொடுத்தார் கவிதா.. நல்ல வேலை நான் கூட பயந்துக்கிட்டே இருந்தேன்..’
“ நான்தான் சொன்னேன்ல.. லூசு இதுக்கு தான் பயந்துகிட்டு இருந்தியா?” என்றதும் கவிதாவை பார்த்து அழகாய் புன்னகைத்து வைத்தாள்..
அக்கணம் சாமுவேலின் எண்ணம் வந்திட சட்டென கவிதாவின் கைப்பிடித்தவள்,
“ அது.. சாமுவேல் அண்ணா உன்கிட்ட எப்படி நடந்துக்குறாரு?” என்றதும் விழிகள் சுருக்கி தன் தோழியை பார்த்த கவிதா,
“ ஏன்டி அப்படி கேக்குற.. ? நல்லா தான் நடந்துக்குறாரு ஒன்னு ஒன்னையும் நல்லா தெளிவா சொல்லி தராருடி” என்றதும் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்கிற தயக்கம் இருந்தாலும் தோழியை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும் என்பதால்,
“ சரி டி கொஞ்சம் கவனமா இருந்துக்கோ..” என்றதும்,
“ ஏன்டி..?”
“ சும்மாதான் அந்த அண்ணன் பார்வையே ஒரு மாதிரி இருக்கு அதுக்கு தான்.. “
“அவர் எப்படியோ இருந்துட்டு போறாரு .. நம்ம ஒழுங்கா இருக்கணும் அவ்வளவுதான் ஏதாவது ஒன்னுனா அப்படியே நாகராஜன் சார் கிட்ட சொல்லிக்க வேண்டியது தான் விடு பாத்துக்கலாம்..” என்று கூறிய பின்னர் தான் நிம்மதியே வந்தது நறுமுகைக்கு..
தன் வேலையை மிக கவனமாக செய்பவளை தலை திருப்பி பார்த்த விக்ரம் என் தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.. அவனது நினைவில் நேற்று நடந்த நிகழ்வு தான் ஞாபகத்திற்கு வந்தது..
நண்பர்களிடம் பேசி விட்டு அவன் வந்து கொண்டிருந்த சமயம் ஜான் எதிரே வந்தான்..
“ஹாய் டா..” என விக்ரம் கூறியதும் ஜானும் முதலில் பொதுப்படையாக பேசியவன் பின்பு சிறு தயக்கத்திற்கு பின்னர்,
“ அண்ணா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. “ என்றதும் விக்ரமும்,
“ சொல்லுடா.. “
“ நறுமுகை கூட ஏதாவது பிரச்சனையா அண்ணா திட்டிட்டீங்களா?” என தயக்கமாக தான் கேட்டான் ..
அதில் அதிர்ந்து போன விக்ரம்,
“ ஏன் கேட்கிற?” என அதிர்ச்சியுடன் கேட்டு வைத்தான்.. ஏ
னெனில் சிறிது நேரத்திற்கு முன்பு தானே அவளை திட்டி அனுப்பி இருந்தோம்.. அதற்குள் விஷயம் கசிந்து விட்டதா என்று எண்ணியிருந்தான் விக்ரம்..
ஜான்,
“இல்லண்ணா அவ இப்ப போன் பண்ணி இருந்தா.. ஒரே அழுகை..”
என்றதும் சலிப்பாக ஜானை பார்த்தவன்,
“ பின்ன என்னடா பேசிக்கே தெரியல அந்த பொண்ணுக்கு.. ஒரு செடியை எப்படி கலெக்ட் பண்றதுன்னு தெரியல ரொம்பவே கஷ்டம்.. அந்த கோவத்துல திட்டினேன் அதுக்கு அந்த அம்மாக்கு அழுகை வந்துருச்சாமா..?” என நக்கலாக கேட்டதும், ஜானும்,
“ அப்படி இல்லண்ணா நிஜமாகவே அந்த பொண்ணு நல்லா படிக்கும்..”
“ஜான் நல்லா படிக்கிறது வேற.. அனுபவம் வேற.. டிச்சு மார்க் மட்டும் எடுத்தா பத்தாது நம்ம அதுல என்ன தெரிஞ்சுகிட்டோம்னு தான் முக்கியம்” என்றதும் ஜானும் விடாது,
“ புரியுதுண்ணா ஆனா அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் சாஃப்ட்டா சொல்லுங்களேன்.. கண்டிப்பா செய்வா..”
“டேய்.. அவ கூட ஒரு பொண்ணு இருக்காளே கவிதா.. ஜஸ்ட் சாமுவேல் சொல்றான் அந்த பொண்ணு செய்து.. அண்டர்ஸ்டாண்டிங் தான் ஜான் .. அது இந்த பொண்ணு கிட்ட இல்ல” என்றதும்,
“ அண்ணா அவங்க எல்லாமே பிரண்ட்ஸ் தான் அண்ணா .. அவளை ஒதுக்கி வச்சுட்டாங்கண்ணா .. அதிலேயே அவளுக்கு ஒரு மாதிரி டிப்ரஷன்ல இருக்கா..” என்றதும் விக்ரம் அவனை புரியாது பார்த்து,
“ என்னது பிரண்ட்ஸ்ங்க ஒதுக்கி வச்சுட்டாங்களா..?ஏன்?”
எனக்கேட்டதும் நறுமுகையை பற்றி கூற துவங்கினான் ஜான்.…
.