தன் கையில் உள்ள மோதிரத்தை ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தாள் நறுமுகை.. இவன் தான் தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ற பின்னர் ஒருவித பயமும் பதற்றமும் இருந்தது ஆனால் இப்போது தன் கரம் பற்றி அவன் மோதிரம் அணிவித்தானோ அந்த நொடியை அவள் மனதிற்குள் இதுநாள் வரை அவன் மீதான இருந்த பிம்பம் உடைக்கப்பட்டு ஒருவித ஈர்ப்பு வந்து விட்டிருந்தது.. தன் கரத்தை அவன் கெட்டியாக பிடித்திருந்த நொடிகளை இப்போது நினைத்தால் கூட மேனி சிலிர்த்துக்கொண்டது அவளுக்கு.. தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்த நறுமுகைக்கு எப்போது அவனை காண்போம் என வெகு ஆவலாய் இருந்தாள்.. நிச்சயம் முடிந்த பின்னர் விடுமுறை தினம் என்பதால் வீட்டிற்குள்ளே தான் இருந்தாள்.. ராகினியும் ரோகினியும் நறுமுகையை கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கிவிட்டிருந்தனர்..
தன் கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை சுரதை தான் உதட்டை சுழித்து பார்த்தவர் அவரளது தலையிலேயே ஒன்று போட்டு,
“ உன் காலேஜ்ல தான் வேலை பார்க்க போறாரு நீ பாட்டுக்கு அவர் கூட கதையடிச்சிட்டு இருக்காத.. அவர் வேலையை பாக்கணும் புரிஞ்சுதா? யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு வேற சொல்லிட்ட.. கவிதாக்கெல்லாம் தெரிஞ்சா என்ன நினைப்பா ?” என கேட்டதும் அதுவரை கனவில் மிதந்து கொண்டிருந்தவள் தாயின் பேச்சில் தன் நிலை அடைந்தவளாய்,
“ இப்போதைக்கு எதுவும் வேண்டாம்மா கல்யாணத்தப்போ நான் சொல்லிக்கிறேன் .. நீங்க விடுங்க.. அவங்க அம்மாவை பார்த்தா கூட நீங்க பாட்டுக்கு எதுவும் சொல்லிட்டு இருக்காதீங்க புரிஞ்சுதா?” என கண்டிப்பாக கூறியிருந்தாள் நறுமுகை… சுரதையும் சரியென்று விட்டார்..
ஒரு வழியாக விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திறந்திட விரைந்து சென்றாள் நறுமுகை.. எப்போதும் சரியான நேரத்திற்கு வரும் விக்ரம் கூட அன்று சீக்கிரமே வந்திருந்தான் லேபிற்க்கு..உள்ளே வந்தவள் அங்கிருந்து விக்ரமை கண்டதும் பளிச்சென்று மின்னியது அவளது வதனம்.. நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டவளாய் லேப் கோட்டை அணிந்து கொண்டு நோட்டை எடுத்துக் கொண்டவள் அவனை நோக்கி சென்றாள்.. எப்போதும் அவனை நெருங்கி வரும் சமயங்களில் எல்லாம் அவரது உள் மனம் ஒரு வித பதற்றத்திலேயே இருக்கும்.. ஆனால் இப்போது பதற்றம் இருக்கிறது தான்.. ஆனால் இந்த பதற்றம் வேறு வித உணர்வை தந்திருந்தது அவளுக்கு.. அதை அனுபவித்தபடி அவனுக்கு அருகே சென்று நின்றவள் அமைதியாகவே இருக்க, லேப்டாப்பை பார்த்தவாறு இருந்தாலும் உண்மையில் அவளை தான் எதிர்பார்த்து இருந்தான் விக்ரம்..
அவள் வந்ததும் கடை கண்ணில் அவளை பார்த்தவன் அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் உள்ளுக்குள் ஏதோ செய்தது அவனுக்கு.. கடினப்பட்டு தன் கவனத்தை தன் வேலையில் திசை திருப்பியபடி அவன் லேப்டாப்பில் வேலை பார்த்து இருக்க, அவள் அவனை நெருங்கி வந்ததும் ஏனோ என்றும் இல்லாத ஏதோ ஒரு உணர்வு அவனை பலமாய் தாக்கியிருந்தது.. அவனும் அமைதியாகவே இருக்க, பொறுத்து பொறுத்து பார்த்த நறுமுகையே,
“ சார்..” என மெல்லிய குரலில் அழைத்ததும் என்னவோ அப்போது தான் அவள் வந்திருப்பது கவனிப்பது போல தலை திருப்பி பார்த்தவன்,
“| சொல்லுங்க நறுமுகை” என வழக்கம் போல கேட்டிடவும் சப் என்று ஆகிவிட்டது நறுமுகைக்கு.. தன்னை காணும் போது தன்னைப் போலவே அவனும் முகம் மலர்வான் என எதிர்பார்த்து இருந்தாள் ஆனால் அவனோ இயல்பாக இருக்கவும் ஏதோ போல் ஆகிவிட்டது அவளுக்கு..
பின் என்னென்ன செய்ய வேண்டும் எனக் கூறிட , சோர் ந்த மனதுடன் அனைத்தையும் செய்ய துவங்கினாள் .. மலர்ந்த முகத்துடன் இருந்தவள் நொடியில் வாடிய முகமாய் மாறியதும் விக்ரமிற்கு உள்ளுக்குள் நெருடியது.. என்னவாக இருக்கும்? எதனால் அவள் முகம் வாடிவிட்டது? என இப்போதே தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் அவனுக்கு..
தனியே அவளிடம் பேசிட வாய்ப்பு அமையவே இல்லை.. சின்னதாய் தனது பார்வையோ நடவடிக்கையோ மாறினால் நிச்சயம் அனைவரது கவனமும் தங்கள் மீதுதான் இருக்கும் பின்னர் அது தேவையில்லாத சந்தேகங்களை கிளப்பி விடும் என தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமை காத்தான்.. அன்று முழுவதும் அவனால் அவரளிடம் பேசாது போய்விடுமோ என பயந்தவன் பின் என்ன நினைத்தானோ,
“ பிஹெச் (Ph value) வேல்யூ பாக்கணும்” என்றதும் நறுமுகை,
“ ஆனா நீங்க அது பண்ணனும்னு சொல்லவே இல்லையே சார்?” என அப்பாவியாய் கேட்டதும் பல்லை கடித்துப் பார்த்தவன்,
“ இப்ப பண்ணனும்னு சொல்றேன்ல வாங்க” என அழைத்துச் சென்றான்.. பிஹெச் வேல்யூ பார்க்க மூன்றாம் தளத்திற்கு செல்ல வேண்டும்.. அங்கு அதற்கு என ஒரு அறை உள்ளது.. யார் பார்க்கப் போகிறார்கள்? எதற்காக பார்க்கப் போகிறார்கள்? என அங்கு இருக்கும் குறிப்பு ஏட்டில் கையெழுத்து போட்டு விபரங்களை நிரப்பிய பின்னரே பார்க்க முடியும்.. விக்ரமைத் தொடர்ந்து நறுமுகையும் அவனைத் தொடர்ந்து சென்றிட.. அவர்கள் செல்லும் நேரம் அங்கிருக்கும் பொறுப்பாளர் விக்ரமை கண்டதும் ,
“பிஹெச் பார்க்கணுமா சார் ?”
“ ஆமா வெளிய போறீங்களாக்கா ?”
“ ஆமா சார்… பிரின்ஸ்பல் சார் கூப்பிட்டாரு நீங்க கொஞ்சம் பாத்துக்குரிங்களா?”
“ சரிக்கா நான் பாத்துக்கிறேன்.. நீங்க போங்க” என்று விட்டு உள்ளே நுழைந்தவனுக்கு அப்பாடா என்றானது… நேரத்தை வீணாக்காது வேக வேகமாக தன்னுடைய பெயரை போட்டு விபரத்தை நிரப்பியவன் நறுமுகைக்கு பிஹெச் எப்படி பார்க்க வேண்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு அவளை பார்க்கச் சொன்னான்…. அவளுக்கு பின்னே நின்றிருந்தவனது நாசியில் அவள் தலையில் சூடி இருந்த மல்லிகையின் மணம் கமிழ்ந்தது….
மெல்ல அவளை நெருங்கி நின்ற விக்ரம் அவளது பின்னம் தலையில் அவனது தாடையின் நுனி உரச நின்றிட , திக்கென்று ஆனது நறுமுகைக்கு…. அவள் திரும்பி பார்க்கவில்லை.. ஆனால் உணர முடிந்தது தனக்கு மிக அருகில் அவன் நின்றிருக்கிறான் என்று…. அவள் தன்னை கண்டுகொண்டாள் என அறிந்ததும் விக்ரமுக்கு உற்சாகமாகியது.…
“ எதுக்கு உம்முன்னு இருக்க?” என அத்தனை மென்மையாக கேட்டான்.…
அவனது இந்த மென்மையில் பாவம் பெண் மனம் தான் தவித்து போனது…. மூச்சுக்கு தட்டுப்படுபவள் போல,
“ அது… அது நீங்க… ஏதும் பேசல ..அதான்..” என தட்டுதடுமாறி கூறியதும் மெல்ல அவளது தலையின் பக்கவாட்டில் வந்தவன்,
“ என்ன பேசணும்?” என அவன் பேசும்போது வெளிவந்த மூச்சுக்காற்று அளரது காது மடலை தொட்டுச் சென்றிட, அதற்கே சிவந்து போனது அவளது மேனி…
“ அது அன்னைக்கு… நடந்த பங்க்ஷன்… நீங்க மோதிரம்… நான் …எதுவும்.. நீங்க…’ என உளறிக் கொண்டிருந்தவளின் பேச்சு தடைப்பட்டது அவனது முரட்டு கரம் பெண்ணவளின் மருதாணி இட்ட கரத்தின் உள்ளங்கையை அழுந்த பற்றியதும் கண்களை மூடிக்கொண்டவளது நெஞ்சம் ஏறி இறங்கியது.. நாசி வழி மூச்சு விட மறந்தவளாய் வாய் வழி பெரிய பெரிய மூச்சுகளை வெளியிட்ட நறுமுகைக்கு இதுவரை அனுபவித்து விடாத புது உணர்வு அவளை மொத்தமாய் தாக்கியிருந்தது.. விக்ரமிற்க்கும் அதே நிலை தான்.. ஒற்றை கரத்தால் அவளது உள்ளங்கையை பற்றி இருந்தவன் மற்றொரு கரத்தால் அவளது தோள்களை பிடித்திட கையை உயர்த்தினான்..
அறையின் பொறுப்பாளர் சட்டென கதவை திறந்து வந்திட, விக்ரம்,
“ இன்னும் எவ்வளவு நேரம் பார்த்துகிட்டு இருப்பீங்க? சீக்கிரம் பார்க்க முடியாதா?” என முயன்று வரவழைக்கப்பட்ட கடுமையில் நறுமுகையிடம் பேசிக் கொண்டிருந்தான்.. அதை பார்த்தவாறு அந்த பொருப்பாளறும் ,
“ஏன் விக்ரம் சார் இவ்வளவு கோபப்படுறீங்க? சின்ன பசங்க தானே விடுங்க” என்றதும் அவரைப் பார்த்த விக்ரம்,
“ எல்லாமே கத்து வெச்சுக்கணும் அக்கா… ஒன்னு ஒன்னுத்துக்கும் யாராவது கூட வர முடியுமா ? “ என அவரிடம் கேட்டுவிட்டு,
“ முடிச்சிட்டீங்களா நறுமுகை?|” என்றதும்,
“ ஹான் முடிச்சிட்டேன் சார் “ என கூறியவள் ட்ரேயினை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டாள்..பொருப்பாளரிடம் நன்றி உரைத்து விட்டு வெளிவந்த விக்ரமின் பார்வை மொத்தமாய் மாறிவிட்டிருந்தது.. நறுமுகைக்கு இன்னும் நடந்த நிகழ்விலிருந்து வெளிவரவே இல்லை.. அவனது நெருக்கம் புதுவித அவஸ்தையை தந்திருந்தது அவளுக்கு ..உதட்டில் உறைந்த முகிழ் நகையுடன் அவளை பின்தொடர்ந்து சென்றான் விக்ரம்..
அதன் பின்னர் வேலை அவர்கள் இருவரையும் விழுங்கி விட.. கவிதா அன்று சீக்கிரமே சென்று விட்டிருந்தாள்.. அவள் கிளம்பிய பதினைந்து நிமிடங்கள் கழித்து தான் நறுமுகையும் கிளம்ப வேண்டியது ஆயிற்று.. அவள் விக்ரமிடம் சொல்லிக்கொண்டு பார்வையாலே சொல்லாததையும் சொல்லிவிட்டு அன்ன நடை இட்டவாறு கல்லூரியில் இருந்து வெளி வந்தாள்.. கிட்டதட்ட அரை மணி நேரத்திற்கு மேலானது அவள் கேட்டினை அடைவதற்கு .. மாலை நேரம் மனதிற்கு பிடித்தவனின் நினைவுகளுடன் அந்த நிமிடத்தை ரசித்தவாறு நடந்து வந்தாள்.. சரியாக அவள் சாலையை கடக்கும் நேரம் கவிதா பேருந்தில் ஏறுவது தெரிந்தது.. பெரு மூச்சுடன் அவள் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள்.. \
இங்கு விக்ரமும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானவனுக்கு இன்னும் தன் இடக்கரத்தில் பெண்ணவளின் கரத்தை பற்றி இருந்த மென்மை இருந்தது..
அவளையே எண்ணியிருந்தவன் என்ன நினைத்தானோ சட்டென அவளுக்கு அழைப்பு விடுத்திருந்தான் .. கையில் இருந்த கைபேசியின் அதிர்வில் யார் என்று பார்த்தவளது விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.. சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தவள் வேகமாக அழைப்பை ஏற்று காதல் வைத்து விட, இவள் ஹலோ என்பதற்குள்ளாகவே மறுமுனையில் இருந்து விக்ரம்,
“ பஸ் ஏறிட்டியா ?’
“இ…இல்ல… இன்னும் இல்ல..” என்றபோது அவளுக்கான பேருந்து காலியாக வந்தது…. அதை பார்த்ததும் ஏறலாமா? என எண்ணியவளது இரண்டு கால்கள் அவள் பேச்சினை கேட்காது தரையோடு ஒட்டிக்கொண்டது…
கீழ் உதட்டை கடித்துக் கொண்டு நெற்றியை நீவியவன் ,
“சரி கொஞ்ச தூரம் அப்படியே நடந்து போ.. நான் பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றதும் உள்ளுக்குள் ஒரு இன்ப அதிர்வு நறுமுகைக்கு….இருந்தும் ,
“ இல்ல பரவால்ல ..பஸ் வரும் …’ என்றதும் மறுபுறத்தில் இருந்தவனோ ,
“ நான் டிராப் பண்றேன்னு சொல்றேன்” என அழுத்தமாய் கூறியதும் மறுக்க முடியவில்லை நறுமுகையால்…. சரி என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது…. அவன் கூறியது போல சிறிது நேரம் நின்றிருந்தவள் பின்பு கைபேசியை பார்ப்பது போல அப்படியே நடந்து செல்லலானாள் … அவன் வருகிறானா என திரும்பி பார்த்தவாரே சென்றவளது பக்கவாட்டில் வந்து நின்றது வெள்ளை நிற கார் ஒன்று…