சுற்றிலும் இருட்டாக இருந்தது அந்த அறை…ஜன்னல் வழி வரும் வெளிச்சம் மட்டுமே எங்கும் பரவி கிடந்தது…மேசை ஒன்று இருக்க சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர் இளைஞர்கள் சிலர்…
அங்கு இருந்தவர்களுடன் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன்.. சாமுவேல்… உடன் இருந்தவர்களும் அவனை அழுத்தமாய் பார்த்தவாறு ஒருவருக்கொருவர் விழிகளாலே ஏதோ சமஞ்சை செய்து கொண்டு இருந்தனர்…
“ என்ன மச்சான் வந்து இவ்வளவு நேரம் ஆகுது ..யாரோ வராங்கன்னு சொன்ன இன்னுமா வராங்க..??”
” இதோ வந்துடுவாங்கடா..”என்றான் ஒருவன்…
“என்னடா அரை மணி நேரம் ஆகுது.. சரி எதையாவது ஃபிகரை தான் கூட்டிட்டு வரீங்கனு நினைச்சேன்.. பார்த்தா விக்ரம் ஃபிரண்ட் இருக்கான்.. விக்ரமுக்கு மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான் போலயே!” என பயந்தது போல் கூறினாலும் அதில் இருக்கும் நக்கலை அங்கு இருந்த அனைவராலும் உணர முடிந்தது.. சட்டென விக்ரமின் நண்பன் முன்பு குனிந்து,
“ என்னடா விக்ரம் எதாவது ஒரு பொண்ணை உஷார் பண்ணிட்டானா என்ன?” என கேட்டு விட்டு சிரித்து கொள்ள.. இதழ் வளைத்து சாமுவேலை பார்த்த விக்ரமின் நண்பனும்,
“ நீயே பார்க்க தான போற?’ என்றதும் வாய்விட்டு சிரித்துக்கொண்டான் சாமுவேல்..
அச்சமயம் அங்கு தனது அழுத்தமான காலடி சட்டத்துடன் வந்து சேர்ந்தான் விக்ரம்..
அவனைக் கண்டதும் சாமுவேல் விழிகள் இரண்டும் சுருங்கி விரிந்தன..
“ இவன் எங்கடா இங்க?” என அருகே இருந்தவனிடம் கேட்டிட, யாரும் எதுவும் பேசவில்லை.. சாமுவேலையே அழுத்தமாய் பார்த்தவாறு இறுகிய முகத்துடன் நெருங்கி வந்தான் விக்ரம்..
நறுமுகை கீழே குதித்ததை அறிந்ததும் உண்மையில் சாமுவேலுக்கு பயம் தொற்றிக் கொண்டது.. எங்கு தன்னை பற்றி ஏதேனும் உளறி வைத்து விடுவாளோ என்று!.. ஆனால் அதற்க்கும் ஒரு வழி வைத்திருந்தான்,
‘ அவ தான் என்னை கூப்பிட்டா ப்ராஜெக்ட்டுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி.. நான் முடியாதுனு சொன்னதுக்கு படுக்க கூபிட்டா நான் திட்டி விட்டேன் “ என நல்லவன் போல காட்டி கொண்டு அவள் மீது பழியை போட்டு விடலாம் என என்னென்னவோ எண்ணி வைத்திருந்தான்.. ஆனால் அவன் எதிர்பார்த்த அளவு ஏதும் நடந்திடாதவும் விட்டது தொல்லை என எண்ணிக் கொண்டிருந்தான்..
இப்போது விக்ரம் இங்கு வரவும் நிச்சயம் நறுமுகை நடந்து விடயத்தை அவனிடம் தெரிவித்து இருப்பாள் அதை கேட்கத்தான் வந்திருக்கிறான் என சரியாக கண்டு கொண்டான் சாமுவேல்..
விக்ரமிற்காக அவன் பயம் கொள்ளவில்லை.. தன்னைப் போல் தானே அவனும் அவளை வைத்திருக்கிறான் என இளக்காரமாக எண்ணிக் கொண்டவன் விக்ரமை நக்கலாக பார்த்து,
“ என்ன விக்ரம் அந்த நறுமுகை..” என்றதும் தான் தாமதம் முழுதாய் அவளது பெயரை கூறி முடிக்கும் முன்னர் விக்ரமின் இரும்புக்கரம் சாமுவேலின் தாடையை பலமாய் தாக்கியிருந்தது..
ஒரு நொடி என்ன நடந்தது என்பதை கிரகித்துக் கொள்வதற்கு முன்னமே அடுத்த அடியை இடியாய் இருக்கிறான் விக்ரம் மறு கன்னத்தில் .. அதில் நிலைகுலைந்து தள்ளிப் போய் கீழே விழுந்து விட்டிருந்தான் சாமுவேல்.. அவனை அடுத்து என்ன என யோசிக்கக்கூட வைக்காது தன் காலை கொண்டு நெஞ்சிலேயே ஓங்கி மிதி மிதி என மிதித்து எடுத்து விட்டான் விக்ரம்..
அவன் மட்டுமா? உடன் இருந்த நண்பர்களும் சாமுவேலை நன்றாக தாக்கினர்.. அதில் முற்றிலும் தடுமாறி போன சாமவேல் ,
“ எதுக்குடா என்னை அடிக்கிறீங்க விடுங்க.. ஏய் விக்ரம்.. எதுக்கு என்னை அடிக்கிற?” என அவனைப் பேசக்கூட விடாது வாயிலேயே போட்டான்.. அவன் வாயிலேயே தனது ஷூ அணிந்த காலினால் மிதித்து எடுத்திட பாவம் சாமுவேலின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.. அவனை விதவிதமான வார்த்தைகளால் அர்ச்சனை பாடிய விக்ரம் நாக்கை துருத்திக் கொண்டு,
“****.. எவ்வளோ தைரியம் இருந்தா நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு மேல கைய வைப்ப.. பொறம்போக்கு.. நாதாரி..****..*****” என இன்னும் அவனை அதிகமாக வசை பாடியவன் குமுறி எடுத்து விட்டான்… அவன் கூறிய விடயத்தில் அதிர்ச்சி அடைந்த சாமுவேலோ,
“ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா ?.. யாருடா?” என தடுமாறி கேட்டதும் சாமுவேலை அடி வெளுத்துக் கொண்டிருந்த விக்ரமின் நண்பனும்,
“ம்ம்ம்.. நறுமுகையே தான் சொல்றான்…. எவ்வளவு தைரியம் இருந்தா அந்த பொண்ணு கிட்ட அப்படி நடந்து இருப்ப? நீ எல்லாம் மனுஷனா?” என்றதும் சாமுவேலுக்கு இப்போது தான் அனைத்தும் புரிந்தது..
“ சத்தியமாக நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு தெரியாது விக்ரம்,.. ப்ளீஸ் என்னை விட்டுடு.. நான் அவ தப்பான பொண்ணு.. னு…. ஊஊஊ” என இழுத்தவனது கன்னதிலேயே மாறி மாறி அறைந்து விட்டு இன்னும் மிதித்து எடுத்து விட்டான் விக்ரம் அவனது வாயவே..
“சாரி விக்ரம்.. சா.. சாரி .. விக்ரம்” என மூச்சு வாங்க கூறினானான்.. அதை கேட்ட விக்ரமிற்கு கோபத்தில் கண்கள் இரண்டும் சிவந்து விட்டிருந்தது ,
“சாரியா ..? நீ சாரி சொன்னா நடந்தது எல்லாம் இல்லன்னு ஆயிடுமா?.. நீ முத்.. ப்ச்.. கொடுத்ததாலதான்டா அவ மாடியில் இருந்து குதிச்சா.. உயிருக்கு ஏதாவது ஆயிருந்தா என்னடா பண்ணி இருப்ப? பொறம்போக்கு நாயே.. பொருக்கி.. உனக்கு அவ்வளவு அரிப்பெடுத்ததுனா எங்கேயாவது போக வேண்டியது தானே காசு கொடுத்து.. நம்மளை நம்பி தானடா லேபுக்கு அனுப்புறாங்க.. இப்படி நடந்துக்கிற? உனக்கு நிஜமாவே அவ்ளோ அக்கறை இருந்திருந்தா என் சட்டையை புடிச்சு நீ கேட்டு இருந்திருக்கணும்.. அதை விட்டுட்டு எப்படா சான்ஸ்னு அந்த பொண்ணு கிட்ட நீயே தப்பா நடந்துக்கிட்ட?” என ஒவ்வொரு வார்த்தைக்கும் அடி விழுந்தது சாமுவேலுக்கு..
கெஞ்சிப் பார்த்த சாமுவேல் பின் திமிறிக்கொண்டு ,
“ ரொம்ப பண்ணாத விக்ரம்.. இப்ப கூட நான் அவளை அது மாதிரி தப்பா நினைச்சதால தான் அப்படி நடந்துக்கிட்டேன்.. இல்லன்னா அவ கிட்ட கூட போக மாட்டேன்.. நீ பண்ணது ரொம்ப தப்பு.. நீ என்னை அடிச்சத நான் சும்மா விட மாட்டேன்..” என்றதும் தன் கைச்சட்டையை மடித்து விட்டவாறு ,
“ என்னடா?.. என்ன பண்ணுவ?.. பிரின்ஸ்பல் கிட்ட சொல்லுவியா..?போய் சொல்லு .. உன்னால தான் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டேன் அப்படின்னு நறுமுகையை வச்சு கம்ப்ளைன்ட் கொடுக்க வைப்பேன்” என்றதும் அதை கேட்டு சாமுவேல் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே மூச்சு வாங்கியவாறு ,
“கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.. இப்ப நான் கிஸ் பண்ணிட்டேன் .. எனக்கு எதிரா கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்ல போறேன்னு சொல்ற?… அப்படி மட்டும் சொன்னா மொத்த காலேஜும் அந்த பொண்ணை தான் தப்பா பேசும்” என பழைய பஞ்சாங்கத்தையே பேசிட …அதை கேட்ட விக்ரம் அதிரவெல்லாம் இல்லை….சாமுவேலை தலை சாய்த்து பார்த்து ,
“ என்னடா தப்பா பேசும்?…. தப்பு பண்ண நீயே நெஞ்சை நிமித்திட்டு இருக்கும் போது தப்பு பண்ணாத அவ ஏன்டா கூனி குறுகி நிக்கணும்? பயந்து சாவ சொல்றியா ? அவளுக்கு நான் இருக்கேன்டா” என தன் நெஞ்சை தட்டி சொன்னவன் இன்னும் நாலு மிதி மிதித்தான்.…
அனைவரிடமும் அடி வாங்கி கிட்டத்தட்ட அசைய கூட முடியாது படுத்துவிட்டான் சாமுவேல்… அப்போது கூட விக்ரமிற்கு ஆத்திரமும் அடங்கவில்லை…. அவனது நண்பர்கள் தான் அவனை தள்ளிக் கொண்டு இழுத்து வந்து,
“ விடு மச்சான் இதுக்கு மேல அடிச்சா அவன் உயிர் போயிடும் .. நம்ம இப்படி அடிச்சது நினைச்சு நினைச்சு காலம் முழுக்க அவமானத்துல சாகட்டும் “ என்றதும் தனது புறங்கையால் உதட்டை துடைத்துக் கொண்டவன்,
“ மனசு ஆற மாட்டேங்குதுடா..! அவளுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா என்னால நினைச்சு கூட பார்க்க முடியல மச்சான்..” என கண் கலங்கி பேசிய விக்ரமை அவனது நண்பர்கள் தான் சமாதானப்படுத்தினர்..
மீண்டும் சாமுவேல் முன்பு வந்து நின்றவன் ஒற்றைக்கரம் நீட்டி,
” நான் தான் அடிச்சேன்னு யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோ… எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது… ஆனா ஒன்னு மட்டும் உன் மனசுல வச்சுக்கோ…இந்த விஷயம் கொஞ்சம் வெளிய கசிஞ்சாலும் நறுமுகயை வச்சு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து உன் ஒட்டுமொத்த லைஃபும் டோட்டலா காலி ஆக்கிடுவேன்…நான் வாழலைனா எவனையும் வாழ விடமாட்டேன்… அதை எப்பவும் நினைப்புல வச்சுக்கோ… செய்ய மாட்டேன்னு நினைக்காத சாமுவேல்… என்னை பத்தி உனக்கு தெரியும்..” என மீண்டும் அவன் நெஞ்சில் எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து விருட்டென சென்று விட்டான்…
பின் விக்ரமின் நண்பர்களில் ஒருவன் தான் சாமுவேலை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை செய்து பிறகு ஹாஸ்டல் வாசலில் விட்டு திரும்பியும் பாராது சென்று விட்டான்…
அடி வாங்கி வந்த சாமுவேலிற்கு அத்தனை அவமானமாக இருந்தது…
அவனை கண்டதும் அங்கிருந்து அனைவரும் என்ன ஏது என கேட்டு ஒரு வழி ஆக்கிவிட …சாமுவேல் தான்,
” பிரெண்ட்ஸ் கூட ட்ரிபள்ஸ் பைக்ல போகும் போது ஆக்சிடன்ட் ஆயிடுச்சு.. அதான்..” என சொல்லி சமாளித்து விட்டான் …
நறுமுகையை அன்றே டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள்…
ஏதோ ஒரு வேகத்தில் விக்ரமிடம் கூறிவிட்டோம் ஆனால் அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்..?
இன்னொருவனால் கலங்கப்பட்டு விட்டோம் தன்னை வேண்டாம் என்று கூறி விடுவானோ ..?
தான் பேசியதற்கு கூட அவன் பதில் ஏதும் கூறிடவில்லையே..?
ஆம் நறுமுகை அவனிடம் அனைத்தையும் கூறி முடிக்கும் நேரம் வளவனும் சுரதையும் கதவை தட்டினர்..
தனது முகத்தை அழுந்து துடைத்துக் கொண்டு கதவை திறந்த விக்ரம் ,
“ஒரு சின்ன வேலை இருக்கு நான் போயிட்டு வந்துடுறேன்..” என அவளை திரும்பியும் பார்க்காது சென்று விட்டிருந்தான்..
அவனது செயலில் நறுமுகை தான் விக்கித்து போய் விட்டிருந்தாள்… ஒரு சிறு பார்வை கூட தன்னிடம் பதிய விரும்பவில்லையே என இப்போது வரை அவனை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்…
பெற்றோருக்கு தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்காது என விஷயத்தை கூறிவிட்டு இருந்தான் விக்ரம்…
நறுமுகை காவலரிடம் என்ன கூறியிருந்தாளோ அதையே தான் தாய் தந்தையிடமும் கூறிவிட்டு இருந்தான்.. அவர்களும் உடனே பார்க்க கிளம்பி வந்து விட்டனர்…
வளவனுக்கும் சுரதைக்கும் தான் சங்கடமாகிவிட்டது.. திருமணம் வைத்திருக்கும் இந்த நேரத்தில் இது போல் நடந்து விட்டதற்கு என்ன நினைப்பார்களோ என தயக்கத்துடன் இருக்க…
தேசிங்கன் தான்,
” நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமா நறுமுகைக்கு உடம்பு சரி ஆகிவிடும்..” என்றதும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்ட வளவன்,
” தப்பா எடுத்துக்காதீங்க சம்பந்தி …எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னு ரொம்பவே தயக்கமா இருந்தேன்.. விஷயம் கேள்விப்பட்டு அதுவும் கல்யாணம் வைத்திருக்கிற இந்த நேரத்துல இது மாதிரி ஆனதும்… நீங்க என்ன நினைப்பீங்களோனு பயந்துட்டேன் …” என தயக்கமாக உரைத்ததும் தேசிங்கன் அவரது கரத்தை தட்டிக் கொடுத்து,
“ இதுல நம்ம பொண்ணு மேல என்னங்க தப்பு… தெரியாம கீழே விழுந்துட்டா.. நல்ல வேலை பெருசா எதுவும் நடக்கலையே ..அதுவரைக்கும் பரவாயில்லை..”
சுகன்யாவும் நறுமுகையிடம் அவளது உடல் நிலையை பற்றி விசாரித்தவர் கவனமாய் இருக்குமாறு அறிவுரை வழங்கினார் …
விக்ரம் அமைதியாக அவளை பார்த்தவாறு இருந்தானே ஒழிய எதுவும் பேசவில்லை… உண்மையில் அவனிடம் சில வார்த்தை மொழிகளாவது கேட்டிடலாம் என மிகுந்த ஏக்கத்துடன் இருந்தாள் நறுமுகை…
ஆனால் அவளை சுற்றிலும் பரிதி, வித்யா, ராகினி, ரோகினி என அனைவரும் இருக்கவும் அவனால் அவளை நெருங்கிடக்கூட முடியவில்லை..
சிறிது நேரத்தில் வந்தவர்கள் மூவரும் கிளம்பி சென்று விட.. அன்று இரவு முழுவதும் நறுமுகைக்கு தூக்கம் தூரமாகி போனது…