அத்தியாயம் 3

அத்தியாயம் 3

இதே சமயம் நவநீதனின் அறைக் கதவு தட்டப்பட்டது…

அவனும் எழுந்து சென்று சலிப்பாக திறக்க, அங்கே நின்றது என்னவோ ஜீவிதன் மற்றும் அர்ஜுன் தான்…

“என்னடா தூங்கிட்டு இருக்க?” என்று கேட்டபடி ஜீவிதன் உள்ளே வர, “நைட்டுக்கு முழிச்சு இருக்க ப்ராக்டிஸ் பண்ணுறான் போல” என்று சொல்லிக் கொண்டே அர்ஜுன் வந்தான்…

அவனை மேலிருந்து கீழே பார்த்த நவநீதனோ, “ஏன் மச்சான் ஏன்?” என்று கேட்க, ஜீவிதனோ, “கொஞ்சம் பெரிய மனுஷன் போல பேசுடா அர்ஜுன்” என்றான் ஜீவிதன் சிரித்துக் கொண்டே…

“என்னடா நீ ரெண்டு பிள்ள பெத்ததுமே தாத்தா ரேஞ்சுக்கு பேசுற?” என்று அர்ஜுன் கலாய்த்துக் கொண்டே நவநீதனின் தோளில் கையை போட்டவன், “நீ சொல்லு, கல்யாணத்துல இஷ்டம் இல்லையா என்ன?” என்று கேட்க, “இஷ்டம் இல்லன்னு நான் சொல்லவே இல்லையே” என்றான்…

“லவ் ஃபெயிலியர் ஏதுமா டா?” என்று ஜீவிதன் கேட்டுக் கொண்டே அமர, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை” என்றான் நவநீதன்…

“இப்படி நீ இருக்க மாட்டியே. மூஞ்சை மூணடிக்கு நீட்டி வச்சுட்டு இருக்க?” என்று அர்ஜுன் கேட்க, “அப்படியா இருக்கு?” என்று கேட்டபடி வலுகட்டயமாக சிரித்துக் கொண்டான்…

“டேய் என்ன பிரச்சனை இருந்தாலும் எல்லாத்தையும் மறந்துட்டு அந்த பொண்ண சந்தோஷமா வச்சுக்கோ” என்று சொல்ல, “ம்ம்” என்று பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டான் நவநீதன்…

இதே சமயம், மணமேடையில் இருந்த ஐயரோ, “மாப்பிள்ளையை வர சொல்லுங்க” என்று குரல் கொடுக்க, “உன்னை வர சொல்றாங்க, சீக்கிரம் கிளம்பு” என்று சொல்லி, அவனுக்கு பூ மாலையை கழுத்தில் போட்டு விட்ட அர்ஜுன், அவனை மணமேடைக்கு அனுப்பி இருக்க, அவனும் மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டான். 

இதே சமயம், தனிஷாவின் அறைக்குள் நுழைந்து இருந்தார்கள், பல்லவி, ராகவி, சுகானா, நேத்ரா மற்றும் வந்தனா…

தனிஷாவோ அவர்களைக் கண்டதும் எழுந்து நிற்க, “இப்போ எதுக்கு எந்திரிக்கிற? எங்கள பார்த்தா கொடுமை பண்ணுறவங்க போலவா இருக்கு?” என்று பல்லவி சிரித்துக் கொண்டே, அவளை அமர வைக்க, “ரொம்ப அழகா இருக்கா என அண்ணி” என்று கேட்டாள் ராகவி… 

நேத்ராவோ, “ம்ம், சாரி செம்ம செலெக்ஷன்” என்று சொல்ல, தனிஷா மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்…

என்ன பேசுவது என்று தெரியவில்லை…

மனம் இன்னுமே திருமணத்தில் ஒன்ற மறுத்தது… 

சுகானாவோ, “நிஜமாவே ரொம்ப அமைதியாம்மா நீ?” என்று கேட்க, தனிஷாவோ, “ஐயோ இல்லக்கா, நல்லா பேசுவேன், நல்லா சண்டையும் போடுவேன், ஆனா பழக கொஞ்சம் டைம் வேணும்” என்று சொன்னாள்…

வந்தனாவோ சிரித்துக் கொண்டே, “அண்ணி, உங்க ரெண்டு பேர் கூடவும் சண்டை போட ஆள் வந்தாச்சு” என்று சொல்லிக் கொண்டே தனிஷா அருகே வந்தவள், “இவங்க ரொம்ப ஒத்துமையான அக்கா தங்கச்சி… எங்க வீட்ல சண்டையே போட மாட்டேங்குறாங்க, செம்ம போர் ஆஹ் இருக்கு” என்று சொல்ல, ராகவியும், “ஆமா, நீ உள்ளே வந்து ஆட்டைய கலைச்சு விடு, நாங்க வெளியே இருந்து வேடிக்கை பாக்கிறோம்” என்று சொன்னாள்…

“கொழுந்தியா குசும்பை பார்த்தியா?” என்று சுகானாவிடம் சொன்ன பல்லவியோ, “சுகானா பெருசா சண்டை போட மாட்டா, நான் ஓரளவு போடுவேன், என் கூட சண்டை போட்டுக்கோ” என்று சொல்ல, தனிஷா இலகுவாகி சிரித்துக் கொண்டாள்…

அவள் முடியை பல்லவி சரி செய்து இருக்க, அவளுக்கோ அவர்கள் எல்லோரையும் பிடித்து விட்டது… 

அதனை தொடர்ந்து மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து இருக்க, ராகவி தான் அவளை அழைத்து இருந்தாள்…

நவநீதன் குனிந்தபடி இருந்தான்…

அவன் அவளை பார்க்கவே இல்லை…

தனிஷாவும் குனிந்தபடி தான் நடந்து வந்து அவன் அருகே அமர்ந்தாள்.

அவளும் அவனை ஏறிட்டுப் பார்க்கவே இல்லை…

இதே சமயம், சக்திவேல் அருகே அமர்ந்து இருந்த யாழினியோ, “சித்தப்பா என்ன உர்ருன்னு இருக்கிறார்?” என்று கேட்க, சக்திவேலோ, துளசியை பார்த்து, ‘அவளே கண்டு பிடிக்கிற அளவுக்கு இருக்கான் பாரேன், என்னடி பிரச்சனை அவனுக்கு?” என்று கேட்க, “எனகென்ன மச்சான் தெரியும்… உங்க புள்ள தானே, கேட்டு பார்க்கலாமே, நான் கேட்டா ஒண்ணுமே வாய் திறக்க மாட்டேங்குறான்” என்றார் அவர்…

“அப்படியே உன் புள்ள நான் கேட்டா எல்லாமே சொல்றான்  பாரு, ஆனா ஒன்னுடி, இவனை ஹாஸ்பிடல் ல மாத்தி தூக்கி வந்துட்டோமோ தெரியல” என்று சொல்ல, “மச்சான் உங்களுக்கு எப்போவும் விளையாட்டு தான்” என்று துளசி சிரித்துக் கொண்டே சக்திவேலுக்கு கிள்ளி இருக்க, சக்திவேலும் சிரித்தபடி யாழினியை பார்த்தவர், “நீ கேட்டு பார்க்கலையா யாழினிம்மா” என்று கேட்டார்.

“கேட்டேன் தாத்தா, ஒன்னும் இல்லடி குட்டின்னு சொல்லி, எனக்கு சாக்லேட்டை தர்றார், ஆனா அவர பார்க்க என்னவோ போல இருக்கு” என்று சோர்வாக சொல்லிக் கொள்ள, அவளுக்கு வீட்டில் இருக்கும் அனைவர் மீதும் இருக்கும் பாசம் கண்டு மெய் சிலிர்த்துப் போனார் சக்திவேல்…

அவளை அணைத்து உச்சந்தலையில் முத்தமிட, அவளும் சிரித்தபடி அவனை அணைத்துக் கொள்ள, நெகிழ்வில் சக்திவேலின் கண்களும் கலங்கி விட்டன…

துளசியோ, “என் செல்லத்துக்கு சுத்தி போடணும்… அவளை பார்த்து எல்லாரும் கண் வைக்கிறாங்க” என்று சொல்ல, “அத முதல் செய் இன்னைக்கு” என்று சொன்னான் சக்திவேல்… 

இதே சமயம், சக்திவேல் அருகே வந்த ஆரண்யனோ, “ஏன் என்னை அணைச்சுக்க மாட்டீங்களா?” என்று கேட்க, “இந்தா வந்துடான்டி உன் வில்லன்” என்று துளசி காதில் சொன்ன சக்திவேலோ, “உன்னை அணைச்சுக்காமலா டா, வாடா என் சிங்க குட்டி” என்று சொல்லி, இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட, “தாத்தா, இந்த தாடியை எடுங்க, குத்துது” என்றான்…

“டேய் நீ தானே, இப்ப அணைச்சுக்க சொன்ன” என்று சக்திவேல் கேட்க, “அது சும்மா சொன்னேன், இப்படி பொசுக்குன்னு அணைச்சுக்குவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டுக் கொண்டே, சக்திவேலின் அணைப்பில் இருந்து விடு பட்டான்.

யாழினியோ சிரித்துக் கொண்டே, “இங்க வா ஆரண்யன், எல்லாத்துக்கும் என் கூட போட்டிக்கு வராதே, நம்ம தோஸ்து” என்று சொல்ல, “முடியாது முடியாது” என்றான் அவன்…

யாழினியோ, தனது குட்டி கைபையில் இருந்து சாக்லேட்டை எடுத்து நீட்ட, “ஆஹ் இப்ப முடியும் முடியும்” என்று சொல்லி, அதனை வாங்கிக் கொண்டே, அவளுக்கு அடுத்த பக்கத்தில் அமர்ந்து கொள்ள, யாழினியோ சக்திவேலை பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டிக் கொண்டாள்…

துளசியோ, “அவ அப்பா போலவே எல்லாரையும் பார்த்துக்கிறா” என்று சொல்லி, நெகிழ்வாக கலங்கிய கண்களில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்…

இதே சமயம், மந்திரங்களும் தொடர்ச்சியாக உச்சரிக்கப்பட, தாலியும் ஆசீர்வாதம் வாங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டது…

ஆனால் இன்னுமே நவநீதனும் தனிஷாவும் பார்த்துக் கொள்ளவில்லை…

அவளுக்கு அவன் வேஷ்டியின் கரை தெரிந்தது…

அவளுக்கு அவன் புடவையின் கரை தெரிந்தது…

ராம்குமாரோ, “இவன் ஏன் குனிஞ்சுட்டு இருக்கான்னு தெரியலயே” என்று சொல்ல, விஜய்யோ, “கல்யாணம் பேசுனதுல இருந்தே மந்திரிச்சு விட்ட போல தான் இருக்கான்” என்று சொன்னான்.

கஜனோ பெருமூச்சுடன், அர்ஜுனிடம், “ஏதாவது சொன்னனா?” என்று கேட்க, “ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறான் மச்சான், என்ன கேட்டாலும் சலிச்சிட்டு பதில் சொல்றான்” என்று சொல்ல, “அவன் மனசுல என்ன தான் இருக்கோ தெரியல, ஏதும் லவ் ஃபெயிலியர் ஆஹ் இருக்குமோ?” என்று கேட்டான் ஜீவிதன்…

“அப்படி எல்லாம் இருக்க சான்ஸ் இல்ல, எல்லா பொண்ணுங்க கூடவும் கடலை போடுவான், லவ்ன்னு சொல்லி ஒரு வாரத்துல ப்ரேக் அப்ன்னு சொல்லுவான், சீரியஸ் ஆஹ் எந்த ரிலேஷன்ஷிப் உள்ளேயும் போன போல தெரியல” என்றான் அர்ஜுன்…

“இப்போ பொண்ணுங்க கூட கடலை போடுறது இல்லன்னு விஜய் சொன்னானே” என்றான் கஜன்… 

அர்ஜுனோ, “அவுஸ்ரேலியா போய் வந்ததும் ரொம்ப அடங்கிட்டான்…” என்று சொல்ல, ஜீவிதனோ, “அவுஸ்ரேலியா போனதே உங்களால தானே அண்ணன்” என்றான் ஜீவிதன் கஜனை பார்த்து சிரித்துக் கொண்டே…

“ஒன்னு லவ் பண்ணனும் , இல்ல பண்ண கூடாது, இது ட்ரெஸ் மாத்துற போல டெய்லி ஒன்னு மாத்துனா நல்லாவா இருக்கும்? எனக்கு இப்படி ஒருத்தன் தம்பியா வந்து பிறந்து இருக்கான், அன்னைக்கு விட்ட டோஸ் ல தான் சார் கோச்சுகிட்டு படிக்க போனார், அதையும் ஒழுங்கா முடிக்கல” என்று சலித்துக் கொண்டான் கஜன். 

“இப்ப ஏதோ ஒரு ட்ராக் ல போறான்ல மச்சான், விடுங்க” என்று அர்ஜுன் சொல்ல, “நீ தான் அவனை கெடுக்கிறதே” என்று அவனுக்கும் கஜன் வாயினால் திட்டு விழுந்தது…

“இவனால நானும் திட்டு வாங்க வேண்டி இருக்கு” என்று அர்ஜுன் சலித்துக் கொள்ள, “மச்சான் மச்சான்னு எல்லாம் பண்ணுற தானே, சோ திட்டையும் சேர்த்து வாங்கிக்கோ” என்றான் ராம்குமார்…

“அவன் தான் என் வேவ் லெந்துக்கு இருக்கான், உங்கள போல அங்கிள் கூட எல்லாம் கூட்டு வச்சுக்க முடியுமா?” என்று அர்ஜுன் கலாய்க்க, “டேய் நீயும் அங்கிள் தான், உனக்கும் ரெண்டு பிள்ளைங்க இருக்கு, சாருக்கு நினைவு இருக்கா?” என்று சிரித்தபடி கேட்டான் கஜன்…

“க்கும், உங்க மருமகன் மறக்க விட்ருவான் பாருங்க, எங்க அந்த வில்லன்?” என்று விழிகளை சுற்றி தேடினான்…

விஜய்யோ, “மாமா பக்கத்தில இருக்கான்” என்று சொல்ல, “அப்பாடா அவன் கண்ணுல நான் பட்டுட கூடாது” என்றான் அர்ஜுன்…

“டேய் ஒரு அப்பா போல பிகேவ் பண்ணுடா” என்றான் ஜீவிதன்…

“நீ பேசுவ மச்சி… உன் பையன் அவ்ளோ சமத்து, எள்ளுன்னா எண்ணையா நிற்பான், இவனை ஒரு நாளைக்கு வீட்ல வச்சுப் பாரு, அப்போ தெரியும்… என்னை தேடாதீங்கன்னு எழுதி வச்சுட்டு போலீஸ்காரனான உன்னையே ஓட வைப்பான்” என்று சொல்ல, “உன்னை போல தானே டா, உன் பையன் இருப்பான்” என்றான் கஜன் சிரித்துக் கொண்டே…

அர்ஜுனோ, “என் அப்பாவை நினச்சு உண்மையாவே இப்போ ரொம்ப வருத்தமா இருக்கு, அந்த மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பார்” என்று சொல்ல, விஜய்யோ சத்தமாக சிரித்துக் கொண்டே, அர்ஜுனின் தோளில் கையை போட்டுக் கொண்டான்…

இதே சமயம், தாலி கட்டும் நேரமும் நெருங்கி விட்டது. 

நவநீதன்  இன்னுமே அவளைப் பார்க்கவில்லை… 

 துளசி கொடுத்து விட்டு சென்ற கவர் இன்னுமே பிரிக்காமல் அவன் அறைக்குள் கிடக்கின்றது…  அதையாவது பார்த்து இருக்கலாம் என்று இப்போது அவனுக்கு தோன்றியது. 

இனி அவள் தான் அவன் எதிர்காலம்… தடுமாறிக் கொண்டே இருந்து பயன் இல்லை… பிங்க் நிற புடவை அணிந்து இருக்கின்றாள் என்று கடைக்கண் பார்வை உணர்த்தியது…

‘தாலி கட்ட முதலாவது பொண்ண பார்க்கலாம்’ என்று நினைத்தபடி கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன் மெதுவாக பக்கவாட்டாக திரும்பினான். 

அவள் மனதிலும் அதே எண்ணங்கள் தான். இப்பொது தான் அவனையே பார்க்கப் போகின்றாள். 

அதே கணம் அவளும் திரும்பினாள். 

இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிய கணத்தில் இருவருக்கும் மூச்சே நின்று விட்டது. 

விழிகள் கீழே விழுந்து விடும் அளவுக்கு விரிந்து கொண்டன… 

இருவரின் மூளைக்குள்ளும் சில வார்த்தைகள் ஓடிக் கொண்டு இருந்தன.

‘உனக்கென்ன பெரிய பேரழகின்னு நினைப்பாடி?? உன்னை விட சூப்பர் பிகரை கல்யாணம் பண்ணி காட்டுறேன் டி…  த்ரிஷா இல்லன்னா திவ்யா” என்று அவன் சொன்னதும் , 

“போடா போடா பொறுக்கிப் பயலே… நீ இல்லன்னா மூலைல உட்கார்ந்து அழுவேன்னு நினைச்சியா?? உன்னை விட ஹாண்ட்ஸம் ஆஹ் ஒருத்தனை கல்யாணம் பண்ணி என் வாட்ஸ் அப் டி பி ஆஹ் வைக்கிறேன்..அத பார்த்து நீ ஒப்பாரி வை” என்று அவள் சொன்னதும் நினைவுக்கு வர சட்டென இருவரும் வேகமாக முகத்தை முன்னோக்கி திருப்பி இருந்தார்கள்… 

இப்பொது இருவருக்குமே குப்பென்று வியர்த்து விட்டது…

என்ன உணர்வென்று தெரியவில்லை…

ஒருங்கே, பயமும், பதட்டமும் வந்து சேர, ஏதோ ஒரு பாரம் இறங்கிய உணர்வும் வந்து சேர்ந்தது…

கண நேரம் தான் பார்த்து இருப்பார்கள்…

ஐயர் தாலியையும் நவநீதன் கையில் கொடுத்து விட்டார்… 

‘இவ பேர் தனிஷாவா?’ என்று அவன் நினைக்க, ‘இவன் பெயர் நவநீதனா?’ என்று அவள் நினைத்துக் கொள்ள, “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று ஐயர் சொல்ல, அவனோ கையில் இருந்த தாலியை பார்த்து விட்டு அவளைப் பார்த்தான்…

தலையை குனிந்தபடி அமர்ந்து இருந்தாள்.

அவளுடனான வாழ்க்கை இலகுவாக இருக்காது என்று அவனுக்கு தெரியும்…

அதே சமயம்  அவளை இழக்கவும் அவன் தயாராக இல்லை…

தாலியை அவள் கழுத்தில் கட்டி இரு முடிச்சுக்களை இட  மூன்றாவது முடிச்சை ராகவி இட்டாள்.

அந்த கணம், கண்களை மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை விட்டாள் தனிஷா…

இருவருக்கும் பழைய நினைவுகள் தான் இக்கணம் சுழல ஆரம்பித்து இருந்தன…
 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top