அத்தியாயம் 22

அடுத்த நாள் இருவரும் எழுந்த நேரம் மணி பதினொன்று…

வெளியே சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது…

மெஹெந்தி நிகழ்வு அன்று மாலை மண்டபத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்…

அதற்கு தான் வீடே தயாராகிக் கொண்டு இருந்தது…

நவநீதனின் வெற்று மார்பில் படுத்து இருந்த தனிஷாவோ, “இன்னைக்கு என்ன கலர் ட்ரெஸ் நவா?” என்று கேட்க, “உன் பிங்க் கலர் ட்ரெஸ்ஸுக்கு மேட்ச் ஆஹ் எனக்கும் ஒரு பிங்க் ஷேர்ட் எடுத்து கொடுத்தியே, அது தான்” என்றான்…

“பிங்க் கலர் உங்களுக்கு செம்ம அழகா இருக்கும்” என்று சொல்ல, “கேர்ள்ஸுக்கு தான் டி அது நல்லா இருக்கும்” என்றான் அவள் முதுகை வருடிக் கொண்டே…

“பேபீஸுக்கும் அது நல்லா தான் இருக்கு, நீங்க தான் பேபி ஆச்சே” என்று சொல்ல, “அது சரி, உன் கிட்ட நான் பேபி தான்” என்று என்னவோ சொல்ல வர, எட்டி அவன் வாயை கையினால் மூடியவள், “புரிஞ்சிடுச்சு, சென்சார் பண்ணுற அளவுக்கு பேசாதீங்க” என்று சொன்னவள், எழுந்து கொள்ள, அவனும் எழுந்து கொண்டான்…

அதனை தொடர்ந்து குளித்து விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்…

அங்கே அர்ஜுனும் கஜனும் விஜய்யும் அப்போது தான் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்…

“இப்போ தான் நீங்களும் சாப்பிடுறீங்களா?” என்று கேட்க, “பேசுவடா பேசுவ, நாங்க தூங்க வேணாமா அப்போ? நீ முழிச்சு இருந்தது கூட நியாயம், எலி காயுதுன்னு என்னவோ சேர்ந்து காயுற போல, நாங்களும் காய்ஞ்சோமே நேத்து” என்று அர்ஜுன் சொல்ல, தனிஷாவுக்கு வெட்கமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது…

அங்கே வந்த வந்தனாவோ, “அப்படி எங்க டா அழைச்சுட்டு போன?” என்று கேட்க, நவநீதனும், “சும்மா ஊர் சுத்தினோம் அவ்ளோ தான்” என்றான்…

விஜய் குரலை செருமிக் கொண்டான்…

கஜனோ, “விஜய்க்கு தெரிஞ்சிருக்கு போல” என்று சொல்ல, “ஐயோ இல்ல மச்சான்” என்றான்.

நவநீதனின் விழிகள் விஜய்யில் யோசனையாக படிய, “என்னடா?” என்று கேட்டான் விஜய்…

நவநீதனோ, “ஒன்னும் இல்லையே” என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது, “எவன் டா அது, இரவு பம்ப்பை திறந்து விட்டு மூடாம வந்தது… இப்படியா தண்ணிய அநியாயம் பண்ணுறது? யார்னு விசாரிச்சியா? எவன்னு தெரியட்டும்… கர்லா கட்டையை எடுத்து மண்டைலயே போடுறேன்” என்று சக்திவேல் தயாளனுடன் பேசிக் கொண்டு இருந்தது காதில் விழ, நவநீதனின் விழிகள் பிதுங்கிக் கொள்ள, தனிஷாவோ, ‘நாசமா போச்சு’ என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

விஜய் அதனைக் கேட்டு சத்தமாக சிரித்துக் கொள்ள, கஜனுக்கு விளங்கி விட்டது… 

“அப்பா, கர்லா கட்டையை எடுத்துட்டு வாங்க, இங்க தான் அநியாயம் பண்ணுனவன் இருக்கான்” என்று சொல்ல, நவநீதனோ, “யாரா இருக்கும்?” என்று தெரியாத போலவே கேட்டான்…

அர்ஜுனோ, “அடப்பாவி, உனக்கு குளிக்க நேரம் காலமே இல்லையா, அந்த மழைக்குள்ள அந்த குளிர்ல போய் குளிச்சு இருக்கியே…” என்று சொல்ல, “மச்சான், நான் இல்ல” என்றான் நவநீதன்…

தனிஷாவோ, “நேத்து மூடலையா நவா” என்று அவன் காதுக்குள் கேட்க, அவனோ, “மறந்துட்டேன் டி” என்றான்…

சக்திவேலோ, “யாருடா அது?” என்று கேட்க, சாப்பிட்டுக் கொண்டு இருந்த கஜனோ, “உங்க சீமந்த புத்திரன் தான்… அந்த இரவுல போய் குளிச்சிட்டு வந்திருக்கார்” என்று சொல்ல, சக்திவேலோ, “அங்கேயேடா போன? அதுக்குள்ள பாம்பு எல்லாம் கிடக்கு, நேத்து ஏதும் ஆகி இருந்தா?” என்று திட்டி விட, “பாம்பா?” என்று கேட்ட தனிஷாவுக்கு விழிகள் கீழே விழுந்து விடும் போல விரிந்து கொள்ள, வந்தனாவோ, “முடிஞ்சா இன்னைக்கு அழைச்சுட்டு போ பாப்போம்… தனிஷா வர்றாளான்னு நாங்களும் பார்க்கணும்” என்று சொன்னாள்.

“ஐயோ, அண்ணி, இதெல்லாம் வாய்ப்பே இல்லை… இப்படி எல்லாம் தெரிஞ்சு இருந்தா நான் போயே இருக்க மாட்டேன், கொஞ்சத்துக்குள்ள உசிர் தப்பிடுச்சு” என்றவளோ, நவநீதனிடம், “அதுக்குள்ள பாம்பு இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்க, “ஒரே இல்லை, சில நேரம் வரும்” என்றான் அவன்…

அவனை முறைத்த தனிஷாவோ, “அடப்பாவி, அப்போ என்னை போட்டு தள்ளவா கூட்டி போனீங்க, அப்படியே, இன்னொரு கல்யாணம் பண்ணுற ஐடியாவா?” என்று கேட்டு, அவனுக்கு கிள்ளி விட, “அப்படி தான், இன்னும் ரெண்டு கிள்ளு சேர்த்து கிள்ளு, இவனால என் புருஷன் பாவம்” என்றாள் ராகவி…

“அப்படியே புருஷன் மேல பாசம் கொட்டுதோ?” என்று நவநீதன் கலாய்க்க, “என் வாயை கிளறாத? உனக்காக ஒருத்தர் கிட்டயும் சொல்லாம இருக்கேன்” என்றாள்.

நவநீதனுக்கு புரிந்து விட்டது.

“உங்களுக்கு உளறி வைக்க ஆளே கிடைக்கலையா? அவ ஒரு ஓட்டை ரேடியோ” என்று அர்ஜுனிடம் சொல்ல, “நான் சொல்லல்ல டா, அவளே கண்டு பிடிச்சா” என்றான்…

“என்னடா விஷயம்” என்று கஜன் கேட்க, “அண்ணா” என்று ராகவி ஆரம்பிக்க, “ஐயோ என் செல்ல ராகவி, வாயை திறக்காதம்மா” என்றான் நவநீதன்…

ராகவி சிரித்துக் கொண்டே, “அப்புறம் சொல்லுறேன்” என்று கஜனிடம் சொல்ல, நவநீதனோ, “இவ கிட்ட சொன்னதுக்கு, நீங்க ஒரு ஸ்பீக்கர் வாங்கி ஊரெல்லாம் அனவுன்ஸ் பண்ணி இருக்கலாம்” என்று அர்ஜுனிடம் சொல்ல, “ஃப்ரீயா விடுடா” என்று சொல்லி அவன் தோள் தட்டி சிரித்துக் கொண்டான் அர்ஜுன்…

அதனை தொடர்ந்து எல்லோரும் மஹேந்தி நிகழ்வுக்கு ஆயத்தமாகி விட்டார்கள்…

மண்டபத்தில் ஊதா நிற லேஹங்கே அணிந்து அமர்ந்து இருந்த ஹன்சிகாவுக்கு மஹிந்தி போட்டுக் கொண்டு இருக்க, எல்லோரும் சுற்றி அமர்ந்து மெஹெந்தி போட்டபடி இருந்தார்கள்…

அர்ஜுனோ கஜனிடம், “நம்ம ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்க, அவனும், “ம்ம், எல்லாரும் சர்ப்ரைஸ் ஆகிடுவாங்க” என்று சொன்னான்…

ராம்குமாரோ, “நான் பின்னாடி நிக்கிறேன் டா” என்று சொல்ல, “ராம் அப்படி எல்லாம் சொல்ல படாது” என்றான் விஜய்…

எல்லோரும் வேஷ்டி மற்றும் ஷேர்ட் தான் அணிந்து இருந்தார்கள்…

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறம்…

கஜன் மெரூன்  நிறம், அர்ஜுன் வழக்கம் போல கருப்பு நிறம்… ராம்குமார் மஞ்சள் நிறம்… 

ஜீவிதன் நீல நிறம், விஜய் பச்சை நிறம், நவநீதன் பிங்க் நிறம். கேசவன் ப்ரவுன் நிறம்.  மற்றும் தனேஷ்வரனோ ஊதா நிறம்… 

“அப்பா, நான் தான் முன்னாடி” என்று சொல்லிக் கொண்டே, நடுவில் சென்று நின்று கொண்டான் ஆரண்யன்…

அவனுக்கு பின்னுக்கு எல்லோரும் வரிசையாக நின்று இருக்க, பல்லவியோ, “போர்த்தீஸ் விளம்பரம் போல, எல்லோரும் லைன்ல நிக்குறத பாருங்களேன்” என்றாள்.

“ஆமா பல்லவி… பேசாம அட்வெர்டைஸ்மென்டுக்கு எல்லாரையும் அனுப்பிடலாம்” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, ஆரண்யனோ, “உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ்” என்றான். 

“அப்படி என்ன சர்ப்ரைஸ்?” என்று நேத்ரா கேட்க, கஜனோ, “யாழிம்மா” என்று கையை காட்ட, “அப்பா டன்” என்று அவளும் பாட்டை செய்தாள்.

“எண்ணமே ஏன் உன்னால

உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால

வேந்து செவந்து புண்ணாக

 

 ஏதோ நானும் உளற

கொஞ்சம் காதல் வளர

உள்ள வெட்கம் வளர

அவ வந்தா தேடியே

 

 தன்ன நேரம் நிக்குது

மோகம் சொக்குது

வார்த்தை திக்குதம்மா

நெஞ்சில் பூட்டி வெச்சத

வந்து ஒடைச்சிட்டம்மா” 

 

என்று பாட்டு சத்தமாக ஒலிக்க, எல்லோரும் சேர்ந்து ஆடவே ஆரம்பித்து விட்டார்கள்…

அனைவருக்குமே அதிர்ச்சி…

வாயை பிளந்து கொண்டார்கள்…

துளசியோ, “மச்சான், நீங்களும் போய் ஆடுங்க” என்று சொல்ல, “சும்மா இருடி” என்றார் அவர்.

பார்த்தீபனோ, “ஆரண்யனை பாரு பைரவி செமயா ஆடுறான் ல” என்று சொல்ல, “ம்ம் கலக்குறான்” என்றார்  அவர்…

பல்லவிக்கு எல்லாம் நம்பவே முடியவில்லை…

அர்ஜுன் மற்றும் ஜீவிதன் ஆடுவார்கள்  என்று தெரியும்…

நவநீதன், தனேஷ்வர் ஆடுவது எல்லாம் கூட ஆச்சரியம் இல்லை…

ஆனால் கஜன், விஜய், ராம்குமார் எல்லாம் அவள் எதிர்பார்க்கவே இல்லை.

வாயில் அதிர்ந்து கையை வைத்துக் கொண்டவளுக்கு சிரிப்பு வேறு…

சந்தோசம் வேறு…

ராகவியோ, “அண்ணி, அண்ணாவுக்கு ஆட வரும்னு இன்னைக்கு தான் தெரியும்” என்று சொல்ல, “எனக்கும் தான் ராகவி…” என்று சொல்ல, அவளோ, “நானும் போறேன்” என்று சொல்லிக் கொண்டே, மருதாணி வைத்த பாதியில் எழுந்தவள் அர்ஜுன் அருகேயும் ஆரண்யன் அருகேயும் சேர்த்து ஆட ஆரம்பித்து விட்டாள்.

குழந்தைகள் எல்லோரும் கை தட்டி துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்…

தனிஷாவும், “நானும் நானும்” என்று சொல்லிக் கொண்டே, எழுந்து ஓடிச் சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள, வந்தனாவோ, “அது விஜய் தானா அண்ணி?” என்று ஆச்சரியமாக கேட்டாள் சுகானாவிடம்…

“உன் ராம் அண்ணனை பாரு, எனக்கு மயக்கமே வருது” என்று சொல்ல, இருவரும் சத்தமாக சிரித்துக் கொண்டார்கள்…

நேத்ராவோ, “ஜீவிக்கு ஆட வருமா என்ன?” என்று பல்லவியிடம் கேட்க, “அவன் செம்ம டான்சர், அர்ஜுனும் தான்… ஆனா உன் மாமா எனக்கே ஆச்சரியம் தான்” என்றாள்.

நேத்ராவோ, “எனக்கும் தான் அக்கா” என்று சொல்லிக் கொண்டே, வாயை பிளந்து அவர்களை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். 

எல்லோரும் ஆடுவதை பார்த்து ஹன்சிகாவுக்கு இருப்பு கொள்ளவே இல்லை…

எழுந்து கொள்ள முயல, கீர்த்தனாவோ, “இப்போ உனக்கு இது தேவையா?” என்று திட்டி விட்டு அவள் அருகே அமர்ந்து கொள்ள, “கை கால் சும்மா இருக்க மாட்டேங்குதே” என்று சிணுங்கிக் கொண்டே, எல்லோரையும் ரசித்தபடி அமர்ந்து இருந்தாள் அவள்…

வீரராகவனோ, “செம்ம ஃபேமிலி ல, அந்த அர்ஜுன் ரொம்ப ஆக்டிவ் அண்ட் ஹைப்பர், எனக்கு அந்த பையன ரொம்ப பிடிச்சு இருக்கு…” என்று அக்ஷயாவிடம் சொல்ல, அவளும், “அவனை போலவே அவன் பையனும், எவ்ளோ செமயா ஆடுறான் பாருங்க” என்று சொன்னார்.

அதனை தொடர்ந்து, கஜனும், நவநீதனும், ராகவியும் சேர்ந்து சக்திவேலை இழுத்து வந்தார்கள்…

“டேய் விடுங்கடா” என்று சொன்ன சக்திவேலுக்கு சிரிப்பு ஒரு பக்கம்…

“மாமா, ஈஸி ஸ்டெப் நான் சொல்லி தர்றேன்” என்று அர்ஜுன் சொல்ல, துளசியோ, “மச்சான் ஆடுங்க” என்று சத்தமாக சொன்னார்.

“இவ ஒருத்தி” என்று சக்திவேல் சொல்ல, “தாத்தா ஆடுங்க” என்று அவன் கையை யாழினி பிடித்துக் கொண்டே

ஆட, அவளுடன் சேர்ந்து ஆடினார் சக்திவேல்.

“நாங்க சொல்லி ஆடவே இல்லை, பேத்தி சொன்னதும் பாருங்களேன்” என்று நவநீதன் சொல்ல, கஜன் விசிலடித்துக் கொள்ள, எல்லோரும் கையை தட்டிக் கொண்டார்கள்…

சந்தோஷமான தருணம்…

பல்லவியின் விழிகள் கஜனில் படிந்து இருக்க, அவனோ அவளை பார்த்து, விழிகளை உயர்த்த, அவளோ ஒற்றைக் கண்ணை அடித்துக் கொண்டே இதழ் பிரித்து சிரித்துக் கொள்ள, அவளும் ஒற்றைக் கண்ணை அடித்து சிரித்துக் கொண்டான்…

எல்லோரும் குழந்தைகளுடன் குழந்தைகளாக இசை ஆட்டம் என்று ஒன்றிணைந்து இருந்தார்கள்…

அதனை தொடர்ந்து சாப்பிட்டார்கள்…

கஜன் தான் பல்லவிக்கு ஊட்டிக் கொண்டு இருந்தான்…

அவன் அருகே இருந்த யாழினியோ யாழினியனுக்கும் குழலினியனுக்கும் ஊட்டிக் கொண்டு இருந்தாள். 

பல்லவியோ, “செமயா ஆடுறீங்க கஜன்” என்று சொல்ல. “உன் தம்பி தான் டி கோரியோக்ராஃபர்” என்று சொன்னான்…

அவளும் சிரித்துக் கொண்டே, “அவன் ஸ்கூல் ல எல்லாம் நிறைய கான்செர்ட் போயிருக்கான்… படிப்பை தவிர எல்லாமே வரும் அவனுக்கு” என்று சொல்ல, கஜனோ அவனை பார்க்க, அவன் ராகவியுடன் சிரித்து பேசிக் கொண்டே அமர்ந்து இருந்தான்…

அவனைப் பார்த்து விட்டு பல்லவியை பார்த்தவன், “அவனை புரிஞ்சுக்கலன்னா, அவன் வில்லன் தான்… ஆனா உண்மையாவே உன் தம்பி கியூட் தான்…” என்று சொல்ல, “மச்சானை சைட் அடிக்கிற ஒரே ஆள் நீங்க தான்” என்று சொன்னாள் பல்லவி சிரித்துக் கொண்டே…

“அதுல என்னடி தப்பு, அவனை உண்மையாவே நான் ரசிக்கிறேன்… அவன் இருந்தாலே அந்த இடம் கல கலன்னு ஆயிடுதுல்ல” என்று சொல்ல, “அது உண்மை தான்… அவனை போல ஒருத்தன் வருவான் அடுத்த ஜெனெரேஷனுக்கு” என்று சொல்லி அங்கே சிறு வாண்டுகள் நடுவே நாட்டாமை செய்து கொண்டு இருந்த ஆரண்யனை கண்களால் காட்டினாள்.

“சாருக்கு ரோஜா பூ டெக்கரேஷன் வேணுமாமே” என்று கஜன் சிரித்துக் கொண்டே கேட்க, “ஆமா அது வேற லெவல் ஃபன்” என்று சொல்லி சிரித்தாள் பல்லவி…

இதே சமயம் வந்தனவோ, “மாமா, கலக்கிட்டீங்க போங்க, உங்களுக்குள்ள இப்படி ஒரு மைக்கல் ஜாக்சன் இருக்காருன்னு இன்னைக்கு தான் எனக்கு தெரியும்” என்று சொல்ல, “கலாய்க்கிற பார்த்தியா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் விஜய்…

நேத்ராவோ ஜீவிதனிடம் “நீங்க டான்சர் ஆஹ் என்ன?” என்று கேட்க, “பார்க்க அப்படியா தெரியுது?” என்று கேட்டான் அவன்…

அவளோ, “ஆமா, எனக்கு இத்தனை நாள் ஆடிக் காட்டவே இல்லையே” என்று சொல்ல, அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, “சுமாரான டான்சர் தான்… ஆனா நல்லா பாடுவேன்” என்றான்…

அவளோ வாயில் கையில் வைத்தவள், “சுமார் இப்படின்னா, பாட்டு?” என்று அதிர்ந்து கேட்க, “நைட் பாடி காட்டிடுறேன்” என்று கண் சிமிட்டி சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டாள். 

இதே சமயம், நவநீதன் அருகே வந்த கேசவனோ, “டேய் மச்சி” என்றான்.

“என்னடா?” என்று அவன் கேட்க, “நம்ம ஆள் வந்திருக்கு, பார்த்து ஏதாவது பண்ணி விடலாமே” என்று அங்கே சுகானவுடன் பேசிக் கொண்டு இருந்த சுகன்யாவை கண்களால் காட்ட, அவனை ஒரு மார்க்கமாக பார்த்த நவநீதனோ, “ஜாதகம் பொருந்திடுச்சு, பொண்ணுக்கும் உன்னை பிடிச்சு போச்சு, எப்போ நிச்சயம் பண்ணலாம்னு அத்தையும் சுகன்யாவோட அம்மாவும் பேசிட்டு இருக்காங்க, நீ என்னடா இப்படி இருக்க?” என்று கேட்க, கேசவனுக்கு அதிர்ச்சி…

“டேய், சொல்லவே இல்லையே டா” என்று அவன் சொல்ல, நவநீதனோ, “உனக்கு தெரிஞ்சு இருக்கும்னு நான் நினச்சேன்” என்றான்…

இதே சமயம் அந்த வழியால் வந்த அவர்கள் சொந்தகாரப் பையனோ, “கேசவன், அடுத்த கல்யாணம் போல” என்று சொல்ல, “அடப்பாவி, என்னை தவிர எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு, உரியவனுக்கு யாருமே சொல்லவே இல்லை, ச்சை” என்றபடி சுகன்யாவை நோக்கி செல்ல, “மச்சி, இனி நான் கண்ணுக்கு தெரிவேனா?” என்று கேட்டான் நவநீதன்…

“கஷ்டம் தான்” என்று அவனும் சிரித்தபடி சொல்லிக் கொண்டே சுகன்யா அருகே வர, அவ்விடம் நின்ற சுகானாவோ, “கேசவன், அப்போ நான் தள்ளி போகட்டுமா?” என்று கேட்க, சுகன்யா இதழ்களுக்குள் சிரித்துக் கொள்ள, கேசவனோ, “ஐயோ இல்ல” என்றான்…

“சரி சரி, நீங்க துரத்த முதலே நான் கிளம்புறேன்” என்று அவள் நகர்ந்து விட, கேசவனோ, “ஹாய்” என்றான்.

சுகன்யா மென் சிரிப்புடன், “அழகா ஆடுறீங்க” என்றாள்.

அவனோ, “நீங்க ஆடலையே” என்று சொல்ல, “எனக்கு உங்க அளவுக்கு வராது” என்றாள்.

“கல்யாணத்துக்கு அப்புறம், நான் கத்து கொடுக்கிறேன்” என்று கேசவன் சொல்ல, அவளோ சிரிக்க ஆரம்பித்து விட, “பொண்ணு குலுங்கி குலுங்கி சிரிக்கிற அளவுக்கு என்னடா சொன்ன?” என்று தூரத்தில் இருந்து கேட்டான் அர்ஜுன்.

“ஐயோ அண்ணா, உங்க கிட்டயா இது கண்ணுல பாடணும்?” என்று கேட்க, அர்ஜுனோ, “சுகா, என்னடி சொன்னான் அவன்?” என்று கேட்டான். 

“கல்யாணத்துக்கு அப்புறம் டான்ஸ் கத்து கொடுக்க போறாராம்” என்று அவளும் சத்தமாக சொல்ல, “அடப்பாவி, நீ தேற மாட்ட” என்று அர்ஜுன் சொல்ல, கேசவனுக்கு வெட்கம் தான்…

“நம்ம தனியா போய் பேசலாம், இங்க ஒரே டிஸ்டர்பன்ஸ்” என்று கேசவன் சொல்ல, சுகன்யாவோ, “மாமா நீங்க டிஸ்டர்பன்ஸ் ஆஹ்ம்” என்றாள் அர்ஜுனிடம் சுகன்யா…

கேசவனோ, “நாசமா போச்சு” என்று வாய் விட்டு புலம்ப, அர்ஜுனோ, “டேய், நானாடா டிஸ்டர்பன்ஸ்?” என்று கேட்க, “தெரியாம சொல்லிட்டேன் அண்ணா” என்று அவன் சொல்ல, “சும்மா அவங்கள படுத்தி எடுக்காதீங்க” என்று சிரித்தபடி ராகவி சொன்னான்.

“சரிடா பிழைச்சு போ, என் பொண்டாட்டி சொன்னதுக்காக விடுறேன்” என்று அர்ஜுன் சொல்ல, “ரொம்ப தேங்க்ஸ்” என்று சொன்ன கேசவனும் சுகன்யாவை அழைத்துக் கொண்டே ஒரு ஓரமாக சென்று விட்டான்.

அதனை தொடர்ந்து மெஹந்தி நிகழ்வும் முற்றுப் பெற்று இருக்க, அனைவரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்…

அடுத்த நாள் தனேஷ்வர் மற்றும் ஹன்சிகாவின் கல்யாண களையுடன் அந்த நாளும் அழகாக புலர்ந்தது…
 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top