மித்ரன், ஆரியன் சொன்னதைக் கேட்டு ருத்ரனைப் பார்த்தான். ருத்ரனும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ ஆரியனிடம் கேட்க நினைத்து ருத்ரன் முன்னேற, அதற்குள் ஆரியன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதும், யஷ்வியின் அருகில் வந்த ருத்ரன்,
“என்னடி நடக்குது இங்க?” என்று கேட்டான்.
“எனக்கே தெரியலடா…” என்று அவள் பாவமாகச் சொன்னதைக் கேட்டதும், ருத்ரனும் மித்ரனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆரியன் யஷ்வியின் அறைக்கு வந்தான்.
அவனைக் கண்டதும், இனம் புரியாத பயத்தில் யஷ்வி எழுந்து நின்றாள்.
அவள் அருகில் வந்தவன்,
“உன் பெரியப்பா நாளைக்கு இங்க வராரு… தயாரா இரு,” என்றான்.
அவளோ அவனை நிமிர்ந்துகூட பார்க்காமல், தலைகுனிந்தபடியே நின்றிருந்தாள்.
ஆரியன் இன்னும் அவளருகில் நெருங்கி, தன் இரு கைகளாலும் அவள் கன்னங்களை மெதுவாகப் பற்றித் தலையை நிமிர்த்தினான்.
நேருக்கு நேர் அவள் கண்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினான்.
“நான் இதை உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும். ஆனா அதுக்கான நேரமே கிடைக்கல. வீட்ல எல்லாமே அவசர அவசரமா நடந்துட்டு இருந்தது. என்ன பண்றதுன்னே தெரியல.
நான் மும்பை போயிருந்தப்ப உன் பெரியப்பாகிட்ட பேசினேன். உனக்குச் சம்மதம்னா, அவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டாரு.
அதுக்கப்புறம் இங்க வந்து உன்கிட்ட நேர்ல பேசலாம்னு நினைச்சேன். ஆனா நீ என் கண்ணுல படாமலேயே சுத்திட்டு இருந்த.
அதனால்தான் எல்லாருக்கும் முன்னாடி சொல்ல வேண்டியதாயிடுச்சு.”
அவன் இவ்வளவு பேசினாலும், யஷ்வி அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆரியன் மீண்டும் தொடர்ந்தான்.
“இப்போ என்னைப் பத்தி உன்கிட்ட உண்மையாவே சொல்றேன்.
உனக்கே தெரியும்… அன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்குள்ள நடந்த விஷயம். முதல் தடவை உன்னைப் பார்த்தப்போ நான் நடந்துகிட்ட விதம் ரொம்ப பெரிய தப்புதான். ஆனா நடந்ததை இப்போ மாத்த முடியாது.
நான் அப்படிப்பட்டவன்தான். அதை இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். இவ்வளவு நாளும் அப்படித்தான் இருந்தேன்.
ஆனா இனிமேல் அப்படி இருக்க மாட்டேன்.
உன்னைத் தவிர வேற எந்தப் பொண்ணோட நிழலைக்கூட நான் தொட மாட்டேன்.
என்னை நம்பு.”
சிறிது நேரம் அவளை ஆழமாகப் பார்த்தவன்,
“நீ இதை வீட்ல சொல்லணும்னு நினைச்சாலும் சொல்லிக்கோ. எனக்குப் பயமில்லை.
ஆனா இதனால நம்ம கல்யாணத்துக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது.
நான் ஏன் உன்னை இவ்வளவு காதலிக்கிறேன்னு எனக்கே தெரியல.
முதல்ல உன்னை அடிச்சேன்… கேவலமாப் பேசினேன்.
அதுக்கப்புறம் என் ஆபீஸ்ல நீ என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதப்போ… எனக்குள்ள ஏதோ ஒரு உணர்வு வந்துச்சு.
அது என்னன்னு இன்னைக்கும் எனக்குப் புரியல.
நிறையப் பொண்ணுங்களைப் பார்த்திருக்கேன்… பழகியிருக்கேன்… ஏன், அதுக்கும் மேலயும் போயிருக்கேன்.
ஆனா யார்கிட்டயும் எனக்கு இந்த மாதிரியான உணர்வு வந்ததே இல்லை.”
அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தவாறே,
“ஐ லவ் யூ, யஷ்வி!” என்றான்.
யஷ்வியின் கண்கள் கலங்கின.
அவள் அவனைப் பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.
அந்த அமைதி ஆரியனுக்குள் ஒருவிதத் தவிப்பை ஏற்படுத்தினாலும், அதே நேரத்தில் ஒரு சிறிய நிம்மதியையும் கொடுத்தது.
‘கல்யாணம் வேண்டாம்… உன்னைப் பிடிக்கல…’ என்று அவள் சொல்லவில்லையே என்ற எண்ணம் அவன் மனதை ஆறுதல் படுத்தியது.
மனதில் இருந்த அனைத்தையும் சொல்லிவிட்ட மகிழ்ச்சியில், ஆரியன் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் சென்றதும், யஷ்வி அப்படியே கட்டிலில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.
—
அதே சமயம், தன் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்து நந்திதா அழுதுகொண்டிருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்திருந்த மித்ரன் மெதுவாகச் சமாதானப்படுத்த முயன்றான்.
“அக்கா… அழாதே. அவங்க எதையாவது பேசிட்டுப் போகட்டும். வீட்ல மத்தவங்க யாரும் உன்னை எதுவும் சொல்லலையே?” என்றான்.
அவனை முறைத்துப் பார்த்த நந்திதா,
“என்னை எவ்வளவு கேவலமா பேசினாங்க தெரியுமா? இதெல்லாம் எனக்கு தேவையா?
எல்லாம் உன்னாலதான்!
அப்பாவோட சேர்ந்து நானும் செத்துப் போயிருக்கலாம்…” என்று வெடித்துக் கதறினாள்.
அப்போது அறைக்குள் வந்த ருத்ரன், மித்ரனைப் பார்த்து,
“நீ வெளியே போ,” என்றான்.
மித்ரன் ஏதோ சொல்ல வர,
“சொன்னதைச் செய்… நீ கிளம்பு,” என்று ருத்ரன் அழுத்தமாகக் கூறினான்.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், மித்ரன் அமைதியாக வெளியேறினான்.
மித்ரன் சென்றதும், ருத்ரன் நந்திதாவின் அருகில் அமர முயன்றான்.
ஆனால் அவன் அமர்வதற்குள், நந்திதா சட்டென்று எழுந்து ஜன்னல் அருகே சென்று நின்றாள்.
ருத்ரனும் அவள் பின்னாலேயே சென்றான்.
அவள் அங்கிருந்து நகர முயன்றபோது, சட்டென்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.
“இப்போ என்ன?
நீ ஒவ்வொரு இடமா ஓடிட்டே இருப்பியா?
நானும் உன் பின்னாடியே வரணுமா?” என்று சற்றுக் கண்டிப்புடன் கேட்டான்.
நந்திதா திரும்பி அவனை முறைத்தாள்.
“ஏன் இப்படி முறைக்கிற?” என்று அவன் கேட்டான்.
“பின்ன முறைக்காம என்ன செய்வாங்க?
உங்களாலதான் இன்னைக்கு உங்க அத்தை என்னை அவ்வளவு கேவலமா பேசினாங்க.
இப்போ உங்களுக்குச் சந்தோஷமா?
இதைத்தானே எதிர்பார்த்தீங்க?” என்று ஆத்திரமாகக் கேட்டாள்.
ருத்ரன் ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டு,
“லூசு மாதிரி பேசாத நந்திதா.
என் அத்தை பேசினதுக்கு அப்பவே நான் பதில் சொல்லிட்டேன்.
வீட்ல மத்தவங்க யாரும் உன்னை எதுவும் சொல்லாதப்போ, நீ ஏன் அதையே நினைச்சு கவலைப்படுற?
ஒருவேளை என் வீட்ல யாராவது உன்னைத் தப்பாப் பேசினா…
அடுத்த நிமிஷமே நாம ரெண்டு பேரும் இந்த வீட்டுல இருக்க மாட்டோம்.
என்னை நம்பு,” என்றான் உறுதியுடன்.
நந்திதா அமைதியாக நின்றாள்.
ருத்ரன் மெதுவாக அவள் கையைப் பிடித்து இழுத்து, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
நந்திதா அவனிடமிருந்து விலகத் திமிறினாள்.
ஆனால் அவன் பிடியைத் தளர்த்தவில்லை.
சிறிது நேரத்தில் அவள் அமைதியாகிவிட, ருத்ரன் மென்மையாகப் பேச ஆரம்பித்தான்.
“இங்க பாரு…
இப்போ வீட்ல உண்மையைச் சொல்லிட்டோம்னு, நீ உடனே என் கூட வாழணும்னு எந்த அவசியமும் இல்லை.
நம்ம கல்யாணத்தைப் பத்தி வீட்டுக்குத் தெளிவா சொல்லிட்டேன்… அவ்வளவுதான்.
உனக்கு நிறைய கால அவகாசம் இருக்கு.
உன் மனசு எப்போ என்னை முழுசா ஏத்துக்குதோ…
அப்போ நாம சேர்ந்து வாழலாம்.
அதுவரைக்கும் எந்தப் பயமும் வேண்டாம்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், அவள் முகத்தைப் பார்த்து மெதுவாகச் சிரித்தான்.
“இன்னொரு முக்கியமான விஷயம்…
எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்.
உன் கழுத்துல தாலி கட்டினதுக்கு அப்புறம் மட்டும் இல்ல…
அதுக்கு முன்னாடியே உன்னை எனக்குப் பிடிக்கும்.
‘நந்திதா மட்டும் உனக்கு அக்காவா இல்லாம தங்கச்சியா இருந்திருந்தா, நானே அவளைக் கல்யாணம் பண்ணிருப்பேன்’ன்னு மித்ரன்கிட்ட அடிக்கடி சொல்லுவேன்.”
அந்த வார்த்தையைக் கேட்டதும், அவன் அணைப்பிற்குள்ளேயே இருந்த நந்திதா ஆச்சரியத்துடன் தலைநிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
தொடரும்…