❤️அத்தியாயம் 《21》

“பொய் சொல்லல… உண்மையைத்தான் சொல்றேன். மித்ரனுக்கும் அது தெரியும். நான் விளையாட்டாச் சொன்னாலும், அவனுக்குப் புரிஞ்சிருக்கு. அதனால்தான் அன்னைக்கு என் கையில தாலியைக் கொடுத்து, உன் கழுத்துல கட்டச் சொன்னான்.

வயசுங்கிறது ஒரு விஷயமே இல்ல. நீ அதை நினைச்சு உன்னைக் குழப்பிக்காத. அப்படியே பார்த்தாலும் நமக்குள்ள ஒரு வயசு வித்தியாசம்கூட இல்லை. சொல்லப்போனா, என்னைவிட நீ ஒரு ஆறு, ஏழு மாசம் மூத்தவ. அவ்வளவுதான்.

என் அத்தை சொன்னாங்க, சொந்தக்காரங்க சொன்னாங்கன்னு எதையும் நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காத. இனி நம்ம வாழ்க்கையைப் பற்றித்தான் யோசிக்கணும்.

என் அத்தை எல்லாம் ஒரு ஆளே கிடையாது. அவங்க பொண்ணை இந்த வீட்டுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியலங்கிற கோபத்துலதான் அப்படிப் பேசிட்டாங்க.

மித்ரன் இன்னைக்கு சென்னை கிளம்புறான். நாளைக்கு உன் அம்மாவை இங்க கூட்டிட்டு வருவான். அவங்க வந்த பிறகு, அவங்க முன்னாடி இப்படி அழுதுட்டு இருக்காத.

ஏற்கனவே அவங்க ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. நீ பிடிக்காத மாதிரி ஏதாவது பேசினா, அவங்களுக்கு இன்னும் வருத்தமா இருக்கும்.

நான் மறுபடியும் சொல்றேன்… எல்லாரும் ஒத்துக்கிட்டாங்கன்னு உடனே நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறது இல்லை. நமக்காக நிறைய நேரம் இருக்கு,” என்று கூறிவிட்டு, ருத்ரன் அவளை விட்டு விலகி வெளியே சென்றான்.

 

ஜமுனாவின் வீட்டிலோ, சுஜித்ரா அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் கோபத்தில் உடைத்துத் தள்ளிக்கொண்டிருந்தாள்.

அவளுடைய அப்பா மெதுவாக,

“ஏம்மா… ஏன் இப்படி கோபப்படுற? கொஞ்சம் பொறுமையா இரு,” என்றார்.

அதைக் கேட்ட சுஜித்ரா ஆத்திரமாக,

“பொறுமையா இருக்கணுமா? இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல?

சின்ன வயசுல இருந்தே ‘அவரைத்தான் கட்டிக்கப்போற’ன்னு சொல்லி என் மனசுல ஆசையை வளர்த்துட்டு, இப்போ பொறுமையா இருக்கச் சொல்றீங்களே!

எனக்கு என்ன செய்வீங்களோ தெரியாது. எனக்கு ஆரியன் மாமாதான் வேணும்.

இல்லன்னா… நான் சாக மாட்டேன்… உங்க எல்லாரையும் கொன்னுடுவேன்!” என்று பேய் பிடித்தவளைப் போலக் கத்தினாள்.

தாரணிக்கும் கோபமும் கவலையும் இருந்தது. ஆனால், அவள் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

ஜமுனா அவள் அருகில் வந்து,

“நாம ஏன்டி சாகணும்? நம்மள இப்படி நம்ப வச்சு ஏமாத்துன அந்தக் குடும்பம்தான்டி சாகணும்!

எப்படி அந்தக் கல்யாணம் நடக்குதுன்னு நானும் பார்க்குறேன்,” என்றார்.

பிறகு தன் கணவரை நோக்கி,

“யோவ்… நீ இப்படியே இரு! ஒன்னுக்கும் உதவாத மனுஷன்!

முதல்ல உன் பெரியப்பா கிழவனுக்குப் போன் பண்ணி வரச் சொல்லு.

அந்த ஆளுதானே நம்ம ஜாதி சனத்துல ஏதாவது பிரச்சினைன்னா பஞ்சாயத்து பண்ணுவாரு?

அவரை வரச் சொல்லு.

நம்மள நம்ப வச்சு ஏமாத்துனதுக்கு இந்தக் குடும்பத்தையே ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்தணும்.

அந்த அசிங்கத்தைத் தாங்க முடியாம, அவங்களே வந்து என் பொண்ணைக் கட்டிக்கணும்!” என்று ஆத்திரமாகக் கூறினார்.

வேறு வழியில்லாமல், அவள் கணவர் யாருக்கோ தொலைபேசியில் அழைத்தார்.

 

அடுத்த நாள் மதியமே, நந்திதாவின் அம்மாவும், யஷ்வியின் பெரியப்பாவும் வந்துவிட்டார்கள்.

அவர்கள் வந்ததும், மொத்தக் குடும்பமும் ஹாலில் அமர்ந்து பேசத் தொடங்கினர்.

சக்கரவர்த்தி அமைதியாக அமர்ந்திருந்தார். காமாட்சிப் பாட்டிதான் பேச்சை ஆரம்பித்தார்.

“சரி… அவங்க விருப்பத்தைச் சொல்லிட்டாங்க.

யஷ்விக்கும் என் மூத்த பேரன் ஆரியனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல உங்களுக்கு என்ன சம்மதம்?” என்று யஷ்வியின் பெரியப்பாவிடம் கேட்டார்.

அதற்கு அவர் புன்னகையுடன்,

“ஆரியன் இதைப் பற்றி என்கிட்ட முன்னாடியே பேசிட்டான்ம்மா.

எனக்கு இதுல எந்த மறுப்பும் இல்லை.

அவ நல்லா இருந்தா… எனக்கு அதுவே போதும்,” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரின் மனதிலும் ஒரு நிம்மதி பரவியது.

உடனே வள்ளியம்மை,

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.

அவளை என் சொந்தப் பொண்ணு மாதிரி நான் பார்த்துப்பேன்,” என்று உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து காமாட்சிப் பாட்டி,

“சரி… அப்போ ரெண்டு ஜோடிக்கும் ஒரே நாள்ல கல்யாணத்தை வச்சிடுவோம்.

ருத்ரன் கல்யாணத்தையும் எல்லாருக்கும் சொல்லி, முறைப்படி செஞ்சிடலாம்,” என்றார்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் அந்த முடிவுக்கு சம்மதித்தனர்.

 

அதன்பிறகு, வீட்டில் கல்யாண வேலைகள் மும்முரமாக ஆரம்பமானது.

இரண்டு நாட்கள் கழித்து, சக்கரவர்த்தியின் வீட்டு வாசலில் இரண்டு, மூன்று கார்கள் வந்து நின்றன.

அந்த நேரத்தில், வீட்டில் ருத்ரன், ஆரியன், மித்ரன் ஆகிய மூவரைத் தவிர மற்ற அனைவரும் இருந்தனர்.

வேலைப்பளு அதிகமாக இருந்ததால், அவர்கள் மூவரும் வெளியே சென்றிருந்தனர்.

அப்போதுதான் ஜமுனா ஒரு பெரிய கூட்டத்தையே அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்தக் கூட்டத்தைக் கண்டதும், வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், அதை வெளிக்காட்டாமல் அவர்களை அமர வைத்துவிட்டு, வந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டனர்.

நிலைமையை உடனே புரிந்துகொண்ட மீனாட்சி, ரகசியமாக ஆரியனுக்குப் போன் செய்து,

“ஜமுனா அத்தை நிறைய பேரைக் கூட்டிட்டு வந்திருக்காங்க,” என்று தகவல் தெரிவித்தாள்.

ஆரியனும் உடனடியாக ருத்ரனையும் மித்ரனையும் அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.

 

இங்கே, ஜமுனாவின் கணவரின் பெரியப்பா பேச்சை ஆரம்பித்தார்.

“என்ன மச்சான்… என்ன இப்படி ஆயிடுச்சு?

நம்ம சொந்தங்கள் எல்லாருக்கும் தெரியும்… ஜமுனாவோட பொண்ணுங்கதான் இந்த வீட்டு மருமகளுங்கன்னு.

இப்போ என்னடான்னா, ஏதோ ரெண்டு பொண்ணுங்க வந்து, அவங்களைத்தான் கட்டிக்கப்போறேன்னு சொல்றாங்களாமே!

அப்போ ஜமுனா பொண்ணுங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்று அதிகாரத்துடன் கேட்டார்.

அதற்கு வீரன் சக்கரவர்த்தி அமைதியாக,

“இதுல நாங்க சொல்றதுக்கு எதுவும் இல்ல மச்சான்.

என் பேரன்களே அவங்க முடிவை எடுத்துட்டாங்க.

இனி அவங்க விருப்பப்படிதான் எல்லாமே நடக்கும்,” என்று கறாராகப் பதிலளித்தார்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top