❤️அத்தியாயம் 《22》

“என்ன இப்படிச் சொல்றீங்க? அந்தப் பொண்ணுங்க ரெண்டு பேரோட மனசைப் பத்தி யோசிச்சீங்களா?” என்று ஜமுனாவின் கணவரின் பெரியப்பா கேட்டார்.

அப்போதுதான் உள்ளே வந்த ஆரியன்,

“எங்களுக்கெல்லாம் மனசு இல்லையா தாத்தா?” என்று இடைமறித்துக் கேட்டான்.

அவனைத் திடீரென்று அங்கே பார்த்ததும், அங்கிருந்த அனைவருக்கும் ஒரு கணம் பதற்றம் ஏற்பட்டது.

நிலைமையைச் சமாளிக்க நினைத்த பெரியப்பா,

“இல்ல தம்பி… நான் அப்படிச் சொல்ல வரல…” என்று தயக்கத்துடன் கூறினார்.

ஆரியன் அவரை நேராகப் பார்த்து,

“தாத்தா… எங்க முடிவை நாங்க தெளிவா சொல்லிட்டோம். இதுக்கு மேல இதைப் பத்திப் பேச எதுவும் இல்லை.

இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்.

தயவுசெஞ்சு எல்லாரும் வந்து எங்க கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைங்க… அதுவே போதும்,” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு, மேலும் யாருக்கும் பேச வாய்ப்பளிக்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

வந்திருந்த உறவினர்கள் ஜமுனாவைப் பார்த்து,

“என்னம்மா இது? இதுக்கு மேல என்ன பேசச் சொல்ற?

அவங்களே விருப்பம் இல்லன்னு தெளிவா சொல்லிட்டாங்களே.

உன் பொண்ணுங்களுக்கு வேற நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்துக்கலாம்,” என்று கூறிவிட்டு ஒவ்வொருவராக வெளியேறினர்.

அவர்கள் சென்றதும், ஜமுனா கோபத்துடன் வீரன் சக்கரவர்த்தியைப் பார்த்து,

“இவங்களையாவது சமாளிச்சு அனுப்பியிருக்கலாம். ஆனா இதை இப்படியே விடமாட்டேன்.

என் பொண்ணுங்களுக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்!” என்று கத்திவிட்டு ஆத்திரமாக வெளியேறினார்.

அவர் சென்றதும், வீரன் சக்கரவர்த்தி தன் மகன்களை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றார்.

இதோ… கல்யாண நாளும் வந்துவிட்டது!

மணமேடையில் ஆரியனும் ருத்ரனும் மகிழ்ச்சியுடன் ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மீனாட்சி, யஷ்வியையும் நந்திதாவையும் மணமேடைக்கு அழைத்து வந்தாள்.

இருவரும் வந்து அமர்ந்ததும், ஐயர் தாலியை எடுத்துத் தட்டில் வைத்து, அதை மீனாட்சியிடம் கொடுத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரச் சொன்னார்.

மீனாட்சி தட்டை ஏந்திக்கொண்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுவந்து மீண்டும் ஐயரிடம் கொடுத்தாள்.

ஐயர் அந்த மங்கல நாண்களை எடுத்து ருத்ரனுக்கும் ஆரியனுக்கும் கொடுத்தார்.

இருவரும் இறைவனை மனதில் வேண்டிக்கொண்டு, நந்திதா மற்றும் யஷ்வியின் கழுத்தில் மங்களநாணை கட்டினார்கள்.

“மூணாவது முடிச்சை நான்தான் போடுவேன்!” என்று மீனாட்சி அடம்பிடித்தாள்.

அனைவரும் சிரித்துக்கொண்டிருக்க, அவளே மூன்றாவது முடிச்சைப் போட்டாள்.

அதன் மூலம் இரண்டு திருமணங்களும் இனிதே நிறைவடைந்தன.

யஷ்வியின் பெரியப்பாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி.

அவர் மனதிற்குள் கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டார்.

நந்திதாவின் அம்மாவும் கண்கள் கலங்க,

“நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்க பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருச்சு.

எப்பவும் அவ கூடவே இருந்து அவளைப் பார்த்துக்கோங்க…” என்று மனதிற்குள் தன் மறைந்த கணவரை நினைத்து வேண்டிக்கொண்டார்.

ஆறு மாதங்கள் கழித்து…

கல்யாணம் முடிந்து ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன.

யஷ்வியின் படிப்பு முடிய இன்னும் ஓராண்டு இருந்ததால், அவள் தன் பெரியப்பாவுடன் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டாள்.

படிப்பு முக்கியம் என்பதால், வீட்டில் இருந்தவர்களும் எந்தத் தடையும் சொல்லாமல் அவளை அனுப்பி வைத்தனர்.

ஆரியனும், யஷ்விக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, மனம் கனத்தபோதிலும் அவளது பிரிவை அமைதியாக ஏற்றுக்கொண்டான்.

மறுபுறம், ருத்ரனும் நந்திதாவும் ஒரே வீட்டில் வசித்தாலும், நந்திதா இன்னும் ருத்ரனை விட்டு மனதளவில் விலகியே இருந்தாள்.

ருத்ரனும் அவளை எந்த விஷயத்திலும் வற்புறுத்தாமல், அவளது மனமாற்றத்திற்காக பொறுமையாகக் காத்திருந்தான்.

அன்று மாலை…

ருத்ரனும் ஆரியனும் வீட்டிற்குள் வந்தனர்.

அவர்களை ஒன்றாகப் பார்த்த காமாட்சிப் பாட்டி மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“உங்க விருப்பப்படிதானே கல்யாணம் பண்ணி வச்சோம்?

கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது.

ஆனா நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்கீங்க?

ஒருத்தன் பொண்டாட்டிய படிக்க அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சிருக்கான்.

அதை நான் தப்புன்னு சொல்லல.

ஆனா நீயும் கூடப் போயிருக்கலாம்ல ஆரியன்?

அவ படிப்பு முடிஞ்சதும் கையோட கூட்டிட்டு வந்திருக்கலாம்.

அது இல்லாம, அந்தப் பொண்ணு அங்கேயும் நீ இங்கேயும் இருக்கிறது நல்லாவா இருக்கு?” என்று வருத்தத்துடன் கேட்டார்.

பிறகு ருத்ரனை நோக்கித் திரும்பி,

“அவன் தான் அப்படிப் பிரிஞ்சு இருக்கான்னா…

நீ பக்கத்துலயே பொண்டாட்டிய வச்சுக்கிட்டு ஏன் தள்ளி இருக்க?

என்னதான்டா நடக்குது உங்களுக்குள்ள?” என்று கேட்டார்.

ருத்ரன் சிரித்தபடி,

“பாட்டி… அது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்ல,” என்று மழுப்பினான்.

“பிரச்சனைதான்!

உங்க தாத்தா இன்னும் கோபமாத்தான் இருக்காரு.

உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் சீக்கிரமா ஒரு கொள்ளுப் பேரனையோ, கொள்ளுப் பேத்தியையோ பெத்துக் கொடுத்தாத்தான் அவர் மனசு குளிர்ந்து சமாதானமாவார்!” என்று பாட்டி பிடிவாதமாகச் சொன்னார்.

ஆரியன் சிரித்தபடி,

“உங்க புருஷன் சமாதானமாகணும்னா நாங்க புள்ள பெத்துக்கணுமா பாட்டி?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“ஆமாடா!

நீங்க பண்ண வேலைனாலதானே அவர் எல்லார்மேலும் கோபமா இருக்காரு?

அப்போ நீங்கதானே அவரைச் சமாதானப்படுத்தணும்!” என்று உடனே பதிலடி கொடுத்தார் பாட்டி.

அதைக் கேட்ட ருத்ரன் சிரித்தபடி,

“சரி பாட்டி…

உன் புருஷனைச் சமாதானப்படுத்த நாங்க புள்ள பெத்துத் தர்றோம்.

இப்போ சந்தோஷமா?” என்று அதே கேலியுடன் கேட்டான்.

“போதும்… போதும்!

அப்புறம் அன்னைக்கு ஒரு விஷயம் சொன்னேனே…

மறந்துட்டீங்களா?” என்று பாட்டி கேட்டார்.

“என்ன பாட்டி?” என்று ஆரியன் கேட்டான்.

“அதாண்டா…

மீனாவுக்கு உங்க தாத்தா ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்காரே!”

“ஓ… அதுவா?” என்று ருத்ரன் இழுத்தான்.

“என்னடா இழுக்குறீங்க?

உங்க கல்யாணம்தான் உங்க தாத்தா விருப்பம் இல்லாம நடந்துபோச்சு.

மீனா கல்யாணமாவது அவர் ஆசைப்பட்ட மாதிரி முறைப்படி நடக்கணும்.

அதை நீங்கதான் பார்த்துக்கணும்,” என்று பாட்டி உருக்கமாகச் சொன்னார்.

ஆரியன் மெதுவாகச் சிரித்தபடி,

“சரி பாட்டி… இப்போ யாரு வேணாம்னு சொன்னா?

மீனா முதல்ல அவ படிப்பை முடிச்சுட்டு வரட்டும்.

அப்புறம் அவ கல்யாணத்தைப் பற்றிப் பேசுவோம்,” என்றான்.

அதைச் சொல்லிவிட்டு, ஆரியனும் ருத்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தபடி அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top