❤️அத்தியாயம் 《23》

ருத்ரன் தன் அறைக்குள் நுழைந்தபோது, நந்திதா ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அவன் தன் லேப்டாப் பையை மேஜை மீது வைத்துவிட்டு, நேராகக் குளியலறைக்குள் சென்றான்.

நந்திதா புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவள் மனம் வேறெங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்தது.

குளித்துவிட்டு வெளியே வந்த ருத்ரனின் அருகே மெல்ல வந்த நந்திதா,

“நான் நாளைக்கு அம்மா வீட்டுக்குப் போகணும்…” என்றாள்.

அவன் புருவத்தை உயர்த்தி,

“ஏன்?” என்பது போல அவளைப் பார்த்தான்.

“மித்ரனுக்கு அம்மா ஏதோ ஒரு பொண்ணு பார்த்திருக்காங்களாம். அதைப் பத்திப் பேசி முடிக்கத்தான் போகணும்,” என்றாள்.

“அவன் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கானே?” என்று ருத்ரன் கேட்டான்.

“அவன் அப்படிச் சொன்னா அப்படியே விட்டுட முடியுமா?

அவன் வேலை, வேலைன்னு வெளியிலேயே சுத்திட்டு இருக்கான்.

அங்கே அம்மா மட்டும் தனியா இருக்காங்க.

அவங்களுக்கு ஒரு துணை வேண்டாமா?” என்று ஆதங்கத்துடன் கூறினாள்.

ருத்ரன் சிரித்துக்கொண்டே,

“அப்போ உங்க தம்பிக்கு நீங்க பொண்ணு தேடலை…

உங்க அம்மாவுக்குத் துணையைத் தேடுறீங்கன்னு சொல்லுங்க!” என்று நக்கலாகக் கேட்டான்.

“ஆமாம்!” என்று சலித்துக்கொண்டாள் நந்திதா.

“சரி… சரி… கோபப்படாத.

நாளைக்கு என்னால வர முடியாது. வேலை இருக்கு.

நீ தனியா போயிட்டு வர முடியுமா?” என்றான்.

“ம்ம்… சரி.”

“ஓகே. அப்போ நான் நாளைக்குச் சென்னைக்கு பிளைட் டிக்கெட் புக் பண்றேன்,” என்றான் ருத்ரன்.

சற்று அமைதியாக நின்ற நந்திதா, ஏதோ யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வையில் இருந்த தயக்கத்தை கவனித்தவன்,

“என்ன… ஏதோ சொல்லணும்னு நினைக்கிறே?

தயங்காம சொல்லு,” என்றான்.

“அது… மீனாவோட கல்யாணத்தைப் பத்திப் பேசணும்.”

ருத்ரனின் முகம் சற்றே மாறியது.

“ஏன் இப்போ எல்லாரும் அவ கல்யாணத்தைப் பத்தியே பேசுறீங்க?

என்ன அவசரம் இப்போ?” என்று கேட்டான்.

நந்திதா மெதுவாக,

“இல்லங்க…

நம்ம கல்யாணத்தால தாத்தா இன்னும் யார்கிட்டயும் சரியாப் பேசுறது இல்லை.

மாமாங்ககிட்ட கூட அவருக்குப் பேச்சுவார்த்தை இல்லை.

அத்தைங்க இதை நினைச்சு ரொம்பக் கவலைப்படுறாங்க.

இன்னைக்கு அவங்க பேசினதைக் கேட்டப்போ எனக்கும் கஷ்டமா இருந்துச்சு,” என்றாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“நீங்களும் ஆரியன் மாமாவும் உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான் தாத்தா கோபமா இருக்காரு.

இப்போ மீனாவுக்கு அவர் விருப்பப்படி கல்யாணம் நடந்தா, அவர் சந்தோஷப்படுவாரு.

குடும்பத்துல எல்லாரும் மறுபடியும் ஒண்ணா சேருவாங்கன்னு எனக்குத் தோணுது.”

அவள் சொல்வதைக் கேட்ட ருத்ரன் சற்று யோசித்துவிட்டு,

“அதுக்கு இப்போ நான் என்ன பண்ணணும்?” என்று கேட்டான்.

“நீங்க ஆரியன் மாமாகிட்ட பேசி, மீனா கல்யாணத்தை தாத்தா விருப்பப்படியே நடத்தி வைக்கச் சொல்லுங்க.”

“சரி… நான் நாளைக்கு அண்ணாகிட்ட பேசுறேன்,” என்று உறுதியளித்தான்.

“சரிங்க…

நான் கீழே போறேன். நீங்க சாப்பிட வாங்க,” என்று கூறிவிட்டு நந்திதா அறையை விட்டு வெளியேறினாள்.

அடுத்த நாள் காலையில், நந்திதாவை சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு ருத்ரன் அலுவலகத்திற்குச் சென்றான்.

வேலை முடிந்து கார் ஓட்டிக்கொண்டே வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, நந்திதாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு…

ஊருக்குப் போயிட்டுக் கூப்பிடச் சொன்னேன். ஏன் கால் பண்ணல?” என்று ருத்ரன் கேட்டான்.

“வந்ததுமே ரொம்ப டயர்டா இருந்தது.

அதான் அப்படியே தூங்கிட்டேன்.

மித்ரன் கிட்ட உங்ககிட்ட சொல்லச் சொன்னேனே…

அவன் சொல்லலையா?” என்று கேட்டாள்.

“அவன் சொன்னான்.

ஆனா நான் உன்னைத்தானே கூப்பிடச் சொன்னேன்?

சரி… இப்ப என்ன விஷயம்?” என்றான்.

“ஆரியன் மாமாகிட்ட பேசிட்டீங்களா?”

நந்திதா நேரடியாக விஷயத்திற்கு வந்ததும், ருத்ரனுக்குச் சலிப்பு ஏற்பட்டது.

“இல்ல… இன்னும் பேசல,” என்றான் சுருக்கமாக.

“உங்களுக்குக் கொஞ்சம் கூட அக்கறையே இல்லை,” என்று அவள் கோபமாகச் சொல்ல,

ருத்ரனுக்கும் கோபம் வந்தது.

“ஏண்டி… இப்ப எதுக்கு கத்துற?

பேசணும்னா நீயே போன் பண்ணிப் பேச வேண்டியதுதானே?

நானே வேலை முடிஞ்சு செம டென்ஷன்ல வந்துட்டு இருக்கேன்.

நீ இப்ப வந்து கல்யாண விஷயத்தைப் பத்தி மட்டும் கேக்குற.

புருஷனை விட்டுட்டுப் போனோமே…

அவன் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டானா, இல்லையான்னு கேட்கத் தோணல உனக்கு?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அதற்கு நந்திதா நக்கலாக,

“ஏன்…

நான் கேட்காட்டி நீங்க சாப்பிட மாட்டீங்களோ?” என்று கேட்டாள்.

அந்தப் பதிலில் ருத்ரனுக்குக் கோபம் தலைக்கேறியது.

“என்ன…

நக்கலா?

அங்க இருக்கிற தைரியம்தானே?

இங்க வாடி… உனக்கு இருக்கு!” என்றான்.

“ஏன்…

என்ன பண்ணுவீங்க?” என்று அவள் சவாலாகக் கேட்டாள்.

“அதை நீ வந்ததும் சொல்றேன்.

முதல்ல இங்க வா,” என்றான்.

“சரி…

நான் வர்றதுக்குள்ள மீனா கல்யாண விஷயத்தைப் பேசிடுவீங்கதானே?” என்று மீண்டும் அதையே பிடித்துத் தொங்கினாள்.

“ஏண்டி…

அதையே பிடிச்சுத் தொங்கிட்டு இருக்க?

சரி… இப்ப நான் வீட்டுக்குப் போற வழியில அண்ணாவைப் பார்த்துப் பேசிட்டுப் போறேன்.

போதுமா?” என்றான் ருத்ரன்.

“சரி… சரி…

வீட்டுக்குப் போயிட்டு கூப்பிடுங்க,” என்றாள் நந்திதா.

ருத்ரன் ஆதங்கத்துடன்,

“இவ்வளவு நேரம் பேசினாலும், ‘சாப்பிட்டீங்களா?’ன்னு ஒரு வார்த்தை கேட்டியாடி நீ?” என்றான்.

நந்திதா சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“அதெல்லாம் நீங்க நேரத்துக்குச் சாப்பிட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.

வீட்டுக்குப் போயிட்டு கால் பண்ணுங்க,” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அழைப்பு முடிந்ததும், ருத்ரன் தனக்குள் சிரித்துக்கொண்டே,

‘அம்மா வீட்டுக்குப் போனதும் இவளுக்குப் பேச்சு ரொம்ப அதிகமாயிடுச்சு. வீட்டுக்கு வரட்டும்… கவனிச்சுக்கிறேன்!’ என்று நினைத்தான்.

பிறகு கார் ஸ்டீயரிங்கைத் திருப்பி, நேராக ஆரியனின் அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top