💓அத்தியாயம் 《31》

ஆதிரை அறைக்குள் நுழைந்தபோது, ஆதிரன் அங்கு இல்லை. ஆனால் பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவள், எதையும் பொருட்படுத்தாமல் சர்வேஷை மெதுவாகக் கட்டிலில் அமர வைத்தாள்.

“ஒரு நிமிஷம் இரு செல்லம்… உனக்கு டிரஸ் எடுத்துத் தர்றேன்,” என்று அவன் கன்னத்தை வருடியபடி கூறிவிட்டு, கப்போர்ட்டைத் திறந்தாள். சர்வேஷுக்கான உடைகளைத் தேடி எடுத்தவள், அவற்றைக் கையில் வைத்தபடி மீண்டும் அவன் அருகே வந்தாள்.

அந்த நேரமே பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

எதிர்பாராத விதமாக, இடையில் ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தான் ஆதிரன். தலைமுடியிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. அவன் வெளியே வந்த அதே நொடியே, அங்கு ஆதிரை நிற்பதைப் பார்த்தான்.

அவளும் அவனைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அடுத்த நொடியே   அவசரமாக முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

ஆதிரனுக்கும் அதே அளவு அதிர்ச்சிதான்.

“சா… சாரி… நான் கதிர் தான் இருக்கான்னு நினைச்சுட்டு வெளியே வந்துட்டேன்,” என்று தடுமாறியபடி கூறியவன், அங்கிருந்த தனது உடைகளை அவசரமாக எடுத்துக்கொண்டு மீண்டும் பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டான்.

அவன் உள்ளே சென்றவுடன், ஆதிரையின் முகம் கோபத்தில் சிவந்தது.

“இவனுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காதா? அடுத்தவங்க ரூம்னு கூட தெரியாதா? இப்படித்தான் வந்து நிப்பாங்களா? கொஞ்சம் கூட யோசனை இல்லையே!” என்று மனதிற்குள் அவனை நூறு முறை திட்டித் தீர்த்தாள்.

அவனுடைய செயல் வேண்டுமென்றே செய்தது போலவே அவளுக்குத் தோன்றியது. அதனால் அவள் மனதில் இருந்த எரிச்சல் இன்னும் அதிகரித்தது.

அதற்கு மேல் அங்கே ஒரு நொடியும் நிற்க விரும்பாதவள், சர்வேஷைத் தூக்கிக்கொண்டு வேகமாக கீழே இறங்கிச் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து, உடைகளை மாற்றிக்கொண்டு ஆதிரனும் கீழே வந்தான்.

அப்போது ஹாலில், சர்வேஷை மடியில் வைத்துக்கொண்டு ஆதிரை அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் இருந்த கோபம் இன்னும் குறையவில்லை. ஆதிரன் அருகில் வந்ததும், அவனைப் பார்த்த பார்வையிலேயே அந்தக் கோபம் தெளிவாகத் தெரிந்தது.

அவள் தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்த ஆதிரனுக்கு, அவளது முகத்தை நேராகப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. அதனால் அவளைப் பார்க்காமல், பார்வையை சர்வேஷின் மீது செலுத்தியபடி மெதுவாக அவன் அருகே குனிந்தான்.

“சர்வேஷ் கண்ணா… அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் இப்போ கிளம்புறேன். நாளைக்கு வந்து உன்னை பார்க்கிறேன், சரியா?” என்று மென்மையாகக் கேட்டான்.

அவனது குரலைக் கேட்ட சர்வேஷ் எதுவும் பேசாமல் அமைதியாகத் தலையசைத்தான். அந்தச் சிறிய தலையசைப்பிலேயே, “சரி அப்பா… போயிட்டு வாங்க,” என்ற அவனது சம்மதம் தெரிந்தது.

ஆதிரன் ஒரு கணம் மகனைப் பாசமாகப் பார்த்துவிட்டு, ஆதிரையை நோக்கிப் பார்வையைத் திருப்ப முயன்றான். ஆனால் அவள் இன்னும் கோபமாகவே முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அதைக் கண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்ற பிறகும், ஆதிரையின் மனதில் அவன் மீது இருந்த கோபம் மட்டும் இன்னும் தணியாமல் கொந்தளித்துக்கொண்டே இருந்தது.

இரண்டு நாட்கள் அமைதியாகக் கடந்திருந்தன.

அந்த இரண்டு நாட்களிலும் ஆதிரனின் மனம் முழுவதும் ஒரே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும். காரணம், சர்வேஷ். அவனை விட்டு ஒரு நொடியும் பிரிந்து இருக்க முடியாது என்பதே ஆதிரனின் உறுதியான முடிவு.

அதற்காகவே அந்த நாள் கரிகாலனை நேரில் சந்திக்கச் சென்றான்.

கரிகாலனும் அவனை மரியாதையுடன் வரவேற்று அமர வைத்தான். சிறிது நேரம் பொதுவான பேச்சுகள் நடந்த பிறகு, நேராக விஷயத்திற்கு வந்தான் ஆதிரன்.

“கரிகாலன்… நான் உங்களை ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான் பார்க்க வந்திருக்கேன்,” என்று தொடங்கியவன், சர்வேஷ் மீது தனக்கு இருக்கும் அளவில்லா பாசத்தைப் பற்றியும், அவன் இல்லாமல் தன்னால் வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதையும் மனம் திறந்து கூறினான்.

“சர்வேஷ் இல்லாமல் என்னால இருக்க முடியாது. அவன் என் உயிர். அதனால இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தணும்,” என்று உறுதியான குரலில் சொன்னான்.

ஆதிரன் இவ்வளவு சொல்லி முடித்ததும், ஒரு நொடி கூட யோசிக்காமல்,

“சரி… இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்,” என்றான் கரிகாலன்.

அவனுடைய உடனடியான சம்மதம் ஆதிரனுக்கு எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

“எப்படி இவன் ஒரு நொடியும் யோசிக்காம உடனே சரின்னு சொல்லிட்டான்?” என்று மனதிற்குள் ஆச்சரியப்பட்டான்.

ஆதிரனின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை அவன் முகத்தை வைத்தே புரிந்துகொண்ட கரிகாலன், மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்தான்.

“நீங்க ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுறீங்கன்னு எனக்கு புரியுது,” என்று தொடங்கியவன் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு தொடர்ந்தான்.

“உண்மையை சொல்லணும்னா… எனக்கே இந்தக் கல்யாணத்துல பெரிசா விருப்பம் இல்லை.”

ஆதிரன் அமைதியாக அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“என்னோட முன்னாள் மனைவி, ‘என்னால குழந்தையைப் பார்த்துக்க முடியாது’ன்னு சொல்லிட்டு என்னையும், என் குழந்தையையும் விட்டுட்டு போயிட்டா. அந்த நாள்ல இருந்து ஒரே விஷயம் தான் என் மனசுல இருக்கு.”

அவன் கண்களில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது.

 

“பெத்த தாயே தன்னோட குழந்தையை விட்டுட்டுப் போயிருக்கும்போது, வேறொரு பெண் வந்து அந்தக் குழந்தையைத் தன்னோட உயிரா நினைச்சு, சொந்தக் குழந்தை மாதிரி அன்பும் பாசமும் கொடுத்து வளர்ப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை என்றான் கரிகாலன் 

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் மன வேதனை வெளிப்பட்டது.

“ஆனா… இதெல்லாம் நான் எங்க அம்மாவிடம் சொல்லியும் அவங்க கேக்கலை. ‘என் வாழ்க்கை நல்லபடியாக அமையனுதா அவங்க ஆசை அவங்களுக்காகத்தான் நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். இல்லனா, எனக்கு இந்தக் கல்யாணத்துல எந்த விருப்பமும் இல்லை.”

கரிகாலன் கூறியதை கேட்ட ஆதிரனுக்கு அவன் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது.

சில நொடிகள் அமைதி நிலவியது.

பிறகு கரிகாலன் மெதுவாகப் புன்னகைத்தபடி,

“சர்வேஷ் ரொம்ப லக்கி. உங்களை மாதிரி ஒரு அப்பா அவனுக்கு கிடைக்கப் போறாரு,” என்று மனப்பூர்வமாகச் சொன்னான்.

அதைக் கேட்ட ஆதிரன் உடனே தலையசைத்தான்.

“அப்படி சொல்லாதீங்க கரிகாலன். சர்வேஷ் லக்கி இல்லை… நான்தான் லக்கி. எனக்கு சர்வேஷ் மாதிரி ஒரு மகன் கிடைச்சிருக்கான். அவன் என் வாழ்க்கைக்கு கிடைச்ச மிகப்பெரிய வரம்,” என்று புன்னகையுடன் கூறினான்.

அந்த வார்த்தைகளில் இருந்த தந்தையின் பாசம் கரிகாலனின் மனதையும் நெகிழ வைத்தது.

 

கரிகாலனின் மனவேதனையைப் புரிந்துகொண்ட ஆதிரன், அவன் தோளில் மெதுவாக கை வைத்தான்.

“கவலைப்படாதீங்க கரிகாலன். உங்க பொண்ணுக்கும் அவளை உயிரா நேசிக்கிற, அவளை சொந்த மகள் மாதிரி பாசமா பார்த்துக்குற ஒரு நல்ல அம்மா கண்டிப்பா கிடைப்பாங்க. 

 

வாழ்க்கை யாருக்காகவும் ஒரே மாதிரி நிக்காது. ஒருநாள் உங்க வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் வரும். அந்த நாள்ல உங்களுக்கும், உங்க பொண்ணுக்கும் எல்லா சந்தோஷமும் கிடைக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறினான் ஆதிரன்.

ஆதிரன் கூறிய அந்த வார்த்தைகள் கரிகாலனின் மனதில் சிறிய நம்பிக்கையை விதைத்தது. அவன் மெல்லிய புன்னகையுடன் ஆதிரனைப் பார்த்து தலையசைத்தான்.

“நம்புறேன்…” என்ற ஒரே வார்த்தையில் அவனது ஏக்கமும், எதிர்பார்ப்பும் வெளிப்பட்டது.

அதன்பிறகு, தேவையான விஷயங்களைப் பேசிவிட்டு, கரிகாலனிடம் விடைபெற்ற ஆதிரன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். அவன் மனதில் இருந்த ஒரு பெரிய சுமை சற்றே குறைந்திருந்தாலும், இனி நடக்கப்போகும் சம்பவங்கள் எப்படி அமையும் என்ற எண்ணம் இன்னும் அவனை விட்டு நீங்கவில்லை.

 

அதே நேரத்தில், கதிரின் வீட்டில்…

ஹாலில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த கதிர், தன் தங்கை அம்முவை அழைத்தான்.

“அம்மு… இங்க கொஞ்சம் வா,” என்ற அவன் குரலைக் கேட்டவள், “என்ன அண்ணா?” என்று கேட்டபடியே அவன் அருகில் வந்து நின்றாள்.

கதிரின் முகத்தில் இருந்த தீவிரத்தைப் பார்த்தவளுக்கு ஏதோ சரியில்லை என்ற உணர்வு தோன்றியது.

சில நொடிகள் அமைதியாக இருந்த கதிர், பிறகு மெதுவாக,

“கரிகாலன் இப்போ எனக்குக் கால் பண்ணியிருந்தாரு. இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாரு,” என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட ஆதிரை  அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.

“என்ன சொல்றீங்க அண்ணா? ஏன் திடீர்னு இப்படி சொல்றாரு? ரெண்டு நாளைக்கு முன்னாடிதானே வந்து எல்லாம் பேசிட்டு போனாரு! இப்போ மட்டும் என்ன ஆச்சு?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

கதிர் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,

“எனக்கும் சரியா தெரியல அம்மு. அவங்க பெருசா எதுவும் சொல்லல. ‘இது எங்களோட குடும்ப பிரச்சினை… அதனால இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்திருக்கு’ன்னு மட்டும் சொன்னாரு,” என்றான்.

“அதுக்கு மேல நான் எதுவும் கேட்கவும் விரும்பல.”

ஆதிரைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“சரி அண்ணா…” என்று மட்டும் கூறிவிட்டு, கனத்த மனதுடன் மெதுவாக தன் அறைக்குச் சென்றாள்.

அறைக்குள் சென்றவள் கதவை மூடிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

இந்தத் திருமணம் நின்றுவிட்டது என்ற விஷயத்தில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. அந்தத் திருமணத்தின் மீது அவளுக்கு பெரிதாக விருப்பமும் இருந்ததில்லை.

ஆனால்…

அவள் மனதை அச்சத்தில் ஆழ்த்தியது வேறு ஒரு விஷயம்.

ஆதிரன்.

அவனை நினைத்தாலே அவளது இதயம் வேகமாகத் துடித்தது.

அவனுக்குப் பயந்துதானே இந்தத் திருமணத்திற்கு அவள் சம்மதம் தெரிவித்திருந்தாள். இப்போது திருமணம் நின்றுவிட்டது என்ற விஷயம் ஆதிரனுக்குத் தெரிந்தால்…

“அவன் என்ன செய்வான்? 

என்ற எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் மனதை ஆக்கிரமித்தன.

அந்த யோசனையே அவளுக்குள் சொல்ல முடியாத ஒரு பதற்றத்தை உருவாக்கியது.

தலை முழுவதும் பாரமாக இருப்பது போல உணர்ந்தாள். நெற்றியை அழுத்திப் பிடித்தபடி கண்களை மூடிக் கொண்டாள். 

கரிகாலனைச் சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஆதிரன், நடந்த அனைத்தையும் தன் பெற்றோரான ஸ்ரீராம் மற்றும் லட்சுமியிடம் ஒன்றும் மறைக்காமல் கூறினான்.

கரிகாலனிடம் தான் பேசியது, சர்வேஷ் மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தியது, அதைக் கேட்ட கரிகாலன் உடனடியாக இந்தத் திருமணத்தை நிறுத்தச் சம்மதித்தது என எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான்.

அவன் பேசி முடித்ததும், லட்சுமியும் ஸ்ரீராமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

சில நொடிகள் அமைதியாக இருந்த லட்சுமி, கவலையுடன் மகனைப் பார்த்து,

“ஆதி கண்ணா… நீ பண்ணது கொஞ்சம் தப்புடா. ஒரு கல்யாணத்தை இப்படி நடக்க விடாம நிறுத்துறது சரியில்லையே…” என்றார்.

ஸ்ரீராமும் அதையே ஆமோதித்தபடி,

“ஆமாம் ஆதி. உனக்கு சர்வேஷ் மேல பாசம் இருக்கிறது எங்களுக்கும் புரியுது. ஆனா அதுக்காக இன்னொருத்தரோட வாழ்க்கையில தலையிடுறது சரியில்லைப்பா,” என்று அமைதியாக எடுத்துச் சொன்னார்.

இருவரின் பேச்சையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரன், 

தன் பெற்றோரைப் பார்த்தான்.

“அம்மா… போதும்.”

அவன் குரலில் இருந்த அழுத்தம் இருவரையும் அமைதியாக்கியது.

“சர்வேஷ் விஷயத்துல எனக்கு தப்பு… சரின்னு எதுவுமே கிடையாது. எனக்கு அவன் வேணும். அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்.”

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும், சர்வேஷ் மீது அவன் வைத்திருந்த அளவில்லா பாசம் வெளிப்பட்டது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் தொடர்ந்தான்.

“அதோட… நான் கரிகாலனைப் போய்ப் பார்த்ததால்தான் இந்தக் கல்யாணம் நின்னுச்சுன்னு நினைக்காதீங்க.”

அவன் சொன்னதைப் புரியாமல் இருவரும் அவனைப் பார்த்தனர்.

“நான் அவரைப் போய்ப் பார்க்கலைன்னா கூட இந்தக் கல்யாணம் நடந்திருக்காது. ஏன்னா, அவர் அவரோட அம்மாவோட கட்டாயத்துக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்காரு.”

அவன் கரிகாலன் கூறிய அனைத்தையும் தன் பெற்றோரிடம் விவரமாகச் சொன்னான்.

பிறகு மெதுவாக,

“நல்லா யோசிச்சுப் பாருங்கம்மா… அவருக்கும் இந்தக் கல்யாணம் பிடிக்கல. ஆதிரைக்கும் பிடிக்கல. ரெண்டு பேருமே மனசுக்கு விருப்பமில்லாம, கட்டாயத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவங்க வாழ்க்கை எப்படி சந்தோஷமா இருக்கும்?” என்று கேட்டான்.

அந்தக் கேள்விக்கு லட்சுமியிடமும் ஸ்ரீராமிடமும்    பதில் இல்லை.

ஏனென்றால், ஆதிரன் கூறியதில் இருந்த நியாயம் அவர்களுக்கும் புரிந்தது.

ஒருவரை ஒருவர் விரும்பாமல், குடும்பத்தினரின் கட்டாயத்திற்காக மட்டும் நடக்கும் திருமணம் யாருக்கும் நிம்மதியைக் கொடுக்காது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

லட்சுமி ஆழமாக மூச்சை விட்டார்.

ஸ்ரீராமும் மகனைப் பார்த்தபடி அமைதியாகத் தலையசைத்தார்.

மகன் செய்த செயல்முறை சரியா, தவறா என்ற குழப்பம் இன்னும் இருந்தாலும், அவன் சொன்ன காரணத்தில் இருந்த உண்மையை மறுக்க முடியவில்லை.

அதனால் இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டனர்.

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top